இவ்வுலகின் அக்ஞான இருளைப் போக்கும் ஒளியான அம்பிகையோடு சேர்ந்து ஐக்கியமான சிவனும் சேர்ந்த சச்சிதாநந்த ஸ்வரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு உலகின் மற்றப் புற இன்பங்களின் ஆநந்தங்கள் மங்கியே தெரியும். சிவதம்பதிகளின் ஜீவாதார ஒளியைத் தரிசித்தவர்களுக்கு வேறு பேறு வேண்டியதில்லை. பக்தர்களின் மனமாகிய சாகரத்தில் மலரும் ஆநந்தமயமான ஞாநத்தாமரையின் மகரந்த வாசனைகளை அனுபவிக்கும் இரு அழகான ஹம்ஸங்களாக ஈசனும், அம்பிகையும் குறிப்பிடப் படுகின்றனர். ஹம் என்பது சிவனையும், “ஸ” என்பது சக்தியையும் குறிக்கும். இவர்களின் சம்பாஷணைகளாகப் பதினெட்டு வித்தைகளும் குறிப்பிடப் படுகின்றன. அவை வேதங்கள் நான்கு, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம் போன்றவை ஆறு, மீமாம்ஸம், நியாயம், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் என நான்கு, மருத்துவ வேதமான ஆயுர்வேதம், ஆயுதப் பயிற்சிகளைக் குறிக்கும் தனுர்வேதம், சங்கீதம் போன்ற கலைகளுக்குச் சொந்தமான காந்தர்வ வேதம், மற்றும் பொதுவான நீதிகளைக்குறிக்கும் நீதி சாஸ்திரம் போன்றவை ஆகும். நம் மனதுக்குள் இவ்வாறு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அம்பிகையின் ரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு சகல பாவங்களும் புண்ணியமாக மாறிவிடும்.
இதையே அபிராமி பட்டர்,
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.”
என்கிறார். அபிராமியின் கடைக்கண்களின் கடாக்ஷத்தால் அவளை வழிபடும் அன்பர்களுக்கு எல்லாவகையான ஐஸ்வரியங்களும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் தளராத மனம், தெய்வீக அழகு, வஞ்சம் இல்லாமனம் என அனைத்தையும் கொடுக்கும். லலிதா சஹஸ்ரநாமமோ, அம்பிகையை அனைத்துக்கலைகளுக்கும் தலைவி என அழைக்கிறது. “சதுஷ்ஷஷ்டி கலாமயீ” எனவும், “கலாவதீ” எனவும் கூறுகிறது. கலா என்பது மயிலின் கலாபத்துக்கும் ஒரு பெயராகும். ஆகவே அப்படிப் பார்த்தாலும் சகலகலாமயிலான அம்பிகைக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அம்பிகையின் கடைக்கண்களின் மூன்று விதமான ரேகைகள் திரிவேணி சங்கமத்தை நினைவூட்டுவதாய்க் கூறுவார்கள்.
சூரிய புத்திரியும் கறுப்பு வண்ணத்தவளும் ஆன யமுனை, வெளுப்பான கங்கை, சிவந்த நிறமுள்ள சோனை போன்ற மூன்று நதிகளின் சங்கமத்தை நினைவூட்டும் விதமாய் அம்பிகையின் கண்களின் ரேகைகள் காட்சி அளிக்கின்றன். மேலும் இவை மும்மூர்த்திகளையும் நினைவூட்டுகிறது. ரஜோ குணமுள்ள சிருஷ்டிகர்த்தா பிரம்மாவையும், ஸத்வ குணம் நிறைந்த ஸ்திதிகர்த்தா விஷ்ணுவையும், தமோ குணம் நிறைந்த ஸம்ஹார கர்த்தா ருத்திரரையும் நினைவூட்டுகிறது. இப்போ பண்டாஸுரன் என்னவானான் என்று பார்ப்போம்.
அடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.
“இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம்
இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான்
பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர
விலையசைத்தாள் அதிலிருந்து
அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து
அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார்
நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி
நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம்
நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன்.
மஹாபலி முதலான அஸுரசேனைகளை
வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன்
மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச்
சுழட்டியே உதறினாள் அதிலிருந்து
வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய்
மஹாபலி அஸுரனையும் ஜயித்து
மஹாபலியை பாதாளத்தில் தள்ளின
வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம்
வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது.
கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும்
அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை
பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு
புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல
பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப்
பரசுராமருக்குச் சோபனம், சோபனம்.
மனிதரில் பல பரிணாமங்கள், பலவிதமான மனிதர்கள். முதலில் வந்ததோ குட்டையான மனிதன். அடுத்து வந்ததோ தன் கோபத்தை அடக்க முடியாத மனிதன். இப்போ வரப் போவதோ பூரணமான ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம். மர்யாதா புருஷோத்தம் என அன்போடு அழைக்கப் படுபவன். நாளை பார்ப்போமா??
பகிர்ந்தமைக்கு நன்றிகள் மாமி.
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்
// நம் மனதுக்குள் இவ்வாறு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அம்பிகையின் ரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு சகல பாவங்களும் புண்ணியமாக மாறிவிடும்.//
ReplyDeleteஅம்பிகையின் படத்தை தனியாக வெளியிட்டு எங்களுக்கு உதவுங்கள் கீதாம்மா
நல்ல பகிர்வு கீதாம்மா தொடர்ந்து எழுத இறைநிலை துணை புரியட்டும் !