எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Monday, November 15, 2010
சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம் 20!
“ஹர –நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவநெளஷதி” என்று கூறுகிறது லலிதா சஹஸ்ரநாமம். ஹரனாகிய ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த அக்னியால் எரிக்கப் பட்ட காமனைப் பிழைக்க வைத்த சஞ்ஜீவனி மருந்தைப் போன்றவள் அம்பிகை எனப் பொருளில் வரும் இந்த வரிகளில் அம்பிகையானவள் காமனுக்கு மட்டுமன்றி நமக்கும் ஒளஷதமாய்ச் செயல்படுவதை அறிந்து கொள்கிறோம். பராசக்தியானவள் ஈசனின் உடலில் பாதி சரீரம் எடுத்துக்கொண்டிருந்தாலும் உலகனைத்திற்கும் மருந்தாய் விளங்குகிறாள். விஷத்தை உண்டும் அவள் அருளால் ஈசன் பிழைத்து நீலகண்டனாக ஆகிய விந்தையையும் அறிவோம் அல்லவா?? “நஞ்சு அமுதாக்கிய அம்பிகை” என்கிறார் பட்டர் இந்தத் திருவிளையாடலை.
“பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மநோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே!”
இங்கே முப்புரை என்பதற்குப் பல பொருட்களை அறிந்து கொள்கிறோம். புரை என்றால் மூத்தவள் என்ற பொருளுக்கிணங்க, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், மூன்று நாடிகளான பிங்கலை, இடைகலை, சுழுமுனை மூன்றிலும் இருப்பவள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றில் உறைபவள். “மஹாபுத்திர்-மஹாஸித்திர்-மஹாயோகீஸ்வரேஸ்வரீ” என்று கூறும் லலிதா சஹஸ்ரநாமம். ஆகவே அதனாலும் இவள் முப்புரை அல்லது திரிபுரை. மேலும் மூன்று தேவர்கள், மூன்று மறைகள், மூன்று அக்னி, மூன்று சக்தி, மூன்று ஸ்வரங்கள், மூன்று உலகங்கள், மூன்று நகரங்கள் என அனைத்திலும் மூன்று பிரிவுகளைக் கொண்டவளாய் இருப்பதையும் முன்னரே பார்த்தோம். அதேபோல் சந்திரகண்டம், சூர்யகண்டம், அக்னிகண்டம் என்னும் மூன்று பிரிவையுடைய சக்கரத்துக்கும் தலைவியாக இருக்கிறாள். நம் மனத்தை ஞாந நிலைக்கு எழுப்பும் மநோன்மணியாக இருக்கிறாள்.
அத்தகைய சக்தி வாய்ந்த அம்பிகை இப்போது உலகு உய்யும் பொருட்டு காமனைப் பிழைக்க வைக்கிறாள். எதற்கு?? யோகத்தில் ஆழ்ந்திருக்கிறான் ஈசன். காமனை எரித்துவிட்டு காமதகனராய்ச் சர்வ சக்தியும் ஒடுங்கிய வண்ணம் காட்சி அளிக்கிறான். அவன் கண்களை விழித்து அம்பிகையை நோக்கினால் அன்றோ, குமாரன் பிறப்பான்?? குமாரன் பிறந்தால் அன்றோ மிச்சம் இருக்கும் அசுரக் குலமும் அழியும்?? குமாரன் என்றால் கந்தன் ஒருவனே. அவனை மட்டுமே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது. அத்தகைய கந்தனைப் பிறப்பிக்கும் பொருட்டு அம்பிகை மன்மதனை எழுப்புகிறாள். வியப்பைத் தரும் திருவுருவை உடைய அம்பிகை மன்மதனை எழுப்பி அதன் மூலம் சிவனது புத்தியை வெற்றி கொண்டதை இவ்வாறு கூறுகிறார்.
“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமான தபசயமாக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே!”
