எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 27, 2013

ஆதி சமயபுரத்திலும், குணசீலத்திலும்!


ஆதி சமயபுரம் கோயிலின் நுழைவாயில்.

மாகாளிக்குடியை அடுத்து நாங்கள் சென்றது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம்.  இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். சமயபுரம் மாரியம்மன் இங்கே தான் பிறந்தாள் எனவும் அவளுக்கு இது தாய் வீடு எனவும் சொல்கின்றனர்.  இந்த அம்மனும் சமயபுரத்தை நோக்கிய வண்ணமே அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.  இங்கே அம்மனின் சக்தி மிகவும் அதிகம் என்பதால் படங்கள் எடுக்கத் தடை.  மூலக் கோயில் இன்னமும் ஓட்டுக்கூரை போட்ட கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது.  அங்கே தான் விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுக்கின்றனர்.  இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்ட வேண்டிப் பலமுறை முயன்றிருக்கின்றனர்.  ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்கல் ஏற்படப் பின்னர் ப்ரச்னம் கேட்டதில் இங்கே புதுமை வேண்டாம் என அம்மனே சொல்லி விட்டதாகவும், அபிஷேஹ அர்ச்சனைகளுக்குப் பக்கத்திலே ஒரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து கொள்ளும்படியும் உத்தரவு கிடைத்துள்ளது.  அதன் பேரில் இதை ஒட்டியே கொஞ்சம் நவீனமாகப் புதியதொரு சந்நிதியில் இந்த அம்மனின் சக்தியில் மறுபாதி எனச் சொல்லும் வண்ணம் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.  இவளுக்கே அபிஷேஹ ஆராதனைகள் நடைபெறுகின்றன.


கோயிலைச் சுற்றியுள்ள பகுதி.


சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதலின் போது இங்கே ஒவ்வொரு வருடமும் வருவதாகவும், அப்போது ஊர் மக்கள் உட்பட அனைவரும் பிறந்த வீட்டுச் சீர் அம்மனுக்குக் கொடுக்கின்றனர் என்றும் சொல்கின்றனர்.  இங்கே தரிசனம் முடித்துக் கொண்டு அடுத்து நாங்கள் சென்ற கோயில் குணசீலம்.

குணசீலம் பெருமாள் கோயிலில் பெருமாளே பிரதானமாக இருப்பதால் தாயார் சந்நிதியோ, பரிவார மூர்த்திகளோ கிடையாது.  நான் முதன் முதலில் அறுபதுகளில் இந்தக் கோயிலுக்கு வந்த சமயம் பிரகாரங்களில் மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருப்பார்கள்.  பலரையும் காலில் சங்கிலி போட்டுக் கட்டி இருப்பார்கள்.  இப்போது அவர்களுக்கென தனி விடுதி ஏற்படுத்தி விட்டிருப்பதால் அவர்கள் விடுதியில் இருக்கின்றனர்.  அவர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட நேரம் ஏற்படுத்தி உள்ளார்கள்.  அந்த நேரம் வந்து தரிசனம் செய்துவிட்டு அபிஷேஹ தீர்த்தம் தெளிக்கப்பட்டு அவர்கள் திரும்பிச் செல்வார்கள்.  அதையும் என் தம்பியோடு சென்றபோது பார்த்தோம்.  மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் சென்றனர்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கருடசேவை உண்டு.  இங்கே மூலஸ்தான விமானத்தின் பெயர் திரிதளம் என்பதாகும்.  கோயிலின் நுழைவாயிலில் ஒரு தீபஸ்தம்பம் காணப்படுகிறது.  இதில் ஆஞ்சநேயர் காணப்படுகிறார்.  கொடிமரத்தைச் சுற்றி கோவர்த்தன  கிருஷ்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணன், நர்த்தன கிருஷ்ணன் ஆகியோர் காணப்படுகின்றனர்.  கோஷ்டத்தில் நவநீத கிருஷ்ணன், வராஹர், நரசிம்மர், யக்ஞ நாராயணன் ஆகியோர் உள்ளனர்.   வைகாநஸ ஆகமத்தைத் தோற்றுவித்த வைகானச ரிஷிக்கும் சந்நிதி உண்டு.  ஆவணி மாதம் திருவோண தினத்தில் வைகானசர் புறப்பாடு நடக்கும் என்கின்றனர்.  இந்தக் கோயிலை ஒட்டியே காவிரி காணப்படுகிறாள். கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தம் பாபவிநாச தீர்த்தம் எனப்படுகிறது.

தாயார் சந்நிதி இல்லாவிட்டாலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காணப்படுகிறார்.  இவர் பெயர் ஸ்ரீநிவாசர்.  சாளக்கிராமத்தால் ஆன மாலையுடன் கையில் தங்கச் செங்கோலுடன் உள்ளார்.  மூலவருக்குத் தினசரி திருமஞ்சனம் செய்வதாய்ச் சொல்கின்றனர்.  இந்த அபிஷேஹ தீர்த்தமே மன நோயாளிகளுக்கான மருந்தாகும்.  இத்துடன் சுவாமிக்கு அபிஷேஹம் செய்த சந்தனமும் தருவார்கள்.  ஒரு சில பெருமாள் கோயில்களில் காணப்படுவது போல் இங்கும் உத்தராயன, தக்ஷிணாயன வாசல்கள் உண்டு.  குணசீலர் என்பவருக்கு சுவாமி காட்சி தந்த நிகழ்வு புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறுகிறது.


திருப்பதி சென்று வந்த குணசீலர் என்னும் பக்தர் காவிரிக்கரையில் இருந்த தன் ஆசிரமத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்யவேண்டும் என விரும்பினார்.  இதற்காகத் தவம் இருந்தார்.  அப்படியே இவருக்குக் காட்சி கொடுத்த பெருமாளும் இங்கேயே எழுந்தருளினார்.  ஊரும் அந்த ரிஷியின் பெயரிலேயே குணசீலம் என அழைக்கப்பட்டது. குணசீலர் தன் குருவுக்குப் பணிவிடை செய்யச் சென்றபோது பெருமாளைக் கவனிக்க ஆளே இல்லாமல் புற்று மூடிவிட்டது. இந்தப் பகுதியும் காடாக மாறிவிட்டது. ஞானவர்மன் என்னும் மன்னன் காலத்தில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களின் பால் தொடர்ந்து வற்றி மறைய, பசுக்களின் மூலம் இங்கே ஏதோ அதிசயம் என்பதை அறிந்த மன்னன் அதைக் காண வந்தான்.  அப்போது ஒலித்த அசரீரி மூலம் இங்கே பெருமாள்  குடிகொண்டிருப்பதை உணர்ந்த மன்னன் சிலையைக் கண்டெடுத்துக் கோயிலையும் எழுப்பினான்.  பெருமாளுக்குப் பிரசன்ன வெங்கடாஜலபதி என்னும் பெயரும் சூட்டப் பட்டது.

Monday, February 25, 2013

கெளரவமா காக்கிறோம்? ஆடம்பரம் செய்கிறோம்!

ஏற்கெனவே என் கல்யாணம் எப்படி நடந்ததுனு எழுதி இருக்கேன்.  அந்தக் கால கட்டத்திலேயே மாற்றங்கள் வந்துவிட்டதாய்ப் பேசிப்பாங்க.  இப்போ இன்று எங்கள் ப்ளாகின் ஆ"சிரி"யர் திரு கெளதமன் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு பதிவு கெளரவம் காத்தல்.  கெளரவம் காக்கப்படுகிறதா அல்லது உள்ளுக்குள்ளாக பயந்து கொண்டே கெளரவம் காக்கப்படுகிறதாய் நினைக்கிறோமா?  இன்றைய கல்யாணங்களில் எத்தனை எத்தனை ஆடம்பரச் செலவுகள்! :( தவிர்க்க முடியாதா? அல்லது இது தான் கெளரவம் என நினைக்கிறோமா?

எங்கள் ப்ளாக் பதிவில் பத்திரிகைக்கு நாற்பது ரூபாய்னு போட்டிருக்காங்க. அதுவும் தப்பு, அல்லது அவருக்கு உள்ள நிலைமை இன்னமும் புரியலைனு நினைக்கிறேன்.  ஒரு பத்திரிகை நூறு ரூபாயில் இருந்து இருநூறு ரூபாய் வரை ஆகிறது சிலருக்கு.  ஏற்கெனவே திருமணம் குறித்த சில முக்கியமான தகவல்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கு.  அதைப்  போகப் போகப் பார்த்துக்கலாம். இப்போதைக்கு இன்றைய திருமணங்கள் ஆடம்பரம் நிறைந்தவையே. பத்தாயிரம் ரூபாய்க்குப் பட்டுப் புடைவை (ஒன்றே ஒன்றுக்கான விலை)  எடுத்தாலும் அது நல்ல பட்டுனு உறுதி சொல்ல முடியாது. :)))) அதோடு இப்போது இருபத்தையாயிரத்துக்கும் மேலே பட்டுகள் டிசைன் செய்து வருகின்றன.  அதற்கேற்ற விளம்பரங்களும் வருகின்றன.  அவை எல்லாம் பட்டோ இல்லையோ, வாங்கித் தள்ளுகிறோம்.

