எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, February 28, 2015

மழை, மழை! :) அடாது மழை பெய்தாலும் விடாது வடாம் பிழியப்படும்!

இன்னிக்குக் காலம்பர நடைப்பயிற்சிக்குப் போன ரங்க்ஸுக்கு அதிர்ச்சி!  சிறு தூற்றல் போட்டுக் கொண்டிருந்திருக்கிறது. இதிலே என்ன அதிர்ச்சினு கேட்கறீங்களா? இருக்கே!  நேற்று ராத்திரி தான் நான் இன்னிக்குக் காலம்பர வடாம் போட அரிசியும், ஜவ்வரிசியுமாக நனைத்து வைத்தேன். இன்னிக்கு வடாம் போடணும்னு நேத்திக்குத் திடீர்னு எடுத்த முடிவு தான். ஆனால் பாருங்க, எப்படியோ நம்ம வருணருக்குப் புரிஞ்சிருக்கு.  உடனே எங்கிருந்தோ மழை மேகங்களை அனுப்பிட்டார்!

நனைச்சு வைச்சதை அரைக்கலாமா, வேண்டாமானு ஒரு யோசனை.  அல்லது அரைச்சுட்டு உளுத்தம்பருப்பையும் நனைச்சு அரைச்சுத் தோசையாக வார்த்துடலாமா, இல்லைனா சேவையாகப் பிழிஞ்சுடலாமானு எல்லாம் யோசிச்சேன்.  எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக யோசிக்கையில் ரங்க்ஸ் மட்டும் தைரியமாக நீ வடாமே போடு, மழை வந்தால் பார்த்துக்கலாம்னு சொன்னார்.  அப்புறமா நானும் சரி ஒரு கை இல்லை; இரண்டு கையாலும் பார்த்துடலாம்னு வடாமே போட்டுட்டேன்.  வடாம் போடறச்சே எங்கிருந்தோ வெயில் வந்துடுச்சு!

அதுக்கப்புறமாக் கொஞ்சம் மேகங்கள் வந்து மூடிக் கொள்ளக் கவலையுடன் இருந்த என்னை இப்போது வந்திருக்கும் வெயில் கொஞ்சம் ஆறுதல் கொள்ள வைத்திருக்கிறது.  வடாம் போடற கவலையில் இருந்ததால் படம் எல்லாம் எடுக்கலை. (இல்லாட்டி மட்டும் எடுத்துடுவியோ? னு என். ம.சா. கேட்குது; அதை விடுங்க!) பொரிக்கும்போது கட்டாயம் படம் எடுத்துடறேன். செரியா????

வடாம் க்கான பட முடிவு

படம் கொடுத்த கூகிளாருக்கு நன்றி.  4 பெண்கள் பக்கத்தில் உள்ளதாம். நான் இன்னிக்கு ஓமப்பொடி வடாம் மட்டும் போட்டிருக்கேன்.  போன வருஷம் எல்லா வடாமும் திருட்டுப் போன மாதிரி இந்த வருஷம் போகாமல் இருக்கணும்னு வடாத்து மாவிலேயே பிள்ளையார் பண்ணிக் காவல் வைச்சுட்டு வந்திருக்கேன்.  எப்படியும் இன்னிக்குக் காயும் முன்னரே எடுக்க மாட்டாங்க.  நாளைக்குத் தான் ஜாக்கிரதையா இருக்கணும். :)))))

Tuesday, February 24, 2015

நேற்றைய சம்பவங்களின் தொகுப்பு! :)

நேற்றைக்குப் போன பூணூல் கல்யாணத்தில் பூணூல் போட்டுக் கொண்ட பையருக்கு வயது ஏழு தான் நடக்கிறது.  விரும்பி உச்சிக் குடுமி வைத்துக் கொண்டார்.  பார்க்கவே அழகாக இருந்தது. வழக்கம் போல் படம் எடுக்கும் எண்ணம் இல்லாததால் காமிராவெல்லாம் எடுத்துப் போகலை! (வழக்கமே இல்லைனு யாருப்பா கூவறது?  பயணங்களுக்கு எல்லாம் கொண்டு போவேனே!) ஆனால் இந்தப் பையர் பூணூல் தரித்துக் கொண்ட அழகையும் மந்திரங்களை விடாமல் தப்பு இல்லாமல் சொன்ன அழகையும் பார்க்கையில் படம் எடுக்கத் தோன்றியது.

சத்திரம் அரதப் பழசு. சுதீந்திரர் மடத்தைச் சேர்ந்தது என்கிறார்கள்.  சத்திரமும் அவர் காலத்திலேயே கட்டி இருக்கணும். கல் தூண்கள் மண்டபத்தைத் தாங்கி நின்றன. கூரையைத் தாங்கவும் கல் தூண்களே!  தற்கால முறைப்படினு பார்த்தால் இந்திய முறைப்படியான கழிவறை ஒன்றே.  அதுவும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு இருந்தது. :(  மாடியில் அந்தக்கால முறைப்படி ஆங்காங்கே படி ஏறி இறங்கிப் போகும்படியான மொட்டை மாடி என்பதோடு, கூண்டுகளும் எழுப்பப் பட்டிருந்தன.  ஶ்ரீராம் வந்தப்போ கலந்து கொண்ட கல்யாணச் சத்திரமே சென்னை மாதிரி இல்லை; பழமை என்று சொல்லி இருந்தார். இதைப் பார்த்தால் ராஜா காலத்துக் கட்டிடம்னு கண்ணை மூடிண்டு சொல்லலாம். முதலிலேயே சத்திரம் இப்படினு தெரிஞ்சிருந்தால் காமிராவிலே படம் எடுத்திருக்கலாம். இப்படியும் கட்டிடக் கலை இருக்குனு எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். இடித்தால் கூட இடியுமானு சந்தேகமா இருக்கு.

சாப்பாடெல்லாம் மாடியிலே.  மாடி ஏறி இறங்கத் தான் முடியலைனு பார்த்தாக் கை அலம்பற குழாய் இருக்கும் இடமும் சாப்பாட்டுக் கூடத்திலிருந்து சில, பல படிகள் கீழிறங்கி இன்னொரு மாடிக்குப் போகணும். அங்கே வெட்ட வெளி.  காலை டிஃபன் போது ஒண்ணும் தெரியலை. மத்தியானம் சாப்பாடு முடிஞ்சுக் கை அலம்ப முடியலை.  கால் கொப்புளிச்சுடும் போலச் சூடு தாங்கவில்லை.  தீமிதி போல் உஷ்ணம்!  சாப்பிட்டிருக்கவே வேண்டாமோனு நினைச்சேன். :))) மற்றபடி கட்டிடக் கலையை ரசித்தேன். பூணூல் போட்டுக் கொண்ட பையரையும் ரசித்தேன். பூணூல் பையரின் சில படங்கள் செல்லினது போடறேன்.  அங்கிருந்த குறைந்த வெளிச்சத்தில் சரியா விழலை.  என்றாலும் போட்டே தீரணும்னு ஒரு ஆசை. நீங்களும் பார்த்தே தீரணும். :)))
பூணூல் பையர் தான் மொட்டைத் தலையோடு காணப்படுகிறார்.  முகம் எல்லாம் தெளிவாய்க் காட்ட வேண்டாம்னு தான் கொஞ்சம் தள்ளி இருந்தே எடுத்தேன். அனுமதி எல்லாம் வாங்கலை. அவங்களுக்குத் தெரியாது நான் பகிரும் விஷயம்.  ஆகவே தான் தெளிவில்லாத படம். :)))  ஒரு ஆசையில் இதை மட்டும் போட்டிருக்கேன். மற்றப் படங்களைப் போடப் போறதில்லை. 
*****************


தினம் பார்க்கப் போகும் ஆஞ்சிக்கு எதிரே ஶ்ரீராமர் இருக்கிறார்.  இந்த ஆஞ்சி அவரைப் பார்த்துத் தான் கை கூப்பி இருக்கார் என்றாலும் ஶ்ரீராமரை விடக் கொஞ்சம் உயரமாக இருக்கார்.  இன்னிக்கு ஆஞ்சியைப் பார்க்கப் போனப்போ ராமரையும் படம் எடுத்தேன். செல்லினது தான். 





அந்தக் குறிப்பிட்ட இடம் மட்டும் கொஞ்சம் இருட்டாகத் தான் இருக்கும்.  ஆகவே வந்தவரை எடுத்திருக்கேன்.  நாலுநாளாக் காணாமல் போயிருந்த தும்பிக்கை நண்பர் இன்னிக்கு வந்துட்டார். மனசுக்குக் கொஞ்சம் நிம்மதியா இருந்தது. 

Sunday, February 22, 2015

பதிவர் மாநாடு ஶ்ரீரங்கத்தில்!

ரஞ்சனி நாராயணன் இந்த வாரம் ஶ்ரீரங்கம் வருவதைக் குறித்து எனக்கு ஒரு மாசம் முன்னேயே தொலைபேசிச் சொல்லி இருந்தார். அவர் வரும்போது இங்கே உள்ள திருச்சி, ஶ்ரீரங்கப் பதிவர்கள் அனைவரையும் பார்க்க ஆசைப்பட்டார்.  வெள்ளிக்கிழமையன்று ஶ்ரீரங்கம் வந்த ரஞ்சனி இன்று மாலை பதிவர்கள் அனைவரையும், வயதிலும், அனுபவத்திலும் மூத்த பதிவரான திருமதி ருக்மணி சேஷசாயி அவர்கள் வீட்டில் சந்திப்பதாகவும் எல்லோருமே அங்கே வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  சந்திக்கும் நேரம் மாலை ஐந்து மணியிலிருந்து.  கிளம்புவது அவரவர் விருப்பம் போல் என முடிவு செய்யப்பட்டது.


நாம தான் எப்போவும் அவசரக் குடுக்கை.  அதோடு இப்போது உறவினர் வருகையாக வேறே இருக்கிறது.  நாளைக்கு ஒரு பூணூல் கல்யாணம் வேறே கலந்துக்கணும்.  ஆகவே வந்துட்டு உடனே கிளம்பிடுவேன் என அனைவரையும் மிரட்டி வைச்சிருந்தேன். சாயந்திரம் ஐந்து மணி என்றால் சரியான ராகுகாலத்தில் கிளம்பணுமேனு நினைச்சால் நம்ம ரங்க்ஸ் நாலு மணிக்கே என்னைக் கிளப்பி விட்டுட்டார்.  சீக்கிரம் போனால் சீக்கிரம் வரலாம்.  அதோடு எனக்கு இருட்டிப் போச்சுன்னா வண்டி ஓட்டுவது கஷ்டம்னு சொன்னார்.  அவரோட கவலைஅவருக்கு.  பூணூலுக்கு வந்திருக்கும் விருந்தினர் வேறு வீட்டுக்கு வந்தாலும் வரலாம்.

ஆகவே அவர் என்னைக் கொண்டு விட்டுவிட்டுத் திரும்ப வீட்டுக்கு வருவதாகவும், பின்னர் ஆறு, ஆறரை போல் அழைத்து வருவதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு தரப்பும் மனமார ஒத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டோம்.,  வீட்டை விட்டுக் கிளம்பி திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் வீட்டுக்குச் சென்றோம்.  அங்கே உள்ள விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்போதே திரு வைகோ, திரு தமிழ் இளங்கோ, திருமதி ராதா பாலு ஆகியோர் என்னை அடையாளம் கண்டு கொண்டு கூப்பிட்டனர்.   அங்கேயே திருமதி வெங்கட் நாகராஜ், அவர்கள் மகள் ரோஷ்ணி ஆகியோரையும் பார்க்கக் கீழேயே ஒரு சின்னச் சந்திப்பு நடந்து முடிந்து அனைவரும் திருமதி ருக்மிணி அவர்கள் இல்லம் நோக்கிச் சென்றோம்.

