எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 29, 2013

எங்கெங்கு காணினும் மருந்துகளடா!

பையர் ஊரிலே இருந்து வரச்சேயே நிமோனியா வந்து குணமடைந்த உடம்போட வந்தார்.  வந்து நாலு நாளைக்கு நல்லா இருந்தார்.  அதுக்கப்புறமா மறுபடியும் உடம்பு சரியில்லை. அதோட அலைச்சலும் சேர்ந்துக்கவே பையர் ஒரு பக்கம், அவர் மனைவி (மருமகள்) இன்னொரு பக்கம்னு போட்டி போட்டுப் படுத்துட்டாங்க. தினம் இரு வேளை மருத்துவரோட சந்திப்பு. அப்படியும் சரியாகலை.  அதோடு வெள்ளிக்கிழமை ஒரு விசேஷம் வேறே வீட்டிலே வைச்சிருந்தோம்.  அதுக்கு மருமகளின் பெற்றோர் வந்திருந்தாங்க.  நல்லா இருந்தவங்க, பாவம், அவங்களும் படுத்துட்டாங்க. :((( ஆக மொத்தம் வீட்டிலேயே ஒரு சின்ன ஆஸ்பத்திரி வைக்கலாம் போல, மூலைக்கு மூலை ரத்தப் பரிசோதனை  செய்த சான்றுகள், மருந்து பாட்டில்கள், மாத்திரைப்பட்டைகள், வெந்நீர், கஞ்சி, ப்ரெட் டோஸ்ட்,னு வீட்டோட சூழ்நிலையே மாறியாச்சு!

இப்போதைக்கு நாங்க ரெண்டு பேரும் தான் வீட்டிலே நடமாடிட்டு இருக்கோம்.  மத்தவங்களும் சீக்கிரம் நடமாட இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் இணையத்துக்கு வரதே பெரிய விஷயமா இருக்கு. :)))))  இன்னும் ஒரு வாரத்திலே பையர் அமெரிக்கா திரும்பணும்.  அதுக்குள்ளே உடம்பு சரியாகணும்னு வேண்டிக்கோங்க.

Tuesday, December 24, 2013

நைமிசாரண்யத்தில் ஒரு நாள் பகுதி 2 தொடர்ச்சி

மஹாவிஷ்ணுவின் சொரூபம் காடு ரூபமாகவும் வழிபடப் படுகிறது. நைமிசாரண்யமும் அப்படியே மஹாவிஷ்ணு ரூபமாகவே வழிபடப் படுகிறது.  இந்தக் காட்டில் கிட்டத்தட்ட 60,000 ரிஷி முனிவர்கள் வாழ்ந்து தவம் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.  லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் உள்ள இந்த ஊர் நைமிசார், நேமிசால் என்றெல்லாம் வழக்குமொழியில் அழைக்கப்படுகிறது.  நிம்ஹார் எனவும் அழைக்கின்றனர்.  கோமதி நதிக்கரையில் இடது பக்கக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குத் திருமங்கை ஆழ்வாரைத் தவிர, ஆதி சங்கரரும் வந்ததாய்ச் சொல்கின்றனர்.  சூர்தாசர் இங்கே வசித்து வந்ததாயும் சொல்கின்றனர். நைமிசாரண்யம் என்பது இருவகைகளில் உச்சரிக்கப்படுவதால் அதற்கேற்ப அதன் பொருளும் மாறுபடுகிறது.

நைமிஸ் அல்லது நைமிஷ் என அழைக்கப்படுகையில் பரம சிவனை வழிபட்ட பின்னர் பிரம்மாவின் மனோமயச் சக்கரம் உருண்டு உருண்டு வந்து இங்கே நின்றதாகவும், ரிஷி, முனிவர்கள் அதைத் தொடர்ந்து வந்து இந்த இடமே தவம் செய்யச் சிறந்த இடம் எனத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறுகின்றனர்.  சூரியனை விட ஒளி பெற்றுப் பிரகாசித்த அந்தச் சக்கரம் இங்கே வந்து நின்று பல தீர்த்தங்களையும் உண்டாக்கியதாயும் சொல்கின்றனர்.  இன்னொரு கூற்றின்படி தனவஸ் என்பவனின் படைகள் மொத்தமும் ஒரு நிமிஷத்தில் இங்கே அழிக்கப்பட்டதால் நிமிஷாரண்யம் என்பது நைமிசாரண்யம் என ஆயிற்று என்றும் கூறுகின்றனர்.  மஹாவிஷ்ணுவின் சக்கரம் வந்து நின்ற இடம் என்பதையும் முன்னர் பார்த்தோம்.  இங்கே முக்கியமான தீர்த்தம் சக்ரதீர்த்தம் தான் என்பதையும் பார்த்தோம்.

அதோடு ஶ்ரீலலிதை என்னும் மஹாதிரிபுரசுந்தரிக்கு இங்கே ஒரு சக்தி பீடமும் உள்ளது.  லலிதா சஹஸ்ரநாமாவளிகள் வசினி தேவதைகளால் தோன்றிய இடம் எனச் சக்ரதீர்த்தக்கரையைக் குறிப்பிடுகின்றனர்.  இப்படி அநேகச் சிறப்பு வாய்ந்த இந்த இடத்திலேயே வ்யாசகதி என்னும் வியாசரின் இருப்பிடம், சுகர் மற்றும் சூத முனிவர்கள் முறையே பாகவதமும், பாரதமும் ப்ரவசனம் செய்த இடம் என இருக்கின்றன.  அதோடு அஹி ராவணன், மஹி ராவணன் என்னும் இரு அசுரர்களை ஶ்ரீராமரும், லக்ஷ்மணரும் வதம் செய்யப் போகையில் அவர்கள் ஶ்ரீராம, லக்ஷ்மணர்களைப் பாதாளத்துக்குக் கொண்டு சென்றதாகவும் ஆஞ்சநேயர் அசுரர்களைக் கொன்று ஶ்ரீராம, லக்ஷ்மணர்களைத் தோளில் தூக்கி வந்தார் எனவும் சொல்கின்றனர்.  ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரு காலகட்டத்திலும் நைமிசாரண்யம் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிய வருகிறது.

ஸ்வாயாம்புவ மனு பிரம்மாவின் உதவியுடன் மனித குலத்தை ஆரம்பித்து வைத்த இடமாகவும் கூறப்படுகிறது.  இப்படிப் பல சிறப்புகள் நிறைந்த இந்த இடம் உண்மையிலேயே பார்க்க வேண்டிய ஒன்றாகும்.


படங்கள் அடுத்த பதிவில் தொடரும்.

Sunday, December 22, 2013

நைமிசாரண்யத்தில் ஒரு நாள் 1

"வாணிலாமுறுவல் சிறு நுதல் பெருந்தோள் மாதரார் வன முலைப்பயனே
பேணினேன், அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான்,
ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந்திறத்தை
நாணினேன், வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்

சிலம்படியுருவிற்கரு நெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து
புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,
அலம்புரி தடக்கையாயனேமாயா, வானவர்க்கரசனே., வானோர்
நலம்புரிந்திறைஞ்சுன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்."

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி.

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று நைமிசாரண்யம். நாங்கள் லக்னோ சென்ற மறுநாள் காலை கிளம்பினோம்.  லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது  நைமிசாரண்யம்.  இது கிட்டத்தட்ட காடு எனலாம். காட்டையே இங்கு கடவுளாக வழிபடுகின்றனர்.  இங்கே பெருமாளின் சக்கரம் உருண்டு வந்து காட்டில் தவம் செய்யச் சிறந்த இடத்தைக் காட்டியதாகத் தல வரலாறு கூறுகிறது.



சக்ரதீர்த்தம் செல்லும் வழி







எவ்வித இடைஞ்சலும் இன்றித் தவம் செய்யச் சிறந்த இடத்தை முனிவர்கள் திருமாலிடம் இறைஞ்ச அவர் தன் சக்ராயுதத்தை உருட்டி விட அது வந்து இங்கே நின்றது என்கிறது தலவரலாறு.  பெருமாளால் காட்டப்பட்ட இந்த இடத்தையே பெருமாளாகக் கருதி வழிபடுகின்றனர்.  இந்தச் சக்கரம் நின்ற இடத்தில் தற்போது ஒரு தீர்த்தம் உள்ளது.  இதைச் சக்ரதீர்த்தம் என்று அழைக்கின்றனர்.


இங்கே பார்க்க வேண்டிய இடத்தில் சக்ர தீர்த்தம்,  ஹநுமான் காடி,  ஜானகி குண்டம்,  லலிதா தேவி மந்திர், ததீசி குண்டம், ஸ்வயாம்புவ மநு வந்த இடம், சூத முனிவர் பாரதம் சொன்ன இடம், சுகர் பாகவதம் சொன்ன இடம் எனப் பல இடங்கள் இருக்கின்றன.  இவற்றில் நாங்கள் பார்த்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மேலே காண்பது சக்ரதீர்த்தம்.  இங்கே இறைவன் ஶ்ரீஹரி என்னும் திருநாமத்தோடும், இறைவி ஶ்ரீஹரிலக்ஷ்மி என்னும் திரு நாமத்தோடும் காடு வடிவில் காட்சி தருகின்றனர்.  விமானம் ஶ்ரீஹரிவிமானம் என்கின்றனர்.  ஆழ்வார்கள் காலத்தில் வழிபட்ட சிலைகள் இப்போது காணப்படவில்லை. :(

வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை லவ, குசர்கள் இங்கே தான் அரங்கேற்றம் செய்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.   இந்த ஊர் கோமதி நதிக்கரையில் உள்ளது.  கோமதி நதியை ஆதி கங்கை என்று அழைக்கின்றனர். கோமுகி  என்றும் சொல்கின்றனர்.


Saturday, December 21, 2013

சோதனைப் பதிவு

ஷெட்யூல் பண்ணி செக் பண்ண சோதனைப் பதிவு.  ஜி+லே தானா வருதானு பார்க்கணும்.  பார்க்கலாமா?

Friday, December 20, 2013

தாய்மொழியிலேயே பேசுங்களேன்! :)

 http://www.vallamai.com/?p=40743

மேலுள்ள சுட்டியில் வல்லமை மின்னிதழில் (கான்பூர்), பிட்டூர், வால்மீகி ஆசிரம அறிவிப்புப் பலகையின் என் மொழிபெயர்ப்பை மேற்கோள் காட்டி சகோதரி தேமொழி அவர்கள் மொழிக்கொள்கை குறித்தும் தாய்மொழியிலேயே தமிழர்கள் பேசவேண்டியதன் அவசியம் குறித்தும் எழுதியுள்ளார்.  அதற்குச் சுருக்கமாய் நான் கொடுத்த பதில் இது. ஆங்கிலத்தில் அறிவிப்புப் பலகை வைக்காததன் காரணம் அங்கே சுற்றுலா என்பது சுறுசுறுப்பாக நடைபெறுவது இல்லை. அதிகம் வருவதே உள்ளூர் மக்களும், எப்போதேனும் சுற்றுலாப் பயணிகளும் தான்.  அங்கிருக்கும் வழிகாட்டிகளுக்கும் ஆங்கில அறிவு என்பது கிடையாது. ஆனால் இனியாவது உத்திரப் பிரதேச அரசு இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அருமையான கட்டுரை..தமிழர்கள் தங்களுக்குள்ளாகத் தாய்மொழியிலேயே பேசவேண்டும் என்று சொல்வது சரியே.  ஆனால் இதை முதலில் கடைப்பிடிக்க வேண்டியவர்கள்  தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், எஃப்.எம். வானொலி சேவைக்காரர்களுமே.  அவர்களே ஆங்கிலம் கலந்த கலப்பு மொழியிலும், கொச்சைத் தமிழிலும் பேசி மொழியில் மாற்றத்தை தமிழ்த் தேசியமாக்கி வருகின்றனர். ஆங்கிலக்கலப்பில்லாமல் பேசும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சென்னை பொதிகைத் தொலைக்காட்சியும், மக்கள் தொலைக்காட்சியும் மட்டுமே ஆகும். 

பல்லாண்டுகளாக அனைத்து தொழில் நுட்ப சேவைகளுக்கும் உரிய தமிழ்ப்பெயரை அறிமுகம் செய்து வைப்பதில் பொதிகை முன்னணியில் உள்ளது. என்றாலும் என்னுடைய கட்டுரையில் உள்ள அறிவிப்புப் பலகை குறித்த செய்தியில் ஒரு சிறிய தவறு.   வட மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஆங்கில அறிவு மிகக் குறைவு. அதிலும் முக்கியமாய் உத்தரப் பிரதேசத்தின் இந்த சின்னக் கிராமத்து மக்களுக்கு ஆங்கில அறிவு என்பதே இல்லை. ஏழ்மையிலும், அறியாமையிலும் உள்ள மக்கள்..

