எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 12, 2012

அன்றொரு நாள்: ஏப்ரல் 13 சித்திரை, தமிழ்ப் புத்தாண்டு. நந்தனத்துக்கு வயசு 60



திரு இன்னம்புராரின் அன்புக் கட்டளை புத்தாண்டிற்கு அன்றொரு நாள் நான் எழுதவேண்டும் என்பது.  அவராட்டமா சுவை கூட்டி எழுதத் தெரியாது;  வராது. பொறுத்தருள்க!  வார்த்தைகளில் சிக்கனம் மட்டுமின்றி ஒரே வார்த்தையில் மொத்தக் கட்டுரையின் உள்ளார்ந்த பொருளைக் கொண்டு வருகிறார்.  நானோ வள வள, ஆகவே 2 நாட்களுக்கு என்னோட அறுவை தான்.  பெரியவர் ஓய்வு எடுக்கப் போகிறேன்னு சொல்லிட்டார். தொந்திரவு செய்ய வேண்டாம்!

அப்பாவோட முன்னோர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள்.  மத்தியப் ப்ரதேசம், ஆந்திரா பார்டர்னு சொல்வாங்க.  அவங்க பரசுராம க்ஷேத்திரத்திலே கன்யாசுல்கம் முறையில் பெண்ணை தானமாய்ப் பெற்றுக் கொஞ்ச காலம் அங்கே குடித்தனம் பண்ணி, பின்னர் என் அப்பாவோட கொ.தா. காலத்தில் மதுரைக்கருகே மேல்மங்கலம் வந்து குடியேறினாங்க. ஹிஹி, வந்தேறிங்க தான்!  தொழில் வைத்தியம். ஆனால் என்னோட தாத்தாவோட அதெல்லாம் போயாச்சு. இப்போச் சொல்ல வந்தது என்னன்னா எங்க வீட்டிலே யுகாதியும் உண்டு; தமிழ் வருஷப் பிறப்பும் உண்டு; விஷுக்கனியும் உண்டு. சின்ன வயசிலே விபரம் தெரியாப் பருவத்திலே விஷுக்கனி கொண்டாடியது மங்கலாக நினைவில் இருக்கு. யுகாதியும் தமிழ் வருஷப்பிறப்பும் கொஞ்சம் கூடக் குறையாத அதே விமரிசையோடு கொண்டாடப் படும். இப்போவும் அண்ணா, தம்பி வீடுகளில் யுகாதிக்குப் பாயசம் வைத்து விருந்து உண்டு.  விஷுவும் தமிழ் வருஷப் பிறப்பும் அநேகமாச் சேர்ந்தே வந்துவிடுவதால் பிரச்னை இல்லை.

கல்யாணம் ஆன வருஷம் யுகாதி கொண்டாட்டம் வழக்கம் போல் கொண்டாட நினைத்தால் நம்ம தலைவர் சிரிக்கிறார்.  இது என்ன வழக்கம்னு! அப்புறமா மாமியாருக்குக் கடிதம் போட்டுக் கேட்டால் அதெல்லாம் இல்லைனு சொல்லிட்டாங்க.  அவங்க சோழ தேசத்து வடமர்கள். J ஆகவே சித்திரை வருடப் பிறப்பு விமரிசையாகக் கொண்டாடினோம்.  எனக்குக் கல்யாணமாகிக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக இருந்த நேரம்.  எங்க பெண் வயிற்றில் மூணு மாசம்.  ஆகவே புதுப் புடைவை எல்லாம் எடுத்துக் கொண்டாடினோம்.  இதிலேயும் முன்னெல்லாம் பஞ்சாங்கப்படி வருஷம் பிறப்பது முதல் நாளாகவும் சித்திரை ஒண்ணாம் தேதி அடுத்த நாளாகவும் இருக்கும். இம்மாதிரிச் சமயங்களில் என் அப்பா வீட்டில் தமிழ் வருஷப் பிறப்பை முதல் நாளே கொண்டாடுவாங்க.  அடுத்தநாள் சித்திரை ஒன்றாம் தேதி தான் விஷுக்கனி.  சில சமயம் இரண்டும் சேர்ந்தே வரும்.  இந்த வருஷம் அப்படிச் சேர்ந்தே வந்திருக்கு.