இரண்டாவது மாடியில் இருக்கும் அவர்கள் வீட்டில் திரு ரிஷபன் முன்னரே வந்து காத்திருந்தார்.  ஏற்கெனவே ரிஷபன் எங்க வீட்டுக்கு வந்திருந்தும் அவரை எனக்கு அடையாளம் தெரியாமல்  திருதிருவென முழிக்க திருமதி வெங்கட்டும், அவர்கள் மகளும் ரிஷபன் சாரைத் தெரியலையா?  உங்க வீட்டுக்கு வந்திருக்காரே என்றனர்.  கொஞ்சம் இல்லை; நிறையவே அசடு வழிந்தது.  எங்களை அவரும் திருமதி ருக்மிணியும் வரவேற்க, அனைவரும் ஒருவருக்கொருவர் சிறிது நேரம் அறிமுகம் செய்து கொண்டு பேசினோம். அதற்குள்ளாக ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் ஒரு பெரிய பையுடன் வர அதற்குள் மாவடுவா என ஆவலுடன் நான் பார்க்க, அவர் கொடுத்ததோ அவருடைய புத்தகம். மாவடுவுக்கு மீண்டும் முன் பதிவு செய்து கொண்டு உட்கார்ந்தேன். இந்தியா ஜெயித்துவிட்டது என்பது தெரிந்தவுடனே வெளியே கிளம்பிய ரஞ்சனி அவர் கணவருடன் வந்து சேர்ந்தார். அவருடன் சிறிது நேரம் அறிமுகம்.  மீண்டும் பேச்சு.

சற்று நேரத்தில் ஒருவர் கையில் பையுடன் வர இவரை எங்கேயோ பார்த்திருக்கேன்; எங்கேனு தான் தெரியலை என நான் நினைக்க அதற்குள்ளாக ராதா பாலுவும், ரஞ்சனியும் இவர் யார்னு என்னைக் கேட்க, நான் அவர்களைக் கேட்க இம்முறையும் பெரிய அளவில் அசடு வழியும்படி வந்தவர், "நான் மாதங்கியின் அப்பா!" என்றார்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனதுக்குள் என்னை நானே சொல்லிக்கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு முறை வீட்டுக்கு வந்திருக்கார்.  ஆனாலும் யார்னு புரியாமல் முழிச்சிருக்கேன்.  இன்னும் அசடு வழிய யார் வரப் போறாங்களோனு நினைக்க இனி யாரும் இல்லைனு சொன்னாங்க.

மாதங்கியின் அப்பா அஷ்டாவதானியாம்.  இந்தத் தகவலே எனக்கு இன்று தான் தெரியும். தமிழ் இளங்கோ அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி என்று சொல்லவும் நான் என் தம்பியைக் குறித்துச் சொன்னேன்.  அவரும் யார்னு புரியலை, பார்த்தால் புரியும் என்று சொன்னார். பெண்கள் அனைவரும் சமையலைப் பத்தியே அதிகம் எழுதறீங்க, சமையலறையை விட்டு எப்போ வெளியே வரப் போறீங்கனு தமிழ் இளங்கோ கேட்க, நாங்க வெளியே வந்தால் உங்களுக்குச் சாப்பாடு எப்படிக் கிடைக்கும்னு நான் கேட்க, ஹோட்டலில் சாப்பிடலாம்னு அவர் சொல்ல, ஒரு நாள், இரண்டு நாள்னா சாப்பிடலாம்.  என்னிக்கோ சாப்பிட்டாலே ஒத்துக்கறதில்லை. என்று நான் சொல்ல திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்கள் சமையல் செய்வதன் முக்கியத்துவத்தைக் கூறினார்கள்.

அஸ்வமேத யாகம் செய்வதற்குச் சமம் ஒருவருக்குச் சமைத்துப் போட்டுப் பசியாற்றுவது என்று அவர் சொல்ல, பேச்சு மெல்ல மெல்ல நகர்ந்து ஒவ்வொரு ஹோட்டலின் சுவையையும் குறித்துப் பேசப்பட்டது.  உடனே நான் சும்மா இருக்காமல் இப்போச் சாப்பாடு பத்தித் தானே பேசறோம்.  சமைக்கலைனா பேசமுடியுமானு கேட்க, சுவை குறித்துத் தான் பேசறோம்னு அவர் சமாளிக்கப் பேச்சுப் பல திசைகளிலும் சென்றது.  ஒவ்வொருவராகத் தங்கள் காமிராவில் படம் பிடித்தனர்.  படங்களை அநேகமாக வைகோ அவர்கள் வெளியிடுவார்.  நான் காமிரா கொண்டு போகவில்லை;  செல்ஃபோனிலும் எடுக்கவில்லை.

பின்னர் என்னை அழைத்துச் செல்ல ரங்க்ஸ் தொலைபேசிக் கேட்க நானும் கிளம்பத் தயாரானேன்.  அதற்குள்ளாக ரஞ்சனி, வைகோ, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகியோர் அவரவர் புத்தகங்களை எங்களுக்குப் பரிசாகக் கொடுத்தனர்.  திருமதி ராதா பாலு வெற்றிலை, பாக்கு, ரவிக்கைத் துணி வைத்துக் குங்குமச் சிமிழ், விஷ்ணு பாதத்தோடு அளித்தார். செவிக்கு மட்டும் உணவில்லாமல் வயிற்றிற்கும் திருமதி ருக்மிணி சேஷசாயி செய்து வைத்திருந்தார்.  இட்லி, உ.கி. போண்டோ, கடையில் வாங்கிய மில்க் ஸ்வீட், காஃபி ஆகியன. நான் வயிறு ஏற்கெனவே சரியில்லாததால் இரண்டு இட்லியும் ஸ்வீட்டும் மட்டும் எடுத்துக் கொண்டேன்.  உ.கி. போண்டோ எண்ணெய்ப் பதார்த்தம் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.  பின்னர் காஃபி குடித்துவிட்டு உட்கார்ந்திருக்கையில் கீழே வந்த ரங்க்ஸ் அங்கிருந்து என்னை அழைக்க  அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி வீட்டுக்கு வந்தாச்சு.

மத்தவங்க உட்கார்ந்திருக்காங்க.  அவங்க கிளம்ப இன்னும் நேரம் ஆகும்னு நினைக்கிறேன்.  ஆகவே மற்றவை அவங்க பதிவுகளில் பார்த்துக் கொள்ளலாம். 

Saturday, February 21, 2015

தாய்மொழிக்கு ஒரு தினம்!

தமிழ் மரபு அறக்கட்டளை

subashini tremmel க்கான பட முடிவு

The Hindu


இன்று உலகத் தாய்மொழி தினம் என யுனெஸ்கோ அறிவித்துள்ளது.  அதன்படி இன்று நாம் தமிழ்மொழியைச் சிறப்பாக வளர்க்க இனி தமிழிலேயே கூடியவரை பேசுவதையும் எழுதுவதையும் வழக்கப்படுத்திக் கொள்வோம்.  மேலுள்ள படத்தில் காணப்படும் சுபாஷிணி அவர்கள் தமிம் மரபு அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவர்.  தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். தமிழ் மொழியின் மேலும், தமிழ்நாட்டின் மேலும் உள்ள தீராத பற்றின் காரணத்தால் தமிழ்மொழியின் பாரம்பரியக் கலைகள், சடங்குகள், இலக்கண, இலக்கியங்கள், பழைய ஓலைச்சுவடிகள் எனத் தேடித் தேடிக் கண்டெடுத்து அவற்றை ஆவணப்படுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டில் இவர் கால்படாத இடம் இல்லை எனலாம். அந்த அளவுக்குப் பல இடங்களுக்கும் சென்று தமிழின் தொன்மையை வெளிக்கொண்டு வர அரும்பாடு பட்டு வருகிறார். இதற்காகவே ஜெர்மனியில் வசிக்கும் இவர் வருடம் இருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார். இவரைப் பற்றிய மற்றத் தகவல்களை ரஞ்சனி நாராயணன் அவர்கள் வலைச்சரத்தில் அளித்திருப்பதை அனைவரும் படித்திருக்கலாம்.

வலைச்சரத்தில் சுபாஷிணி

இனி நான் 2012 ஆம் வருடம் திரு இன்னம்பூராரின் பதிவு ஒன்றைப் பகிர்ந்து கொண்டேன்.  அதன் மீள் பதிவு கீழே!


உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்!
ஃபெப்ரவரி 21-ம் தேதியை யுனெஸ்கோ தாய்மொழி தினமாக அறிவித்து அதை ஐநா 2008-ஆம் வருடம் பிரகடனப் படுத்தியதன் தொடர்பாக மின் தமிழில் இன்னம்புரார் எழுதி இருந்த கட்டுரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். தாய்மொழியின் முக்கியத்துவம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளின் சிறப்பையும் அவற்றையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறியுள்ளார். தற்காலச் சூழ்நிலைக்குத் தேவையான பதிவு. அதோடு இந்தியாவிலேயே முதல் முதலாகத் தாய்மொழியை அரசு மொழியாக அறிவித்த ஒரே மாநிலம் குஜராத் தான். அந்த மாநில மக்கள் ஆங்கிலமும் பேசுவார்கள்; ஹிந்தியும் தெரியும்; இங்கே போல் அங்கேயும் தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார் சபா தான் ஹிந்தி தனித்தேர்வுகளை நடத்துகிறது. ஆனால் அம்மக்கள் தங்களுக்குள்ளாக குஜராத்தியில் தான் பேசிக்கொள்வார்கள். அது எவ்வளவு படித்தவர்களானாலும் குஜராத்தியில் பேச மறப்பதில்லை. இன்று இந்தியாவிலேயே தன்னிறைவு பெற்றதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கும் ஒரே மாநிலமும் குஜராத் தான். இனி இன்னம்புராரின் கருத்துகள். வழக்கத்தை விடப் பெரிய பதிவு.
******************************************************************************************



அன்றொருநாள்: ஃபெப்ரவரி 21

தாய்மொழி

தமிழ் என்னுடைய தாய்மொழி. இன்றைய தினம் தாய்மொழி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தமிழ் என்னை வரித்துக்கொண்டது ஒரு பெரும் பேறு. தமிழர்கள் யாவரும் தமிழ் விழா எடுக்க வேண்டும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல; தினந்தோறும், தமிழுக்காக கொஞ்சநேரம் செலவழிக்க வேண்டும். சிறிதளவாவது, தமிழ் இலக்கியங்களை படிப்பதில் செலவிடவேண்டும். சிறிதளவாவது இலக்கணம் அறியவேண்டும். நான் தமிழார்வத்தினால் உந்தப்பட்டு, சில வருடங்கள் முன்னால் சென்னை வந்த போது, வாரம்தோறும், ஆர்வலர்களை தருவித்து ஒரு தமிழ் வட்ட மேஜை இயக்க திட்டமிட்டேன். நடக்கவில்லை. பேட்டைக்கு ஒரு சங்கம் தமிழார்வத்தை பரப்ப வேண்டும். இது தலைவாசல்.

காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. உவமை சற்றே மாறி அமைந்திருந்தாலும், உவகையை உணர்த்துகிறது என்று கருதுகிறேன். அவரவருக்கு அவரவருடைய அன்னை தெய்வம். ஆகவே, அவரவரின் தாய்மொழி பற்றை போற்றுவோமாக;மதிப்போமாக; ஊக்குவிப்போமாக. இது முதல் படி.

