எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 28, 2011

கல்யாணமாம் கல்யாணம்! பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்!

வாசலில் வந்தது என்னோட சித்தப்பாவின் தம்பி. அவருக்குத் தாமதமாய்க் கல்யாணம். கல்யாணத்தின்போது நான் சின்னமனூரில் இன்னொரு சித்தி வீட்டில் இருந்தேன். திரும்பி வந்ததும் உடனேயே அம்மா ஹோசூர் கிளம்பியதால் நான் மதுரையிலேயே வீட்டில் இருந்தேன். சின்னச் சித்தப்பா உள்ளே வந்தார். காலம்பர சாப்பிட்டுட்டேன் என்று சொன்னார். அதனால் அவசரம் அவசரமா உப்புமா பண்ணிக் காப்பியும் போட்டுக் கொடுத்தேன். அவர் எல்லாம் சாப்பிட்டுவிட்டு, ஜாதகம் பத்திப் பேச ஆரம்பித்தார். நான் அப்பா, அம்மா ஊரில் இல்லைனு சொல்லியும் கேட்கவில்லை. "அந்தப் புனாப் பையர் என்னோடசொந்த மச்சினர் தான், வேறே யாரும் இல்லை. நீ என் கல்யாணத்துக்கு வந்திருந்தியானா அப்போவே பார்த்திருக்கலாம். உன்னைப் பத்தி நாங்க நிறையச் சொல்லி இருக்கோம் அவங்க வீட்டிலே. அவங்க ஆவலோடு இருக்காங்க. நாங்க தான் தலை தீபாவளிக்குப் போறச்சே உன் ஜாதகத்தை எடுத்துண்டு போய்க் கொடுத்தோம். தாராளமாப் பார்க்கச் சொல்லு அப்பாவை!" என்று சொன்னார். அப்பா கிட்டே சொல்லிடறேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிட்டுக் கிளம்பிட்டார். அப்பா வந்ததும் விஷயத்தைத் தெரிவித்தேன். வேறே வேலை இல்லை. புனாவிலெல்லாம் இருக்கிறவருக்கு எப்படிக் கொடுக்கிறது? அதுவும் மிலிடரியிலே வேலைனு வேறே சொல்லறாரே! அது நமக்குச் சரிப்படாதுனு அந்த விஷயத்தை அதோடு முடித்துவிட்டார். ஜாதகம் வந்தப்போ வேலை சரியாப் போடலை. இப்போ சின்னச்சித்தப்பா வந்து தான் வேலை பத்திச் சொன்னார்.

அப்பா வேறே ஜாதகம் பார்க்க ஆரம்பிக்க, எங்க ஜோசியரோ விடாமல் அந்தப் பையனைப் பாருங்க. வேறே ஜாதகம் நான் பார்த்துத் தரேன். ஆனால் அது தான் நடக்கும்னு விடாமல் சொன்னார். அப்போ சென்னையிலிருந்து என் சித்தப்பாவே வேறே ஏதோ விஷயத்துக்காக மதுரை வந்தவர் எங்க வீட்டுக்கும் வந்தார். அப்பாவிடம் ரொம்ப நேரம் பேசி எல்லாத்தையும் எடுத்துச் சொல்லிட்டு, நீங்க நேரே போய்ப் பாருங்க. அவங்க ஊருக்குப் போற வழி இது. இப்படிப் போகணும். நீங்க வேணும்னா முன்னாடி சொல்ல வேண்டாம். சொல்லாமலேயே போய்ப் பாருங்க. பிடிச்சால் மேற்கொண்டு பெண்பார்க்க வரச் சொல்லுங்கனு அப்பாவோட மனசுக்கு ஏத்தாப்போல் சொன்னார். அப்போல்லாம் பிள்ளை வீட்டை ஜாதகம் பொருந்தின உடனேயே நேரில் போய்ப் பார்த்துக் கொண்டு வந்துடுவாங்க.

