எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, November 05, 2010

சோபனம், சோபனம்,ஸ்ரீலலிதைக்கு சோபனம் 17

சிச்சக்திச் -சேதனா-ரூபா ஜடசக்திர் ஜடாத்மிகா" என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். மேலும் அம்பிகையின் கண்களை "வாமநயனா" என்றும் கூறும். இன்னொரு இடத்தில் "வாமகேசீ" என்றும் கூறும். வாமம் என்றால் இடப்பக்கம் என்ற பொருள் மட்டுமல்லாமல் அழகானது, வடிவானது என்ற பொருளிலும் வரும். வலப்பக்கம் இடப்பக்கத்தை விடவும் அதிக பலத்தோடும் திறமையோடும் இருப்பதால், (கவனிச்சுப் பார்த்தவங்க புரிஞ்சுக்கலாம், வலக்க்யைவிடவும் இடக்கைச் சுற்றளவு கொஞ்சம் குறைஞ்சே இருக்கும்) வலப்பக்கம் தக்ஷிண பாகம் என்று சொல்லப் படும். அந்த வாமபாகத்தில் இருக்கும் அம்பிகைதான் ஜடப்பொருட்களையும் உயிருள்ளதாய் சக்தி உள்ளதாய் மாற்றுகிறாள். இன்னும் சொல்லப் போனால் சிவனுக்கே சக்தியை அளிக்கிறாள். அம்பிகை தான் சைதன்ய குஸுமம் எனவும் அழைக்கப் படுகிறாள். லலிதா சஹஸ்ரநாமம், "சைதன்யார்க்கய-ஸமாராத்தயா சைதன்ய-குஸுமப்ரியா" என்று கூறும். அழகான தமிழில், ஞாநப்பூங்கோதையான அம்பாள் என்று கூறலாம்.

பெண்ணுக்கு உரிமை இல்லை என்பவர்கள் கவனிக்கணும். ஈசன் பதி, அம்பாள் பத்னி என்பதிலும் அம்பாளின் சக்தியால்தான் ஈசன் அசைவே ஏற்படுகிறது. அதாவது அம்பிகையானவள் ஆட்டி வைக்கிறாள். ஈசன் ஆடுகிறார். இதைத் தான் பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான் பாருனு சொல்லி இருக்கலாமோ?? நம் உடலின் இடப்பாகத்தில் இருக்கும் இதயம் தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சக்தியைத் தருகிறது. ஈசனின் அந்த வாமபாகத்தில் இருப்பவள் சக்திதானே? ஆனால் ஒரு விஷயம் யோசித்தோமானால் வலக்கையின் வசதியும், செளகரியமும், வலக்காலின் வசதியும், செளகரியமும் இடக்கை, காலுக்கு வருவதில்லை அல்லவா?? இங்கே தான் அம்பிகை தன்னை அடக்கிக் கொண்டு தான் ஈசனுக்கு அடங்கியவள் என்பதை நிரூபிக்கிறாள். சக்தி என்னவோ தருவது அவள் தான். ஆனாலும் ஈசனையே தன்னைவிடவும் அதிக சக்தி உள்ளவராய் வெளியே காட்டுகிறாள். மேலும் இங்கே அடக்குவது, அடங்குவது என்ற அதிகாரங்கள் பிரயோகிக்கப்படாமல் இயல்பாகவே எவரும் கேட்காமலும், சொல்லாமலும் இதுதான் நியதி என்று ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் இதயமான அந்த சக்தி இல்லை எனில் நம் உடல் எப்படி சரிவர இயங்காதோ அது போலவே அம்பிகையான சக்தி இல்லாமல் சிவத்தால் இயங்க முடியாது. இருதயம் எப்படி வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயங்குகிறதோ அப்படியே அம்பாளும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஈசனிடம் சரணடைந்து அவனையும் இயக்கி அதன் மூலம் நம்மையும் இயக்குகிறாள்.

இதையே அபிராமி பட்டர்,

“உமையும் உமையொருபாகனும் ஏக உருவில் வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே!”

நம்மைப் போன்ற பரிபக்குவமே துளிக்கூட இல்லாத பக்தர்களுக்கும் சக்தியானவள் தன் மகிமையால் தன் திருவடிகளுக்கு அன்பு செய்யும் அன்பர்களை ரக்ஷித்து அனுகிரஹம் செய்கிறாள். மேலும் அர்த்தநாரீசுவரத் தியானம் என்பது ஆணும், பெண்ணும் சமம் என்ற உணர்வை மேம்படுத்திப் பெண்களின் மேல் மரியாதையும், மதிப்பும் உண்டாகச் செய்வதோடு பெண்ணாசையையும் ஒழிக்கும் வல்லமை பெற்றது. இதையே பட்டர் தன் அடுத்த பாடலில் இவ்விதம் கூறுகிறார்.

“ஆசைக்கடலில் அகப்பட்டருள் அற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதமெனும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத் தாண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே!”

தேவியின் வழிபாட்டால் மண், பெண், பொன் என்னும் புறவுலகுச் சிந்தனைகளும் அது குறித்த ஆசைகளும் இல்லாமல் போகும். இதற்கு அபிராமி பட்டரே ஒரு வாழும் சாக்ஷியாகவும் இருந்திருக்கிறார் அல்லவா? ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன் என்பது இங்கே கூற்றுவனைக் குறிக்கும். கூற்றுவன் கை பாசம் என்னும் ஆயுதத்தால் துன்புறும்படி இருக்கும் அடியார்களைக் கரைசேர்ப்பவள் அன்னையே. இப்போ லலிதாம்பாள் சோபனத்தின் அடுத்த அவதாரத்தைப் பார்க்கலாம்.

