எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 09, 2013

தாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி!


தாயுமானவர் கோயிலுக்குச் செல்லும் தளத்தில் காணப்படும் ஓவியங்களும், தலவரலாறும், அறிவிப்புப் பலகையும் கீழே காணலாம்.






தாயுமானவர் என்னும் பெயர் இவருக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டதாய்த் தெரிய வருகிறது. சாரமாமுனிவர் என்னும் சிவபக்தர் செவ்வந்தி மலர்களால் ஆன நந்தவனத்தை உருவாக்கித் தினமும் ஈசனுக்கு செவ்வந்தி மலர் படைத்து வழிபட்டு வந்தார்.  ஒரு சமயம் அவ்வழியே சென்ற வணிகன் ஒருவன் மலர்களின் அழகைக் கண்டு ஆசைப்பட்டு முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களைத் திருடி மன்னனுக்குக் கொண்டு கொடுத்து வந்தான்.  அம்மலர்களைப் பார்த்து அதிசயித்த மன்னன் தினமும் இம்மலர்களைத் தருமாறு கேட்க, தொடர்ந்து அவ்வணிகன் முனிவரின் நந்தவனத்து மலர்களைத் திருடி வந்தான்.  சாரமாமுனிவருக்கு மலர்கள் கிடைக்காமல் அவரின் வழிபாடு பாதிக்கப்பட்டது. மன்னனிடம் சென்று முறையிட்டார்.  மன்னனே அந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தமையால் அவன் கண்டு கொள்ளவில்லை.



வருந்திய முனிவர் ஈசனிடமே முறையிட்டார். அவரின் முறையீட்டைக் கேட்ட ஈசனார், மன்னனின் அரச சபை இருந்த திசையை நோக்கித் திரும்பித் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து உக்கிரப் பார்வை பார்த்தார்.  அன்று வரையிலும் கிழக்கு நோக்கி இருந்த ஈசன் அன்றிலிருந்து மேற்கு நோக்கிப் பார்க்க ஆரம்பித்ததாகச் சொல்வதுண்டு.  ஈசனின் நெற்றிக்கண் பார்வையால் அப்பகுதியில் மண்மாரி பொழிய ஆரம்பித்தது.  தன் தவறை உணர்ந்த மன்னன் ஈசனை வேண்டி மன்னிப்புப் பெற்றான். தவறுகள் செய்பவரைத் தண்டிப்பவராக இந்தத் தலத்து ஈசன் விளங்குகிறார்.  செவ்வந்தி மலர் படைத்து முனிவர் வணங்கியதால் செவ்வந்தி நாதர் என்ற பெயர் கொண்டிருந்தார்.



தாயுமானவர் என்ற பெயர் கொண்ட வரலாறு:  இவ்வூரில் தனதத்தன் என்னும் வணிகன் வசித்து வந்தான்.  அவன் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.  அவளுக்கு உதவிகள் செய்ய அவள் தாய் அங்கே வருவதாக இருந்தது.  தாயும் மகள் வீட்டிற்குக் கிளம்பி வந்தாள்.  ஆனால் வழியில் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தாயால் மகள் வீட்டிற்குக் காவிரியைக் கடந்து வர முடியவில்லை.  வெள்ளமோ வடிகிறாப்போல் காணவில்லை.  இதனிடையே மகளுக்கோ அங்கே பிரசவ வலி உண்டாகி விட்டது.  ரத்னாவதி என்னும் பெயர் கொண்ட அந்தப் பெண் திரிசிரநாதரான செவ்வந்தி நாதரிடம் தன் பிரசவத்துக்கு உதவித் தன்னைக் காக்கும்படி வேண்டினாள்.  அவள் வேண்டுகோளைக் கேட்ட ஈசனும் அவள் தாயின் உருவிலேயே அங்கே சென்று அவளுக்கு உதவிகள் செய்து பிரசவமும் பார்த்தார்.  குழந்தையும் பிறந்தது.  காவிரியில் வெள்ளம் வடிய ஒருவாரம் ஆகிவிட்டது.  அதன் பின்னரே ரத்னாவதியின் தாயால் அங்கே வர முடிந்தது.  ஈசனோ அதுவரையில் தாயின் இடத்திலிருந்து அந்தப் பெண்ணிற்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார். வெள்ளம் வடிந்த பின்னர் ரத்னாவதியின் தாய் மகளைக் காண வந்தாள்.