நமது தாய்மொழியின் தொன்மை, பெருமை, இலக்கிய மேன்மை, சுவை, கலையுடன் தொடர்பு, இறை தொண்டு, மொழி நுட்பங்கள், விமர்சனம், ஒப்புமை ஆகியவை பற்றியும், தொடர்ந்து வரும் பல கருத்துக்களையும் புரிந்துகொண்டு, மற்றவர்க்கு அறிவிப்பது நற்பயனை பயக்கும். அன்றாட அளவளாவுதல்,வட்டமேஜை, நூல்கள், சொற்பொழிவுகள், விழா எடுப்பது, இணைய தளம் எல்லாம் உதவும். அது இரண்டாவது படி.

அந்த கடமையை செவ்வனே செய்ய, நாம் நமது தாய்மொழியில் வல்லுனர் ஆகவேண்டும். அம்மை மடியில் அமர்ந்து பேசிய மழலையும், பள்ளிப்பாடங்களும், தேர்வில் பெற்ற மதிப்பீடுகளும், அன்றாட வாழ்க்கையில் கூடி வரும் பாமரகீர்த்திகளும், கிளை மொழிகளுக்கும், பேசும் மொழிக்கும், நாட்டுப்புற வரவுகளுக்கும் ஆதரவும், ஊக்கமும் அளிப்பதும், நாள் தவறாமல் தமிழிலும், மற்ற மொழிகளிலும் புதியவற்றை தேடி அறிந்து கொள்வதும்,இலக்கியம், இலக்கிய சுவை, இலக்கிய விமர்சனம், கருத்து பரிமாற்றம் ஆகியவை திறனைக்கூட்டும். மொழி ஒரு கருவி. ஓசையை அசைத்து, சொல் அமைத்து, அதன் பொருளை தெரிவிப்பது மட்டுமே மொழிக்கு இட்ட பணி என்றால், இலக்கியம் பிறக்காது; கற்பனை தோன்றாது. அது வெம்பிய பிஞ்சு. சார்லஸ் பெகு என்ற கவிஞர், ‘சொல்லின் தன்மை வேறுபடும். சில படைப்பாளிகள், தன் அடிவயிற்றில் இருந்து அதை எடுப்பார்கள்; சிலர் ஜோல்னா பையிலிருந்து...’ என்றார். இதை புரிந்துகொண்டால், தமிழன்னை நம்மை உவகை பொங்க வரவேற்பாள். இது மூன்றாவது படி.

சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம். நமக்குள் தமிழ் பேசிக்கொள்வதற்கு தடை யாது? ஏன் சரமாரியாக, ஓட்டைக்கப்பலில் வந்து இறங்கி வந்தவன் போல, ஆங்கிலத்தில் பிளந்து கட்டுகிறோம்? தமிழ் வீடுகளில் தமிழில் பேசிக்கொள்வது தான் பண்பு, சிறார்களுக்கு முன்னுதாரணம். சில சமயம் ஆங்கிலத்தில் பேசுவது இங்கிதம். ஒரு மாநிலத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்னாலேயே தாய்மொழியில் அரசு அருமையாக நடத்தப்பட்டு வந்தது. ஒரு சமயம் முதல்வர் என்னை குறிப்பிட்டு, ‘இவருக்கு நாம் பேசுவது, நுட்பங்கள் உள்பட, புரிந்தால் நமக்கு தான் நன்மை; ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்றார். அந்த பெருந்தன்மை நமக்கும் வேண்டும். மற்றபடி தமிழுக்கு முதன்மை. திரு.வி.க. அவர்கள் மார்க்கபந்து. இது நான்காவது படி.

வடமொழி என்று முத்திரையிட்டு தமிழார்வலர்களில் பலரால் நிந்திக்கப்படும் சம்ஸ்க்ருதம், இந்தியாவின் நன்கொடை மனித இனத்திற்கே. ‘சம்ஸ்க்ருதம்’ என்ற சொல் ‘சிறப்பான அமைப்பு என்ற பொருள்படும் காரணப்பெயர். அம்மொழியை பழிப்பது ஒரு தாழ்வு மனப்பான்மை. தேவையே இல்லை. தமிழ் எந்த வகையிலும் வடமொழிக்குக் தாழ்ந்தது அன்று. அத்தகைய பாகுபாடு, மொழிகளுக்கு ஏற்புடையது இல்லை. இரு மொழிகளும் ஆயிரக்கணக்கான வருடங்களாக, நம் சமுதாயத்தின் இரு கண்களாயின. தமிழறிஞர்களில் பெரும்பாலோர் வடமொழியில் விற்பன்னர்களாக இருந்திருக்கின்றனர். வடமொழியை வரவேற்கும் மனநிலை நன்மை பயக்கும். கிரந்தம் பற்றி சர்ச்சை செய்த வண்ணம் இருக்கிறோம். கிரந்தம் பரவுவதற்கு நாம் எல்லாரும் உழைக்கவேண்டும். இது ஐந்தாம் படி.

ஆங்கிலம் உலகளாவிய பொது மொழி என்பதை யாவரும் அறிவர். ஆங்கிலம் கற்றுக்கொள்வதால் ஆதாயமே ஒழிய தீமை யாதும் இல்லை. ஆங்கில மோகம் வேண்டாம். ஆங்கில புலமை வேண்டும். இன்று உலகம் குறுகி விட்டது. ஆங்கிலம் தெரியாதவர்களால், திரைகடலோடியும் திரவியம் தேட இயலாது. திக்கு, திசை தெரியாமல் திண்டாடவேண்டும். மேலும், பலமொழிகளில் இருக்கும் இலக்கியம்,வரலாறு, எண்ணில் அடங்கா அறிவியல் தளங்களுக்கு ஆங்கிலம் திறவு கோல்.இந்தியாவில் ஹிந்தியை மதிப்பது நலம். ஆனால் தேசிய மொழி என்பதால் எழும் வெறியை முற்றும் தணிக்கவேண்டும். இந்த விவேகம் ஆறாவது படி.

அண்டை மாநில மொழிகளை நிந்திப்பது அறிவீனம். கேரள கதக்களியும் வேண்டும்; சுந்தரத்தெலுங்கும் வேண்டும்; மஸ்தி வெங்கடேச ஐயங்காரின் இலக்கியமும் வேண்டும். இயன்றவரை அண்டை மாநிலமொழிகளையும் ஓரளவு கற்றுக்கொள்வோம். இந்த மனித நேயம் நமது உறவுகளை உறுதிப்படுத்தும். ஏழு படி ஏறி விட்டோம்.

இன்றைய உலகில் ஐரோப்பிய மொழிகளுக்கு மவுசு ஜாஸ்தி. விஞ்ஞானம் படிக்க ஜெர்மானிய மொழி, கலையார்வத்திற்கு ஃபெரன்ச் என்பார்கள். எல்லா மொழிகளிலும் எல்லாம் இருக்கின்றன. எல்லாமும் இல்லை. தற்காலம் ஸ்பானிஷ் மொழி பரவிய வண்ணம் இருக்கிறது. தென் அமெரிக்கக்கண்டத்தில் அதற்குள்ள ஆளுமை தான் காரணம். இன்று தமிழ்நாட்டில் பலமொழிகளை கற்க வசதிகள் பெருகி உள்ளன. ஒரு காலத்தில் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ள வசதியே இல்லை. ஜெர்மானியத்துக்கு ஒரு இடம். ஃபெரன்ச் மொழிக்கு ஒரு இடம். அவ்வளவு தான். இருக்கும் வசதிகளை, தேவைக்கேற்ப, பயன் படுத்திக்கொள்வது சிலாக்கியம். எட்டாவது படியில் நாம்.

எட்டாவது படியிலிருந்து குனிந்து எட்டிப்பார்த்தால்...

யுனெஸ்கோ ஸ்தாபனம் ஃபெப்ரவரி 21ம் தேதியை தாய்மொழி விழா தினமாக,1999 ல் அறிவித்து, அதை ஐ.நா. 2008ல் பிரகடனப்படுத்தியதின் பின்னணி தெரியும்.

‘தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்...’ என்று நாம் பாடினால், ‘ஸோனார் பங்களா’ (‘பொன் விளைந்த களத்தூர்’) என்று தமது தேசாபிமானத்தை வெளிப்படுத்தும் பங்களா தேஷ் நாட்டில் 1952 லிருந்து இந்த விழா எடுக்கப்படுகிறது. பெங்காலி மொழியை ஒழிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் 1948லேயே தீவிரம் காட்ட, டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர்; சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்கா பல்கலைக்கழகத்தில் இவர்களுக்கு ஒரு நினைவு மண்டபம் இருப்பது சின்னம். நாடு இரண்டாகப்பிரிந்தது விளைவு. அந்த நினைவு மண்டபத்தில் இந்த தினத்தில் பத்து லக்ஷம் மக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். 23 கோடி மக்கள் அந்த மொழி பேசுவதாக, ஒரு புள்ளி விவரம். வரலாற்று நோக்கில் பார்த்தால், பிரச்னை தோன்றியது,1905ம் வருடத்தில் கர்ஸான் பிரபு வங்காளத்தைத் துண்டித்தபோது. கொதித்தெழுந்தனர் மக்கள். துண்டுகள் இணைக்கப்பட்டன, 1911ல். தழும்பு நீங்கவில்லை. அது மறுபடியும், வேறு காரணங்களால் வெடித்துக்கொண்டது, 1947ல். எனினும் பாஷாபிமானம் வங்காளம் முழுதும் ஒன்றே.

மூன்று மாதங்கள் முன், நாவன்னா. காவன்னா, '...தமிழ் இலக்கியம் அறிந்தோர் அறிவியல் என்று வரும்
போது கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும்.அறிவியல் அறிந்தோர் தமிழில் அறிவியல் இல்லை என்று கருதும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்று சொன்னது சாலத்தகும். இந்த ஆலோசனை எல்லாத்துறைகளுக்கும் ஏற்புடையது. ஓஹோ! ஒன்பதாவது படி ஏறி, அதே எட்டில் பத்தாவது படி அடைந்தோம்.

அங்கிருந்து எட்டிப்பார்த்தால்...

இன்றைய செய்தி: லாட்வியா என்ற நாட்டில், மக்கள் ரெஃபெரண்டம் முறையில், ரஷ்ய மொழியை இரண்டாவது மொழியாக வைத்துக்கொள்ள திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள். இது பூதாகாரமான பிரச்னைகளுக்கு வித்திட்டிருக்கிறது. ஏனெனில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் ரஷ்ய இனம். ரஷ்யா முரட்டு அண்ணாச்சி வேறே. ஆனால், அன்றொரு நாள், வலுக்கட்டாயமாக ரஷ்யர்களை எக்கச்சக்கமாக குடியேற்றம் செய்ததை லாட்வியர்கள் மறக்கவில்லை. தேசாபிமானம், மொழிப்பற்று, கலாச்சார வேர்கள், இறை வணக்கம் போன்றவற்றை, பண்புடன் கையாண்டால் தான், தாய்மொழி வளரும். நாமும் எட்டு படிகள் ஏறி எட்டிப்பார்க்கலாம். அத்துடன் மொழிகள் நசித்துப்போவதைத் தடுக்கலாம். ஆறாயிரம்/ஏழாயிரம் மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன. அந்தமான் தீவுகளில் ஒரு மொழி அண்மையில் நசித்தது. நாம் யாவரும், அவரவது வட்டாரமொழிகளை காப்பாற்ற வேண்டும். பழங்காலம் போல் இல்லாமல், ஒலியும், ஒளியும், இணைய தளத்தில் சக்கைப்போடு போடுகின்றன. வேறு என்ன வேண்டும், பராபரமே!