தாமரை மலர்களால் துதிக்கப் பெறும் திவ்ய செளந்தரியமான அழகை உடைய அம்பிகை மன்மதன் மற்றவர்களைத் தன் மலர்க்கணைகளுக்கு ஆளாக்கி அதன் மூலம் பெற்ற வெற்றியை எல்லாம் தோல்வி அடையும்படி தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்த ஈசனின் மனமும் மாறும்படியாக அவன் மனமும் குழையும்படியாக மீண்டும் மன்மதனை உயிர்ப்பித்ததோடு அல்லாமல், ஈசனின் மனத்தையும், புத்தியையும் ஆட்கொண்டு, உடலிலும் இடம் பெறுகிறாள். மன்மதனை எழுப்பச் சொல்லி ஸ்ரீலலிதையிடம் தேவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
“இந்த ரதியுடைய கணவன் மன்மதனை
எழுப்பித் தந்து எங்கள் மனங்குளிர
எவ்விதமாவது தயவு செய்து ஈசரும்
ஈச்வரியைக் கூடி சுப்ரமண்யர்
பிறந்து தாருகன் முதல் அஸுரர்களை வதைத்ததால்
பிறகு சங்கடமில்லை எங்களுக்கு
கூடியே தேவர்கள் எல்லோருங்கைகளைக்
கும்பிட்டு நின்றார்கள் –சோபனம், சோபனம்.”
கண்டவுடனே ரதிதேவியை அம்மன்
காமேசர் முகத்தை ஆதரவாய்ப் பார்த்தாள்
உண்டாய்விட்டான் மதன் வஜ்ஜிரதேஹத்துடன்
உடனே தாயாரை நமஸ்கரித்தான்
அனுகிரஹித்தாள் தேவி மன்மதனுக்கு
ஆருமினியவனை ஜயிக்காமல்
வானவரும் இனி ஜயிக்கமாட்டாரென்று
வரமுங்கொடுத்துச் சொல்லுவாள்- சோபனம் சோபனம்
குழந்தாய் உனக்குப் பயமில்லை இனிமேல்
கூட்டிவை பார்வதியுடன் ஈசரை
தழுதழுத்துன்னுட பாணத்தால் சங்கரர்
தானே விவாஹஞ்செய்வார் பார்வதியை
ஒருவர் கண்ணுக்கும் இனி அகப்பட மாட்டாய்
உன்னைத் தூஷித்தபேர் அண்ணா கள்ளர்
சற்றும் பயமில்லை நாமிருக்கின்றோமென்று
சங்கரி யனுப்பினாள் –சோபனம் சோபனம்.
மன்மதனுக்கு வரம் கொடுத்து அவனை அனுப்பி வைக்கிறாள் அம்பிகை. ஈசனும், ஈச்வரியும் கூடி ஸ்கந்தன் அவதாரம் ஏற்படுகிறது.
ஷண்முக நாயகன் தோன்றிடுவான் – சிவ
சத்குரு நாதன் தோன்றிடுவான்
கண்களால் கண்டு போற்றிடுவோம் –கொடும்
காலத்தைக் காலால் வென்றிடுவோம்
"நாதபிந்து கலாதீ நமோ நம!" என்று கூறுவார் அருணகிரிநாதர். நாதமும் பிந்துவும் சேர்ந்ததால் தோன்றிய கலையே ஷண்முகன். சிவசக்தி ஐக்கியத்தின் ஸ்வரூபமே ஷண்முகன். ஷண்முகனின் மந்திரமாகிய "சரவணபவ" என்னும் ஆறெழுத்தும் நம் உடலின் ஆறு சக்கரங்களையும் குறிக்கும். உயிர்களுக்குப்பற்றுக்கோடாக விளங்குபவன் கந்தன். அனைத்துக்கடவுளரின் ஆற்றலும், சக்தியும் திரண்டு வந்ததால் கந்தன் என்ற பெயர் பெற்றான் என்றாலும் நம் ஆன்மாவைக் கட்டிவைக்கும் சக்தியான கந்துவும் அவனிடமே இருப்பதாலும் கந்தன் என்று கூறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment