எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 20, 2014

தி. ஜானகிராமனின் "உயிர்த்தேன்!"

சமீபத்தில் நிறையவே புத்தகங்கள் இணையத்தின் தயவில் படிக்க முடிந்தது. ஆனால் அதை விட அதிசயமாக தி.ஜானகிராமனின் "உயிர்த்தேன்" கதையை இப்போது படிக்க நேர்ந்தது தான் அதிசயத்திலும் அதிசயம். ஆனந்த விகடன் பைன்டிங்கில், அந்தக் காலத்து கோபுலுவின் படங்களோடு படித்தேன். ஜானகிராமன் அவர்களின்  "அன்பே, ஆரமுதே," தான் முதல் அறிமுகம். அப்புறமாச் சித்தப்பா  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது  தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை முதல் முதல் படிக்கையில் அதிர்ச்சி வந்தது.  அதுக்கும் முன்னால் அவரோட "அன்பே, ஆரமுதே!" கதை கல்கியில் தொடராக வந்தப்போ அம்மா படிச்சுச் சொல்லுவாங்க.  பின்னர் நானும் படிச்சேன். என் மனசுக்கு ரொம்பப் பிடிச்சதா இருந்த கதை அது.  அதன் பின்னர் தான் விகடனில் இந்தக் கதையும், "செம்பருத்தி"யும் வந்தது. செம்பருத்தி அரைகுறையா நினைவில் இருக்கு. கிடைச்சாப் படிக்கணும். இப்போ உயிர்த்தேன் கதையைப் பார்க்கலாமா?

கதை முழுக்க முழுக்க ஆறு கட்டி கிராமத்தைச் சுற்றியே வருகிறது.  சென்னையில் தொழில் செய்து நிறைய பணம், காசு பார்த்துவிட்ட பூவராகன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்து அங்கேயே நிரந்தரமாய்த் தங்க ஏற்பாடு செய்கிறார்.  சொந்த ஊரிலேயே நிலம், நீச்சு, வீடு, வாசல் எல்லாமும் வாங்குகிறார். அவருக்கான வீட்டுக்கு ஏற்பாடுகள் செய்து நிறைவடைவதில் கதை ஆரம்பிக்கிறது.  பூவராகனின் மாமா மகன் சிங்கு என்னும் நரசிம்மன் தான் இந்த உதவியை எல்லாம் கார்வார் கணேச பிள்ளையையும், அவர் மனைவி செங்கம்மாவையும் வைத்துக் கொண்டு செய்து முடிக்கிறார். இந்த செங்கம்மா தான் கதாநாயகி.  முதன் முதல் தன் வீட்டுக்குக் கிரஹப்ரவேசம் செய்யும் பூவராகன் உதவிக்காக வரும் செங்கம்மாவைப் பார்த்து அதிசயிக்கிறான்.  ஏனெனில் செங்கம்மா அழகென்றால் அப்படி ஓர் அழகு! ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியைப் போன்ற அழகல்ல.  வற்றாமல் பெருகிக் கொண்டே இருக்கும் ஊற்றுக் கண்ணைப் போன்ற அமைதியான அழகு.  நுங்கும், நுரையுமாக ஆரவாரத்தோடு செக்கச் சிவந்த முகத்தோடு காதலனைக் காணவேண்டி ஓடோடி வரும் புது வெள்ளத்துக்கு அப்புறம் கொஞ்சம் நிதானம் வந்து புக்ககம் வந்துவிட்டோம், இனி ஆட்டம் பாட்டம் எல்லாம் இல்லை என நினைத்துக் கடலரசனைக் காண வேண்டி அமைதியாகவும், நாணத்தோடும், அடக்க ஒடுக்கத்தோடும் செல்லும் நதியின் அழகு.  இப்படிப் பட்ட அழகு இந்த ஊரிலா என மலைத்துப்போகிறார் பூவராகன்.  ஆனால் அவளிடம் அவருக்குத் தப்பான எண்ணமே தோன்றவில்லை. இது ஏதோ தெய்வாம்சம் எனத் தோன்றுகிறது.  செங்கம்மாவைப் பார்த்தாலே விழுந்து வணங்கத் தோன்றுகிறது.