இன்னம்பூரான்

21 02 2012

பயணங்கள் முடிவதில்லை! 11

நாங்கள் திருதிருவென்று முழிப்பதைக் கவனித்த அந்த விடுதிக்காப்பாளர் அவர் பங்குக்கு அவரும் விழிக்க ஆரம்பிக்க, அப்போது அங்கே வந்த இளைய பட்டாசாரியார் ஒருத்தர் எங்கள் பிரச்னையை என்னனு புரிந்து கொண்டு, அருகில் உள்ள மாலோல மடத்தில் மேல்நாட்டு முறைப்படியான கழிவறையுடன் கூடிய அறை கிடைக்கும் என்றும்பபக்கத்துத் தெருவில் திரும்பினதும் சத்திரம்  கிடைக்கும் என்றும் சொன்னார்.  யாரேனும் ஒருத்தர் அங்கே போய்ப் பார்த்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டு வரலாம் என முடிவு செய்ய, அந்த பட்டாசாரியாரே மீண்டும் தன் தொலைபேசியை எடுத்து , 'மழையில் நீங்க போக வேண்டாம்; நானே கேட்டுச் சொல்றேன்,' என்று சொல்லிவிட்டு அலைபேசியில் முத்துக் கிருஷ்ணன் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசினார்.

அவர் தான் மாலோல மடத்தின் காப்பாளர் எனத் தெரிந்தது.  தற்சமயம் கோயிலில் இருப்பதாகவும், எங்களை அங்கே போய் விடுதிக் காவலாளியிடம் சொல்லி அறையைத் திறந்துவிடுமாறு சொல்வதாகவும் உறுதி கொடுத்தார்.  ஆகையால் நாங்கள் எல்லோருமே எங்கள் வண்டியில் அந்த மடத்தை நோக்கிச் சென்றோம்.  உத்திராதி மடத்திலிருந்து அரை ஃபர்லாங் கூட இல்லை.  அங்கே போய் விடுதிக் காவலாளி, வயதான கிழவர், அவரை எழுப்பி விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே காப்பாளரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவருக்கு மீண்டும் தொலைபேசச் சொன்னார்.  நாங்களும் காப்பாளரின் தொலைபேசி எண்ணில் அவரை அழைத்து விபரத்தைச் சொல்ல அவரும் காவலாளியிடம் பேசித் தான் சற்று நேரத்தில் வருவதாகவும், எங்களுக்கு வேண்டிய அறைகளைத் தரும்படியும் சொன்னார்.

உடனே உள்ளே அழைத்துச் சென்றார் காவலாளி.  அதுவரை கீழ்ப்படியில் நின்று கொண்டிருந்த நான் மெல்ல ஓவ்வொரு படியாக மேலே ஏறினேன்.  கிட்டத்தட்டப் பத்துப்படிகள்.  மழை வேறு பெய்து கொண்டிருந்ததால் வழுக்கல்!  விடுதிக் காவலாளி நான் ஏறுவதைப் பார்த்தவர், "பைய, பைய" என்று சொல்ல எங்கள் பையருக்கு மயக்கமே வந்து விட்டது.  அவரைத் தான் கூப்பிடறார் என நினைத்து, என்ன தாத்தா என்று அவரிடம் கேட்க, தென்பாண்டிச் சீமையின் வட்டார வழக்கு மொழியைக் குறித்து அறிந்திருந்த நான் ஊடால (இதுவும் வட்டார வழக்குச் சொல்லே :D) புகுந்து இது தெற்கத்தித் தமிழ். மெல்ல என்பதை இங்கே பைய என்பார்கள் எனப் பையருக்கு விளக்கினேன்.  பின்னர் உள்ளே சென்றதும் கிட்டத்தட்ட ஐம்பது பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடும் கூடம்.

கூடத்தின் பக்கவாட்டில் இரண்டு அறைகள்.  கூடத்தின் நேர் மூலையில் ஒரு மாடிப்படி.  அதன் அருகே ஒரு வாயில் கொல்லைப்புறம் நோக்கிச் சென்றது.  அறைகளுக்கு அருகே இன்னொரு வாயில் இன்னொரு சின்னக் கூடத்திற்குச் சென்றது.  அங்கேயும் அறைகள் இருக்கின்றன எனக் கேள்விப் பட்டேன். எங்களுக்குக் கூடத்திலேயே இருந்த அறைகளைத் திறந்து காட்டினார் காவலாளி.  ஆஹா, கட்டில், மெத்தை, அதோடு மேல்நாட்டுக் கழிவறை வசதி!  அருகே இருந்த இன்னொரு அறையில் கட்டில், மெத்தை வசதி இருந்தாலும் கழிவறை இல்லை. என்ன செய்யலாம் என மண்டையை எல்லாம் உடைச்சுக்காமல் கழிவறை இருக்கும் அறையில் நானும், ரங்க்ஸும் தங்குவது என்றும், மற்றோர் அறையில் பையரும் மருமகளும் தங்குவது என்றும் எங்கள் அறைக் கழிவறையையே அவர்களும் பயன்படுத்திக்கலாம் எனவும் ஏகோபித்த முடிவு எடுக்கப்பட்டது.

அதற்குள்ளாக விடுதிக் காப்பாளரும் வந்து சேர மறுநாள் சேதுக்கரை ஸ்நானம் குறித்தும், சங்கல்பம் மற்றும் கோயில் வழிபாடு இதர வேலைகள் குறித்தும் அவரிடம் பேசி முடிவு செய்து கொண்டோம்.  காஃபி, சாப்பாடு போன்றவை அங்கே ஒரு வீட்டில் கொடுப்பாங்க என்றாலும் காஃபிக்கு ஏழு மணி ஆகும் என்றும் சொன்னார்.  ஆகவே அங்கே கோயில் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையிலேயே காஃபிக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என முடிவு பண்ணிக் கொண்டோம்.  காலை ஆகாரம் கிடைக்காது என்றும் சொல்லிவிட்டார்கள்.  பதினோரு, பனிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாடு கிடைக்கும் என்றும் கூறவே சரி, இருக்கும் பழங்களை வைத்துச் சரிக்கட்டிக்கலாம் என முடிவு செய்து அறைக்கு வந்து படுத்தது தான் தெரியும்.  நல்ல தூக்கம். 

Thursday, February 19, 2015

தாத்தாவுக்கு அஞ்சலி! கொஞ்சம் தாமதமாக!

உ வே சா க்கான பட முடிவு


பெற்ற தாயைப் போலவே பேசும் மொழியையும், பிறந்த நாட்டையும் போற்றிப் பாராட்டுவது மக்கள் கடமையாகும்.மொழிக்குத் தெய்வமான கலைமகளைத் தாயாகவே கருதி வழிபடுவது பெரியோர்கள் இயல்பு. அப்படியே நிலமகளையும் அன்னையாக வணங்கி வருவதும் நம் நாட்டினர் வழக்கம். பண்டைக்கால முதற்கொண்டே தம் தம் நாட்டினிடத்தே அன்பு கொள்ள வேண்டுமென்ற கொள்கை மக்களுக்கு இருந்து வருகின்றது. காப்பியங்களில் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு நாட்டுப் படலம் சொல்லப் படுகிறது. அதனால் நாட்டைப் பற்றிய செய்தியின் தலைமை விளங்கும். மனிதராய்ப் பிறந்த யாவருக்கும் தாய் நாட்டின் மீது அபிமானம் இருத்தல் இயல்பு. திருக்குறளில், 
"சிறை நலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோடொட்டல் அரிது." என்பதன் விசேடவுரையில் பரிமேலழகர் பலத்திற் குறைந்த வீரர்களும் தம்முடைய நாட்டினிடத்திலேயுள்ள பற்றினால் பகைவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள். அவர்கள் தம்முடைய நாட்டை விட்டுப் பிரிவதைக் காட்டிலும் சாவதற்குத் துணிந்திருப்பார்கள்" என்று தமிழ்த் தாத்தா தாய்மொழியைக் குறித்துத் தெரிவிக்கிறார்.


இப்போச் சில நாட்களாகக் காலை வேளையில் அரை மணி நேரம் கூடக் கணினியில் அமர முடியவில்லை.  இதை நேத்தே ஷெட்யூல் செய்ய நினைச்சு வேலை மும்முரத்திலும் அடுத்தடுத்து யாராவது வந்து கொண்டிருந்ததிலும் முடியலை! :)))) ஆகவே கொஞ்சம் தாமதமாகவேனும் போட முடிந்ததுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  தாத்தாவின் பிறந்த தினத்தில் தாத்தாவுக்கு நமது அஞ்சலிகள்.

Wednesday, February 18, 2015

பயணங்கள் முடிவதில்லை! 10

இங்கே

மேலே உள்ள சுட்டியில் கடைசியாப் படிச்சோம். இராமநாதபுரத்திலும் தங்கும் அறைகள் கிடைக்கவே இல்லை.  அப்போது தான் எங்கள் வண்டியின் ஓட்டுநர் ஒரு யோசனையைச் சொன்னார்.  இதற்கு முன்னர் அவர் வேறொரு குடும்பத்தோடு திருப்புல்லாணி போயிருக்கையிலே அங்கேயே தங்கினார்கள் என்றும் சாப்பாடு முதற்கொண்டு அங்கேயே கொடுத்தனர் என்றும் சொன்னார். ஆகவே அங்கே விசாரிக்கச் சொன்னார்.  மணி ஏழு ஆகவில்லை என்பதால் உடனேயே திருப்புல்லாணிக்குத் தொலைபேசிக் கேட்டதற்கு அங்கே இருந்த அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் எல்லா விபரங்களையும் தெளிவாகச் சொன்னதோடு உத்திராதி மடத்தின் காப்பாளரின் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.  அங்கிருந்தே அவரைத் தொடர்பு கொண்டதில் அறை கொடுப்பதாகவும், நேரே திருப்புல்லாணி வந்துவிடுமாறும் காப்பாளர் கூறவே நாங்கள் அங்கேயே இருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டுக் கிளம்பித் திருப்புல்லாணியை நோக்கிச் சென்றோம்.


சுமார் எட்டரை மணி அளவில் திருப்புல்லாணிக்கு வந்துவிட்டோம்.  உத்திராதி மடத்தைத் தேடிக் கொண்டு செல்கையில் வழியில் மாலோல மடம் என்றொரு பெயரில் இன்னொரு மடம் இருந்ததையும் பார்த்தேன்.  அதைத் தவிரவும் அஹோபில மடமும் இருந்தது. யோசனையுடன் இருந்தேன்.  அதற்குள்ளாக உத்திராதி மடம் போய்ச் சேர்ந்தோம். சமுத்திரக் கரைக்கு அருகே இருப்பதால் உயரமான படிகள் வைத்துக் கட்டிய கட்டிடம்.  பத்துப் பதினைந்து படிகள் ஏறித்தான் மேலே போகணும்.  மடத்தின் காப்பாளர் குடும்பம் மொத்தமும் எங்களுக்காகச் சாப்பிடாமல் காத்திருந்தார்கள்.  நாங்கள் சாப்பிட்டுவிட்டதை முதலில் சொன்னோம்.  அறையைக் காட்டச் சொல்லிக் கேட்டோம். இது அவர்கள் எதிர்பார்க்கவில்லை என எண்ணுகிறேன்.  இரவு நேரம், ஏதோ தங்க இடம் கொடுத்தால் மடத்தையே பிடுங்கிடுவாங்க போலனு நினைச்சிருப்பாங்களோ?

