எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 30, 2011

வாழ நினைத்தால் வாழலாம்! கல்யாணம் தொடர்

செருப்புப் போட்டு நடந்தால் கால் மணலில் புதையும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும் அந்த நேரம் அது நினைவில் இல்லை. அப்புறம் செருப்பையும் கையில் எடுத்துக்கொண்டு ஒளபாசனப் பானையையும் எடுத்துக்கொண்டு நடப்பது கஷ்டம் என்பதால் மூங்கில் பாலத்தில் செல்லுமாறு வற்புறுத்தப்பட்டேன். மூங்கில் பாலத்தைப் பார்க்கையிலேயே பகீர் என்றது. என் அப்பா ஊரான மேல்மங்கலம் கிராமம் தான். ஆனாலும் செல்லும் வழியோ அந்த நாட்களிலேயே (பென்னி குக் தயவு?) நன்றாய் இருக்கும். ஊரும் சுத்தமாய் இருக்கும். மின் விளக்கு, குழாய் எல்லாமும் உண்டு. ஆகவே கிராமம் என்பது பெயரளவுக்குத் தான் இருந்தது. அருகேயே சில மைல்கள் தள்ளி இருந்த இன்னொரு சித்தி ஊரான சின்ன மனூரும் அப்படியே. ஆகவே கிராமம் என்றால் இப்படி ஒரு கிராமத்தை நான் பார்ப்பது அதுவே முதல் தடவை எனலாம். மெல்ல, மெல்லக் கரையேறினேன். மூங்கில் பாலத்தை நோக்கி நடந்தேன். என் அப்பா, அம்மா, நாத்தனார் எனக்குக் காத்திருந்தனர். மூங்கில் பாலத்தில் சர்வ அலக்ஷியமாய் என் நாத்தனார் நடக்க எனக்கு மூச்சே போயிற்று.

காலை வைத்தால் தெரியும் இடைவெளியில் கால் உள்ளே போயிடுமோனு பயம். நேரே பார்த்து நட என எல்லாரும் சொல்ல கண்களோ கீழேயே பார்த்தன. அருகே பாலத்தின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்தேன். நான் பிறந்து வளர்ந்ததில் இருந்து என் வாழ்நாளில் அது தான் முதல் முறையாய் மெதுவாய் நடந்திருப்பேன் என நினைக்கிறேன். அதுக்குள்ளே மாடுகள் கரையேறிவிட்டன. வண்டியையும் கரையிலே ஏற்றிக்கொண்டிருந்தனர். ஆஹா, இப்படியும் வாழ்பவர்கள் இருக்கின்றனர் என்பதே அப்போத் தான் தெரியும். இந்தக் கோடை காலத்திலேயே இப்படி என்றால் தண்ணீர் வந்துவிட்டால்?? வண்டியை அப்போ இறக்க மாட்டாங்க என்றார்கள். வண்டி அக்கரையிலேயே நிற்கும். மூங்கில் பாலத்தில் போய்த் தான் கடக்கவேண்டும் என்றார்கள். கடவுளே! எத்தனை முறை இனி இந்தப் பாதையில் வரப் போறேனோ, தெரியலை! முக்கி, முனகிக்கொண்டு போய்ச் சேர்ந்தேன். அப்புறமும் நடந்து வரேன்னு சொல்ல வேண்டாம்; புதுக் கல்யாணப் பொண்ணு நடந்து வரதைப் பார்த்தால் கூட்டம் கூடும் என்றார்கள். அதுவும் சரிதான் என வண்டியில் ஏறி உட்கார மொட் டென இடித்துக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டேன். அதுக்குள்ளே வண்டியோடு சில குழந்தைகள், பையன்கள் என ஓடி வர ஆரம்பித்தனர். வேடிக்கையாக இருந்தது. வலியினால் வந்த கண்ணீரையும் மறந்து சிரித்தேன் அவர்களைப் பார்த்து. வண்டி ஊருக்குள் நுழைந்து விட்டது என்பதை மேளச் சத்தம் உறுதிசெய்தது. வண்டி ஒரு பந்தல் போட்ட வீட்டில் நிற்க, நானும், என் கணவரும் இறங்கினோம். ஒரு சின்ன வீட்டிற்குள் அழைத்துச் செல்லப் பட்டோம். இது என்ன ஆரத்தி எடுக்கலை? வலது கால் எடுத்து வைனு சொல்லலை?? ஆச்சரியப் பட்டுக்கொண்டே உள்ளே சென்றேன். வீடு ரொம்பச் சின்னது. சுற்றும் முற்றும் பார்த்தேன், அங்கே இருந்த பெண்மணி, வாடியம்மா புது மாட்டுப் பொண்ணே, என அழைக்க அவரை நிமிர்ந்து பார்த்தேன், என் மாமியார் இல்லை, கல்யாணத்திலும் இவங்களைப் பார்த்த நினைவில்லை.

அதற்குள் என் நாத்தனார் ஒரு பாத்திரத்தில் டிபனும் , காப்பியும் எடுத்து வந்தாள். அண்ணா. மன்னியைச் சாப்பிட்டுவிட்டுத் தயாராய் இருக்கச் சொன்னாங்க. எட்டு மணிக்கப்புறமா நல்ல வேளையாம் என்று கூற, அந்த வீட்டுப் பெண்மணி, “இது உன் புக்ககம் இல்லை; நாங்க பக்கத்து வீடு; உன் குட்டி மைத்துனன் என் செல்லப் பிள்ளை; என்னை அவன் அத்தைனு கூப்பிடுவான்; நீயும் அப்படியே கூப்பிடு.” என்றார். அப்புறமாய் எங்கள் இருவருக்கும் காலை உணவு அளிக்கப் பட்டது. பின்னர் என்னைப்புடைவை மாற்றிக்கொள்ளச் சொல்ல, நான் குளிக்க குளியலறையைத் தேடினேன். அந்தப்பக்கத்து வீட்டு அத்தை, இப்போக் குளிக்கப் போனால் நேரம் ஆகும், இங்கே குளியலறையும் இல்லை; நீ முதலில் புடைவை மாற்றிக்கொண்டு கிரஹப்ரவேசம் செய்; அப்புறம் குளிச்சுட்டு, சாதம்(ஹவிஸ்) வைக்கணும்; அதுக்கப்புறம் ஹோமம் எல்லாம் இருக்கு; நேரம் ஆகும்.” என்றார். குளிக்காமல் புடைவை மாத்துவதா என நான் யோசிக்க, எல்லாரும் அவசரப் படுத்த வேறுவழியில்லாமல் புடைவைமாற்றப் போனால், ஒன்பது கஜம் புடைவைதான் கட்டணுமாம். கட்டத் தெரியாமல் முழித்த எனக்கு அத்தை கட்டிவிட்டார். அங்கே வந்த மாலைகளைப் போட்டுக்கொள்ளச் சொன்னார். இதற்குள் என் கணவரும் தயாராக இருவரும் மீண்டும் கைகோர்த்தபடி அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.

பக்கத்து வீட்டில் மேளம் முழங்கிக்கொண்டிருந்தது. வாசலில் பெரிய கோலம் போடப் பட்டிருந்தது. ஒரு சின்ன மேடை போன்ற பந்தலின் கீழே நாங்கள் போய் நின்றதும் மீண்டும் மாலை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, மாற்று மாலை கொண்டு வந்தார்கள். மாற்றுமாலையைப் பார்த்ததும் எனக்கு அத்தனை பேர் இருக்கையிலும் சிரிப்பு தன்னையறியாமல் வந்தது. மதுரையில் ரோஜா, மல்லி, முல்லை மாலைகளையே பார்த்திருந்த எனக்கு இங்கே வெறும் இலைகளையும், மரமல்லி ஆங்காங்கே ஒன்றிரண்டு வைத்துக் கட்டப்பட்ட இந்த மாலையைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. அம்மா நிமிண்டினாள். அப்புறமாச் சிரிக்கலாம், நேரம், காலம் தெரியாமல்: என்று முணமுணத்தாள். மனசுக்குள் தலையில் அடித்துக்கொண்டிருக்கலாம். மீண்டும் ஓர் முறை மாலை மாற்றல் நடந்தது. ஊஞ்சலும் இருக்குமோனு நினைக்கையில் மீண்டும் சுற்றிக்கொட்டினார்கள். அப்புறமாய் இருவரும் வலக்கால் எடுத்து வைத்து உள்ளே போனோம். நுழை வாசல் குட்டையான உயரம் கொண்டது. என் உயரத்துக்கே இடிக்கும். ஆகையால் வரிசை கட்டி எல்லா உறவினரும் நின்றுகொண்டு குனி, குனி, குனி எனச் சொல்லிக்கொண்டே இருக்க குனிந்த படியே உள்ளே சென்று உள்ளே ஸ்வாமி அலமாரியில் இருந்த ராமரை நமஸ்கரித்துவிட்டு, அங்கே இருந்த ஊஞ்சலில் அமரச் சொன்னார்கள். அமர்ந்தோம். பால், பழம் கொடுத்து உபசரித்தார்கள். அதற்குள்ளாக ஹோமத்துக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ப்ரவேச ஹோமத்துக்கு நேரமாகிவிட்டதால் சீக்கிரம் வரவேண்டும் என்று புரோகிதர் கூற நான் குளிக்கப் போனேன். குளித்துவிட்டு மறுபடியும் ஒன்பது கஜம் புடைவை உடுத்தி ஹோமத்துக்குத் தயாராக வர, என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்ற மாமியார் ஒரு பாத்திரத்தில் உள்ள பாலை முதலில் காய்ச்சச் சொல்லிவிட்டுப் பின்னர் ஹவிஸ் வைக்க ஒரு வெண்கலப்பானையைக் கொடுத்து வைக்கச் சொன்னார்கள். வாத்தியார் கேட்பதற்குள் தயாராக வேண்டும் என ultimatum வேறே கொடுத்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

Thursday, May 26, 2011

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!

நாங்க ஊருக்குக் கிளம்பும் முன்னே கோயிலுக்குப் போனோம். கூட என் சித்தியும், மாமியார் விட்டுட்டுப் போயிருந்த என் நாத்தனாரும் வந்தாங்க. எங்க சித்தி முதல் முதல்லே ரெண்டு பேரும் சேர்ந்து கோயிலுக்கு வந்திருக்கிறதாலே ரோஜாப்பூ மாலை வாங்கி ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் சார்த்தச் சொல்ல, சரினு நம்ம ரங்க்ஸும் மாலை வாங்கிட்டு வா என என்னிடம் 100 ரூ பணத்தைக் கொடுக்க, எனக்கு மயக்கமே வந்துடுச்சு. சித்தியைப் பார்க்க, சித்தியும் போய் வாங்குனு சொல்லிட்டாங்க. கூட யாருமே வரலை. எனக்கென்ன தெரியும் அது எனக்கு வைச்ச முதல் தேர்வுனு! எங்க தெரிஞ்ச மாலைக்கடைக்கு, (எங்க வேலைக்கார அம்மாவின் கடைதான்)போகலாம்னு பார்த்தால் அன்னிக்குனு அது இல்லை. இன்னும் வரலையாம். சரினு பக்கத்துக்கடைக்குப் போய் வாங்கினேன். ஒரு மாலை ஐம்பது ரூபாய்னு கடைக்காரர் சொன்னார். ஏதோ சின்னக்கடைக்கோ, மதுரை வடக்காவணி மூலவீதி மார்க்கெட்டுக்கோ போயிருந்தால் தெரியும். ஒரு பூ வாங்கக் கூடப் போனதில்லை. மல்லிகைப் பூ காசு கொடுத்து வாங்கினதும் இல்லை. மல்லிகை சீசன் என்றால் மதுரையிலே வீட்டுக்கு வீடு லக்‌ஷம் மல்லிகை கொடுப்பாங்க. அதை வாங்கித் தொடுத்து வச்சுண்டாலே தினம் ஒரு மாலையே போட்டுக்கலாம். அந்தக் கடைக்காரரோட மீசை/தாடி?? ஏதோ ஒண்ணு. நான் சின்னப் பொண்ணுதானே! பயம்மா இருந்ததா! சரினு சொன்ன விலைக்கு ரெண்டு மாலை வாங்கிட்டு வந்துட்டேன்.