அதோடு இந்த இடம் அரசால் அரசின் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் இடமும் அல்ல.  தொல்பொருள் துறையின் அறிவிப்போடு சரி. அலுவலகமோ, நிர்வாகமோ அங்கே நடைபெறவில்லை. சுற்றுலா என்பது இங்கே அத்தனை மும்முரமாகவும் கிடையாது. இந்த இடத்தைக் குறித்த தகவல்களை  மிகவும் நன்கு அறிந்தவர்கள் மட்டுமே வருகின்றனர்.  இன்னமும் மின் விநியோகம் கூடச் சரிவர வராத கிராமங்கள் இவை.  இவர்களுக்குத் தெரிந்தது அவர்கள் மொழி மட்டுமே.

ஆனால் அதே சமயம் லக்னோ, கான்பூர் போன்ற ரயில்வே நிறுத்தங்களில் ரயில்வே அறிவிப்புக்கள் ஹிந்தியில் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். இதற்குக் காரணம் ஹிந்தி மொழியிலேயே படிப்பதும் தான்.  ஆங்கில வழியில் கல்வி கற்பது அங்கு மிகக் குறைவாகவே காணமுடியும்.  பெரிய நகரங்களில் இருக்கும். ஆனால் பெரும்பாலான உள்ளூர் மக்கள் ஹிந்தி மொழியில் படித்துவிட்டு உள்ளூரிலேயே கிடைக்கும் வேலையைப் பார்க்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய சாதனையாகவும் நினைக்கின்றனர்.  ஆங்கிலப் படிப்புப் படித்த பெரிய மனிதர் வீட்டுக் குழந்தைகள் ரயில்வே வேலைக்கெல்லாம் வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவும் முடியாது. 

நாங்கள் பலரிடம் பேசிப் பார்த்ததில் பெரிய நகரங்களில், பெரிய பணக்காரக் குடும்பங்கள், உயர் மத்தியதர வர்க்கக் குடும்பங்கள், அரசாங்க அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் குடும்பங்களைத் தவிர மற்றப் பெரும்பான்மை சாதாரண மக்கள் உயர்கல்வியைக் கூட விரும்புவதில்லை. தங்கள் சொந்த ஊரை விட்டு, சொந்த இருப்பிடம், அதன் சுகங்களை விட்டு வெளிக்கிளம்புவது அவர்களுக்கு மிகக் கஷ்டமான ஒன்று ஆகும்.

இது குறித்துப் பேசவும், எழுதவும் நிறையவே இருக்கிறது.  இப்போக் காலை வேளையில் அதிக நேரம் உட்கார முடியாது. முடிந்தால் பின்னர் வருகிறேன். மற்றவர் கருத்துக்களையும் அறிய வேண்டுமே! :)

Tuesday, December 17, 2013

லக்னோ னு பேர் வைச்சால் லக்கும் நோ தானா? :)

கங்கைக்கரையில் பார்க்க வேண்டியவற்றைப் பார்த்துவிட்டு அங்கிருந்து லக்னோ போக வேண்டிக் கிளம்பினோம்.  கான்பூருக்குள் நுழைந்து தான் செல்ல வேண்டும். ஆகவே மறுபடியும் போன வழியிலேயே கொஞ்ச தூரம் சென்று பின்னரே லக்னோ செல்லும் வழியைப் பிடிக்க வேண்டி இருந்தது.  கான்பூரில் ஒரு இடத்தில் அருமையான லஸ்ஸி வாங்கிச் சாப்பிட்டோம்.  20 ரூபாய்க்கு மிக அருமையான லஸ்ஸி. வண்டியில் ஏ.சி. போடச் சொன்னால் டிரைவர் கை ஏசி ஸ்விட்சில் அரை நிமிஷம்  நிற்கும். போட்ட பின்னர் அடுத்த அரை நிமிஷத்திலேயே அதை அணைத்துவிடுவார்.  ஜன்னல் கதவுகளோ சார்த்தியாச்சு ஏசினு நினைச்சு.  அவரானால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு இந்த விளையாட்டையே விளையாடினார். சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்ப் பின்னர் ஏசியே வேண்டாம்னு அறிவிப்புச் செய்துவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து கொண்டோம்.   பின் மாலையில் குளிர் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தாலும் அப்போது வெயில் தாக்கியது. ஆனால் இவரோ ஏசி போட மனமில்லாமல் இருக்கிறாரே!  பேசினது என்னமோ ஏசி வண்டினு தான்! :(

ஒரு வழியா மதியம் ஒரு மணிக்கெல்லாம் லக்னோ வந்துவிட்டோம்.  லக்னோ ஏர்போர்ட்டுக்கு அருகேயே தங்குமிடம் பார்க்க வேண்டி வண்டியை மெதுவாக விடச் சொன்னோம்.  டிரினிடி ஸ்டார் ஹோட்டல் அருகே திரும்பிய ஒரு தெருவில் மெயின் ரோடின் மற்றொரு பகுதியில் ஒரு ஹோட்டல் கண்ணுக்குத் தென்பட்டது.  அங்கே இறங்கிப் போய் விசாரிக்கலாம்னு ரங்க்ஸ் கிளம்பினார். இந்த ஹோட்டலும் மாடியில் தான்! லிஃப்ட் கிடையாது.  தெருவில் இருந்து மாடி ஏறி மேலே செல்ல வேண்டும்.  சென்றவர் வர நேரம் ஆகவே நானும் மாடி ஏறினேன்.  இரண்டு அறை காலி.  வாடகை ஆயிரத்துக்கும் மேலே சொன்னார்.  சாப்பாடு  கிடைக்கும்னு சொன்னார்.  அலுப்பிலும், சலிப்பிலும் இருந்த நாங்கள் சரினு ஒத்துக் கொண்டு ஒரு அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.  அதுக்குள்ளே டிரைவரும் மேலே வரவே ஹோட்டல் பையர்களைக் கூட அனுப்பி சாமான்களை எடுத்துவரச் செய்தோம்.  அறையில் சாமான்களை வைத்துவிட்டு டிரைவர் பணத்துக்கு நிற்க, ஹோட்டல் பையர்களிடம் நான் நாலு தவா ரொட்டியும், மிக்சட் காய்களும், இரண்டு லஸ்ஸியும் வேணும்னு சொன்னேன்.

அதுக்குள்ளே இங்கே தகராறு.  டிரைவர் போட்ட கணக்கும், ரங்க்ஸ் போட்ட கணக்கும் ஒன்றுக்கொன்று இடிக்க, இருவருக்கும் வாக்குவாதம்.  டிரைவர் டவேரா வண்டி ரேட்டில் போட்டு இருக்க, இவரோ இன்டிகா அதுவும் நான் ஏசி ரேட்டுக்குப் போட இருவருக்கும் ஒத்துவராமல் ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்து ஆட்கள் எல்லாம் வந்துட்டாங்க.  எவ்வளவோ எல்லாரும் எடுத்துச் சொல்லியும் கூட ஐநூறு ரூபாய் தருவதாக ரங்க்ஸ் சொல்லியும் டிரைவர் ஒத்துக்கொள்ளவில்லை.  தான் சொன்னது தான் எனப் பிடிவாதமாக நிற்க, ஒருவழியாய் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து அவரை அனுப்பி வைச்சார் ரங்க்ஸ்.  சாப்பாடு என்ன ஆச்சுனு  ரங்க்ஸ் என்னைக் கேட்க, நான் "சொல்லி அனுப்பி இருக்கேன்," என்று சொன்னேன்.  இரண்டரை மணி வாக்கில் ஒரு சின்ன ப்ளாஸ்டிக் தட்டில் நாலு ரொட்டி, ஒவ்வொன்றும் உள்ளங்கை அகலம் தான் ஒரு அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுத்தி ஒரு பையர் கொண்டு வந்து கொடுத்தார்.

"இது என்ன?(யே க்யா ஹை?)

"சாப்பாடு!" (ஆப் கே லியே)

நாங்க தவா ரொட்டி கேட்டிருந்தோமே! ( ஹம்னே தவா ரொட்டி மாங்தே தே)

அதான் இது! (வோ ஹி ஹை!)

எத்தனை பேருக்கு? (கித்னே லோகோங்கோ?)

நாலு ரொட்டி கொடுத்தாங்க!( சார் ரோட்டி தியா தா)

சரி, இன்னொரு ப்ளேட் இல்லையா? ஏன்?( அச்சா, தூஸ்ரா ப்ளேட் நஹி தியா! க்யோ?)

இன்னொரு ப்ளேட்டா? (தூஸ்ரா ப்ளேட்?!!!!!!!!!!!!!!!!!!!) இத்தனை ஆச்சரியப்பட்டார் அந்தப் பையர் இன்னொரு ப்ளேட் கேட்டதுக்கு! 

சரி, காய் ஏதும் இல்லையா?  ஊறுகாய்? (சப்ஜி குச் நஹி தியா? அசார் பி நஹி!)

என்ன காயா, ஊறுகாயா? (க்யா?  சப்ஜி? அசார்?) இந்த உலகத்திலேயே முதல்முறையாக ரொட்டிக்குக் காய் அல்லது ஊறுகாய் கேட்ட முதல் மனிதர்கள் நாங்க தான் என்பது போல் அந்தப் பையர் விசித்திரமாய் எங்களைப் பார்த்தார். 

போய் இன்னொரு தட்டும் சப்ஜியும் கொண்டு வா!(ஜாகே  ஏக் ப்ளேட் அவுர் சப்ஜி லாவோ!)  அரை மனதாகக் கிளம்பிச் சென்றான்.

தலையில் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.  இதுக்குள்ளாக மணி மூணும் ஆகிவிட்டது.  லஸ்ஸியை இன்னொருத்தர் கொண்டு வந்து கொடுத்தார்.  ரிசப்ஷனில் இருந்து சாப்பாடு வந்துடுச்சானு கேட்டு தொலைபேச, நாங்க விஷயத்தைச் சொல்ல அவங்க சொல்லி இருப்பாங்க போல, முன்னர் ரொட்டி கொண்டு வந்து கொடுத்த அதே பையர் மீண்டும் வந்து, "ஆப் கா சப்ஜி பனா ரஹா ஹை! அபி மத் காவோ!" னு சொல்லி, சப்ஜி பண்ணிட்டு இருக்காங்க, சாப்பிடாதீங்கனு சொல்லிட்டுப் போனார்.  அந்த உள்ளங்கை அளவு ரொட்டி எங்களுக்கு ஒரு வாய்க்குக் கூடப் போதாது. ஆனால் வேறு வழியில்லாமல் இன்னொரு அரை மணிக்கும் மேல் காத்திருப்புக்குப் பின்னர் சப்ஜி ஒரு சின்னக் கிண்ணத்தில் வந்தது.  சாப்பாடின் விலை என்ன என்று பார்த்தால் ஒரு ரொட்டி பனிரண்டு ரூபாய் என்றும் ஒரு சப்ஜி 110 ரூபாய் என்றும் போட்டிருந்தது.  வயிற்றெரிச்சல்! அரை வாய்க்குக் கூட வராத சாப்பாடு கிட்டத்தட்ட 200 ரூபாய்! :(

ஒரு வழியாய்ச் சாப்பிட்டு முடித்து ரிசப்ஷனுக்குப் போய் மறுநாள் நைமிசாரண்யம் போக வண்டிக்கு ஏற்பாடு பண்ணும்படியும், அன்று மாலை கொஞ்சம் கடைத்தெருவுக்குப் போக வேண்டி இருப்பதால் அதுக்கு ஆட்டோ வேண்டும் என்றும் கேட்டோம்.  ஆட்டோ ஹோட்டலிலேயே கிடைக்கும் என்றும் சொன்னதோடு ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபாய் என்றும் சொன்னார்கள்.  அந்த ஒரு மணி நேரத்துக்குள் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் போக முடியுமானு தெரியலை! :( ஆனால் வேறு வழி இல்லை.  சரினு ஒத்துக் கொண்டோம். அதுக்குள்ளே கார்க்காரரும் வர வண்டிக்குப் பேசினோம். சின்ன வண்டி கிடைக்காதுனு சொல்லிப் பெரிய வண்டி தான் கிடைக்கும்னு சொல்ல, எப்படியானும் சின்ன வண்டியையே ஏற்பாடு செய்து அனுப்பச் சொல்லிட்டு ஆட்டோ வர கடைக்குக் கிளம்பினோம்.

கடைத்தெருவில் அரைமணி நேரத்தில் வேலை முடிய ஆட்டோக்காரர் ஊரைச் சுத்திக்காட்டவா?  மாயாவதி செய்த யானைச் சிலைகளைக் காட்டவானு கேட்க, எதுவும் வேண்டாம் ஆளை விட்டால் போதும்னு சொல்லிட்டு ஹோட்டலுக்கு வந்தோம்.  மத்தியானச் சாப்பாடு சரியில்லாததால் இரவுக்குச் சாப்பிட வேண்டி ஹோட்டலிலேயே தந்தூர் ரொட்டிக்கும் சப்ஜிக்கும் சொன்னோம்.  வெளியே இருந்து வந்ததும் ஏழு மணிக்குச் சொன்னது வர இரவு ஒன்பதரை ஆகிவிட்டது.  அதுவும் தந்தூர் ரொட்டி ஒரு பக்கம் காந்திப் போய் இருக்க அந்தக் காந்தலைப் பிய்த்துப் போட்டுவிட்டுக் கொடுத்திருக்காங்க.  ரொட்டியில் சத்தே இல்லை. சொல்லப் போனால் ஒண்ணுமே இல்லை. இரு பக்க மடிப்பான ரொட்டியில் காந்தல் பாகம் போக மெலிதாக ஒருபக்க ரொட்டியைக் கற்பனை செய்துக்கோங்க. அதான் அன்றைய இரவு உணவு. சாதாரணமாகத் தந்தூர் ரொட்டி மிகப் பெரிதாக இருக்கும்.  ஒரு ரொட்டியை இரண்டு பாதியாகவே கொடுப்பாங்க. ஒரு பாதியே ஒரு சப்பாத்தி அளவுப் பெரிதாக இருக்கும்.   ஒருத்தருக்கு இரண்டு தந்தூர் ரொட்டியே அதிகம். ஆனால்  இங்கேயோ நேர்மாறாக இருந்தது. 