சிவகங்கைச் சீமையில் வயிற்றுக்கு இல்லாமல் வாடிக் கொண்டிருந்த செங்கம்மாவை அவள் தந்தை மூலம் தூரத்துச் சொந்தமான கார்வார் கணேச பிள்ளை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொண்டு வருகிறார்.  இந்தச் செங்கம்மாவுக்கு ஊரின் இரண்டு பட்ட நிலையைக் கண்டு மனதுக்குள் வருத்தம்.  அதோடு இயல்பாகவே அவள் உடலில் ரத்தம் ஓடுவதற்குப் பதிலாக அன்பு தான் ஓடுகிறது.  அனைவரையும் தன் அன்பால் ஆண், பெண் பாகுபாடே இல்லாமல் அரவணைத்துக் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறாள்.  ஆனால் சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.   அவள் இயல்பு இது தான் என அவளுக்கே பூவராகன் வரும் வரை புரியவும் இல்லை அவளுக்கு. ஆறுகட்டி ஊரில் உள்ள பெருமாள் கோயில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.  சிவன் கோயில் புல், பூண்டு முளைத்துப் பாழடைந்து போய் விட்டது.  இது எல்லாமும் சரி பண்ணணும்.  அதோடு ஊரில் நிலத்தில் பாசனம் செய்யாமல் சோம்பிக் கொண்டு வம்பு பேசிக் கொண்டு கிடக்கும் ஊராரை மாற்ற வேண்டும்.  

ஆனால் இதை எல்லாம் எடுத்துப் பண்ணுவது யார்?  வெளியூரிலிருந்து எக்கச்சக்கமாய்க் காசு, பணத்தோடு வந்திருக்கும் பூவராகன் முதலில்  பெருமாள் கோயில் திருப்பணியை மேற்கொள்ளுகிறான். இத்தனை நாள் சும்மா இருந்த கோயிலில் திருப்பணி ஆரம்பித்தாலும் ஊர்க்காரர்கள் உதவி என்னமோ கிடைக்கவில்லை.  ஒதுங்கியே நிற்கின்றனர். கிடைக்க விடாமல் தடுப்பதும் அந்த ஊர்க்காரனே.  வேலு என்பவன்.  பூவராகன் இப்போது விலைக்கு வாங்கிக் குடி இருக்கும் வீட்டை முழுக்க முழுக்க அனுபவித்துக்  கொண்டிருந்தவன்.  வீட்டுச் சொந்தக்காரர் வீட்டை பூவராகனுக்கு விற்றதில் இருந்து அவனுக்கு மனம் கொதிக்கிறது.  அது மட்டுமில்லாமல் செங்கம்மா வேறு பூவராகன் வீட்டுக்கு உதவியாக வருவதும், போவதுமாக இருப்பதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.  ஏனெனில் அவன் செங்கம்மாவைக் காதலிக்கிறான்.  பூவராகன் கிரஹப்பிரவேசம் செய்த போது சண்டைக்கு வந்துவிட்டுப் பின்னர் பூவராகனின் அமைதியான போக்கினால் ஏதும் பேச முடியாமல் சென்று விடுகிறான்.  ஆனால் அவன் மனம் இதைத் தனக்குக் கிடைத்த தோல்வியாகவே நினைக்கிறது. இந்த வேலு தான் செங்கம்மாவைக் காதலிக்கிறான். ஆனால் அவனுக்கு மனைவி இருக்கிறாள்.

