திங்கட்கிழமை காலையில் ஏழரைக்குள் தாலி கட்டி முடிந்ததும் எல்லாரும் அவங்க அவங்க ஊர் சுத்திப்பார்க்கப்போயிட்டாங்க, பந்தல் கொஞ்சம் வெறிச்சுனு ஆனது! அது போல் இங்கேயும் ஊஞ்சல் முடிஞ்சதுமே எல்லாரும் கிளம்பிட்டீங்க போல! :P
ஊஞ்சல் முடிந்ததும், பெண்ணையும், பிள்ளையையும் மணமேடைக்கு அழைத்து வந்து அவரவர் வீட்டுப் புரோகிதர்கள் மூலம் பெண்ணின் பிறந்த குலத்திலும், பையரின் பிறந்த குலத்திலும் மூன்று தலைமுறைகளைச் சொல்லி இன்னாருடைய மகள், இன்னாருடைய பேத்தி, இன்னாருடைய கொள்ளுப் பேத்தி , அதேபோல் மணமகனுக்கும் மூன்று தலைமுறை மகன், பேரன், கொள்ளுப் பேரன் என முப்பாட்டனார் வரை குலம், கோத்திரம் சொல்லப் படும். இதிலே எந்த ரிஷியின் வழித்தோன்றல்கள் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்வார்கள். இதன் மூலம் பெண்ணின் அறிமுகமும், பிள்ளையின் அறிமுகமும் கிடைக்கிறது. இதன் பலன் என்னவெனில் ஒருவேளை முன்பின் அறியாதவர்களிடம் சம்பந்தம் செய்ய நேரும்போது என்ன இருந்தாலும் கொஞ்சம் கலக்கம் ஏற்படும். இப்படி மூன்று தலைமுறையைக் குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் குடும்பத்தின் உறவினர் யாரேனும் தற்செயலாக வந்திருந்தால் அவர்கள் உறவு விட்டுப் போயிருந்தாலும் இப்போது இந்தக் குறிப்பிட்ட அறிமுகத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது எங்க பொண்ணு திருமணத்தில் நடந்தது. எங்க மாப்பிள்ளையின் தாயாதிகள் எங்க புக்ககத்தின் தூரத்து உறவினர்கள். நாங்க கல்யாணத்திற்குக் கொடுத்த அழைப்பின் பேரில் வந்தவங்க இப்படிப் பட்ட விபரங்கள் மூலம் என் பெண்ணின் புக்ககத்தினரோடு விட்டுப் போன உறவைக் கண்டு பிடித்தனர்.
இந்த அறிமுகம் செய்து விட்டு எங்க குடும்பத்தைச்சேர்ந்த இந்தப்பெண்ணை இந்த வரனுக்குத் தானமாய் அளிக்கிறேன். இதன் மூலம் எங்கள் குலத்தின் பல தலைமுறைகளும் மகிழ்வு அடையவும், நிம்மதிஅடையவும் வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அப்பா, பெண்ணை அளிக்க, பையரும் பெண்ணைப் பெற்றுக்கொள்கிறார். இதைத் தான் கன்யாதானம் என்று சொல்கின்றனர். இதன் பின்னர் மாப்பிள்ளைக்குக் கால் அலம்பி மாமனாரும், மாமியாரும் மந்திரங்கள் சொல்லி வழிபடுவார்கள். மஹாவிஷ்ணுவும், மஹாலக்ஷ்மியுமாகவே மணமக்கள் கருதப் படுவார்கள். பரமேஸ்வரன், பார்வதி என்றும் கூறுவதுண்டு. அதன் பின்னர் என் கணவர் கூறைப் புடைவையை எனக்குக் கொடுத்து அதைக் கட்டிக்கொண்டு வரும்படி மந்திரங்களின் மூலம் சொல்ல, நானும் கூறைப்புடைவை கட்டிக்கப்போனேன். கட்டிவிடப் பெண்ணின் நாத்தனாரை அனுப்புவார்கள். இதன் மூலம் ஒருவருக்கொருவர் நெருக்கம் ஏற்படவும், மனம் நெருங்கிப் பழகவுமே இந்த ஏற்பாடு என்று சொல்லுவார்கள். ஒன்பது கஜம் புடைவையும் என்னை மூழ்கடிக்க அதைக் கட்டிக்கொண்டு நடக்கத் தெரியாமல் வந்து மேடையில் அமர, தற்கால வழக்கப்படி, அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு(அப்பாவுக்கு வெயிட்டாய் இருந்திருக்க மாட்டேன். 35 கிலோ தானே! :P) திருமங்கல்யதாரணம் நடந்தது. ஏழரைக்குள் மாங்கல்ய தாரணம் என்பதால் அது முடிந்ததும், எல்லாரும் டிபன் சாப்பிடப் போய்விட்டார்கள்.
