ஆதி சமயபுரம் கோயிலின் நுழைவாயில்.
மாகாளிக்குடியை அடுத்து நாங்கள் சென்றது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம். இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். சமயபுரம் மாரியம்மன் இங்கே தான் பிறந்தாள் எனவும் அவளுக்கு இது தாய் வீடு எனவும் சொல்கின்றனர். இந்த அம்மனும் சமயபுரத்தை நோக்கிய வண்ணமே அமர்ந்து அருள்பாலிக்கிறாள். இங்கே அம்மனின் சக்தி மிகவும் அதிகம் என்பதால் படங்கள் எடுக்கத் தடை. மூலக் கோயில் இன்னமும் ஓட்டுக்கூரை போட்ட கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. அங்கே தான் விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுக்கின்றனர். இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்ட வேண்டிப் பலமுறை முயன்றிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்கல் ஏற்படப் பின்னர் ப்ரச்னம் கேட்டதில் இங்கே புதுமை வேண்டாம் என அம்மனே சொல்லி விட்டதாகவும், அபிஷேஹ அர்ச்சனைகளுக்குப் பக்கத்திலே ஒரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து கொள்ளும்படியும் உத்தரவு கிடைத்துள்ளது. அதன் பேரில் இதை ஒட்டியே கொஞ்சம் நவீனமாகப் புதியதொரு சந்நிதியில் இந்த அம்மனின் சக்தியில் மறுபாதி எனச் சொல்லும் வண்ணம் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இவளுக்கே அபிஷேஹ ஆராதனைகள் நடைபெறுகின்றன.
கோயிலைச் சுற்றியுள்ள பகுதி.
சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதலின் போது இங்கே ஒவ்வொரு வருடமும் வருவதாகவும், அப்போது ஊர் மக்கள் உட்பட அனைவரும் பிறந்த வீட்டுச் சீர் அம்மனுக்குக் கொடுக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். இங்கே தரிசனம் முடித்துக் கொண்டு அடுத்து நாங்கள் சென்ற கோயில் குணசீலம்.
குணசீலம் பெருமாள் கோயிலில் பெருமாளே பிரதானமாக இருப்பதால் தாயார் சந்நிதியோ, பரிவார மூர்த்திகளோ கிடையாது. நான் முதன் முதலில் அறுபதுகளில் இந்தக் கோயிலுக்கு வந்த சமயம் பிரகாரங்களில் மனநோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பம் குடும்பமாக அமர்ந்திருப்பார்கள். பலரையும் காலில் சங்கிலி போட்டுக் கட்டி இருப்பார்கள். இப்போது அவர்களுக்கென தனி விடுதி ஏற்படுத்தி விட்டிருப்பதால் அவர்கள் விடுதியில் இருக்கின்றனர். அவர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யவும் குறிப்பிட்ட நேரம் ஏற்படுத்தி உள்ளார்கள். அந்த நேரம் வந்து தரிசனம் செய்துவிட்டு அபிஷேஹ தீர்த்தம் தெளிக்கப்பட்டு அவர்கள் திரும்பிச் செல்வார்கள். அதையும் என் தம்பியோடு சென்றபோது பார்த்தோம். மிகவும் ஒழுங்காகவும், கட்டுப்பாடாகவும் சென்றனர்.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் கருடசேவை உண்டு. இங்கே மூலஸ்தான விமானத்தின் பெயர் திரிதளம் என்பதாகும். கோயிலின் நுழைவாயிலில் ஒரு தீபஸ்தம்பம் காணப்படுகிறது. இதில் ஆஞ்சநேயர் காணப்படுகிறார். கொடிமரத்தைச் சுற்றி கோவர்த்தன கிருஷ்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணன், நர்த்தன கிருஷ்ணன் ஆகியோர் காணப்படுகின்றனர். கோஷ்டத்தில் நவநீத கிருஷ்ணன், வராஹர், நரசிம்மர், யக்ஞ நாராயணன் ஆகியோர் உள்ளனர். வைகாநஸ ஆகமத்தைத் தோற்றுவித்த வைகானச ரிஷிக்கும் சந்நிதி உண்டு. ஆவணி மாதம் திருவோண தினத்தில் வைகானசர் புறப்பாடு நடக்கும் என்கின்றனர். இந்தக் கோயிலை ஒட்டியே காவிரி காணப்படுகிறாள். கோயிலுக்கு எதிரே உள்ள தீர்த்தம் பாபவிநாச தீர்த்தம் எனப்படுகிறது.