அறையைத் திறந்து காட்டினார்கள்.  அறையில் ஒரு பக்கம் நெல் மூட்டைகள் அடுக்கி இருக்க, அதன் அருகே வேண்டுதலுக்குச் செய்த (?) அல்லது வேறெதற்கோ செய்த மரக்குதிரைகள் நின்றிருந்தன.  குதிரைகள் அனைத்தும் எப்போ வேணாப் பாயும் நிலையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.  ராத்திரி தூங்கறச்சே நம்மளை எல்லாம் மேலே ஏத்திண்டு போக ஆரம்பிச்சுடுமோனு ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. உடனே  கைலை யாத்திரையில் பரிக்ரமாவுக்குக் குதிரை ஏறினதும், குதிரை கீழே தள்ளி என்னோட நல்லவேளையாக் குழி பறிக்காமல் இருந்ததும், இன்று வரை  இடுப்பில் அடிபட்ட அந்த இடத்தில் இருக்கும் தீராத வலியும் நினைவில் வந்தது. உடனேயே  அதே இடத்தில் இப்போவும் வலிக்கிறாப்போல் ஒரு எண்ணமும் வந்தது.


குதிரை பொம்மைகள் க்கான பட முடிவு   குதிரை பொம்மைகள் க்கான பட முடிவு



குதிரைகளுக்கு  அருகே ஒரு சின்ன பெஞ்ச் போட்டிருந்தது.  மருத்துவமனைகளில் நோயாளியைப் பரிசோதனை செய்யப் போட்டிருப்பாங்களே அதைவிடவும் அகலம் கம்மி.  அதில் படுத்தால் பாதி உடம்பு வெளியே தான் இருக்கும். அப்படியும் நான் "ஒரு பெஞ்ச் தானே இருக்கு, நாம நாலு பேர் இருக்கோமே!"னு பேசிக் கொண்டதைக் கேட்ட காப்பாளர் குடும்பத்து நபர் ஒருத்தர் இன்னொரு கட்டில் இருக்கு, கொண்டு வரேன்னு சொன்னார்.  கட்டில்னதும் ஆஹானு நினைச்சார் நம்ம ரங்க்ஸ்.  எனக்கு அப்போவும் சந்தேகம்.  தென் மாவட்டங்களில் பெஞ்சைத் தான் கட்டில் எனச்  சொல்வது வழக்கம்.  நான் நினைச்ச மாதிரி இன்னொரு அரை பெஞ்சைக் கொண்டு வந்தார். பையரும், மருமகளும் அவங்க ரெண்டு பேரும் கீழே படுத்துக்கிறோம்னு சொன்னாங்க.  என்றாலும் அரை மனதோடு நான் விடாமல், "கழிவறை, மேல்நாட்டு முறைப்படியானது இருக்கா?" என்று கேட்டேன்.

அதற்கு அவங்க  கழிவறை இந்திய முறைப்படியானது என்றும் அதுவும்   தள்ளி இருப்பதாகவும் சொன்னார். கட்டிடத்துக்கு வெளியில் சுற்றிலும் இருந்த சுற்றுச் சுவரை ஒட்டிய சிறிய நடைபாதையைக் காட்டி அந்த வழியாகப் போக வேண்டும் என்றும், தண்ணீர் வழியில் உள்ள குழாயில் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.  மழை தூறிக் கொண்டிருந்தது.  அந்த வழியோ முழுதும் திறந்த வெளி.  ஒரு முறை கழிவறை போயிட்டு வரதுக்குள்ளாகக் கட்டாயமாய் நனைஞ்சுடுவோம். நாமோ பலமுறை போறவங்களாச்சே! அப்புறமா எங்கேருந்து தூங்கறது? எனக்கு என்னமோ சரிப்பட்டு வரும்னு தோணலை.  ரங்க்ஸிடம் வேண்டாம்னு மறுக்க, அவரோ கோபத்தோடு இந்த அர்த்த ராத்திரியில் என்னை வேறே எங்கே போய்த் தேடச் சொல்றே? னு சத்தம் போட ஒரு குருக்ஷேத்திரம் ஆரம்பம் ஆக இருந்தது.

படங்கள்: கூகிளார் கொடுத்தவை.

Monday, February 16, 2015

நாங்களும் "திங்க"றோமுல்ல!

//செல் விருந்து ஓம்பி, வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து, வானத்தவர்க்கு.//

எப்போவோ வள்ளுவர் சொன்னது. ஆனால் நம்ம வீட்டில் நிஜம்மாவே கடந்த ஆறு மாதங்களாக நடக்குது! நேத்திக்குத் தான் மும்பையிலிருந்து வந்திருந்த மாமியார், நாத்தனார், மைத்துனர் குழு மும்பை கிளம்பிச் சென்றனர்.  இன்று என் அண்ணாவின் சம்பந்தி வீட்டினர் வராங்களாம். :))))  வரப் போகும் விருந்தை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கோம்.  வரவங்க முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு உணவுக்குப் பழக்கமானவங்க.  அவங்களுக்கேற்ற இரவு உணவுக்கு வட நாட்டுப் பாணி உதவாது. ஆகவே இன்னிக்குக் காலம்பர செய்த ஆகாரத்தில் மாற்றம் செய்யும்படி நேர்ந்தது.  வரவங்க சென்னையை விட்டு வடக்கே திருப்பதிக்கு மட்டும் தான் போயிருப்பாங்க.  சப்பாத்தி, ரொட்டின்னா அவ்வளவு  பழக்கம் கிடையாது.  ஆகவே இட்லி மாவை அவங்களுக்காக ராத்திரிக்கு வைச்சுட்டு இன்னிக்குக் காலம்பர முள்ளங்கி பராத்தா பண்ணினேன்.

மூலி பராத்தா இரு வகையில் செய்யலாம்.  ஒரு விதம் உள்ளே ஸ்டஃப் செய்து பராத்தா பண்ணுவது.  இன்னொரு விதம் முள்ளங்கியையே மாவில் போட்டுப் பிசைந்து பண்ணுவது. ஸ்டஃப் பண்ணினால் ரொம்பவே அதிகமாக ஆயிடுது. சாப்பிட முடியறதில்லை.  ஆகவே முள்ளங்கியைத் துருவிப் போட்டு மாவில் போட்டு பிசைந்தே செய்தேன்.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

கால் கிலோ முள்ளங்கி அல்லது நான்கு முள்ளங்கிகள்

மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை

உப்பு தேவையான அளவு.

முள்ளங்கியைத் துருவிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு பக்கமாக வைக்கவும்/

கோதுமை மாவு இரண்டு கிண்ணம்

உப்பு தேவையான அளவு

பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி அரைத்த விழுது ஒரு டீஸ்பூன்

மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை

கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

சோம்பு, ஜீரகம் தலா ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் மாவில் விட்டுப் பிசைய ஒரு டேபிள் ஸ்பூன்

பராத்தா போட்டு எடுக்கத் தேவையான நெய் அல்லது சமையல் எண்ணெய் அவரவர் விருப்பம் போல்  ஒரு சின்னக் கிண்ணம்

கோதுமை மாவில் உப்பு,மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்கவும். சொம்பு, ஜீரகமும் போட்டுக் கொள்ளவும்.  உப்பு, மஞ்சள் பொடி சேர்த்த துருவிய முள்ளங்கிக் கலவையில் முள்ளங்கியை மட்டும் பிழிந்து மாவில் போடவும்.   நீர் விட்டிருக்கும்.  அதைக் கொட்ட வேண்டாம். கருகப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, கொ.ம. அரைத்த விழுதையும் சேர்க்கவும். கைகளால் நன்கு கலக்கவும்.  பின்னர் தேவையான நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு, முள்ளங்கி ஊற வைத்த நீரை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து கொண்டு மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.  அநேகமாக அந்த நீரே போதுமானதாக இருக்கும். நீர் சேர்த்தால் மாவு தளர்ந்து விடும்.  நன்கு மாவைப் பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

சப்பாத்தி இடும் கல்லில் ஒரு உருண்டை மாவைப் பரப்பி அதில் நெய் அல்லது வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றிப் பரவலாகத் தடவவும்.  மடித்துப் போடவும். இம்மாதிரி 2,3 முறைகள் செய்து மடித்துப் போட்டுக் கொண்டு வட்டமாகவோ, முக்கோணமாகவோ வரும்படி சப்பாத்தி இடவும்.  கொஞ்சம் கனமாகவே இருக்கும்.



அடுப்பில் தோசைக்கல்லைக் காய வைக்கவும். (நான் சப்பாத்திக்குத் தனியான தோசைக்கல் வைத்திருக்கேன்.)  தோசைக்கல் காய்ந்ததும் பரவலாக எண்ணெய், நெய் அல்லது நெய் கலந்த எண்ணெயைத் தடவவும்.  இட்ட சப்பாத்தி/பராத்தாவை அதில் போடவும். ஒரு நிமிடம் வேக வைத்த பின்னர் மறுபக்கம் திருப்பவும். பின்னர் மீண்டும் திருப்பிப் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். பராத்தா நல்ல உப்பலாக வரும்.  மீண்டும் திருப்பிப் போட்டு மறுபக்கமும் வேகும் வரை எண்ணெய்/நெய் ஊற்றவும். ப்ரவுன் நிறம் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.  இதற்குத் தொட்டுக் கொள்ள வெஜிடபுள் ஊறுகாய் அல்லது மஞ்சள் ஊறுகாய், தயிர்ப் பச்சடி ஆகியவை ஏற்றது.

மாவு பிசைந்தது மற்றும் அடுப்பில் வேகும் படங்கள் ஆட்டம் கண்டு விட்டன! :) திடீர்னு நினைவு வந்து படம் எடுத்தேன். அதுவும் அலைபேசியில் எடுத்தது. பாத்திரத்தில் பிசைந்த மாவை எடுத்த படம் ஒரே இருட்டாக இருக்கு!  அதனால் போடலை.  இன்னொருதரம் பண்ணினால் பார்க்கலாம்! இது சப்பாத்தி இடும் கல்லில் இட்டுக் கொண்டிருக்கையில் எடுத்த படம். :)))))


Friday, February 13, 2015

சாதாரண மனிதனின் சாமர்த்தியத்தைப் பார்ப்போம்!

கிரண் பேடியை முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது தான் பாஜகவின்  இமாலயத் தவறு. இதன் மூலம் டெல்லி வாழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு மனதில் அச்சம் குடி கொண்டு விட்டது. அதோடு அந்நிய மதத்தினர் ஓட்டுக்கள் அனைத்தும் சிந்தாமல், சிதறாமல் ஆம் ஆத்மிக்குப் போயிருக்கின்றன.  இதோடு காங்கிரஸ் ஓட்டுக்களும் சேர்ந்து கொண்டன. ஆனால் டெல்லி அரசியல் என்பது தனி.  மேலும் மோதி கெஜ்ரிவாலை விமரிசித்த முறை பலருக்கும் பிடிக்கவில்லை என்பதும் உண்மை.  இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசி இருக்க வேண்டாம் என்று என் கருத்தும் கூட. ஆனால் லோக்பால் அமைப்பு என்பது டெல்லியில் ஏற்கெனவே இருக்கிறது.  கெஜ்ரிவால் முதலில் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை.  இப்போது புரிந்து கொண்டாலும் அதில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்கிறார்.  எப்படிப் பட்ட திருத்தங்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமலும், வருமானத்திற்குச் சரியான வழி செய்யாமலும் இலவசக் குடிநீரும், மின்சாரமும் எப்படிக் கொடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மக்கள் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர்பார்ப்பு இருப்பதால் தான் பாஜக செய்யும் பல நல்ல முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விஷயங்களின் தன்மையை எவரும் புரிந்து கொள்ளவில்லை.  ஏனெனில் இவை பலனளிக்கக் குறைந்தது 2 ஆண்டுகள் ஆகலாம்.

உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு கெஜ்ரிவால் எப்படி நம்பிக்கையூட்டப் போகும் விதத்தில் ஆட்சியைக் கொண்டு செலுத்தப் போகிறார் என்பது புரியவில்லை.  அதோடு ஆம் ஆத்மி கட்சியில் எவரும் அரசியலோ,  ஆட்சி நிர்வாகமோ புரிந்தவர்கள் அல்ல.  கெஜ்ரிவால் உட்பட.  நம் குடியரசுத் தலவர் கூட கெஜ்ரிவாலுக்கு அரசியல் சாசனப் புத்தகம் தான் பரிசளித்திருக்கிறார். அரசியல் சட்டம் என்ற வரையறைக்குள்ளேயே கெஜ்ரிவால் ஆட்சியை அளிக்கத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.


டெல்லியின் சட்டம், ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருப்பதற்கு சமீபத்தில் நடந்த இன்னொரு பேருந்து பலாத்காரமே பதில் சொல்லும். ஆனால்  டெல்லி காவல் துறை மத்திய அரசின் உள்துறை இலாகாவுக்குக் கீழே வருகின்றது.  டெல்லி நாட்டின்  தலைநகரம் என்பதால் அங்கே உள்துறையின் ஆணைகளே செல்லுபடி ஆகின்றன.  உள்துறைதான் இந்தச் சட்டம், ஒழுங்கு குளறுபடியைச் சரி செய்ய முனைய வேண்டும்.  காவல்துறைக்குக் கடுமையாக நடந்துகொள்ளச் சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்தக் காவல்துறையை மாநில அரசுக்குக் கீழ்க் கொண்டுவரப் போவதாகவும் கெஜ்ரிவால் சொல்லுகிறார். முடியுமா என்பது கஷ்டமே.  இதன் மூலம் பல பிரச்னைகள் உருவாகும். டெல்லியில் மட்டுமே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மை என்பதை அஸ்ஸாம் உள்ளாட்சித் தேர்தல் காண்பித்துவிட்டது.  மற்ற மாநிலங்களில் சுமார் பத்துப் பதினைந்து பேர் மட்டும் கூடும் உதிரிக்கட்சிகளில் ஒன்றாகவே செயல்படுகிறது.

டெல்லி நிலைமை இப்படி இருக்க அஸ்ஸாம் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதை எந்த ஊடகமும், அல்லது பெருமை வாய்ந்த ஹிந்து நாளிதழ் போன்றவையோ சொல்லவே இல்லை என்பதையும் மறக்கக் கூடாது. இது டெல்லித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் வந்திருக்கின்றன என்பதையும் மறக்கக் கூடாது. 

Monday, February 09, 2015

பயணங்கள் முடிவதில்லை! 9

இங்கே

முதலில் தனுஷ்கோடியில் நீராடணும்னு சொல்றாங்க.  ஒரு சிலர் இல்லை சேது எனச் சொல்கின்றனர்.  நம்ம தம்பி வாசுதேவன் தனுஷ்கோடி தான் அக்னி தீர்த்தம் என்றும் சொல்லுகிறார்.  ஆனால் தனுஷ்கோடியில் நீராடினால் உடை மாற்றுவது கஷ்டம் என்பதோடு அந்த லொட லொட மாக்சி கேபில் அரை மணிப் பயணம் செய்வதும் சிரமம் என்பதால் நாங்க வேண்டாம்னு இருந்துட்டோம்.  ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடியதும், பின்னர் அடுத்துக் கோயிலில் உள்ளே உள்ள தீர்த்தங்களில் நீராடினார்கள்.  ஒவ்வொரு தீர்த்த நீராடலுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

முதலில் மகாலக்ஷ்மி தீர்த்தம், செல்வ வளம் பெறுவதற்காகவும்
சாவித்திரி தீர்த்தம் பேச்சுத் திறமை, இங்கே பேச்சுத் திறமை என்பது பேச்சு வருவதை மட்டும் குறிக்காது.
அடுத்து காயத்ரி தீர்த்தம் உலக க்ஷேமத்துக்காக
அடுத்து சரஸ்வதி தீர்த்தம்  நல்ல படிப்புக்கும்
சங்கு தீர்த்தம் சுகமான வாழ்க்கைக்கும்
சக்கர தீர்த்தம் திட மனதுக்கும்
சேதுமாதவ தீர்த்தம் தடங்கல்கள் இருந்தால் மறையவும்
நள தீர்த்தம்,
நீல தீர்த்தம்,
கவய தீர்த்தம்
கவாட்ச தீர்த்தம்
கந்த மாதன தீர்த்தம் ஆகியவை எத்துறையிலும் திறமைசாலிகளாக ஆக்கவும்
பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், பீடைகள் விலகவும்
கங்கா தீர்த்தம்
யமுனா தீர்த்தம்
கயாதீர்த்தம்
சர்வ தீர்த்தம் ஆகியவை பிறவிப் பயன்களைக் கொடுக்கவும், முப்பிறவியிலும் ஏற்பட்ட பீடைகள் ஒழியவும்
சிவ தீர்த்தம் எல்லாவிதமான பீடைகளும் ஒழியவும்
சத்யாமிர்த தீர்த்தம் தீர்க்காயுளுக்காகவும்
சந்திர தீர்த்தம் கலைகளில் ஆர்வம் உண்டாக்கவும்
சூரிய தீர்த்தம் எல்லாவற்றிலும் முதலில் வரவும்
கோடி தீர்த்தம் மறு பிறவி இல்லாத நிலையைக் கொடுக்கவும்

நீராடப் படுகிறது.  இதிலே நாம வழிகாட்டி மூலமாப் போனால் தான் வாளியில் தண்ணீரை இறைத்து நம் தலைகளில் ஊற்றுவார்கள். நீங்களாய்ப் போனால் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஊற்றுவதில் கொஞ்சம் போல் நமக்கும் புரோக்ஷணம் செய்யப்படும்.  மேலும் வழிகாட்டி மூலமாய்ப் போனால் சீக்கிரமாகவும் கவனிப்பார்கள். இல்லை எனில் தாமதமும் ஆகும். இதற்கு வழிகாட்டிக்கு ஐநூறு ரூபாய் பேசி இருந்தோம். இது எல்லாம் முடிச்சு உடை மாற்றியதும் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசை இருந்ததால் எங்களைச் சிறப்பு தரிசனத்தில் அழைத்துச் செல்வதாய்க் கூறினார்.  சிறப்பு தரிசனக் கட்டணம் ஐந்து நபர்களுக்கு 1,500 ரூபாய் என்றார்.  நாங்க நாலு பேர் தான்.  ஆனால் அதற்காகப் பணத்தைக் குறைக்க மாட்டார்களே!

ஆகையால் நாங்க நிற்க முடியாது என்பதால் 1,500 ரூபாய்க்கு ஒத்துக் கொண்டோம்.  அவரும் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஆனால் சீட்டு எதுவும் வாங்கவே இல்லை. முதலில் காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் ராமநாதரைத் தரிசித்தோம்.  அங்கே கீழே அமர்ந்து பார்க்க வேண்டுமாம்.  எங்க மருமகளைத் தவிர மற்ற மூவருக்கும் முட்டிப் பிரச்னை என்பதால் அமர முடியவில்லை.  நாங்க அமராததால் எங்க மருமகளும் அமரவில்லை.  ஐந்து நிமிடங்களுக்கு மேலே பார்த்துக் கொண்டோம்.  பின்னர் பர்வத வர்த்தினியையும் தரிசித்தோம். நல்லவேளையாக அதுக்குத் தனியாக் காசு கேட்கலை.  பின்னர் வெளியே வந்ததும் ஆஞ்சநேயர் கோபுர வாயிலுக்கு அருகே இருப்பவரைத் தரிசிக்கச் சென்றோம்.  அங்கேயே வழிகாட்டி எங்களைக் கழட்டி விட்டார்.

ஆனால் மேலே இன்னொரு ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு தான் கழட்டி விட்டார்.  கேட்டால் முதலில் கொடுத்த ஐநூறு ரூபாயில் தீர்த்தங்களில் இருப்பவர்களுக்குக் கொடுத்தது போக அவருக்கு ஒண்ணும் வரலையாம். கோயிலுக்குனு கொடுத்த 1,500 ரூபாயில் ஆயிரம் ரூபாயைத் தான்  கொடுத்தார் என்பதை நாங்கள் பார்த்தோம்.  ஆனாலும் அவரிடம் ஒன்றும் பேச முடியவில்லை.  நம்ம முகத்தில் தான் ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கே! கொடுத்துட்டு ஆஞ்சியைப் பார்த்துட்டுக் கோயிலுக்கு வெளியே வரச்சே ஐந்தரை மணி ஆகி விட்டது.  காலையில் காரைக்குடியில் ஏழரை மணிக்குச் சாப்பிட்டது தான்.  அப்போத் தான் உணவுனு ஒண்ணு வயித்துக்குக் கொடுக்கணும்னு தோணியது. ஹோட்டல் எங்கே இருக்குனு பார்த்தோம்.  அங்கே இருந்த ஹோட்டல்களைப் பார்த்த மகனும், மருமகளும் ராமநாதபுரம் போய்ச் சாப்பிடுவதாகச் சொல்ல நாங்க முன்னர் சென்ற சாஸ்திரிகளின் மைத்துனர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றோம்.

அங்கே இன்னும் அரை மணிக்கு மேலாகும் என்றும் உள்ளே அழைத்துச் சாப்பிட வைப்பதில்லை என்றும் தெருவில் நின்று கொண்டு தான் சாப்பிடணுமபென்றும் சொல்லி விட்டார்கள்.  இது வேலைக்காகாது என நாங்களும் வண்டிக்குத் திரும்பினோம்.  போகும்போது அரை கிலோ மீட்டர் கூட இல்லாத தூரம் இப்போது மைல் கணக்காக நீண்டது. ஒரு வழியாகக் காருக்கு வந்து சேர்ந்து மீண்டும் அறை தேடும் படலத்தில் ஈடுபட்டோம்.  எங்கும் அறைகள் காலி இல்லை என்ற பதிலே வர, இராமநாதபுரம் போய்ப் பார்க்கலாம் என ஏகோபித்த முடிவு எடுத்து  வண்டியை அங்கே விடச் சொன்னோம்,  மணி ஆறரை ஆகி விட்டிருந்தது. 

Saturday, February 07, 2015

நம்ம ஆஞ்சியும், தும்பிக்கை நண்பரும்!



இதோ இருக்கும் ஆஞ்சியைத் தான் பார்த்துட்டு வரேன். அதோ கொஞ்சம் தள்ளித் தெரியறாரே அவர் தான் பட்டாசாரியார்.  சிடு சிடு எப்போப் பார்த்தாலும்.  சாப்பிட்டுட்டு இருக்கார் போல! அதிசயமா இன்னைக்கு அலைபேசி எடுத்துட்டுப் போயிருந்தேன்.  ஏனெனில் இன்னைக்கு ரங்க்ஸும் வெளியே போனதால் என்னைக் கையில் அலைபேசியை எடுத்துட்டுப் போனு சொல்லி  இருந்தார்.  ஆனால் நான் கிளம்பிக் கீழே போறச்சேயே அவர் வந்துட்டார்.  ஆனாலும் அலைபேசி கையில் இருந்தது.  அதில் எடுத்த படம் தான் இது.