வந்து மாலையைக் கொடுத்தால் ஆயிரம் கேள்விகள், விசாரணைகள். Audit Objection Started. அன்னிலே இருந்து இன்னி வரைக்கும் அப்ஜெக்‌ஷனுக்கு பதில் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்துக் கொடுத்து சே, பேசாமல் நான் சிதம்பரம் கட்சியிலே இருந்திருக்கலாம்! :P கடைசியிலே சித்திலே இருந்து எல்லாரும் பேரம் பேசி வாங்காதோ ஒரு பொண்ணுனு கிண்டல்! இந்த barter எல்லாம் அக்கவுன்டன்சியிலேயும், எகனாமிக்ஸிலேயும் படிச்சது தான். நம்மகிட்டே இருந்த பணத்தைக் கொடுத்து மாலைகளை வாங்கியாச்சு. அதோடு விட வேண்டியது தானே! அதான் இல்லையே! objection overruled னு அப்போவே சொல்லி இருக்கணுமோ? இதுக்குனு சித்தி தலைமேலே ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நியமிச்சுக் கேட்கச் சொன்னார். என் கட்சியிலே ஆட்களே இல்லாமல் தன்னந்தனியாக நான் இருக்க, எதிரிக்கட்சியிலே சேச்சே எதிர்க்கட்சியிலே என் கணவரும், என் நாத்தனாரும் வெற்றிப்புன்னகையோடு காட்சி அளிக்க, :P அப்புறம் கடையிலே போய்க் கேட்டதுக்குச் சின்னப் பொண்ணுனு ஒண்ணும் ஏமாத்தலைங்க, இன்னிக்கு ரோஜாப் பூ மாலையே விலை அதிகம், அதோடு முழுமாலை கேட்டது அந்தப்பாப்பா. (நான் பாப்பா தான் என்பதன் காரணம் புரிஞ்சிருக்குமே) என்று கடைக்காரர் சொன்னார். அப்பாடா! சாட்சியங்களை நான் கலைக்கவே இல்லை, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் விசாரணை முடிவடைந்தது. :)))))) உண்மையில் மாலை முழுமாலைதான். இரண்டு பக்கமும் நீஈஈஈஈஈஈஈளமாய் வரும். நுனியில் பட்டுக் குஞ்சலம் வைத்திருப்பாங்க. அப்படி ஒரு மாலையை இப்போல்லாம் பார்க்க முடியாது. கோயிலில் இருந்து மறுபடி டிவிஎஸ். நகர் வந்தோம். சாப்பாடு ஆச்சு. மதியம் இரண்டரைக்கு ஜனதா ரயில் மதுரையில் இருந்து சென்னை கிளம்புகிறது. மெயின் லைனில். இரவு பத்து மணி அளவில் கும்பகோணம் போகுமாம். இரவே கிராமம் போகிறோமோ என நினைத்துக்கொண்டேன். எனக்கு அப்போ கிராமம் போவதில் இருந்த கஷ்டங்கள் சரியாய்த் தெரியாது. அப்பா வந்து சொன்னப்போக் கூட விளையாட்டாய்க் கேட்டது தான். ஆகவே ராத்திரியே போயிடுவோம் போலனு நினைச்சேன். ஆனால் என் அம்மா அன்று செவ்வாய்க் கிழமை என்பதாலும், இரவு அகாலம் என்பதாலும் அன்றே புக்ககம் போக முடியாது என்றும் ஸ்டேஷனிலேயே தங்கிட்டுக் காலை தான் போவோம் என்றார். உள்ளூரிலேயே அவங்க அத்தை வீடு இருந்தாலும் முதலில் எங்க வீட்டுக்குத் தான் போகணும், ஒளபாசனப் பானையோட என்பதால் அங்கேயும் போகலை.

அப்போல்லாம் பாக்கிங் செய்வது பற்றிய அறிவும் கிடையாது. ஆகவே அம்மா, அப்பா, சாமான்களைப் பாக் செய்திருந்த விதமே இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. ஒரு சாக்கில் பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு அடுப்பு போன்றவற்றையும் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியில் எவர்சில்வர் பாத்திரங்களும், அந்தக் காலம் ரொம்பவே பிரபலமாக இருந்த நாகப்பட்டினம் ஸ்டீல் ட்ரங்கில் என் புடைவைகளும், இன்னொன்றில் வெள்ளிப் பாத்திரங்களுமாக கம்பார்ட்மென்டையே அடைக்க, உட்கார இடம் இல்லாமல் நாங்க மட்டுமின்றி( ரிசர்வேஷன் எல்லாம் அப்போ ரொம்பவே லக்சுரி அதுவும் கும்பகோணம், இதோ இருக்கும்பார் அப்பா). எல்லாருமே தவிச்சோம். ஒரு மாதிரிச் சமாளிச்சுட்டு உட்கார்ந்தோம். கட்டுச் சாதக் கூடைச் சாப்பாடே கொண்டு வந்திருந்தது அன்று நாங்க மட்டுமின்றி அந்தப் பெட்டியில் வந்தவங்க எல்லாருக்கும் கொடுக்கிறாப்போல் இருந்தது. ஆகக் கூடி அந்த ரயிலே எங்க திருமணத்தைக் கொண்டாட நாங்க இரவு ஒன்பதரை அளவில் கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம்.

மாமனார் உதவி செய்ய வேண்டி நிறுத்தி வைத்திருந்த பண்ணை ஆள் ஒருத்தரும் எங்களோடு மதுரையிலிருந்து வந்திருந்தார். அவர் உதவியோடு சாமான்களை ப்ளாட்பார்மில் இறக்கிவிட்டு, நாங்களும் இறங்கினோம். இதற்கு முன்னால் கும்பகோணம் ஸ்டேஷன் வந்தது இல்லை. என் மாமாவுக்கு திருவலஞ்சுழியில் திருமணம் நடந்தப்போ கும்பகோணத்தை பிக்னிக் மாதிரி சுற்றிப் பார்த்திருக்கோம். அதுவேறே இது வேறேயே. இனி அடிக்கடி வரவேண்டி இருக்கும் இல்லையா? கல்யாணத்தின் போது இருந்தமாதிரியே நான் என்னிலிருந்து பிரிந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மொட்டை வண்டியில் சாமான்களை ஏற்றினார்கள். வண்டியோடு ஆட்களும் வந்திருந்தனர். மாடுகள் கொம்பில்லாமல் பார்க்கவே விநோதமாக இருந்தது. அத்தகைய வண்டி மாடுகளை மதுரைப்பக்கம் பார்த்ததே இல்லை. அந்த வண்டியில் சாமான்கள் ஏற்றப்பட்டு விடிய விடிய ஊர் போய்ச் சேரும் என்றார் என் கணவர். எனக்கு அதுவும் விநோதமாய்த் தான் இருந்தது. ஸ்டேஷனிலேயே தூங்கினோம். விடிகாலையில் முதல் பஸ்ஸில் போக வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். அம்மா நாலு மணிக்கு எழுப்ப எழுந்து கை,கால் முகம் கழுவிக்கொண்டு புக்ககம் செல்ல ஆயத்தமானேன். பேருந்து நிலையத்திற்கு அருகேயே பஸ் நிற்கும் என்று சொன்னதால் எல்லாரும் அங்கே சென்றோம். பஸ்ஸும் வந்தது. ஒளபாசனப் பானையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக் கஷ்டமாய் இருந்தாலும் ஏறிவிட்டேன். எல்லாரும் உட்கார்ந்ததும் பஸ் போக ஆரம்பித்தது.

குறுகிய பாதை. பஸ் வளைந்து வளைந்து வளைந்து சென்றது. அப்பா வந்தியத் தேவன் பிரயாணம் பண்ணியதை நினைத்து நினைத்துச் சொல்லிக் கொண்டு அநுபவித்துக் கொண்டு வந்தார். எனக்கோ இது என்ன இப்படிக் குறுகிய பாதையில் பஸ்ஸெல்லாம் எப்படிப் போகிறது என ஆச்சரியப் பட்டேன். அந்தப் பேருந்து கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் பேருந்து. வழியில் கூந்தலூர் என்னும் இடத்தில் பஸ் நிற்கையில் அங்கே இறங்கி அங்கிருந்து மறுபடி மாட்டு வண்டியில் ஊருக்குப் போக வேண்டும் என்றார்கள். கூந்தலூரில் பஸ்ஸும் நின்று நாங்களும் இறங்கினோம். மாட்டு வண்டிகளும் காத்திருந்தன. இன்னொரு மொட்டை வண்டியும் வந்திருந்தது. அதில் சாமான்களை ஏற்றிவிட்டு ஒளபாசனப் பானையும் நான், என் கணவர் மட்டும் மாட்டு வண்டியில் செல்வது எனவும், மற்றவர்கள் நடந்து வரலாம் எனவும் முடிவாகியது. ஆற்றில் வண்டியை இறக்குவது கஷ்டம் என்றும் எல்லாருமே நடக்கலாம் எனவும் மூங்கில் பாலம் தாண்டி ஏறலாம் என்றும் ஒளபாசனப் பானையைக் கையில் எடுத்து வரலாம் எனவும் என் கணவர் கூற எனக்குக் கொஞ்சம் குழப்பம்.

ஆனாலும் மாமனார் சொன்னதன் பேரில் வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். வண்டி நகர்ந்தது. அழகு அழகான சோலைகள் அடர்ந்த பாதையில் வண்டி செல்ல, விதவிதமான பக்‌ஷிகளின் கூச்சல் கேட்க, என் மனமோ அவற்றோடு ஆடத் துடிக்க வண்டி மெல்ல மெல்ல அரசலாற்றில் இறங்குவது எனக்குப் புரியவில்லை. திடீரெனப் பள்ளத்தில் இறங்கும் உணர்வு தோன்றச் சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரே வெண்மணல் பரப்பு. என் கணவர் கீழே இறங்கி இருக்க நான் மட்டும் வண்டியில் இருந்தேன். எனக்கும் வண்டியில் அமர்ந்து வர பயம்மா இருந்தது. கீழே இறங்கறேன் என்று சொல்ல, வேண்டாம், இந்த மணலில் உனக்கு நடக்க வராதுனு என் கணவர் சொல்லப் பிடிவாதமாய்க் கீழே இறங்கினேன். ஒளபாசனப் பானையைக் கையில் எடுத்துக்கொண்டு தான். காலைக்கீழே வைத்தேனோ இல்லையோ மணலில் கால் உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போயாச்சு. எங்கே இருக்கேன்??


ஹிஹிஹி, நேத்திக்கு சேமிச்சு வைச்சுட்டுப் போய்ப்படுத்துட்டேன். பார்த்தா அரைகுறையாக் காப்பி, பேஸ்ட் ஆகி பப்ளிஷும் ஆகி இருக்கு. ப்ளாகர் வேதாளம் வேலை போல! :P:P:P

Tuesday, May 24, 2011

அப்பாடா, தலை போகிற சந்தேகம் தீர்ந்தது! :P

இந்தப் பிறந்த நாளிலே ஒரு வழியா உண்மையைச் சொல்லி எல்லாருடைய தலை போகிற சந்தேகத்தையும் தீர்த்து வைச்சுடலாம்னு இருந்தேன். ஆனால் திடீர்னு ஊருக்குப் போறாப்போல் ஆயிடுச்சு. அதனால் என்ன?? இந்த வருஷம் எப்படியும் ஸ்பெஷல் தான். இந்த மாசமே இரண்டு பிறந்த நாள், ஒண்ணு நக்ஷத்திரம், இன்னொண்ணு தேதி. அடுத்த (ஜூனிலே)மாசம் வேறே இன்னொரு நக்ஷத்திரப் பிறந்த நாள் வருது. ஆகக் கூடி நான் புதுசாய்ப் பிறந்து கொண்டே இருக்கேன். தற்செயலாக அமைந்ததுதான் என்னோட வயசைச் சொல்லாமல் இருந்தது. அப்படினு திட்டம் எல்லாம் போட்டுக்கலை. விளையாட்டாச் சொல்லாமல் இருந்தது, அப்படியே ஆறு வருஷமாக் காப்பாத்தினேன்.

ஆனால் பலருக்கும் எனக்குத் தொண்ணூறா, நூறா என்றெல்லாம் சந்தேகம் குழப்பிட்டு இருக்கிறதாலே சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அறுபது வயசு ஆயிடுச்சு. உடனே தொண்டர்களும், குண்டர்களும் மண்சோறு சாப்பிடவோ, தீச்சட்டி எடுக்கவோ, அறுபது அலகு குத்திக்கவோ, அறுபது வகைக்காவடி எடுக்கவோ போகவேண்டாம். ஹிஹிஹி, வஸ்த்ரகலாவிலே அறுபது, பரம்பராவிலே அறுபதுனு எடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டேன். தாயுள்ளத்தோடு தொண்டர்கள், குண்டர்கள் மனம் நோகாமல் இருக்கறதுக்காக வாங்கிக்கிறேன். கலர் எல்லாம் இல்லாத கலரா இருக்கட்டும். ஒவ்வொரு ரத்தினமும் அறுபதுனு நவ ரத்தினத்திலேயும் அறுபது வாங்கிடாதீங்க. அறுநூறு இருந்தால் நல்லா இருக்குமோனு தோணுது. துலாபாரம் போடறவங்க எல்லாம் அறுநூறு வகைப் பொருட்களில் துலாபாரம் கொடுக்கணும்னு தலைமைக்கழகத்திலே இருந்து அறிவிப்பு வந்திருக்கு.

எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு முப்பெரும் விழா எடுக்கலாம்னு ஒரு எண்ணம். எண்ணம் எனக்கில்லை, தொண்டர்களுக்குத் தான். அவங்க அன்புத் தொல்லை தாங்காம ஒத்துக்கிட்டிருக்கேன். எனக்குத் தான் விளம்பரமே பிடிக்காதுனு எல்லாருக்கும் தெரியுமே! அதனால் சிம்பிளா, மலர்க்கிரீடம், ஆளுயுர மாலை, தோரண மேடைனு தொண்டர்கள் ஏற்பாடு பண்ணிடப் போறாங்க. ஹிஹி, எனக்குத் தெரியும், நீங்க நான் என்ன சொன்னாலும் அதெல்லாம் செய்யாமல் விடமாட்டீங்கனு. உங்க அன்புத் தொல்லைக்குக் கட்டுப்பட்டு எல்லாத்தையும் ஏத்துக்கறதா முடிவு பண்ணிட்டேன். இந்தப் பிறந்த நாளைக்கு எனக்கு நம்ம ரங்க்ஸ் கொடுத்த பரிசு ஆறு பலாச்சுளைகள். (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) கேட்டால் எனக்குப் பிடிச்சதைப் பிரசண்ட் பண்ணறாராம். கஞ்சூஸ் ரங்க்ஸை வன்மையாய்க் கண்டிக்கிறேன்.

Wednesday, May 18, 2011

கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்!

திங்கட்கிழமை காலையில் ஏழரைக்குள் தாலி கட்டி முடிந்ததும் எல்லாரும் அவங்க அவங்க ஊர் சுத்திப்பார்க்கப்போயிட்டாங்க, பந்தல் கொஞ்சம் வெறிச்சுனு ஆனது! அது போல் இங்கேயும் ஊஞ்சல் முடிஞ்சதுமே எல்லாரும் கிளம்பிட்டீங்க போல! :P


ஊஞ்சல் முடிந்ததும், பெண்ணையும், பிள்ளையையும் மணமேடைக்கு அழைத்து வந்து அவரவர் வீட்டுப் புரோகிதர்கள் மூலம் பெண்ணின் பிறந்த குலத்திலும், பையரின் பிறந்த குலத்திலும் மூன்று தலைமுறைகளைச் சொல்லி இன்னாருடைய மகள், இன்னாருடைய பேத்தி, இன்னாருடைய கொள்ளுப் பேத்தி , அதேபோல் மணமகனுக்கும் மூன்று தலைமுறை மகன், பேரன், கொள்ளுப் பேரன் என முப்பாட்டனார் வரை குலம், கோத்திரம் சொல்லப் படும். இதிலே எந்த ரிஷியின் வழித்தோன்றல்கள் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்வார்கள். இதன் மூலம் பெண்ணின் அறிமுகமும், பிள்ளையின் அறிமுகமும் கிடைக்கிறது. இதன் பலன் என்னவெனில் ஒருவேளை முன்பின் அறியாதவர்களிடம் சம்பந்தம் செய்ய நேரும்போது என்ன இருந்தாலும் கொஞ்சம் கலக்கம் ஏற்படும். இப்படி மூன்று தலைமுறையைக் குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் குடும்பத்தின் உறவினர் யாரேனும் தற்செயலாக வந்திருந்தால் அவர்கள் உறவு விட்டுப் போயிருந்தாலும் இப்போது இந்தக் குறிப்பிட்ட அறிமுகத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது எங்க பொண்ணு திருமணத்தில் நடந்தது. எங்க மாப்பிள்ளையின் தாயாதிகள் எங்க புக்ககத்தின் தூரத்து உறவினர்கள். நாங்க கல்யாணத்திற்குக் கொடுத்த அழைப்பின் பேரில் வந்தவங்க இப்படிப் பட்ட விபரங்கள் மூலம் என் பெண்ணின் புக்ககத்தினரோடு விட்டுப் போன உறவைக் கண்டு பிடித்தனர்.

இந்த அறிமுகம் செய்து விட்டு எங்க குடும்பத்தைச்சேர்ந்த இந்தப்பெண்ணை இந்த வரனுக்குத் தானமாய் அளிக்கிறேன். இதன் மூலம் எங்கள் குலத்தின் பல தலைமுறைகளும் மகிழ்வு அடையவும், நிம்மதிஅடையவும் வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அப்பா, பெண்ணை அளிக்க, பையரும் பெண்ணைப் பெற்றுக்கொள்கிறார். இதைத் தான் கன்யாதானம் என்று சொல்கின்றனர். இதன் பின்னர் மாப்பிள்ளைக்குக் கால் அலம்பி மாமனாரும், மாமியாரும் மந்திரங்கள் சொல்லி வழிபடுவார்கள். மஹாவிஷ்ணுவும், மஹாலக்ஷ்மியுமாகவே மணமக்கள் கருதப் படுவார்கள். பரமேஸ்வரன், பார்வதி என்றும் கூறுவதுண்டு. அதன் பின்னர் என் கணவர் கூறைப் புடைவையை எனக்குக் கொடுத்து அதைக் கட்டிக்கொண்டு வரும்படி மந்திரங்களின் மூலம் சொல்ல, நானும் கூறைப்புடைவை கட்டிக்கப்போனேன். கட்டிவிடப் பெண்ணின் நாத்தனாரை அனுப்புவார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் நெருக்கம் ஏற்படவும், மனம் நெருங்கிப் பழகவுமே இந்த ஏற்பாடு என்று சொல்லுவார்கள். ஒன்பது கஜம் புடைவையும் என்னை மூழ்கடிக்க அதைக் கட்டிக்கொண்டு நடக்கத் தெரியாமல் வந்து மேடையில் அமர, தற்கால வழக்கப்படி, அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு(அப்பாவுக்கு வெயிட்டாய் இருந்திருக்க மாட்டேன். 35 கிலோ தானே! :P) திருமங்கல்யதாரணம் நடந்தது. ஏழரைக்குள் மாங்கல்ய தாரணம் என்பதால் அது முடிந்ததும், எல்லாரும் டிபன் சாப்பிடப் போய்விட்டார்கள்.

வந்த கூட்டத்தில் ஒரு பகுதிதான் சாப்பிடப் போயிருந்தது. மாடியிலே இடமில்லை. கீழே இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு என் கணவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “சித்திரைத் திருநாளுக்கு வந்தவங்க எல்லாம் மதுரையிலேயே தங்கிட்டாங்களா?” என்பது தான். புரோகிதர் சொன்ன மந்திரங்களையும் சொல்லிக்கொண்டே அவர் என்னிடம் இப்படிக் கேட்க பதில் சொல்லத் தெரியாமல் நான் விழிக்க, எதுவுமே பேசவில்லை. அதைப் பின்னால் ரொம்ப நாட்கள் சொல்லிக் கேலி பண்ணிட்டு இருந்தார். ஆனால் எங்களுக்கு வைதீகச் சடங்குகள் தொடர்ந்தன. இங்கே இந்த வைதீகச் சடங்குகள் பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்க்கலாமா??

வைதீகச் சடங்குகள் முடிந்ததும், என்னையும், என் கணவரையும் அவங்க தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்துப் போனாங்க. சாதாரணமாய் இந்த மாதிரிப் பிள்ளை வீட்டினர் தங்கி இருக்கும் இடத்திற்குப் பெண்ணை அழைத்துச் சென்று அங்கே இருவரையும் உட்கார்த்தி வைத்துப்பால், பழம் கொடுப்பதே இன்றெல்லாம் கிரஹப் பிரவேசம் என நிறைவடைகிறது. ஆனால் உண்மையான கிரஹப் பிரவேசம் என்பது பெண் புக்ககத்தினுள் புகும் நாளன்று தான் ஆரம்பம். ஒரு சிலர் உள்ளூரில் திருமணம் நடந்தால் அன்றே பெண்ணையும், மாப்பிள்ளையையும் அவங்க அவங்க வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். அது போதும் என்ற எண்ணம் தான். மேலும் இப்போதெல்லாம் வைதீகச் சடங்குகளுக்கு முக்கியத்துவமும் இல்லாமல் போனதும் ஒரு காரணம். ஆனால் எங்களுக்கு கிரஹப் பிரவேசம் ஊரில் போய்க் கிராமத்தில் செய்யப்போறாங்க என்பது எனக்கு அங்கே போனதும் தெரிய வந்தது. அதே போல் என் கணவர் என்னை உடனே புனே அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும், புக்ககத்தில் விட்டுட்டுப் போகப் போறார் என்றும் அப்போது எல்லாரும் பேசிக்கொண்டதில் இருந்து தெரிய வந்தது. நாங்க தங்கின மாமா வீட்டிற்கு வந்ததும் எல்லாரும் என்னை எப்படி உன் கணவர் இல்லாமல் அங்கே இருக்கப் போகிறாயோ என்றே கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு எதுவும் தோன்றவில்லை என்பது தான் நிஜம்.

இந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியாகவோ, அல்லது ஏமாற்றமாகவோ இல்லை. ஏதோ நடக்கிறது நம்மைச் சுற்றி, நடக்கிறபடி நடக்கட்டும் என்ற எண்ணமா? அதுவும் தெரியாது. ஆனால் நான் எந்தவிதமான மனநிலையிலும் இல்லை. அப்புறமாய்ச் சாப்பிடக் கூப்பிட்டனர். கல்யாண சமையலில் அப்போதெல்லாம் வெங்காயம், மசாலா சாமான்கள் இருக்காது. ஏனெனில் மாலையும் பெண்ணும், பிள்ளையும் வைதீகச் சடங்குகள் செய்யணுமே. அதனால் தனியாக பிள்ளைக்கு, பெண்ணுக்கு என எடுத்து வைத்திருந்த பலகாரங்களே கொடுக்கப் பட்டன. இதிலே எச்சல் மாற்றுவது என நடக்கும். ஆனால் எங்க கல்யாணத்தில் இது பெரிய அளவில் நடக்கவில்லை. எல்லாருக்கும் கொஞ்சம் ஏமாற்றமே. மாலை நலுங்கில் என்ன நடக்குமோ பார்க்கலாம் என விட்டுவிட்டனர். மாலை நலுங்கும் மூன்று மணிக்கே ஆரம்பித்தது. நலுங்குக்கு எனப் பொதுவாக நாத்தனார்கள் இருந்தால் அவங்க தான் சேர்ந்து புடைவை எடுப்பாங்க. நலுங்கு விளையாட பொம்மைகள், பெண்ணுக்கு சோப்பு, சீப்பு, கண்ணாடி, குங்குமம், சாந்து, (அப்போல்லாம் சாந்துதானே) பவுடர், ஹேர் ஆயில் என அலங்காரப்பொருட்களும் கொடுப்பாங்க. நலுங்கு விளையாட மாப்பிள்ளையைப் பெண் தான் அழைக்கவேண்டும் என்பார்கள். என்னிடம் சித்தி படிச்சுப் படிச்சு உடனே கூப்பிடக் கூடாது, கொஞ்சம் தயங்கிட்டுக் கூப்பிடணும்னு சொல்லி இருந்தாங்க. ஆனால் நான் உடனே கூப்பிட அவரும் உடனே வந்துட்டார். :D நலுங்கு போட்டோ தேடி எடுக்கிறேன். எடுத்ததை எங்கேயோ வைச்சுட்டேன். நலுங்கிலேயும் கண்ணாடி காட்டுகையில் எல்லாரும் என் கணவரைத் திருப்பிக் காட்டச் சொல்ல, நான் பிடிவாதமாய்க் கையோடு சேர்த்துக் கண்ணாடியைத் திருப்ப, ஒரே அமர்க்களம். அதுக்கப்புறமா ரிசப்ஷன். ஐந்து மணிக்கே வரச் சொல்லிட்டாங்க, ஏனெனில் மாலையும் வைதீகச் சடங்குகள் இருந்தன. அதுக்கு ஆறரை, ஏழு மணிக்குக் கூப்பிடுவாங்க என்பதால் ஐந்து மணிக்கே ரிசப்ஷனுக்கும் உட்கார்ந்தாச்சு.  
Posted by Picasa
இதிலே முதுகைக் காட்டிக்கொண்டு நிற்பது என் தம்பி.