தாயார் சந்நிதி இல்லாவிட்டாலும், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காணப்படுகிறார். இவர் பெயர் ஸ்ரீநிவாசர். சாளக்கிராமத்தால் ஆன மாலையுடன் கையில் தங்கச் செங்கோலுடன் உள்ளார். மூலவருக்குத் தினசரி திருமஞ்சனம் செய்வதாய்ச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமே மன நோயாளிகளுக்கான மருந்தாகும். இத்துடன் சுவாமிக்கு அபிஷேஹம் செய்த சந்தனமும் தருவார்கள். ஒரு சில பெருமாள் கோயில்களில் காணப்படுவது போல் இங்கும் உத்தராயன, தக்ஷிணாயன வாசல்கள் உண்டு. குணசீலர் என்பவருக்கு சுவாமி காட்சி தந்த நிகழ்வு புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தில் நடைபெறுகிறது.
திருப்பதி சென்று வந்த குணசீலர் என்னும் பக்தர் காவிரிக்கரையில் இருந்த தன் ஆசிரமத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்யவேண்டும் என விரும்பினார். இதற்காகத் தவம் இருந்தார். அப்படியே இவருக்குக் காட்சி கொடுத்த பெருமாளும் இங்கேயே எழுந்தருளினார். ஊரும் அந்த ரிஷியின் பெயரிலேயே குணசீலம் என அழைக்கப்பட்டது. குணசீலர் தன் குருவுக்குப் பணிவிடை செய்யச் சென்றபோது பெருமாளைக் கவனிக்க ஆளே இல்லாமல் புற்று மூடிவிட்டது. இந்தப் பகுதியும் காடாக மாறிவிட்டது. ஞானவர்மன் என்னும் மன்னன் காலத்தில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்களின் பால் தொடர்ந்து வற்றி மறைய, பசுக்களின் மூலம் இங்கே ஏதோ அதிசயம் என்பதை அறிந்த மன்னன் அதைக் காண வந்தான். அப்போது ஒலித்த அசரீரி மூலம் இங்கே பெருமாள் குடிகொண்டிருப்பதை உணர்ந்த மன்னன் சிலையைக் கண்டெடுத்துக் கோயிலையும் எழுப்பினான். பெருமாளுக்குப் பிரசன்ன வெங்கடாஜலபதி என்னும் பெயரும் சூட்டப் பட்டது.
குணசீலம் பெருமாள் கோயில் பற்றியும் ஆதி சமயபுரம் பற்றியும் விவரமாய் தெரிந்து கொண்டேன். நன்றி. இரண்டு கோவிலும் பார்த்தது இல்லை பார்க்க வேண்டும்.
ReplyDeleteஆதி சமயபுரம் சென்றதில்லை. குணசீலம் சென்றிருக்கிறேன்.
ReplyDeleteநல்ல தகவல்கள்....
குணசீலம் கோவில் பெருமாள் ஜலம் மேலே தெளிக்க வேண்டுமென்று மாமியோரோடு போனபோது,கேட்டு வாங்கித் தெளிக்கச் சொன்னார்.
ReplyDeleteசிலீரென்று இருந்தது. மனப் பேய் அடங்கியதா தெரியவில்லை.
இனாம் சமயபுரம் 7 வயதில் போனது .
அருமையாகப் பதிந்திருக்கிறீர்கள். கீதா.
ஆதி சமயபுரம் கோவில் மற்றும் குணசீலம் கோவில்களைப்பற்றி மிக சிறப்பான தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteபடித்து விட்டேன்.
ReplyDeleteசென்று பார்த்த இடங்களில் அங்கங்கு குறிப்பு எடுத்துக் கொண்டு விடுவீர்களா?
ReplyDeleteஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு கதை. ( நம்பிக்கையை வளர்க்க.?)
வாங்க கோமதி அரசு, கட்டாயமாய்ப் பார்க்கவேண்டியவை. அப்போ கட்டாயம் நம்ம வீட்டுக்கும் விஜயம் செய்யுங்கள். :)))))
ReplyDeleteவாங்க வெங்கட், அடுத்த முறை வந்தால் போயிட்டு வாங்க.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி வல்லி.
ReplyDeleteநன்றிம்மா ராம்வி.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், குறிப்பெல்லாம் எடுத்துக்கற வழக்கம் இல்லை. அங்கே குருக்கள், உள்ளூர் மக்கள் கிட்டே பேசறது, ஆட்டோ அல்லது கார் ஓட்டுநரிடம் பேசறது அவங்க மூலமாத் தெரிஞ்சுக்கறது.... இப்படித்தான். பொதுவாகத் தலவரலாறு ஒரு கிரானைட் கல்லில் பெரும்பாலான கோயில்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. ஆகவே அதையும் படிச்சுக்கறது உண்டு. சந்தேகம் இருந்தால் நம்ம மறுபாதியிடம் கேட்டுப்பேன். :)))))
ReplyDelete