
பக்திமார்க்கத்தில் இருந்து கொஞ்சம் உயர்ந்தது யோக மார்க்கம் இல்லையா?? அந்த யோக மார்க்கத்தில் தான் இந்த ஸ்ரீவித்யா வழிபாடுகள் வருகின்றன. நம்முடைய பிராணனின் மூலம் எதுவெனக் கண்டு பிடித்து அந்த மூலத்தோடு நாம் ஒன்று சேர்கிற வழியே நம்முடைய பிறப்பின் தாத்பரியம். எனினும் இது நமக்குப் புரியப் பல ஜன்மங்கள் ஆகின்றன. நம் பூர்வ ஜன்மக் கர்ம வினையைப் பொறுத்து இந்த ஜன்மத்தில் ஆன்மீகத்தில் நாம் முன்னேறுவது நடக்கும். நாம் நம்முடைய உறங்கும் பிராணசக்தியை மூலாதாரத்தில் இருப்பதைத் தட்டி எழுப்பவேண்டும். அதை மேலே மேலே கொண்டு வந்து சஹஸ்ராரத்தை அடையவேண்டும். சச்சிதாநந்தத்தில் மூழ்கவேண்டும். அதற்கான யோக சாதனைகளில் இந்த வித்யா வழிபாட்டு முறையும் ஒன்றாக இருந்து வருகிறது. சஹஸ்ராரத்தை அடைந்துவிட்டால் யோகத்தின் நிறைவு. யோகத்தின் நிறைவில் எந்தவிதமான அசைவுகளும் இல்லாமல் நம்மை மறந்த நிலையில் இருப்போம். நம்மிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை போன்றவை நீங்க வேண்டும். ஆநந்தம் பிறக்கவேண்டும்.
பரப்பிரும்ம தத்துவத்தை ராதாகிருஷ்ணனாய்ப் பார்த்தால் அதுவும் ஆநந்தம், ஆநந்தம், ஆநந்தமே தான். ஆநந்தம் வந்தால் சிரிப்போம். ராதையின் செளந்தரியமும், கிருஷ்ணனின் ப்ரேமையும் ஆநந்தம். அதற்கு உயிரும், உணர்வும் வேண்டுமல்லவா?? அந்த உயிரும், உணர்வும், அறிவுமாக இருப்பவளே அம்பிகை. லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை, “ சித்கலாநந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ” என்று கூறும். கல்பகோடி காலமாய், இடைவிடாமல் தன் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறாள் அம்பிகை. அவளை வழிபடுபவர்களுக்கு இனிப் பிறவி இல்லை. இதை பட்டர் எப்படிச் சொல்கிறார் என்றால்,
“உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்தழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே!”
என்கிறார். நம் கர்மத்தால் பிறவி எடுக்கிறோம். அந்தப் பிறவியில் நாம் நம் முற்பிறவிக் கர்மமும், பாவமும் போகும்படியாக அம்பிகையை வணங்கினால், அவள் தாமரைத் திருவடிகளில் சரண் அடைந்தால், அவள் கருணை வெள்ளம் பொங்கி வந்து நம் ஆணவமாகிய அழுக்கை நீக்கும். மாயையிலிருந்து விடுபடுவோம். அவளே முக்திரூபிணீ. என்றாலும் அம்பிகை தன் பர்த்தாவிற்கே முதல் பெருமையை அளிக்கிறாள். காமேசரை வேண்டியே அஸ்திரம் பெறுகிறாள். இங்கே அவள் சக்தியாக இருந்தாலும் தன்னை வெளிப்படுத்தாமல் ஈசனிடம் ஒன்றிப் போகிறாள். உள்ளே இருந்து இயக்குவது அவளாகவே இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறாள். இதுவே சிவசக்தி ஐக்கியம்.
நிலவிலிருந்து ஒளியையும், பூவிலிருந்து சுகந்தத்தையும், தீபத்திலிருந்து பிரகாசத்தையும் எப்படிப் பிரிக்கவே முடியாதோ, அப்படி இவர்களையும் பிரிக்கவே முடியாது. சொல்லும், பொருளும் இவர்களே. இதையே அபிராமி பட்டர்,
“சொல்லும்பொருளும் என நடமாடும் துனைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் வர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே!”