அதனால் அப்பாவும் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு சம்பிரதாயப்படி ஜாதகம் மாற்றவேண்டும் என்பதால் என்னோட ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். கும்பகோணம் போய் அங்கிருந்து நன்னிலம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு கூந்தலூர் என்னும் ஊரில் இறங்கிக் கொண்டு அங்கிருந்து அரசலாற்றைத் தாண்டி என் மாமனார், மாமியார் இருந்த கருவிலிக்குப் போகவேண்டும். அந்த நாட்களில் அரசலாற்றில் கல்பாலம் போடப் படவில்லை. மூங்கில் பாலம் தான். ;அதோடு கருவிலிக்குப் பேருந்தும் போகாது. கூந்தலூர் அருகே இருக்கும் எரவாஞ்சேரி தான் கொஞ்சம் பெரிய கிராமம். அந்தக் கிராமத்துக்கே நான் கல்யாணம் ஆகிப் போன அந்த வாரம் தான் கும்பகோணம் ராமன் அண்ட் ராமன் பேருந்து விட்டாங்க. அது வரைக்கும் கூந்தலூரில் பேருந்து குறிப்பிட்டது தான் நிற்கும். ஆகவே முன் கூட்டிச் சொன்னால் தான் நல்லது. வண்டி கட்டிக்கொண்டு போய்க் கூட்டி வர முடியும்.

கூந்தலூருக்கோ, எரவாஞ்சேரிக்கோ வண்டி வரணும்னா, (மாட்டு வண்டிதான்) அரசலாற்றில் இறங்கித் தான் வரணும். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருக்கும் நாட்களிலும், (அப்போ காவிரிப் பிரச்னை இவ்வளவு இல்லை, அரசலாற்றில் கோடையில் கூடக் கொஞ்சமாவது தண்ணீர் ஓடும்.)மற்றக் கோடை நாட்களிலும் வண்டியைப் பிரித்து மாட்டை அவிழ்த்து ஓட்டி விடுவாங்க. அதுக்கு முன்னாடி வண்டியிலே வரும் பிரயாணிகள் இறங்கிக்கொண்டு மூங்கில் பாலம் வழியாஅக்கரைக்குப் போவாங்க, அவிழ்த்து விட்ட மாடுங்க மெதுவாப் போய் அக்கரைக்குப் போய்க் காத்துட்டு இருக்கும். இங்கே வண்டியை ஆற்றில் இறக்குவாங்க. அக்கம்பக்கம் எப்படியும் நாலைந்து ஆட்கள் தோப்புக்களில் வேலை செய்துட்டு இருப்பாங்க. வண்டி வரதைப் பார்த்துட்டுக் கூப்பிடாமலேயே வருவாங்க. சிலர் வீடுகளில் பண்ணை ஆட்கள் வண்டியோடயே வருவாங்க. எல்லாருமா வண்டியை ஆற்றில் தள்ளிக்கொண்டு போய் அக்கரையில் மேட்டில் ஏத்துவாங்க. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் கூந்தலூர், அல்லது இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் எரவாஞ்சேரி. அங்கே போய்ப் பேருந்தில் வரவங்களைக் கூட்டி வருவாங்க.

திரும்பி வரச்சே மறுபடியும் அதே. ரிவர்ஸில். அப்புறமா ஊருக்கு வரவரைக்கும் நடுவில் குளங்கள் தான் காணலாம். முட்டை ஆறு என்னும் இன்னொரு ஆறு மூன்று கிலோ மீட்டர் தள்ளிப் பரவாக்கரை போகும் வழியில் இருக்கு. இந்த இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் தான் எங்க மாமனார் மாமியார் இருந்தாங்க. வயல்கள் எல்லாம் எதிரேயே இருந்தன. அப்பாவோ சொல்லாமல் இல்லை கிளம்பி வந்திருக்கார். அதனால் கூந்தலூர் வந்து அங்கே இறங்கியதும், வழி கேட்டுக்கொண்டு மூங்கில் பாலம் வழியா நடந்தே போயிருக்கார். நல்ல வெயில் காலம், பங்குனி மாசம். பாவம், வேர்க்க விறுவிறுக்கப் போய் மாமனார் பெயரைச் சொல்லி விசாரிக்க, வீட்டுக்கு எதிரேயே இருக்கும் பள்ளியில் படிச்சுட்டு இருந்த என் குட்டி மைத்துனன்,சாப்பிடறதுக்காக வீட்டுக்குப் போயிட்டிருந்தவன், அப்போ நாலு முடிந்து ஐந்தாம் வயசு, எங்க அப்பாவைப் பார்த்துட்டு, வாங்க மன்னியோட அப்பாவா நீங்கனு கேட்டுட்டு உடனே வீட்டுக்கு ஓடித் தகவல் சொல்லி இருக்கார். மன்னியோட அப்பா வரார்னு.

