எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 24, 2012

ஊரைச் சுற்றிய ஒரு நாளில் 5

மாயி மகமாயி மணி மந்திர சேகரியே
ஆயி உமையவளே ஆதி சிவன் தேவியரே
மாரித்தாய் வல்லியரே மகராசி வாருமம்மா
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்தே
தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா
திக்கு எல்லாம் போற்றும் எக்காலத் தேவியரே
எக்காலத் தேவியரே திக்கு எல்லாம் நின்ற சக்தி
கண்ணபுரத்தாளே காரண செளந்தரியே
காரண செளந்தரியே நாரணனார் தங்கையம்மா

(மாரியம்மன் தாலாட்டிலிருந்து எடுத்த வரிகள்)




சமயபுரம் மாரியம்மன் குறித்துப் பல கதைகள் நிலவுகின்றன.  ஸ்ரீரங்கம் கோயிலில் வைணவி என்ற அம்மன் விக்கிரஹம் இருந்ததாகவும், அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போகவும் கோயிலில் இருந்து அந்த விக்ரஹத்தை அப்புறப்படுத்த ஜீயர் சுவாமிகள் ஆணையிட்டதாகவும் கூறப்படுகிறது.  அவரின் ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வேண்டி ஆட்கள் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சற்று இளைப்பாறினார்கள்  அதுதான் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்றும் சொல்லப் படுகிறது.  விக்ரஹம் கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைக்கப்பட்டது.  அங்கே தான் தற்போது மாரியம்மன் கோயில் இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம்.  காட்டு வழியாகச் சென்ற மக்களுக்கு அம்பாள் விக்ரஹத்தைக் கண்டு ஆனந்தம் ஏற்பட்டது.  அம்பாளை வழிபட ஆரம்பித்தனர்.  கண்ணனூர் மாரியம்மன் என்ற பெயரும் சூட்டப் பட்டது.

இந்தச் சமயத்தில் விஜயநகர மன்னர்கள் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்தனர்,  கண்ணனூரில் அவர்கள் முகாம் அமைக்கப்பட்டது.  அங்கே  அரண்மனை மேட்டில் மாரியம்மனைக் கண்டு வழிபட்டு தாங்கள் வெற்றி பெற்றுத் தென்னாட்டில் ராஜ்யம் அமைத்தால் அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாய்ச் சபதம் செய்தனர்.  அதன்படியே அவர்கள் வெற்றி பெற்றுக் கோயிலும் கட்டி வழிபட்டனர்.  விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் கி.பி. 1706--இல் அம்மனுக்குத் தனிக்கோயில் அமைக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.  சுமார் நானூறு, ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோயிலாக பிரபலம் அடைந்துள்ளது.  இது ஆதாரபூர்வமாய்ச் சொல்லப் படும் வரலாறு.  ஆனால் இன்னமும் பல வரலாறுகள் சொல்லப் படுகின்றன.  இது சமயபுரம் மாரியம்மன் குறித்த வரலாறு என்றாலும் இவளுக்குத் தாய் வீடும் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.  அங்கேயும் மாரியம்மன் தான்.  ஆதிமாரியம்மன் என அழைக்கின்றனர் அவளை.  அந்தக் கோயில் சமயபுரத்திலிருந்து ஐந்து கிமீட்டர் தூரத்திற்குள் உள்ளது.  இந்த இடம் இனாம் சமயபுரம் என்று அழைக்கப் படுகிறது.