என்கிறார். சொல்லில் இருந்து பொருளை எவ்வாறு தனியாய்ப் பிரிக்கவே முடியாதோ அவ்வாறே அம்மையப்பனையும் பிரிக்கவே முடியாது. “பாஷா-ரூபா ப்ருஹத்ஸேநா பாவாபாவ-விவர்ஜிதா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறுகிறது. காமேசரிடம் அஸ்திரம் பெற்ற அம்பிகை பண்டாஸுரனை வதைக்கிறாள்.
“கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே
காமேசர் அஸ்திரங்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர் அஸ்திரத்தை
மண்டலாகாரமாய் வில் வளைத்துக்
கோடி சூரியன் போன்ற காமேசர் பாணத்தைக்
கோதண்டத்தில் வைத்து மந்திரித்து
வேடிக்கையாகவே காது பரியந்தம்
விசையாய் இழுத்துவிட்டாள்-சோபனம், சோபனம்.
தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ
தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல
தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது
தரணியிலே விழுந்து உயிரைவிட்டான்
அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே
அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு
அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து
அம்மன் ஜயங்கொண்டாள்-சோபனம் சோபனம்
புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள்
புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச
அப்பொழுது தேவி சக்திசேனையுடன்
ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள்
ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள்
காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள்
நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார் பூமியும்
புனிதமாய் செழித்தது –சோபனம் சோபனம்
ஆயிற்று. தேவியின் அவதாரக் காரியம் நிறைவேறியாச்சு . அடுத்துத் தேவர்கள் கேட்டது மன்மதனை எழுப்பவேண்டுமென்று. ஆம், அவன் சாம்பலின் மூலமே பண்டாஸுரன் வந்தானல்லவா? எரிந்த மன்மதனை நினைத்து நினைத்து அழுது வேதனைப்படும் ரதியின் மனச் சமாதானத்துக்கு மட்டுமா?? இல்லை, இல்லை, மன்மதன் இல்லை எனில் உலகில் சிருஷ்டி காரியம் எப்படி நடக்கும்?? என்றால் ஏன் ஈசன் எரித்தார்?? யோகத்தில் இருந்த ஈசன் மீண்டும் சிருஷ்டி புதிதாய்த் தொடங்க வேண்டியே அழித்தார். இப்போது அம்பிகை அருளால் மீண்டும் அனைத்தும் ஆரம்பிக்கவேண்டும் அல்லவா? மன்மதனை எழுப்பித் தரச்சொல்லிக் கேட்டார்கள் மும்மூர்த்திகள் முதல் முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும். மேலும் சூரனையும் அழிக்கவேண்டுமே.
கந்த சஷ்டிக்கு எழுத நினைச்ச பதிவு. பல பிரச்னைகளால் தாமதமாய் வருது என்றாலும் மன்மதன் உயிர்பெற்று எழுந்ததையும் ஷண்முகன் பிறப்பையும், அதன் தத்துவத்தையும் நாளை பார்ப்போமா???
நல்ல பதிவு
ReplyDelete//நம் கர்மத்தால் பிறவி எடுக்கிறோம். அந்தப் பிறவியில் நாம் நம் முற்பிறவிக் கர்மமும், பாவமும் போகும்படியாக அம்பிகையை வணங்கினால், அவள் தாமரைத் திருவடிகளில் சரண் அடைந்தால், அவள் கருணை வெள்ளம் பொங்கி வந்து நம் ஆணவமாகிய அழுக்கை நீக்கும். //
அர்த்தம் பொதிந்த வரிகள்
தொடருங்கள் கீதாம்மா !
படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் . தொடருங்கள்
ReplyDeleteஅருமையான ஆன்மீக தகவல்கள். வாழ்த்துக்கள். என் பிளாக்கில் திருப்பூவணப் பூராணம் பார்க்கவும்.veeluthukal.blogspot.com
ReplyDelete