அடுத்து முக்கிய உறவினர்க்கு வைச்சுக்கொடுக்கிறது என்ற சம்பிரதாயம்.  அது இரண்டு சூட்கேஸ் நிறைய வாங்கி இருப்பாங்க.  பை, பையாக எல்லாருக்கும் கொடுப்பாங்க. வாங்கிண்டவங்க சந்தோஷமா இருப்பாங்களானா அது இல்லை.  எங்க வீட்டுக் கல்யாணங்களிலேயே பார்த்திருக்கேன். பலருக்கும் குறைதான். அடுத்து மொய் வைக்கிறவங்களுக்குத் திரும்ப அளிக்கும் பரிசுப் பொருள்.  அதுவானும் இப்போதெல்லாம் உபயோகமாக டப்பர்வேர்,  காய்கள் வைக்கும் டப்பா, டிபன் டப்பா, அல்லது சின்னச் சின்ன விக்ரஹங்கள் எனக் கொடுக்கிறாங்க. ஆனால் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாறாமல் ரவிக்கைத் துணி தான் வாங்கிக் கொடுக்கிறாங்க.  என்னைப் பொறுத்தவரை 40ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும்(அதுக்குக் குறைச்சு ரவிக்கைத் துணியைப் பார்க்கலை) தைத்துப் போட்டுக் கொண்டுவிடுவேன்.  கொடுக்கிறவங்க நம்மளுக்காகக் கொடுக்கையிலே அதைப் பயன்படுத்த வேண்டாமா?  ஆனால் பெரும்பாலனவர்கள் பயன்படுத்துவதில்லை. அதிலும் ஒரு குறை.  இதை எல்லாம் தவிர்க்கலாம்.

இம்மாதிரிப் பல ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன.  ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மஹாராஷ்டிரா, குஜராத்தில் பெண், பிள்ளை இரு வீட்டுக்காரங்களும் திருமணச் செலவைப் பகிர்ந்துக்கணும்.  அதே போல் பெண்ணுக்கு மொய் வைத்தாலும், பிள்ளைக்கு மொய் வைத்தாலும் ஒரே நபர் தான் வசூல் செய்வார்.  வசூல் ஆன பணத்தில் அவங்க குடித்தனத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துடுவாங்க.  சாப்பாடு மிக மிக எளிமையானதாய் இருக்கும். அதிலும் மஹாராஷ்டிராவில் பெண் வீட்டில் ஐம்பது பேர் எனில் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர்தான் வரலாம்.  கூடுதலாக ஒருத்தர் வந்தால் பிள்ளை வீட்டில் தனியாகக் கொடுக்கணும்.  இப்போது எப்படினு தெரியலை.  

Sunday, February 24, 2013

அதாண்டா,இதாண்டா,போட்டி போட வந்துட்டோமே!:)

ஹிஹிஹி,அருணாசலம் படம் என்னோடஆன்மீகப் பயணம் பக்கத்திலே இருந்து எடுத்தேன்.  இந்தப் படம் என்னோட பிகாசா ஆல்பத்திலே கணினியிலே இருக்கு. நான் மடிக்கணினியில் எழுதுவதால் பதிவில் இருந்தே சுட்டுப்போட்டுட்டேன். எப்படியோ படம் என்னோடது தானே! எங்கள் ப்ளாக் போடற படத்துக்குப் போட்டியா இதுவரைக்கும் வேறு கிடைச்சுட்டு வருது. பார்ப்போம், அடுத்த வாரத்தில் இருந்து! :))))))

நேத்திக்கு என்னோட  நீண்ட நாள் நண்பரைச்சந்தித்தேன்.  நேத்திக்கு மதுரை போனோம்.  மாட்டுத்தாவணியில் இருந்து நேரே மீனாக்ஷியைத் தரிசிக்கச் சென்றோம்.  எப்போதும் தெற்கு கோபுர வழியாச் செல்வோம்.  இல்லைனா மேலகோபுரம்வழி. நேத்து வடக்கு கோபுரம் வழி சென்றோம்.   ஹைதை குண்டுவெடிப்பு எதிரொலி சோதனை மேல் சோதனை.  உள்ளே மீனாக்ஷி ஆனந்தமாக  ஸஹஸ்ரநாம அர்ச்சனாதிகள்  முடிந்து உச்சிக்காலத்துக்குத் தயாராகக்காத்திருந்தாள்.  நிதானமாகத் தரிசனம்செய்து கொண்டோம்.  பின்னர் சுவாமி சந்நிதிக்கு வந்து அங்கேயும் நன்றாக தரிசனம் முடித்துக் கொண்டு நேரு நகரில் என் அண்ணா வீடு செல்கையில்வடக்கு ஆவணிமூல வீதி, வடக்குமாசி வீதி,  மேல மாசிவீதி,சம்பந்த மூர்த்தித்தெரு வழியே ஆட்டோ செல்கையில், ராமாயணச் சாவடி கடந்ததைக் கவனிக்கவில்லை.  அல்லது இப்போ இல்லையா? ஒரு மண்டபம் இடிபாடுகளில் இருந்தது.  அதான் ராமாயணச் சாவடியா? :(   வடக்குக் கிருஷ்ணன் கோயிலின் படிகள் தரிசனம் கிடைத்தது.   வடக்கு ஆவணி  மூலவீதியில்  சென்ட்ரல் மார்க்கெட் இருந்த இடம் இப்போது காலி மைதானமாக உள்ளது.   அங்கே எத்தனை முறை பூக்கள் வாங்கப் போயிருக்கோம் என நினைத்துப் பார்த்தேன்.  அங்கே உள்ள பொன்னு ஐயங்கார் ஆரம்பப்பள்ளியைப்  பார்க்க மறந்து போச்சு!  அங்கே தானே ஐந்து வகுப்பு வரை படிச்சிருக்கேன்.

அதுக்கு அப்புறமா தானப்ப முதலி அக்ரஹாரம் செல்லும் வழியை ரங்க்ஸுக்குக் காட்டினேன். கொஞ்ச தூரத்தில் வந்துட்டார் நம்ம நண்பர். ஆட்டோவை விட்டு இறங்காமலேயே  அவரைப் பிரார்த்தித்துக்கொண்டேன். எத்தனை,எத்தனை பரிக்ஷைகள்!  பரிக்ஷை எழுதிய இடம் வேறாக இருந்தால் கூட கிளம்பும் முன்னர் வந்து இவரைப்பார்த்துவிட்டுப் பேனாவை  அவர் பாதத்தில் வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டு விபூதி வாங்கிக்கொண்டு திரும்பி வருவது வழக்கம். எனக்கோ, அண்ணா,தம்பிக்கோ சாப்பாடு சாப்பிட முடியாமல் வாந்தி, வயிற்றுக் கோளாறு இருந்தால் அம்மா ஒரு கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு இந்தப் பிள்ளையாரை தினம் தினம் வழிபடும் பூசாரியிடம் கொடுத்து மந்திரித்து வாங்கி வரச் சொல்லுவாள்.  அப்படியே செய்வோம்.  அவர் என்ன மந்திரிப்பார் என்பதெல்லாம் தெரியாது. ஆனால்  அதைத் தான் முதலில் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிடுவோம்.  அவ்வளவு ஏன்? என் பெண்ணுக்கு திடீர்னு பால் சாப்பிட முடியாமல் அலர்ஜி வந்தப்போ கூட அம்மாவே பாட்டிலில் பாலைஊற்றிக் கொண்டு இங்கே வந்து மந்திரித்து எடுத்து வந்து கொடுத்திருக்காங்க.  எல்லாம் நினைவில் வந்தது.

சந்திரா என்ற பெயரில் இருந்த பழனி தியேட்டர்  இருந்த இடம் இப்போது வேறு ஏதோ!  இந்தச்சந்திரா தியேட்டரில் தான் பார்த்திபன் கனவு படம் பார்த்தேன்.   இங்கே எஸ்.பாலசந்தரின் (வீணை பாலசந்தர்)  "பொம்மை"  படம் ஓடினப்போ பலமுறை போயும்  டிக்கெட்டே கிடைக்காமல்  கடைசி வரை படம் பார்க்கவே முடியலை. :(  இன்று வரையும் பார்த்ததில்லை!  அப்போது கூட்டம் தாங்காமல் ஜனங்கள் வெளியே எல்லாம் நிற்பார்கள்.  போக்குவரத்தே ஸ்தம்பிக்கும்.  அதே போல் சென்ட்ரல்  தியேட்டரில்  புதுப்படம் வந்தால்  அங்கே கூட்டம் கூடி  இப்படித்தான் நடக்கவே முடியாதபடி இருக்கும்.   ஏற்கெனவே மேல கோபுர வாசல் நெரிசல் தாங்காது. பொதுவாக நான் பார்த்த இடங்கள் எதுவும் அதிகமாய் மாற்றம் தெரியவில்லை என்றாலும்           முக்கிய வீதிகளில் கட்டிடங்கள் எல்லாம் பழைய மாதிரியில் இருந்து மாறி உள்ளன.   ஆனால்  இன்னமும் மாசி வீதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.  ஆவணி மூல வீதியில் தான், குறிப்பாக மேல ஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதியில் தான் குடியிருப்புகள் அனைத்தும் வணிக வளாகங்களாகி விட்டதாய்த் தெரிய வருகிறது.  இன்னும் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கலை.  அதுவும் ஒரு நாள் போகணும். 