வந்த கூட்டத்தில் ஒரு பகுதிதான் சாப்பிடப் போயிருந்தது. மாடியிலே இடமில்லை. கீழே இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு என் கணவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, “சித்திரைத் திருநாளுக்கு வந்தவங்க எல்லாம் மதுரையிலேயே தங்கிட்டாங்களா?” என்பது தான். புரோகிதர் சொன்ன மந்திரங்களையும் சொல்லிக்கொண்டே அவர் என்னிடம் இப்படிக் கேட்க பதில் சொல்லத் தெரியாமல் நான் விழிக்க, எதுவுமே பேசவில்லை. அதைப் பின்னால் ரொம்ப நாட்கள் சொல்லிக் கேலி பண்ணிட்டு இருந்தார். ஆனால் எங்களுக்கு வைதீகச் சடங்குகள் தொடர்ந்தன. இங்கே இந்த வைதீகச் சடங்குகள் பற்றிய ஒரு சின்ன அறிமுகம் பார்க்கலாமா??
வைதீகச் சடங்குகள் முடிந்ததும், என்னையும், என் கணவரையும் அவங்க தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்துப் போனாங்க. சாதாரணமாய் இந்த மாதிரிப் பிள்ளை வீட்டினர் தங்கி இருக்கும் இடத்திற்குப் பெண்ணை அழைத்துச் சென்று அங்கே இருவரையும் உட்கார்த்தி வைத்துப்பால், பழம் கொடுப்பதே இன்றெல்லாம் கிரஹப் பிரவேசம் என நிறைவடைகிறது. ஆனால் உண்மையான கிரஹப் பிரவேசம் என்பது பெண் புக்ககத்தினுள் புகும் நாளன்று தான் ஆரம்பம். ஒரு சிலர் உள்ளூரில் திருமணம் நடந்தால் அன்றே பெண்ணையும், மாப்பிள்ளையையும் அவங்க அவங்க வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வந்துவிடுவார்கள். அது போதும் என்ற எண்ணம் தான். மேலும் இப்போதெல்லாம் வைதீகச் சடங்குகளுக்கு முக்கியத்துவமும் இல்லாமல் போனதும் ஒரு காரணம். ஆனால் எங்களுக்கு கிரஹப் பிரவேசம் ஊரில் போய்க் கிராமத்தில் செய்யப்போறாங்க என்பது எனக்கு அங்கே போனதும் தெரிய வந்தது. அதே போல் என் கணவர் என்னை உடனே புனே அழைத்துச் செல்லப் போவதில்லை என்றும், புக்ககத்தில் விட்டுட்டுப் போகப் போறார் என்றும் அப்போது எல்லாரும் பேசிக்கொண்டதில் இருந்து தெரிய வந்தது. நாங்க தங்கின மாமா வீட்டிற்கு வந்ததும் எல்லாரும் என்னை எப்படி உன் கணவர் இல்லாமல் அங்கே இருக்கப் போகிறாயோ என்றே கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு எதுவும் தோன்றவில்லை என்பது தான் நிஜம்.