என் சிநேகிதர்கள் சிலர், சிநேகிதிகள் சிலர், அப்பாவின் நண்பர்கள், மாமாக்களின் நண்பர்கள் என ஒரு ஐம்பது வந்திருந்தால் பெரிய விஷயம். அதுக்கப்புறமா வைதீகச் சடங்குகளுக்கு நேரமாச்சுனு புரோகிதர் கூப்பிட்டுக்கொண்டு போய்விட்டார். அன்றைய சடங்குகள் முடிந்தன. மற்ற வைதீகச் சடங்குகள் புக்ககத்தில் . ஆகவே என் பெட்டியைத் தயார் செய்து கொள்ளப் போனேன். திடீர்னு மனதில் ஒரு வெறுமை. பிறந்து வளர்ந்து, இருந்த ஊரை விட்டு, சொந்த, பந்தங்களை விட்டுவிட்டுப் போகப் போகிறோம். திக்குத் தெரியாத காட்டில் வாழ்க்கை ஆரம்பம் ஆகப் போகிறது. எப்படி இருக்கும்? எல்லாரும் நல்லவங்களா? இல்லையா? ஒண்ணுமே புரியலை. மறுநாள் விடிந்தது. கட்டுச் சாதக் கூடைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தனர். மூன்றாம் நாளான அன்றைய சம்பிரதாயங்கள் முடிந்ததும், என் மாமியார், மாமனார், கடைசி நாத்தனாரை மட்டும் விட்டுவிட்டு அவங்க முன்னாடி போய் கிரஹப் பிரவேசம் ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் எனப் பேருந்தில் செல்லப் போவதாய்க் கூறிச் சென்றுவிட்டார்கள். நாங்கள், அதாவது நான், என் கணவர், என் கடைசி நாத்தனார் மூவரும் என் அப்பா, அம்மா, தம்பியுடன், கூடவே என் மாமி, குழந்தைகளோடு அன்றைய மதியம் கும்பகோணம் செல்லும் ரயிலில் செல்வதாய் ஏற்பாடு. அப்போதெல்லாம் ஜனதா என்றொரு ரயில் ஓடும். முழுதும் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள். அப்போ இரண்டாம் வகுப்பு உயர் வகுப்பாய் இருந்தது. இப்போதைய ஸ்லீப்பர் க்ளாஸ் அப்போ மூன்றாம் வகுப்பு. ரயிலில் உட்காரும் இருக்கைகள் கட்டையாகத் தான் இருக்கும். இதை மாற்றியது மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் ரயில்வே துறை மந்திரியாக இருந்த திரு மதுதண்டவதே அவர்கள்.


இன்னும் இரண்டே நாட்கள்!

Monday, May 16, 2011

கன்னூஞ்சலாடினாள்

ஹிஹிஹி, படிக்கிறவங்க எல்லாம் ஆவலோடு காத்துட்டு இருப்பீங்க என்ன அமர்க்களம்னு. ஜானவாசம் அனுமதிக்கப்பட்ட தெருக்களில் போயிட்டு, கல்யாணம் நடக்கும் மாமா வீடு இருக்கும் தெருவிலே நுழைந்ததுமே என் மாமியார் என்னையும் அழைத்து வந்து, காரில் ஒன்றாய் உட்கார்த்திக் கூட்டிச் செல்லவேண்டும் என்று கூற, என் அப்பா, பெரியப்பா போன்றோர் கல்யாணம் முடியும் முன்னர் உட்கார்த்திப் பட்டணப் ப்ரவேசம் போறது வழக்கம் இல்லை, கல்யாணம் முடிஞ்சு பிள்ளை வீட்டில் தான் பட்டணப் ப்ரவேசம் செய்யணும், உங்க ஊரிலே போய்ப் பண்ணுங்கனு சொல்ல, பிடிவாதமாய் என் மாமியார் ஜானவாசத்திலே ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார்த்தி வைத்துப் புகைப்படம் பிடிக்கணும்னு சொல்ல, என்னோட மாமா ஒருத்தர் சத்தமே போடாமல் உள்ளே வந்து என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். ஒண்ணுமே புரியாமல் வெளியே வந்த என்னைக் காரில் ஏறச் சொல்லி மாப்பிள்ளை பக்கம் உட்காரச் சொல்ல நான் தயங்க, அவங்க வீட்டிலே எல்லாரும், நீ காரில் ஏறி உட்கார்ந்தால் தான் மாப்பிள்ளை கீழே இறங்குவார்னு கேலி செய்ய, உண்மைனு பயந்த நான் அவசரமாய் ஏறி உட்கார, புகைப்படம் எடுக்க என் மாமாவின் நண்பர் முயல, அப்போ இருந்த படபடப்பிலோ, அல்லது வேறு என்ன காரணமோ காமிரா வேலையே செய்யலை, பத்து நிமிஷம் போல முயன்றார். அதற்குள்ளாகப் பெண்ணுக்கு நிச்சயம் பண்ண நேரம் ஆயிடுச்சுனு புரோகிதர் சத்தம் போட ஆரம்பிச்சுட்டார்.

உடனேயே என் சித்தியும், மற்றும் சிலரும் என்னை மேடைக்கு அழைத்துச் செல்லப் பின் தொடர்ந்த மாப்பிள்ளையும் வெகு அழகாய், வெகு லாயக்காய் என் அருகே வந்து உட்கார்ந்தார். முதலில் பிள்ளை வீட்டில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஹோவென்ற சிரிப்புச் சப்தம் கேட்க அப்புறம் தான் எல்லாரும் அசடு வழிந்தார்கள். கடைசியில் நிச்சயதார்த்ததில் இரண்டு பேரும் சேர்ந்தே உட்கார்ந்தோம். அன்றைய கலாட்டா முடிந்து அப்புறம் சாப்பிட அவங்க இருந்த வீட்டுக்குப் போயிட்டாங்க. மறுநாள் காலையிலேயே எழுப்பி, (எங்கே? ஏழரைக்குள் முஹூர்த்தம் என்பதால் நடு இரவுனு சொல்லணும், தூங்கவே விடலை :P) மாப்பிள்ளைக்கு எண்ணெய் கொண்டு கொடுத்து, எனக்கும் எங்க மாமி, அத்தை பெண்கள், போன்ற பல பெரியவர்கள் எண்ணெய் வைத்து மங்கள ஸ்நாநம் செய்ய வைத்துப் பின்னிவிட்டார்கள். இப்போ முதல்நாள் மாதிரி அலங்காரம் இல்லை என்றாலும் பூவை மாலை போலக் கட்டித் தலையில் சுற்றினார்கள். தலை பாரமாய் இருந்தது நினைவில் இருக்கு. அதன் பின்னர் ஊஞ்சலுக்கு வாங்கி இருந்த புடைவையைக் கட்டச் சொல்லி, ஒரு மாலையை மட்டும் கழுத்தில் போட்டு மாலை மாற்றலுக்கு உள்ள மற்ற மாலைகளையும் தயார் செய்து, காத்திருந்தோம். அங்கே பிள்ளை வீட்டில் சமாவர்த்தனம்/காசியாத்திரைக்குத் தயார் ஆகிக் கிளம்பிச் சென்று பின்னர் என் அப்பா சென்று அவரிடம் பெண்ணை தானமாய்த் தருகிறேன் என்று சொல்லி அழைத்து வந்தார்.

இப்போ இந்தக் காசி யாத்திரைக்கு மாப்பிள்ளையை அலங்கரிக்கிறது, அவர் காசியாத்திரை என்னும் சம்பிரதாயத்தைச் செய்வதற்கு முன்னாடியே பண்ணறாங்க, ஆனால் இது கல்யாணம் செய்துக்கப் பெண்ணைத் தரேன்னு பெண்ணின் அப்பா சொன்னப்புறமாத் தான் செய்யணும் என்பது சிலர் கூற்று. யோசித்தாலும் அது சரி என்றே தோன்றுகிறது. உங்க பெண்ணைத் தாங்க என்று கேட்கக் கூடாது என்றும், பெண்ணைப் பெற்றவர் மனமுவந்து பெண்ணைத் தர வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுவதாயும் சொல்கிறார்கள். அதோடு அந்தக் காலங்களில் எல்லாம் இப்போ மாதிரி ஜாதகம் பார்த்ததாயும் தெரியவில்லை. ஜாதகம் பார்ப்பது எப்போ வந்தது என்பதை திவா போன்றவர்கள் தான் சொல்லணும்.) காசி யாத்திரை பற்றிய விரிவான விளக்கம் தேவையானால் பின்னர் தருகிறேன்.) இதோ காசியாத்திரை போட்டோ.  
Posted by Picasa
அந்தக் காலத்துப் படம் என்பதால் எவ்வளவு ப்ராசசிங் பண்ணினாலும் இப்படித் தான் வருது. நெகட்டிவ்களைப் பார்த்துப் புதுசாப் பிரிண்ட் போடலாம் என்றால் நெகட்டிவ் சரியாவே கிடைக்கலை. காசி யாத்திரை முடிஞ்சு தேங்காய் கொடுத்து மணமகனை அழைத்ததும், பெண்ணைப் பார்க்க காத்திருந்தார். நானும் போனேன். சித்தியெல்லாம் வெட்கம் காட்டணும், மெதுவாய் நடக்கணும் என்றெல்லாம் சொல்ல, என்னால்முடியாமல் போக ஒரே சிரிப்பாய் வந்தது. அப்போத் தான் என்னோட மாமா ஒருத்தர் இன்னிக்குப் பூரா, பூராக் கூட வேண்டாம், தாலி கட்டும் வரைக்காவது சிரிக்காமல் இரும்மா என்று கேலி செய்ய, நானும் சவால் விட்டேன், சிரிக்கமாட்டேன் பாருங்க என. அது இதோ இந்தப் படம் தான். 
Posted by Picasa
தாலி கட்டியதும் எடுத்தது. மாலை மாற்றல் வீட்டு வாசலில் வைத்து நடந்தது. நான் பார்த்த கல்யாணங்களில் மாலை மாற்றல் என்பது சாதாரணமாய் நடக்கும். ஒண்ணும் குறிப்பாய் விசேஷம் இருக்காது. ஆனால் இங்கேயோ முதலில் நான் மாலையைப்போடப் போனதும், அவரோட நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு அப்படியே அவரை இழுத்துக்கொண்டு பின்னே போய்விட்டார்கள். நமக்குத் தான் ஸ்போர்டிவ் ஸ்பிரிட்டா? கேட்கணுமா? ஓடிப் போய்ப் போட்டுட்டேன் போல. தெரியலை! ஹிஹிஹி. அ.வ.சி. அப்புறமாச் சித்தி கோவிச்சுண்டதும் தான் தெரிஞ்சது. அப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு. அதெல்லாம் எங்கே நினைவில் வருது? நம்மளை ஏமாத்தறாங்க பாரு, தோத்துடப் போறோம்னு தான் தோணிச்சு. அதுக்கப்புறமா அவர் மாலை போட வரச்சே, நானும் பின்னாடி போவேன்னு சொல்லிட்டுப் பின்னாடி போக, அவர் உயரத்துக்கு எட்டி மாலையைப் போட்டுட்டார். :P. இப்படிக் கொஞ்ச நேரம் அந்த அதிகாலையிலே மாலை மாற்றல் நடந்ததும் ஊஞ்சல். இதோ ஊஞ்சல் படம். 
Posted by Picasa

Thursday, May 12, 2011

மாப்பிள்ளை, வந்தார், மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே!


அப்பாடா, எத்தனை பேருக்கு ஆவல்?? இது ஏற்கெனவே நடந்த திருமணம் தான் என்றாலும் மீண்டும் அனைவரும் உற்சாகத்துடன் பங்கு பெறுவது குறித்து சந்தோஷமா இருக்கு. விரதம் முடிஞ்சு, பாலிகை கொட்டி எல்லாம் ஆனதும், மாலை நடக்க வேண்டிய நிச்சயதார்த்தம், ஜானவாசம் போன்றவை பற்றிப் பேசுகையில் தான் நம்ம ஆஸ்தான ஜோசியர் வந்திருக்கார். எனக்கு இதெல்லாம் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் நான் புனே செல்லப் போவதில்லை என்பதே எனக்குத் திருமணம் முடிந்த அன்று மதியமாய்த் தான் தெரியும். அதுவரையிலும் யாரும் சொல்லவே இல்லை. உடனே புனே செல்லப் போவதாய் எண்ணிக்கொண்டிருந்தேன். நம்ம ஆஸ்தானம் போனதும் நடந்து கொண்டிருந்த பேச்சு வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, “உங்க பையர் இப்போப் புனே போயிட்டு உடனே திரும்பிவிடுவார். சென்னைக்கு வந்துடுவார்.” என்று சொல்லி இருக்கார். என் கணவரோ சென்னைக்கு மாற்றல் நான் நாலு வருஷமாக் கேட்டுட்டு இருக்கேன். சதர்ன் கமாண்டிற்குக் கீழே வரும் அலுவலகங்கள் சென்னையிலே மிகவும் குறைவு. அதிலே இருப்பவங்க யாரும் புனே வர ஒத்துக்கலை. எல்லாருக்கும், குழந்தைங்க படிப்பு, வயசான பெற்றோர்னு இருப்பதாலே வேறே ஊர் வேண்டாம்னு வர மாட்டேங்கறாங்க. அதனால் நான் சென்னை வருவது சாத்தியமே இல்லை. புனேயிலேயே ராணுவ அகாடமியைச் சார்ந்த அலுவலகத்திற்கு மாற்றல் கேட்டால் கடக்வாசலாவிலே குடியிருப்புக் கிடைக்கும். அதற்கு எப்படியும் ஆறு மாசம் ஆகும்.” என்று சொல்லி இருக்கார். எங்க ஜோசியரோ, கைகளால் விரல் விட்டுக் கணக்குப் போட்டுவிட்டு, “ஜூன் பனிரண்டாம் தேதியன்று குடித்தனம் வைக்க உங்க ரெண்டு பேருக்கும் நாள் நல்லா இருக்கு. அன்னிக்கே பால் காய்ச்சிச் சாப்பிட்டுவிட்டு, அன்னிக்கே குடித்தனம் ஆரம்பிக்கலாம், வைகாசிக்குள்ளே குடித்தனம் வைச்சாயிடும்.” என்று தீர்மானமாய்ச் சொல்ல என் அப்பாவுக்கு மட்டும் கொஞ்சம் நம்பிக்கை. மாமனார், மாமியார், என் கணவர் போன்ற யாருமே நம்பவே இல்லை என்றிருக்கிறார்கள். இந்தப் பேச்சு வார்த்தையும் எனக்குக் குடித்தனம் வைக்கும்போதே தெரிய வந்தது. எவ்வளவு அசடாய் இருந்திருக்கேன் இல்லை?? ஹிஹிஹி, இல்லை, குழந்தையைப் பயமுறுத்த வேண்டாம்னு சொல்லி இருக்க மாட்டாங்க.

அதுக்கப்புறம் மதியம் டிபன் முடிந்து, மாலை நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் தயார் ஆனார்கள். என்னையும் அலங்கரிக்க எங்க வீட்டிலே வருஷக் கணக்காய் வேலை செய்யும் சுப்பம்மாள் என்னும் மூதாட்டி வந்திருந்தார். வளையல்காரச் செட்டிகளான இவங்க மீனாக்ஷி கோயிலில் வளையல் கடை வைத்திருந்ததோடு, வித விதமாய்ப் பூக்கட்டவும் செய்வார்கள். பரம்பரையாக மீனாக்ஷிக்குப் பூக்கட்டிக் கொடுப்பதும் இவங்க குடும்பம்தான். அதனால் கோயிலுக்கு அருகே வீடு இருக்கணும் என்று வடக்கு கிருஷ்ணன் கோயில் தெருவில் இருந்து பிரிந்த சந்தில் வீடு இருந்தது. நாங்க இருந்த மேலாவணி மூலவீதிக்கு மிக அருகே. எங்க குடும்பத்திற்குப் பரம்பரையாக இவங்க குடும்பத்தினர்கள் தான் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகள். எங்களுக்குத் தலை பின்னுதல், எண்ணெய் தேய்த்தல், விளக்கெண்ணை கொடுத்தல், வேப்பெண்ணெய் கொடுத்தல் போன்றவற்றைச் செய்வார்கள். எங்க அப்பாவைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு அதிகாரம் உண்டு. ஒவ்வொரு மல்லிகைப் பருவத்திலும் கட்டுக்கு அடங்காத என் தலைமயிரை வாரி, பூத்தைக்கிறது ஒரு நாள், பிச்சோடா ஒரு நாள், கிருஷ்ணன் கொண்டை ஒருநாள், மலர் அலங்காரம்னு பூப்பின்னல் ஒருநாள் என வித விதமாய் அலங்கரிப்பார்கள். அதோடேயே பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்குப் போயிருக்கேன். :D நவராத்திரியிலும் விதவிதமாய் அலங்காரம் செய்து விடுவார்கள். என் கல்யாணம் நிச்சயம் ஆனதுமே சுப்பம்மாள் மாப்பிள்ளை அழைப்பு அலங்காரம் என்னோடதுனு என்று உறுதி செய்துவிட்டுப் போயிட்டாங்க. (எங்க பையர் பிறக்கும் வரை உயிருடன் இருந்தாங்க.)

அழகான சின்னச் சின்ன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஆணும், பெண்ணுமாய்த் தேர்ந்தெடுத்து, அவற்றிலே முத்துக்களைக் கோர்த்து, மல்லிகை, கனகாம்பரம், மரிக்கொழுந்து ஆகிய பூக்களை வரிசையாக வைத்து, வாழைப்பட்டையிலே பொம்மைகளையும், கூடவே வெல்வெட் துணிகளால் ஆன அலங்காரப் பூக்களையும் வைத்துத் தைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். தலையை வாரிப் பின்னிக் குஞ்சலம் வைத்து, அந்த வாழைப்பட்டை அலங்காரத்தைத் தலைப்பின்னலில் வைத்துச் சேர்க்கவேண்டியது தான். மேல் தலை அலங்காரம் மட்டும் நேரடியாய்த் தலையிலே செய்ய வேண்டும். அந்த மாதிரிப் பூ அலங்காரம் எல்லாம் இப்போப் பார்க்கவே முடியலை. அலங்காரத்துக்குப் பெயர் போன தஞ்சாவூர்க்காரங்களான எங்க புக்ககத்தினரே வியக்கும்படியாக இருந்தது என் தலை அலங்காரம். தலையிலே ராக்கொடி வைத்து, நெத்திச்சுட்டி, சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, (தெரிஞ்சிருந்தாலும் பேரெல்லாம் குறிப்பிடுவது, ஒரு சிலருக்குச் சரியாய் அறியவேண்டியே) வைத்து எல்லாவற்றிற்கும் முத்துக்களால் ஆன மாலை போன்ற சரத்தால் கட்டி, தலைப் பின்னலின் நடுவேயும் ஜடைபில்லை வைத்துப் பட்டுக்குஞ்சலம் வைத்து, (எனக்குக் குஞ்சலம் ரொம்பப் பிடிக்கும். விதவிதமான குஞ்சலங்கள் வைத்திருப்பேன்.) தலை அலங்காரம் ஒருவழியாக முடிவடைந்தது. அதற்குள்ளாக மாப்பிள்ளை வீட்டினரை என் அம்மாவும், அப்பாவும் போய் நிச்சயதார்த்ததிற்கு முறைப்படி கூப்பிட்டு விட்டு வந்தார்கள். எனக்குத் துணையாகச் சிலரை மட்டும் வைத்துவிட்டு மற்ற அனைவரும் அருகே இருந்த பிள்ளையார் கோயிலுக்குக் கிளம்பினார்கள். என் கல்யாணம் நடந்த பி-3- ராஜம் ரோடிலிருந்து, கூப்பிடு தூரத்தில் இருந்தது பிள்ளையார் கோயில். அங்கேயே மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, ஜானவாசம் பிள்ளையார் கோயிலில் இருந்து கிளம்பி இரு தெருக்கள் சுற்றிக்கொண்டு இங்கே கல்யாணம் நடக்கும் இடத்திற்கு வர அநுமதி வாங்கி இருந்தனர்.

அங்கே மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, ஜானவாசமும் ஆரம்பித்து வந்தாயிற்று. என் கடைசிச் சித்தி, அவசரம் அவசரமாய் வந்தாள். என்னை விட ஐந்தே வயது பெரியவங்க. என் அம்மா கல்யாணத்தின் போது குழந்தை. அவங்களுக்கு என் கல்யாணம் ஆன வருஷத்திற்கு முதல் வருஷம் தான் கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்திருந்தது. பெயர் சொல்லியே கூப்பிட்டிட்டு இருந்தோம். பல வருஷங்கள் கழிச்சே சித்தி என அழைக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்போச் சித்தி வந்தது, ஜானவாச ஊர்வலம் தெருக்கோடியில் வருகிறது. கீதாவை அழைத்துக்கொண்டு எல்லாரும் மாடிக்குப் போனால் ஜானவாச ஊர்வலத்தை கீதாவும் பார்க்கலாம். அவள் கணவரின் ஜானவாசத்தை அவள் பார்க்க வேண்டாமா?? என்று சொன்னாள். என்னதான் எழுபதுகளின் ஆரம்பம் அப்போ என்றாலும் அந்த அளவுக்குக் கல்யாணப் பெண்கள் போய் ஜானவாசத்தைப் பார்க்கும் அளவுக்கு இன்னமும் முன்னேறவில்லை என்றே சொல்லலாம். என் அப்பா, பெரியப்பா போன்றோர் ஏதானும் சொன்னால் என்ன செய்வது என்று என் பாட்டி பயந்தார்கள். ஆனால் சித்திவிடவே இல்லை. கட்டாயமாய் வரணும், அவங்க வீட்டு வாசலுக்கு வரச்சே ஆரத்தி எடுத்து உள்ளே நுழையறதுக்குள்ளாகக் கீழே இறங்கிடலாம், ஒருத்தருக்கும் தெரிய வேண்டாம் என்று தன் அம்மாவுக்கு சமாதானம் சொல்லிட்டு, என்னைக் கூப்பிட்டுக் கொண்டு மேலே சென்றார்கள். மாடியிலே தான் சாப்பாடு போடவும் ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. மாடி முகப்புக்குப் போனோம். கீழே பார்த்தால், பந்தல் பெரிசா இருந்ததா? பந்தல் தான் தெரிந்தது. அதோட தோரணங்களும் தொங்கினதிலே தெருவே தெரியலை. நாதஸ்வர ஒலி மட்டும் கேட்டது. எம்பிப்பார்த்தாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை. அருகிலே நாதஸ்வர ஒலி கேட்க, நான் கீழே இறங்கலாம் என்று கூற, என் சித்தி இருடி என அதட்ட, அதற்குள் கீழே ஒரே சத்தம். அப்பாவின் குரல் பெரிசாய்க் கேட்டது. விஷயம் என்ன?? புரியவே இல்லை. நான் மேலே வந்தது தான் தெரிந்துவிட்டதோ? பயத்துடன் வேகமாய்ப் புடைவையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டே கீழே இறங்கினேன். விழுந்துடப் போறே, புதுப்புடைவை தடுக்கப் போறது என்று பின்னாடியே சித்தியும் வந்தாள்.

கல்யாண வீட்டு வாசலிலே ஏதோ அமர்க்களம் நடந்து கொண்டிருந்தது.

Wednesday, May 11, 2011

பெருமாள் செய்யப் போகும் கிரஹப்ரவேசம்!

 
 
Posted by Picasa
கீழே காணும் சுட்டிகளில் பெருமாளைக் குறித்த செய்திகளைக் காணலாம். பல வருஷங்களாக முயன்று மூன்று வருஷம் முன்பே ஆரம்பித்த திருப்பணி பணப்பற்றாக்குறையால் அவ்வப்போது நின்று, மீண்டும் ஆரம்பித்து என்று ஒருவழியாக இப்போது கொஞ்சம் சூடு பிடித்துக் கடைசியில் கும்பாபிஷேஹத்திற்கு நாளும் குறித்துப் பத்திரிகையும் அடித்து வந்தாயிற்று. கும்பாபிஷேஹத்தில் கலந்து கொண்டு பெருமாளின் அருளைப் பெற வேண்டி நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். சாப்பாடு போடவும் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. வர முடிந்தவர்கள் கட்டாயமாய் வந்து கலந்து கொள்ளும்படி வேண்டுகிறோம். ஊர் மக்கள் சார்பாகவும் அழைக்கிறோம்.


கீதா&சாம்பசிவம்

கும்பகோணத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் பேருந்துகளில் வந்தால் கூந்தலூர் என்னும் ஊரில் இறங்கி அங்கிருந்து கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரம் வழியாக வரவேண்டும். இது ஒரு வழி.

இன்னொரு வழி கும்பகோணம்-காரைக்கால் மார்க்கத்தில் வடமட்டம் என்னும் ஊரில் இருந்தும் வரலாம். வடமட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கோனேரிராஜபுரம், திருவீழிமிழலை போன்ற ஊர்கள் சுற்றி உள்ளன. கும்பகோணத்திலிருந்து மினி பேருந்து ஊருக்குள் வருகிறது.


ஒரு வேண்டுகோள்

பெருமாள் கிடைத்துவிட்டார்

Tuesday, May 10, 2011

ஏடிஎம் செய்த தோசை? வடை?? போண்டா???