மகள் பிரசவித்திருப்பதையும், தன்னைப் போல் இன்னொருத்தி அங்கே இருப்பதையும் கண்ட அவள் அதிர்ச்சி அடைந்தாள்.  மகளுக்கும் இத்தனை நாள் தான் தாய் என நினைத்தவள் தாயில்லை என்பதும், தாய் இப்போது தான் வருகிறாள் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அதிகம் ஆயிற்று.  அப்போது ஈசன் இருவருக்கும் தன் சுய வடிவில் காட்சி கொடுத்து அருளினார்.  ஒரு பெண்ணிற்காகத் தாயாக இருந்து உதவிய அவரை இருவரும், "தாயும் ஆனவே!" என அழைத்து ஆனந்தம் அடைந்தனர்.  அன்றிலிருந்து இவருக்குத் தாயுமானவர் என்ற பெயர் ஏற்பட்டது.

மலைக்குச் செல்லும் வழியில் காணப்பட்ட மண்டபம். அம்பிகையின் பெயர் மட்டுவார் குழலி என்னும் சுகந்த குந்தளாம்பிகை ஆகும்.  நம் வீடுகளில் ஸ்ரீமந்தம் ஆனதும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒன்பதாம் மாதம் அப்பம், கொழுக்கட்டை கட்டுவது என்றொரு சடங்கைச் செய்வார்கள்.  கேள்விப் பட்டிருக்கீங்களா?  இதை மாமியார் வீட்டில் ஸ்ரீமந்தம் அன்றேயும், பெண்ணின் பிறந்த வீட்டில் ஒன்பதாம் மாதமும் செய்வார்கள்.  இது பெண்ணுக்கு சுகப் பிரசவம் ஆவதற்காகப் பிரார்த்தித்துக் கொண்டு செய்யப்படுவது. மட்டைத்தேங்காய், 21 கொழுக்கட்டை, 21 அப்பம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் அனைத்தையும் ஒரு துணியில் போட்டுக் கட்டி கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கட்டுவார்கள்.  பின்னர் உட்கார்த்தி வைத்து மசக்கை ஆரம்பத்திலிருந்து குழந்தை பிறக்கும் வரை உள்ள பாடல்களைப் பாடிக் களிப்பார்கள்.  பின்னர் ஏற்றி இறக்கிவிட்டு ஆரத்தி கரைப்பார்கள்.  வந்தவர்களுக்கெல்லாம் தாம்பூலம் கொடுப்பார்கள்.  இந்நிகழ்ச்சியை இங்கே சுகந்த குந்தளாம்பிகைக்கு நடத்துகின்றனர்.

வீட்டில் யாராவது பிரசவத்துக்குத் தயாராக இருந்தால் அந்தப் பெண்ணிற்காக நேர்ந்து கொண்டு அவங்க வீட்டில் இருந்து மேலே சொன்னபடி 21 கொழுக்கட்டை, 21 அப்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் ஆகியவற்றை ஒரு புதுத்துணியில் கட்டி அம்பாளுக்குக் கட்டுவார்களாம்.  பின்னர் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் பெயரில் அர்ச்சனைகள் நடக்குமாம்.  இவ்வாறு செய்தால் சுகப் பிரசவம் நடக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கை.


"ஹே, சங்கர, ஸ்மரஹர! பிரமதாதிநாத
மன்னாத! ஸாம்ப! சசிசூட! ஹா! திரிசூலின்
சம்போ! ஸுகப்ரசவக்ருத! பவ! தயாளோ
ஸ்ரீமாத்ருபூத! சிவ! பாலய! மாம் நமஸ்தே!''


இங்கே காணும் இந்த ஸ்லோகத்தை கர்ப்பிணிப் பெண்கள் தாயுமானவரையும், மட்டுவார் குழலி அம்மையையும் நினைந்து தினம் மூன்று முறைகள் கூறி வழிபட்டால் சுகப் பிரசவம் ஆகும் என்கின்றனர். 

16 comments:

  1. உச்சிப்பிள்ளையார் பத்தி சொல்லுங்க

    ReplyDelete

  2. "தாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி!"

    அருமையான பகிர்வுகள்.

    ReplyDelete
  3. தாயுமானவர் கோவில் தலவரலாற்றுக் கதைகள் மிகவும் சிறப்பாக இருக்கு. கர்ப்பிணி பெண்களின் நலனுக்காக சுகந்த குந்தளாம்பிகைக்கு நடத்தப்படும் மடிகட்டுதல் நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் சிறப்பாக விளக்கியிருக்கீங்க,மாமி. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  4. அருமை!
    நம் சாமி. சிவம் அய்யா சிவம் -அன்பு ஆருயிர்:) !

    "ஆரா அமுதே அரசே ஆனந்தவெள்ளப்

    பேராறே மோனப் பெருக்கே பராபரமே"

    ReplyDelete
  5. நல்ல விவரங்களுடன், கதைகளுடன் சுவாரஸ்யப் பதிவு.

    ReplyDelete
  6. தாயுமானவர் கதை கேட்டிருக்கிறேன். அந்த ஸ்லோகமும் சொல்லி இருக்கிறேன். செவ்வந்தி நாதர் கதை கேட்டதில்லை. சுவாரசியம்.