சோழ அரசனின் சகோதரியான இளவரசி ஒருத்தி கங்கநாட்டு மன்னனுக்கு வாழ்க்கைப் பட்டதாகவும், அவளுக்காக இந்தக் கண்ணனூரில் ஒரு மாளிகை சோழ மன்னன் கட்டிக் கொடுத்ததாகவும் சொல்கின்றனர். பின்னால் அந்த இடம் பாண்டியர் படையெடுப்பினால் அழிந்ததாகவும், வேம்புக்காடாக மாறியதாகவும் சொல்கின்றனர்.  அந்த இடம் அரண்மனை மேடு என அழைக்கப்பட்டிருக்கிறது.  ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வந்த அம்மன் விக்ரஹம் இங்கே வைக்கப்பட்டு வழிபடப்பட்டது.  இஸ்லாமியப் படையெடுப்பின் போது அம்மனின் உற்சவ விக்ரஹம் மறைத்து வைக்க வேண்டி எடுத்துச் செல்லப்பட்டது.  செல்லும் வழியில் வீரர்கள் கொள்ளிடக்கரையில் அம்மன் விக்ரஹத்தை வைத்துவிட்டு இளைப்பாறியதாகவும், பின்னர் மீண்டும் விக்ரஹத்தை எடுத்துச் செல்ல நினைத்தபோது விக்ரஹம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  அந்த விக்ரஹம் சில குழந்தைகளால் கண்டெடுக்கப் பட்டு விளையாட்டுப் பொருளாக மாறிற்று எனவும், ஊர் மக்கள் அதைக் கண்டு மாரியம்மன் சிலை என்பதைக் கண்டறிந்து கோயிலிலேயே சிலையை வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அங்கிருந்த ஒரு பெண் கோயிலில் வைக்க வேண்டாம் எனத் தடுத்திருக்கிறாள்.  பின்னர் அம்மனின் அருளை நேரடியாகப் பெற மக்கள் பூக்கட்டிப் பார்க்க அதிலும் அம்மன் சிலையை அங்கே கொண்டு வர வேண்டாம் என்றே வந்ததாம்.  ஆகவே ஒரு யானை மீது அம்மன் சிலையை ஏற்றி யானை எங்கே கடைசியாய் நிற்கிறதோ அங்கே கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டு யானை மீது சிலை ஏற்றப்பட்டது.  யானை சிறிது தூரம் சென்றதும் படுத்துவிட்டது.  அந்த இடத்திலேயே அந்த அம்மன் சிலையை வைத்து வழிபட்டனர்.  இவளை ஆதி மாரியம்மன் என்கின்றனர்.  இவள் தெற்கு நோக்கிக் கொண்டு தற்சமயம் சமயபுரத்தில் குடி கொண்டிருக்கும் மாரியம்மனைப் பார்த்த வண்ணம் காட்சி அளிப்பாள்.  இந்தக் கோயில் தற்போதைய சமயபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  சமயபுரம் மாரியம்மன் வருடத்தில் ஒரு முறை பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அல்லது சித்திரை மாதம் முதல் ஞாயிறு அன்று இனாம் சமயபுரத்தில் உள்ள தாயைப் பார்க்கச் செல்வதாகவும், அப்போது ஊர் மக்கள் சமயபுரம் மாரியம்மனைத் தங்கள் பெண்ணாகக் கருதிச் சீர் வரிசைகள் கொடுப்பதாகவும் ஐதீகம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் வைணவி தான் மாரியம்மன் என்றும் சொல்வதால் இந்தச் சீர் வரிசை ஒவ்வொரு வருஷமும் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்தும் செல்கிறது.  ஊர் மொத்தமுமே அவரவர் வீட்டுப் பெண்களுக்கு இந்தச் சமயம் திருவிழாச் சீர் கொடுத்து மகிழ்கிறது.  வெளியூரில் பெண்கள் வரமுடியாமல் இருந்தால் கூடக் குறைந்த பக்ஷத் தொகை மணியார்டர் மூலம் செலுத்துவிடுவார்களாம். இனாம் சமயபுரத்தின் ஆதி மாரியம்மன் தெற்கு நோக்கி சமயபுரம் மாரியம்மனான தன் பெண்ணைப் பார்த்த வண்ணம் இருக்கிறாள்.  ஆதி மாரியம்மன் நாகக்கன்னியுடன் இருப்பதால் அவளை வணங்கினால் திருமணத் தடைகள் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது.  சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே இவள் இங்கு அருளாட்சி புரிய வந்து விட்டதாகச் சொல்கின்றனர்.

ஆதி மாரியம்மன் வரலாறு:

சப்பாத்திக் கள்ளிச் செடிகள் சூழ்ந்த இந்தப்பிரதேசத்தில் குழந்தை வடிவில் அம்மன் கிடைத்ததாகச் சொல்கின்றனர்.  மாடு மேய்க்கும் இடையன் ஒருவனுக்குக் குழந்தையாக அம்மன் குரலை மட்டும் காட்டித் தான் இங்கே இருப்பதாக அடையாளம் காட்டி இருக்கிறாள்.  அந்தப் பகுதியைச் சுத்தம் செய்து பார்த்தால் கிடைத்த புற்றில் சக்தி தான் குடியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட ஊர் மக்கள், அங்கேயே திறந்த வெளியில் முதலில் கோயில் அமைத்து வழிபட்டிருக்கின்றனர்.  தைப்பூசம் சிறப்பாய்க் கொண்டாடப் பட்டிருக்கிறது. ஒரு முறை தைப்பூசத்திருவிழாவின் போது கொள்ளிடம் ஆற்றுக்கு அம்மனை எழுந்தருளச் செய்ய ஒரு வேப்ப மரத்தடியில் அம்மனை வைத்துவிட்டு இளைப்பாறினார்கள். வழிபாடுகள் முடிந்ததும் அம்மனை மீண்டும் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து பல்லக்கில் அம்மனைத் தூக்கி வைக்க முயன்றால் அம்மனை எடுக்க முடியவில்லையாம்.

