எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 06, 2015

கிச்சடின்னா உண்மையில் என்னனு தெரியுமா?

சாப்பாடு + யாருமே போடறதில்லைனு தம்பி வருத்தப்பட்டிருந்தாரா! + என்ன பதிவே போடுறோமுல்லனு பதில் சொல்லி இருந்தேன். அவர் பார்க்கிறதில்லை போல.  இதையும் பார்ப்பாரானு தெரியாது.  ஆனாலும் போடணும்னு தோணியாச்சு.  அப்புறமா அதைச் செயலாக்க வேண்டாமா?

தினம் தினம் என்னத்தைச் சமைக்கிறதுனு ம.கு. ஜாஸ்தியா ஆகும். இன்னைக்கு யோசிச்சதிலே கொஞ்சம் நஞ்சம் மிச்சம் இருக்கும் காய்களை வைத்துக் கொண்டு அரிசி கிச்சடி பண்ணலாம்னு ஒரு எண்ணம்.  உடனே செயலாற்றத் துவங்கினேன்.தேவையான பொருட்கள்

அரிசி ஒரு கிண்ணம் (பாஸ்மதி அரிசினா நல்லது, நான் எப்போவும் சமைக்கும் புழுங்கலரிசிதான் பயன்படுத்தினேன். ஆனால் பாஸ்மதி அரிசிக்குச் சர்க்கரை கட்டுப்படுகிறது. விலை தான் நமக்குக் கட்டுப்படுவது இல்லை!)

அரைக்கிண்ணம் பாசிப்பருப்பு, அல்லது துவரம் பருப்பு இரண்டில் ஏதானும் அல்லது இரண்டுமாகச் சேர்ந்து அரைக்கிண்ணம்

தேவையான காய்கள்

காலி ஃப்ளவர் நறுக்கியது ஒரு கைப்பிடி

காரட் நீளமாக நறுக்கியது ஒரு கைப்பிடி

பீன்ஸ் நறுக்கியது ஒரு கைப்பிடி

பச்சைப் பட்டாணி இப்போது பட்டாணிக் காலம் என்பதால் பச்சைப் பட்டாணியே கிடைக்கும்.  அல்லது காய்ந்த பச்சைப்பட்டாணியை ஊற வைத்தது ஒரு கைப்பிடி.

இந்தக் காய்கள் போதும். வெங்காயம் போடுவது அவரவர் விருப்பம்.

பச்சை மிளகாய் காரமானது என்றால் ஒன்று

இஞ்சி ஒரு சின்னத் துண்டு

மிளகு ஒரு டீஸ்பூன்

ஜீரகம் ஒரு டீஸ்பூன்

சோம்பு ஒரு டீஸ்பூன்( வேணாம்னா விட்டுடலாம்)

கிராம்பு ஒன்றே ஒன்று

ஒரே ஒரு பெரிய ஏலக்காய்

லவங்கப்பட்டை (பிடித்தமானால்) ஒரு சின்னத் துண்டு

மசாலா இலை (பிடித்தமானால்)

வதக்கப் போதுமான எண்ணெய் ஒரு குழிக்கரண்டி

உப்பு

மஞ்சள் தூள்

தாளிக்க

நெய்  ஒரு சின்னக் குழிக்கரண்டி

ஜீரகம்

மி. வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், கொத்துமல்லி பொடியாக நறுக்கியது.

இது ரொம்பக் காரமாகவும் இல்லாமல் மசாலா வாசனையும் இல்லாமல் பண்ணலாம். அல்லது மசாலாப் பொருட்கள் ஏலக்காய், கிராம்பு மட்டும் தாளித்தோ மேலே சொன்ன எல்லா மசாலாப்பொருட்களையும் தாளித்தோ பண்ணலாம்.

அரிசியையும் பருப்பையும் நன்கு சிவக்க வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு நன்கு களைந்து தேவையான நீர் விட்டு ஊற வைக்கவும்.  அரிசி, பருப்புக்குத் தேவையான நீரிலேயே ஊற வைக்கலாம். பின்னர் அதை அப்படியே காய்களோடு சேர்க்கலாம்.