Thursday, February 21, 2013

உஜ்ஜையினி மஹாகாளி கோயிலில்


நுழைவாயில் இது தான்


மூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை.  மாறாக ரிஷபம் காணப்படுகிறது.  வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர்.  இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார்.  மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.  மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம்.

கோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம்.  எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம்.  சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது.  ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார்.  இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம்.  கோயிலின் குருக்கள் தீபாராதனை காட்டி தரிசனம் செய்வித்தார்.

இந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது.  விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது.
வேதாளமும், சுளுவனும்


மேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன.  ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர்.  முதல்முறை இந்தக் கோயிலுக்குச் சென்ற போது ஒரு முருங்கை மரம் இருந்தது.  தற்சமயம் இல்லை.  வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது.  சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர்.  இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.

இவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார்.  கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.  இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர்.

சந்தான கிருஷ்ணன்

 வேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார்.  இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை.  விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.

சங்கிலிக் கருப்பு

இவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான்.

மதுரை வீரன் மனைவியருடன்

அம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர்.  தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம்.  இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது.  நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.


இக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.  நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம்.  கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது.  இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆணகளே இறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.

Wednesday, February 20, 2013

உங்க ஊரில் மழை பெய்யணுமா?

உங்க ஊரில் மழை பெய்யணுமா?

.  சஹஸ்ர காயத்ரி ஹோமமும் தேவையில்லை; தண்ணியே இல்லாத நதியில் நட்ட நடு மத்தியானம் நின்னுண்டும் வருண ஜபம் செய்ய வேண்டாம்.  அல்லது மழை பெய்யறதுக்குனு பிரார்த்தனைகள், அபிஷேஹங்கள், மழையை வரவழைக்கும் அமிர்த வர்ஷிணி ராகத்தை விடாமல் பாடறது, அல்லது வாசிக்கிறது எதுவும் வேண்டாம்.  நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
















































என்னை அழைத்து கருவடாம் போடச் சொல்லுங்கள்.  குறைந்த பட்சமாக சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தல், அவரை, கொத்தவரை வத்தல் போன்றவையாவது போட அணுகுங்கள்.  இவற்றை வெந்நீரில் போட்டதுமே வானம் கறுக்க நான் உத்தரவாதம்.  இல்லையா, அரை கிலோ அரிசியையோ, அரை கிலோ ஜவ்வரிசியையோ கருவடாம் போடக் கிளறினால் போதுமானது.  நீங்க அன்னிக்குப் பூரா பெய்யும் மழையைப் பார்த்து ஆனந்தப் படுவதா, அல்லது வெயிலில் காயாத கருவடாத்தைப் பார்த்து வருந்துவதா எனத் தவிப்புக்கு உள்ளாவீர்கள்.  எதையும் கண்டு கலங்காத மனம் எனில் கிளறிய மாவைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு, அல்லது மாவு கிளறும்போதே மழை வரும் போல் தெரிந்ததும், அரைத்த மாவை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு மறுநாள் கிளறும் மன உறுதியும் தேவை.  இவற்றுக்கெல்லாம் நீங்கள் தரவேண்டிய கட்டணம் அதிகமில்லை.

மழை இல்லாட்டியும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையோடு கூடிய மேக மூட்டத்துக்கு உத்தரவாதம்.  வானத்தின் நிலைக்கு ஏற்பக் கட்டணம் வசூலிக்கப்படும்.   எந்த ஊராக இருந்தாலும் மழை இல்லாட்டியும் மேக மூட்டத்துக்கு உத்தரவாதம்.

Tuesday, February 19, 2013

பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா!

தாத்தாவுக்கு 158-ஆவது பிறந்த நாள்.  பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும் தாத்தா.  கூடியவரை தமிழிலேயே பேசவும், தமிழிலேயே எழுதவும் உங்கள் ஆசிகளைக் கோருகிறேன்.  ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசவும், எழுதவும் ஆசி கூறுங்கள்.  தாத்தா பற்றிய பகிர்வு ஒன்றாவது பகிர்ந்துக்க ஆசை தான்.  ஆனால் எழுத நேரம் இல்லை.  தாத்தாவின் நினைவு நாளுக்குள்ளாவது முடியுமானு பார்க்கிறேன்.

Monday, February 18, 2013

வியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்காங்க!

சாயந்திரம்  மின்சாரம் இல்லாத நேரம்.  புத்தகம் படிக்கையில் கைபேசி அழைப்பு.  எடுத்துக் கேட்டால் எதிர்பாரா இடத்தில் இருந்து.  நண்பர் காளைராஜன் காரைக்குடியில் இருந்து அழைத்தார்.  "தலைக்கு மேலே சந்திரனும், வியாழனும் இருக்காங்க.  உடனே போய்ப் பாருங்க!" னு சொன்னார்.  உடனே நாங்க ரெண்டு பேரும் மொட்டை மாடிக்குப் போனோம்.  சந்திரன் அருகே வியாழன்.  சற்றுத் தள்ளி ரோகிணி நக்ஷத்திரம்.

பெரிசு பண்ண முயற்சித்தேன். முடியலை;  அதாவது எனக்கு வரலை.  ரேவதி சொன்னாப்போல் தான் முயன்றேன்.  வரலை.  நீங்க பெரிசு பண்ணிப் பார்த்துக்குங்க. :))))))

உஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா!


சென்ற மாதம் சென்ற இந்தப் பயணத்தில் நாங்கள் முதல் நாள் ரங்கநாதரைத் தரிசித்துவிட்டுத் துளசிப் பிரசாதமும் கிடைத்தது என்பதை ஏற்கெனவே சொன்னேன்.  மறுநாள் காலை முதலில் காட்டழகிய சிங்கத்தைத் தரிசித்தோம்.  அருமையான கோயில்.  ஏற்கெனவே  இந்தக் கோயில் குறித்துப் பதிவு போட்டுவிட்டேன்.  அடுத்து நாங்கள் சென்றது சமயபுரம்.  சமயபுரம் குறித்தும் ஏற்கெனவே எழுதிவிட்டேன்.  ஆனால் இம்முறை சென்ற முறை போல் எல்லாம் இல்லாமல் உள்ளே நுழைய 25 ரூபாய் டிக்கெட் எடுத்தும் சுற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்றிப் போக வேண்டி வந்தது.  முன்னெல்லாம் 25 ரூ டிக்கெட்டுக்கு நேரே உள்ளே செல்லலாம்.  ஆகஸ்ட் மாதம் சென்றபோது கூட அப்படித் தான் போனோம்.  அதுக்கப்புறமா மாத்திட்டாங்களாம்.  திருப்பதி தரிசனம் போல வளைந்து வளைந்து செல்கிறது பாதை.  பாதை சரியாகவும் இல்லை.  ஒரே கிராவலாய்க் கொட்டி இருக்காங்க.  சின்னதாய்க் கடுகு பட்டாலே துடித்துப் போகும் எனக்கு அந்தப் பாதையில் நிற்க, நடக்க என ஒரு வித்தையே செய்ய வேண்டியாச்சு.  எல்லாருமே கஷ்டப் பட்டோம். குறைந்தது ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றினதும் தான் சந்நிதிக்கு நேரே உள்ள மண்டபத்துக்கே வர முடிந்தது.

அங்கே தரிசனம் முடிச்சுட்டு நேரே இனாம் சமயபுரம்  மற்றும் உச்சிமாகாளி கோயில் இருக்கும் மாகாளிபுரம் போக ஆயத்தமானோம்.  இம்முறை வந்த விருந்தாளிகளிடம் ஏற்கெனவே நான் இந்த ஆதி சமயபுரம் குறித்தும், உஜ்ஜையினி மாகாளி  குறித்தும் வேதாளம் குறித்தும் சொல்லி இருந்தேன்.  ஆகையால் நம்மவரால் வாய் திறக்க முடியலை.  ஹிஹிஹி.  முதலில் நாங்கள் சென்றது  மாகாளிபுரம் என்னும் மாகாளிக்குடி.   சமயபுரம் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இது இருக்கிறது.  முதலில் இந்தக் கோயிலுக்குத் தொண்ணூறுகளில் என் தம்பியோடு சென்றோம்.  அதன் பின்னர் இருமுறை நாங்க இரண்டு பேரும் போயிருக்கோம்.  நாங்க போனதைப் பதிவாயும் போட்டிருக்கேன்.  படங்கள் போடவில்லை.  இந்தக் கோயிலில் தான் நம்ம விக்கிரமாதித்தன் வழிபட்டானாம்.  காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.