இந்தச் செய்தி ஓர் அதிர்ச்சியாகவோ, அல்லது ஏமாற்றமாகவோ இல்லை. ஏதோ நடக்கிறது நம்மைச் சுற்றி, நடக்கிறபடி நடக்கட்டும் என்ற எண்ணமா? அதுவும் தெரியாது. ஆனால் நான் எந்தவிதமான மனநிலையிலும் இல்லை. அப்புறமாய்ச் சாப்பிடக் கூப்பிட்டனர். கல்யாண சமையலில் அப்போதெல்லாம் வெங்காயம், மசாலா சாமான்கள் இருக்காது. ஏனெனில் மாலையும் பெண்ணும், பிள்ளையும் வைதீகச் சடங்குகள் செய்யணுமே. அதனால் தனியாக பிள்ளைக்கு, பெண்ணுக்கு என எடுத்து வைத்திருந்த பலகாரங்களே கொடுக்கப் பட்டன. இதிலே எச்சல் மாற்றுவது என நடக்கும். ஆனால் எங்க கல்யாணத்தில் இது பெரிய அளவில் நடக்கவில்லை. எல்லாருக்கும் கொஞ்சம் ஏமாற்றமே. மாலை நலுங்கில் என்ன நடக்குமோ பார்க்கலாம் என விட்டுவிட்டனர். மாலை நலுங்கும் மூன்று மணிக்கே ஆரம்பித்தது. நலுங்குக்கு எனப் பொதுவாக நாத்தனார்கள் இருந்தால் அவங்க தான் சேர்ந்து புடைவை எடுப்பாங்க. நலுங்கு விளையாட பொம்மைகள், பெண்ணுக்கு சோப்பு, சீப்பு, கண்ணாடி, குங்குமம், சாந்து, (அப்போல்லாம் சாந்துதானே) பவுடர், ஹேர் ஆயில் என அலங்காரப்பொருட்களும் கொடுப்பாங்க. நலுங்கு விளையாட மாப்பிள்ளையைப் பெண் தான் அழைக்கவேண்டும் என்பார்கள். என்னிடம் சித்தி படிச்சுப் படிச்சு உடனே கூப்பிடக் கூடாது, கொஞ்சம் தயங்கிட்டுக் கூப்பிடணும்னு சொல்லி இருந்தாங்க. ஆனால் நான் உடனே கூப்பிட அவரும் உடனே வந்துட்டார். :D நலுங்கு போட்டோ தேடி எடுக்கிறேன். எடுத்ததை எங்கேயோ வைச்சுட்டேன். நலுங்கிலேயும் கண்ணாடி காட்டுகையில் எல்லாரும் என் கணவரைத் திருப்பிக் காட்டச் சொல்ல, நான் பிடிவாதமாய்க் கையோடு சேர்த்துக் கண்ணாடியைத் திருப்ப, ஒரே அமர்க்களம். அதுக்கப்புறமா ரிசப்ஷன். ஐந்து மணிக்கே வரச் சொல்லிட்டாங்க, ஏனெனில் மாலையும் வைதீகச் சடங்குகள் இருந்தன. அதுக்கு ஆறரை, ஏழு மணிக்குக் கூப்பிடுவாங்க என்பதால் ஐந்து மணிக்கே ரிசப்ஷனுக்கும் உட்கார்ந்தாச்சு. இதிலே முதுகைக் காட்டிக்கொண்டு நிற்பது என் தம்பி.
என் சிநேகிதர்கள் சிலர், சிநேகிதிகள் சிலர், அப்பாவின் நண்பர்கள், மாமாக்களின் நண்பர்கள் என ஒரு ஐம்பது வந்திருந்தால் பெரிய விஷயம். அதுக்கப்புறமா வைதீகச் சடங்குகளுக்கு நேரமாச்சுனு புரோகிதர் கூப்பிட்டுக்கொண்டு போய்விட்டார். அன்றைய சடங்குகள் முடிந்தன. மற்ற வைதீகச் சடங்குகள் புக்ககத்தில் . ஆகவே என் பெட்டியைத் தயார் செய்து கொள்ளப் போனேன். திடீர்னு மனதில் ஒரு வெறுமை. பிறந்து வளர்ந்து, இருந்த ஊரை விட்டு, சொந்த, பந்தங்களை விட்டுவிட்டுப் போகப் போகிறோம். திக்குத் தெரியாத காட்டில் வாழ்க்கை ஆரம்பம் ஆகப் போகிறது. எப்படி இருக்கும்? எல்லாரும் நல்லவங்களா? இல்லையா? ஒண்ணுமே புரியலை. மறுநாள் விடிந்தது. கட்டுச் சாதக் கூடைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தனர். மூன்றாம் நாளான அன்றைய சம்பிரதாயங்கள் முடிந்ததும், என் மாமியார், மாமனார், கடைசி நாத்தனாரை மட்டும் விட்டுவிட்டு அவங்க முன்னாடி போய் கிரஹப் பிரவேசம் ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் எனப் பேருந்தில் செல்லப் போவதாய்க் கூறிச் சென்றுவிட்டார்கள். நாங்கள், அதாவது நான், என் கணவர், என் கடைசி நாத்தனார் மூவரும் என் அப்பா, அம்மா, தம்பியுடன், கூடவே என் மாமி, குழந்தைகளோடு அன்றைய மதியம் கும்பகோணம் செல்லும் ரயிலில் செல்வதாய் ஏற்பாடு. அப்போதெல்லாம் ஜனதா என்றொரு ரயில் ஓடும். முழுதும் மூன்றாம் வகுப்புப் பெட்டிகள். அப்போ இரண்டாம் வகுப்பு உயர் வகுப்பாய் இருந்தது. இப்போதைய ஸ்லீப்பர் க்ளாஸ் அப்போ மூன்றாம் வகுப்பு. ரயிலில் உட்காரும் இருக்கைகள் கட்டையாகத் தான் இருக்கும். இதை மாற்றியது மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த காலத்தில் ரயில்வே துறை மந்திரியாக இருந்த திரு மதுதண்டவதே அவர்கள்.