இப்போது அதே வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, மசாலா இலை, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை ஆகியவற்றைத் தாளிக்கவும். லவங்கப்பட்டையும், சோம்புவும் சாப்பிடாதவர்கள் ஏலக்காய், கிராம்பு மட்டும் போடலாம்.  ஜீரகம் எல்லோரும் சாப்பிடுவார்கள். மசாலா இலையும் போடாமல் ஜீரகம், மிளகு, ஏலக்காய், கிராம்பு மட்டும் போட்டுக் கொள்ளலாம். பின்னர்  மிளகு சேர்க்கவும். மிளகு வெடிக்க ஆரம்பித்ததும் பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.  காய்களை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.  காய்கள் ஓரளவு வதங்கியதும் அரிசியையும் பருப்பையும்,  அதில் உள்ள நீரோடு வதக்கிய காய்களையும் ஒன்றாகக் கலந்து  கொண்டு குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் உப்புச் சேர்த்து வேக வைக்கவும். குக்கர் என்றால் இரண்டு விசில் போதும். பின்பு வெளியே எடுத்துக் கடாயில் நெய் ஊற்றி மறுபடி ஜீரகம் நிறையப் போட்டு மி.வத்தல், பெருங்காயம், கருகப்பிலை சேர்த்து வதக்கிக் கிச்சடியில் கொட்டவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவிக் கலக்கவும்.

தயிர்ப் பச்சடியுடன் சேர்ந்து சாப்பிடலாம்.  தயிர்ப்பச்சடி தக்காளி, காரட், வெங்காயம் இவை எதிலாவது செய்து கொள்ளலாம். வெங்காயம் சேர்ப்பதெனில் கடைசியில் நெய்யில் கருகப்பிலை தாளித்ததும் வெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொண்டு கிச்சடியில் சேர்க்கவும்.
ஹூம், வர வர இந்த வலைப்பக்கம் சாப்பிட வாங்கப் பக்கமாயிடுமோ? :P

34 comments:

 1. நீங்கள் சாதாரணமாக வீட்டில் சமைப்பது பு. அரிசியா, ப. அரிசியா?

  இப்போ மதியம் 3 மணிக்கு இங்கே ரவா கிச்சடி - வீட்டுக்கு வந்திருக்கும் ஒரு மாமாவுக்காக.

  //பாஸ்மதி அரிசிக்குச் சர்க்கரை கட்டுப்படுகிறது. விலை தான் நமக்குக் கட்டுப்படுவது இல்லை//

  ஹா...ஹா...ஹா...

  பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக ( !!!!!!! ) சமையல் பதிவு போடும் போதே படத்துடன் போட்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக ( !!!!!!! ) சமையல் பதிவு போடும் போதே படத்துடன் போட்டிருக்கிறீர்கள்//
   ஹிஹிஹி, யாரோட பதிவுலக வரலாறு? என்னோடதுனா எத்தனை பதிவுகள் பிரசாதங்களோடு போட்டிருக்கேன். இது அநியாயமா இல்லையோ?

   அப்புறமா ஒரு ரகசியம். இன்னிக்கும் பண்ணறச்சே எல்லாம் படம் எடுக்கணும்னு தோணலை. மத்தியானம்மா சாப்பாடு முடிச்சுட்டுக் கணினியில் உட்கார்ந்தப்போத் தான் மொக்கைப்பதிவு போடலாமானு ஒரு எண்ணம். அப்போத் தான் சரி மொக்கை வேண்டாம் கிச்சடிப் பதிவைப் போடலாம்னு எழுதினேன். எழுதும்போது தான் படம் எடுக்கலையேனு எண்ணமே வந்தது. சாப்பிட்டு முடிச்சாச்சே! என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போத் தான் சட்டுனு நினைவு வந்தது. கொஞ்சம் மிச்சம் இருக்கே எடுத்து வைச்சோமோனு. சரி, இது போதும்னு வெளுத்து வாங்கிட்டோமுல்ல! எங்களை யாருனு நினைச்சீங்க? :))))))

   Delete
 2. பட்டாணி போட்டால் அந்த வாசனை அல்லது சுவை எனக்குப் பிடிப்பதில்லை!

  ReplyDelete
  Replies
  1. நான் உங்களுக்கு நேரெதிர். பட்டாணி ரசிகை. அதுவும் தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல்னா உயிரையே கொடுப்பேன். :))))

   Delete
 3. ஒரு கேள்விக்கு பதில் ட்யூ!!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, வீட்டில் சமைப்பது சாப்பாடுப் புழுங்கல் அரிசி. பச்சரிசி முக்கியமான சமயங்களில் வாங்குவோம். இதுவே பச்சரிசி மாதிரித் தான் இருக்கும். சில்க் பொன்னி! :)