முழுப் பூஷணி, முழுப் பரங்கி, வாழைக்காய்த் தார், வாழைப்பழத்தார், பச்சைக்காய்கள், பழ வகைகள், தானியங்கள், அரிசி, பருப்பு, வெல்லம், மஞ்சள் கிழங்கு, நிறைநாழி ஒரு படி அளவுள்ள படி அளவையில் மஞ்சள், குங்குமம் இட்டு, சந்தனம் தடவி அரிசியை அதில் நிறைத்து, மேலே காசுகளைப் போட்டுப் பூவால் சுற்றி நடுவில் வைப்பார்கள்.  பக்கத்தில் ஒரு தாம்பாளத்தில் பருப்பு, வெல்லம், முழுத் தேங்காய் வைக்கப் பட்டிருக்கும்.  அவரவர் குல தெய்வப் படத்தை முன்னே வைத்துப் பக்கத்தில் பெரிய  கண்ணாடியை வைத்து நாகர்கோயில் வெண்கல விளக்கை ஏற்றி வைப்பார்கள்.  வெற்றிலை, பாக்கு, பழம், காசுகள் வைத்திருக்கும்.  சுவாமி படத்துக்கு நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.  காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்கக் கூடாது.  வீட்டின் பெரியவங்க யாராவது ஒருத்தர் கையைப் பிடிச்சு அழைத்துச் சென்று கண்ணாடிக்கு எதிரே காட்டுவாங்க.  அதில் தெரியும் காட்சியைக் கண்டதும் பின்னர் சுவாமிக்கு எதிரே வைத்திருக்கும் பொருட்களையும் பார்த்ததும் நமஸ்கரித்து எழுந்ததும், கை, கால் சுத்தம் செய்து குளித்து வந்ததும், வீட்டுப் பெரியவங்க இனிப்பை முதலில் உண்ணக் கொடுத்துப் பின்னர் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துக் காசோ அல்லது ஏதேனும் பரிசோ கொடுப்பாங்க.  என்ன அதிகம் போனால் அந்தக் காலத்து வெள்ளி நாலணா கிடைக்கும். J
இந்த வருஷத்தோட பெயர் நந்தன. நாரதரும் கண்ணனும் கூடியதால் பிறந்த குழந்தைகள் என்று அசிங்கமான கற்பனைகள் காணக்கிடைக்கின்றன.  அப்படியே எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் கண்ணனை நினையாதவர் யார்?  எல்லாருக்குமே அவன் அருளுகிறான்.  அப்போ கண்ணன் இல்லாத இடம் ஏது?  அவனை நினையாத மனம் ஏது?  அப்படிக் கண்ணனை நினைந்திருந்த நாரதர் கண்ணனின் மாயையில் சிக்கித் திளைத்து மீண்டு வந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது.  மனிதனின் வாழ்நாளின் ஒரு சுற்று அறுபது வருடம். அப்படி அறுபது வருடங்கள் பிறந்தன. இந்த அறுபது வருடங்களும் மாயையில் மூழ்கி இருந்தார் நாரதர். கண்ணனின் மனைவி என்றே எடுத்துக்கொண்டாலும் கண்ணனை நினைப்பவர்கள் அனைவருமே நாயகியர் தானே.  பக்த மீராபாய் இதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறாளே!  அவன் சந்நிதியில் ஆண்மகன் அவன் ஒருவனே என்று! 

