படம் உதவி: நன்றி.கூகிளார் உதவியுடன் (தினமலர்ப் பக்கம் என்று சொல்கிறார் கூகிளார்.)
அக்னி தீர்த்தம் என்பது அக்னியே இந்த ராமேஸ்வரக் கடலில் வந்து குளித்துத் தன் பாவத்தைப் போக்கிக் கொண்டதால் ஏற்பட்ட பெயர் என்கிறார்கள். சீதா தேவியை அக்னி பிரவேசம் செய்யச் சொல்கிறார் ஶ்ரீராமர். அப்போது அக்னியில் இறங்கிய சீதையைத் தொட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே கடல் நீராடி தோஷம் நீக்கிக் கொண்டாராம் அக்னி பகவான். சீதையின் கற்புத் திறனின் வெம்மை தாங்காமல் இங்கே நீராடி வெப்பம் தணிந்ததாகவும் சொல்கின்றனர். காசி,ராமேஸ்வரம் யாத்திரை செய்பவர்கள் முதலில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக் கொண்டு காசி சென்று விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேஹம் செய்ய வேண்டும். பின்னர் திரிவேணி சங்கமத்தில் ராமேஸ்வரக் கடற்கரை மணலால் லிங்கம் பிடித்து சிவ வழிபாடு செய்து அங்கே அந்த மணலைக் கரைக்க வேண்டும். திரிவேணி சங்கமத்திலிருந்து நீர் எடுத்துக் கொண்டு மீண்டும் ராமேஸ்வரம் வந்து ராமநாதருக்கு அபிஷேஹம் செய்ய வேண்டும். இவ்வாறு காசி யாத்திரையை ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து ராமேஸ்வரத்திலேயே முடிக்க வேண்டும்.
திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகம் பாடப்பெற்ற இந்த ராமேஸ்வரம் தலம் பாண்டிநாட்டுத் தலங்களில் எட்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கத் தலம் ராமேஸ்வரம் மட்டுமே ஆகும். ஈசன் இங்கு சுயம்புவாக அருள்பாலிக்கிறார். (இங்கே தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படும். எங்கே அதெல்லாம் கூட்ட நெரிசலில் வாங்கறது பெரும்பாடு.) சாதாரணமாய் ராமேஸ்வரம் என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது அதன் பிரகாரமே. நாம் அனைவரும் கண்டு களிக்கும் அந்தப் பிரகாரம் இக்கோயிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். இந்தப் பிரகாரத்தில் 1212 தூண்கள் உள்ளன. சுமார் 700 அடி நீளமும், 435 அடி அகலமும் கொண்டது இந்தப்பிரகாரம்.
கோயில் காலை நான்கு மணிக்கே தினம் திறக்கப்பட்டு மதியம் ஒருமணி வரை திறந்திருக்கும். பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். பிரகாரத்தில் சீதை மணலில் லிங்கம் பிடிக்கும் காட்சியும், அதற்கு ஶ்ரீராமர் வழிபாடுகள் நடத்தும் காட்சியும் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும். அருகில் ஆஞ்சநேயர், சுக்ரீவன் மற்ற வானர வீரர்களும் காணப்படுவார்கள். சிவ பக்தன் ஆன ராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் வரப்பெற்ற ஶ்ரீராமர் இமயத்திலிருந்து சிவலிங்கம் கொண்டுவருமாறு ஆஞ்சநேயரை அனுப்ப அவர் வர தாமதம் ஆகிவிடுகிறது. சீதை கடற்கரை மணலில் லிங்கம் அமைக்க அந்த லிங்கத்தை ஶ்ரீராமர் வழிபட்டு விடுகிறார். தான் தாமதமாக வந்த காரணத்தால் சீதை மணலில் லிங்கம் பிடித்ததை அறிந்த அனுமன் தன் வாலினால் அந்த லிங்கத்தை அப்புறப்படுத்த நினைக்க லிங்கம் ஸ்திரமாக அங்கேயே இருக்க, அனுமனின் வால் மட்டும் அறுபடுகிறது.
ஆகவே இதன் அடிப்படையில் வால் இல்லாத ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இங்கே இருப்பதாகச் சொல்கின்றனர். அதோடு சீதையை மீட்க ஶ்ரீராமர் ஆலோசனைகள் நடத்திய இடத்தில் தான் "ராமர் பாதம்" காணப்படும். அங்கேயும் இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கும் போக முடியவில்லை. ராமர் தான் கொண்டு வந்த லிங்கத்தை வைத்து வழிபடமுடியவில்லையே என வருந்திய ஆஞ்சநேயருக்கு அவர் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதல் வழிபாடுகள் செய்யப்படும் என ஶ்ரீராமர் ஏற்பாடுகள் செய்கிறார். அதன்படி இப்போதும் ஆஞநேயர் கொண்டு வந்த விஸ்வநாதருக்கு பூஜை செய்தபின்னரே சீதையால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும். வரும் பக்தர்களும் முதலில் விஸ்வநாதரை தரிசித்த பின்னரே ராமநாதரை தரிசிக்க வேண்டும். கோயில் நுழைவாயிலின் வலப்பக்கத்தில் ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கத்தையும் காணலாம்.
