
இச்சாசக்தி-க்ஞாநசக்தி-க்ரியாசக்தி-ஸ்வரூபிணி
ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்-ரூப-தாரிணி என்று சொல்கிறது லலிதா சஹஸ்ரநாமம். அம்பிகை அனைத்து சக்திகளுமாய் இருக்கிறாள். அனைத்துக்க்ம் காரணியாய் இருக்கிறாள். அவ்வளவு ஏன் நமக்குப் பாலூட்டித் தாலாட்டிப் பாடி, சோறும் ஊட்டுவது அவளே. இதையே செளந்தர்ய லஹரியில் அம்பிகையை வர்ணிக்கும் ஆசாரியர் அவள் சூரியனையும், சந்திரனையும் தன்னிரண்டு ஸ்தனங்களாய்க் கொண்டு இவ்வுலகத்து மாந்தர்களான நமக்கும், மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் அமுது ஊட்டுவதாய்க் கூறுவார். பால் ஊட்டும் தாயாக அம்பிகையைக் கூறுகிறார். என்ன இது?? சூரியனும், சந்திரனும், அம்பாளின் இரண்டு மார்பகங்களா? ஒரே பேத்தல்! அது வழியாப் பாலூட்டறதாமே என்பவர்கள், நன்கு கூர்ந்து கவனிக்கவும். அம்பிகைதான் நமக்கு அன்னை. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வாறு மனம் கனிந்து உவகையுடன் பாலூட்டுவாளோ அவ்வாறே அன்னபூரணியாம் அம்பிகையின் அருளாலேயே நாம் உண்கிறோம். தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை வங்கத்து மேதை ஜகதீஸ் சந்திரபோஸ் சொல்லி இருக்கார் இல்லையா?? நம் வேதமோ இதை அவருக்கும் முன்னரே கூறி உள்ளது.
சூரிய சந்திரர்களின் கிரணங்களால் தான் தாவரங்கள் உயிர் பெறுகின்றன அல்லவோ?? சூரிய வெளிச்சம் படவில்லை என்றால் ஒரு விதை முளைக்குமா? தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவை சூரியனிடமிருந்து நேரே பெறுகின்றன அல்லவா?? அதுதான் தாவரங்களின் சத்தாய் மாறி நாம் உண்ணும்போது நம் உடலில் கலந்து நமக்கு சக்தியைக் கொடுக்கிறது. இவ்வுலகிலே சூர்ய சக்தி இல்லை எனில் எதுவுமே நமக்குக் கிடைக்காதே? சூரிய சக்தியை நாமும் நேரே சூரியனிடமிருந்து பெறுவதற்காகவே அதிகாலையில் சூரிய நமஸ்காரமும், அதனோடு சேர்ந்த அனுஷ்டானங்களும் வைத்திருக்கிறார்கள். அது போல் நிலவொளியிலேயே மூலிகைகள் வளரும். மூலிகைகளின் மகத்துவம் நாம் அனைவரும் அறிவோம். மருத்துவ சக்தி உள்ள இந்த ஒளஷதங்கள் சந்திர கிரணங்களின் சக்தியைப் பெற்றே வளர்கின்றன. மேலும் சந்திரனின் பூரண வளர்ச்சியைப் பொறுத்தே சமுத்திரம் பொங்குவதும் அடங்குவதுமாய் உள்ளது. சந்திரனின் இழுப்பின் சக்தியாலேயே பருவக்காற்று, பருவ மழை அனைத்தும் ஏற்படுகின்றன. சூரிய கிரணங்களால் ஆவியாகும் சமுத்திரத்து நீரானது, சமுத்திரத்து நீரை ஆவியாக்கும் அலைகளில் சந்திரன் உண்டாக்கும் மாற்றங்களாலேயே மழையாக மாறுகின்றன. ஆகவே இவ்வுலகத்து இயக்கத்துக்கே அம்பிகை காரணமாகிறாள். நம்முடைய புத்தி ஒளிவிட்டுப் பிரகாசிப்பதற்குச் சூரியன் உதவினால் மனத்தின் எண்ணங்களுக்குக் காரணியாகச் சந்திரன் விளங்குகிறான்.
