"பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா
ஸுகாராத்யா சுபகரீ சோனபா-ஸுலபாகதி:
என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். மொழி ஸ்வரூபமாய் இருப்பவள் அம்பிகை. 51 மாத்ருகா அக்ஷரங்களே அம்பிகையின் வடிவு என்பார்கள். ஸ்ரீசக்தி பீடங்களும் அந்த அந்த அக்ஷரங்களுக்கு ஏற்ப 51 இருக்கின்றன. சொல்லையும் பொருளையும் போல் பிரிக்கமுடியாமல் சிவசக்தி ஐக்கியம் இருப்பதை ஏற்கெனவே பார்த்தோம். பட்டரோ, மன்மதனின் தவத்தைக் கலைத்த அம்பிகையை மொழிக்கும் நினைவுக்கும் எட்டாதவள் என்கின்றார்.
“மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம் கொண்டாளும் பராபரையே!”
அதாவது சொல்லுக்கும், எண்ணத்துக்கும் எட்டாத அம்பிகையின் திருவுருவானது இங்கே பக்தர்களின் தீவிர வழிபாட்டால் அவர்களுடைய கண்களுக்கும் வழிபாடுகளுக்கும் வெளிப்பட்டு நிற்கின்றது.
“சிவப்ரியா சிவபார சிஷ்டேஷ்டா சிஷ்ட-பூஜிதா
அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா”
என்னும் சஹஸ்ரநாமத்தின் துதியின் படி மனதினாலேயே அம்பிகையைத் துதித்து வழிபடுவர்களுக்கு அவள் அருள் புரிவாள். நம் பேரின்பவாழ்வுக்குப் பற்றுக் கோடு அம்பிகை. அவளைக் குறித்த எண்ணங்களை மனதில் விரும்பித் தியானிக்கும்படியோ, வாயினால் இவ்வாறு இருக்கும் என்றோ உரைக்க முடியாது. “பாநுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ” என சஹஸ்ரநாமத்தில் கூறுவதற்கேற்ப சூரியமண்டலத்தில் நட்டநடுவே கோடி சூரியப் பிரகாசத்தோடு இருக்கிறாள் அம்பிகை.
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே!”
யோகியான ஈசன் மனதில் இடம் பிடித்த அம்பிகை அதன் மூலம் ஒரு குழந்தையையும் பெற்றதையும் பட்டர் இவ்வாறு கூறுகிறார்.
ககனமும் வானும் புவனமும் காணவிற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும்
செம்முகனும் முந்நான்கிருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே!”
என்கிறார் பட்டர். வல்லபம் என்பது இங்கே வலிமை பொருந்திய, அறிவாற்றல் பொருந்திய என்ற பொருளில் வரும். ஞாநமே குழந்தையாகப் பிறந்த ஷண்முகனை இங்கே வல்லபம் என்கிறார் பட்டர்.
சிவசக்தியின் ஐக்கியத்திலே பிறந்த இந்தக் குழந்தை மகா ஒளி பொருந்திய குழந்தை, வல்லமை பொருந்திய குமாரன். எவராலும் வெற்றி கொள்ளமுடியாத அதிசூரன். இவன் வெறும் சக்தி மட்டும் அல்ல, அறிவுச் சக்தி, ஞாந சக்தி, அருள் சக்தி. தகப்பனுக்கே உபதேசம் பண்ணிய தகப்பன் சாமி. குருநாதன். வஸ்துவாகிய ஈசனுக்குள்ளேயும், அதன் சக்தியாகிய அம்பிகைக்குள்ளேயும் ஒன்றாக இருந்த அன்பானது இருவராகப் பிரிந்து மீண்டும் ஒன்றாய்க்கலந்து அதிலிருந்து தோன்றிய அற்புத குமாரன் ஷண்முகன். ஈசனால் தாரகனையும், சூரனையும் வதைக்க முடியாதா என்ன?? என்றாலும் அவர் தன்னைவிடத் தன் குமாரன் அதிபுத்திசாலி, மஹாவீரன் என்று காட்டாமல் காட்டினார். மனித இயல்பும் அதுதானே?? சத் எனப்படும் ஈசனும், சித் எனப்படும் அம்பிகையும் காட்டி உணர்த்திய ஆநந்தம், சச்சிதாநந்தப் பரம்பொருள் ஷண்முகன். இவரையே நடுவில் வைத்து ஒரு பக்கம் ஈசனும், மற்றொரு பக்கம் அம்பிகையும் இருக்கும் கோலத்தில் நாம் எல்லாச் சிவாலயங்களிலும் உற்சவ மூர்த்திகளாய்ப் பிரதிஷ்டை செய்திருக்கிறோம். இவரை சோமாஸ்கந்தர் என அழைக்கிறோம். ஸஹ+உமா+ஸ்கந்தர் என்பதே சோமாஸ்கந்தர் என்று ஆகிவிட்டது. லலிதா சஹஸ்ரநாமம், அம்பிகையை, “குமார கணநாதாம்பா” எனப் போற்றும். அந்தக் குமாரன் பிறந்து என்ன நடக்கிறது?? அனைவருக்கும் நிம்மதி பிறக்கிறது. தேவசேநாபதியான அவன் சூரனை வதைக்கிறான். வதைக்கிறான் என்று சொல்வதை விடவும், அவனை மன்னித்து ஆட்கொள்ளுகிறான்.