இந்தக் கோயில் லிங்கம் மணலால் செய்யப்படவில்லை என்றும் அப்படி இருந்தால் அபிஷேஹம் செய்ய முடியாது என்றும் ஒரு சமயம் வாதம் நடந்தது. அப்போது பாஸ்கரராயர் என்னும் அம்பாள் உபாசகர் தண்ணீரில் கரையும் உப்பால் ஓர் லிங்கம் செய்து அபிஷேஹம் செய்து காட்டுகிறார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாள் உபாசகன் ஆன தன்னால் ஏற்படுத்தப்பட்ட உப்பு லிங்கமே கரையாதபோது சீதாதேவியால் ஏற்படுத்தப்பட்ட மணல் லிங்கம் மட்டும் எப்படிக் கரையும் என்று கேட்டார் பாஸ்கர ராயர். இவர் செய்த உப்பு லிங்கம் ராமநாதர் சந்நிதிக்குப் பின்னால் இருக்கிறது என்று சொல்கின்றனர். எங்கே! பிரகாரமே சுற்ற முடியாதபடிக்குக் கூட்டம் நெரிகிறது. மேலும் உள்ளே நுழையும் வழியில் பிரகாரம் சுற்றிக் கொண்டு வெளியே வரமுடியாதபடி ஏதோ ஒரு வழியில் வெளியே விடுகின்றனர். அந்த வழி நேரே மூன்றாம் பிரகாரத்துக்குக் கொண்டு விட்டு விடுகிறது. :( இதை எல்லாம் கேட்டு நாம் நிதானமாகப் பார்க்க முடியாதபடிக்குக் கோயிலில் கூட்டம் என்பதோடு வழிகாட்டிகளுக்கும் இதில் அவ்வளவு ரசனையும் இல்லை. அவர்கள் பாட்டுக்கு தரிசனம் செய்து வைத்துவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். போய் அடுத்த வாடிக்கையைப் பிடிக்க வேண்டும் என்பதே குறிக்கோள். எவ்வளவு விரைவில் பணம் பண்ண முடியும் என்பதே அவர்கள் கவலை!
அடுத்துத் தீர்த்தங்கள் குறித்தும், நாங்கள் தரிசனம் செய்த கதையையும் பார்க்கலாம்.
படித்துத் தெரிந்துகொண்டேன். எல்லாமே அவசரமாகவும், பணம் பண்ணும் விஷயமாக ஆகி விட்டது. :(
ReplyDeleteஆமாம், வர வரக் கோயில்களுக்குச் செல்வதே ஆயாசம் தரும் ஒரு விஷயமாக ஆகிவிட்டது! :(
Deleteஅனுமன் : விளக்கத்தை அறிந்தேன்...
ReplyDeleteவாங்க டிடி, நன்றிப்பா.
Deleteவரவர எல்லாக் கோவில்களிலும் கூட்டம் அதிகமாகிவிட்டது. நின்று நிதானமாக தரிசனம் செய்ய முடிவதில்லை. காசி யாத்திரை ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து ராமேஸ்வரத்தில் முடிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஆமாம், ரஞ்சனி, நம் மின் தமிழ்க் குழுமத்தில் கூட திரு காளைராஜன் அவர்கள் பாத யாத்திரையாக சென்ற ஆகஸ்டில் ஆரம்பித்துக் காசியாத்திரை ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து, ராமேஸ்வரத்தில் முடித்தார். அனுபவங்கள் சுவையாக இருந்தன. படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
Deleteஅருமையான தகவல்கள்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் பொழுது மீதி பதிவுகளையும் படிக்கிறேன்.
வாங்க ராம்வி, ரொம்ப நாள் கழிச்சு வரீங்க போல! :)
Deleteதகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteபெரும்பாலான கோவில்களில் இப்படி கூட்டம் நிரம்பி வழிகிறது. இராமேஸ்வரம் - காசி - இராமேஸ்வரம் - பெரும்பாலானவர்கள் இதைக் கடைபிடிப்பது இல்லை. ஆனாலும் வடக்கே இருக்கும் பலர் இதை கடைபிடிப்பது பார்த்திருக்கிறேன்..
நாங்க கூடியவரை கடைப்பிடித்தோம். தெரிந்தவர்களுக்கும் சொல்லி வருகிறோம். வருகைக்கு நன்றி வெங்கட்!
Deleteஅண்மையில் நானும் இராமேஸ்வரம் சென்றிருந்தபோது உங்களைப் போலவே உணர்ந்தேன். பல நல்ல தகவல்கள் மேடம்
ReplyDeleteவாங்க மோகன் ஜி, என்னைப் போலுள்ளவர்களெல்லாம் உங்கள் எழுத்தைப் பார்த்துப் பிரமித்துப் போவதைத் தவிர வேறென்ன செய்வது? என்ன இருந்தாலும் கதாநாயகன் கரப்பாக இல்லாமல் இருந்திருக்கலாமோ? எனக்குக் கரப்புன்னா ஒரு அலர்ஜி! :))))
Delete