இன்னும் இரண்டே நாட்கள்!
ஹ்ம்ம் என் கல்யாணம் முடிந்து ஒரு வாரத்தில் நான் மட்டும் சென்னை வந்தாச்சு . அவ நாலு மாசம் கழிச்சுதான் சென்னை வந்தா. அப்புறம் மாலையில் நடைபெற வேண்டிய சடங்குகள் இரண்டு நாள் கழித்து சேலத்தில் நடைபெற்றது
ReplyDeleteபொண்ண கொண்டு போய் விட அப்பா /அம்மா கூட வர மாட்டாளே . இதுவும் தற்கால நடைமுறையோ ??
திவா அண்ணா விளக்கவும்
திருமணத்தில் நேரில் கலந்து கொண்ட உணர்வு. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete//தாலி கட்டி முடிந்ததும் எல்லாரும் அவங்க அவங்க ஊர் சுத்திப்பார்க்கப்போயிட்டாங்க, //
ReplyDeleteஹஹ்ஹஹ்ஹ!
//இதன் பலன் என்னவெனில் ஒருவேளை முன்பின் அறியாதவர்களிடம் சம்பந்தம் செய்ய நேரும்போது என்ன இருந்தாலும் கொஞ்சம் கலக்கம் ஏற்படும். இப்படி மூன்று தலைமுறையைக் குறிப்பிடுவதன் மூலம் அவர்கள் குடும்பத்தின் உறவினர் யாரேனும் தற்செயலாக வந்திருந்தால் அவர்கள் உறவு விட்டுப் போயிருந்தாலும் இப்போது இந்தக் குறிப்பிட்ட அறிமுகத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும். //
ம்ம்ம்ம் அப்பா வழியில் 5 தலைமுறைக்கும் அம்மா வழியில் 3 தலைமுறைக்கும் ரத்த சம்பந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று விதி இருக்கு. இப்படி சொல்வதன் மூலம் அதில் பிரச்சினை இருந்தாலும் காலம் கடக்குமுன் சரி செய்துவிடலாம்.
//ஒன்பது கஜம் புடைவையும் என்னை மூழ்கடிக்க//
:-))))
//35 கிலோ தானே! :P)//
ஹா! நம்ப முடியவில்லை இல்லை இல்லை ஐ..ஐ...ஐ
//“சித்திரைத் திருநாளுக்கு வந்தவங்க எல்லாம் மதுரையிலேயே தங்கிட்டாங்களா?”//
செம ஜோக்!
//ஆனால் நான் உடனே கூப்பிட அவரும் உடனே வந்துட்டார். :D//
ச்சே! கொஞ்சமாவது பிகு பண்ண வேணாம்?
//
to follow
ReplyDeleteவாங்க எல்கே, ம்ம்ம்ம்ம் அப்படியா?? அப்பா, அம்மா வரமாட்டாங்களா?? எனக்கு இது குறித்தத் தெளிவு இல்லை. திவா வந்து சொல்லட்டும், பொதுவாய் நடைமுறையில் பக்கத்துப் பக்கத்து கிராமம், ஊர், தெரு எனவே கல்யாணங்கள் நடந்ததால் எல்லாருமே எல்லா விசேஷங்களிலும் கலந்து கொண்டிருப்பாங்க என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஎனக்கு கிரஹப்ரவேசம், ப்ரவேச ஹோமம் என்று தனியாக வேறு பெரிய அளவில் செய்தாங்களே, அதனால் என் அப்பா, அம்மா, வரலைனால் எப்படி??
