எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 25, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 24

தோள்களை கட்கதாரிணியும், புஜங்களை வஜ்ரதாரிணியும், கைகளை தண்டினியும், விரல்களை அம்பிகையும் காக்கவேண்டும். நகங்களை சூலேச்வரி ரக்ஷிக்க, கஷ்கங்களை அனலேஸ்வரி ரக்ஷிக்க, ஸ்தனங்களை மஹாதேவி ரக்ஷிக்க, மனதைச் சோகவிநாசினி ரக்ஷிக்கவேண்டும். இருதயத்தை ஸ்ரீலலிதையும், வயிற்றை சூலதாரிணியும், நாபியைக் காமினீ தேவியும், ரஹஸ்யஸ்தானத்தை குஹ்யேஸ்வரியும் காக்கவேண்டும். பூதநாதா லிங்கத்தையும் மஹிஷவாஹினி அபானத் துவாரத்தையும், இடுப்பில் பகவதியும், முழங்கால்களை விந்திய வாஸினியும் காக்கவேண்டும். தொடைகளை மஹாபலாதேவியும் முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில் நாரஸிம்ஹிதேவியும், பின்னங்கால்களில் மிதெளஜஸியும் ரக்ஷிக்கட்டும். கால்விரல்களை ஸ்ரீதரியும், பாதத்தின் கீழ் தலவாஸினியும், நகங்களை தம்ஷ்ட்ராகராலியும், கேசங்களை ஊர்த்வகேசினியும், மயிர்க்கால்களை கெளபேரியும், தோலை வாகீச்வரியும், இரத்தம், வீரியம், கொழுப்பு, மாம்ஸம், எலும்பு,மூளை இவற்றைப் பார்வதியும் காக்கவேண்டும். குடல்களைக் காலராத்திரியும், பித்ததாதுவை முகுடேஸ்வரியும், ஆதாரக் கமலங்களில் பத்மாவதியும், சுபதாதுவில் சூடாமணியும் ரக்ஷிக்கட்டும். நகங்களுக்குப் பிரகாசத்தை ஜ்வாலாமுகியும், எல்லா சந்திகளிலும் அபேத்யா தேவியும் பிரம்மாணி சுக்லத்தையும், நிழலை சத்ரேஸ்வரியும் ரக்ஷிக்கட்டும்.

தர்மசாரிணி நமது அஹங்காரத்தையும், மனதையும், புத்தியையும் காக்கவேண்டும், பிராணன், அபானன், வியானன், ஸமாநன், உதானன் போன்றவற்றையும் அவளே காப்பாள். புகழ், கீர்த்தி, அழகு இவற்றை சக்ரீணியும், இந்திராணி கோத்திரத்தையும், சண்டிகை பசுக்களையும் காக்கவேண்டும். மஹாலக்ஷ்மி தன் குழந்தைகளான நம்மை காக்கவேண்டும். பைரவி மனைவியையும், க்ஷேமங்கரீ வழியையும், விஜயா அனைத்துப் புறங்களிலும் காக்கவேண்டும். இங்ஙனம் தேவியின் ஸ்மரணமே நம்மைக் காக்கும் கவசமாக நினைத்து ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கவேண்டும் என்று தேவி மஹாத்மியம் கூறுகிறது.

இதைத் தவிரவும் தேவியின் இருப்பிடங்களாகவும், அவற்றில் குடிகொண்டிருக்கும் நாமாவளிகளும் விவரிக்கப் பட்டிருக்கிறது. அவையாவன:

லக்ஷ்மி தேவிக்குக் கோலாபுரம் மஹாஸ்தானமாகவும்,

ரேணுகாதேவிக்கு மாத்ருபுரமும்,

துர்க்கைக்கு சப்தஸ்ருங்கம், துளஜாபுரம், இங்குலை, ஆகிய இடங்களும்,

ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிராமரி, ஸ்ரீரக்த தந்த்ரிகா, அன்னபூரணி ஆகியோரின் இருப்பிடமாக சர்வ சக்தி வாய்ந்ததும், மூலாதார க்ஷேத்திரங்களின் முதன்மையானதும் ஆன காஞ்சிபுரமும்,