இந்தத் தும்பிக்கை நாதர் இங்கே அம்மா மண்டபத்திலேயே இருப்பவர்.  இவரை வைத்துப் பாகன்கள் பிழைக்கின்றனர்.  யாரோ கொடுக்கும் வசூலுக்குத் தான் தும்பிக்கையார் சிரிச்சுட்டே போய் வாங்கிக்கறார். வரவங்க சாப்பிடக் கொடுத்தாச் சரி. அவருக்கே போய்ச் சேரும்.  காசு கொடுத்தால் அதைப் பாகன்கள் கிட்டேத் தான் கொடுக்கிறார்.  இளைச்சுப் போய் எலும்பெல்லாம் தெரியுது பாருங்க!  ஒரு நாள் காமிரா எடுத்துட்டுப் போய்ப் படம் எடுத்துட்டு வரேன்.   நான் படமே எடுக்கிறதில்லைனு எல்லோரும் கேலி செய்யவும் உடனே எனக்கு  வீராவேசம் வந்துடுத்துனு நினைக்கிறேன். :))))))

Friday, February 06, 2015

கிச்சடின்னா உண்மையில் என்னனு தெரியுமா?

சாப்பாடு + யாருமே போடறதில்லைனு தம்பி வருத்தப்பட்டிருந்தாரா! + என்ன பதிவே போடுறோமுல்லனு பதில் சொல்லி இருந்தேன். அவர் பார்க்கிறதில்லை போல.  இதையும் பார்ப்பாரானு தெரியாது.  ஆனாலும் போடணும்னு தோணியாச்சு.  அப்புறமா அதைச் செயலாக்க வேண்டாமா?

தினம் தினம் என்னத்தைச் சமைக்கிறதுனு ம.கு. ஜாஸ்தியா ஆகும். இன்னைக்கு யோசிச்சதிலே கொஞ்சம் நஞ்சம் மிச்சம் இருக்கும் காய்களை வைத்துக் கொண்டு அரிசி கிச்சடி பண்ணலாம்னு ஒரு எண்ணம்.  உடனே செயலாற்றத் துவங்கினேன்.



தேவையான பொருட்கள்

அரிசி ஒரு கிண்ணம் (பாஸ்மதி அரிசினா நல்லது, நான் எப்போவும் சமைக்கும் புழுங்கலரிசிதான் பயன்படுத்தினேன். ஆனால் பாஸ்மதி அரிசிக்குச் சர்க்கரை கட்டுப்படுகிறது. விலை தான் நமக்குக் கட்டுப்படுவது இல்லை!)

அரைக்கிண்ணம் பாசிப்பருப்பு, அல்லது துவரம் பருப்பு இரண்டில் ஏதானும் அல்லது இரண்டுமாகச் சேர்ந்து அரைக்கிண்ணம்

தேவையான காய்கள்

காலி ஃப்ளவர் நறுக்கியது ஒரு கைப்பிடி

காரட் நீளமாக நறுக்கியது ஒரு கைப்பிடி

பீன்ஸ் நறுக்கியது ஒரு கைப்பிடி

பச்சைப் பட்டாணி இப்போது பட்டாணிக் காலம் என்பதால் பச்சைப் பட்டாணியே கிடைக்கும்.  அல்லது காய்ந்த பச்சைப்பட்டாணியை ஊற வைத்தது ஒரு கைப்பிடி.

இந்தக் காய்கள் போதும். வெங்காயம் போடுவது அவரவர் விருப்பம்.

பச்சை மிளகாய் காரமானது என்றால் ஒன்று

இஞ்சி ஒரு சின்னத் துண்டு

மிளகு ஒரு டீஸ்பூன்

ஜீரகம் ஒரு டீஸ்பூன்

சோம்பு ஒரு டீஸ்பூன்( வேணாம்னா விட்டுடலாம்)

கிராம்பு ஒன்றே ஒன்று

ஒரே ஒரு பெரிய ஏலக்காய்

லவங்கப்பட்டை (பிடித்தமானால்) ஒரு சின்னத் துண்டு

மசாலா இலை (பிடித்தமானால்)

வதக்கப் போதுமான எண்ணெய் ஒரு குழிக்கரண்டி

உப்பு

மஞ்சள் தூள்

தாளிக்க

நெய்  ஒரு சின்னக் குழிக்கரண்டி

ஜீரகம்

மி. வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், கொத்துமல்லி பொடியாக நறுக்கியது.

இது ரொம்பக் காரமாகவும் இல்லாமல் மசாலா வாசனையும் இல்லாமல் பண்ணலாம். அல்லது மசாலாப் பொருட்கள் ஏலக்காய், கிராம்பு மட்டும் தாளித்தோ மேலே சொன்ன எல்லா மசாலாப்பொருட்களையும் தாளித்தோ பண்ணலாம்.

அரிசியையும் பருப்பையும் நன்கு சிவக்க வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு நன்கு களைந்து தேவையான நீர் விட்டு ஊற வைக்கவும்.  அரிசி, பருப்புக்குத் தேவையான நீரிலேயே ஊற வைக்கலாம். பின்னர் அதை அப்படியே காய்களோடு சேர்க்கலாம்.

இப்போது அதே வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, மசாலா இலை, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவற்றைத் தாளிக்கவும். லவங்கப்பட்டையும், சோம்புவும் சாப்பிடாதவர்கள் ஏலக்காய், கிராம்பு மட்டும் போடலாம்.  ஜீரகம் எல்லோரும் சாப்பிடுவார்கள். மசாலா இலையும் போடாமல் ஜீரகம், மிளகு, ஏலக்காய், கிராம்பு மட்டும் போட்டுக் கொள்ளலாம். பின்னர்  மிளகு சேர்க்கவும். மிளகு வெடிக்க ஆரம்பித்ததும் பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.  காய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.  காய்கள் ஓரளவு வதங்கியதும் அரிசியையும் பருப்பையும்,  அதில் உள்ள நீரோடு வதக்கிய காய்களையும் ஒன்றாகக் கலந்து  கொண்டு குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். குக்கர் என்றால் இரண்டு விசில் போதும். பின்பு வெளியே எடுத்துக் கடாயில் நெய் ஊற்றி மறுபடி ஜீரகம் நிறையப் போட்டு மி.வத்தல், பெருங்காயம், கருகப்பிலை சேர்த்து வதக்கிக் கிச்சடியில் கொட்டவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவிக் கலக்கவும்.

தயிர்ப் பச்சடியுடன் சேர்ந்து சாப்பிடலாம்.  தயிர்ப்பச்சடி தக்காளி, காரட், வெங்காயம் இவை எதிலாவது செய்து கொள்ளலாம். வெங்காயம் சேர்ப்பதெனில் கடைசியில் நெய்யில் கருகப்பிலை தாளித்ததும் வெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொண்டு கிச்சடியில் சேர்க்கவும்.




ஹூம், வர வர இந்த வலைப்பக்கம் சாப்பிட வாங்கப் பக்கமாயிடுமோ? :P

Thursday, February 05, 2015

அம்மாமண்டபமும், என் அனுபவங்களும்!

ஒரு வாரமாய் அம்மாமண்டபம் ஆஞ்சியைப் போய்ப் பார்த்துட்டு வரேன். அங்கே இருக்கும் பட்டாசாரியார் வரவங்க கிட்டே எல்லாம் பணம் கேட்கிறார்.   அந்த ஆஞ்சி தூணில் இருக்கும் ஒரு சிற்பமே.  யாரோ வழிபட ஆரம்பித்து இப்போது ஒரே கூட்டம். அங்கே நடக்கும் பல்வேறுவிதமான நடவடிக்கைகளைக் கண்டும் காணாமலும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆஞ்சி.  சமயத்தில் அவர் இதழ்க்கடையில் தெரியும் மெல்லிய சிரிப்பு அதைக் கண்டு தானோனு எனக்குத் தோணும்

உள்ளேவே நுழைய முடியாதபடிக்குக் கூட்டம் சில நாட்கள் நெரிசலாக இருக்கும்.  இந்த அழகில் நம்ம குடியிருப்பு வளாகத்திலிருந்து மூன்றாவது கட்டிடத்தை ஆளும் கட்சியின் தேர்தல் அலுவலகம் ஆக்கி இருக்காங்க.  நம்ம குடியிருப்பு வளாகத்தின் வாசலில் நோ பார்க்கிங் எனப் பெரிய பானர் தொங்குகிறது.  இவண் ஶ்ரீரங்கம் காவல் துறைனு எல்லாம் போட்டிருக்கு.  ஆனால் தினம் ஒரு ஐம்பது வண்டிக்குக் குறையாமல் நெருக்கி அடிச்சுட்டு நிற்கும். எல்லாம் கரை வேட்டிக்காரங்க வண்டி தான்.

சில சமயம் கூட்டமாக அவங்க அம்மா மண்டபத்துக்குள்ளேயும் வருவாங்க.  எதுக்குனு தெரியலை.   நடைமேடையில் அவங்க ஆக்கிரமிப்பு என்றால் நடைமேடையை ஒட்டின சாலைப்பகுதியில் வரிசையாக கார்கள், இரு சக்கர வண்டிகள் நிறுத்தி இருக்கும்.  சில சமயம் இடைவெளியே இருக்காது. நாம கீழே இறங்கிச் சாலையில் தான் நடக்கணும்.  சாலையின் எதிர்ப்பக்கமும் அதே போல் வண்டிகள் வரிசை கட்டும்.  ஶ்ரீரங்கம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பேருந்துகள், சிற்றுந்துகள் என அங்கேயும் வரிசையாகக் காணமுடியும்.  நாம நடு சாலையில் தான் நடக்கணும்.  நாம போகும் போதுதான் ரயில் நிலையத்திலிருந்து வரும் மாநரகப் பேருந்து (எ.பி. இல்லை) அம்மாமண்டபம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்.

இது பத்தாதுன்னு எதிரே திருச்சி செல்லும் மாநரகப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் என நிற்கும். அந்தப் பக்கம் நடைமேடையில் குளிரூட்டப்பட்ட நிழற்குடை வேறு இருக்கு.  ஆனாலும் மக்கள் வெளியே நின்னால் தான் பேருந்தில் ஏற முடியும்.  ஏனெனில் இந்தத் தனியார் பேருந்துகள் நாம ஏறும்போதே விசில் கொடுப்பாங்க. ஒரு கால் வண்டியின் முதல்படியிலும் இன்னொரு கால் தரையிலும் இருக்கும்.  ஒரு முறை பேருந்தில் ஏறும்போது மல்லாக்க விழத் தெரிந்தேன். பிழைத்தேன். அதுக்கப்புறமாப் பேருந்துப் பயணமே வைச்சுக்கறது இல்லை.

அம்மா மண்டபம் நுழையும் வழியில் இருக்கும் சத்திரத்தில் கல்யாணம் நடந்தால் கேட்கவே வேண்டாம்.  எல்லா வண்டிகளும் அம்மா மண்டபம் நுழைவாயிலை மறைத்துக் கொண்டு நிற்கும். சத்திர வாசலில் ஒரே கூட்டமாக இருக்கும்.  எல்லாத்தையும் தாண்டித் தான் உள்ளே போகணும். கூடியவரை மாநரகாட்சி அம்மாமண்டபத்தைச் சுத்தமாக வைத்திருக்கவே முயல்கிறது.  ஆனால் பொது ஜனங்களின் ஒத்துழைப்பு இல்லை.