இந்த அன்னபூரணி அன்ன பிக்ஷை வயிற்றுக்கு மட்டும் போடுவதில்லை. நம் மனதுக்கும் ஞாந பிக்ஷை போடுகிறாள். இவள் நம் இச்சைகளை மட்டுமல்லாமல், நம் உடலின் சக்தியாகவும், ஞாநத்தைத் தரும் சக்தியாகவும் செயல்படுகிறாள்.
இவ்விதம் அம்பிகை அனைத்துமாய் இருப்பதை பட்டர் குறிக்கையில்,
“நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே.” என்கிறார். இவ்வுலகங்கள் அனைத்துமே அம்பிகை ஈன்றெடுத்தாள் என்கிறார் பட்டர். மேலும் ஆதியும் அந்தமும் இல்லா, முதலும் முடிவும் இல்லா, பிறப்பும் இறப்பும் இல்லா இவளைப் போய் மலைமகள் என்று கூறுவது வம்பு என்கிறார். அம்பிகையின் சரித்திரத்தை ஆராயப் புகுந்தால் முன்னும், முடிவும், பின்னும், என்றும் எப்போதும் எதுவும் புலனாகாது. நம் அளவுக்கு மிஞ்சிய செயலாகும் அது. லலிதா சஹஸ்ரநாமத்தில்,
“அநகா அத்புத சாரித்ரா” என எண்ணற்றக் கோடிக்கணக்கான அற்புதமான சரித்திரங்களை உடையவள் எனப் போற்றுகிறது. இத்தனை அற்புதச் சரித்திரம் படைத்த அம்பிகை தன் கைவிரல்களில் இருந்து கண்ணனைத் தோற்றுவிப்பது பெரிய விஷயமா?? அதைப் பார்ப்போமா?
“சிசுபாலன் கம்ஸன் சகடன் பூதன் தன்னை
துஷ்டன் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
விச்வேச்வரியும் இடக்கைப் பவித்திர
விரலை அசைத்தாள் அதிலிருந்து
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தனாகவே
ஸ்வாமி வந்தவர்களை ஸம்ஹரித்தார்
சங்கர்ஷணன் ஸ்ரீகிருஷ்ணன், அநிருத்தன் ப்ரத்யும்னன்
ஸ்வாமி நாலுபேருக்கும்-சோபனம் சோபனம்.
அடுத்துக் கல்கி அவதாரம்.
கலியுகாஸ்திரத்திலே கக்கும் மிலேச்சரைக்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
கல்யாணியும் இடக்கைச் சுண்டு விரலைக்
காட்டி அசைத்தாள் அதிலிருந்து
அட்டஹாஸத்துடன் கல்கி அவதாரமாய்
அச்சுதரும் வந்தார் அந்தக்ஷணம்
முரட்டுத் தனமுள்ள மிலேச்சரை வதை செய்த
முரஹரி கல்கிக்குச்-சோபனம் சோபனம்
பின்னும் அநேகம் மோஹனாஸ்திரந்தன்னைப்
பூட்டிவிட்டான் சக்தி சேனையின் மேல்
அந்நேரம் அம்மனும் சாம்பவர் அஸ்திரத்தில்
அதையும் விமோசனம் செய்துவிட்டாள்
அக்ஷெளஹிணி சேனையை நாராயணாஸ்திரத்தால்
பஸ்மமயமாக ஆக்கிவிட்டாள்
துஷ்டன் குடிலாக்ஷன் முதற்சேநாதிபதிகளைச்
சிதைத்தாள் பாசுபதத்தால்-சோபனம் சோபனம்
பின்னும் அநேகம் அஸ்திரத்தாலவன்
அக்ஷெளஹிணி சேனை போன பின்பு
என்ன பலம் லலிதா தேவிக்கு என்று
ஏங்கி விழிக்கின்றான் பண்டாஸுரன்
அம்மனும் தம்முடைய நாதர் காமேசரை
அந்தரங்கத்திலே தான் நினைத்துக்
காமேசர் அஸ்திரத்தால் ஜயம் வரட்டுமென்று
கணவரை வேண்டினாள்-சோபனம், சோபனம்.
நாளை பண்டாஸுரன் வதம்
//அம்பிகை தன் கைவிரல்களில் இருந்து கண்ணனைத் தோற்றுவிப்பது பெரிய விஷயமா??//
ReplyDeleteதற்போது தான் இந்த மாதிரி ஆன்மிக தகவல்களை தெரிந்து கொண்டேன்
பதிவுக்கு நன்றி டீச்சர்