விக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி.  காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா?  அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில்.  அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள்.  அர்த்த நாரீஸ்வர வடிவமும் விசித்திரமாகக் காணப்படுகிறது.  வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம்.  அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே  ஏக கலசம் காணப்படும்.  ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.

Sunday, February 17, 2013

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! கவலையே படமாட்டோமுல்ல!

எங்களுக்கு உடம்பு சரியாயில்லைனு தெரிஞ்சு வைச்சுட்டு மின் வாரியம் ராத்திரி கரெக்டா ஒன்பது மணிக்கு மின்சாரத்தை நிறுத்திடும்.  அப்போத் தானே சீக்கிரமாப் படுத்துப்பீங்க?  காலம்பர சீக்கிரம் எழுந்துக்க வேண்டாமா?  ஆகவே ராத்திரிப் பூராவும்  ஒரு மணிக்கு ஒருதரம் தான் மின்சாரம் வரும்.  காலம்பர சீக்கிரமா எழுந்துக்கணுமேனு 3 மணிக்கு மின்சாரத்தை நிறுத்திட்டு நாலு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க.  அப்படியும் தூங்கினீங்கன்னா, நீங்க எந்த வேலையும் செய்துக்க முடியாதுனு சொல்லாமல் சொல்லுவாங்க.  எப்படீங்கறீங்களா?  காலையிலே சீக்கிரம் எழுந்து வேலைகளைக் கவனிக்கலைனா அப்புறமா ஆறு மணியிலிருந்து ஒன்பது அல்லது பத்து வரை எதுவும் முடியாது.

அந்த இரண்டு மணி நேரத்துக்குள்ளாகக் காலை ஆகாரம், காலைச் சமையல் போன்றவற்றுக்குத் தயார் செய்துக்கணும்.  பள்ளிக்குப் போற குழந்தைங்க இருந்தால் அவங்களுக்குக் காலை ஆகாரத்துக்குச் சட்னி கொடுக்க நினைச்சா நீங்க சட்னி ஆயிடுவீங்க.  ஆறு மணிக்குள்ளாக அதை முடிவு செய்து அரைச்சு வைச்சுடணும். ஆறு மணிக்கே மின்சாரத்தை நிறுத்திச் சில நாட்கள் எட்டு மணிக்கு, பல நாட்கள் ஒன்பது மணிக்கு, மற்ற நாட்கள் பத்து மணிக்குனு மின்சாரத்தைக் கொடுப்பாங்க.  அப்படியே எட்டு மணிக்கோ, ஒன்பதுக்கோ மின்சாரம் வந்து நீங்க கிரைண்டரில் அரிசி, உளுந்து போட்டிருந்தால், சரியாப் பாதி அரைக்கையில் மின்சாரம் நிக்கும்.  இல்லாட்டித் துணி தோய்க்கப் போட்டிருந்தால் தோய்ச்சு முடிச்சு ஸ்பின்னரில் போடும் சமயம் மின்சாரம் இருக்காது.

ஏன்னு கேட்கிறீங்களா?  எங்கேயானும் சமையலை முடிச்சுட்டுச் சாப்பிட்டுவிட்டு அக்கடானு போய்ப் படுத்தீங்கன்னா?  உங்களை எந்நேரமும் சுறுசுறுப்பாக வைக்க இந்த மின்சாரமும் மின்வாரியக் காரங்களும் படற கஷ்டம் யாருக்குப் புரியும்?  காலம்பர எட்டு மணிக்கு மின்சாரம் வந்தால் அப்பாடா எப்படியும் பத்து மணி வரைக்கும் இருக்கும்னு ஆறுதல் பட்டுக்க முடியாது.  சமையலில் பாதி அரைக்க, கரைக்கனு செய்யும்போது மின்சாரம் போகலாம்.  ஆகவே காலங்கார்த்தாலே எழுந்துக்கறச்சே அரைச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி அரைச்சாலும் எப்படியோ தெரிஞ்சுக்குவாங்க.  அம்மி எல்லாம் எதுக்கு இருக்கு?  உங்களுக்கு உடல் பயிற்சி வேண்டாமா? அவங்க மின்சாரத்தை எப்போ வேணா எப்படி வேணா நிறுத்துவாங்க.

அதாகப் பட்டது தொடர்ந்து இரண்டு மணி நேரம் இருக்கும்னு நினைச்சு எந்த வேலையானும் நீங்க ஆரம்பிச்சா அவ்வளவு தான்.  பாதி வேலை தான் ஆகும்! மிச்ச வேலையை முடிக்கிறவரைக்கும் நீங்க படுக்கவோ ஓய்வு எடுக்கவோ முடியாதே!  இப்போ என்ன பண்ணுவீங்க?  நேத்திக்குக் காலம்பரப் பத்து மணிக்குப் போன மின்சாரம் அப்புறமா கொஞ்ச நேரம் வந்துட்டுப் பனிரண்டுக்குப் போயிட்டு திரும்ப வரச்சே நாலு மணி.  இன்னிக்கு இரண்டு மணிக்கு வந்திருக்கு.  என்ன நடக்குமோ தெரியலை, பயம்ம்மா இருக்கு!  வர வர மின்சாரம் இருக்கும் நேரத்தைச் சொல்லிடலாம் போல இருக்கு.  பகலில் நான்கு மணி நேரம். மாலை ஒரு மணி நேரம், இரவில் நான்கு மணி நேரம். :(

ஹையா ஜாலி, இன்னிக்கு நாலு மணிக்குப் போகலையே!  இதைத் தவிரவும் பராமரிப்புக்காக ஒரு நாள் பூரா மின்சாரத்தை நிறுத்தறது தனி! :)))

எஞ்சாய்!

Saturday, February 16, 2013

உச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா?


அயோத்தியில் ஸ்ரீராமனின் பட்டாபிஷேஹம்.  அதில் கலந்து கொள்ளச் சென்ற அநேகரில் இலங்கைக்கு அரசனாகி இருந்த விபீஷணனும் ஒருவன்.  பட்டாபிஷேஹம் முடிந்து ஸ்ரீராமன் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டு வந்தான்.  விபீஷணனுக்கு என்ன கொடுப்பது என்ற சிந்தனை ராமனுக்கு.  கடைசியில் தன் குலதெய்வம் ஆன அந்த இக்ஷ்வாகு குலதனம் ஆன ஸ்ரீரங்கநாதப் பெருமாளை அவரின் பிரணவ விமானத்தோடு கொடுப்பது எனத் தீர்மானித்துக் கொண்டார்.  அவ்வாறே தன் குலதனத்தை விபீஷணனுக்குக் கொடுத்த ஸ்ரீராமன், "இந்த விமானத்தை வழியில் எங்கும் கீழே வைக்க வேண்டாம்.  நேரே இலங்கை எடுத்துச் சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும்." எனக் கட்டாயமாய்க் கூறி இருந்தான்.  அதன்படியே தன் புஷபகத்தில் அந்த இக்ஷ்வாகு குலதனத்தையும் எடுத்துக்கொண்டு பறந்து வந்த விபீஷணன், மாலை நேரம் ஆனதைக் கண்டான்.  ஆஹா, நித்திய கர்மாநுஷ்டானங்களை விட முடியாதே!  என்ன செய்யலாம் எனக் கீழே பார்த்தவனுக்கு ஒரு அகண்ட நதி ஒன்று ஓடுவதும், நடுவே ஓர் ஊர் இருப்பதும், தெற்கேயும் மிகவும் அகண்ட நதி ஒன்று அந்தத் தீவை மாலை போல் வளைத்துக் கொண்டு செல்வதையும் கண்டான்.

ஆஹா, இதுவே தகுந்த இடம்.  இந்த நதிக்கரையில் நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து விடலாம் என எண்ணிக் கீழே இறங்கினான்.  தன் கையில் வைத்திருந்த விமானத்தையும், அதனுள் இருந்த ஸ்ரீரங்கநாதரையும் கீழே வைக்க இயலாதே.  சுற்றும் முற்றும் பார்க்க அங்கே ஓர் அந்தணச் சிறுவன் நதியில் தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கரை ஏறிக் கொண்டிருந்தான்.  அவனை அழைத்துத் தன் நிலைமையைச் சொன்னான் விபீஷணன்.  அவனிடம் அந்த விமானத்தைக் கொடுத்து அதைக் கீழே வைக்கக் கூடாது என்றும் கூறி வைத்துக் கொள்ளச் சொன்னான்.  தன் தன் நியமங்களை முடித்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறினான்.  சிறுவன் அதை வாங்கிக் கொண்டான்.  விபீஷணன் நதியில் இறங்கினான்.  நடு நடுவே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.  சிறுவன் கைகளிலே விமானம்.  சாந்தி அடைந்தவனாக வடக்கே திரும்பித் தன் நித்ய கர்மாவைச் செய்ய ஆரம்பித்தான் விபீஷணன்.