பார்த்தீங்களா!  வளவளக்க ஆரம்பிச்சாச்சு!  இந்த நந்தன வருஷத்து முக்கியத்துவம் என்னன்னா, நம்ம நந்தனம் தெரியுமா?  நந்தனம்?? அதாங்க தமிழ்நாட்டின் முதல் ஹவுசிங் போர்ட் குடியிருப்புப் பகுதி.  இதற்கு அறுபது வருடம் ஆகுதாம்.  கல்கியிலே படிச்சேன்.  ராஜாஜி முதலமைச்சரா இருந்தப்போ  ராமநாதபுரம்சேதுபதி ராஜாவுக்கும், பித்தாபுரம் மகாராஜாவுக்கும்ம் சொந்தமானதா இருந்த இந்த இடத்தை வாங்கிச் செப்பனிட்டு வடிவமைத்துப் பசுமையான இடமாக மாற்றிச் சிறு சிறு மனைகளாய்ப் பிரித்து நடுத்தர வர்க்கத்தைக் குடியேற்றினார்களாம்.  சேதுபதி, பித்தாபுரம் ராஜாக்களுக்கு முன்னர் ஆற்காடு நவாபிற்குச் சொந்தமாக இருந்ததாம் இந்த இடம்.  நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டதாம். ஒரு வீட்டுக்கும், இன்னொரு வீட்டுக்கும் குறைந்தது ஐந்தடியாவது இருக்க வேண்டும் என்ற சட்டத்தை மதித்த காலம் அது.  இப்போ மாதிரி மூச்சுக்கூட விடமுடியாமல் கட்டவில்லை.  இதற்கு நல்லதொரு பெயர் சூட்ட நினைத்த ராஜாஜி அப்போது “நந்தன” வருஷம் நிகழ்ந்ததால் அந்தப் பெயரையே சூட்டினாராம்.

நந்தன என்றால் வாரிசு எனப் பொருள்படும். ஶ்ரீராமரை ரகுநந்தனன் என்பது உண்டு.  கண்ணனையோ யது நந்தனன் என்பார்கள்.  அது போல் இந்த இடமும் வாரிசுகளாலும் முறையாகப் பராமரிக்கப் படவேண்டும் என்ற உயர்ந்ததொரு நோக்கோடு ஏற்படுத்தப்பட்ட நந்தனத்தின் இப்போதைய வயது 60.

சையது ஷா என்ற ஆற்காடு நவாபின் சேவகர் ஒருவருக்கு நவாபால் பரிசளிக்கப்பட்ட சையது கான்பேட்டை தான் இன்றைய சைதாப் பேட்டை. இந்த சையது ஷாவிற்குத் தான் நந்தனம் பகுதியும்  நவாப் கார்டன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக இருந்ததாக சென்னை நகர்ப் பாரம்பரியக் காவலர் எஸ்.முத்தையா கூறுகிறார்.


நந்தனம் பற்றிய குறிப்புகளுக்கு உதவி 15--04--2012 தேதியிட்ட கல்கி இதழ்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நாளை இணையத்துக்கு வர தாமதம் ஆகும். ஆகவே பின்னூட்டம் வெளிவரலைனா யாரும் உண்ணும் விரதம் இருக்க வேண்டாம்.  முக்கியமா ஶ்ரீராம். :)))))))))

36 comments:

  1. அடேங்கப்பா! எத்தனை விவரங்கள்! ரொம்ப சுவாரசியம். கொ.தாவுக்கு முந்தைய பரம்பரை விவரங்கள் தேடிப்பிடித்து வைத்திருப்பது ஆச்சரியம்.

    நாரதரும் கண்ணனும் கூடியதால் பிறந்த குழந்தைகள்.. கேள்விப்பட்டதில்லையே? என்ன கதை சொல்லக்கூடாதோ?

    ReplyDelete
  2. புத்தாண்டு பதிவு அமர்க்களப்படுத்திட்டீங்க. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ச்சே...மிஸ் பண்ணி விட்டோம்...நாங்கள் ஒரு தடவை கூட இப்படிக் கொண்டாடியது இல்லை! ஏதோ பஞ்சாங்கம், பாயசம்....அவ்வளவுதான். முடிந்தால் வடை, பாயசம்! பாஸ் மனசு வைக்கவேண்டும்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.... உண்ணாவிரதம்லாம் இருக்க மாட்டேன்.... சாப்பிட்டுட்டே வெயிட் பண்றேன்!