அப்போது ஒரு சிறுமி வடிவில் அம்மன் வந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாய்ச் சொல்லி இருக்கிறாள்.  பின்னர் வேறு வழியில்லாமல் அம்மனை அங்கேயே விட்டுச் செல்ல அங்கிருந்த அம்மன் தான் பின்னால் விஜயநகர மன்னர்களால் கோயில் கட்டப்பட்டு வழிபடப்பட்டது என்றும் அதுதான் இப்போதிருக்கும் சமயபுரம் மாரியம்மன் என்றும் சொல்கின்றனர்.  மாரியம்மன் பிறந்த இடம் இனாம் சமயபுரம் என்கின்றனர்.  விஜயநகர மன்னர்கள் கண்ணனூர் மாரியம்மனுக்குக் கோயில் கட்டுகையில் இனாம் சமயபுரத்தில் இருந்து ஆதிமாரியம்மன் கோயில் மண்ணை எடுத்து வந்தே கட்டியதாகவும் கூறுகின்றனர்.  தற்சமயம் கண்ணனூரில் இருந்தாலும் பிறந்த இடம் சமயபுரம் என்பதால் சமயபுரம் மாரியம்மன் என்ற பெயரிலேயே இவள் அழைக்கப் படுகிறாள்.  இனாம் சமயபுரத்து அம்மன் ஆதி மாரியம்மன் என அழைக்கப் படுகிறாள்.

இந்த இனாம் சமயபுரத்திற்கு இப்போது போகவில்லை.  நேரம் இல்லை.  ஆனால் நாலைந்து முறை போயிருக்கிறேன்.  அந்த நினைவுகளும் திரட்டிய தகவல்களும் தான் எழுத உதவியது.  சமயபுரம் கோயில் வாசலில் படம் எடுக்கக் கூடக் காமிராவை வெளியே எடுக்க முடியலை.  கூட்டம் மொய்க்கிறது.  உள்ளே போனால் போதும்னு ஆயிட்டது.  25 ரூ சீட்டு எடுத்துத் தான் அம்மனைப் பார்க்க முடிந்தது.  இம்முறை குங்குமம், எலுமிச்சம்பழம் பிரசாதம் பாகுபாடின்றி அனைவருக்கும் தந்து கொண்டிருந்தார்கள்.  வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  இத்தலத்தில் வேண்டிக் கொள்வது நடக்கிறது என்பது ஓர் அதிசயமே.  அதுவும் அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருப்பவர்களுக்குச் செய்து கொள்ளும் பிரார்த்தனைகள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணமாகிறது என்பதும் அதிசயமே. இதற்கு அம்மனின் அருளும், கருணையும் தான் காரணம் எனலாம்.  (அப்பாதுரை கவனிக்க)

மாரியம்மன் வருவாள்...........

23 comments:

  1. அவ்வா இருந்தவரை வருடாவருடம் சமயபுரம் அழைத்துச்சென்று மாவிளக்கு வைத்து, உருவாரம், உப்பு மிளகு வாங்கி போடுவோம்.

    வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உசுறு வாங்கிவிடுவதாக அவ்வா நேர்ந்து கொள்வார்.

    ReplyDelete
  2. ஒரு முறையோ இரு முறையோ சென்றிருக்கிறேன்

    ReplyDelete
  3. நான் கேக்கலாம்னு நினைச்ச கேள்வியை இப்ப கேக்க முடியாத பண்ணிட்டீங்களே..