அப்போது அந்தச் சிறுவன் ஒரு குறும்புச் சிரிப்போடு அந்த விமானத்தைச் சத்தம் போடாமல் கீழே வைத்தான்.  ஓட்டமாய் ஓடிய சிறுவன் சற்றுத் தூரத்தில் தென்பட்ட ஒரு குன்றின் மீது ஏறி அதன் உச்சியில் போய் அமர்ந்து கொண்டு விபீஷணன் என்ன செய்யப் போகிறான் என வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.  விபீஷணன் தன் அநுஷ்டானங்கள் முடிந்து திரும்பி வந்தால் சிலை தரையில் வைக்கப் பட்டிருக்கச் சிறுவனைக் காணவே காணோம்.  ஆத்திரம் பொங்கச் சிலையைத் தரையில் இருந்து எடுக்க முயன்றான்.  தன் பலம் முழுதும் பிரயோகித்தும் சிலை அசையவே இல்லை.   விபீஷணன் கோபம் கொண்டு சிறுவனைத் தேட.  மலைக்குன்றின் மீதிருந்து குரல் கேட்டது.  என்ன எடுக்க முடியலையா? என.  கோபம் மேலோங்கிய விபீஷணன் குன்றின் மீது ஏறி அந்தச் சிறுவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்ட அங்கே காட்சி அளித்தார் விநாயகர். அதிர்ந்த விபீஷணனிடம், இந்த ரங்கநாதருக்காகவே சோழ மன்னன் தவம் இருப்பதாகவும், ரங்கநாதர் இலங்கை சென்றுவிட்டால் அவன் தவம் வீணாகிவிடும் என்பதாலும், இந்த நிகழ்வு ஏற்கெனவே திட்டமிட்டு நடத்திய ஒன்று எனவும், ஸ்ரீரங்கநாதருக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல இஷ்டமும் இல்லை என்றும் கூறி அருளினார்.

மனம் வருந்திய விபீஷணனிடம் ஸ்ரீரங்கநாதர், தாம் தெற்கே பார்த்துக் கொண்டு படுப்பதாகவும், தன் பார்வை எந்நேரமும் இலங்கையை நோக்கிய வண்ணமே இருக்கும் எனவும், ஆகவே விபீஷணன் வருந்த வேண்டாம் என்றும் அருளிச் செய்தார்.  அதன் பின் ஓரளவு சமாதானம் அடைந்த விபீஷணன் இலங்கை திரும்பினான்.  இப்படி உச்சியில் அமர்ந்த பிள்ளையாரை அங்கேயே இருந்து வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்குமாறு அனைவரும் வேண்ட அன்று முதல் அவர்  அங்கேயே  இருந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  அவர் தலையின் விபீஷணன் குட்டிய குட்டின் வடு இன்னமும் இருக்கிறது என அங்குள்ள குருக்கள் கூறினார்கள்.  மேலும் சங்கட சதுர்த்தி ஹோமத்தின் பிரசாதமும் கூப்பிட்டுக் கொடுத்தார்கள்.  உஙகள் சங்கடங்கள் தீரும் எனவும் கூறினார்கள்.  ஆனால் படம் எடுக்க அநுமதி தரவில்லை.  உச்சியில் அவரின் கோயில் மட்டுமே இருக்கிறது.  பின்னால் மலைப்பள்ளம்.  முன்னால் ஏறிவரும் படிகள்.  பக்கவாட்டில் ஒரு பக்கம் மணிமண்டபமும், வரும் வழியும். இன்னொரு பக்கம் பிரகாரம் போல மலையில் பாதை இருந்தாலும் பொது மக்கள் தவறி விழுந்து விடுவதாலும் சிலர் வேண்டுமென்றே அங்கே வந்து தங்கள் முடிவைச் செயல்படுத்துவதாலும் கம்பி கட்டி அங்கே போக முடியாமல் செய்திருக்கின்றனர்.

இந்தக் கோயிலில் குடைந்து எடுக்கப் பட்ட இரு குகைகள்/சமணப்படுக்கைகள்(?) உள்ளன.  அவற்றில் கிரந்தம், தமிழில் கல்வெட்டுக்கள் உள்ளன.  அங்கெல்லாம் போக முடியலை.  மலைக்கோட்டையின் உயரம் 275 அடியாகும்,  மேலே ஏறிச் செல்ல மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து மொத்தம் 417 படிக்கட்டுகள் என்கின்றனர்.  மலையிலேயே வெட்டிய கருங்கற்படிகள்.  இந்தத் திருச்சி மலைக்கோட்டை மகேந்திர பல்லவர் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுவதாக அறிகிறோம்.  நாம் ஏற்கெனவே தரிசித்த தாயுமானவர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம் ஆகும். அவ்வளவு உச்சியில் இந்தக் கோயிலின் கட்டுமானம் ஆச்சரியப் படத்தக்க ஒன்றாகும்.

Friday, February 15, 2013

மின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க!

தாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலின் தளத்துக்கு ஏறியதும் அங்கே இருக்கும் மணி மண்டபம்.  மணி மண்டபம் என்றதும் ஏதோ நினைவுச் சின்னம் என்றே நினைத்தேன்.  ஆனால் அது இல்லையாம்.  இங்கே இருந்து தான் மணி அடிக்கப்படும் என்கிறார்கள். 


மேலே தான் உச்சிப் பிள்ளையார் சந்நிதி.

உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் படிகள்.  மணி மண்டபத்தில் இருந்து வலப்பக்கம் திரும்பியதும் காணப்படும் இந்தப் படிகளில் ஏறித்தான் பிள்ளையாரைப் பார்க்கப் போக வேண்டும்.  படிகள் பார்க்கச் சின்னவையாக இருந்தாலும் ஏறுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.  கவனமாக ஏற வேண்டும்.

உச்சிப் பிள்ளையார் சந்நிதியைச் சுற்றி இருக்கும் பிராகாரத்தில் இருக்கும் ஜன்னல்களில் இருந்து தெரியும் தாயுமானவர் கோயிலின் ராஜ கோபுரமும் சற்றுத் தள்ளித் தெரியும் தங்கக் கலசத்துடன் கூடிய விமானமும்.

உச்சிப் பிள்ளையார் கோயிலின் உச்சியில் இருந்து திருச்சி நகரம்.  கொஞ்சம் பனி மூடியிருந்தது.  விலகவில்லை என்பதால் படம் தெளிவாகத் தெரியவில்லை.  வந்த வரைக்கும் கொடுத்திருக்கேன்.  நல்ல மூடுபனி எட்டு மணி வரையும் இருந்தது. 

இன்னிக்குப் படம் மட்டும் பாருங்க.  விபரங்கள் நாளைக்கு எழுதறேன்.  ஆஃப்லைனில் எழுதி வைச்சுட்டு மின்சாரம் இருக்கிறச்சே பதிவுகளைப் போடணும்.  என்ன ஒரு கஷ்டம்னா ஆஃப்லைனில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எழுத வேண்டி இருக்கும்.  அதுக்கப்புறம் சார்ஜ் பண்ண மின்சாரம் இருக்குமானு தான் கவலை. :( இன்று மிக மோசமான மின் விநியோகம்.

Monday, February 11, 2013

திரிசிரபுரம் திருச்சியான கதை!


வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஏற்பட்ட போட்டியில் கைலை மலையைப் பெயர்த்து வாயு வீச கைலையின் ஒரு பகுதி இங்கே விழுந்ததாகவும், இத்தலத்தில் இருந்த மூன்று தலைகளையுடைய திரிசிரன் என்னும் அசுரன் ஈசனை நோக்கித் தவம் இருந்ததாகவும், பல்லாண்டுகள் தவமிருந்து தன் இரு தலைகளை அக்னியில் போட்டபின்னரும் காட்சி தராமல் போகவே, மூன்றாவது தலையையும் போடுகையில் ஈசன் காட்சி கொடுத்து இழந்த இரு தலைகளையும் திரும்ப அளிக்கிறார்.  அசுரனின் வேண்டுதலுக்காக திரிசிரநாதர் என்ற பெயருடன் இங்கேயே இருந்து அருள் பாலித்தார்.  இதன் காரணமாகவே இவ்வூரும் திருச்சிராமலை என அழைக்கப்பட்டு இப்போது திருச்சி என அழைக்கப்படுகிறது.