கிராமம் வேறே. வீட்டு வாசலில் அக்ரஹாரத்தின் அனைத்து மக்களும் கூட அப்பா உள்ளே எண்ட்ரி. உள்ளே போனதும், அப்பாவுக்குக் காப்பி கொடுத்து சாப்பாடு போட்டுட்டு, அப்புறமாப் பேசி இருக்காங்க. சம்பந்தம் கலக்கும் முன்னே சாப்பிட அப்பா யோசிக்க என் மாமனார் இந்தக் காலத்தில் அதெல்லாம் பார்க்கவேண்டாம். நானே என் மனைவியைப் பார்க்கப் போனப்போ அங்கே தான் சாப்பிட்டேன்னு சொல்லிவிடவே எல்லாம் முடிச்சுட்டு, பெண் பார்க்க வரதைப் பத்திப் பேச ஆரம்பிக்க, என் மாமனாரின் அண்ணாவும் அங்கே தற்செயலாக வந்தவர், தன் பெண்ணுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருப்பதாயும் மே மாதம் ஒன்றாம் தேதி கல்யாணம் என்றும் கல்யாணத்துக்கு அவசியம் வரணும் என்றும் சொல்லி இருக்கார். என் மாமனாரும் எங்க பையரும் இந்தக் கல்யாணத்துக்கு வரப் போகிறதாலே வந்த உடனே பெண் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கார். சரினு ஒத்துக்கொண்டு அப்பா வந்துவிட்டார். வருஷப் பிறப்பு கழிஞ்சு பெண் பார்க்கத் தேதியை அங்கேயே நிச்சயம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார்.

வந்து சொன்னார் பெண்பார்க்க வரப் போறதை. அப்போப் பார்த்துக் கோடைக்கட்டி என் முகத்தில். அதெல்லாம் ஒன்றோ இரண்டோ இல்லை. முகம் முழுதும். பெரிசு பெரிசாக் கட்டிகள். எல்லாத்திலேயும் கறுப்பாய்க் கண் மாதிரி இருக்கும். அது உடைஞ்சு ரத்தம் வரும். கீழே குனிய முடியாது. வலி தாங்காது. ஏற்கெனவே டாக்டரிடம் காட்டிட்டு இருந்தேன். அவரோ வருஷா வருஷம் வருது, ஒண்ணும் புதிசில்லையே, மெதுவாத் தான் சரியாகும்னு சொல்றார். பெண் பார்க்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. இந்த மூஞ்சியைப் பார்த்துட்டு என்ன சொல்வாங்களோ/. அம்மாவுக்குக் கவலை. எல்லாருக்கும் சொல்லியாச்சு. என் மாமா வீட்டில், பெரியப்பாக்கள், சின்னமனூரில் இருந்து சித்தி எல்லாரும் தயாராயிட்டாங்க. சின்னமனூர்ச் சித்தி மட்டும் அம்மாவுக்கு உதவ வேண்டி முன்னால் வந்தாங்க. என் முகத்தைப் பார்த்துட்டு உடனேயே அவங்களுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா சித்தப்பாவுக்குத் தகவல் கொடுக்க சித்தப்பாவும் வந்துட்டார்.

உடனேயே சித்தப்பா ஊசியாலே என்னைக் குத்த ஆரம்பித்தார். ஒரு நாளைக்கு இரண்டு முறை நான்கு விதமான ஊசிமருந்துகளைக் கலந்து போட்டிருக்கார். கட்டி உடையாது. அமுங்கும் என்றும் சொன்னார். ராஜ வைத்தியம் நடந்தது. அதோடு வரவங்களை வரவேற்கவும் ஏற்பாடுகள். எங்க வீட்டிலே இரு தரப்பிலும் மனிதர்கள் நிறைய. முக்கியமானவங்க வரவும் வருவாங்க. என்பதால் அப்பா சமையலுக்கு ஆள் போட்டுவிட்டார். வெளி ஊரிலிருந்து பிள்ளை வீட்டுக்காரங்க வரதாலே அவங்களுக்கு ஊர் திரும்பற வரைக்கும் கவனிக்கணும்னு என்னோட பெரியப்பா வீட்டிலே தங்கவும் ஏற்பாடுகள் பண்ணியாச்சு. ஒருவழியாப் பிள்ளை வீட்டுக்காரங்க எப்போ வராங்கங்கறதுக்குத் தந்தி வந்தது. அப்போல்லாம் தொலைபேசி இல்லை. இமெயில், எறும்பு மெயில் கிடையாது, செல் கிடையாது. அவசரம்னா உடனே தந்திதான். உடனேயே வந்தும் சேரும். அதைப் பார்த்துட்டு அப்பாவும், தம்பியும் ஸ்டேஷன் போய் அழைத்துக்கொண்டு வந்து பெரியப்பா வீட்டில் விட்டுட்டு வந்தாங்க. மறுநாள் காலையிலே பெண் பார்க்கணும்.