    ReplyDelete
  4. அழகான கோவில் அன்பான தெய்வம், அள்ளித்தான் தருகிறாள் ஆத்தா அன்பையும் பலனையும். மந அமைதிக்கும் நம் வசதிக்கும் தன இடத்தை பகிர்ந்துக்கற பெருந்தந்மைஉடையவள் அந்த ராணி. மகா ராணியோட இடம் இப்படியா வைக்கறது ? நன்றியா அணில் மாதிரியாவது கைங்கர்யம் பண்ணனும்னு ஜனகளுக்கு தோணாதா. பொங்கலை வைக்கறேன், மாவிளக்கு போடறேன் மொட்டை அடிச்சுக்கிரேன்னு ,பழக்குப்பையைப் போட்டு மாடு வர, இளநியும் சர்க்கரையும் கொட்டி ஈ மொய்க்க விறகும் சாம்பலும் அள்ளிக்கூத போடாம தண்ணியும் சாதமும் சாம்பலுமாய் போற இடமெல்லாம் கால வைக்க முடியாம அதுக்கும்மேல பொங்கலை சாப்பிட்டு அங்கேயே கை, வாய் கழுவி..... எனக்கு துக்கமா வந்தது அப்பிடியும் அவள் சிரித்துக்கொண்டு குங்குமம் தரும் கோலத்தை பாக்க.

    ReplyDelete
  5. வாங்க புதுகை, நாங்களும் பிரார்த்தனை இருந்தால் போடுவது உண்டு. ஆனால் வீட்டிலிருந்தே எல்லாம் தயார் செய்து எடுத்துட்டுப் போயிடுவோம். அங்கே போட்டதே திரும்பத் திரும்ப வரும். :)))))) வியாபாரம் ஆயிடுச்சே!

    ReplyDelete
  6. வாங்க எல்கே, நான் நிறையத் தரம் போயிருக்கேன்.

    ReplyDelete
  7. அப்பாதுரை, உங்க கேள்விக்கு வெயிட்டிங்க்க்க்க்க்க்க். தாராளமாய்க் கேளுங்க. :))))

    ReplyDelete
  8. ஜெயஶ்ரீ, இப்போக் கொஞ்சம் சுத்தம் கடைப்பிடிக்கிறாங்கனு நினைக்கிறேன். முன்னை மாதிரிக் குப்பைகள் பார்க்க முடியலை. ஒரு காலத்தில் இங்கே மாவிளக்குப் போட மதுரையில் இருந்து வந்தப்போ காலங்கார்த்தாலே குளத்தில் குளிச்சுட்டு, அங்கேயே இருந்த உரலில் அம்மா மாவிடிச்சதும், நாங்கல்லாம் பிரகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்ததையும் இப்போ நினைச்சாக்கூட ஆச்சரியமா இருக்கு. அப்போல்லாம் அவ்வளவு கூட்டமெல்லாம் கிடையாது. எங்களைக் கீழே படுக்க வைச்சு வயிற்றில் மாவிளக்குப் போட்ட நினைவு. இப்போ அதெல்லாம் முடியுமானே சந்தேகம் தான். என்றாலும் தரிசனம் செய்வது சாதாரண நாட்களில் எனில் பரவாயில்லை. நல்ல தரிசனம் கிடைக்கிறது.

    ReplyDelete
  9. அம்மனுக்கு இல்லாத மவுசா...! தஞ்சாவூர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தஞ்சையிலிருந்து சைக்கிளிலேயே சென்று வந்துள்ளேன். முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன் இருக்கலாம்! எத்தனை வகை வரலாற்றுக் கதைகள்?!

    ReplyDelete
  10. ஸ்ரீராம், தஞ்சையிலே புன்னைநல்லூர் மாரியம்மன் இல்லையோ? சமயபுரம் திருச்சிக்கு அருகே! கொஞ்சம் பிசி அல்லது குழப்பம்???? :)))))

    ReplyDelete
  11. ரொம்பவே குழப்பம்.... படிக்கும்போதும் அதே ஞாபகத்தில்தான் படித்தேன்! ஹையோடா.....! :))))))

    என்ன பாசிட்டிவ் செய்திகள் பக்கம் காணோம்?

    ReplyDelete
  12. மறு வரவுக்கு நன்றி ஸ்ரீராம், போஸ்ட் போட்டிருக்கீங்களா? எனக்கு அப்டேட் ஆகலை போல! சில சமயம் இப்படி! பார்க்கிறேன். :)))))

    ReplyDelete
  13. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு தவிர்த்து மற்ற மூன்று நாட்களில் அவ்வளவு கூட்டம் இருப்பதில்லை. அப்போது சென்றால் சற்றே சுலபமாக தரிசிக்க முடிகிறது. விரிவான தகவல்களுடன் உங்கள் பகிர்வு நன்று...