முதல் கால அபிஷேஹங்கள் முடிந்து, வாழைத்தார் கொண்டு போயிருந்தவங்ககிட்டே இருந்து அவற்றை வாங்கிக் கொண்டு ஸ்வாமிக்கு எதிரே வைத்தனர்.  பின்னர் சங்கல்பம் செய்து கொண்டு அர்ச்சனைகள் ஆரம்பித்தன.  இங்கே பணம் கட்டிட்டு ஸ்வாமியைப் பார்க்க வேண்டும் என்பது இல்லை என்பதோடு கர்பகிரஹத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்திலேயே நின்று தாயுமானவரைத் தரிசிக்க முடிந்தது.  எவ்வளவு பெரியவர்!  ஒரு க்ஷணம் தஞ்சை பிருகதீஸ்வரரோ என்னும்படியான மயக்கம் ஏற்பட்டது.  ஆனால் அவர் இவரை விடப் பல மடங்கு பெரியவர்.  என்றாலும் இவரும் மிகப் பெரியவரே.  எல்லாவற்றிலும்.  ராக்ஷஸ லிங்கம் என அழைக்கின்றனர்.  அங்கே தரிசனம் முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு வாழைத்தாரை விநியோகம் செய்யச் சொல்லித் திரும்பக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு விநியோகம் செய்ய ஆரம்பித்தோம்.  நம்மைப் போலவே கொண்டு போன எல்லாரும் விநியோகம் செய்ய, பழமயம். :) வேறொருத்தர் பாலும், பானகமும் நிவேதனம் செய்திருக்க அனைவருக்கும் அதுவும் கிடைத்தது.  மலை ஏறிய சிரமம் தீரப் பாலும், பானகமும் குடித்துவிட்டுப் பின்னர் முடிந்தவரை பழங்களை விநியோகம் செய்த பின்னர் அங்கிருந்து அம்மன் சந்நிதிக்குச் சென்றோம். அம்மன் சந்நிதியில் திரை போட்டிருந்தனர்.  அலங்காரம் ஆகிக் கொண்டிருந்தது.

அலங்காரம் முடிந்து அங்கும் அர்ச்சனைகள் முடித்துக் கொண்டு குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு மட்டுவார் குழலியைக் கண்கள் நிறையத் தரிசனம் செய்து கொண்டோம்.  இந்தக் கோயிலின் கொடிமரம் பின்பக்கமாக இருக்க, ஒரு கணம் திகைத்தோம்.  பின்னர் புரிந்தது.  கிழக்கு நோக்கியே இருந்த ஈசன், சாரமாமுனிவருக்காக மன்னனைத் தண்டிக்க வேண்டி மேற்கு நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவர் அப்படியே மேற்கு நோக்கியே இருந்துவிட, கொடிமரம் சந்நிதி வாயில் இரண்டும் அப்படியே முன்னிருந்தபடியே இருந்து விட்டது.  ஆனால் இப்போதும் வழிபாடுகள் நடக்கையில் சந்நிதிக்குப் பின்னால் இருந்தே மேளதாளம் வாசித்துத் தேவாரம் பாடுகின்றனர்.  இது இந்தக் கோயிலில் ஒரு அதிசயம் ஆகும்.  இங்குள்ள தக்ஷிணாமூர்த்தியை ஞான தக்ஷிணாமூர்த்தி என்கின்றனர்.  நாயக்கர் காலத்து அரசரான விஜயரகுநாத சொக்கநாதர் ஆட்சியின் போது கேடிலியப்ப பிள்ளைக்கு மகனாப் பிறந்த ஓரு ஆண் மகவுக்குத் தாயுமானவரின் பெயரையே வைத்து வளர்த்து வந்தனர்.

அந்தக் குழந்தை வளர்ந்து கல்வி, கேள்விகளில் சிறந்தவனாக மன்னனிடம் பணி புரிந்த சமயம் ஈசனே குருவாக இருந்து உபதேசம் செய்து ஆட்கொண்டதாய்ச் சொல்கின்றனர்.  இவரை மெளன குரு என்ற பெயருடன், அழைக்கின்றனர்.  மெளன குரு மடம் ஏற்கெனவே மலை ஏறுகையிலேயே பார்த்தோம். அருணகிரியாரின் திருப்புகழில் கூட இந்தக் கோயில் இடம்பெற்றிருப்பதோடு அல்லாமல், தக்ஷிணாமூர்த்தியைக் குறித்து "தர்ப்ப ஆசன வேதியன்" எனப் பாடி இருப்பதாகவும் தெரிய வருகிறது.  மற்றும் மர வடிவில் மஹாலக்ஷ்மியும், மர வடிவில் துர்க்கையும் இங்கே காணப்படுகின்றனர்.  சாரமாமுனிவருக்கும் சிலையும், அவருக்கு அருகே விஷ்ணு துர்கையும் காணப்படுகின்றனர்.  தாயுமானவர் என்னும் பெயரைப் பெற்றதின் காரணமான சம்பவம் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாசம் பிரம்மோற்சவத்தில் நடத்தப் படுகிறது.  சோமாஸ்கந்தர் வடிவில் உற்சவர் அலங்காரங்களுடன் வர, அவர் அருகே கர்ப்பிணிப் பெண்ணான ரத்னாவதியின் சிலையை வைத்துத் திரை போட்டு மறைக்கின்றனர்.  பின்னர் ரத்னாவதியின் மடியில் குழந்தை ஒன்றை அமர வைத்து அலங்கரித்துத் திரையை விலக்கி தீபாராதனை காட்டுகின்றனர்.  பிரசவ மருந்துகளும், தைலங்களுமே பிரசாதமாய்க் கொடுக்கப் படுகிறது.  மேலும் ஈசன் இங்கிருந்து புறப்பாடாகும் வேளையில் சங்கு ஊதி அறிவிக்க வேண்டி சங்குச்சாமி என்பவரும் கொடிமரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே காணப்படுகிறார்.

அடுத்து உச்சிப் பிள்ளையார் தான்.  இந்தக் கோயிலில் தாய், தந்தை, மூத்த மகன் மூவரும் தனித்தனிக் கோயில்களில் இருந்து அருள் பாலிக்கின்றனர். இக்குன்றை ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வடிவத்தில் பார்க்க முடியும்.  நந்தி, சிம்மம், விநாயகர் என ஈசன், அம்பிகை, பிள்ளையார் ஆகியோருக்கு ஏற்றதான வடிவங்களில் காண முடியும்.



தாயுமானவர் கோயிலில் இருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழி.



உச்சிப் பிள்ளையாருக்குச் செல்லும் முன் உள்ள தளத்தில் இருந்து தெரியும் திருச்சி நகரின் காட்சி பறவைப் பார்வையில்.



உச்சிப்பிள்ளையாரின் படிகளை ஒட்டித் தெரியும் காட்சி. இங்கிருந்து உச்சிப் பிள்ளையாருக்கும் குறைந்தது ஐம்பது, அறுபது படிகள் போல் ஏறித்தான் போகணும்.  உச்சியிலே தொங்கிட்டு இருக்கார் பிள்ளையார்.  அவரை நாளைக்குப் பார்ப்போமா?


Sunday, February 10, 2013

டவரும், கோபுரமும்! எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாக! :)))))

இந்த மாதிரி மொபைல் டவர் இங்கே நிறைய இருக்கா,  அது இல்லாமல் கோபுரத்தை எடுக்க முயற்சி செய்து கடைசியில் அதுவும் ஒருபக்கமாக வந்த பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய படம் இது.  எங்கள் ப்ளாகின் கோபுரத்தைப் பார்த்ததும் நினைவு வந்தது.  இன்னும் இருக்கு.  தேடணும்! இப்போதைக்கு இது சாம்பிள்! :)))))

Saturday, February 09, 2013

தாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி!


தாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் தளத்தில் காணப்படும் ஓவியங்களும், தலவரலாறும், அறிவிப்புப் பலகையும் கீழே காணலாம்.






தாயுமானவர் என்னும் பெயர் இவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சாரமாமுனிவர் என்னும் சிவபக்தர் செவ்வந்தி மலர்களால் ஆன நந்தவனத்தை உருவாக்கித் தினமும் ஈசனுக்கு செவ்வந்தி மலர் படைத்து வழிபட்டு வந்தார்.  ஒரு சமயம் அவ்வழியே சென்ற வணிகன் ஒருவன் மலர்களின் அழகைக் கண்டு ஆசைப்பட்டு முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களைத் திருடி மன்னனுக்குக் கொண்டு கொடுத்து வந்தான்.  அம்மலர்களைப் பார்த்து அதிசயித்த மன்னன் தினமும் இம்மலர்களைத் தருமாறு கேட்க, தொடர்ந்து அவ்வணிகன் முனிவரின் நந்தவனத்து மலர்களைத் திருடி வந்தான்.  சாரமாமுனிவருக்கு மலர்கள் கிடைக்காமல் அவரின் வழிபாடு பாதிக்கப்பட்டது. மன்னனிடம் சென்று முறையிட்டார்.  மன்னனே அந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தமையால் அவன் கண்டு கொள்ளவில்லை.



வருந்திய முனிவர் ஈசனிடமே முறையிட்டார். அவரின் முறையீட்டைக் கேட்ட ஈசனார், மன்னனின் அரச சபை இருந்த திசையை நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உக்கிரப் பார்வை பார்த்தார்.  அன்று வரையிலும் கிழக்கு நோக்கி இருந்த ஈசன் அன்றிலிருந்து மேற்கு நோக்கிப் பார்க்க ஆரம்பித்ததாகச் சொல்வதுண்டு.  ஈசனின் நெற்றிக்கண் பார்வையால் அப்பகுதியில் மண்மாரி பொழிய ஆரம்பித்தது.  தன் தவறை உணர்ந்த மன்னன் ஈசனை வேண்டி மன்னிப்புப் பெற்றான். தவறுகள் செய்பவரைத் தண்டிப்பவராக இந்தத் தலத்து ஈசன் விளங்குகிறார்.  செவ்வந்தி மலர் படைத்து முனிவர் வணங்கியதால் செவ்வந்தி நாதர் என்ற பெயர் கொண்டிருந்தார்.