அங்கேயே பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்ட ஏகாம்பரமும்,

யோகேஸ்வரி பிரதிஷ்டை செய்த தேஜோஸ்தானம்,

பீமாதேவி விந்த்யாசலத்திலும்,

விமலாதேவி, நீலாம்பிகை போன்றோர் திருவானைக்காவல், ஸ்ரீநகரம்

நேபாளத்தில் குஹ்யகாளியாகவும்,

எல்லாவற்றுக்கும் மேல் தஹராகாச க்ஷேத்திரமான சிதம்பரத்தில் சிவகாமியாகவும்,

வேதாரண்யத்திலும் சீனத்திலும் நீல சரஸ்வதியாகவும்,

வைத்தியநாதத்தில் வகலாவாகவும்,

மணித்வீபத்தில் புவனேஸ்வரியாகவும்

காமாக்யாவில் திரிபுர பைரவியாகவும்

புஷ்கரில் காயத்ரி தேவியாகவும்,

அமரேசத்தில் சண்டிகையாகவும்,

பிரபாச க்ஷேத்திரத்தில் புஷ்கரேக்ஷணியாகவும்,

நைமிசாரண்யத்தில் லிங்கதாரிணியாகவும்,

புருஹூதையில் புஷ்கராக்ஷியாகவும்,

ஆஷாடத்தில் ரதி தேவியாகவும்,

மைசூரில் சண்டமுண்டிகாவாகவும்,

பராபூதி, பூதியில் பரமேஸ்வரியின் தண்டினியாகவும்,

நகுலத்தில் நகுலேஸ்வரியாகவும்,

அரிச்சந்திராவில் சந்திரிகாவாகவும்,

ஸ்ரீபர்வதத்தில் சங்கரியாகவும்

திருவையாறில் திரிசூலியாகவும்,

ஆம்தாத்கேச்வரத்தில் குக்ஷுமாவாகவும்,

மகாகாளேச்வரத்தில் சங்கரியாகவும்

மத்திமத்தில் சர்வாணியாகவும்,

கேதாரத்தில் மார்க்கதாயினியாகவும்,

பைரவத்தில் பைரவியாகவும்,

கயையில் மங்களாவாகவும்,

குருக்ஷேத்திரத்தில் ஸ்தாணுப்ரியாவாகவும்,

நகுலத்தில் ஸ்வாயம்பவியாகவும்

கனகலத்தில் உக்ராதேவியாகவும்,

விமலேஸ்வரத்தில் விஸ்வேஸ்வரியாகவும்,

மஹாநந்தாவில் மஹாந்தகையாகவும்,

பீமக்ஷேத்திரத்தில் பீமேஸ்வரியாகவும்,

பவானியில் சங்கரியாகவும்.

அர்த்தகோடியில் ருத்ராணியாகவும்

காசியில் தன் விசால நயனங்களால் அருளாட்சி புரியும் விசாலாக்ஷியாகவும்,

மகாலயத்தில் மஹாபாகாவாயும்,

கோகர்ணத்தில் பத்ரகாளியாகவும்,

பத்ரகர்ணிகையில் பத்ரியாகவும்

உத்பலாக்ஷியில் ஸ்வர்ணாக்ஷியாகவும்,

ஸ்தாண்வீயில் ஸ்தாணுவாகவும்,

திருவாரூர் என்னும் மற்றொரு மூலாதார க்ஷேத்திரத்தில் கமலாம்பிகையாகவும்

சகலண்டகத்தில் பிரசண்டையாகவும்

குருண்டலையில் த்ரிசந்தியாதேவிகளாகவும்

மாகோடத்தில் மகுடேஸ்வரியாகவும்

மண்டலேசத்தில் கண்டகியாகவும்,

காலஞ்சரத்தில் காளிகாவாயும்,

சங்குகர்ணத்தில் த்வனீஸ்வரியாகவும்

ஸ்தூலகேஸ்வரத்தில் ஸ்தூலகேஸ்வரீயாகவும்,

அனைத்துக்கும் மேல் பக்தர்களின் இதயத்திலும், ஞாநிகளின் இதயத்திலும் நித்யவாசம் செய்யும் ஹ்ருல்லேகா என்னும் மந்திர தேவியாகவும் இருக்கின்றாள்.

தேவியின் இந்த நாமாவளிகளை முடிந்தவர்கள் தினமும் காலை, மாலை இருவேளைகளுமோ அல்லது ஒருவேளையோ சொல்லலாம். இவை தேவியின் சக்திபீடங்கள் எனச் சொல்லப் படுகின்றன. இவற்றில் சில இருக்குமிடம் தெரியவில்லை. சிலவற்றின் இன்றைய பெயர்கள் மாறியுள்ளன. விரைவில் ஒரு சின்ன அட்டவணையுடன் தர முயல்கிறேன்.

"இடது துடைமேல் சுவாமி வைத்துக்கொண்டம்மனை
வலது கன்னத்தை முத்தமிட்டுக்கொண்டு
விடைமேல் அழகரும் வளமுடன் தேவிக்கு
விபூதியிட்டு திருஷ்டி கழித்து
அஞ்சாதீர் எனப் பக்தர்க்கபயப் பிரதானஞ்செய்து
அம்பிகையுடன் தாம்பூலந்தரித்து
இந்தபடி ஈசன் சிந்தாமணிக்கிருஹத்தில்
இருந்தார் தேவியுடன் -சோபனம் சோபனம்

தேவிக்கு உயர நாற்பது முழத்திற்கு மேல்
தேசத்தில் ஒப்பில்லா மேல்கட்டிலில்
யமுனாகைஹாரமாகச் சுற்றியிருக்கின்றாள்
இச் ஜகத்தை மோஹிப்பிக்கும் மாயை!
தேவியுடைய ஸெளபாக்கியத்திற் கொப்பில்லை
தேவிதானறிய வேணுமகஸ்தியா
நாவாலும் மனதாலும் எண்ண முடியாது
ராஜேச்வரி மஹிமை-சோபனம், சோபனம்

யமுனாகைஹாரம் என்பது மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி. குண்டலினி சக்தியை தேவி என்றும் உடலைப் பாம்புபோல் மூன்றரைச் சுற்றாய் வளைத்துக்கொண்டு அங்கே வீற்றிருப்பதாயும் கூறுவார்கள். இந்தச் சக்கர விபரங்களையும், ஸ்ரீவித்யா ஜபத்தின் மஹிமை பற்றியும் வரும் நாட்களில் காணலாம்.

No comments:

Post a Comment