    ReplyDelete
  14. தலயாத்திரையில் தரிசிக்க வேண்டும் என நினைத்த இடம் கிடைக்கவில்லை.

    உங்கள் விரிவான பகிர்வின் மூலம் தலவரலாறுகள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  15. Jayashree யின் கமெந்ட் எல்லாக் கோவில்களுக்கும் பொருந்துமென்று தோன்றுகிறது. பக்தி என்று வந்துவிட்டு கோவில் சுற்றுப்புறத்தை நாசம் செய்யும் மக்கள் தான் அதிகம். வருத்தமும் எரிச்சலும் தோன்றுகிறது.

    வயிற்றில் மாவிளக்கா? சுடாதோ?

    ஹிஹி.. கேள்வியை எப்படியோ தெரிஞ்சுகிட்டு அதான் பதிலைச் சொல்லிட்டீங்களே? அம்மன் அருளாலே எல்லாம் நடக்கிறதுனு. ['அம்மன் நிச்சயமா வருவா'னு ஒரு வரியைப் படிச்ச மாதிரி தோணிச்சு.. அந்த வரியைக் காணோமே?]

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  17. வாங்க மாதேவி, சமயபுரம் மாரியம்மன் எல்லாரையும் ஈர்க்கிறாள் என்பது உண்மை. :)))))

    ReplyDelete
  18. வாங்க அப்பாதுரை, மறு வரவுக்கு நன்றி. நம் தமிழ் நாட்டு ஜனங்களுக்கு சுத்தம் என்றால் குப்பையைக் கண்ட இடத்திலும் போடுவது தான். அதைக் கண்டித்தால் வாங்கிக் கட்டிக்க வேண்டி இருக்கு. :((((( அவங்களாத் திருந்துவாங்களானு பார்த்தா! எங்கே! முடியலை. கொஞ்சம் கடுமையான சட்ட திட்டங்கள் இருந்தால் தான் சரிப்பட்டு வரும். இப்போது சில கோயில்களில் கடுமையாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்றாலும் இன்னமும் முழுமையாக முன்னேற்றம் இல்லை தான். கூடியவரை நாங்கள் இதை ஒரு பிரசாரமாகவே செய்து வருகிறோம். கேலி செய்வதையும் பொருட்படுத்தாமலேயே! :))))))

    ReplyDelete
  19. அம்மன் நிச்சயமா வருவா'னு ஒரு வரியைப் படிச்ச மாதிரி தோணிச்சு.. அந்த வரியைக் காணோமே?]//

    அப்படியா? அப்படி ஒரு வரி எழுதினேனானு நினைவில் இல்லை. டாகுமென்டில் சரி பார்க்கிறேன். ஆனால் எதையும் டெலீட் செய்யவில்லை. :))))))))

    ReplyDelete
  20. ச‌ம‌ய‌புர‌ம் ப‌ற்றிய‌றிந்த‌துண்டு.ஆதிமாரிய‌ம்ம‌ன் இருக்கும் இனாம் ச‌ம‌ய‌புர‌ம் ப‌ற்றி அருமையான‌ த‌க‌வ‌ல்க‌ள்.

    ReplyDelete
  21. வயிற்றில் மாவிளக்கா? சுடாதோ?

    @அப்பாதுரை, வயிற்றில் மாவை வைத்து விளக்கு ஏத்த மாட்டாங்க. :)))) ஒரு தாம்பாளத்தில் இலையைப் போட்டு அதில் தான் மாவிளக்கு ஏத்தி இருப்பாங்க. அந்தத் தாம்பாளத்தை அப்படியே சுவாமிக்கு முன்னால் படுக்கச் சொல்லி வயிற்றுக்கு நேர்ந்து கொண்டால் வயிற்றில், மார்பு என்றால் மார்பு என வைப்பார்கள். மலை ஏறும்வரை அது இருக்கும். :)))) அன்னிக்குச் சரியாக் கவனிக்கலை, இந்தக் கேள்வியை.

    ReplyDelete
  22. வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க நிலாமகள். உங்க கமென்டைக் கவனிக்கவே இல்லை, பதிலளிக்கத் தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  23. வயிற்றில் மாவிளக்கு ஏற்றினால் சுடாது துரை.
    எங்க அம்மாவுக்கு திருப்பதியில் ஏற்றி பார்த்திருக்கேன்.எல்லாக் கோவில்களும் சுலபமாப் போய் வர மாதிரி இருந்தது. இப்ப மாதிரி இல்லை.

    ReplyDelete