 இருவருக்குமே திருமணம் ஆகி விட்டது.  வேலுவுக்கு மனைவி இருக்கிறாள். அது போல் செங்கம்மாவுக்கும் கணேச பிள்ளை கணவர்.  அவர் அவளை அருமையாக நடத்தி வருகிறார். அவளும் அவரை முழு மனதோடு நேசிக்கிறாள்.  அன்பு செலுத்துகிறாள்.  கணவன் தனக்கு அளித்திருக்கும் சுதந்திரத்தைச் சரியான முறையில் பயன்படுத்துகிறாள்.  ஆகவே திருப்தியுடன் அவர் சம்மதத்தோடு பூவராகவன் வீட்டில் வேலை செய்யும் செங்கம்மா பூவராகவனுக்கு உடல்நிலை சரியாக இல்லாமல் இருந்தபோது கூட அவனுக்குத் தைலம் எல்லாம் தேய்த்துவிடுகிறாள்.  கணேசபிள்ளைக்குத் தன் மனைவி மேல் இருக்கும் நம்பிக்கை காரணமாக இதைக் கண்டு கோபப்படவில்லை.  எனில் பூவராகவன் மனைவி அதற்கும் மேல்.  செங்கம்மாவைக் குல தெய்வமாகவே கொண்டாடுகிறாள். அவளுக்கும் இதெல்லாம் தவறாகப் படவே இல்லை. இப்போது தான் செங்கம்மாவிடம் இருக்கும் திறமைகளைக் கண்டு கொள்ளும் பூவராகன் அவள் தான் இந்த ஊரின் தலைமையை ஏற்கத் தகுந்தவள் என அவளிடம் பொறுப்பை ஒப்படைக்கிறான்.

இதற்கு நடுவில் ஊரின் விவசாயம் முழுமைக்கும் பூவராகனே பொறுப்பேற்றுக் கொண்டு நடத்திக் காட்டுகிறான்.  அமோக விளைச்சலால் ஊரே மகிழ்ந்திருக்க, வேலு மட்டும் பூவராகனோடு சேராததால் மனம் கொதித்திருக்கிறான்.  ஊர் மக்கள் அனைவருமே இப்போது பூவராகன் பக்கம் வந்துவிட.  கோயில் திருப்பணியும் பூர்த்தி அடைந்து கும்பாபிஷேஹம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை இப்போது நடத்தி முடிக்க ஆவன செய்கின்றனர்.  வேலுவோ தன்னிடம் இருக்கும் ஊர்ப்பணத்தை செங்கம்மாவிடம் ஒப்படைக்க மறுக்கிறான்.  செங்கம்மாவுக்குப் பெண்களுக்கே உரிய நுட்பமான அறிவால் வேலுவின் எண்ணம் புரிகிறது. ஆகவே அவனிடம் நேரில் போய்ப் பேசி அந்தப் பணத்தை அவனிடம் இருந்து வாங்கச் சென்ற செங்கம்மாவை அவன் கட்டி அணைத்து முத்தமிட்டுத் தன் காதலைத் தெரிவிக்கிறான்.  அதன் பின்னர் ஊர்ப்பணத்தை அவளிடம் கொடுக்கிறான்.  ஆனால் கோவில் கும்பாபிஷேஹத்தில் கலந்து கொள்ளாமல் ஊரை விட்டுச் சென்றுவிடுகிறான்.  திரும்ப வருகிறானா?

கதையில் முக்கிய பாத்திரங்கள் செங்கம்மா, கார்வார் கணேச பிள்ளை, பூவராகன், அவன் மனைவி, பெண்கள், வரதன், ஆமருவி, பூவராகனின் சிநேகிதி அனு, வேலு போன்றோர் தான்.

இதில் அனுவைப் பற்றி முதலில் படிக்கையில் மனம் ஒரு மாதிரித் தான் ஆகிறது.  ஆனால் அவள் வாழ்க்கை அவளுடையது, அவள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை வாழ அவளுக்கு உரிமை உண்டு என்பதைப் பார்த்தால் அனுவின் பக்கத்து நியாயமும் புரிகிறது.  முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்ட அனுவும், செங்கம்மாவும் அன்பினால் இணைகிறார்கள்.  அனுவை செங்கம்மா புரிந்து கொள்கிறாள்.  செங்கம்மாவையும், கணேசபிள்ளையையும் அனுவும் புரிந்து கொள்கிறாள் வெளியூர் சென்ற வேலு கார்வார் கணேச பிள்ளைக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறான்.  அதை செங்கம்மாவும், கணேசபிள்ளையும் சேர்ந்து படிக்கின்றனர்.  வேலு என்ன ஆனான் என்பது அதிலிருந்து தெரிகிறது.