நல்லவேளையா ஏசி போட்டாங்க.  ஏசி கன்ட்ரோல் ஸ்விட்சை அணைக்கலை.  இரவு நல்லாத் தூங்கினோம்.  காலை எழுந்து  தேநீருக்குச் சொல்ல வேண்டி ரிசப்ஷனுக்குக் கூப்பிட்டதில் பாட் டீ இருக்குனு சொல்லவே இவர் பாட் டீனா நாலு கப் இருக்கும் அது போதும் இரு வேளைக்குனு அதை ஆர்டர் பண்ணினார்.  காலை ஆறரை மணிக்குக் கொடுத்த ஆர்டர் ஏழரைக்கு வந்தது.  அப்போவும் ஒரே ஒரு டீ கப் மட்டும் தான் எடுத்து வந்தார் அதே பையர்.  இன்னொரு கப் வேண்டாமானு கேட்டால் மீண்டும் அதே விசித்திரமான பார்வை.  பொதுவா பாட் காஃபி, பாட் டீ வாங்கினால் ஒரு பாட் டிகாக்‌ஷன், ஒரு பாட் பால், சர்க்கரைக் கிண்ணம், ஸ்பூன்கள் இரண்டு, நாலு கப் கொடுப்பாங்க.  நாங்க அப்படித் தான் பார்த்திருக்கோம். இந்த மாதிரி ஒரு பாட் டீக்கு ஒரே ஒரு கப்பைக் கொண்டு வந்து பார்த்ததே இல்லை.  அதுவும் பஞ்சாபி ஹோட்டலில்!  மறுபடி தலையில் அடித்துக் கொண்டு இன்னொரு கப் கொண்டு வரச் சொல்லிட்டு டீயைக் குடித்தால் சரியா இரண்டே இரண்டு கப் தான் இருக்கு!  இதிலும் ஏமாற்றல்! :(

எல்லாம் முடிச்சுக் குளிச்சு முடிச்சு நைமிசாரண்யம் கிளம்பினோம்.  இங்கே காலை ஆகாரம் வைத்துக் கொண்டால் இன்னிக்குக் கிளம்ப முடியாது. அவ்வளவு நேரம் பண்ணுவாங்கனு வெளியே சாப்பிட்டுக்க முடிவு செய்து கிளம்பினோம்.  ரிசப்ஷனில் ஆள் மாறி இருந்தார்.  அவர் எங்களை விசாரித்துவிட்டு அன்றைய வாடகையைக் கேட்க அதைக் கொடுத்துட்டு, கீழே வண்டி வந்திருக்கிறதாச் சொல்லவும் கீழே இறங்கினோம்.  பெரிய வண்டி தான் வந்திருந்தது. :( ஆனால் கூடவே ஏற்பாடு செய்தவரும் வந்து சின்ன வண்டி கிடைக்கலைனும், சின்ன வண்டித் தொகையே கொடுக்குமாறும் சொல்லிவிட்டு டிரைவரை அறிமுகம் செய்துவிட்டுக் கிளம்ப சரினு நாங்களும் வண்டியில் ஏறி நைமிசாரண்யத்துக்குக் கிளம்பினோம்.


Monday, December 16, 2013

வால்மீகி ஆசிரமத்திலிருந்து கங்கைக்கரைக்கு!


சீதையைப் போன்ற பிரதிமையைச் செய்து அருகே இருக்கும் கோலத்தில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள்.  இந்தச் சிற்பம் சீதை பாதாளத்தில் பிரவேசித்ததாய்ச் சொல்லப்படும் பள்ளத்துக்குப் பின்னால் உள்ள ஒரு தூணில் செய்துக்கப்பட்டுள்ளது. அனைவரும் சீதை பூமியில் மறைவதைப் பார்த்த வண்ணம் இருப்பதாய்ச் செதுக்கி இருக்கிறார்கள்.

சிற்பம் செதுக்கி இருக்கும் தூண்


வால்மீகி ஆசிரமத்தில் பார்க்கவேண்டியவை எல்லாம் பார்த்து முடிந்ததும் அங்கிருந்து கங்கைக்கரையில் உள்ள பிரம்மவர்த்த காட் என்னும் படித்துறைக்குச் செல்லச் சொன்னோம் வண்டி ஓட்டியிடம்.  பாதை குறுகல் தான்.  எல்லா வடநாட்டுத் தெருக்களும் கங்கைக்கரைக்குச் செல்லும் பாதை இப்படித் தான் உள்ளது.  ஆனாலும் வண்டியில் செல்லலாம்.  என்றாலும் வண்டி ஓட்டிக்கு அரை மனசு தான்.  நாங்க வற்புறுத்தவே வண்டியை ஓட்டிச் சென்றார்.  கரைக்குச் சிறிதே தூரத்தில் இந்த வண்டி போகாது இறங்கி நடந்து செல்லுங்கனு சொல்லவே அங்கிருந்த மக்கள் இதைவிடப் பெரிய வண்டியான இனோவா, டவேரா எல்லாம் உள்ளே போயிருக்கு; உங்க வண்டி இன்டிகா தானே இது போகும் போங்கனு வற்புறுத்தி உள்ளே அனுப்பிச்சாங்க.  ஒருவழியா கங்கைக்கரைக்குக் கொண்டு விட்டார். 

இந்தக் கரையில் தான் முதலில் பிரம்மா பூமிக்கு வந்து முதல் மநுவை சிருஷ்டி செய்து சிருஷ்டியை ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர்.  முதல் மநுவின் கோயில் லக்நோவுக்கு அருகிலுள்ள நைமிசாரண்யத்தில் இருக்கிறது.  அடுத்து அங்கே தான் செல்லப் போக்றோம்.  இங்கே பிரம்மா வந்து கால் பதித்ததுக்கு அடையாளமாக மரத்தால் ஆன பாதுகைகள் இருக்கின்றன.  அதை ஒரு தனிக் குண்டத்தில் கங்கைக்கரையிலேயே சந்நிதி போல் கட்டி வைத்திருக்கின்றனர்.  இங்கே வந்து கங்கைக்கரையில் குளித்துவிட்டு பிரம்மாவுக்கு வழிபாடு செய்வதை மிகவும் விசேஷமாகச் சொல்கின்றனர்.



கங்கை


இன்னொரு தோற்றம்



கீழே ரிஷபம் இருக்கிறது தெரியுதா?  இடப்பக்கம் அம்பிகை


மற்றும் சில வடிவங்கள்


பிரம்மாவின் பாதச் சுவடுகள், ஒரு படிக்கட்டில் இது இருக்கிறது.  இந்தப்படிக்கட்டு கங்கை ஓடிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து முப்பது, நாற்பது படிகள் மேலே உள்ளது, வெள்ளக் காலத்தில் கங்கை இதை முழுக அடித்துவிடுவாள்  என்கிறார்கள்.



இன்னொரு தோற்றம். இங்கேயும் பண்டிட்கள் வசூல் மன்னர்களாக இருக்கின்றனர்.




இது தான் துருவன் சந்நிதியாக இருக்கணும்,  அங்கே வழிகாட்டிகள் கிடைக்கலை.  அதனால் சரியாகச் சொல்ல ஆட்கள் இல்லை.







Saturday, December 14, 2013

ஆண்டாளம்மாவின் அழுகை!

நாலு வருஷம் கழிச்சு யு.எஸ்ஸில் இருந்து பையர் வந்திருக்கார்.  அதோட உடம்பும் சரியாய் இல்லாமல் போயிடுச்சு. :( திடீர்னு மூக்கடைப்பு, ஜலதோஷம். உட்காரமுடியலை; படுக்க முடியலை.  கடந்த இரு நாட்களாக வெளியே சாப்பிட நேர்ந்ததில் வயிறு அப்செட். எல்லாமும்சேர்ந்து கொண்டு இரண்டு நாட்களாக எழுந்திருக்கவே முடியலை. மெதுவா நேத்திக்கு மெயில் மட்டும் ஒண்ணு, ரெண்டு பார்க்க உட்கார்ந்தேன்.  முடியலை. படுத்துட்டேன். இன்னிக்குத் தான் கொஞ்சம் பரவாயில்லை.   ஆனாலும் சில நாட்களுக்கு இப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி வந்துட்டுத் தான் போகணும். :))

ஆண்டாளம்மா அழுதாங்களாம். ஶ்ரீரங்கம் கோயில் ஆனையம்மா ஆண்டாள் இங்கே ரொம்பவே பிரசித்தி பெற்றது.  அதுக்குக் காலுக்குத் தங்கக் கொலுசு எல்லாம் பண்ணிப் போட்டிருக்காங்க.  நவராத்திரியன்னிக்கு மெளத் ஆர்கன் எல்லாம் வாசிச்சு, நாட்டியம் ஆடி எல்லாமும் பண்ணுவாங்களாம்.  கூட்டம் தாங்க முடியாது!  அதான் போக முடியலை. :(  இப்போ ஆண்டாளம்மா அழுத கதைக்கு வருவோமா!



இவங்க ஆண்டாளம்மா இல்லை; வேறே ஒரு விசேஷத்துக்கு வந்தவங்களைப் படம் பிடிச்சுப் போட்டேன்.  ஆண்டாளம்மா படம் கிடைக்கலை.  தினமும் ரங்கநாதர் கிட்டே ராத்திரி போயிட்டு வரேன்னு சொல்லிட்டுத் தான் போவாங்க. இவங்களைப் பார்த்துக்கிறது ஶ்ரீதர் என்ற நபர். பாலக்காட்டு பிராமணர்.  ஆண்டாளம்மாவும் கேரளாவிலே இருந்து வந்தாங்க போல. இவர் தான் வருஷக் கணக்கா ஆண்டாளம்மாவைக் குழந்தையை விட கவனமாப் பார்த்துக்கறார்.

ஆண்டாளம்மாவைப் பார்த்துக்க இன்னொரு ஆளை ஏற்பாடு பண்ணச் சொல்லி ஹிந்து அறநிலையத் துறை சொல்லி இருக்கு.  அதுக்காகப் பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு.  ஶ்ரீதரனுக்கு அரை மனசாம். வேண்டாம்னு சொல்லிப் பார்த்திருக்கார்.  ஆனால் நேற்று மீண்டும் பேச்சு, வார்த்தை நடைபெற்றதில் ஶ்ரீதரன் மனம் வருந்திப் போய் வெளியே வந்திருக்கார். வந்தவர் ஆண்டாளம்மாவைப் பார்த்து,"உன்னைப் பார்த்துக்க வேறொரு ஆள் வரப் போறாங்க.  நான் போறேன் உன்னை விட்டுட்டு!" னு சொல்ல, ஆண்டாளம்மா கடுமையா மறுத்து இருக்காங்க.  தும்பிக்கையைத் தலையைனு ஆட்டி மறுத்ததோடு அல்லாமல் கண்ணீர் விட்டும் அழ ஆரம்பிச்சுட்டாங்களாம்.  சுற்றி இருந்த கூட்டம் எல்லாம் பார்த்துட்டு ஆண்டாளம்மாவுக்கும் ஶ்ரீதருக்கும் இருக்கிற பாசப் பிணைப்பைக்கண்டு வியந்து மனம் நெகிழ்ந்து போயிட்டாங்களாம்.

கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு.  பாவம் ஆண்டாளம்மா! :(


செய்திக்கு நன்றி: தினமலர்

Thursday, December 12, 2013

வால்மீகி ஆசிரமத்தில் ----படப்பதிவு 3


வால்மீகி சந்நிதி


வால்மீகி கையில் சுவடிகளுடன்

ராம பரிவாரங்களுடன்(எல்லா இடங்களிலும் கட்டாயமாய் ஶ்ரீராமர் தன் குடும்பத்துடன் காட்சி கொடுக்கிறார்.)


சீதை இருபக்கமும் லவ, குசர்களுடன். தூண் மறைக்கிறது என்பதால் அவர்களைத் தனியே எடுத்திருக்கேன். 


லவன் தன் தாயின் வலப்பக்கத்தில்



இடப்பக்கத்தில் குசன்


ஆஞ்சநேயரைக் கட்டிப் போட்ட இடம்.  இப்போது அங்கே ஒரு ஆஞ்சநேயர் தெற்கே பார்த்துக் கொண்டு தரிசனம் கொடுக்கிறார். தக்ஷிணமுகி ஆஞ்சநேயர் என்றே பெயர்.  அதன் நுழைவாயில் மேலே.