ஒரு அயனான செய்தி கிடைச்சிருக்கு. ஏடிஎம் அதைப் போடாதீங்கனு சொல்லி இருக்காங்க, அதான் யோசிக்கிறேன். நேயர் விருப்பம் என்ன??? ஏடிஎம்?? ஹிஹிஹி, நீங்க சொன்னாப்போலயே சொல்லியாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!~

Monday, May 09, 2011

ரஜினிகந்தா மலர்கள்


நேத்திக்கு ரொம்ப நாட்கள்/மாதங்கள்(???) கழிச்சு ரஜினிகந்தா படம் பார்த்தேன். வழக்கம்போலத் தான். படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டிருந்தது, என்றாலும் ஏற்கெனவே பார்த்த படம் தான் என்பதால் புரியக் கஷ்டமாய் இல்லை. சுவாரசியமும் குறையவில்லை. பாசு சட்டர்ஜி எடுத்த படம். அமோல் பலேகரின் முதல் படம்?? ஆமாம்னு நினைக்கிறேன். வித்யா சின்ஹா மனச் சஞ்சலத்தை அருமையாக வெளிப்படுத்தி நடித்து இருந்தார். தடுமாற்றம் அவருக்கு வந்தால் நமக்குக் கோபம் வருகிறது என்பதில் இருந்தே அவரின் நடிப்பைப் புரிந்து கொள்ளலாம். இயல்பான செட்டிங்குகள். ஆரவாரமும், கூச்சலும் இல்லாத இனிமையான இசை! சலீல் செளத்ரி?? நிச்சயமாய் பர்மன்கள் இல்லை. இனிமையான சங்கீதம்! பின்னணி இசைக்கும்போது பல படங்களிலும் வசனங்கள் புரியாமல் குழப்பமாய் இருக்கும். இதிலே உச்சரிப்புச் சுத்தம்! ஹிந்தியில் வந்த கதையோ? வங்காளக் கதையா? நினைவில் இல்லை.

கடைசியில் முடிவைப் பார்த்ததும் தான் அப்பாடானு இருந்தது. சம்பவங்கள் கோர்க்கப் பட்டிருந்த விதமும் இயற்கையாக இயல்பாக, பக்கத்து வீட்டில் நடப்பனவற்றைக் காண்பது போல் இருந்தது. படத்தின் முக்கிய நடிகர் ஆரம்பம் முதல் முடிவு வரையிலும் ரஜினிகந்தா மலர்கள் தான். நம்ம ஊர் சம்மங்கிப் பூ??? பாதிரிப்பூ?? மரமல்லி?? மரமல்லியும், பாதிரிப்பூவும் ஒண்ணுனு யாரோ சொன்னாங்களே???

????????????

ஒரு வழியாய் இணையப் பிரச்னை சரியாயிடுச்சோ?? தெரியலை, ஆனால் கமெண்ட் கொடுத்தால் போகிறது, பார்க்கலாம், இன்னைக்கு நோ பதிவு! சில தளங்கள் திறக்கலை. முக்கியமான தளத்துக்குப் போகவே முடியலை! :( பிஎஸ் என் எல்லில் சரியாயிடுச்சுனு கூப்பிட்டுச் சொல்றாங்களே! தேவுடா!

Sunday, May 08, 2011

சப்தபதி என்றால் என்ன? ஒரு விளக்கம்!

இப்போ சப்தபதின்னா என்னனு ராம்ஜி யாஹூ கேட்டதுக்கு ஒரு சின்ன விளக்கம். திவாவைக் கொடுக்கச் சொன்னேன். அவர் கண்டுக்கவே இல்லை. :P போகட்டும், சப்தபதி என்பது அக்னியை மணமகனும், மணமகளும் சுற்றி வருவது. வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இருவரும் முதல்முதலாகச் சேர்ந்து நடப்பது என்றும் கூறலாம். ஒரு வித்தியாசம் என்னன்னா இங்கே மந்திரங்கள் சொல்லி மனைவியிடம் கணவன் அக்னி சாக்ஷியாகக் கொடுக்கும் உறுதி மொழிகள் என்றும் கூறலாம். எல்லா இந்துத் திருமணங்களிலும் பரதேசிக்கோலம் எனப்படும் சமாவர்த்தனமும், மாலைமாற்றலும், பாணி கிரஹணமும், சப்தபதியும் கட்டாயம் இருக்கும். இப்போ சப்தபதி என்றால் என்னனு பார்ப்போம். இப்போதெல்லாம் தாலி கட்டி முடிஞ்சதுமே ஒரு சின்ன அறிவிப்புக் கொடுப்பார் புரோகிதர்.

திருமணத்துக்கு வந்திருக்கும் மணமகன், மணமகள் ஆகியோரின் நண்பர் வட்டத்துக்கு முக்கியமாச் சொல்லப்படும். தாலி கட்டி முடிஞ்சது தயவு செய்து பரிசுகள் அளிப்பதையோ, கைகளைக் குலுக்குவதையோ வாழ்த்துகள் சொல்லுவதையோ தவிர்க்கவும். சப்தபதி முடிந்ததும், நாங்களே ஒரு அரைமணி நேரம் கொடுத்து மணமகன், மணமகள் இருவரையும் தனியாக அமர வைக்கிறோம். அப்போது உங்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். இந்த மாதிரி அறிவிப்பெல்லாம் சமீபமாய்ப் பத்து வருஷங்களுக்குள்ளாகவே அதிகம் காண முடிகிறது. பாணி கிரஹணம் என்பது மணமகள் கையை மணமகன் பிடிப்பது. இதற்கும் மந்திரம் உண்டு. இதைப் போன்றதொரு முக்கியமான நிகழ்ச்சியே சப்தபதியும். தம்பதியருக்குள் மன ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிக் கிழக்கு ,மேற்காக இருவரையும் ஏழடி நடக்க வைப்பார்கள். முதலில் பெண் அடியெடுத்து வைக்க அவள் கணவன் கைலாகு கொடுத்து உதவுவதோடு அவளுக்கு உறுதிமொழியும் கொடுக்கிறான். முதல் முதல் பெண்ணோடு நேருக்கு நேர் பேச வேண்டிய நேரமும் இதுதான் என்றே சொல்லலாம். தம்பதியருக்குள்ளாக கூச்சம், சங்கோஜம் போன்றவற்றைப் போக்கவும் உதவும் எனலாம். முதல் அடி எடுத்து வைக்கும்போது கணவன் கூறுவது:

மணமகள் மணமகன் வீட்டிற்கு வந்து புத்திரபாக்கியங்களைப் பெற்று குலவிருத்தி செய்து, அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கவேண்டும் எனவும், அதற்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவை குறையாமல் இருக்க நாம் இருவரும் மஹாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வோம்.

இரண்டாவது அடி: மனைவியின் தேகவலிமைக்கு வேண்டிக்கொண்டும், அவள் ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கவும், அவை பூர்த்தியடையவேண்டியும், அதற்கான உடல், மன வலிமையை அவள் பெற மஹாவிஷ்ணு தரவேண்டும் எனவும், கேட்டுக்கொள்வான்.

மூன்றாம் அடி:இருவரும் சேர்ந்து வாழப் போகும் புத்தம்புதிய வாழ்க்கையில் இல்லறத்தை நல்லறமாகச் செய்ய வேண்டிய கடவுள் ஒத்துழைக்கவேண்டும் எனவும், எடுக்கும் முயற்சிகளிலும் இருவருக்கும் நம்பிக்கையும், தர்மத்தை மீறாமலும் இருக்கவேண்டியும் விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்வான்.

நான்காம் அடி: கணவன் கேட்டுக்கொள்வது தானும், தன் மனைவியும் பூவுலக இன்பங்களை எல்லாம் குறைவின்றி அனுபவிக்க வேண்டும் என்றும் அது முழுமையாகக் கிடைக்க மஹாவிஷ்ணு அருள் செய்யவேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வான்.

ஐந்தாம் அடி: இல்லற சுகம் என்பது வெறும் உடல் சுகம் மட்டுமில்லாமல், மற்ற சுகங்களான வீடு, வாசல், மற்றச் செல்வங்களையும் நீ என் மனைவியாய் வந்து அடைய அந்த மஹா விஷ்ணு அருள் புரியவேண்டும்.

ஆறாம் அடி: பருவ காலங்களின் தாக்கங்கள் நம்மைப் பெரிய அளவில் தாக்காதவாறும் அதன் மூலம் நம் இல்வாழ்க்கையின் சுகமோ, சுவையோ குறையாமலும் நம் இருவர் மனங்களும் அதற்கேற்ற வல்லமையோடு இருக்க மஹாவிஷ்ணுவைப் பிரார்த்திக்கிறேன்.

ஏழாம் அடி: மேலே சொல்லப் பட்ட வெறும் சுகங்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால், நாம் அந்த சுகங்களைப் பெற வேண்டி இயற்கை வஞ்சிக்காமல் பருவகாலங்களில் தக்க மழை, கோடையில் நல்ல வெயில், பனிக்காலங்களில் பனி என அந்த அந்தக் காலங்களில் எப்படித் தானாகப் பருவம் கண்ணுக்குத் தெரியாததொரு ஆற்றல் படைத்த சக்தியால் மாறுகிறதோ, அந்தக் கண்ணுக்குத் தெரியாத வல்லமை உடைய மஹாசக்திக்குச் செய்ய வேண்டிய கடமைகளான அறம் அத்தனையையும் நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும். அதற்கு அந்த மஹாவிஷ்ணு உதவட்டும். நான் செய்யப் போகும் வேள்விகள் அனைத்துக்கும் நீ உதவியாகவும் துணையாகவும் இருந்து என் மனதையும், உன் மனதையும் ஆன்மீகத்திலும் செலுத்த வேண்டியும் எல்லாக் கடமைகளையும் தவறாமல் நிறைவேற்றவும் வேண்டிய பலத்தை உனக்கு அந்த மஹாவிஷ்ணு கொடுக்கட்டும்.

இதன் பின்னர் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து, மணமகளுக்கு உறுதி மொழி கொடுப்பான். உன்னோடு சேர்ந்து நான் ஏழடி நடந்து, ஏழு வாசகங்கள் பேசி உன்னை என் நட்பாக்கிக்கொண்டு விட்டேன். இந்த நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது. நான் அந்த நட்பில் இருந்து வழுவ மாட்டேன். நீயும் வழுவக் கூடாது.

இதன் பின்னரே இருவரும் சட்டபூர்வமான கணவன், மனைவி ஆகின்றனர்.விவாஹம் குறிப்புகள் 2

சங்கர ஜெயந்தியும், அன்னையர் தினமும்!

ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ!

அம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்மதியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி! மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி! மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.

துறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:

"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே?
அம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே?
பின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே?
அம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே?
ஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே?
அம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக்கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே?
அம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே?
அம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே?
அம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே!"

ஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.

"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா
நைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்
தாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:

குருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம"

சில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளூக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வருகின்றதோ என்றே தோன்றுகிறது.

Friday, May 06, 2011

போர்க்கொடிக்கு பதில் கல்யாணமாம், கல்யாணம்

இந்துத் திருமணங்களில் சப்தபதி தான் முக்கியம். அது முடிந்தாலே திருமணம் முடிவடைந்ததாக அர்த்தம். தாலி என்னும் மங்கல சூத்திரம் கட்டியதும் திருமணம் முடிந்துவிட்டதாய்க் கூறுவது முழுத் தவறு. இந்துத் திருமணச் சட்டம் சப்தபதி முடியாத திருமணத்தை அங்கீகாரம் செய்யாது. திருமணம் நடக்கவில்லை என்றே கருதப்படும். இப்போதெல்லாம் பதிவு முறை இருந்தாலும் சாஸ்திர ரீதியாகத் திருமணம் நடந்தால் பதிவு தேவையில்லை; தம்பதிகள் இந்தியாவுக்குள்ளேயே இருக்கும் பட்சத்தில், அதுவே போதுமானது. இப்போது தான் பதிவையும் கட்டாயமாக்கி இருக்கின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்வதால் பதிவு அவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால் முன்பெல்லாம் கிடையாது. ஆகவே ஒரு காலத்தில் (இப்போதும்) சப்தபதி முடியும் முன்னரே தாலி கட்டியும் கூட ஒரு சில திருமணங்கள் நின்றிருக்கின்றன. சில திருமணங்கள் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவற்றோடும் நின்றிருக்கின்றன. இதனால் அந்தப் பெண்ணிற்கும், பையருக்கும் ஏற்படும் மன உளைச்சல் அதிகமாய் இருக்கும். அதிலும் அருகருகே நின்று விட்டால் அதன் மூலம் ஏற்படும் ஈர்ப்பு இன்னமும் அதிகமாய் இருக்கும் அல்லவா? பொதுவாய்த் திருமணம் நடக்கும் முன்னர் பையரும், பெண்ணும் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது, பார்த்துக் கொள்ளக் கூடாது, கடிதம் எழுதிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதன் தாத்பரியமே இதுதான். ஒரு வேளை வேறு எந்தக் காரணத்தாலும் திருமணம் நிற்கலாம். விபத்துக்கள் நேரலாம். மனம் மாறலாம். மனித மனம் ஒரு குரங்கல்லவா? அல்லது பையரின் பெற்றோருக்கோ, பெண்ணின் பெற்றோருக்கோ இன்னும் சிறந்த மணமகனோ, மணமகளோ கிடைத்திருக்கலாம். அதனாலும் மனம் மாறலாம்.