    ஹை ஸ்கூல் படிச்சுண்டு இருக்கும் போது என் ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் திருமணத்துக்கு திருச்சிக்கு எல்லோரும் சென்ற போது இந்த கோவிலுக்கு சென்றோம். அப்பொழுது என்னுடன் வந்த என் கஸின் பிறந்து வளர்ந்ததெல்லாம் மைசூரில். அவளை இந்த அம்பாளின் பெயரை சொல்ல சொல்லி விடாமல் தொந்தரவு செய்தது இப்பொழுது நினைவுக்கு வருகிறது. 'ஏனே
    இது ஹோகப்பா' அப்படின்னு அவ அழாத குறையா சொன்னது இப்ப நெனச்சாலும் சிரிப்பு வரது. :))

    என்னோட கடைசி மாமா ரொம்ப வருஷமா திருச்சிலதான் இருக்கார். என்னோட தலை பிரசவம் நல்லபடியா ஆகணும்னு வேண்டிண்டு, ஆன உடனே அவரை ஒரு குலை வாழைபழம் வாங்கி இந்த கோவிலுக்கு குடுக்க சொல்லி எங்க அம்மா சொன்னது எனக்கு நினைவு இருக்கு.


    ReplyDelete
  7. ஈசனின் அன்புள்ளம் எப்படியெல்லாம் செயல் படுகிறது.!
    என்ன ஒரு காருண்யம். இரக்கம் அருள் எல்லாம் சுரக்கும் ஈசன்
    அன்புக்கு இணையில்லை அருமையாகப் பதிவிட்டு இருக்கிறீர்கள்
    கீதா.

    மட்டுவார் குழலி.பெயரைக் கேட்டாலே சுகமாக இருக்கிறது
    மீதிப் பதிவையும் உச்சி விநாயனையும் தொழக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. வாங்ஜ ஜேஜே, வருகைக்கு நன்றி. அடுத்து உ.பி. தான். :)

    ReplyDelete
  9. வாங்க ராம்வி, ஆமாம் நம்ம முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் எல்லாமே காரண காரியங்களோட ஏற்பட்டவையே. நன்றிம்மா.

    ReplyDelete
  10. வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப நாளாச்சு வந்து! :))) அங்கே நிலைமை சீரடைந்து வருதா? ஆட்டம் இன்னமும் இருக்கா?

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், நன்றிப்பா.

    ReplyDelete
  12. வாங்க மீனாக்ஷி, இந்தச் செவ்வந்தி நாதரோடு தொடர்புடைய ஒன்றே வெக்காளி அம்மன் ஆலயமும். அநேகமாய்த் தெரிந்திருக்கும், இன்னும் அங்கே போகலை. இதுக்கு முன்னாலே பல முறை போயிருந்தாலும் இங்கே ஸ்ரீரங்கம் வந்தப்புறம் போகலை. போயிட்டு வந்ததும் எழுதறேன். :)

    ReplyDelete
  13. வாங்க வல்லி, அடுத்து உச்சிப் பிள்ளையார் தான். ஆமாம், மட்டுவார் குழலி என்னும் பெயர் அழகான பெயர், இனிமையான பெயர்.

    ReplyDelete
  14. மாமி

    நீங்கள் சௌக்கியமா? மலைக்கோட்டை கோவில் பற்றிய தொடர் அருமை.

    1986 இல் நானும் என் அம்மாவின் தோழி பையனும் இந்த கோவிலுக்கு சென்று வரும் வழியில் படி தடுக்கி உருண்டு விழுந்தது நினைவு வந்தது :) யாரோ ஒருவர் எங்களிருவரியும் பிடித்து தடுத்தார்கள். மலைக்கோட்டை படம் ஏதேனும் பார்த்தாலே எனக்கு இந்த நினைவு தான்.

    அதன் பின் 90 களில் காரைக்குடியில் இன்ஜினியரிங் படிக்கும் போது சில முறை போனாலும் பின்பு போகமுடியவில்லை. US வந்த பின்பு நெல்லைக்கு ரயிலில் செல்லும் போது, நள்ளிரவில் எழுந்து திருச்சியில் ஸ்ரீரங்கம், மலைக்கோட்டையைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு சரி.

    ReplyDelete
  15. ரத்னாவதியின் பிரசவ கதை தான் தெரியுமே தவிர செவ்வந்திநாதர் கதை தெரியாது. இன்று அதை தெரிந்து கொண்டேன்.

    சுகப்பிரசவ ஸ்லோகம் நானும் சொல்லியிருக்கேன்.

    ReplyDelete
  16. செவ்வந்தி நாதர் கதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.
    மடிகட்டுதல் சடங்கும் புதியது.

    ReplyDelete