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி,, பாராட்டுகளுக்கு நன்றிங்க.
ReplyDeleteஹஹ்ஹஹ்ஹ!//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ம்ம்ம்ம் அப்பா வழியில் 5 தலைமுறைக்கும் அம்மா வழியில் 3 தலைமுறைக்கும் ரத்த சம்பந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று விதி இருக்கு. இப்படி சொல்வதன் மூலம் அதில் பிரச்சினை இருந்தாலும் காலம் கடக்குமுன் சரி செய்துவிடலாம்.//
ஆமாம். சொல்லுவாங்க, ஆனால் இப்போத் தான் ரத்த க்ரூப் டெஸ்ட் பண்ணிட்டுத் தானே கல்யாணம்!
//35 கிலோ தானே! :P)//
ReplyDeleteஹா! நம்ப முடியவில்லை இல்லை இல்லை ஐ..ஐ...ஐ//
:P:P:P:P:P
ச்சே! கொஞ்சமாவது பிகு பண்ண வேணாம்?//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//எனக்கு கிரஹப்ரவேசம், ப்ரவேச ஹோமம் என்று தனியாக வேறு பெரிய அளவில் செய்தாங்களே, அதனால் என் அப்பா, அம்மா, வரலைனால் எப்படி??/
ReplyDeleteவரவே மாட்டான்னு சொன்னேனா ??
பொண்ணு மாப்பிள்ளை கூட வர மாட்டா . தனியா வருவா
என் கல்யாணம் முடிந்து சேலம் திரும்பியப்ப என் மனைவியின் அத்தை வந்தார்கள். என் மைத்துனி கல்யாணம் முடிந்து நானும் என் மனைவியும் சென்று வந்தோம்
ReplyDeleteஇன்று பாதி சடங்குகள் நடப்பதேயில்லை... நல்ல திருமணத்தை கண்ட உணர்வு.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்று பாதி சடங்குகள் நடப்பதேயில்லை... நல்ல திருமணத்தை கண்ட உணர்வு.. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பர் பகிர்வு தலைவி ;)
ReplyDeletevaaila laddu irukku adhan mounam.. solli mudingo first.. ;-)
ReplyDeleteஅருமையான நினைவுகள் கீதா.
ReplyDeleteபோட்டோ எடுத்த நெகடிவ்கள்
என்னிடம் கூட இல்லை.
பலவிதத்தில் உங்கள் நிலைமைதான் எனக்கும். என்னிலிருந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் மனுஷியாகவே இருந்தேன்.
நிலைமை புரியவில்லையா. .
உணர்ச்சிகள் முதிரவில்லையா
இன்னும் புரியவில்லை.
ரிசப்ஷன் போது புக்ககத்து உறவுப் பாட்டி வந்து சொன்னது மட்டும் நினைவில் இருக்கிறது.
"ரொம்பச் சிரிக்காதே. நாளைக்கும் கொஞ்ச்சம் மிச்சம் வச்சுக்கோ"
என்றது இப்பவும் நினைவில் இருக்கிறது.
வெகு அழகாக விவரம் சொல்லி இருக்கிறீர்கள் மா. நன்றி
வரவே மாட்டான்னு சொன்னேனா ??
ReplyDeleteபொண்ணு மாப்பிள்ளை கூட வர மாட்டா . தனியா வருவா//
அப்படியா?? தெரியலை எல்கே, ஆனால் என் அப்பா, அம்மா, தம்பி எங்களோடு தான் வந்தாங்க. சேர்ந்து தான் போனோம்.
என் கல்யாணம் முடிந்து சேலம் திரும்பியப்ப என் மனைவியின் அத்தை வந்தார்கள். என் மைத்துனி கல்யாணம் முடிந்து நானும் என் மனைவியும் சென்று வந்தோம்.//
ReplyDeleteஎன்னோட நாத்தனார் கல்யாணத்தில் கூட யாருமே போகலை, கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குத் தனியாத் தான் அனுப்ப வேண்டிய சூழ்நிலை! :( இன்னும் சில கல்யாணங்களிலும் அப்படித் தான். எங்க பொண்ணு கல்யாணத்திலும் அவ தனியாத் தான் மும்பை போனாள். உள்ளூரில் தங்கி இருந்த இடத்திற்கு மட்டும், அத்தை, மாமாக்கள் கொண்டு விட்டாங்க.