அப்போது இம்மாதிரித் திருமணத்தில் பையரோடு சேர்ந்து நின்றது மனதைப் பாதிக்காமல் இருக்கவேண்டியே தடுக்கின்றனர். இது அந்தக் காலத்தில் சிறு வயது விவாகத்திலேயே தடுக்கப் பட்டது. இப்போதோ கேட்கவே வேண்டாம். குறைந்த பக்ஷமாக இருபத்தைந்து வயதாவது மணமகளுக்கு ஆகிவிடுகிறது அல்லவா? அப்போது திடீரெனத் திருமணம் நின்றால் மனதைக் கடுமையாகப் பாதிக்கும் அல்லவா? அதோடு அப்போதெல்லாம் இந்த ரிசப்ஷன் என்னும் சம்பிரதாயமே சுத்தமாய்க் கிடையாது. ரொம்ப அபூர்வமாகச் சில பணக்காரக் குடும்பங்களிலும், திரைப்பட நடிக, நடிகையர், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலேயே ரிசப்ஷனைப் பார்க்க முடியும். என்றாலும் என் கல்யாணத்தில் பெயருக்கு ரிசப்ஷன் இருந்தது. அப்பாவின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதாலும், மாமாவின் அலுவலக நண்பர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப் பட்டது. நலுங்கு முடிந்து ஐந்தரை மணியில் இருந்து ஆறரைக்குள்ளாக. அப்போது வரவங்க ரொம்பக் கொஞ்சம் பேர் தான் இருப்பாங்க. அதிகம் போனால் ஒரு ஐம்பது பேர். ரிசப்ஷனிலும் ஒரு ஸ்வீட், காரம், காபி, அல்லது ஜூஸ் ஏதேனும் தான் கொடுப்பாங்க. இப்போ மாதிரி விலாவரியாச் சாப்பாடெல்லாம் இருக்காது. அதோட அப்போ வைதீகச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாய் ஆறரைக்கெல்லாம் புரோகிதர் மணப்பெண்ணையும், பிள்ளையையும் சாஸ்திர ரீதியான சடங்குகளுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். அவரை மீறி யாரும் எதுவும் சொல்லவோ, செய்யவோ மாட்டாங்க. அது ஒரு காலம். இன்றைய திருமணம் போல் காலையிலேயே அவசரம் அவசரமா முடிக்கிறதெல்லாம் இல்லை. இந்த ரிசப்ஷன், நிச்சயதார்த்தம் போன்றவற்றில் ஏன் முதல்நாளே பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து அமருவது தடை செய்யப் பட்டது முன் காலங்களில் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா?? மேலும் ஒரு சின்ன உதாரணம், சமீபத்தில் ஐந்து வருடங்கள் முன் நடந்தது,

அனைவருக்கும் நினைவிருக்கலாம். சென்னை மேற்கு மாம்பலம் பாணிக்ரஹா என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீவித்யா என்னும் பெண்ணின் திருமணம் அந்தப் பெண்ணாலேயே திடீரென நிறுத்தப் பட்டது என்பது மறந்திருக்காது. இத்தனைக்கும் அந்தப் பெண் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பையரோடு பேசிப் பழகி இருக்கிறார். இருவருமே வேலைக்குச் செல்லும் நபர்கள். பையரின் அம்மா, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை, அப்பா மத்திய அரசு ஊழியர்/??? ஆனால் ஏதோ பொறுப்பான பதவி என்ற வரையில் நினைவில் உள்ளது. பெண்ணின் அப்பாவும் நல்லதொரு வேலையில் இருந்தவரே. இந்தப் பெண்ணிற்கு அப்புறமும் அவருக்கு ஒன்றோ, இரண்டோ பெண்கள் இருந்தனர் என்று நினைவு. இப்போதைய வழக்கப்படி கல்யாணத்துக்கு முதல்நாள் மாலையே ரிசப்ஷன். மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. தன் நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகம் எல்லாம் செய்து வைத்திருக்கிறார் அந்தப் பெண். அதே போல் பையரும் தன் நண்பர்களை அறிமுகம் செய்து வைக்கப் பரஸ்பர அறிமுகமும் நடந்திருக்கிறது. அதுக்கும் அப்புறம் தான் நடு இரவில் திடீரென எதிரே இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வரதக்ஷணை கேட்பதாய்ச் சொல்லிப் போலீஸை அழைத்து வந்து திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். கடைசியில் பார்த்தால் விஷயம் அவ்வளவு கடுமையாக எதுவுமே இல்லை. பையரோட வீட்டில் வரலக்ஷ்மி நோம்புக்கு அம்மனை அலங்கரித்துக் கூஜாவில் அம்மனைப் பிரதிஷ்டை செய்து வைக்கும் வழக்கம் இல்லையாம். சொம்பில் தான் வைப்பாங்களாம். பிள்ளை வீட்டார் பார்த்தப்போ இந்தப் பெண்ணிற்கு அவங்க வீட்டில் கூஜா வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆகவே, பெண்ணின் பெற்றோரிடம், பையரின் பெற்றோர் முடிஞ்சா மாத்திக் கொடுங்க இல்லைனா வெண்கலச் சொம்பில் வைச்சுக்கலாம்னு சொல்லி இருக்காங்க. இது தான் நடந்தது எனப் பெண்ணின் அப்பாவும், பையரின் வீட்டிலும் சொல்றாங்க. ஆனால் உண்மைக்காரணம் எதுவெனத் திருமணத்தை நிறுத்திய அந்தப் பெண்ணிற்குத் தான் தெரியும். தன் தோழிகளோடு எதிரே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துத் திருமணத்தை நிறுத்திட்டாங்க. பெண்ணின் பெற்றோரும் காரணம் புரியாமல் வருந்தி இருக்காங்க. பையரின் அலுவலகத்தில் சஸ்பென்ட் பண்ணி வைச்சு இருக்காங்க. அந்த அம்மாவும் பள்ளிக்குப் போக முடியாமல் லீவு போட்டுவிட்டு வீட்டில் இருக்கும்படியா ஆகிவிட்டது. எல்லாப் பத்திரிகைகளிலுமே காரணமே புரியவில்லை. ரிசப்ஷனில் பெண் சந்தோஷமாகத் தான் இருந்தாள் என்றே சொன்னார்கள். இப்படி ஏதேனும் நடக்கலாம், என்பதாலேயே முன்னாலெல்லாம் சேர்த்து நிறுத்தி வைப்பதையோ, அமர வைப்பதையோ கட்டாயமாய்த் தவிர்த்தனர். நெருப்பென்றால் வாய் ஒண்ணும் வெந்து போகப் போவதில்லை. கல்யாணம் முடியறவரையிலும், எதுவும் நிச்சயம் இல்லை. அதன் பின்னரும் சண்டைகள் வந்து பிரியறது தனி. அதைக் குறித்த பேச்சு இங்கே இல்லை.

Thursday, May 05, 2011

கல்யாணமாம், கல்யாணத்தில் கோல கலாட்டா!


கோலம் போடுதல் கல்யாணத்திற்கு என்பது தனிக்கலை. பெண்ணும், மாப்பிள்ளையும் கிழக்குப் பார்த்தே அமர வைக்கப் படுவார்கள். ஆகவே போடும் கோலமும் அதற்கேற்றாற்போல் இருக்க வேண்டும். மதுரைப் பக்கத்தில் இரட்டைக் கோலம் தான் போடுவார்கள். அதை மணைக்கோலம் என்றும் சொல்வார்கள். இரண்டு பெரிய சதுரங்களைப் போட்டு இரண்டையும் முக்கோணங்களால் இணைத்திருப்பார்கள். கணினியிலே முடிஞ்ச வரைக்கும் அந்த மாதிரியான மணைக்கோலம் போட்டுப் பார்த்தேன், சரியாக வரவில்லை. கூகிளாரைத் தான் கேட்டு வாங்கி இருக்கேன். இப்போ நாம ரெண்டு பக்கத்துக்கோலத்திலும் தூள் கிளப்பிட்டு இருக்கோமுல்ல? . தஞ்சைப் பக்கமோ இதோ இருக்கும் இந்தக் கோலம் மாதிரி ஒரே கோலம். ஒரே கோலத்தை எவ்வளவு பெரிதாகவோ, சின்னதாகவோ போட்டுக்கலாம். கல்யாணங்களில் பெரிய கோலமே போடுவார்கள். அநேகமாய் ஒரே கோலமே பலவிதமான அலங்கார வேலைப்பாடுகளுடனும், கிளி, அன்னம் போன்ற வரைவுகளுடனும் மேடையை நிறைத்திருக்கும். இங்கே அதெல்லாம் காண முடியாது. இரண்டு பெரிய கோலங்களை ஒன்றாய் இணைத்திருப்பார்கள். அருகருகே இரண்டு கோலங்கள் போடுவார்கள். அலங்காரங்கள் அதிகம் இருக்காது. ஆகவே விரதம் நடக்கும் இடத்திலும் அப்படித் தான் போடப் பட்டிருந்தது. கோலத்தைப் பார்த்ததுமே என் மாமியாருக்கு அப்செட். இதென்ன சின்னக் கோலமாய் இருக்கு? அதோட ரெண்டு கோலம் வேறே போட்டிருக்கீங்க? இதெல்லாம் வழக்கமே இல்லையே? னு கேட்க, கல்யாணத்துக்கு ரெண்டு கோலம் தான் அப்படினு எங்க வீட்டுப் பெரியவங்க சொல்ல, என் மாமனாரோ இதுக்குத் தான் தெரியாத இடத்தில் சம்பந்தம் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்ல, ஒரு சின்னக் களேபரம்.

அதற்குள்ளாக என் சித்தி, (அசோகமித்திரன் மனைவி) வந்து மதுரைப் பக்கம் ரெண்டு கோலம் தான் அதனால் என்ன?? சாயந்திரம் நிச்சயதார்த்தத்திலேயும், நாளைக் கல்யாணத்திலேயும் நீங்க சொல்றாப்போல் போட்டுடலாம்னு சமாதானம் செய்ய அப்போதைக்குப் பிரச்னை முடிந்தது. அதுக்கப்புறம் விரதம் முடிந்து நாங்கல்லாம் சாப்பிடும்போது ரெண்டு மணியோ என்னமோ, சரியாய் நினைவில் இல்லை. அப்பாவுக்குப் பசி ஜாஸ்தியாய் இருந்தது மட்டும் நினைப்பு இருக்கு. சாயந்திரம் நிச்சய தார்த்ததில் பெண்ணையும், பையரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்கள். ஜானவாசத்துக்குக் காரா? இல்லைனா சாரட் வண்டியானு கேட்க, கார் தான் ஏற்பாடு பண்ணி இருப்பதாய் அப்பா சொல்லி இருக்கார். அதற்குள்ளாக எங்க ஆஸ்தான ஜோசியர் மாமா வர அவர் அறிமுகம் நடந்திருக்கிறது. அப்போத் தான் என் கணவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கார். தற்சமயம் புனாவில் இருப்பதால் அங்கே வீடு அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்றும், பகடி நிறையக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் தான் புனேக்கு அருகிலுள்ள, தேசீய ராணுவ அகாடமிக்கு மாற்றல் கேட்டிருப்பதால், அங்கே மாற்றல் கிடைத்ததும், ராணுவக் குடியிருப்புக் கிடைக்கும் என்றும் சொல்லிட்டு, அதனால் தற்சமயம் என்னைப் புனேக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும் விட்டு விட்டுத் தான் போகப் போகிறேன் என்றும் சொல்லி இருக்கார்.