இங்கே பண்டிட் அனைவருக்கும் ரக்ஷைக் கயிறு கட்டி விடுகிறார்.  பணம் ஏதும் வாங்கிக் கொள்ளாத ஒரே இடம் இந்த ஆசிரமம் என்பதோடு, ரக்ஷைக்குப் பணம் கொடுத்ததையும் வாங்கிக்கொள்ளவில்லை. தட்டில் போட்டுவிட்டு வந்தோம்.  ரக்ஷைக் கயிறு இன்னமும் கையில் இருக்கிறது. :))))


சீதை பூமியில் மறைந்த இடம்.  இந்த இடம் அப்படியே வெடிப்புகளோடு பள்ளமாகவே இருந்ததாகவும்  தற்சமயம் அங்கே சிமென்ட் போட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.   மேலே சீதா பாதாள் ப்ரவேஷ் என ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. 

Wednesday, December 11, 2013

தாமதமான வாழ்த்து!



நான் அமரன்!  



பி.கு. கணினியை இன்று முழுதும் தொட முடியலை.  இப்போத் தான் கணினிக்கே வந்தேன்.  நேத்தே ஷெட்யூல் பண்ணி இருக்கணும். முடியலை.  ஆகவே மஹாகவிக்கு தாமதமான அஞ்சலி! 

Tuesday, December 10, 2013

விமரிசனமெல்லாம் இல்லை! எல்லாமே பழசுங்க! :)

பேய், பிசாசு வருதேனு முன்ன்னே, காஞ்சனா படம் பார்த்தேன்.  அதுக்கப்புறமா இப்போ ஹிந்தியிலேயும் ஜெயப்ரதா ஆவியாக நடிச்ச ஒரு படம் ஒண்ணு வந்தது.  கொஞ்ச நாட்கள் முன்னே முதல் பாதியைப் பார்த்திருந்தேனா.  இப்போ முந்தாநாள் மறுபடி படத்தைப் போட்டதும் அடுத்த பாதியைப் பார்த்தேன்.  ஜிதேந்திராவின் மனைவியான ஜெயப்ரதாவை, அவங்க மைத்துனரும், ஓரகத்தியும் சேர்ந்தே வேறே ஒருத்தர் உதவியோட கொன்னுடறாங்க.  ஜெயப்ரதாவுக்குச் சின்னக் குழந்தை இருக்கு.  குழந்தைக்குப் பால் கூடக் கொடுக்கிறதில்லை.

அதைப் பார்த்த ஜெயப்ரதாவின் ஆவி துடித்து அழுகிறது.  அடுப்படியிலே போய்ப் பாலைக் காய்ச்சப் பார்த்தால் ஹிஹிஹி, பால் பாத்திரத்தைப் பிடிக்க முடியலை ஆவியாலே. குழந்தையையும் தூக்க முடியலை.  அப்புறமா அம்மன் கோவிலுக்குப் போய் அழுது, பாட்டுப் பாடினதுக்கு அப்புறமா அம்மனோட தலையிலே இருக்கிற பூ ஆவிப்ரதா கையிலே விழுது.  அதுக்கப்புறமா குழந்தையைக்கொஞ்சிப் பால் கொடுத்து எல்லாம் பண்றாங்க.  அவங்க வீட்டு நாய் தான் அவங்க வந்திருக்கிறதைப் பார்க்க முடியும்.  மத்தவங்க கண்ணிலே படமாட்டாங்க.  எல்லாரும் குழந்தை அந்தரத்தில் இருக்கிறதைப் பார்த்துட்டு பயப்படறாங்க.

இத்தனை அமர்க்களத்துக்கும் ஜிதேந்திரா பாட்டுக்குக் குடிச்சுட்டு உட்கார்ந்திருக்கார்.  அப்போத் தானே ஹீரோ! திடீர்னு அவருக்குக் குழந்தையை ஷாக் கொடுத்துக் கொல்லப் போகிறச்சே அவங்க அண்ணன், அண்ணி பத்தித் தெரிஞ்சுடுது.  உடனே டிஷ்யூம், டிஷ்யூம் தான். அதுக்குள்ளே ஆவிப்ரதாவை ஒரு மாந்திரிகர் மூலமாக் கட்டிப் போட, ஆவிப்ரதா நீண்ட பிரசங்கம் செய்து அந்த மாந்திரிகருக்கு  உண்மையைப் புரிய வைக்க, அவரும் ஆவியை விடுவிக்க, சரியான நேரத்துக்கு வந்து வழக்கமா சண்டை நடக்கும் கோடவுனில் இருந்து குழந்தையை விடுவிக்கிறாங்க.  எல்லாம் முடிஞ்சதும் வழக்கம் போல் கடைசியில் போலீசோடு வரும் ஜிதேந்திரா கண்ணுக்கு மாந்திரிகர் (அவரும் அங்கே வந்துடறார்; பின்னே க்ளைமாக்ஸ் ஆச்சே!) உதவியோடு கொஞ்ச நேரம் ஜெயப்ரதா ஆவிப்ரதாவாத் தெரிய, அவரும் கண்கலங்கி எல்லாம் ஆனதும் அவங்க மறைஞ்சு போறாங்க. போலீஸ் எல்லாரையும் பிடிச்சுட்டுப் போகுது.  சுபம்!

நல்லாப் பூ சுத்தறாங்கப்பா காதிலே!

இன்னொரு படம் கொஞ்சம் காமெடியேனு பார்க்க ஆரம்பிச்சேன், அனுபம் கேரும், காதர்கானும் பீதாம்பர், நீலாம்பர்னு காமெடியனா நடிக்கிறாங்க. அனுபம் கேருக்குக் கண் தெரியாது. அவங்க கிட்டே எப்படியோ வைரம் வந்து சேருது.  எப்படினு அடுத்த தரம் படத்தை ஆரம்பத்திலே பார்த்தாத் தான் தெரியும். :)  அதை ஆட்டோவின் பெட்ரோல் டாங்கிலே யாரோ போட்டுடறாங்க. யாரு? ஆனால் இந்த உண்மை தெரிஞ்சு எல்லாரும் வைரத்தை எடுக்கப் பார்க்க, வில்லன்கள் அனுபம் கேரையும், காதர்கானையும் விரட்டுவதும், இரண்டு பேரும் பண்ணும் தற்செயலான செயல்களால் ஏற்படும் விளைவுகளும் நல்ல காமெடியாக இருந்தது.  இதிலும் வழக்கம்போல் படம் சுபம்.


 இப்போ மஹான் பார்த்துட்டு இருக்கேன்.  அமிதாப் 3 ரோல்லே நடிச்சது.  அப்பா,  இரண்டு மகன். அந்த நாளைய வில்லன் அம்ஜத்கான் தான் இதிலும் வில்லன்.  கூடவே ஷக்தி கபூரும்  அம்ஜத்தின் மகனான இன்னொரு வில்லன்.  ஆனால் இதில் அமிதாபின் பையராக அமிதாபிடமே ஏமாத்தி நடிக்கிறார்.  அமிதாபுக்கு ஜோடியாக அப்பா அமிதாபுக்கு வஹீதா ரஹ்மான், இன்னொரு அமிதாபுக்கு அம்மாவிடம் வளரும் அமிதாபுக்கு பர்வீன் பாபியும், வேறொருத்தரிடம் வளரும் அமிதாபுக்கு ஜீனத் அமனும் ஜோடி.  அவங்களுக்கு எல்லாம் வேலை இல்லை.  வஹீதா கொஞ்சம் நடிச்சுக் காட்டறாங்க. அம்புடுதேன்.  படம் முடியப் போகுது. முடிஞ்சாச்சு! :)))

வால்மீகி ஆசிரமத்தில் ---படப்பதிவு 2

வால்மீகிக்கு ஞானம் கிடைத்த இடம் இதுவெனவும், இங்கே தான் ராமாயணத்தை எழுதினார் எனவும் குறிக்கும் அறிவிப்புப் பலகை மேலே.

கீழே காணப்படுவது சுவற்றில் கிறுக்குவது, எச்சில் துப்புவது போன்றவை செய்யக் கூடாது என்று எச்சரிக்கை.



வால்மீகி சந்நிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் காணப்பட்ட பழங்கால மணி



பேஷ்வாவால் அமைக்கப்பட்ட தீபஸ்தம்பம்



இங்கே இருக்கும் இந்தத் தூணில் தான் ராம அபய ப்ரதானம் என்னும் ஸ்லோகம் எழுதப்பட்டிருப்பதோடு ஶ்ரீராமாநுஜரின் பெயரும் குறிப்பிடப் பட்டுள்ளது.  என்ன காரணம்னு யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. :(


தூணின் இன்னொரு பக்கம்




இங்கே எழுதப்பட்டிருப்பது ஆபதா மபஹர்த்தாரம் ஸ்லோகம்.


Sunday, December 08, 2013

வால்மீகி ஆசிரமத்தில்---படப்பதிவு!


அறிவிப்புப் பலகை.  இந்த அறிவிப்புப் பலகையில் உள்ள வாசகங்கள் கீழ்க்கண்டவாறு:


புராதன காலத்தில் ப்ரஹ்மவர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் மஹரிஷி வால்மிகி அவர்கள் ராமாயண மஹாகாவ்யத்தை எழுதினதாகச் சொல்லப்படுகிறது.  அவருடைய ஆசிரமும் இங்கேயே அமைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  மேலும் ஶ்ரீராமனால் கைவிடப்பட்ட அவருடைய பத்தினி சீதா தேவிக்கு வால்மீகி இங்கே தான் அடைக்கலம் கொடுத்தார்.  சீதையின் இரு புத்திரர்களான லவனுக்கும், குசனுக்கும் இங்கே தான் வித்யாரம்பம் நடந்ததோடு இங்கேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர்.  அவர்கள் இருவரும் இந்த க்ஷேத்திரத்தில் தான் ஶ்ரீராமனுடைய அஷ்வமேத யாகக் குதிரையைப் பிடித்து அடக்கினார்கள்.  இங்கே தான் மஹரிஷி வால்மீகியின் மூலம் தந்தை மற்றும் புத்திரர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது.

இங்கே இருக்கும் வால்மீகி கோயிலின் ஜீர்ணோத்தாரணம் பேஷ்வா பாஜிராவ் 2 மூலமாக  19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்றது.  கோயிலின் கர்பகிருஹத்தில் கறுப்புக் கல்லால் ஆன ஒரு சிவலிங்கமும்  மத்தியகாலத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் பிரதிமையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  பேஷ்வா காலத்தில் அமைகப்பட்ட இங்குள்ள தீபஸ்தம்பமும்  காண்பதற்கு அரிய ஒன்று.

உத்தரப்பிரதேச மாநில  தொல்பொருள் துறை, லக்னோ.



நுழை வாயில்.  இதைத் தாண்டி வரும் சின்னத்தோட்டத்துக்குப் பின்னர் மேலே ஏறும் படிகள்.



இந்தப் படிகளில் மேலேறிச் செல்ல வேண்டும்.




உள்ளே காணப்பட்ட அறிவிப்புப் பலகை.  இந்த அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டவை கீழே:


ஆசிரமத்தின் உள்ளே உள்ள மேற்கண்ட அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்.

ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையின்படி ஶ்ரீலக்ஷ்மணன் சீதையை இங்கே தான் விட்டுச் சென்றான். இந்த ஆசிரமத்தின் உள்ளே தான் சீதா மாதாவின் குடிசை இருந்தது.  இங்கே தான் லவனும், குசனும் பிறந்தனர். ஶ்ரீராமரின் அஷ்வமேத யக்ஞத்திற்காக விடப்பட்ட அஷ்வக் குதிரையை இந்த க்ஷேத்திரத்தில் தான் லவனும், குசனும் பிடித்து வைத்தனர்.  இங்கே தான் சீதை அருகே இருக்கையிலேயே ஹநுமானை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு ஆசிரமத்துக்குள் கொண்டு வந்தனர்.  உள்ளே உள்ள கோயிலில் சீதாதேவி, லவன், குசன், மேலும் புராதனமான தக்ஷிணமுக ஆஞ்சநேயரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

புராதன சித்த பீடம், ஜீர்ணோத்தாரணம் ஆன வருடம் 1999 ஆம் ஆண்டு.





வால்மீகி ஆசிரமத்தில்!

கான்பூரில் இருந்து கிட்டத்தட்டப் பதினைந்து மைல் தொலைவில் பிட்டூர் உள்ளது.  இது ஒரு காலத்தில் பேஷ்வாக்களால் ஆட்சி செய்யப்பட்டது. இந்திய சுதந்திரப் போரில் முக்கியப் பங்கு வகித்த ஊர் ஆகும்.  1857 இன் பிரசித்தி பெற்ற கலகமும் இங்கே தான் ஆரம்பிக்கப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர்.  ராணி லக்ஷ்மி பாய் என்னும் ஜான்சி ராணிக்கும் இது தான் பிறந்த ஊர் என்கின்றனர்.  ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பேஷ்வாவாக இருந்த பாஜிராவ் 2  என்பவர்  பேஷ்வாக்களில் கடைசி பேஷ்வா. ஆங்கிலேயரால் கான்பூரை விட்டு வெளியேற்றப்பட்டார்.  பிட்டூர் ஒரு காலத்தில் கான்பூரையே சேர்ந்திருந்தாலும் முக்கிய அரண்மனையிலிருந்து வெளியேறிய பேஷ்வா பிட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டார்.  நாளடைவில் அவருடைய தத்துப்புத்திரன் நானா சாஹேபிற்கும் இதுவே தலைநகராயிற்று. எனினும் விரைவில் பிரிட்டிஷ் காரர்கள் இங்கே முற்றுகை இட்டு மாளிகையையும் பல கோவில்களையும் தரைமட்டமாக்கினார்கள்.  இது சரித்திரம் சொல்லும் கதை.