    ReplyDelete
  4. நெறைய தகவல்கள் தெரிஞ்சுகிட்டேன். நன்றி மாமி. இன்னைக்கி மட்டும் உங்களை கலாய்க்க மனசு வல்ல:) உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமி

    ReplyDelete
  5. //யுகாதியும் தமிழ் வருஷப்பிறப்பும் கொஞ்சம் கூடக் குறையாத அதே விமரிசையோடு கொண்டாடப் படும். இப்போவும் அண்ணா, தம்பி வீடுகளில் யுகாதிக்குப் பாயசம் வைத்து விருந்து உண்டு.//

    நாங்களும் இப்பவும் அப்படித்தான்!

    ReplyDelete
  6. // என்ன அதிகம் போனால் அந்தக் காலத்து வெள்ளி நாலணா கிடைக்கும்.//

    எந்தக் காலத்திலும் வெள்ளியில் நாலணா போட்டதாத் தெரியலையே!
    ஆனா, எட்டணாவில் வெள்ளிக்கலப்பு கொஞ்சம் கூடுதலாகப் போட்டதாக வதந்தி உண்டு!

    ReplyDelete
  7. சொந்த புராணம் - 'நந்தன' பெயர்க் காரணம் & அது குறித்த ஆராய்ச்சி- ராஜாஜி - ஆகவே, 'கல்கி' -- சென்னை நந்தனம் பகுதி பெயர் சூட்டல் - கூடுதல் போனஸாக சைதை பற்றி --- என்று ஏகப்பட்ட செய்திகளைக் 'கவர்' பண்ணி ஒரு சுற்றுலா வந்ததற்குப் பெயர் 'வளவளக்கறதா'? நீங்களே அப்படிச் சொன்னாலும் ஏங்க, என்னங்க நியாயம் இது!

    ReplyDelete
  8. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கீதா மேடம்!
    நந்தனம் பெயர் காரணம் படிச்சிருக்கேன். எங்க ஊரு சைதாபேட்டை பெயர் காரணத்தை இன்னிக்குதான் தெரிஞ்சுண்டேன். உங்களால என் ஜென்மம் சாபல்யம்
    ஆச்சு போங்க! :) ஒரு சுவாரசியமான விஷயம் சைதாபேட்டை மீன் மார்க்கெட் பேரு 'காரணீஸ்வரர் மீன் மார்கெட்'. காய்கறி மார்க்கெட் பேரு 'அப்துல் ராசாக் காய்கறி மார்கெட்'. :) நல்ல ஊருங்க. இப்ப ரொம்பவே மாறிபோயிடுத்து.

    ReplyDelete
  9. இனிய நினைவுகள்.....

    வேப்பம்பூ, மாங்கா, வெல்லம் போட்டு பச்சடி உண்டா? செய்தால் இங்கே தில்லிக்கும் கொஞ்சம் பார்சல்... :)

    இனிய நந்தன வருட புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவி ;-)

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு மலரும் நினைவுகள் அருமை.

    ReplyDelete
  12. மாமி

    புது வருஷ பிறப்பிற்கு உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த வருஷம் எல்லாம் நல்லதே கொடுக்கட்டும்.

    ReplyDelete
  13. புத்தாண்டிற்கு இனிய பகிர்வு.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. நல்லதொரு பகிர்வும்மா.

    என் அம்மாவும் விஷுக்கு கண்ணாடி முன் எல்லாம் வைப்பாங்க. நானும் திருமணமானதும் மாமியாரிடம் கேட்டேன். நல்ல விஷயம் தானே செய் என்று சொன்னாங்க. அதனால தொடர்கிறேன்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ஊர்ல இருக்கீங்களா கீதா. கைபேசி எடுக்கலியே. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ஆரோக்கியமாக இருக்கணும். பிரமாதமான பதிவுப்பா.
    எத்தனை விஷயங்கள். அருமையாக இருந்தது படிக்க. பதிவுலக சரித்திர ஆசிரியைப் பட்டம் உங்களுக்கு
    இப்போதே அளித்தோம்.