தாயுமானவர் என்ற பெயர் கொண்ட வரலாறு:  இவ்வூரில் தனதத்தன் என்னும் வணிகன் வசித்து வந்தான்.  அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.  அவளுக்கு உதவிகள் செய்ய அவள் தாய் அங்கே வருவதாக இருந்தது.  தாயும் மகள் வீட்டிற்குக் கிளம்பி வந்தாள்.  ஆனால் வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தாயால் மகள் வீட்டிற்குக் காவிரியைக் கடந்து வர முடியவில்லை.  வெள்ளமோ வடிகிறாப்போல் காணவில்லை.  இதனிடையே மகளுக்கோ அங்கே பிரசவ வலி உண்டாகி விட்டது.  ரத்னாவதி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் திரிசிரநாதரான செவ்வந்தி நாதரிடம் தன் பிரசவத்துக்கு உதவித் தன்னைக் காக்கும்படி வேண்டினாள்.  அவள் வேண்டுகோளைக் கேட்ட ஈசனும் அவள் தாயின் உருவிலேயே அங்கே சென்று அவளுக்கு உதவிகள் செய்து பிரசவமும் பார்த்தார்.  குழந்தையும் பிறந்தது.  காவிரியில் வெள்ளம் வடிய ஒருவாரம் ஆகிவிட்டது.  அதன் பின்னரே ரத்னாவதியின் தாயால் அங்கே வர முடிந்தது.  ஈசனோ அதுவரையில் தாயின் இடத்திலிருந்து அந்தப் பெண்ணிற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். வெள்ளம் வடிந்த பின்னர் ரத்னாவதியின் தாய் மகளைக் காண வந்தாள்.

மகள் பிரசவித்திருப்பதையும், தன்னைப் போல் இன்னொருத்தி அங்கே இருப்பதையும் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்தாள்.  மகளுக்கும் இத்தனை நாள் தான் தாய் என நினைத்தவள் தாயில்லை என்பதும், தாய் இப்போது தான் வருகிறாள் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அதிகம் ஆயிற்று.  அப்போது ஈசன் இருவருக்கும் தன் சுய வடிவில் காட்சி கொடுத்து அருளினார்.  ஒரு பெண்ணிற்காகத் தாயாக இருந்து உதவிய அவரை இருவரும், "தாயும் ஆனவே!" என அழைத்து ஆனந்தம் அடைந்தனர்.  அன்றிலிருந்து இவருக்குத் தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது.

மலைக்குச் செல்லும் வழியில் காணப்பட்ட மண்டபம். அம்பிகையின் பெயர் மட்டுவார் குழலி என்னும் சுகந்த குந்தளாம்பிகை ஆகும்.  நம் வீடுகளில் ஸ்ரீமந்தம் ஆனதும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒன்பதாம் மாதம் அப்பம், கொழுக்கட்டை கட்டுவது என்றொரு சடங்கைச் செய்வார்கள்.  கேள்விப் பட்டிருக்கீங்களா?  இதை மாமியார் வீட்டில் ஸ்ரீமந்தம் அன்றேயும், பெண்ணின் பிறந்த வீட்டில் ஒன்பதாம் மாதமும் செய்வார்கள்.  இது பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டு செய்யப்படுவது. மட்டைத்தேங்காய், 21 கொழுக்கட்டை, 21 அப்பம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் அனைத்தையும் ஒரு துணியில் போட்டுக் கட்டி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கட்டுவார்கள்.  பின்னர் உட்கார்த்தி வைத்து மசக்கை ஆரம்பத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை உள்ள பாடல்களைப் பாடிக் களிப்பார்கள்.  பின்னர் ஏற்றி இறக்கிவிட்டு ஆரத்தி கரைப்பார்கள்.  வந்தவர்களுக்கெல்லாம் தாம்பூலம் கொடுப்பார்கள்.  இந்நிகழ்ச்சியை இங்கே சுகந்த குந்தளாம்பிகைக்கு நடத்துகின்றனர்.

வீட்டில் யாராவது பிரசவத்துக்குத் தயாராக இருந்தால் அந்தப் பெண்ணிற்காக நேர்ந்து கொண்டு அவங்க வீட்டில் இருந்து மேலே சொன்னபடி 21 கொழுக்கட்டை, 21 அப்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் ஆகியவற்றை ஒரு புதுத்துணியில் கட்டி அம்பாளுக்குக் கட்டுவார்களாம்.  பின்னர் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பெயரில் அர்ச்சனைகள் நடக்குமாம்.  இவ்வாறு செய்தால் சுகப் பிரசவம் நடக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை.


"ஹே, சங்கர, ஸ்மரஹர! பிரமதாதிநாத
மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹா! திரிசூலின்
சம்போ! ஸுகப்ரசவக்ருத! பவ! தயாளோ
ஸ்ரீமாத்ருபூத! சிவ! பாலய! மாம் நமஸ்தே!''


இங்கே காணும் இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப் பெண்கள் தாயுமானவரையும், மட்டுவார் குழலி அம்மையையும் நினைந்து தினம் மூன்று முறைகள் கூறி வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகும் என்கின்றனர். 

Friday, February 08, 2013

குட்டி ஆனை !

இந்தக் குட்டியானை திருப்பனந்தாள் மடத்திலே இருந்தது.  நாங்க அந்த மடத்துக்கு 2,3 வருடம் முன்னே போனப்போ கஜபூஜைக்காக வந்துட்டு இருந்தது.  தெய்வானை என்று அழைத்திருக்கின்றனர்.  உண்மைப் பெயர் அம்பிகாவாம்.அதை நிறுத்திப் படம் எடுத்தேன்.  பூஜை செய்யறச்சே எடுக்கணும்னு ஆசை.  ஆனால் மடாதிபதியின் அனுமதியைப் பெற வேண்டும்,  மானேஜர் மூலம் பெறலாம் எனில் அவர் அன்னிக்கு வரலை.  அனுமதி தரலை. நல்லா விளையாடிட்டு இருந்தது.  ரொம்பவே பிடிச்சது எனக்கு.  பாருங்களேன் நிறத்தை! எவ்வளவு பளிச்சுனு இருக்கு!  இந்தக் குட்டியானை திடீர்னு நேத்திக்கு மர்மமான முறையில் இறந்து விட்டதாம்.  பேப்பரில் படிச்ச ரங்க்ஸ் எனக்குச் சொல்ல நானும் பேப்பரைப் பார்த்தேன். நல்லாத் தான் இருந்திருக்கு.  ஏன் செத்துப் போச்சுனு புரியலைங்கறாங்க. பரிசோதனைக்கு ரத்த சாம்பிள் அனுப்பி இருக்காங்களாம். திருப்பனந்தாளிலே எல்லா மக்களும் இதன் மேல் மிக அன்பாக இருந்திருக்காங்க.  இதை அழுது கொண்டே அடக்கம் செய்தார்களாம்.  செய்தி படிச்சதில் இருந்து ரொம்பவே வருத்தம்! ஏற்கெனவே நிறைய யானைங்க ரயிலில் அடிபட்டுச் செத்துட்டு இருக்குங்க. யானைகளே குறைஞ்சுடுமோனு கவலையாப் போயிடுத்து!!

Monday, February 04, 2013

மெல்ல, மெல்ல ஏறிட்டோமே!


வெகு எளிதாகவும், லாகவமாகவும் என்னைத் தாண்டிப் பலரும் சென்றனர்.  எங்கள் உறவினரும் முன்னே சென்றாலும்,  அவ்வப்போது நின்று நின்று ரங்க்ஸும், மன்னியும் எனக்காகக் காத்திருந்து சென்றனர்.  மொத்தம் உச்சிப் பிள்ளையாரின் படிகளையும் சேர்த்தால் 417 படிகளே என்று கணக்குச் சொல்கிறது.  ஆனால் எனக்கோ 41700 படிகளைப் போன்ற பிரமை. உயரமும் அதிகம் இல்லை.  300 அடிக்குள்ளாகவே.  இதை விடப் பிரம்மாண்டமான அஹோபிலம் மலைத் தொடர்கள், எல்லோரா, அஜந்தா, அவ்வளவு ஏன் கைலை மலையில் செய்த பரிக்ரமா எல்லாம் நினைவில் வந்தாலும், "நீ அப்படிப் பெருமையும் கர்வமும் கொண்டு இருக்கியா?"னு பிள்ளையார் கேட்டுட்டார்.  தப்புத்தான்.  ஆனானப் பட்ட விபீஷணனே இவரைத் தேடிக் கொண்டு மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் அலைந்து திரிந்து பின்னர் மலை உச்சியில் பார்த்துட்டு மூச்சு வாங்க ஓடோடி வரலையா? விபீஷணன் நினைச்சால் அவன் வந்த விமானத்தில் பறந்து வந்து தேடி இருக்கக் கூடாதா? இல்லை.  ஏனெனில் முழு முதல்வன், விக்னங்களைக் களைபவன் விளையாடிய விளையாட்டுத் தான் காரணம். ஆகவே மலை ஏறித்தான் வந்தான்.  இது ரொம்பச் செங்குத்தான மலை.  அதனாலேயே சிரமம் அதிகம்.