40 comments:

 1. ஏ அப்பா!! பொண் பாக்கற படலமே கல்யாணம் நிச்சயதார்த்தக் கூட்டம் இருந்திருக்கே!! நம்ப விஷயம் simple!!அப்பா கிட்ட 2 request ( conditions !! )1) டாக்டரை பண்ணிக்க மாட்டேன் 2)வரதக்ஷணை அது இதுன்னு ஒத்துண்டு என்ன தள்ளி விடலாம்னு பாதியான்னா கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் ! நம்ப better half " எனக்கு time இல்லை , கல்யாணம் பண்ணிக்கறதாவும் இப்ப இல்லை , அம்மா ஒத்துண்டுட்டாளேனு 10 நிமிஷம் திருச்சி போறச்சே மெட்ராஸ் airport ல உங்க பொண், உங்களுக்கு சம்மதம்னா மீட் பண்ணறேன் . don't have high hopes" நு தெளிவா சொல்லிட்டார் .5 நிமிஷம் airport transit cafe ல!!அப்புறம் ஆறு வாரத்துல ஸ்ரீகண்டன் ஆனார்!! இப்ப அந்த cafe எல்லாம் போயே போச்சு!!நானும் சித்தி புடவைதான் :))

  ReplyDelete
 2. //அந்தக் கிராமத்துக்கே நான் கல்யாணம் ஆகிப் போன அந்த வாரம் தான் கும்பகோணம் ராமன் அண்ட் ராமன் பேருந்து விட்டாங்க//
  அவ்ளோ இன்ப்லூஎன்ஸ் இருக்கா மாமி? சொல்லவே இல்ல...:)))

  //அப்பா சமையலுக்கு ஆள் போட்டுவிட்டார்//
  பெண் பார்க்க வர்றேதே கல்யாண ஜோர் போல இருக்கே மாமி... இண்டரெஸ்டிங்...:))

  ReplyDelete
 3. அப்புறம் என்ன ஆச்சு? ஒரே திகிலா இருக்கே? ஊசியால குத்தினார் சித்தப்பா.. நடுவுல கண்ணு.. ரத்தமா இருக்கும்.. இப்படி பயமுறுத்துறீங்களே?

  (கோடைக்கட்டி=அக்கி?)

  ReplyDelete
 4. உங்க எழுத்து படிக்கரவங்களையும் அந்த காலகட்டத்துக்கே இழுத்துண்டுபோரது.
  கூட்டத்தில் நாங்களும் ஒருவராக கலந்துகொண்ட மாதிரியே இருந்தது.

  ReplyDelete
 5. ஓரளவு அந்தகால நடப்புகள் பத்திக் கேள்விப் பட்டிருக்கிறேன் அப்பா மூலமா . சௌம்யாவிற்கும் இந்த மாதிரி புனே ஜாதகம் வந்தது. ஆனால் அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்னு மறுத்துட்டா

  ReplyDelete
 6. வாங்க ஜெயஸ்ரீ, நான் இன்னும் முழுசா எத்தனை பேர் வந்தாங்கனு எழுதலை! ஹிஹிஹி! இத்தனை பேர் வரதுக்கு முக்கியக் காரணம் பெண்ணைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி பையன் வீட்டைப் பத்தியும், அவங்களைப் பத்தியும் பேச்சுக் கொடுத்துத் தெரிஞ்சுக்கலாமே என்பது தான். அதுக்கப்புறமா ஏதேனும் மனசில் நெருடியது என்றால் பெண் பார்த்தலோடு நிறுத்திக்கலாமே! :))))

  ReplyDelete
 7. நானும் தான் கண்டிஷன் எல்லாம் போட்டேன் அப்பாட்ட. ஆனால் அதெல்லாம் ஒண்ணும் நடக்காது என் அப்பாவிடம். :( கடைசி வரையிலும் அப்படியே இருந்தார். மாறவில்லை. அப்பா கிட்டே பேச என்னோட பெரியப்பா, அப்பாவை விட 22 வயசு பெரியவர் அவரே பயப்படுவார். :P