    ReplyDelete
  16. 'டொக்...டொக்...' ஹலோ....ஹலோ....
    நலம்தானே...
    இணையப் பிரச்னையா...

    ReplyDelete
  17. வாங்க அப்பாதுரை, கொ.தா.வுக்கு முந்தைய பரம்பரை எங்க வீட்டிலே சுவடிகளிலே இருந்திருக்கு. இது வழி வழியாச் சொல்லிண்டு வராங்க. :))))))) என் அப்பா கிட்டத்தட்ட ஒரு நாடகமே நடிச்சுக் காட்டி இருக்கார். நாடகங்களிலே பெண் வேஷம் கட்டுவார் பாருங்க, ஒரு பெண்ணால் அத்தனை நளினம் காட்ட முடியுமா சந்தேகம்! எனக்கு வராது! :)))))))

    நாரதர், கண்ணன் கான்செப்ட் ரொம்ப உயர்ந்ததொரு தத்துவம். அதைக் கொச்சைப் படுத்திட்டாங்க. எழுதறேன். :))))))

    ReplyDelete
  18. வாங்க லக்ஷ்மி, ரொம்ப நன்றி,

    ReplyDelete
  19. வாங்க ஶ்ரீராம், பாஸ் மனசு வைச்சாங்களா? :))))))) நல்லாக் கொண்டாடினீங்களா? நல்லவேளையா நான் சொல்லிக்காமல் லீவு போட்டதுக்கு நீங்க உண்ணும் விரதம் ஆரம்பிக்கலையோ, பிழைச்சேன்! :)))))

    ReplyDelete
  20. வாங்க ஏடிஎம், அட, என்ன சென்டிமென்டல்?? நன்றியும் தாமதமான வாழ்த்துகளும்.

    ReplyDelete
  21. வாங்க ஜீவி சார், எனக்கும் யுகாதி கொண்டாட ஆசையா இருக்கும்! :))))) ஒரு தரம், இரண்டு தரம் என்னோட அப்பா எங்க வீட்டிலே யுகாதி சமயம் தங்கும்படி நேர்ந்தது. அப்போ விருந்தே பண்ணி அமர்க்களப் படுத்தியாச்சு! அத்தோட திருப்திப் பட்டாச்சு! :)))

    வெள்ளி நாலணா நூற்றுக்கு நூறு சதம் உண்டு. உங்க சந்தேகத்தைப் பார்த்ததும் என் கணவரையும் கேட்டுக் கொண்டேன்.


    ரூபாய் எடை வெள்ளி என்றே அந்தக்காலத்தில் வெள்ளி விற்கும். பத்து கிராம் வெள்ளி நாணயம் தானே ஒரு ரூபாய்க் காசாக இருந்திருக்கு. என் கிட்டே நாலணாக் கலெக்‌ஷனே இருந்திருக்கு! அப்பா பிடுங்கிக் கொண்டார். :)))))))

    ReplyDelete
  22. மறந்துட்டேனே, அந்தக் காலத்தில் வைதீகர்களுக்கு அமாவாசை, பூஜை நாட்களில் வெள்ளி நாலணா, எட்டணா தான் தக்ஷிணை என்றும் என் கணவர் சொன்னார்.

    ReplyDelete
  23. ஒரு சுற்றுலா வந்ததற்குப் பெயர் 'வளவளக்கறதா'? நீங்களே அப்படிச் சொன்னாலும் ஏங்க, என்னங்க நியாயம் இது!//

    ரொம்பவே நன்றி. பெரிசா எழுதறேன்னு பலருக்கும் படிக்க முடியலைனு வருத்தம். கொஞ்சம் குறைச்சுக்கக் கூடாதானு கேட்பாங்க.