ஆனால் ராமாயண காலத்திலேயே இந்த ஊர் இருந்ததாகவும், அப்போது வேறு பெயரில் இருந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.  அதற்கு ஆதாரங்களாக இப்போது இருப்பவையே வால்மீகி ஆசிரமம், லவ, குசர்கள் பிறந்த இடம்.  அஸ்வமேத யாகத்தின் போது போர் புரிய வந்த ஹனுமனை லவ, குசர்கள் கட்டியது. மேலும் சீதை பூமியில் விழுந்து மறைந்த இடம் ஆகியன இந்த ஆசிரமத்திலேயே உள்ளது.  மேலும் ஶ்ரீராமாநுஜர் இங்கே வந்து சென்றிருக்கலாம் என்பதற்கு அடையாளமாக ஒரு ஸ்தம்பமும் இந்த ஆசிரமத்தில் காணப்படுகிறது.  இது குறித்து அங்கு யாருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

ஆசிரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாக கங்கை ஓடுகிறாள்.  கங்கைக்கரையின் மேற்கே அமைந்திருக்கும் இந்த ஊரில் கங்கைக்கரையில் காணப்படும் பிரம்மவர்த்த காட் என்னும் படித்துறையில் தான் பிரம்மா படைப்புத் தொழிலை ஆரம்பிக்கும் முன்னர் கங்கையில் குளித்துவிட்டு வழிபாடுகள் செய்ததாகச் சொல்கின்றனர்.  அவர் பாதச் சுவடுகள் எனப்படும் பாதுகைகள் அங்கே காணப்படுகின்றன.  இவற்றைத் தனி சந்நிதியாக அமைத்து வழிபடுகின்றனர்.  கங்கையில் நீர் வரத்து அதிகம் இருக்கையில் இவை மறைந்துவிடுமாம்.  நாங்கள் சென்றபோது புது வெள்ளம் வடிய ஆரம்பித்த நேரம். ஆகையால் பார்க்க முடிந்தது.

அவத ராஜாவின் மந்திரியால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் கோயிலும் இருக்கிறது.  துருவன் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து என்றென்றும் ஒளிரும் துருவ நக்ஷத்திரப்பதவி பெற்றதும் இந்த கங்கைக்கரையில் தான் எனப்படுகிறது.  நாம் பிட்டூர்க்கு வரும் வழியிலேயே  பிட்டூர்  சாலையிலேயே சித்திதாம் ஆசிரமம் என்னும் ஆசிரமம் காணப்படுகிறது.  சுதான்ஷுஜி மஹாராஜ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட விஷ்வ ஷாந்தி மிஷனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆசிரமும் பெரிதாக இருக்கிறது.  மிகப்பெரிய வளாகம்.  அங்கே கைலை மலையைச் செயற்கையாக நிர்மாணித்திருப்பதாய்க் கூறுகின்றனர்.  ஆனால் நாங்கள் செல்லவில்லை. நேரப் பற்றாக்குறை தான் காரணம்.  இதைத் தவிரவும் ஶ்ரீராமன், ஜானகிக்குக் கோயில், லவ, குசர்களுக்குக் கோயில் என்று கோயில்கள் ஆசிரமம் என உள்ளன.  வால்மீகி ஆசிரமத்தின் அழகும், மெளனமும், அமைதியும், அங்கே சென்றதுமே ஏற்பட்ட நிம்மதி உணர்ச்சியும் வார்த்தையில் வடிக்க முடியாதது.


படங்கள் தனிப்பதிவில்.

Saturday, December 07, 2013

கான்பூரில் ஒரு இரவு!

கான்பூர் வண்டி இரண்டே காலுக்குத் தான் வந்தது.  அதுவரை ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்தோம்.  பொழுது போகலையேனு கஷ்டமே இல்லை.  நம்ம முன்னோர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே பொழுது கழிந்து விட்டது. குடும்ப சமேதராக அனைத்து முன்னோர்களும் கூடி இருந்து களித்ததோடு அல்லாமல் எங்களையும் மகிழ்வித்தனர்.  கையிலே எது இருந்தாலும் அவங்க கிட்டேக் கொடுத்துடணும். ஒரு குரங்கார் எதுக்கோ மனைவியைக் கோவிச்சுண்டார்.  அப்போப் பார்த்து ஒருத்தர் வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டி உரிக்க, அதன் வாசம் தெரிந்த அந்தக் குரங்கார், பழத்தைப் பிடுங்க. அவரிடமிருந்து அவர் மனைவியார் தட்டிப் பறித்தார்.  இப்போ மனைவியிடம் கோவிக்கவில்லை. :))))


 கீழே சித்திரக்கூடம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கையில் நம் முன்னோர்கள் விளையாடுவதைப் படம் எடுக்க முயன்றேன்.  காமிராவை அவங்க கேட்பாங்கனு தோணினதாலே, கையிலிருந்த செல்லிலேயே அவங்களுக்குத் தெரியாமல் சுட்டது இது.


இரண்டு பேரும் கணவன், மனைவினு பார்த்ததுமே புரிஞ்சது.  பெரியவரா இருக்கிறவர் தான் ஐயா.  அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச்  சாப்பிட்டு விட்டார்.  ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார்.  இந்தப் படம் ஒருத்தர் கையிலிருந்த பஜ்ஜி, போண்டாவைத் தட்டிப் பறித்தப்போ எடுத்தது.  சுதாரிச்சுக்கறதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்க. ஆனால் அவங்களைப் படம் எடுக்கிறோம்னு புரிஞ்சுக்கறாங்க.  அதனால் கவனமா இருக்க வேண்டி இருக்கு! :)))


வண்டி வந்ததும் எங்களுக்கு எதிரேயே நின்ற பெட்டியில் முதலில் ரங்க்ஸ் ஏறி உட்கார இடம் ரிஜர்வ் செய்தார்.  அதுக்குள்ளே நான் பெட்டிகளைத் தூக்கி ஒவ்வொன்றாக மேலே ஏற்ற முயல கூட இருந்தவர்களும் உதவ சாமான்களை வைத்துவிட்டு நாங்க சைடிலே இருக்கும் எதிரும் புதிருமான இருக்கையில் அமர்ந்தோம்.  லக்னோவில் ஏறிய அளவுக்குக் கூட்டம் இல்லைனாலும், கூட்டம் இருந்தது.  ஆனால் ஏறி, இறங்கக் கஷ்டப்படவில்லை.   ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு கடையில் ரங்க்ஸுக்குச் சாப்பிட உணவும், தேநீரும் (ப்ளாஸ்க் கொண்டு போயிருந்தோம்) வாங்கி வைத்திருந்தோம்.  வண்டியில் ஏறினதும் அதைச் சாப்பிட்டோம்.  பின்னே?  வெளியிலே எடுத்தால் "கு"ரங்காருக்குத் தானே போய்ச் சேரும்! :))))

கான்பூருக்கு ஏழே முக்காலுக்குப்போகணும்.  ஏழு மணிக்குக் கான்பூரில் இருந்து சிறிது தூரமே இருந்த ஒரு லோகல் ஸ்டேஷனில் வண்டியை நிறுத்திட்டாங்க.  ப்ளாட்ஃபார்ம் காலி இல்லையாம்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் வண்டி கான்பூர் சென்றது.  நாங்க ஏறின பெட்டியிலிருந்து கீழே இறங்குகையில் நடைமேடை இல்லை.  கொஞ்சம் சிரமப் பட்டுத் தான் இறங்க வேண்டி இருந்தது.  ரயில்வேயில் அறை கிடைக்குமானு விசாரிச்சால் டார்மிட்டரி தான் இருக்குனு சொல்லிட்டாங்க.  அதுக்குள்ளே ஒரு ஆட்டோப் பையர் நான் நல்ல ஹோட்டலாக் கூட்டிப் போறேன்னு சாமான்களைத் தூக்கிக் கொண்டு செல்ல, நாங்களும் பின் தொடர்ந்தோம்.

உண்மையிலேயே நல்ல பையர் தான்.  நல்ல ஹோட்டலாகப் பார்த்து ஆட்டோவைக் கொண்டு நிறுத்தினார்.  அறையும் இருந்தது.  க்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கேயும் மாடி!  லிஃப்ட் கிடையாது.  இவ்வளவு வாடகை வாங்கிக்கறீங்க ? ஒரு லிஃப்ட் போடக் கூடாதானு கேட்டுட்டு அறைக்கு மேலே ஏறினோம்.  சாமான்களை ஹோட்டலில் வேலை செய்யும் கேர்டேக்கர் எடுத்து வந்தார்.
அறையில் கொண்டு வைத்துவிட்டு சாப்பிடறீங்களா? என்ன வேணும்னு  விசாரித்தார்.  அது என்னமோ தெரியலை.  எங்களுக்கும் அவருக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் போய்விட்டது.  நாங்களும் நாலு தவா ரொட்டியும், சப்ஜியும், மோரும் வேண்டும் னு சொன்னோம்.  அரை மணியில் சுடச் சுடச் சாப்பாடு ரெடி!  வேறு ஏதும் வேணுமானு கேட்டார்.  காலையில் அறையைக் காலி செய்வதால் காலை ஆகாரத்தைச் சீக்கிரமே கொடுக்கச் சொன்னோம். காலைத் தேநீர் அவங்களே ஆறு மணிக்குக் கொடுத்துடுவாங்களாம்.  சாப்பிட்டுவிட்டுத் தொலைபேசியில் அழைத்த மகளோடு பேசிவிட்டுப் படுத்துத் தூங்கினோம்.

மறுநாள் காலை பாட் டீ வந்தது.  தேநீர்னா அதான் தேநீர்.  சுவையான தேநீர். முதல்நாள் இரவு உணவும் சுவையாகவே இருந்தது.  ஏழரை மணிக்குக் காலை ஆகாரமும் கொண்டு வந்துவிட்டார்.  நாங்க அங்கிருந்து பிட்டூர் வால்மீகி ஆசிரமம் போயிட்டுப் பின்னர் நேரே லக்னோ செல்லவேண்டும் என்பதைச் சொல்லி வண்டி ஏற்பாடு செய்யச் சொன்னோம்.  அவரும் ஒரு ஆளை அனுப்பி வைத்தார்.  அவரோடு வெகுநேரம் பேரம் பேசிக் கடைசியில் கிலோமீட்டருக்கு எட்டு ரூபாய்க்கு அவரும் அரைமனதாக,  நாங்களும் கூட இருக்கேனு அரை மனதாக ஒத்துக் கொண்டோம்.  ஒன்பதரைக்கு வண்டியைக் கொண்டு வரச் சொல்லிவிட்டோம்.  வால்மீகி ஆசிரமத்திலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி வந்துட்டுக் கிளம்பினால் பனிரண்டு மணி ஆகிடும். ஆகையால் நேரே லக்னோ போயிட்டால் அங்கே போய்ச் சாப்பிட்டுக்கலாம்னு முடிவெடுத்தோம்.  இங்கே காலை ஆகாரமாக சாதா பரோட்டாவும், சப்ஜி, தயிர், ஊறுகாயோடு கொடுத்தாங்க.  மீண்டும் ஒரு தேநீர் சாப்பிட்டுவிட்டு ஒன்பதரைக்கு வால்மீகி ஆசிரமம் கிளம்பினோம். 

Thursday, December 05, 2013

சித்திரகூடத்திலிருந்து கான்பூரை நோக்கி! சங்கடங்கள் தீர்ந்தனவா?

மறுநாள் காலை ஐந்து மணிக்கே  எழுந்துவிட்டாலும், (உண்மையில் விழித்தது நாலரை மணி) ஆறரை மணிக்குத் தேநீர் கேட்டிருந்ததால் அது வரை பொறுத்திருந்தோம்.  எனக்கோ பசியிலும், சரியான உறக்கமில்லாமலும் ஒரு மாதிரி மயக்கமாகவே இருந்தது.  எப்போடா ஆறரை ஆகும்னு காத்திருந்து நாமே கீழே போகலாம்னு அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பினோம்.  படியில் இறங்கப் போகும் சமயம் அந்தக் காப்பாளர் பையர் எங்களை அழைத்துக் கொண்டே வந்தார்.  திரும்பிப் பார்த்தால் இரண்டாவது தளத்தில் வேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நீர் விட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.  எங்களைப் பார்த்து, "தேநீர் தானே?  கீழே போங்க, இதோ இந்த வேலையை முடிச்சுட்டு, தண்ணீர்த் தொட்டியை நிரப்பிட்டு வரேன்."  என்றார்.

