இப்போ தேவி ஆறுசக்கரங்களிலும் விளங்குவது எப்படி என்று ஒரு எளிமையான சின்ன விளக்கம். நம் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலிலேயே பஞ்சபூதங்களும் அடங்கி உள்ளன என்பதைக் குறிக்கவே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம் , மணி பூரகம், அநாஹதம், விசுத்தி, போன்ற சக்கரங்களும் பஞ்சபூத தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. கடைசியான ஆக்ஞா சக்கரம் நம் புருவ மத்தியைக் குறிக்கும் இடம். ஜீவாத்மாவிடம் ஈசனின் ஆக்ஞாயானது அங்கே பிரகாசிக்கின்றது. அதனாலேயே ஆக்ஞாசக்கரம் என்பார்கள். லலிதாசமேத காமேசுவர மகாலிங்கமானது அங்கே நிர்குண, ஸகுண சக்தியால் அலங்கரிக்கப்படும். இங்கே நிர்குண, ஸகுண சக்தியாக அம்பிகையே குறிக்கப் படுகிறாள். இப்படி குறிக்கப்படும் அம்பிகை ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகங்களோடு பிரகாசிக்கும் வெண்ணிறத்தோடு ஹாகினி என்னும் பெயரோடு எழுந்தருளி இருக்கிறாள்.
“ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா-சுக்லவர்ணா-ஷடானனா!!”
“ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தாரிணீ”
என்று ஸ்ரீலலிதையின் சஹஸ்ரநாமம் இவளைப் போற்றும்.
அடுத்து நம் நாட்டில் இப்படி ஆக்ஞா சக்கரஸ்தானமாய்க் கருதப்படும் இடம் காசி க்ஷேத்திரம் ஆகும். அம்பிகை இங்கே துர்க்கையாகவும் காசி விசாலாக்ஷியாகவும் இருவிதப் பிரதான சக்திகளாய்த் தோன்றுகிறாள். இந்த ஆக்ஞா சக்கரம் ஆத்மத்வம் என்றும் கூறுவார்கள். இங்கே ஸ்வயம்பிரகாசமான சக்தியைப் பின்பற்றியே அனைத்தும் பிரகாசிக்குமே தவிர அதற்காக சுயமான ஒளி இல்லை. சூரிய, சந்திரரும், மின்னல்களும், அக்னியுமே அந்தப் பிரகாசத்தில் தெரியாதெனில் மற்றவை எம்மட்டு?? இதைக் கடந்தே ஸஹஸ்ராரத்தில் பிரவேசிக்கவேண்டும். இப்படி ஆத்மாவை எதுவும் ஒட்டாது என்பதை இங்கே பார்த்தோம் அல்லவா??? (இனிமே ஆத்மா சாந்தி அடையட்டும்னு பிரார்த்திக்கும் முன்னே கொஞ்சம் யோசிங்க)
நாம தான் கீழே தானே போவோம்?? ஆகவே கீழேயே போய்ப் பார்ப்போமே! ஆத்மாவிலிருந்து கீழே வந்தால் மனசு தோன்றுகிறது. அதே போல் நம் புருவ மத்தியிலிருந்து கீழிறங்கினோமானால் நெஞ்சுக்குழி வருகிறது. இதுவே விசுத்தி சக்கரம். ஆகாயதத்துவம்.
“விசுத்தி –சக்ர- நிலயா-ரக்தவர்ணா த்ரிலோசனா
கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா
அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா டாகினீச்வரீ”
சிவந்த ரத்த நிறத்துடனும், மூன்று முகங்களுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை இங்கு பதினாறு தள கமலத்தில் டாகினீ என்னும் பெயரில் விளங்குகிறாள். இங்கு அம்பிகையும், ஈசனும், சூரியனையும், சந்திரனையும் போல் தண்மையும், வெம்மையும் கலந்து பூவோடு சேர்ந்த மணம் போலவும், கரும்பில் கலந்திருக்கும் இனிமை போலவும், தீபத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒளி போலவும் காட்சி அளிக்கின்றனர். சகல ஜீவர்களுக்கும் ஜீவாதாரமாய்ப் பிரகாசிப்பதே இவர்கள் இருவரின் ஆநந்தமயமான ஜோதிப் பிரகாசமே. நம் புண்ணிய பாரதத்தில் இப்படி ஆகாய க்ஷேத்திரமாய் விளங்கிப் பிரகாசிப்பது சிதம்பரம் க்ஷேத்திரமே. இங்கு ஆகாய தத்துவ உபாசனை. தஹராகாசம் செய்யப் படுகிறது. “தஹராகாச-ரூபிணீ” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும். இங்கு அம்பிகையும், ஈசனும் வ்யோமேஸ்வரனும், வ்யோமேஸ்வரியாகவுமோ அல்லது அர்த்தநாரீஸ்வரராகவோ வழிபடப் படுகின்றனர். பட்டர் இதை,
“பரிபுறச் சீறடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துரமேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்திருந்தவளே!” என்கிறார்.