    ReplyDelete
  24. வாங்க மீனாக்ஷி, சைதாப் பேட்டை பெயர்க்காரணம் ஏற்கெனவே என்னோட பெரியப்பா சொல்லி இருக்கார். அவர் அந்தக் கால இம்பீரியல் வங்கியில் வேலைக்குச் சேர்ந்து பின்னர் ஸ்டேட் வங்கியானதும் தொடர்ந்து இருந்து எழுபதுகளில் ரிடையர் ஆனார். சென்னை பற்றிய பல சுவாரசியக் கதைகளைச் சொல்லி இருக்கிறார்.

    அவருடைய ரூமில் கூட இருந்தவர்களில் ஈசன் இஞ்சினியரிங் ஈஸ்வர ஐயரும், கீதா கஃபே முதலாளி ஜெயராமன்(?) இருவரும். :)))))))

    ReplyDelete
  25. வாங்க வெங்கட் நாகராஜ், புத்தாண்டு வாழ்த்துகளும் நன்றியும். வேப்பம்பூ, வெல்லம், மாங்காய்ப் பச்சடி செய்து சாப்பிட்டாச்சு! :)))))

    ReplyDelete
  26. வாங்க கோபி, நன்றி

    ReplyDelete
  27. நன்றி கோமதி அரசு, தாமதமான வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. ஶ்ரீநி, ரொம்ப நன்றி. உங்களுக்கும் அப்படியே வேண்டிக்கறேன். வாழ்த்துகள், ஆசிகள்.

    ReplyDelete
  29. ரொம்ப நன்றி மாதேவி, வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. ரொம்ப நன்றி கோவை2தில்லி. விஷுக்கனி முடிஞ்சாச்சா?

    ReplyDelete
  31. வாங்க வல்லி, பட்டமளிப்பு விழாவை இப்படி எல்லாம் நடத்தினால் எப்பூடி??? அடுத்த மாசம் முப்பெரும் விழா வரும்பாருங்க அப்போ பெரிசா எடுங்க. எடைக்கு எடை வழக்கம் போல் தங்கமோ, வைரமோ,நவரத்தினமோ வாங்கிக்கறேன். போதும்

    ReplyDelete
  32. ஶ்ரீராம், நலம் தான். தேடியதற்கு நன்றி. :)))))

    ReplyDelete
  33. //அவருடைய ரூமில் கூட இருந்தவர்களில் ஈசன் இஞ்சினியரிங் ஈஸ்வர ஐயரும், கீதா கஃபே முதலாளி ஜெயராமன்(?) இருவரும். :)))))))//
    என் அப்பா ஈசன் இஞ்சினியரிங் கம்பெனியில் தான் கிட்டதட்ட நாற்பது வருடங்கள் வேலை செய்தார். கம்பெனியின் finance head ராமகிருஷ்ண ஐயர் தான் என் அப்பாவை வேலைக்கு சேர்த்துக் கொண்டு வேலைகளை சொல்லி கொடுத்தது.

    ReplyDelete
  34. @மீனாக்ஷி, அப்படியா? ஈஸ்வர ஐயரிடம் நான் எனக்கு வேலை கேட்டிருக்கேன். :)))) பெண்களை அவர் வேலைக்கு எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டார். கல்யாணம் பண்ணிண்டு குடும்பத்தை ஒழுங்கா நடத்துனு ஆசீர்வாதம்! :)))))))

    ReplyDelete
  35. :))))
    அவர் சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிண்டு சமத்தா குடும்பம் நடத்திண்டு இருக்கேள். அவர் ஆசிர்வாதம் பலிச்சுடுத்தே! :)
    ஆபீஸ் பேரை சொன்னாலே என் அப்பா கண்கலங்கி விடுவார். ஈஸ்வர ஐயர், ராமகிருஷ்ண ஐயர் இருவரிடமும் அப்பாவுக்கு அளவு கடந்த மரியாதை என்று சொல்வதை விட பக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  36. மீனாக்ஷி, நான் சமத்துக் குழந்தைனு எல்லாருக்கும் தெரியுமே! :))))

    ReplyDelete