அப்பாடா, உயிர் வந்ததுனு இருவரும் கீழே சென்றோம்.  வேறொருத்தரும் அங்கே இன்னொரு கட்டிலில் படுத்திருந்தார்.  சற்று நேரத்துக்கெல்லாம் மேலிருந்து அந்தப் பையர் வந்தார்.  கொல்லைப்பக்கம் என்று சொல்லக் கூடிய இடத்துக்குச் சென்று குழாயடியில் ஏதோ செய்துவிட்டு ஒரு சாஸ்பானில் நீர் நிரப்பி வந்தார். தேநீருக்குத் தான் என நினைத்தோம்.  சற்று நேரம் அப்படியும், இப்படியுமாகப் போய்க் கொண்டிருந்தார்.  படுத்திருந்த ஆளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.  நாங்க அங்கே போட்டிருந்த தொலைக்காட்சியில் ஒரு கண்ணும், தேநீர் வருதானு இன்னொரு கண்ணுமாக உட்கார்ந்திருந்தோம். திடீர்னு என் பக்கம் வந்து, "பானி கரம் ஹோ கயா!" என்றார்.  தேநீருக்குத் தான் என நினைத்து, நான் "அச்சா!" என்றேன்.

ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் அரை வாளித் தண்ணீரை (வெந்நீர்) கொண்டு வந்து என் முன்னே வைக்க, என்ன இது? என்று கேட்டேன். "ஆப் கோ நஹானே கே லியே பானி!" என்றார்.  என்ன இது, குளிக்க வெந்நீரை அதுக்குள்ளே கொண்டு வந்துட்டாரேனு நினைச்சு, "ஏன் இவ்வளவு சீக்கிரமாக் கொண்டு வந்தீங்க?" னு கேட்க, "கரம் ஹோ கயா ந!" என்றார்.  நானும் சரி தொலையட்டும்னு நினைச்சு மாடியில் அறை வாசலில் கொண்டு போய் வைக்கச் சொன்னேன்.  அந்த இரண்டடி உயரப் படியில் நானோ, அவரோ அந்த வாளி வெந்நீரைத் தூக்கிக் கொண்டு ஏற முடியாது.  அரை மனதாகக் கொண்டு போய் வைத்தார்.

இன்னும் கொஞ்சம் நேரம் போனது.  மணி ஏழரையும் ஆகி ஏழே முக்காலும் ஆனது.  தேநீர்னு எழுதித் தான் பார்க்கணும் போலனு நினைச்சேன்.  அதுக்குள்ளே அந்த நபர் மீண்டும் என் கிட்டே வந்து, "பானி டன்டா ஹோகயா ஹோகா!  ஆப் ஜாகர் நஹா லீஜியே!"  என்றார்.  உடனே நம்ம ரங்க்ஸ் "தேநீரைக் கொடுத்தால் நாங்க போயிடறோம்.  இங்கே ஏன் உட்காரப் போறோம்?" என்றார்.  அந்த நபர், "சாய், சாய், வாய் குச் பி நஹி!  தூத் கோ பில்லி பி கர் கயி!" என்று சாவகாசமாகச் சொன்னார்.

இரண்டு பேருக்கும் தூக்கி வாரிப் போட இதை முன்னாலேயே சொல்வதற்கென்ன? என்று கேட்டோம்.  அதுக்கு பதிலே வரலை.  இப்போப் போய்ப் பால் வாங்கணும்.  அதுக்குக் கடைத்தெருவுக்குத் தான் போகணும்; என்னாலே இப்போப் போக முடியாதுனு கறாராகக் கூற, நாங்க பக்கத்து வீட்டிலே இரண்டு, மூணு பசு மாடு இருக்கு. நாங்க போய்ப் பால் வாங்கி வரோம், தேநீர் தயாரித்துக் கொடுங்கனு கேட்டதுக்கு, அவங்க பால் எல்லாம் வெளியே கொடுக்க மாட்டாங்க.  நீங்க வாங்கி வந்தாலும் என்னால் போட முடியாது." அப்படினு சொல்ல இரண்டு பேருக்குமே கண்ணீர் நிஜம்மாவே வந்துவிட்டது.

பேசாமல் மாடி ஏறினோம். அறை வாசலில் வைத்திருந்த அரை வாளி வெந்நீரில்(பேர்தான் வெந்நீர்)  அவசரமாய்க் குளித்தேன்னு பேர் பண்ணினேன்.  அப்புறமா அவரும் குளித்துவிட்டு வந்தார்.  இரண்டு பேரும் மறுபடி கீழிறங்கி நேற்றுப்போன திசைக்கு எதிர்த் திசையில் ஏதேனும் தேநீர்க்கடை இருந்தால் குடிச்சுட்டு அப்படியே காலை ஆகாரமும் கிடைக்குமானு பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்.  ரயில்வே ஸ்டேஷன் போக ஆட்டோவுக்கு இந்த நபரை நம்பினால் நாம் ரயிலைப் பிடிக்க முடியாது. அது ராத்திரி இரண்டு மணி வண்டியாய் இருந்தாலும் என எனக்குத் தோன்ற அவரிடம் சொன்னேன்.  அவரும் ஆமோதித்தார்.  இருவரும் கீழே இறங்கி நேற்றுச் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் போனால் அங்கே ஒரு உள்ளூர்ப் பேருந்து நிலையம், அதை ஒட்டி ட்ராவலர்ஸ் பங்களா எல்லாமும் இருந்தன.

கடவுளே, இந்த ட்ராவலர்ஸ் பங்களாவுக்குக் கூட வந்திருக்கலாமே! னு நினைச்சோம்.  அங்கே இருந்த ஒரு டீக்கடையில் நாஷ்தாவும் கிடைக்கும்னு அறிவிப்புப் பலகை இருந்தது.  நாங்க தேநீர் தான் கேட்டோம்.  அவ்வளவு சீக்கிரம் காலை ஆகாரம் சாப்பிட வேண்டாம்;  கிளம்பும் முன்னர் சாப்பிட்டுக்கலாம்.  வழியில்  சாப்பிட ஏதேனும் வாங்கி வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணினோம்.  ஏனெனில் பனிரண்டு மணிக்குள்ளாக அறையைக் காலி செய்யணும்.  அதோடு முதல்நாள் கொடுத்த பணம் முடிகிறது.  பத்து நிமிஷம் கூடப் போனால் கூடக் கறாராக ஒரு நாள் வாடகையை வசூலிப்பார்கள்.

அந்தத் தேநீர்க்கடையில் நாங்க வாங்கின தேநீருக்குப் பதினாறு ரூபாய் சார்ஜ் பண்ணிட்டாங்க.  தூக்கி வாரிப் போட்டது.  குடிச்ச தேநீரை என்ன செய்ய முடியும்?  முதல்லேயே தேநீரின் விலையைக் கேட்டிருக்கணும்.  எல்லா இடங்களிலும் ஐந்து ரூபாய் தான் ஒரு கப் (சின்னது)  நாங்க ஒருத்தருக்கு இரண்டு கப் கேட்டிருந்தோம். ஆகவே நாலு கப் இருபது ரூபாய் தான் என நினைத்தால் 32 ரூ. கொடுக்க வேண்டி வந்தது.  கொடுத்துவிட்டு நாஷ்தா பற்றி விசாரிக்காமல் நடையைக் கட்டினோம்.  ஹோட்டலில் நுழைந்ததுமே விடுதிக்காப்பாளரிடம், நாங்க பனிரண்டு மணிக்குக் காலி பண்ணப் போவதாகவும், ஆட்டோ நாங்களே பார்த்துக்கறோம்னும் சொல்லிட்டு மேலே போய் சாமான்களை எல்லாம் ஒழுங்கு செய்து கட்டி வைத்துவிட்டுப் பத்து மணி வரை பொழுது போக்கிவிட்டு மீண்டும் கீழே வந்தோம்.

நேற்றுச் சென்ற கடைத்தெருவில் போய்க் காலை ஆகாரம் சாப்பிடலாம்னு கிளம்பினோம்.  முதல்நாள் எங்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்காரர் இன்று சவாரியுடன் போய்க் கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்ததும் நிறுத்தி இரண்டு மணி நேரத்துக்குள்ளாக பரதன் குகையைக் காட்டிவிட்டுக் கொண்டு விடுவதாகவும் நானூறு ரூபாய் கொடுக்குமாறும் மீண்டும் கேட்டார்.  அவர் ஏமாத்துகிறார் என்பது நன்கு புரிந்தது.  கிளம்பும் சமயம் தகராறு வேண்டாம்னு நாங்க பார்க்கலைனு சொல்லிட்டோம்.  காலை ஆகாரம் சாப்பிட கடைத்தெருப்பக்கம் சென்ற ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றோம். எவ்வளவுனு கேட்டுக்காமல் ஒருத்தருக்கு  ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம். ஆட்டோக்காரர் பேசாமல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.  முதல்நாள் ஏமாந்தது நன்கு புரிய வந்தது.

அந்த ஹோட்டலில் தான் முதல்நாள் மதியம் சாப்பாடு சாப்பிட்டிருந்தோம் ஆகவே அங்கேயே சென்று நான் சாதா பரோட்டா இரண்டும், அவர் ஆலு பரோட்டாவும் சாப்பிட்டார்.  இங்கேயும் காலை ஆகாரத்தில் இனிப்புக் கட்டாயம் உண்டு.  மில்க் கேக் கொடுத்தாங்க.  அதைத் தவிர ஒரு சப்ஜி, தயிர், ஊறுகாய்.  சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தோம்.  பெரிய கப்பில் தேநீர் . பத்து ரூபாய் தான்.  காலை ஆகாரம் ஐம்பது ரூபாய் தான். அந்த ஹோட்டல்காரர் முதல்நாள் நான் சாப்பிடாததையும் மோர் வாங்கிக் குடித்ததையும் நினைவு வைத்துக் கொண்டு பேசினார்.  நாங்க சார்தாம் செல்ல எத்தனை ரூபாய் கொடுக்கணும்னு அப்போதான் (உணர்ச்சியே அப்போத் தான் வந்ததோ?) கேட்டோம்.  சார்தாம் ஹனுமான் தாரா, அநசூயா ஆசிரமம், குப்த கோதாவரி, பரதன் குகை நாலும் செல்ல ஐநூறு ரூபாய் என்றும் ஹனுமான் தாரா உங்களால் போக முடியாது மற்ற மூன்று இடங்களுக்கு நானூறு ரூபாயில் ஏற்பாடு செய்து தருவதாகவும் சொல்ல, பணம் ஏமாந்தது குறித்தும், மீண்டும் ஏமாற்ற நினைத்தது குறித்தும் மனம் அடித்துக் கொண்டது.

அவரிடம் நாங்க போயிட்டு வந்தாச்சுனு சொல்லிட்டு(பின்னே, ஏமாந்தோம்னு சொல்ல முடியுமா) சற்று நேரம் பேசிவிட்டுக் கிளம்பினோம்.  ஹோட்டலுக்குப் போய் மாடியில் அறைக்கு வந்தோம்.  மணி அதற்குள்ளாகப் பதினொன்று ஆகி இருக்க, ரங்க்ஸ் கிளம்பிடலாம்.  இங்கேயும் உட்கார்ந்து தான் இருக்கப் போறோம்.  ஸ்டேஷன் போயே உட்காரலாம். என்றார்.  ஆகவே பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு மெல்லக் கீழே இறங்கினோம்.  இறங்குகையில் அந்த விடுதிக்காப்பாளர் மாடித் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரியிடம் பேசிக் கொண்டிருந்தார்.  நான் மிச்சப் பணமும், தேநீருக்குக் கொடுத்த பணமும் வரணுமேனு ரங்க்ஸிடம் சொல்ல, அவர் மிச்சப் பணத்தை விட்டுடு.  ஆட்டோக்காரன் கிட்டே நூற்றுக் கணக்கில் ஏமாந்தாச்சு.  டீக்குக் கொடுத்ததை மட்டும் கேட்டு வாங்கறேன்னு அதைக் கேட்டு வாங்கினார்.  அப்போவும் நடந்ததுக்கு ஒரு வார்த்தை மன்னிப்போ, வருத்தமோ  காட்டிக்காமல் கிண்டலாகச் சிரித்தபடியே இருந்தார்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்து சரிவில் இறங்கி, மீண்டும் மேலேறிச் சாலைக்கு வந்தோம்.  ஆட்டோவுக்குக் காத்திருந்தோம்.  ஒரு ஆட்டோ முழுதும் சவாரியோடு போனது.  எங்க சாமான்களைப் பார்த்ததுமே நிறுத்தவில்லை.  வைக்க இடம் இல்லை.  அடுத்து ஒன்று காலியாக வர, அதை நிறுத்தி, நாங்க ஸ்டேஷன் செல்லணும்னு சொல்லிக் கேட்டோம். நல்லவேளையாக அது ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ஆட்டோ தான்.  அந்த ஆட்டோ ஓட்டி நாங்க மட்டும் தனியாப் போகணும்னா 200 ரூபாய் கொடுக்கணும்னு சொல்லி, "ரிஜர்வ்?" னு கேட்க, நாங்களும் ரிஜர்வ்னு சொல்லி அங்கீகாரம் செய்துவிட்டு வண்டியில் ஏறினோம்.  சாமான்களை ஆட்டோ டிரைவர் வைத்து உதவினார்.  சிறிது தூரத்தில் சில போலீஸ்காரர்கள் ஆட்டோவில் ஏறி டிரைவருக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டனர்.