குமாரனின் ராஜ்யத்தில் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்றெல்லாம் இல்லை. மன்னிப்பு மட்டுமே. குமரனை வணங்குபவர்களுக்கு அழியாத ஆநந்தத்தைத் தருவான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் மயிலாகவும், கோழியாகவும் மாற்றிவிடுகிறான் சூரனை. ஞானகங்கையாம் சரவணப்பொய்கையில் மூழ்கிய சூரன் அதில் தானும் கலந்து பிரணவத்தை நாதமாகவும், விந்து வடிவில் தோகை விரித்து ஆடிப் பிரணவ ஸ்வரூபத்தைக் காட்டியும் முக்தியைப் பெறுகிறான். இந்த ஓங்கார நாதமும், விந்துவும் சேர்ந்து வரும் கலையே சக்திவேல். கொக்கு அறுத்த கோ என்றும் கூவுகிறான் சூரன். கோழி கொக்கரக்கோ எனக் கூவும் அல்லவா?? கொக்கு என்னும் மாயையாகிய மாமரமாய் வந்த சூரனை அறுத்த கோமகன் ஷண்முகன். அதையே கொக்கரக்கோ எனக்கூவிக் கோழி தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்துகிறது. மயிலோ எனில் பிரணவ ஸ்வரூபத்திலேயே தோகையை விரித்துக்கொண்டு ஆநந்தம் பொங்க ஆடுகிறது. மழைக்காலத்து மயிலின் ஆட்டம் இருளை நினைவு படுத்துகிறது எனில் விடிகாலை கூவும் கோழியின் குரல் உதயத்தை நினைவூட்டும். இருளிலிருந்து நம்மை வெளிச்சத்துக்கு இட்டுச் செல்லும் குரு ஷண்முகன். இனி ஸ்ரீலலிதையின் சோபனத்தில் ஷண்முகன் பிறப்பையும் அசுரர்கள் வதம் பற்றியும் பார்க்கலாமா??
“அம்மன் அனுக்ஞையால் மதனன் பூச்சரத்தாலே
அடித்தான் பார்வதி தேவி பரமேசரை
வந்து விவாஹஞ் செய்து ரமித்தார் பரமசிவன்
குமாரரும் உண்டானார் அஸுராளை வதைத்த
கோலவேலருக்குச் சோபனம் சோபனம்
தேவசேனாபதி தெய்வயானை மணந்து
ஸ்ரீபுரந்தன்னில் வந்தார்- சோபனம் சோபனம்.
ஸ்ரீபுரமென்றதைக் கேட்டது மகஸ்தியர்
தவமுனி ஹயக்ரீவரைப் பார்த்து
ஸ்ரீபுரமென்பதை விஸ்தாரமாகவே
சொல்லவேண்டும் தயவாக வென்றார்
அன்புடன் வார்த்தையைக் கேட்டு ஹயக்ரீவர்
அகஸ்திய முனிவரைப் பார்த்துரைப்பார்
இன்பங்களுண்டாக தேவியின் நகரத்தை
இனிச் சொல்வோம் கேளென்றார்- சோபனம் சோபனம்
பண்டாஸுரனை வதைத்த ஸந்தோஷத்தால்
பரமேச்வரிக்கும் காமேசருக்கும்
தேவசேநாபதியும் தேவர்களும் கூடி
ஸ்ரீ லலிதாம்பாள் கொலுவிருக்க
ஈச்வரியாளுக்குச் சிந்தாமணிக் கிருஹம்
விச்வகர்மாவை அமைக்கச் சொன்னார்
மகிழ்ந்து விச்வகர்மா இவர்கள் சொன்னபடிக்குப்
புகழ் பெறவே செய்தார் –சோபனம் சோபனம்.
நல்ல பதிவு கீதாம்மா
ReplyDelete