மற்றபடி சென்னையில் வளர்ந்திருந்தாலும் பூவராகனின் பெண்கள் குடும்பக் கலாசாரத்தை ஒட்டி வளர்ந்திருப்பது குறித்துப்பல இடங்களில் வருகிறது. அதோடு பூவராகனும் செங்கம்மாவைப் பற்றி அவன் மாமன் மகனோடு பேசும் இடம் அருமை.  துளிக்கூட விரச பாவமே இல்லாமல் தன் மனதை வெளிப்படுத்தும் பூவராகன். அதைப் புரிந்து கொள்ளும் நரசிம்மன்.  இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்னும் எண்ணமே தோன்றுகிறது!

படித்தால் பற்பல சிந்தனைகளை ஏற்படுத்தும் புத்தகம். அன்பினாலேயே அனைவரையும் கட்டலாம் என்பதை தி.ஜானகிராமன் அழகாகச் சொல்லி இருக்கிறார்.  நடைமுறை சாத்தியங்கள் இப்போதும் அப்படித் தான் இருந்தும் வருகிறது. செங்கம்மாவே அழகாய்ப் பிறக்காமல் வேறு மாதிரி பிறந்திருந்து இப்படி எல்லாம் நடந்திருந்தால்?  அந்த ஒரு எண்ணம் அவளையும் தாக்கவே அவள் தனக்குக் கிடைத்த கெளரவத்தை  எல்லாம் பெரிசு பண்ணவே இல்லை.  இயல்பாகவே இருக்கிறாள்.  ஆனால் கடைசியில் அவளுடைய அன்பெனும் வேள்விக்குக் கொடுக்கப்பட்ட ஆஹுதி தான் கதையின் முக்கியமான அம்சம். உயிராகிய தேனை மாந்தி மாந்திக் குடித்த ஓர் உயிர், செங்கம்மாவை அடைய முடியாமல் தவித்த ஓர் உயிர். கதை படியுங்கள் புரியும்.

புத்தகமாக வெளி வந்திருக்கலாம்.  அது பற்றித் தெரியவில்லை.  என்றாலும் ஜானகிராமனின் கதைகள் அனைத்துமே புத்தகமாக வெளி வந்திருக்கின்றன. ஆகவே இதுவும் வந்திருக்கலாம். 

31 comments:

  1. நேற்று தான் ஒரு பழைய புத்தகக் கடையிலிருந்த இப்புத்தகத்தை தேடிப்பிடித்து எடுத்து வந்தேன். புத்தகம் பற்றிய உங்கள் பதிவினை பிறகு படிக்கப் போகிறேன் :)))

    இது ஆனந்த விகடனில் தொடராக வந்தது.... 1966-ல்.....

    ReplyDelete
  2. வாங்க வெங்கட், நான் பள்ளி மாணவியா இருந்தப்போ வந்தது. நினைவில் இருக்கு. :))) அப்போல்லாம் ஜானகிராமன் கதைகள், குமுதம் புத்தகம் இவை எல்லாம் படிக்கத் "தடா" இருந்தது. அவற்றையும் மீறித் தான் இதை ரகசியமாப் படிச்சிருக்கேன்.

    எங்க வீட்டில் விகடன் வாங்கினால் இவர் கதைகள், ஜெயகாந்தன்கதைகள் எல்லாத்தையும் கிழிச்சு எடுத்துட்டுத் தான் எனக்குப் படிக்கக் கொடுப்பார் என் அப்பா. :))) அப்புறமா ஒரு கால கட்டத்தில் விகடன் வாங்கறதையே நிறுத்தியாச்சு! :))))ஓ.சி. வாங்கிப் படிச்சது தான் அதிகம். அப்போப் படிச்சப்புறமாப் பல வருடங்கள் கழிச்சு இப்போத் தான்படிச்சேன்.

    ReplyDelete
  3. இதே மாதிரி இன்னொரு நாவல் ஏ.எஸ். ராகவன் அவர்களின் மனிதன். இதுவும் அப்போ விகடனில் வெளிவந்தப்போப் படிச்சது தான். அறுபதுகளின் தொடக்கத்தில்??? ஆமாம்னு நினைக்கிறேன். அதையும் மறுபடி படிக்க ஆவல். :)))

    ReplyDelete
  4. உயிர்த்தேன். எங்கள் அலமாரியில் சின்ன வயதில் பார்த்த நினைவு. படித்ததில்லை என்பது சோகம்! இப்போதுதான் தி.ஜானகிராமன் கதைத் தொகுப்பு இரண்டு பாகம் வாங்கி, நான்கைந்து கதைகள் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

    ஏ எஸ் ராகவன் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நான் இன்னமும் நான் முன்பு படித்த ஒரு கதைக்கான தலைப்பை நினைஉக்கு வராமல் தேடிக் கொண்டிருக்கிறேன்! (முன்னரே சொல்லியிருக்கிறேன்!)