  ReplyDelete
 8. அவ்ளோ இன்ப்லூஎன்ஸ் இருக்கா மாமி? சொல்லவே இல்ல...:)))//

  ஏடிஎம், பின்னே?? இல்லையா? நாம யாரு?? தலைவியா இருக்கோமுல்ல?? :P

  ReplyDelete
 9. அப்பாதுரை, திகிலெல்லாம் ஒண்ணும் இல்லை. கோடைக்கட்டினு தான் எல்லாரும் சொன்னாங்க. அக்கியும் எனக்கு 2,3 முறை வந்திருக்கு. அதுக்கு வலியும், ஜுரமும் வருமே. முதுகிலே வந்து ரொம்பக் கஷ்டப் பட்டிருக்கேன் 87-ம் வருஷம்! அதோட வீடு நிறைய விருந்தாளி, சமையல், சாப்பாடுனு அக்கியைப் பத்தி நினைக்க நேரம் இருக்காது! :))))))))

  ReplyDelete
 10. வாங்க லக்ஷ்மி, ரொம்ப நன்றிங்க பாராட்டுக்கு.

  ReplyDelete
 11. எல்கே, செளம்யாவுக்கு அந்தப் பையர்தான்னு எழுதி இருந்தா இந்தப் புனாவெல்ல்லாம்ம் ஜுஜுபி. அவளுக்கு நீங்கனு இருக்கும்போது எப்படி மாறும்?? எங்க பெரியம்மா ஒருத்தர் சொல்லுவாங்க. ஒருத்தன் பெண்டாட்டியை ஒருத்தன் கட்ட முடியாதுனு. அது எவ்வளவு உண்மைனு பல முறை புரிஞ்சிருக்கு.

  ReplyDelete
 12. நல்ல பதிவு கீதாம்மா !

  ஜில்லுன்னு ஒரு கல்யாணம் என்று கூட பெயர் வைத்து இருக்கலாமே !

  நோ டென்ஷன் அப்பாவி

  ஹ ஹா

  பரபரப்பு நிறைந்த திருப்பங்களோடு நிகழ்வு சுவாரஸ்யமாக போய் கொண்டு இருக்கிறது

  தொடர வாழ்த்துக்கள் !!!!!!

  ReplyDelete
 13. ஒரு வேளை நீங்க பாடினா பேசற மாதிரி இருக்குமோ ?!

  நம்ம ATM மாதிரி .,ஹ ஹா

  ReplyDelete
 14. கீதா கல்யாண வைபோகம் பிரமாதமா நடந்திருக்கும் . ஏன்னால் பொண்ணூ பார்க்கிறதுக்கே இத்தனை அமக்களமா!!!
  மாப்பிள்ளையோட போட்டோ பார்க்கலியாப்பா.
  வெகு வெகு சுவராஸ்யம்.

  ReplyDelete
 15. இதில அதிசயம் என்னன்னால் உங்க புக்ககம் போகிற வழியும் இப்ப உங்க அம்பத்தூருக்குப் போகிற வழியும் ஒரே மாதிரி இருப்பதுதான்:)

  ReplyDelete
 16. ப்ரியா, அதானே ஏடிஎம்முக்கு என்ன டென்ஷன்?? ம்ம்ம்ம் ஆனால் பாருங்க ஜில்லுனு ஒரு கல்யாணம்னு சொல்ல முடியலை. நல்ல அக்கினி நக்ஷத்திரம் கல்யாணத்தப்போ! சிலர் வீடுகளில் அக்னி நக்ஷத்திரத்தில் கல்யாணம் செய்ய மாட்டாங்கனு கேள்விப் படறேன். ஆனால் எங்க வீடுகளில் உபநயனம் தான் அக்னி நக்ஷத்திரத்தில் பண்ண மாட்டாங்க. கல்யாணத்துக்கு நோ தடா! :)))))))

  ReplyDelete
 17. @ப்ரியா,
  ஹிஹி, கரெக்டாச் சொல்லிட்டீங்க! (மானத்தை வாங்கிட்டீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) :)))))))))))

  ReplyDelete
 18. வாங்க வல்லி, போட்டோவெல்லாம் கொடுக்க மாட்டாங்க. அதென்ன கல்யாணத்துக்கு முன்னாடியே பார்க்கணும்கிறதுனு சொல்வாங்க. ஆனால் பெண்ணோட போட்டோ மட்டும் போகும். அதுக்கும் அப்பாவோட சண்டை போட்டிருக்கேனாக்கும். இதெல்லாம் வைச்சு அப்பா வயித்திலே நெருப்பைக் கட்டிட்டுத் தான் இருந்தார்! :)))))))) எங்க மூணு பேரிலேயும், நான் ஒருத்திதான் அப்பா கிட்டே தைரியமாப் பேசுவேன், சண்டை போடுவேன்! :)))))))))

