திரு இன்னம்புராரின்
அன்புக் கட்டளை புத்தாண்டிற்கு அன்றொரு நாள் நான் எழுதவேண்டும் என்பது. அவராட்டமா சுவை கூட்டி எழுதத் தெரியாது; வராது. பொறுத்தருள்க! வார்த்தைகளில் சிக்கனம் மட்டுமின்றி ஒரே வார்த்தையில்
மொத்தக் கட்டுரையின் உள்ளார்ந்த பொருளைக் கொண்டு வருகிறார். நானோ வள வள, ஆகவே 2 நாட்களுக்கு என்னோட அறுவை தான். பெரியவர் ஓய்வு எடுக்கப் போகிறேன்னு சொல்லிட்டார்.
தொந்திரவு செய்ய வேண்டாம்!
அப்பாவோட முன்னோர்கள்
வடக்கே இருந்து வந்தவர்கள். மத்தியப் ப்ரதேசம்,
ஆந்திரா பார்டர்னு சொல்வாங்க. அவங்க பரசுராம
க்ஷேத்திரத்திலே கன்யாசுல்கம் முறையில் பெண்ணை தானமாய்ப் பெற்றுக் கொஞ்ச காலம் அங்கே
குடித்தனம் பண்ணி, பின்னர் என் அப்பாவோட கொ.தா. காலத்தில் மதுரைக்கருகே மேல்மங்கலம்
வந்து குடியேறினாங்க. ஹிஹி, வந்தேறிங்க தான்!
தொழில் வைத்தியம். ஆனால் என்னோட தாத்தாவோட அதெல்லாம் போயாச்சு. இப்போச் சொல்ல
வந்தது என்னன்னா எங்க வீட்டிலே யுகாதியும் உண்டு; தமிழ் வருஷப் பிறப்பும் உண்டு; விஷுக்கனியும்
உண்டு. சின்ன வயசிலே விபரம் தெரியாப் பருவத்திலே விஷுக்கனி கொண்டாடியது மங்கலாக நினைவில்
இருக்கு. யுகாதியும் தமிழ் வருஷப்பிறப்பும் கொஞ்சம் கூடக் குறையாத அதே விமரிசையோடு
கொண்டாடப் படும். இப்போவும் அண்ணா, தம்பி வீடுகளில் யுகாதிக்குப் பாயசம் வைத்து விருந்து
உண்டு. விஷுவும் தமிழ் வருஷப் பிறப்பும் அநேகமாச்
சேர்ந்தே வந்துவிடுவதால் பிரச்னை இல்லை.
கல்யாணம் ஆன வருஷம்
யுகாதி கொண்டாட்டம் வழக்கம் போல் கொண்டாட நினைத்தால் நம்ம தலைவர் சிரிக்கிறார். இது என்ன வழக்கம்னு! அப்புறமா மாமியாருக்குக் கடிதம்
போட்டுக் கேட்டால் அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாங்க. அவங்க சோழ தேசத்து வடமர்கள். J ஆகவே சித்திரை வருடப் பிறப்பு விமரிசையாகக்
கொண்டாடினோம். எனக்குக் கல்யாணமாகிக் கிட்டத்தட்ட
ஒரு வருஷம் ஆக இருந்த நேரம். எங்க பெண் வயிற்றில்
மூணு மாசம். ஆகவே புதுப் புடைவை எல்லாம் எடுத்துக்
கொண்டாடினோம். இதிலேயும் முன்னெல்லாம் பஞ்சாங்கப்படி
வருஷம் பிறப்பது முதல் நாளாகவும் சித்திரை ஒண்ணாம் தேதி அடுத்த நாளாகவும் இருக்கும்.
இம்மாதிரிச் சமயங்களில் என் அப்பா வீட்டில் தமிழ் வருஷப் பிறப்பை முதல் நாளே கொண்டாடுவாங்க. அடுத்தநாள் சித்திரை ஒன்றாம் தேதி தான் விஷுக்கனி. சில சமயம் இரண்டும் சேர்ந்தே வரும். இந்த வருஷம் அப்படிச் சேர்ந்தே வந்திருக்கு.