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், ஏ.எஸ்.ராகவன் பற்றித் தெரியாதா?????????????????????????? ஆச்சரியமா இருக்கே. பிரபலமான எழுத்தாளர் என்பதோடு இங்கே இணையத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் திருமதி ஷைலஜாவின் தந்தையும் ஆவார். இப்போது அவர் இல்லை. இறந்து இரு வருடங்கள் ஆகின்றன என நினைக்கிறேன். இந்த மனிதன் தவிர கல்கியில் "யாத்திரை" னு ஒண்ணு எழுதி இருப்பார். அதைத் தவிரவும் விகடனில் இன்னொரு கதை எழுதி இருக்கார். பெயர் எனக்கும் மறந்து போச்சு. :))) அந்தக் கதையில் கதாநாயகன் பெயர் உப்பிலி என்பதும், அவன் சாப்பிடும் முருங்கைக்காய் சாம்பாரும், கீரையும், மலைக்குப் போவதும் மட்டும் நினைவில் உள்ளது. :))) ஹாஹா சரியான தீனிதின்னி க்ரூப்பாச்சே!

    ReplyDelete
  6. தி.ஜா. என்றதும் ஆவலுடன் க்ளிக்கினேன்.

    //ஜெயகாந்தன்கதைகள் எல்லாத்தையும் கிழிச்சு எடுத்துட்டுத் தான் எனக்குப் படிக்கக் கொடுப்பார் என் அப்பா. :))) //

    இன்னொரு தடவை இதைச் சொல்லாதீர்கள். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.

    ஜெ.கே.-யே தனது நாவல் ஒன்றின் முன்னுரையில் இந்த மாதிரி தந்தை ஒருவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இப்பொழுது யு.எஸ்.ஸில். ஊருக்கு வந்ததும் நிச்சயப்படுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன்.

    பருவத்திற்கேற்ற மாதிரி படிப்படியாக குழந்தைகளின் அறிவு வளர வேண்டும் என்று அக்காலத்து பெற்றோர்கள் நினைத்திருக்கிறார் கள். அவர்கள் பார்வையும் அனுபவங்களும் அப்படி. அதிலும் தவறேதும் இல்லை.

    ReplyDelete
  7. வாங்க ஜீவி சார், பல நாட்களாகக் காணவில்லையேனு நினைச்சேன். யு.எஸ். வாசமா? ஓகே.

    அப்பா படிக்க விடமாட்டாரே தவிர, பெரியப்பா வீடு, தாத்தா வீடுனு போகும்போது அங்கே படிச்சுடுவேன். அங்கெல்லாம் நோ தடா! அதிலும் என் தாத்தா (அம்மாவோட அப்பா) தன் புத்தக அலமாரியையே எனக்கு ஒப்படைத்து விடுவார். படிம்மா, படிம்மானு ஆர்வத்தைத் தூண்டுவார். அந்தக் காலத்து விநோத ரஸ மஞ்சரியிலே இருந்து எல்லாமும் அதில் இருந்தது. படிக்கவும் படிச்சிருக்கேன். :))))

    ReplyDelete
  8. அமரர் ஏ.எஸ். ராகவனின் 'மனிதன்' கதையை முந்திக் கொண்டு கோபுலுவின் நீள வாக்கில் கோடு போட்ட ஃபுல் ஹேண்ட் சட்டை போட்டிருக்கும் கதாநாயகனின் நினைவு வருகிறது.
    இதைப் படித்தால் மீதியை வல்லிம்மா சொல்வார்கள்.

    மனிதன் கதையிலும் ஒரு உப்பிலி வருவாரே?..