  ReplyDelete
 19. @வல்லி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்படிக் கவுத்துட்டீங்களே! :P:P:P
  ஹிஹிஹி. அ.வ.சி. அம்பத்தூர் அதைவிடக் கொஞ்சம் பரவாயில்லாமத் தான் இருந்தது. ஏன்னா அம்பத்தூரிலே மின்சாரம் அப்போவே இருந்ததே. எங்க புக்ககத்தில் நான் கல்யாணம் ஆகிப் போய் ஐந்தாறு வருஷங்களுக்கு அப்புறம் தான் மின்சாரமே. எனக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தப்புறம் தான் மின்சாரமே வந்தது! :))))))) பட்டாணிக்கடலை வண்டியில் எரியுமே காடா விளக்கு அது மாதிரி இரண்டு மூணு வைச்சுத் தான் ராத்திரி சமையல், சாப்பாடு, பாத்திரம் கழுவறது எல்லாமே. சமையலும் விறகு அடுப்பு. மண் அடுப்பும் உண்டு, இரும்பு அடுப்பும் உண்டு. மண் அடுப்பைத் தினமும் சாணி போட்டு மெழுகணும். மெழுகி இருக்கேன்! :)))))))))

  ReplyDelete
 20. >>>மண் அடுப்பைத் தினமும் சாணி போட்டு மெழுகணும்.
  ஆ!

  ReplyDelete
 21. //காடா விளக்கு அது மாதிரி இரண்டு மூணு வைச்சுத் தான் ராத்திரி சமையல், சாப்பாடு, பாத்திரம் கழுவறது எல்லாமே. சமையலும் விறகு அடுப்பு. மண் அடுப்பும் உண்டு, இரும்பு அடுப்பும் உண்டு. மண் அடுப்பைத் தினமும் சாணி போட்டு மெழுகணும். மெழுகி இருக்கேன்!//அந்த காலத்தில் இவ்வளோ கஷ்டபட்டு இருக்கீங்களா

  படிக்கும் போதே உங்கள் மேல் இரக்கம் வருகிறது ................

  நாங்க பொங்கலுக்கு மட்டும் தான் விறகு அடுப்பை பார்க்கிறோம் கீதாம்மா

  இப்போ எத்தனை வகையான அடுப்புகள் !

  ReplyDelete
 22. //ப்ரியா, அதானே ஏடிஎம்முக்கு என்ன டென்ஷன்?? ம்ம்ம்ம் //

  அவங்க ஏற்கனவே ஜில்லுன்னு ஒரு காதல் அப்படின்னு ஒரு தொடர்கதை எழுதிகிட்டு வாராங்க இல்லையா

  அதனாலே ஜில்லுன்னு பெயர் குறிப்பிடாலே கொஞ்சம் டென்ஷன் ஆகிடுவாங்களோன்னு தான் அப்படி சொன்னேன்

  இதை விடுங்க கீதாம்மா

  நீங்க முதல் முதல் கேட்ட வார்த்தை

  நீங்க முதல் முதல் பேசிய வார்த்தை

  அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் என்று வரும் போது பார்வைகள் சொன்ன செய்தி

  என்று ஒன்று விடாமல் சொல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறோம் :)

  ReplyDelete
 23. அப்பாதுரை, அப்பாதுரை, அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா துரை, என்ன மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க?? எழுந்திருங்கப்பா!
  இதெல்லாம் ஒண்ணும் அதிசயமே இல்லை. :)))))))))))

  ReplyDelete
 24. ப்ரியா, நான் மதுரையிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் எங்க வீட்டிலேயும் நான் எட்டாம் வகுப்புப் படிக்கிறவரைக்கும், என்னோட அண்ணா பள்ளி இறுதி வரைக்கும் ஹரிக்கேன் விளக்கும், சிம்னி விளக்கும் தான். அதுக்கப்புறம் தான் மின்சாரம் இருக்கும் வீட்டுக்கு மாறிப் போனோம்.