முழுப் பூஷணி,
முழுப் பரங்கி, வாழைக்காய்த் தார், வாழைப்பழத்தார், பச்சைக்காய்கள், பழ வகைகள், தானியங்கள்,
அரிசி, பருப்பு, வெல்லம், மஞ்சள் கிழங்கு, நிறைநாழி ஒரு படி அளவுள்ள படி அளவையில் மஞ்சள்,
குங்குமம் இட்டு, சந்தனம் தடவி அரிசியை அதில் நிறைத்து, மேலே காசுகளைப் போட்டுப் பூவால்
சுற்றி நடுவில் வைப்பார்கள். பக்கத்தில் ஒரு
தாம்பாளத்தில் பருப்பு, வெல்லம், முழுத் தேங்காய் வைக்கப் பட்டிருக்கும். அவரவர் குல தெய்வப் படத்தை முன்னே வைத்துப் பக்கத்தில்
பெரிய கண்ணாடியை வைத்து நாகர்கோயில் வெண்கல
விளக்கை ஏற்றி வைப்பார்கள். வெற்றிலை, பாக்கு,
பழம், காசுகள் வைத்திருக்கும். சுவாமி படத்துக்கு
நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். காலையில்
எழுந்ததும் கண்களைத் திறக்கக் கூடாது. வீட்டின்
பெரியவங்க யாராவது ஒருத்தர் கையைப் பிடிச்சு அழைத்துச் சென்று கண்ணாடிக்கு எதிரே காட்டுவாங்க. அதில் தெரியும் காட்சியைக் கண்டதும் பின்னர் சுவாமிக்கு
எதிரே வைத்திருக்கும் பொருட்களையும் பார்த்ததும் நமஸ்கரித்து எழுந்ததும், கை, கால்
சுத்தம் செய்து குளித்து வந்ததும், வீட்டுப் பெரியவங்க இனிப்பை முதலில் உண்ணக் கொடுத்துப்
பின்னர் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துக் காசோ அல்லது ஏதேனும் பரிசோ கொடுப்பாங்க. என்ன அதிகம் போனால் அந்தக் காலத்து வெள்ளி நாலணா
கிடைக்கும். J
இந்த வருஷத்தோட
பெயர் நந்தன. நாரதரும் கண்ணனும் கூடியதால் பிறந்த குழந்தைகள் என்று அசிங்கமான கற்பனைகள்
காணக்கிடைக்கின்றன. அப்படியே எடுத்துக்கொள்ளாமல்
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் கண்ணனை நினையாதவர் யார்? எல்லாருக்குமே அவன் அருளுகிறான். அப்போ கண்ணன் இல்லாத இடம் ஏது? அவனை நினையாத மனம் ஏது? அப்படிக் கண்ணனை நினைந்திருந்த நாரதர் கண்ணனின்
மாயையில் சிக்கித் திளைத்து மீண்டு வந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது. மனிதனின் வாழ்நாளின் ஒரு சுற்று அறுபது வருடம்.
அப்படி அறுபது வருடங்கள் பிறந்தன. இந்த அறுபது வருடங்களும் மாயையில் மூழ்கி இருந்தார்
நாரதர். கண்ணனின் மனைவி என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணனை நினைப்பவர்கள் அனைவருமே நாயகியர்
தானே. பக்த மீராபாய் இதைத் தெள்ளத் தெளிவாகச்
சொல்லி இருக்கிறாளே! அவன் சந்நிதியில் ஆண்மகன்
அவன் ஒருவனே என்று!
பார்த்தீங்களா! வளவளக்க ஆரம்பிச்சாச்சு! இந்த நந்தன வருஷத்து முக்கியத்துவம் என்னன்னா, நம்ம
நந்தனம் தெரியுமா? நந்தனம்?? அதாங்க தமிழ்நாட்டின்
முதல் ஹவுசிங் போர்ட் குடியிருப்புப் பகுதி.
இதற்கு அறுபது வருடம் ஆகுதாம். கல்கியிலே
படிச்சேன். ராஜாஜி முதலமைச்சரா இருந்தப்போ ராமநாதபுரம்சேதுபதி ராஜாவுக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும்ம்
சொந்தமானதா இருந்த இந்த இடத்தை வாங்கிச் செப்பனிட்டு வடிவமைத்துப் பசுமையான இடமாக மாற்றிச்
சிறு சிறு மனைகளாய்ப் பிரித்து நடுத்தர வர்க்கத்தைக் குடியேற்றினார்களாம். சேதுபதி, பித்தாபுரம் ராஜாக்களுக்கு முன்னர் ஆற்காடு
நவாபிற்குச் சொந்தமாக இருந்ததாம் இந்த இடம்.
நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாம். ஒரு வீட்டுக்கும், இன்னொரு
வீட்டுக்கும் குறைந்தது ஐந்தடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மதித்த காலம் அது. இப்போ மாதிரி மூச்சுக்கூட விடமுடியாமல் கட்டவில்லை. இதற்கு நல்லதொரு பெயர் சூட்ட நினைத்த ராஜாஜி அப்போது
“நந்தன” வருஷம் நிகழ்ந்ததால் அந்தப் பெயரையே சூட்டினாராம்.
நந்தன என்றால்
வாரிசு எனப் பொருள்படும். ஶ்ரீராமரை ரகுநந்தனன் என்பது உண்டு. கண்ணனையோ யது நந்தனன் என்பார்கள். அது போல் இந்த இடமும் வாரிசுகளாலும் முறையாகப் பராமரிக்கப்
படவேண்டும் என்ற உயர்ந்ததொரு நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட நந்தனத்தின் இப்போதைய வயது
60.
சையது ஷா என்ற
ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு நவாபால் பரிசளிக்கப்பட்ட சையது கான்பேட்டை தான்
இன்றைய சைதாப் பேட்டை. இந்த சையது ஷாவிற்குத் தான் நந்தனம் பகுதியும் நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக இருந்ததாக
சென்னை நகர்ப் பாரம்பரியக் காவலர் எஸ்.முத்தையா கூறுகிறார்.
நந்தனம் பற்றிய குறிப்புகளுக்கு உதவி 15--04--2012 தேதியிட்ட கல்கி இதழ்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நாளை இணையத்துக்கு வர தாமதம் ஆகும். ஆகவே பின்னூட்டம் வெளிவரலைனா யாரும் உண்ணும் விரதம் இருக்க வேண்டாம். முக்கியமா ஶ்ரீராம். :)))))))))