    ஏ.எஸ்.ஆரின் குடும்பமே எழுத்தாள குடும்பம். இந்திரா செளந்தர்ராஜன் உட்பட மற்றவர்கள் பற்றியும் ஸ்ரீராமிற்கு சொல்லியிருக்கிறேன்.
    மறந்து விட்டார் போலிருக்கு.

    அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். எக்ஸ்டன்ஷன் முகவரியில் ஏ.எஸ்.ஆர். வசித்தார். சேலத்தில் நடந்த எழுத்தாளர் சங்க விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவரை அழைக்க அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.

    'சிவாஜி' பத்திரிகை திருலோக சீதாராமையும் அழைத்து வந்தோம். திருலோக சீதாராம் 'பாரதியின் ஞானபுத்திரன் நான்' என்று தன்னை வரித்துக் கொண்டு அதன்படியே வாழ்ந்தவர். பாரதிதாசனாருக்கு நிதி திரட்டி 'பொற்கிழி' வழங்கியவர். அது ஒரு பெரிய கதை.

    ReplyDelete
  9. மனிதன் கதையின் கதாநாயகன் பெயர் சாரங்கன் என நினைவில் இருக்கு. அவன் காதலிக்கும் மைதிலி முதலில் சண்டை போட்டுக் கொண்டு இருப்பாள். பின்னால் பூமாவின் உதவியால் சேர்வாள் என நினைக்கிறேன். சாரங்கன் மேல் தனக்குள்ள காதலை இந்த பூமா தியாகம் செய்வாள் என நினைவு. சாரங்கனையும், மைதிலியையும் ஒன்றாக உட்கார வைத்து பூமா பரிமாறுவதும், அந்தப் படங்களும், கதையில் அந்தக் கட்டத்தில் பூமாவின் தியாகம் தெரிந்த சாரங்கனின் கண்கள் கலங்குவதையும் அதைப் பார்த்த பூமா மைதிலுக்குத் தெரியக் கூடாது என நினைத்தோ என்னவோ, ரசம் காரமா இருக்கா, இன்னும் கொஞ்சம் நெய் போடறேன் என்று சொல்வதும், அதைக் கேட்டு மைதிலியும் கண் கலங்குவதும்! :)))) எல்லாம் கனவு மாதிரி நினைவில் இருக்கு

    ReplyDelete
  10. திருலோக் சீதாராம் பற்றி அவர் சீடரான ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறார். சில நிகழ்வுகளைக் குழுமத்தில் பகிரவும் செய்வார்.

    ReplyDelete
  11. // அது ஒரு பெரிய கதை..//

    அந்தக் கதை பற்றி முடிந்தால் திரு. ஸ்ரீரங்கம் மோஹனரங்கன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பாரதிதாசனாரின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் கதை அது.

    ReplyDelete
  12. ஆஹா.உயிர்த்தேன். திகட்டாத எழுத்து. தி.ஜா வின் உயிரை உருக்கி வடித்த எண்ணங்கள். தோப்பு துரவு ஆறு,ஆற்று மதகு, நர்சிம்மன் அவர் மனைவி, பூவராகனின் சென்னை வாசம், அவன் தோழி அன்யு, கோபுர பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் ஆமருவி*- கிரஹப் பிரவேசத்தின் போது நிகழும் அமர்க்களம். செங்கம்மாவின் அழகு.அவள் பூவராகன் மனைவிக்குச் செய்யும் தொண்டு, அந்தப் பெண்களின் அழகு .பாரதியின் ஒளிபடைத்த கண்ணாகச் செங்கம்மா வேலுவைக் கையாளும் விதம்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா. மீண்டும் ஊர் சென்று படிக்கவேண்டும்.

    ReplyDelete
  13. ஜீவி சார் எங்கே இருக்கிறீர்கள் இங்கே. சாரங்கன்,கோபுலு கைவண்ணத்தில் வடிவம் பெற்றது நினைவில் இருக்கிறது. அதிலும் நீங்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருப்பதும் நெகிழவைக்கிறது. அந்த நாட்கள் புனிதமானவை. மீண்டும் புது வாழ்க்கை துவங்க வேண்டும் என்றால் இவர்கள் துணையோடுதான் ஆரம்பிக்கவேண்டும். மிக நன்றி.