வாங்க மதுரை சரவணன், கல்யாணம் கல்யாணமாக நடப்பதில்லையே? ஒரே ஆடம்பரத் திருவிழாவாக அல்லவோ நடக்கிறது?? அதான் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. :(
ReplyDeleteவாங்க கோபி, நன்றிப்பா.
ReplyDeleteபோர்க்கொடி, எத்தனை நாளா லட்டை வாயிலேயே வைச்சுட்டு இருப்பீங்க? :P, முழுங்கிட்டுப் பேசுங்க! :)
ReplyDeleteஹிஹிஹி, வாய் பேச முடியலைங்கறதுக்கு இது ஒரு நொ.சா. :P:P:P:P
வாங்க வல்லி, உண்மைதான், எதுக்கெடுத்தாலும் சிரிக்கிறதைத் தவிர நாங்க (நான், என் பெரியம்மா பொண்ணு, மாமா பொண்ணு, மூணு பேரும் கிட்டத்தட்ட சம வயசு) வேறே எதும் பண்ண மாட்டோம். எல்லாத்துக்கும் சிரிப்போம். மாமியார் வீட்டிலே போயுமா இப்படிச் சிரிப்பீங்கனு சொல்லுவாங்க, அதுக்கும் சிரிப்போம்.
ReplyDeleteமாமி,
ReplyDeleteகல்யாணம் நல்லா நடந்து முடிஞ்சிருக்கு. எங்களுக்கு எல்லாம் தாம்பூலப் பை எங்கே :)
புக்ககப் பிரவேசம் கதை வருமா?
விவரமா எழுதியிருக்கீங்க.. கோத்திரம் வச்சு இன்னார் தாயாதிக்காராரென்று சொல்ல முடியுமா என்ன?
ReplyDeleteபொண்ணைக் கொண்டு விட அப்பா அம்மா தான் போகிறார்கள் எல்கே..
கெட்டி மேளம் கொட்டும் இனிய திருமணத்தில் கலந்து கொண்டோம்.
ReplyDelete@அப்பாஜி
ReplyDeleteமுறை மாறுகிறது என்றெண்ணுகிறேன். இல்லை இது சேலம் பக்கத்துக்கு வழக்கமா என்றும் சரியாக தெரியலை.
வாங்க ஸ்ரீநி, ஊரிலே இல்லை ரெண்டு நாளா. :D தாம்பூலப் பை மட்டும் போதுமா?? பக்ஷணம்???:))))))
ReplyDeleteவாங்க அப்பாதுரை, வெறும் கோத்திரம் மட்டும் சொல்லுவாங்கனு எங்கே சொல்லி இருக்கேன். மூன்று தலைமுறைகளின் பெரியவங்க பெயரும் கூடவே சொல்லப் படும் இல்லையா? அப்போப் புரிஞ்சுடும், இந்த ஊர், இந்த கோத்திரம், இந்தப் பெயர் உள்ளவரின் கொள்ளுப் பேரன்,பேரன், பிள்ளை என்று வரிசையாக வரும்போது புரிஞ்சுக்கலாம்.
ReplyDeleteஎனக்குத் தெரிஞ்சு அப்பா, அம்மா, கொண்டு விடும் வழக்கம் உண்டு என்றே நினைக்கிறேன். அல்லது எல்கே சொல்றாப்போல் ஊருக்கு ஊர் மாறுதோ என்னமோ? தெரியலை.
ReplyDeleteவாங்க மாதேவி, ரொம்ப நன்றி கல்யாணத்தில் கலந்து கொண்டமைக்கு.
ReplyDeleteரசனையோடும் இருக்கிறது
ReplyDeleteஏதொ உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டநிறைவும் இருக்கிறது
படிக்கும் மணமான ஒவ்வொருவரும் தம் தம் திருமணத்தை நினைக்க வைக்கும்
அழகான பதிவு கீதாம்மா
ஏன் கண்ணன் வருவான் பதிவுகள் போல எண்ணங்கள் பதிவு மட்டும் Buzz லில் வருவது இல்லை ?