ஸ்ரீராமாவதாரம். ஒரு சொல், ஒரு மனைவி, ஒரு பாணம் எனத் தனித்தன்மை பெற்று விளங்கிய புருஷோத்தமன் ஸ்ரீராமன். நம் நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் ஸ்ரீமத்ராமாயணம் விளங்குகிறது என்பதே அதன் பெருமையைக் கூறும். தன்னுடைய குடிமக்களுக்குத் தான்கொடுக்க வேண்டிய நல்லாட்சிக்காகத் தான் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதால் தன் அருமை மனைவியையே துறந்தவன் ஸ்ரீராமன். பலர் கண்களுக்கும் அவன் மனைவியைத் துறந்தது தவறு எனப் பட்டாலும், அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்னும் வழக்குச் சொல்லையும் அதன் உள்ளார்ந்த பொருளையும் கூர்ந்து கவனிப்பவர்கள் ஸ்ரீராமன் செய்தது சரியே எனப் புரிந்து கொள்வார்கள். எப்போது குடிமக்களில் சிலர் தன் மனைவியைத் தவறாய்ப் பேசுகின்றனரோ அப்போது அந்த மனைவியின் மேல் எத்தனை பாசம் இருந்தாலும் அவளைத் துறப்பதே சிறந்த முடிவு, குடிமக்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்ற முடிவெடுத்து ஆண்டான் ஸ்ரீராமன். அதே போல் தன் அருமை இளவல் லக்ஷ்மணனையும் அவன் துறக்கவேண்டி வந்தபோது அவனையும் துறந்தான். கொடுத்த வாக்கிற்காக இளவலைத் துறந்தான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மனிதன் எவ்வாறு மனம், வாக்கு, காயம் அனைத்தாலும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டிய ஸ்ரீராமனுக்கு மங்களம்.


“இராவணனைக் கும்பகர்ணனிந்திரஜித்தனை
இராட்சதாளை யவன் அனுப்பி வைத்தான்
தேவியும் இடக்கை ஆள்காட்டி விரலைச்
செப்பிடுவித்தை போல் உதறினாளே
ஸ்ரீராமலக்ஷ்மணர் ரதத்திலிருந்து கொண்டு
ராவணன் முதலோரை வதைகள் செய்தார்
தாமஸியாமல் ராக்ஷதாளை வதைத்த
ஸ்ரீ ராமலக்ஷ்மணருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து வருகிறார் நம்ம பலராமர். மூத்தவர். கண்ணனுக்கு அண்ணன். ராமாயணத்தில் இவர் இளவலாய்ப் பிறந்து அண்ணனுக்குச் சேவை செய்ததால் இங்கே மூத்தவராய்ப் பிறந்து உலக்கையையும், கலப்பையையும் வைத்துக்கொண்டு எல்லாரையும் நாசம் செய்கிறார்.

“வானரங்களையும் வருத்திவிட்டான் பண்டன்
மலைமலையாகவே தேவிமேலே
விஜய அம்பாள் தன் இடக்கை நடுவிரலை
மின்னல் மின்னினாற்போல் உதறினாளே
பலபத்திரரும் வந்தார் கைலாச மலைபோலப்
பெரிய உலக்கைக் கலப்பை கொண்டு
உலக்கைக் கலப்பையால் குரங்குகளைக் கொன்ற
உக்கிரபாலருக்குச் –சோபனம், சோபனம்

5 comments:

 1. பகிர்ந்தமைக்கு நன்றிகள் மாமி.

  ReplyDelete
 2. //பெண்ணுக்கு உரிமை இல்லை என்பவர்கள் கவனிக்கணும். ஈசன் பதி, அம்பாள் பத்னி என்பதிலும் அம்பாளின் சக்தியால்தான் ஈசன் அசைவே ஏற்படுகிறது. அதாவது அம்பிகையானவள் ஆட்டி வைக்கிறாள். ஈசன் ஆடுகிறார். இதைத் தான் பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான் பாருனு சொல்லி இருக்கலாமோ?? //
  உங்கள் இடமறிந்து சொல்லும் நகைச்சுவை எங்களையும் சிரிக்க வைக்கிறது கீதாம்மா
  //ஸ்ரீராமாவதாரம். ஒரு சொல், ஒரு மனைவி, ஒரு பாணம் எனத் தனித்தன்மை பெற்று விளங்கிய புருஷோத்தமன் ஸ்ரீராமன். நம் நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் ஸ்ரீமத்ராமாயணம் விளங்குகிறது என்பதே அதன் பெருமையைக் கூறும்//
  ஆஹா! ஸ்ரீராமரை பற்றி இன்னும் கூறுங்களேன் !
  நல்ல பகிர்வு கீதாம்மா தொடரட்டும் உங்கள் திருபணி!

  ReplyDelete
 3. நன்றி ராம்ஜி யாஹூ.

  ப்ரியா, ஏப்ரல் 2008-ல் இருந்து பார்க்கவும், ராமாயணப் பதிவுகள் கிடைக்கும். பாராட்டுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 4. மிக்க நன்றி கீதாம்மா
  அவசியம் பார்க்கிறேன்.
  படித்துட்டு பின்னூட்டம் போடலாம் தானே !

  ReplyDelete
 5. தாராளமாய்ப் போடுங்க ப்ரியா. இதிலே என்ன?? :))))))

  ReplyDelete