    ReplyDelete
  14. //இப்போதுதான் தி.ஜானகிராமன் கதைத் தொகுப்பு இரண்டு பாகம் வாங்கி...

    -- ஸ்ரீராம் //

    பாவம், ஸ்ரீராம். வாங்கியவுடனேயே என்னிடம் தந்து விட்டார்.

    படித்து விட்டுத் தருகிறேன் என்று சமீபத்தில் ஸ்ரீராமிடமிருந்து வாங்கிய தி.ஜா.வின் ஒரு அடுக்கு புஸ்தகங்கள் அப்படியே என்னிடமே தங்கிவிட்டன. அதில் 'உயிர்த்தேன்' இல்லை, ஸ்ரீராம்.

    ReplyDelete
  15. ஜீவி ஸார்... நீங்கள் சொன்னது நினைவில் இல்லைதான்! :))) இந்திரா சௌந்தர்ராஜன் இதே குடும்பமா? திருமதி ஷைலஜா எப்போதோ பகிர்ந்திருந்த தந்தை நினைவுகள் படித்த நினைவுகள் இருக்கிறது. எங்கு என்று நினைவில்லை.

    சாரங்கன் என்றால் எனக்கு உடனே நினைவுக்கு வருவது 'பாரிசுக்கு போ' தான்! :)))))))))

    ReplyDelete
  16. முன்பு சின்ன வயதில் படிச்ச நினைவு . அப்பா லைப்ரரியில் தேடுறேன் !!. பகிர்வுக்கு நன்றி அம்மா !!

    ReplyDelete
  17. தி. ஜாவின் மோகமுள், அம்மா வந்தாள் இரண்டும் படித்திருக்கிறேன். உயிர்த்தேன் படித்த நினைவில்லை - உங்கள் கதை சுருக்கம் படித்தும் நினைவுக்கு வரவில்லை.
    எங்கள் வீட்டிலும் குமுதம் படிக்க தடா.
    மின்நூலாகக் கிடைத்தால் படிக்கலாம். தேடித் பார்க்க வேண்டும்.

    இவரது திண்ணை வீரா, கோதாவரி குண்டு சிறுகதைகள் நினைவில் இருக்கின்றன.

    ReplyDelete
  18. வாங்க வல்லி, தி.ஜானகிராமன் அவர்களின் எல்லாக் கதைகளும் அநேகமாய்ப் படித்திருக்கிறேன். மோகமுள், மலர்மஞ்சம், மரப்பசு, அம்மா வந்தாள்.

    சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் பாயசம் குறித்த ஒரு கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவில் இருக்கு. பழிவாங்க நினைத்தவர் மனம் மாறுவார். :))

    ReplyDelete
  19. ஶ்ரீராம், இந்திரா செளந்திரராஜன் திருமதி ஷைலஜாவுக்குச் சித்தப்பா/பெரியப்பா அல்லது சித்தி/பெரியம்மா பிள்ளை தம்பி முறை. இந்திரா செளந்திரராஜன் சித்தர்கள் குறித்துப்பொதிகைத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி கொடுத்த போது ஷைலஜா அவர்களும் பங்கேற்றார்கள்.

    ReplyDelete
  20. வாங்க பார்வதி, கிடைச்சால் படிச்சுப் பாருங்க.

    ReplyDelete
  21. வாங்க ரஞ்சனி, இந்தக் கதை ஆனந்த விகடனில் தொடராக வாரா வாரம் வந்தது. இதுவும் செம்பருத்தி என்னும் கதையும் தொடராக வந்தது. செம்பருத்திக் கதாநாயகி தினமும் தன் தலையில் ஒற்றைச் செம்பருத்தியைச் சூடிக் கொள்வாள். அதற்கு கோபுலு வரைந்திருந்த ஓவியம் இன்னமும் மனதில் இருக்கிறது.

    ReplyDelete

  22. சிறுகதை விமரிசனம் இப்போது ஒரு நெடுங்கதைக்கு இழுத்துச் செல்கிறது. தி.ஜ.ரா வின் நாவல்கள் சில படித்திருக்கிறேன். ஆனால் எதுவும் நினைவுக்கு வரவில்லை.