அம்மா மண்டபத்தில் தினம் வரும் யானையார் அங்கேயே சோகமாக நின்று கொண்டிருப்பார். சில நாட்களுக்கு முன்னர் தான் அதன் ஒரு பாகனைப் பற்றிச் செய்தி தினசரிகளில் வந்தது.  என்றாலும் அந்த ஆனையார் இளைத்துத் துரும்பாகவே இருக்கார். பார்த்தாலே பாவமாக இருக்கும்.  இதுக்கு நடுவிலே அங்கே முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்ய வரும் பயணிகள், உள்ளூர் வாசிகள் கும்பல்.  கடைகளுக்கெல்லாம் நல்ல வியாபாரம். இரு பக்கமும் வரிசையாகப் பிச்சைக்காரர்கள்.  அவர்களைப் படம் எடுக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி.  எதற்குப் படம் எடுக்கிறாங்கனு தெரியாமலே அவர்களிடம் பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்கள் யாரானும் சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர்.  பணம் தான் வேணும்.  அதுவும் குறைந்தது 2 ரூபாய் அல்லது ஐந்து ரூபாய்.  ஒரு ரூபாயெல்லாம் போட்டுவிட்டு வர முடியாது.

பல பெண்களின் சேலைகள் சுத்தமாகவும், விலை 500 ரூபாய்க்குக் குறையாமலும் இருக்கிறது.  எப்படிக் கட்டுபடி ஆகிறது என நினைத்துக் கொள்வேன்.  இரண்டு நாட்கள் முன்னர் ஒருத்தர் ஒரு பை நிறைய உணவுப் பொட்டலங்கள் வைத்துக் கொண்டு அனைவருக்கும் கொடுத்தார்.  சிலர் தான் வாங்கிக் கொண்டனர். பலரும் மறுத்துவிட்டனர். ஆஞ்சிக்கு அர்ச்சனை செய்யும் பட்டாசாரியார் செய்யும் பிரசாதம் அங்கே சிலரால் வாங்கிக் கொள்ளப் படுகிறது.  பட்டாசாரியார் ஆஞ்சி இருக்கும் தூணின் கீழேயே  அடுப்பு வைத்துக் கொண்டு சமைக்கிறார் அந்த பட்டாசாரியார்.  பொங்கல், சுண்டல், தயிர்சாதம், பாயசம், சர்க்கரைப் பொங்கல் ஆகியன மாற்றி மாற்றி வரும் பிரசாதங்கள்.

ஆஞ்சியைத் தவிர உள்ளே பிள்ளையார், காவிரி அம்மன், சிவன், பார்வதி, நவகிரஹங்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆஞ்சியைப் போய்ப் பார்த்துட்டு வரதுக்கே அரை மணி ஆயிடறதாலே அந்தப் பக்கம் போக முடியலை.  ஶ்ரீரங்கம் வந்த புதுசிலே சிவன் கோயில் பிரதோஷம் வழிபாட்டுக்குப் போயிட்டு இருந்தோம்.  அப்புறமா அதுவும் முடியலை.  ஆஞ்சியை மட்டும் ஏதோ போய்ப் பார்க்க முடியுதே!  அதே பெரிய விஷயம்!

ஒரு நாள் காமிரா அல்லது அலைபேசி எடுத்துட்டுப் போய்ப் படம் எடுத்துட்டு வரணும். எங்கே காலை வேளையில் வீட்டு வேலைகள் இருப்பதால் சாவகாசமாகப் போக முடியறதில்லை. :) நீங்க எப்போவும் இப்படித் தான் சொல்றீங்கனு வெங்கட் நாகராஜ் இதைப் படிச்சால் சிரிப்பார். ஹிஹிஹி, முக்கியமா எனக்குக் கிளம்பறச்சே காமிராவெல்லாம் நினைவிலேயே வரதில்லை.  அலைபேசியும் எடுத்துட்டுப் போக நினைப்பு வரதில்லை. வெளிஊருக்குப் போறச்சே கொண்டு போறதே பெரிய விஷயம்! :)))))

Sunday, February 01, 2015

பயணங்கள் முடிவதில்லை! 8

[Image1]


படம் உதவி:  நன்றி.கூகிளார் உதவியுடன் (தினமலர்ப் பக்கம் என்று சொல்கிறார் கூகிளார்.)


அக்னி தீர்த்தம் என்பது அக்னியே இந்த ராமேஸ்வரக் கடலில் வந்து குளித்துத் தன் பாவத்தைப் போக்கிக் கொண்டதால் ஏற்பட்ட பெயர் என்கிறார்கள். சீதா தேவியை அக்னி பிரவேசம் செய்யச் சொல்கிறார் ஶ்ரீராமர்.  அப்போது அக்னியில் இறங்கிய சீதையைத் தொட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே கடல் நீராடி தோஷம் நீக்கிக் கொண்டாராம் அக்னி பகவான். சீதையின் கற்புத் திறனின் வெம்மை தாங்காமல் இங்கே நீராடி வெப்பம் தணிந்ததாகவும் சொல்கின்றனர்.  காசி,ராமேஸ்வரம் யாத்திரை செய்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு காசி சென்று விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேஹம் செய்ய வேண்டும்.  பின்னர் திரிவேணி சங்கமத்தில் ராமேஸ்வரக் கடற்கரை மணலால் லிங்கம் பிடித்து சிவ வழிபாடு செய்து அங்கே அந்த மணலைக் கரைக்க வேண்டும்.  திரிவேணி சங்கமத்திலிருந்து நீர் எடுத்துக் கொண்டு மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதருக்கு அபிஷேஹம் செய்ய வேண்டும்.  இவ்வாறு காசி யாத்திரையை ராமேஸ்வரத்தில்  ஆரம்பித்து ராமேஸ்வரத்திலேயே முடிக்க வேண்டும்.

திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகம் பாடப்பெற்ற இந்த ராமேஸ்வரம் தலம் பாண்டிநாட்டுத் தலங்களில் எட்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கத் தலம் ராமேஸ்வரம் மட்டுமே ஆகும்.  ஈசன் இங்கு சுயம்புவாக அருள்பாலிக்கிறார். (இங்கே  தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படும். எங்கே அதெல்லாம் கூட்ட நெரிசலில் வாங்கறது பெரும்பாடு.)  சாதாரணமாய் ராமேஸ்வரம் என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது அதன் பிரகாரமே. நாம் அனைவரும் கண்டு களிக்கும் அந்தப் பிரகாரம் இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். இந்தப் பிரகாரத்தில் 1212 தூண்கள் உள்ளன.  சுமார் 700 அடி நீளமும், 435 அடி அகலமும் கொண்டது இந்தப்பிரகாரம்.

கோயில் காலை நான்கு மணிக்கே தினம் திறக்கப்பட்டு மதியம் ஒருமணி வரை திறந்திருக்கும்.  பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். பிரகாரத்தில் சீதை மணலில் லிங்கம் பிடிக்கும் காட்சியும், அதற்கு ஶ்ரீராமர் வழிபாடுகள் நடத்தும் காட்சியும் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும்.  அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் மற்ற வானர வீரர்களும் காணப்படுவார்கள். சிவ பக்தன் ஆன ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் வரப்பெற்ற ஶ்ரீராமர் இமயத்திலிருந்து சிவலிங்கம் கொண்டுவருமாறு ஆஞ்சநேயரை அனுப்ப அவர் வர தாமதம் ஆகிவிடுகிறது.  சீதை கடற்கரை மணலில் லிங்கம் அமைக்க அந்த லிங்கத்தை ஶ்ரீராமர் வழிபட்டு விடுகிறார்.  தான் தாமதமாக வந்த காரணத்தால் சீதை மணலில் லிங்கம் பிடித்ததை அறிந்த அனுமன் தன் வாலினால் அந்த லிங்கத்தை அப்புறப்படுத்த நினைக்க லிங்கம் ஸ்திரமாக அங்கேயே இருக்க, அனுமனின் வால் மட்டும் அறுபடுகிறது.

ஆகவே இதன் அடிப்படையில் வால் இல்லாத ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இங்கே இருப்பதாகச் சொல்கின்றனர். அதோடு சீதையை மீட்க ஶ்ரீராமர் ஆலோசனைகள் நடத்திய இடத்தில் தான் "ராமர் பாதம்" காணப்படும்.  அங்கேயும் இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கும் போக முடியவில்லை. ராமர் தான் கொண்டு வந்த லிங்கத்தை வைத்து வழிபடமுடியவில்லையே என வருந்திய ஆஞ்சநேயருக்கு அவர் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதல் வழிபாடுகள் செய்யப்படும் என ஶ்ரீராமர் ஏற்பாடுகள் செய்கிறார்.  அதன்படி இப்போதும் ஆஞநேயர் கொண்டு வந்த விஸ்வநாதருக்கு பூஜை செய்தபின்னரே சீதையால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும்.  வரும் பக்தர்களும் முதலில் விஸ்வநாதரை தரிசித்த பின்னரே ராமநாதரை தரிசிக்க வேண்டும்.  கோயில் நுழைவாயிலின் வலப்பக்கத்தில் ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கத்தையும் காணலாம்.

இந்தக் கோயில் லிங்கம் மணலால் செய்யப்படவில்லை என்றும் அப்படி இருந்தால் அபிஷேஹம் செய்ய முடியாது என்றும் ஒரு சமயம் வாதம் நடந்தது.  அப்போது பாஸ்கரராயர் என்னும் அம்பாள் உபாசகர் தண்ணீரில் கரையும் உப்பால் ஓர் லிங்கம் செய்து அபிஷேஹம் செய்து காட்டுகிறார்.  அந்த லிங்கம் கரையவில்லை.  அம்பாள் உபாசகன் ஆன தன்னால் ஏற்படுத்தப்பட்ட உப்பு லிங்கமே கரையாதபோது சீதாதேவியால் ஏற்படுத்தப்பட்ட மணல் லிங்கம் மட்டும் எப்படிக் கரையும் என்று கேட்டார் பாஸ்கர ராயர்.  இவர் செய்த உப்பு லிங்கம் ராமநாதர் சந்நிதிக்குப் பின்னால் இருக்கிறது என்று சொல்கின்றனர்.  எங்கே! பிரகாரமே சுற்ற முடியாதபடிக்குக் கூட்டம் நெரிகிறது. மேலும் உள்ளே நுழையும் வழியில் பிரகாரம் சுற்றிக் கொண்டு வெளியே வரமுடியாதபடி ஏதோ ஒரு வழியில் வெளியே விடுகின்றனர்.  அந்த வழி நேரே மூன்றாம் பிரகாரத்துக்குக் கொண்டு விட்டு விடுகிறது. :( இதை எல்லாம் கேட்டு நாம் நிதானமாகப் பார்க்க முடியாதபடிக்குக் கோயிலில் கூட்டம் என்பதோடு வழிகாட்டிகளுக்கும் இதில் அவ்வளவு ரசனையும் இல்லை.  அவர்கள் பாட்டுக்கு தரிசனம் செய்து வைத்துவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.  போய் அடுத்த  வாடிக்கையைப் பிடிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். எவ்வளவு விரைவில் பணம் பண்ண முடியும் என்பதே அவர்கள் கவலை!

அடுத்துத் தீர்த்தங்கள் குறித்தும், நாங்கள் தரிசனம் செய்த கதையையும் பார்க்கலாம்.