மலை மேல் ஏறியதும் கொஞ்ச தூரத்திலேயே அர்ச்சனைச்சீட்டுகள், வாழைத்தார் செலுத்தும் சீட்டுகள் கொடுக்கும் இடம் வருகிறது.  அங்கே தெருக்களும், குடியிருப்புகளும் காணப்படுகின்றன.  மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து கொஞ்ச தூரத்தில் இது இருக்கிறது.  அங்கேயும் ஒரு விநாயகர்.  எதிரே ஒரு சின்ன மண்டபம்.  அந்த மண்டபம் எதுக்குனு அப்போப் புரியலை.  திரும்பி வரச்சே பார்த்தால் அங்கே தான் நம்ம நண்பர் அந்தச் சின்ன இடத்துக்குள்ளே நின்று கொண்டு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரே பிளிறல் சப்தம். இப்போவும் அப்படித்தான் படிகளைச் சில இடங்களில் உயரமாகவும், சில இடங்களில் ஏற முடிந்த அளவுக்கு முக்கால் அடி உயரத்திலும் வைத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டப்பட்டே ஏற வேண்டி வந்தது.  அதிலும் பிடிமானம் இருக்கும் இடத்தில் ஒரு மாதிரி சமாளித்து ஏறினாலும் தளங்கள் வருகையில் உச்சிப் படியில் மேலே ஏறுகையில் பிடித்துக்கொண்டு ஏற எந்தவிதமான பிடிப்பும் இல்லை.  அம்மாதிரி இடங்களில் மேலே ஏறுகையில் கவனமாக ஏற வேண்டி இருக்கிறது.  கொஞ்சம் அசந்தால் அப்படியே மல்லாக்கக் கீழே சாய்த்துவிடும்.  அப்படி ஒரு செங்குத்துப் படியாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு தளமாக மெல்ல மெல்ல மேலே ஏறிக் கொண்டே கடைசியில் தாயுமானவர் கோயில் இருக்கும் தளத்துக்கு வந்து சேர்ந்தோம். ஆறரை மணிக்கு ஏற  ஆரம்பித்தோம்.  வழியில் இரண்டு மூன்று இடங்களில் பிள்ளையாரும் நம்மை மாதிரி உட்கார்ந்து உட்கார்ந்து போயிருப்பார் போல.  இரண்டு, மூன்று சந்நிதிகளில் உட்கார்ந்து அருள் பாலிக்கிறார்.

ஒரு இடத்தில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் காணப்பட்டது.  அதுதான் ஆயிரங்கால் மண்டபமோ என்ற சந்தேகம்.  யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.  மண்டபத்தைப் படம் பிடித்துக் கொண்டேன்.


 வழியில் ஆங்காங்கே தெரிந்த ஜன்னல்கள் வழியாக மலையின் வெளிப்புறத்தைப் படம் பிடித்தேன்.  சில இடங்களில் பிரகாரம் மாதிரியும் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஏதோ அறைகள் போலவும் காணப்பட்டன. இங்கே இரு குகைகள் இருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன்.



  அவை குறித்தும் எதுவும் தெரியவில்லை.  மேலே இருந்து பார்த்தால் கோட்டை போன்ற அமைப்புக் காணப்படும்.  அந்த இடத்துக்குச் செல்லும் வழியை எல்லாம் இப்போது தடுத்து மூடி இருக்கின்றனர். உச்சிப் பிள்ளையார் சந்நிதிக்குப் பக்கமாக ஒரு கட்டிடம் காணப்பட்டது,  அது என்ன என்று கேட்டதுக்கு மணி மண்டபம் என்று சொன்னார்கள்.  ஆலாக்ஷ மணி அங்கே இருந்து தான் அடிப்பார்கள் போல.  மண்டபம் பூட்டி இருந்தது.  சரி, சரி, இதெல்லாம் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கிறச்சே பார்க்கலாம்.  இப்போத் தாயுமானவர்.  தாயுமானவருக்கு வாழைத்தார் செலுத்துவது என்றொரு பிரார்த்தனை செய்கிறார்கள்.  நாங்களும் வாழைத்தாருக்குச் சொல்லி இருந்தோம். வாழைத்தார் எங்களுக்கு முன்னால் மேலே போய்விட்டது.  அவ்வளவு பெரிய தாரை எடுத்துக்கொண்டு எப்படித்தான் மேலே ஏறினாரோ தெரியலை. ஏறிய அரைமணி நேரத்துக்குள்ளே தாயுமானவர் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தாச்சு.


Saturday, February 02, 2013

பார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்!

மாணிக்க விநாயகரிடம் எங்களை மலை ஏற்றிவிடப் பிரார்த்தித்துக் கொண்டோம்.  மேலே போனதும் உச்சிப் பிள்ளையாருக்கு உடைக்க வேண்டி என் கணவர் ஒரு தேங்காயும், அவரின் அண்ணா(பெரியம்மா பிள்ளை) ஒரு தேங்காயுமாக வாங்கிக் கொண்டனர். மன்னியும் என்னை விடவும் உடல்நலம் முடியாதவர்களே. எப்படி ஏறப் போறோம்னு எங்களுக்கே பிரமிப்புத் தான்.  ஆனால் அஹோபிலத்தில் எங்களை மேலே வர வேண்டாம்னு தடுத்தாப்போல் இங்கே யாரும் தடுக்கவில்லை.  மெல்ல, பையப் பைய, பார்த்துப் பதனமாப் போங்க என எதிரிட்டவர்கள் அனைவரும் ஒருமுகமாகச் சொன்னார்கள்.   படிகளில் ஏற ஆரம்பித்தோம்.



இங்கே தான் ஏற ஆரம்பிக்க வேண்டும்.



கொஞ்ச தூரம் ஏறியதும் தெரியும் மெளனசுவாமிகள் மடம்.  இவர் தாயுமான சுவாமிகளின் குரு.  தாயுமான சுவாமிகள் குறித்து அறிய  இங்கே பார்க்கவும்.
http://geethasmbsvm6.blogspot.in/2011/11/blog-post.html#comment-form

லிங்க் ஆகக் கொடுக்க முடியலை.  அது என்னமோ செட் ஆக மாட்டேன்னு பிடிவாதம்.  இதைக் கடந்து மேலே இன்னும் கொஞ்சம் ஏறியதும் நூற்றுக்கால் மண்டபம் வந்தது.  அந்த மண்டபத்தில் சனி, ஞாயிறுகளில் தேவாரம், திருமுறைகள் கற்றுக் கொடுப்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.  பெரும்பாலும் கோயில்களில் தேவாரம், திருமுறைகள் பாடுவதில்லை என்பதே எங்கும் பேச்சாய் இருக்க, நான் செல்லும் பல கோயில்களிலும் இம்மாதிரியான அறிவிப்புப் பலகையைக் காண நேர்ந்திருக்கிறது.  அதோடு கால பூஜைகள் நடக்கையில் அபிஷேஹ, அலங்காரங்கள் முடிந்து அர்ச்சனைகள் முடிந்ததும், பெரிய தீபாராதனை எடுக்கும் முன்னர் பல கோயில்களிலும் ஓதுவா மூர்த்திகளால் திருமுறைகள் பாடப்பட்டதுமே தீப ஆராதனைகள் நடக்கின்றன.  இப்போதெல்லாம் பெரும்பாலான கோயில்களில் பெண் ஓதுவார்களும் காணப்படுகின்றனர். 

நூற்றுக்கால் மண்டபம்.  பெயர் முழுதும் தெரியறாப்போல் எடுக்கணும்னா கொஞ்சம் பின்னாடி போகணும்.  பின்னால் படி ஏறுபவர்கள், இறங்குபவர்கள் என்பதால் கொஞ்சம் பயம்! :))))))


மண்டபத்தின் ஒரு சிறு பகுதி உள்பக்கம் ஜன்னல் வழியாகத் தெரிவதைப் பார்க்கலாம்.  கீழே அறிவிப்புப் பலகையைக் காண முடியும்.


கொஞ்சம் மெதுவா, ஹிஹிஹி, ரொம்ப ரொம்ப மெதுவாத் தான் ஏறினேன்.  படிகளுக்கு இடையே ஒரு அடிக்கும் மேல் இருக்கும்னு நினைச்சதுக்கு அவ்வளவு இல்லை என்றாலும் சில இடங்களில் ஒன்றரை அடி இருந்தது.  என்பதோடு சில இடங்களில் பிடிமானம் இல்லாமல் இருந்ததால் படிகளில் ஏறுகையில் முன்னால் குனிந்து கொண்டு ஏற வேண்டி வந்தது. அதிலேயும் ஒரு ரிஸ்க்; அப்படியே மல்லாக்கச் சாயந்துவிட்டால்??? செங்குத்துப் படிகள் வேறே. அடுத்த பாகம் அடுத்த பதிவில். மெதுவாவே போவோமே! :))))