மேலும் யாரும் தொந்திரவு செய்யாமல் இருக்கவே ஶ்ரீராமன் அனுப்பி வைச்சிருப்பான்னு பேசிக் கொண்டோம்.  இருவருமே ஸ்டேஷன் பக்கம் ட்யூட்டியில் போறவங்க.  ஆகையால் டிரைவரும் மறுப்புச் சொல்லலை.  நாங்களும் மறுப்புச் சொல்லலை.

இந்த ஆட்டோ டிரைவர் நல்லவராக இருந்ததோடு ஸ்டேஷன் வாசலில் இறக்கிவிட்டு சாமான்களையும் எடுத்துக் கொடுத்து உதவினார்.  ஸ்டேஷன் போய் டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயிலுக்குக் காத்திருந்தோம்.

Wednesday, December 04, 2013

சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் -- தொடர்ச்சி

சற்று நேரத்தில் மீண்டும் அறைக்கதவு தட்டப்பட, கதவைத் திறந்தேன். ஐம்பது மில்லி கூடப் பிடிக்காத ஒரு தம்ளரில் தேநீர்.  அந்த விடுதிக்காப்பாளரோடு முன்னர் எங்களிடம் பேசிச் சமாதானம் செய்த நபரும் வந்திருந்தார்.  தேநீரை எடுத்துக்க சொன்னாங்க.  இந்த மட்டும் கிடைச்சதேனு நினைச்சு எடுத்துக் கொண்டோம். மீண்டும் சரியா ஏழரைக்குள்ளாக உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வருவார்னு உறுதியளித்துவிட்டுப் போனார்.  நல்லவேளையாகப் பழங்கள் நிறைய வாங்கி வைச்சிருந்தோம்.  அதிலிருந்து ஒரு ஆப்பிளும், வாழைப்பழமும் எடுத்துக் கொண்டேன்.  முதல்நாள் அயோத்தியிலிருந்து கிளம்புகையில் உணவு சாப்பிட்டது தான்.  சித்திரகூடத்தில் காலை ஆகாரமும் நான் ஒழுங்காய்ச் சாப்பிடலை.  அங்கே சுத்தினது,  சில இடங்களில்  ஏறி இறங்கியது,  குகைக்குள் சென்றதுனு உடம்பு அசதியும், பசியும் மிதமிஞ்சிப் போயிருந்தது.  ஏழரை மணிக்குக் காத்திருந்தேன்.

ஏழரை ஆகியும் ஒண்ணுமே வரவில்லை.  ரங்க்ஸ் வெளியே சென்று பார்த்தப்போ அந்தத் தளத்தில் காலியாய்க் கிடந்த  மற்ற அறைகளுக்குப் புது நபர்கள் வந்திருப்பதாகவும், அவங்களோடு பேசிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் பத்து நிமிஷத்தில் போய் வாங்கி வருவதாய்ச் சொன்னதாகவும் சொன்னார். சரினு காத்திருந்தோம்.  எட்டரை மணியும் ஆகிவிட்டது.  அந்த ஆள் போனதாய்த் தெரியலை.  கீழே போய்ப் பார்த்தார்.  அந்த நபர் கிளம்பவே இல்லைனு தெரிஞ்சது.  சும்மாத் தான் இருந்திருக்கார்.  ஆனால் சாப்பாடு வாங்கப் போகலை. இவரும் சும்மாச் சும்மாச் சொல்லக் கூடாதுனு பார்த்துட்டு வந்துட்டார்.  ஒன்பதும் ஆயிற்று.  ஒன்பதரையும் ஆயிற்று. இப்போ அவருக்கும் பசி தாங்க முடியாமல் போக மீண்டும் கீழே போனார்.  அந்த நபர் அப்போது தான் யாருடனோ வண்டியில் கிளம்பிக் கொண்டிருந்திருக்கிறார்.

சரி எப்படியும் அரை மணியில் வந்துடுவார்னு நினைச்சால் பத்தரைக்கும் வரவே இல்லை; உடனே எங்களிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொண்டோம்.  அந்த விடுதிக்காப்பாளப் பையர்னு நினைச்சால் வேறே யாரோ எடுத்துப் பேசினாங்க.  என்ன விஷயம்னு கேட்டு, நாங்க சொன்னதும், கவனிக்கிறேன்னு சொல்லிட்டு வைச்சுட்டார்.  சற்று நேரத்திற்கெல்லாம் கிட்டத்தட்டப் பதினோரு மணி ஆகையில் அந்த நபர் அவசரம் அவசரமாக வந்தார்.  அதற்குள்ளாக ரங்க்ஸ் மீண்டும் வந்துட்டாரானு பார்க்கப் போக அவரிடம். ஏன் முதலாளிக்குத் தொலைபேசினீங்கனு கேட்டிருக்கார்.  நாங்க அப்போது தான் பேசினது முதலாளினு தெரிஞ்சுண்டோம்.  அதைச் சொன்னதும், ஒண்ணும் சொல்லாமல் வாங்கி வந்த சாப்பாடைக் கொடுத்துட்டுப் போக இருந்தவரிடம், சும்மா இருக்காமல் ரங்க்ஸ் காலை தேநீர் வேணும், சாயந்திரம் கொடுத்தது போல் இரண்டு கப் கொடு, எவ்வளவு பைசா கொடுக்கணும்னு கேட்டுட்டு,சாயந்திரம் கொடுத்ததுக்கும் சேர்த்துப் பணம் கொடுத்தார்.  காலை ஆறரை மணிக்குத் தரச் சொன்னதுக்கு அந்த நபரும் சம்மதித்தார்.

உணவுப் பார்சலைப் பிரித்தால், அதைக் கொண்டு வந்திருந்த ப்ளாஸ்டிக் பையே மிகவும் மட்டரகமானதாக இருந்தது எனில் உள்ளிருந்து ஒரே நாற்றம்.  நாங்க கேட்டது ஆறு தவா ரொட்டியும், ஒரே ஒரு சப்ஜியும் மட்டுமே.  இதிலோ பத்து ரொட்டிகளுக்கு மேல் இருந்ததோடு ஏதோ தால், சப்ஜினு வேறே இருந்தது.  தெரு ஓர டாபாவில் வாங்கி இருக்கார் போல.   நல்ல ஹோட்டல்களில் வாங்கி இருந்திருந்தால் அலுமினியம் ஃபாயில் டப்பாக்களில் போட்டு, அதையும் ஒரு அழகான அட்டைப்பெட்டியில் வைத்துக் கொடுத்திருப்பாங்க.  இது எங்கே எப்படிச் செய்ததோ!   அதோடு இது ஒருவருக்கு மட்டுமே ஆன உணவு.  ஏனெனில் இங்கே சாப்பாடு ஐம்பது ரூபாய்க்குப் பத்து ரொட்டிகள் தராங்க.  சாதம் வேண்டாம்னா கூட இரண்டு ரொட்டி.  ஆகவே ஒருத்தருக்கான உணவைத் தான் வாங்கி இருக்கார்.  இது கட்டாயம் நூறு ரூபாயும் இருக்காது. அந்த உணவை அப்படியே கட்டி அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கையில் இருந்த சில பிஸ்கட்களையும், இன்னும் கொஞ்சம் பழமும் சாப்பிட்டுவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டுப் படுத்தோம். 

Tuesday, December 03, 2013

சித்திரவதையுடன் சித்திர கூடத்தில் --தொடர்ச்சி!

ஆனால் நான்கும் சேர்ந்து தான் ஒரு டிரிப் என்பதை என்னமோ நானும் வற்புறுத்தவில்லை. சாதாரணமாக நான் எங்கே போனாலும் இம்மாதிரி விஷயங்களில் முன்னெச்சரிக்கையா இருக்கிறதோடு கூடியவரை சண்டையும் நான் தான் போடுவேன்.  எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். அன்னிக்கு என்னமோ எனக்கும் ஆகிவிட்டது.  சாப்பிட அழைத்துச் செல்லும் முன்னர் அந்தப் பையரிடம் சாப்பாடு ஆன பின்னால் பரதன் குகை பார்க்கலாமானு கேட்டதுக்கு அதுக்குத் தனியாப் பணம் கொடுக்கணும்னு என்னிடமும் சொன்னார். திரும்பும் வழியில் ஆட்டோவை எங்களுக்கு மட்டும்னு பேசி இருப்பதை லக்ஷியம் செய்யாமல் எல்லாரையும் ஏற்றிக் கொள்ளவும் ஆரம்பித்து விட்ட்டார்.  என்னால் முடிந்தவரை ஆக்ஷேபங்களைத் தெரிவித்தேன்.  என்றாலும் அது நிற்கவில்லை.

அதோடு நாங்க டிக்கெட் முன்பதிவுக்குப் போனோம்.  மறுநாள் கான்பூர் செல்லும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் முன்பதிவு செய்யச் சென்றோம்.  அங்கே நான் லக்னோ செல்லணும்னு சொல்ல, கான்பூர் தான் செல்லணும்னு ரங்க்ஸ் சொல்ல முன்பதிவு செய்யும் ஏஜென்ட் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார, சிறிது நேரம் ஒரே குழப்பம்.  லக்னோ செல்வதானால் நாங்க வந்த அதே ரயில் ஜபல்பூரிலிருந்து திரும்பி சித்ரகூடத்துக்கு நடு இரவு இரண்டு மணிக்கு வருது. அதைப் பிடிக்கணும்.  கான்பூர் போறதானால் மதியம் இரண்டு மணிக்கு இங்கிருந்தே கிளம்புது.  கான்பூருக்கு எட்டு மணிக்கெல்லாம் போயிடும். அதிலே போகலாம். என்று அவர் சொல்ல,   நான் நடு இரவில் லக்னோ செல்லும் சித்ரகூட் எக்ஸ்பிரஸில்  ஏ.சி. முன் பதிவு செய்துட்டுப் போகலாம்னு சொன்னேன்.  ஆனால் ரங்க்ஸோ இங்கிருந்து கிளம்பும் வண்டி எல்லாமே பொதுப்பெட்டி தான்.  சுலபமா இடம் கிடைக்கும்.  கஷ்டப்பட வேண்டாம். வரச்சே இருக்கும் கஷ்டம் இருக்காதுனு எல்லாம் சொல்லி என்னை ஒரு மாதிரி சம்மதிக்க வைத்தார்.  கடைசியில் முன் பதிவே செய்யலை. பின்னர் சாப்பிட அழைத்துச் செல்லச் சொன்னோம்.

போகும்போது அந்த ஆட்டோக்காரரிடம்  மறுநாள் இரண்டு மணிக்கு வண்டி என்றும் ரயில்வே ஸ்டேஷனில் கொண்டு விட வருவாயா என்றும் கேட்டதற்கு உருப்படியாக ஒரு விஷயத்தை அந்த ஆட்டோப் பையர் கூறினார்.  அவர் மத்தியப் பிரதேச வாசி என்றும் அவர் ஆட்டோ மத்தியப் பிரதேச எல்லையில் மட்டுமே ஓட்டணும்னும், ரயில்வே ஸ்டேஷன் உத்திரப் பிரதேசப் பகுதியில் இருப்பதால் அங்கிருக்கும் ஆட்டோக்காரங்க தான் அழைத்துச் செல்ல முடியும்னு சொன்னார்.  அவங்க இங்கே வரலாமானு கேட்டதுக்கு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டான்டுனு அவங்க அழைத்துச் செல்லவும், அங்கிருந்து இங்கே கொண்டு விடவும் செய்வார்கள்.  மற்றபடி இங்கே உள்ளே செல்ல நாங்க மட்டும்.  அவங்க வர முடியாது என்றார். விசித்திரமான இந்தச் செய்தியைக் கேட்டு உள்ளூரக்கொஞ்சம் பயமும் வந்தது.  உ.பி. ஆட்டோ நாம கிளம்பும் நேரம் தங்கி இருக்கும் ஹோட்டல் பக்கமா வரணும்.  வந்தால் தான் கிடைக்கும். இல்லைனா என்ன செய்யறது? வயித்தை இப்போவே கலக்க ஆரம்பிக்க ரங்க்ஸிடம் என் கவலையைப் பகிர, அவரோ இந்த ஆட்டோ ஒண்ணையே பிடிச்சு உ.பி. எல்லை வரை போயிட்டு அங்கிருந்து  உபி ஆட்டோ பிடிச்சுக்கலாம், ஒண்ணும் கஷ்டமில்லைனு சொன்னார்.