    ReplyDelete
  23. இதற்கு முன்னும் நாவல்களின் விமரிசனம் எழுதி உள்ளேன் ஐயா. இப்படி எப்போவானும் மனதைத் தொடும் கதைகளுக்கு எழுதுவது உண்டு. :)

    ReplyDelete
  24. கதாநாயகன் பெயர் உப்பிலி என்பதும், அவன் சாப்பிடும் முருங்கைக்காய் சாம்பாரும், கீரையும், மலைக்குப் போவதும் மட்டும் நினைவில் உள்ளது. :))) ஹாஹா சரியான தீனிதின்னி க்ரூப்பாச்சே!..//

    உமாசந்திரன் கதையில் வரும் பாத்திர பேர் அல்லவா? உப்பிலி, மலைக்கு போவது அங்குள்ள காய்கனிகளை தேனை உண்பது எல்லாம் நினைவு இருக்கு கோபுலுஅவர்களின் ஓவியம் நினைவு இருக்கு.
    நாவல் விமர்சனம் படிக்க தூண்டுகிறது படிக்க வேண்டும்.
    செங்கம்மாவின் அன்பு வலையில் சிக்க ஆசை.

    ReplyDelete
  25. //ஜீவி சார் எங்கே இருக்கிறீர்கள் இங்கே. //

    அட! நீங்களும் இங்கே தானா?.. அட்லாண்டாவில் மகன் வீட்டிற்கு வந்திருக்கிறேன். கீதாம்மாவுக்கு
    அவரைத் தெரியும்.

    ReplyDelete
  26. //தி.ஜ.ரா வின் நாவல்கள் சில படித்திருக்கிறேன். //

    ஜி.எம்.பீ. சார்! தி.ஜானகிராமன் (தி.ஜா.) வேறு; தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன்) வேறு. இவர்கள் இருவருக்கும் வித்தியாசம் தெரிய வேண்டி, தி.ஜானகிராமனை, தி.ஜா. என்று அழைப்பதே வழக்கம்.

    பின்னவர் கலைமகள் குழு 'மஞ்சரி' பத்திரிகைக்கு ஆசிரியராய் இருந்தவர்.

    இது மேம்பட்ட தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  27. கீதா நீங்கள் சொல்லும் பாயசக் கதையில் பாம்புக் குட்டி விழுந்துவிடும். அந்தப் பாவத்தைப் போக்க அவர் பெரிய கண்டா மணி ஒன்றை வாங்கிக் கோவிலில் வைப்பார்., கஷ்டம் என்ன என்றால் அந்த மணி ஒலிக்கும்பொதெல்லாம் தான் செய்த பாவம் நினைவுக்கு வரும்..பயங்கர்மான கதை.

    ReplyDelete
  28. வாங்க கோமதி அரசு, ஆமா இல்ல! உமாசந்திரன் நாவல் ஒண்ணுல கூட உப்பிலி வருவார். ம்ம்ம்ம்??? தப்பாய்ச் சொல்லிட்டேன் போலிருக்கு! :))))

    ReplyDelete
  29. அந்த நாவல் பெயர் என்னனு சொல்லுங்க. அப்போ நினைவில் வரும். :)

    ReplyDelete
  30. வாங்க வல்லி, அந்தச் சிறுகதை பல வருடங்கள் முன்னால் படிச்சது. :)))) அரைகுறையாய் நினைவில் இருக்கு.

    ReplyDelete
  31. அட என் மறதியை எங்கே சொல்றது. நானே படிச்சுப் பின்னூட்டமும் போட்டு இருக்கேன்,. மோசமாகிவிட்டது நினைவு. இத்ஹ்தனை விவரமாகக் கதையைச் சொல்லி இருக்கிறீர்கள் .பாராட்டுகள் கீதா. அந்தப் பாயசம் கதை ஒரு கிழவரோட பொறாமையை அடித்தளமாக்க் கொண்டதுன்னு நினைக்கிறேன். அண்டாப் பாயசத்தை வேண்டுமென்றே கொட்டிவிடுவார். பல்லிவிழுந்தது என்று பொய் சொல்லி.அதீத வயிற்றெரிச்சலில் செய்த வேலை.

    ReplyDelete