அடுத்து ஆகாய தத்துவத்திலிருந்து இன்னும் கீழே வரணும். ஆகாயத்திலிருந்து தோன்றியது வாயு.
“அநாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா
தம்ஷ்ட்ரோஜ்வலாக்ஷமாலாதி-தரா ருதிர –ஸம்ஸ்திதா
காலராத்ர்யாதி-ச்க்த்யெளக-வ்ருதா ஸ்நிக்தெளதன-ப்ரியா
மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா-ஸ்வரூபிணீ”
இங்கு பனிரண்டு தளக் கமலத்தில் வீற்றிருக்கும் அம்பிகை ச்யாமளையாக ராகினீ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறாள். இவளே கல்விக்கு அதிபதி. இவள் நம் இதயத்தில் ஞானத் தாமரையை மலர வைக்கும் ஹம்ஸங்களாக ஈசனோடு உலவுகிறாள். நம் மனத் தடாகத்தில், இதுவே மானசரோவர் எனப்படும். இந்த மானசரோவரில் பக்தர்களின் ஞாநத்தையே அநுபவித்து அதைப் பற்றியே தங்களுக்குள் இனிமையாகப் பேசிக்கொள்ளும் ஹம்சங்களான ஈசனும், அம்பிகையும் ஹம்சேஸ்வரனாகவும், ஹம்சேஸ்வரியாகவும் இருக்கின்றனர். இவர்களின் அருளாலேயே நமக்கு சகல வித்தைகளும் கிடைக்கப் பெறுகிறோம். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணையே அனைத்து வித்தைகளும். உள்முகத் தியானத்தாலேயே இது கைகூடும். இதற்காக ஜபிக்கப் படும் மந்திரமும் அஜபா மந்திரமாகவே சொல்லப் படும். தக்க குரு மூலம் தீக்ஷை பெற்று மந்திர ஜபம் உபாசிக்க வழிமுறைகளை ஏற்று முறையாக ஜபிப்பவர்களுக்கு பிரத்யக்ஷமாகத் தரிசனம் கிட்டும். ச்யாமளையின் அருளும் கிடைக்கும்.
“கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியல்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே!”
என்று இவளை வியந்து கூறுகிறார் பட்டர் பெருமான். கடம்பவனத்தில் பண்களால் களிக்கும் குரலோடு இசைந்த அழகான வீணையும் ஏந்திய வண்ணம் பச்சை நிறப் பேரழகியாகக் காட்சி அளிக்கிறாளாம் அம்பிகை. நம் நாட்டில் அநாஹதத்தில் உள்ள ஹம்ஸ்த்வந்த்வ உபாசனை முறைக்கு ஏற்பட்ட தலம் ஆவுடையார் கோவில் ஆகும். இனி ஸ்ரீலலிதையின் சோபனப் பாடல்களில் ஸ்ரீவித்தை ஜபத்தின் மஹிமை கூறுதல்.
மந்திரங்களுக்கெல்லாம் பெரிதான ஸ்ரீவித்தை
மஹாகுருவினிடத்தில் வேண்டிக்கொண்டு
மந்திரத்திற்குச் சொன்ன ஜபஹோமங்கள் செய்து
மஹிமை தேவாளுக்குப் போஜனமளித்த்துப்
பின்னர் தேவியை பரமாத்மாவாய்த் தியானித்து
பிறகு நிஷ்காம்ய ஜபம் செய்தபேர்க்கு
எண்ணின காரியம் கைகூடும் ஜகத்திலே
இவர்கள் எங்கும் பூஜ்யர்-சோபனம் சோபனம்
அசுத்தத்துடன் சோபனத்தைச் சொன்னபேர்க்கும்
அசங்கித்த பேர்க்கும் பிணிகளுண்டு
அசுத்தமில்லாமலும் அசங்கையில்லாமலும்
அம்மன் சோபனமென்றும் பக்தியுடன்
விச்வாஸமாய்ச் சொன்னபேர்க்கும் கேட்டவர்க்கும்
வியாதியில்லை சத்ரு பாதையில்லை
நிஜமாய் ஜ்வரம் வியாதி ரோகாதிகளில்லை
நித்ய ஸம்பத்துண்டு- சோபனம் சோபனம்
இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் எல்லாம்
தேவிகளென்று மனதிலெண்ணி
சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம்
ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து
எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் கேட்பாரோ
அந்தந்தக் கிருஹங்களில் அரிஷ்டம் நீங்கும்
ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும்
தீர்க்காயுஸுமுண்டு –சோபனம் சோபனம்
இனி அம்பிகையை வழிபடவேண்டிய முக்கியமான காலங்கள் நாளை பார்ப்போம். அதோடு மங்களம் பாடி முடியும். அதன் பின்னர் சகோதரி சுப்புலக்ஷ்மி பற்றிய குறிப்புகள்.
No comments:
Post a Comment