  ஆனாலும் எங்க அம்மா விறகு அடுப்பிலேயும், குமுட்டி அடுப்பிலேயும் தான் சமைச்சாங்க. எனக்குப் பதின்மூன்று வயசாகும்போது சமையல் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சப்போத் தான் விறகு அடுப்பை நிறுத்திட்டுக் குமுட்டி அடுப்பு மட்டும். ஒரே ஒரு ஸ்டவ் அப்போல்லாம் அதுக்கு ஜனதா ஸ்டவ்னு பெயர். அந்த ஸ்டவ் ஜோசியம் எல்லாம் கூடச் சொல்லி இருக்கு!:))))

  அந்தக் கதையைத் தனியா வச்சுப்போம் இன்னொரு சமயம். அந்த ஜனதா ஸ்டவ் பக்கமே நான் போக முடியாது. ஸ்டவ் பத்த வைக்கிறேன்னு உடம்பிலே நெருப்புப் பட்டுடும்னு அப்போது ஆபத்தில்லாத குமுட்டித் தான் அம்மா வீட்டிலே. அதனால் எனக்குப் பழக்கமே. மேலும் இதுக்கெல்லாமா இரக்கப் படறது?? இதை எல்லாம் கஷ்டம்னு நினைச்சுக்கறதா?? இப்போவும் கிராமத்துக்குப் போனால் கோயிலிலே அடுப்பு மூட்டிச் சமைக்கவோ, கஞ்சி போடவோ, பால், காப்பி போடவோ முடியுது என்பது ஒரு வசதி தானே! இதில் உள்ள நன்மையை மட்டுமே நினைச்சுக்கணும். எப்போவுமே எனக்கு self pity கிடையாது. இனிமேலும் வராமல் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். கொஞ்சம் நீண்டு போச்சோ?? :)))))

  ReplyDelete
 25. நீங்க முதல் முதல் கேட்ட வார்த்தை

  நீங்க முதல் முதல் பேசிய வார்த்தை//

  ஹிஹிஹி, நோ ரொமான்ஸ்!!!!!!!!! :))))))) கிராமத்திலே பேசிக்கறதோ, பார்க்கிறதோ கூடக் கஷ்டம்! இதிலே முதல் வார்த்தையெல்லாம்?? ம்ஹும், நோ சான்ஸ்! சாரி! எழுதறேன் படிங்க. எழுதுவதன் ஒரே நோக்கம் இப்படியும் உண்டுனு தெரிஞ்சுக்க மட்டுமே! மற்றபடி No Regrets, OK?? Take it Easy! :))))))) Just for fun!

  ReplyDelete
 26. //இதில அதிசயம் என்னன்னால் உங்க புக்ககம் போகிற வழியும் இப்ப உங்க அம்பத்தூருக்குப் போகிற வழியும் ஒரே மாதிரி இருப்பதுதான்:)//
  தான்கீஸ் அக்கா! இதேதான் சொல்ல நினைச்சேன்! :-))))))))))))))))))

  ReplyDelete
 27. சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன வயசிலே எல்லாம் ஹரிகேன் விளக்கும் பெட்ரோமாக்ஸ் உம் தான்!

  ReplyDelete
 28. நானும் சித்தி புடவைதான் // ?????????

  ReplyDelete
 29. email, cell illatha kalathula irundha oru aarvam akkarai , illai oru ethirpaarppu... ipplam illai... athu oru thani sugam... its very intresting how a pen paarkum padalam has happend .... seekirama adutha pathiva podngo...

  ReplyDelete
 30. அதுவும் மிலிடரியிலே வேலைனு வேறே சொல்லறாரே! அது நமக்குச் சரிப்படாதுனு அந்த விஷயத்தை அதோடு முடித்துவிட்டார்

  கல்யாணத்துக்கு அப்பறம்தான் அவருக்கு தெரிந்தது "நமக்கும் சரிப்படலைன்னு". ஆமாம் இது சீதாகல்யாண வைபோகமேவா இல்லை கீதா கல்யாணவைபோகமேவா ?

  ReplyDelete
 31. \\அந்தக் கிராமத்துக்கே நான் கல்யாணம் ஆகிப் போன அந்த வாரம் தான் கும்பகோணம் ராமன் அண்ட் ராமன் பேருந்து விட்டாங்க. \\

  தலைவின்னா சும்மாவா ;))) அப்பவே என்ன ஒரு பவர் தலைவி ;) பஸ் எல்லாம் விட்டுயிருக்கிங்க ;)