ஹோட்டலில் நான் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன்.  வெளியே போனாலே மதியச் சாப்பாடைக் கூடுமானவரை தவிர்ப்பேன்.  கல்யாணங்கள்னு போனாலும் ஒரு வேளை காலை ஆகாரம் சாப்பிட்டுடுவேன்.  மதியம் சாப்பிட மாட்டேன்.  இரவு ரொம்ப லேசான உணவு மட்டும் எடுத்துப்பேன்.  ஹோட்டல் ஊழியரிடம் லஸ்ஸி கேட்டதுக்கு தயிர் இல்லைனும் கொஞ்சம் போல் மோர் இருக்கிறதாகவும் சொல்லிட்டு அதைக் கொண்டு வந்து கொடுத்தார்.  காலாநமக், ஜீரகத் தூள், பெருங்காயம், உப்பு எல்லாம் போட்டு வாய்க்கு ருசியான மோர்.  அந்த ஹோட்டலிலேயே மேலே தங்குமிடம்.  நல்ல அறைகளாகவே தெரிந்தன.  முதல்நாள் இரவு இந்த வழியாவே போயிருந்தும் நமக்குத் தெரியலையேனு நினைச்சுண்டேன். அப்போக் கூட அந்த ஹோட்டல்காரங்க கிட்டே சார்தாம் பார்க்க எவ்வளவு பணம்.  ஆட்டோக்காரர் பரதன் குகைக்குத் தனியாக் கேட்கிறாரே னு கேட்டுத் தெரிஞ்சுக்கத் தோணலை. சாப்பிட்டு முடிஞ்சதும் ஆட்டோக்காரர் ஹோட்டல் அறைக்கு முன்னால் கொண்டு விட்டு விட்டார்.  மீண்டும் பரதன் குகை பார்க்கணும்னு நாங்க சொல்ல, அதுக்கு நானூறு ரூபாய்னு சொல்லிட்டு போகறதா இருந்தாக் கூப்பிடுங்க வரேன்னு சொல்லிட்டுப் போயே போய்விட்டார். ( பேசின முழுத் தொகையையும் வாங்கிக் கொண்டுதான்) . உடல் களைப்பா, மன அலுப்பா, என்னனு சொல்ல முடியாமல், முதல்நாள் இரவு முழுதும் விழித்திருந்தது வேறே, எல்லாம் சேர்ந்து உடல் தள்ளாட , துணிகள் துவைத்தது வேறே எனக்கு அலுப்பு! ஹோட்டல் அறைக்கு மெதுவா மேலே ஏறி (கிட்டத்தட்ட ஒன்றரை அடி உயரத்தில் முப்பது/நாற்பது படிகள்) வந்து சேர்ந்தோம்.  ஓய்வு எடுத்துக் கொண்டோம்.

மாலை தேநீர் குடிக்கணும்னா கூட அந்த முப்பது, நாற்பது படிகள்  இறங்கி வெளியே வந்து மலைச்சரிவிலிருந்து மேலே ஏறி சாலைக்குச் சென்று ஆட்டோ பிடிச்சுப் போகணும்.  ஒண்ணுமே வேண்டாம் சாமி! னு உட்கார்ந்து விட்டோம்.  உடம்பெல்லாம் ஜுரம் வரும் போல் வலி. அப்போது அறைக்கதவை யாரோ தட்டினார்கள்.  கதவைத் திறந்தால் இந்த அருமையான, அழகான ஹோட்டலை எங்களுக்கு அறிமுகம் செய்த நபர் அங்கே நின்றிருந்தார்.  கூடவே அந்த அழகான ஹோட்டலின் காப்பாளர் பையரும் நின்றிருந்தார்.  வந்தவர், "நீங்க ஏன் இன்னும் இங்கே தங்கி இருக்கீங்க?  அறை வாடகை கொடுக்கலையாமே?" எனக் கடுமையாகக் கேட்டார்.  எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அறைக்குள் நுழைந்ததுமே 450 ரூ அறை வாடகைனு சொன்னதுக்கு 500 ரூ கொடுத்திருக்கோமே. மிச்சம் கூட இன்னும் வாங்கிக்கலைனு சொல்ல, அது மதியம் பனிரண்டு மணியோடு முடிஞ்சுடுத்து.  இப்போ மாலை மணி ஐந்து ஆகிவிட்டது.  இந்த நாளுக்கான வாடகையைக் கொடுக்காமல் நீங்க தங்க முடியாதுனு சொல்ல, இவ்வளவு தானா விஷயம்னு இன்னொரு ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்புகிறோம். அது வரை இருக்கலாமானு உறுதி செய்து கொண்டோம்.  கடைசியில் அந்த ஹோட்டலும் நாங்க இரண்டாவதாய்ப் பார்த்த ஹோட்டலும் ஒரே நபரால் நடத்தப்படுகிறதாம்.  படுக்க மட்டுமே இடம்னு சொன்ன ஹோட்டலில் காப்பாளாராக இருப்பவர் தான் தன் முதலாளியின் இந்த ஹோட்டலுக்கு எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.  இதை எல்லாம் தெரிந்து கொண்டு நாங்க இங்கே தேநீருக்குப் படும் கஷ்டத்தையும், சாப்பாட்டுக்கு இறங்கிப் போக வேண்டியதன் சிரமத்தையும் ஒரு பாட்டம் சொல்லி அழுதோம்.

அந்த மனிதர் உண்மையாகவே நல்ல மனிதர்.  உபகார சிந்தையுள்ளவர். ஆகவே அந்த ஹோட்டலில் காப்பாளப் பையரைக் கோவித்தார். முடியாதவங்க, அதிலும் வயசானவங்க இவங்களை இப்படி நினைக்க விடலாமா?  னு கேட்டுட்டு, எங்களிடம் எது வேணும்னாலும் இந்தப் பையரிடம் சொல்லுங்க, செய்து கொடுப்பார்னு சொல்ல, நாங்க யோசித்தோம். ஆனால் அவர் விடலை. அந்தப் பையரிடம், எனக்கு இவங்க கிட்டே இருந்து இனி எந்தவிதமான புகாரும் வரக்கூடாது.   அவங்க இருவரும் நாளை மதியம் பனிரண்டு மணிக்குக் கிளம்பும் வரை கூட இருந்து ஆட்டோ பிடிச்சு அனுப்பும் வரை உன் பொறுப்புனு கண்டிப்பாய்ச் சொல்ல அவரும் தலையை ஆட்டினார்.  எங்களிடமும் எந்தக் கவலையும் படாதீங்க.  இவன் எல்லாம் செய்து கொடுப்பான். என்று சொன்னார்.  அவ்வளவில் எங்களுக்கும் மனம் கொஞ்சம் சாந்தி அடைந்து, அன்றிரவுக்கு உணவு வாங்கிக் கொடுப்பாரா என்றும் கேட்டோம்.

உணவுப் பார்சல் வாங்கி வந்து கொடுப்பார்னு சொல்ல நாங்க ஆறு தவா ரொட்டியும் ஒரு மிக்சட் வெஜெடபிளும் வாங்கித் தரச் சொன்னோம்.  சரினு தலையை ஆட்டிட்டுப் போனாங்க.  எங்க பணமே அவங்ககிட்டே இருந்ததாலே உணவுக்குனு பணம் கொடுக்கலை.  அவங்களும் கேட்கலை.  

Sunday, December 01, 2013

எங்கேயும் எப்போதும்



"எங்கேயும் எப்போதும்"படம் பார்த்தேன். விஜய் தொலைக்காட்சியில் போட்டிருந்தாங்க. ஏற்கெனவே 2011 ஆம் வருஷம் ஹூஸ்டனில் இருக்கையில் பார்க்க நினைச்சு உட்கார்ந்துவிட்டுக் கொஞ்சம் போல் பார்த்ததுமே இரவு நேரமாயிடுச்சுனு போய்ப் படுத்துட்டேன்.  அதுக்கப்புறமும் நிறையத் தரம் தொலைக்காட்சிகளில் வந்தும் பார்க்க முடியலை.  இன்னிக்கு மறுபடி விஜயில் போட்டிருக்கிறதைப் பார்த்ததும் உட்கார்ந்தேன். அமுதாவாக நடிக்கும் பெண் சென்னைக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்துவிட்டு கெளதம் என்னும் நபரோடு நகரம் பூரா சுற்றும் காட்சி.  கொஞ்சம் காமெடியாகவே இருந்தது.  இதிலே அந்தப் பெண் நேர்முகத் தேர்வுக்குப் போறச்சே கைப்பையையும், தோள் பையையும் கெளதமிடம் கொடுத்துட்டுப்போறவரை ஏற்கெனவே பார்த்திருந்தேன்.  இவங்க இருவருக்கும் இடையே அவங்க அறியாமலேயே காதல்!

அதுக்கப்புறமா திருச்சியிலே நடக்கும் காட்சிகள். மணிமேகலையாக நடிக்கும் பெண் தான்   நடிகை அஞ்சலியாமே.  தினசரிகளில் அடிபடும் அஞ்சலியா இவர்??? நடிப்பு நல்லாவே இருக்கு. ஆனால் காதலனைப் படுத்தி எடுத்துடறார். அந்தக் காதலனாக நடிப்பவரும் கிராமத்து அப்பாவித் தனத்தை நல்லா வெளிக்காட்டுகிறார்.  இரண்டு பேரும் சென்னை செல்லும் பேருந்தில் விழுப்புரம் போறாங்க.  சென்னைக்குக் காதலனைத் தேடிச் சென்ற அமுதாவும் ஒரு தனியார் பேருந்தில் திருச்சிக்குத் திரும்பறாங்க. இங்கே திருச்சிக்கு அமுதாவைத் தேடி வந்த கெளதம் சென்னைக்கு காதலர்கள் செல்லும் அதே பேருந்தில் திரும்பறார். ஏகப்பட்ட வேகம் எடுத்து பேருந்துகள் வந்து கொண்டிருக்கின்றன.  அப்போ சென்னையிலிருந்து(?) செல்லும் ஒரு லாரியின் மேல் போட்டிருந்த மஞ்சள் நிற ப்ளாஸ்டிக் ஷீட் வேகத்திலும் காற்றிலும் பறந்து வந்து அரசு பஸ் முன்னால் மூடிக் கொள்கிறது.  ஓட்டுநருக்குப் பார்க்க முடியலை.  எதிரே வேகமாக வரும் தனியார் பேருந்து.

இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள கடும் விபத்து.  தன் குழந்தையைப் பிறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் முதன் முதல் பார்க்கச் செல்லும் அப்பா, கல்லூரிக் காதலர்கள், பரிசுக் கோப்பையுடன் பயணிக்கும் மாணவியர்னு பல்வேறு கனவுகளோடு இருந்த அனைவருக்கும் விபத்தில் ஏற்பட்ட இழப்புத் தான் முக்கியக் கரு.  இயக்குநர் வேகம் விவேகம் இல்லை என்பதையும் அறிவுறுத்துகிறார்.  பல்வேறு கனவுகளோடு செல்லும் மக்களின் வாழ்க்கையில இந்த விபத்தினால் ஏற்படும் திடீர் மாற்றம், அதன் விளைவு எல்லாம் நன்கு புரியும்படி படம் எடுக்கப்பட்டிருக்கிறது.  பின்னணி இசை, காமிரா ஒளிப்பதிவுனு படம் முழுதும் ரசிக்கும்படி இருந்தாலும்,

மனதில் ஏகப்பட்ட பாரம்!  பொதுவாக திரைப்படத்தின் உருக்கமான காட்சிகள் சிரிப்பை வரவழைத்தாலும் இவை நிஜத்தில் தினம் தினம் நடைபெறுவதால் அவற்றை எண்ணி மனம் கனத்துப் போய் விட்டது. மொத்தத்தில் நல்லபடம்.  புதிய இயக்குநர்.  முதல் படம்னு சொல்றாங்க.  நல்லதொரு செய்தியோடு படத்தைச் சொல்லி இருப்பதற்குப் பாராட்டுகள்.  தியேட்டரில் நல்லா ஓடிச்சானு எல்லாம் தெரியலை.

வழக்கம்போல இதையும் ஆரம்பத்திலிருந்து பார்க்கலை.  பாதியிலிருந்து தான் பார்த்தேன்.  அமுதாவும், கெளதமும் பஸ்ஸில் கே எம்சியில் இறங்க வேண்டிய இடத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். :))))  இளைய தலைமுறைக்குப் பிடிச்சிருந்திருக்கும்னு எண்ணுகிறேன்.


குப்த கோதாவரி, மேலும் சில படங்கள்!



குப்த கோதாவரிப் படங்கள் மேலும் சில.  மேலே உள்ளது இரண்டாவது குகை போல் இருக்கிறது.  அங்கே தான் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.

இந்தப் படங்கள் நம் குழும சிநேகிதி பார்வதி பகிர்ந்தவை.  அவர் அநுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன்.  அவரும் குப்த கோதாவரி சென்றிருக்கிறார். ஆனால் காலை ஏழு மணிக்கே போனதால் கூட்டம் இல்லையாம்.  படமும் எடுக்க முடிந்தது எனச் சொல்லி இருக்கிறார். 







இந்தப் படங்கள் அப்லோட் ஆகவும் நேரம் எடுத்தது.  பதிவில் திறக்கவும் நேரம் எடுக்குது.  காரணம் தெரியலை.  கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கவும். இவை அனைத்துமே இரண்டாவது குகையாத் தான் தெரியுது.