இது கொஞ்சம் என் அப்பா, அம்மாவுக்கு அப்செட் தான். மாற்றல் கிடைக்க எத்தனை மாசம் ஆகிறதோ? அது வரைக்கும் இங்கே மாமியார் வீட்டிலேயும், கொஞ்ச நாட்கள் எங்க வீட்டிலேயுமா இருக்கட்டும் என்றும் தீர்ப்பாகி இருக்கிறது. அதுக்குள்ளே எங்க மாமியார் கல்யாணம் ஆகி முதல் முதல் வரச்சே ரெண்டு பேரும் சேர்ந்து தான் வரணும், இப்போ லீவுக்குள்ளே எங்க பிள்ளைக்கு மறுவீடு வர முடியுமா தெரியலைனு சொல்லி இருக்காங்க. அப்போத் தான் நம்ம ஆஸ்தானம் போய்ச் சேர்ந்திருக்கார். அவர் பங்குக்கு அவரும் ஒரு குண்டைத் தூக்கிப் போட யாருமே நம்பவில்லையாம். என் கணவர் உட்பட கேலியாகச் சிரிச்சிருக்காங்க. அவர் சொன்னதும், மற்ற விபரங்களும் தொடரும். அதுக்குள்ளே போர்க்கொடி போர்க்கொடி தூக்கினாங்க இல்லை? ஏன் ரெண்டு பேரையும் சேர்த்து உட்கார வைக்கக் கூடாது என்று உரிமைப் போராட்டம் தொடங்கினாங்க இல்லை? அதைக் கவனிப்போமா?


நாந்தி ச்ராத்தம் பற்றி திவா விளக்கம் எழுதி உள்ளார். திரு நடராஜ தீக்‌ஷிதரும் எழுதி அனுப்பி இருந்திருக்கிறார். ஆனால் அது நீளம் அதிகம் என்பதால் பின்னூட்டத்தில் வரவில்லை. மீண்டும் அனுப்பச் சொல்லி உள்ளேன். திவாவின் பதிவுக்குச் சுட்டி கொடுக்கிறேன்.இங்கே

Sunday, May 01, 2011

கல்யாணமாம் கல்யாணம், தொடர்ச்சி!

மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் காலையிலே வருவாங்க. குறைஞ்ச பக்ஷமாய் 200 பேர் வருவோம்னு சொல்லி இருக்காங்க. அதனால் வண்டி வேண்டும் என அப்பா, சம்பந்திகளுக்கும் அவங்க குடும்பத்துக்கும் இரண்டு காரும், மத்தவங்களுக்கு இரண்டு வானும் ஏற்பாடு பண்ணி இருந்தார். என்னோட சொந்த அண்ணாவும், பெரியப்பா வழி அண்ணாவும், பெரியம்மாவோடு போய் அழைத்துவரணும்னு ஏற்பாடு. ஆனால் அவங்க எல்லாம் டவுனிலே இருக்காங்க. அதுக்குள்ளே இங்கே இவங்க வந்தாச்சு. காலையிலே வரேன்னு சொன்னவங்க திடீர்னு இப்போ வரப் போறது யாருக்குத் தெரியும்?? மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்திக் கொட்டி உள்ளே அழைக்கணும். அதோட ஏற்பாடு பண்ணி இருக்கிற வீட்டிலே இருக்கிறவங்களை வேறே எழுப்பித் தொந்திரவு செய்யணும். வீட்டைக் காலையிலே தான் ஒழிச்சுக் கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தாங்க. என்னோட பாட்டி மாமிகளை எழுப்பி அவங்களை வரவேற்கச் சொல்லிட்டு, பக்கத்து வீட்டிலேயும் ஆளை அனுப்பி எழுப்பச் சொன்னாங்க. மாமிகள்போய் ஆரத்தி எடுத்து வரவேற்றுப் பக்கத்து வீட்டிலே கொண்டு விட்டுட்டு, சாப்பாடு பத்தி விசாரிச்சாங்க. எல்லாரும் சாப்பிட்டு வந்தோம்னு சொல்லவே, அவங்க படுக்க ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு வந்தாங்க. இந்த அமர்க்களத்தோட சமையல்காரங்க குழுவும் வந்து சேரவே அவங்களுக்கு வேண்டிய சாமான் எடுத்துக்கொடுத்துட்டு மாமி, பாட்டி எல்லாம் அதிலே பிசி ஆனாங்க. மறுநாள் தயாராக வந்த வண்டிகளை அவங்க வீட்டுக்கு வந்ததுக்கு மட்டும் ஆன தொகையைக் கொடுத்துத் திருப்பி அனுப்பவேண்டி வந்தது.

எல்லாரும் என்னைக் கேலி செய்தாங்க. மாப்பிள்ளைக்கு அவசரம் பாரு, உன்னைப் பார்க்கறதுக்குனு ஒரு நாள் முன்னாடி வந்துட்டாரேனு. காலம்பர விடிஞ்சது. அப்பாவுக்குச் செய்தி சொல்ல மாமா ஒருத்தர் சைகிளில் கிளம்பிப்போனார். யார் வீட்டிலேயும் தொலைபேசி கிடையாது அப்போ. மாமா அந்தப் பக்கம் போயிருப்பார், இந்தப்பக்கம் அப்பா வந்துட்டார். அப்பா முகமே சரியாய் இல்லை. என்னமோ ஏதோனு நினைச்சா, மாப்பிள்ளை வீட்டிலே இருந்து யாருமே வரலைனு சோகத்தோட சொன்னார். அதுக்குள்ளே அம்மாவும், மற்ற உறவினர்களும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிக்க, மாப்பிள்ளையும் அவங்க அம்மா, அப்பாவும் முதல் நாளே வந்துவிட்ட செய்தி அப்பாவுக்குச் சொல்லப் படவே அப்பாவும், அம்மாவும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவங்க வீட்டின் மிச்ச உறவினர்களும் வர எங்க பக்கத்து உறவினர்களும் சேர்ந்து கொள்ள வீட்டில் இடம் போதவில்லை. அதுக்குள்ளே என்னோட பெரிய நாத்தனார் என்னைப் பார்க்கணும்னுஅங்கே வர அவங்க என்னைப் பார்த்துட்டு ஏதோ ஸ்கூல் போற பொண்ணு போலனு நினைச்சிருப்பாங்க போல. அப்புறமா நான் தான் கல்யாணப்பொண்ணுனு எல்லாரும் சத்தியமே செய்து கொடுத்ததோடு, அவங்க தம்பியையும் கேட்டுக்கச் சொன்னாங்க.

அதுக்குள்ளே எல்லாருக்கும் காபி வரவே, அங்கே இருந்தவங்களுக்கு ஒருத்தரும் மாப்பிள்ளை வீட்டிற்கு இன்னும் இரண்டு பேரும் காபியை எடுத்துச் செல்லக் கூடவே என் பெரியம்மாவும், பெரியப்பாவும் போனாங்க. அப்போல்லாம் மாப்பிள்ளை வீட்டில் வரும் நபர்கள், கல்யாண மாப்பிள்ளை உட்படக் கல்யாணம் நடக்கும் இடத்துக்கே வந்து சாப்பிடறது, காபி, டிபன் சாப்பிடறது எல்லாம் கிடையாது. அநேகமான திருமணங்கள் வீடுகளிலேயே நடைபெறும். வீடுகளும் திருமண விருந்தினர்களைத் தாங்கும் அளவிலேயே கட்டப் பட்டிருக்கும். அப்படி இல்லை என்றாலும் மதுரையில் ஒரு வசதி என்னவென்றால் அந்தக் காலகட்டங்களில் தெருவும், சரி, ப்ளாட்பார்ம் என்னும் நடைமேடையும் சரி சுத்தமாகவே இருந்தது. தினமும் சுகாதாரப் பணியாளர்கள் வந்து தெருவைச் சுத்தம் செய்வார்கள். வீட்டின் முன்னர் இருந்த நடைமேடைகளும் அந்த அந்த வீட்டுக்காரர்களால் சுத்தமாய்ப் பெருக்கப் பட்டுக் கோலங்களோடு காட்சி அளிக்கும். ஆகவே நடைமேடையில் அக்கம்பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டு, மணல் நிரவி, கொட்டகை அலங்காரம் செய்து கல்யாண மேடை கட்டித் திருமணங்கள் நடக்கும். இதற்கென அப்போதைய முனிசிபாலிட்டியின் அநுமதி ஒன்றுதான் தேவை. அதுவும் எந்தவிதமான இடையூறுகளும் இன்றிக்கிடைத்தன. அது ஒரு காலம்! ((( என் கல்யாணமும் மாமா வீட்டு வாசலில் அக்கம்பக்கம் மூன்று வீடுகளையும் சேர்த்துப் பந்தல் போட்டுத் தான் நடந்தது. :D எங்கேயோ போயிட்டேனே. மாப்பிள்ளை வீட்டில் சாப்பிட வரமாட்டாங்கனு சொன்னேன் இல்லையா?? அதனால் அவங்க தங்கும் இடத்திற்கே எல்லாமும் போகும். ஒருவேளை சத்திரங்களில் திருமணம் நடந்தாலும் அவங்களுக்கென ஒதுக்கி இருக்கும் அறைகளில் சாப்பாட்டுக் கூடமும் ஒன்று கட்டாயம் இருக்கும். அங்கே எல்லாவற்றையும் எடுத்துப் போய்ப் பரிமாறுவார்கள். தனிப்பட்ட சிறப்பான கவனிப்பு இருக்கும். சாப்பாடும், பரிமாறும் ஆட்களும் மட்டும் போனால் போதாது. கூடவே பெண் வீட்டில் பெரியவங்க யாரானும் இரண்டு பேரோ, நான்கு பேரோ போகவேண்டும். ஆகவே என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் காபி, டிபனோடு போனாங்க. அப்படியே கல்யாணத்துக்கு முதல் நாள் நடக்கும் விரதம்/நாந்தி போன்றவற்றிற்கு அவங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவேண்டும். இப்போ இந்த விரதம்/நாந்தி பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்த்துட்டு மேலே தொடரலாமா??



இந்த நாந்தி என்பது குடும்பத்தின் முன்னோர்களுக்கான ஒரு சடங்கு. இதைக் கல்யாணங்களில் செய்வது நல்லது. முன்னோரின் ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கும் என்பதோடு அவங்க அநுமதியையும் பெற்றுக்கொள்வதற்காக எனச் சொல்வது உண்டு. ஆனால் இதையும் திருநெல்வேலிக் காரங்க செய்யறதில்லை. அவங்களுக்குக் கல்யாணத்தில் நாந்தி செய்வது அச்சானியம் என்று சொல்வதுண்டு. தஞ்சை, மதுரை மாவட்டங்களில் இது கட்டாயமாய் இடம் பெறும். குடும்ப வழக்கத்தைப் பொறுத்து புரோகிதர்கள் வருவாங்க. ஒன்பது பேர் கட்டாயம்னு சில குடும்பங்களில் உண்டு. அன்னிக்குக் கல்யாணத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் அனைவருமே டிபன், காபி சாப்பிட பெண் வீட்டில் பெண்ணின் அம்மா, அப்பா, கல்யாணப் பெண், பிள்ளை வீட்டில் பிள்ளையின் அப்பா, அம்மா, கல்யாணப் பிள்ளை மட்டும் எதுவுமே சாப்பிடாமல் இவற்றை முடித்த பின்னரே சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு சிலர் வீடுகளில் இதற்கெனத் தனிச் சமையலும் உண்டு.

எங்க அப்பா, அம்மா, இங்கே மாமா வீட்டின் வாசல் பந்தலில் என்னையும் வைத்துக்கொண்டு விரதம் ஆரம்பிக்க மாப்பிள்ளை வீட்டில் அவங்க தங்கி இருக்கும் இடத்திலேயே விரதம், நாந்தி போன்றவற்றைச் செய்து கொள்வதாய்ச் சொல்லிட்டாங்க. தாலி கட்டும் முன்னர் பிள்ளையும் பெண்ணும், மணவறையில் ஒரே இடத்தில் அமரக் கூடாது என்பது அவங்க சொன்ன காரணம். இங்கே பந்தலுக்கு வந்தால் மணமேடையிலேயே அவங்க ஒரு பக்கமும், நாங்க இன்னொரு பக்கமும் உட்காரணும். அதைத் தவிர்க்க வேண்டி அப்படிச் சொன்னாங்க. அதோடு அன்று மாலை நடக்க இருக்கும் நிச்சயதார்த்ததிற்கும் பெண்ணுக்குத் தனியாகவும், மாப்பிள்ளைக்குத் தனியாகவுமே நடத்தவேண்டும் என்பதையும் வற்புறுத்திச் சொன்னார்கள். தஞ்சைப் பக்கங்களில் பெண்ணையும், பிள்ளையையும் ஒன்றாய் உட்கார்த்தி வைத்து நிச்சய தார்த்தம் செய்ய மாட்டாங்களாம். எங்களுக்கு அது வழக்கமில்லை என்றார்கள். சரினு அவங்க அங்கேயே விரதம் பண்ண ஏற்பாடு செய்து கொடுத்தாங்க. முதல் பிரச்னை கோலத்தில் ஆரம்பம். :))))))))))