  ReplyDelete
 32. சில சமயம் வசதிகள் நம்மளை பலவீனப் படுத்துவது போல தோணும். என் பாட்டிக்கு நூறு வயதாகப் போகிறது. இன்றைக்கும் சமைக்கிறார், சாதாரணமாக நடக்கிறார். கோடையில் காவிரியில் குளிக்கப் போகிறார். சர்க்கரை, கொலஸ்டிரால் போன்ற எந்த உபாதையும் இல்லை. அறுபது-எழுபது வயதில் அவர் குமுட்டியில் சமைத்துப் போட்ட நாட்களை என்னால் மறக்க முடியவில்லை. இப்பொழுது என்னால் தரையில் உட்கார்ந்து எழுவது என்பது சிரமமாக இருக்கிறது. என் சகோதர சகோதரிகள் எல்லாருக்கும் சர்க்கரை, ஆர்த்ரைடிஸ், இரத்த அழுத்தம், என்று ஏதாவது ஒன்று... எங்கே தவறினோம் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 33. சாரி.. 'முதலில் கேட்ட' என்பதை அவசரப்பட்டு 'முதலில் கெட்ட வார்த்தை'னு படிச்சுட்டேன். காதையும் கண்ணையும் தீட்டிக்கிட்டு தொடர்ந்து படிச்சா.. புஸ்வாணம்.

  ReplyDelete
 34. @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ப்ரூட்டஸ்! :P:P:P:P

  உங்களுக்கும் சின்ன வயசிலே ஹரிகேனும் பெட்ரோமாக்ஸும் தானா?? அட????

  சித்தி புடைவையைக் கட்டிக்கொண்டேன் பெண் பார்க்கும் அன்னிக்கு,. இத்தனைக்கும் என் கிட்டே 3,4 ப.பு. இருந்தது. ஆனால் கலர் ராசியான கலர்னு சித்தியோட புடைவையைத் தேர்ந்தெடுத்தாங்க! :)))))) ஜெயஸ்ரீயும் அவங்க சித்தி புடைவை! :D

  ReplyDelete
 35. பாலாஜி அங்கிள், பொறுங்க. என்ன அவசரம்??

  ReplyDelete
 36. திரச சார், :P:P:P:P:P:P:P:P:P:P:P:P

  பல வருடங்கள் கழிச்சு வந்ததுக்கு நன்னி! :D

  ReplyDelete
 37. @கோபி, கரெக்டா சொன்னீங்க, நான் சொன்னா யாரு நம்பறாங்க? :))))))

  ReplyDelete
 38. @அப்பாதுரை, உங்க இரண்டாவது கமெண்டுக்குப் பின்னூட்டம். :)))))))

  முதல் கமெண்டுக்கு, நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை. மாடுகளைக்கூடக் கறந்து, பராமரிச்சு கிராமத்தில் விறகு அடுப்பில் சமைச்சு, கல்லுரலில் அரைச்சு, இடிச்சு, அம்மியில் அரைச்ச என் மாமியார் எண்பது வயசுக்கப்புறம் தான் முடியலைனு சொல்ல ஆரம்பிச்சிருக்கார். :(

  ஆனால் ஒரு விஷயம் கட்டாயமாய் ஒத்துக்கணும், விறகு அடுப்பில் வெண்கலப் பானையில் சாதம் வைச்சு, வெண்கல உருளியில்/கல் சட்டியில் சாம்பாரோ, வத்தக்குழம்போ, ஈயச் செம்பில் ரசமோ வைச்சுச் சாப்பிடும்போது உள்ள சுவையும், ருசியும் இப்போ எரிவாயு அடுப்பிலோ, மின்சார அடுப்பிலோ சமைக்கும்போது இருப்பதில்லை. இந்தக் காலத்து இளையவர்களுக்கு அவற்றுக்கான அறிமுகமே கிடையாது.

  ReplyDelete
 39. இது கதைய,நடந்ததா நிகழச்சிய,நல்ல இருக்க.அந்தகாலத்தில் தஞ்சா ஊர் பக்கம்போக்கு வரத்து வசதி எப்படி இருந்தது என்பதை அறிய முடிந்தது.மேலும் பொன்னியின் செல்வனின் கல்கி எழுதியது போல் இருந்தது.எப்படி இருந்தாலும் நன்று வாழ்க வளமுடன்.கல்யாண் பொண்ணுக்கு வாழ்த்துக்கள்
  subburajpiramu

  ReplyDelete
 40. இன்பம், துன்பம், முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  இது கதையல்ல. என் வாழ்க்கை. ஒரு விஷயம் கூட அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ இல்லாமல் நடந்தது நடந்தபடி அப்படியே எழுதி உள்ளேன். சில சமயம் நிஜ வாழ்வில் நடக்கும் விஷயங்கள் கதைகளையும் மிஞ்சும் அல்லவா?? இதை விடவும் அதிசயங்கள் நிறைந்ததே எங்கள் வாழ்க்கை! எல்லாம் அந்த இறை அருள்!

  ReplyDelete