   Delete
 4. ரவை கிச்சடி தெரியும். இதென்ன புதுசா இருக்கே என்று பார்த்தேன். செய்முறையை படித்தவுடன் சாப்பிட வேண்டும் போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராம்வி, ரவை கிச்சடி, சேமியா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி, ஓட்ஸ் கிச்சடினு விதம் விதமாப் பண்ணலாம். ஆனாலும் இது தான் மூலம். கிச்சடியின் பல்வேறு விதங்களே இதிலிருந்து வந்தது தான். வட இந்தியாவில் நம்ம பொங்கலையே காய்கள் சேர்த்துப் பண்ணுவதைக் கிச்சடி என்பார்கள். தமிழ்நாட்டில் கிச்சடின்னா காய்கள் கலந்த உப்புமா தான். :))))

   Delete
 5. சின்ன மாட்டுப் பெண் அடிக்கடி செய்வார். அங்க இருக்கிற அந்த ஊர் குக்கர் 10 நிமிஷத்தில சாதம் செய்திடும். கொஞ்சமா இருக்கேன்னு பார்த்தேன். சாப்பிட்ட மீதியா. அப்பா சரி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, இங்கே ரைஸ் குக்கர் அரை மணி நேரம் எடுக்குது! :)))

   Delete
 6. 'திங்க' என்றால் முதலில் காமென்ட் போடுவது ஸ்ரீராம்! அதுவும் கேள்வி மேல கேள்வி! அசத்துகிறீர்கள் ஸ்ரீராம்! கீதாவோட பதிவுல ஸ்ரீராமிற்குப் பாராட்டு!

  ஸாரி, கீதா. நீங்கள் சொல்லியிருப்பது போல பண்ணிப் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி... நான்தான் சாப்பாட்டு ராமனாச்சே! :)))))))))

   Delete
  2. வாங்க ரஞ்சனி, நாங்கல்லாம் தீனி தின்னிக் குழுமம் ஆச்சே! :)))) ஒரு தரம் இதையும் முயற்சி செய்து பாருங்க.

   Delete
 7. அரிசி கிச்சடி நல்லா இருக்கே.... சிறுதானியத்தில் இது மாதிரி செய்து சாப்பிடலாம்னு தோணுது. பண்ணிப் பார்க்கிறேன்.

  நானும் கோவையில் இருந்த வரை புழுங்கலரிசி தான்.... திருமணமானதும் எல்லாம் மாறிடுச்சு....:)) இங்கே புழுங்கலரிசி என்றாலே கொட்டை கொட்டையா இருக்குமேன்னு தான் சொல்வாங்க...:))) அதன் ருசியே தனி..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆதி, இந்தப் புழுங்கலரிசி கொட்டை கொட்டையாக இருக்காது என்பதற்கு நான் காரன்டி! :)))))நீங்க சொல்லும் புழுங்கலரிசி எனக்கும் பிடிக்காது. இது வாசனையில் தான் புழுங்கலரிசினு சொல்லணுமே தவிர சாப்பிடும்போது பச்சரிசி மாதிரியே மிருதுவாக இருக்கும். :)))

   Delete
  2. நாங்கள் அப்போது சாப்பிட்டு வந்ததும் நீங்கள் சொல்வது போல் மிருதுவான, பச்சரிசியைப் போலவே இருக்கும் புழுங்கலரிசி தான். ஆனா பொதுவா புழுங்கலரிசி என்றாலே கொட்டை கொட்டையா இருக்கும் என்று தான் சொல்வார்கள்.....:))) அதைத் தான் குறிப்பிட்டேன்....:)))

   Delete
  3. ஓ, அப்படியா? நான் தான் புரிஞ்சுக்கலை. ஆனால் முன்னெல்லாம் எங்க தாத்தா வீட்டிலே சாப்பிடும் புழுங்கலரிசி கொட்டை கொட்டையாத் தான் இருந்திருக்கு! அங்கே போனாலே சாப்பிடப் பிடிக்காது. :))))

   Delete
 8. சுவையான கிச்சடி படம் போட்டு பசியை கிளப்பிட்டீங்க!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, இருக்கிறதை நீங்க எடுத்துக்குங்க சுரேஷ்!

   Delete
 9. அடடா...! இவ்வளவு விசயம் இருக்கா...?

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, ஆமாம்! முயற்சி பண்ணிப் பாருங்க! :)

   Delete
 10. கிச்சடின்னா உண்மையில் என்னன்னு இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி அம்மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவிநயா, கிச்சடி வாசனை ரிச்மாண்டிலிருந்து உங்களைக் கூட இழுத்துட்டு வந்திருக்கு போல! :)

   Delete
 11. தலைப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்; கிச்சடின்னு பேரு வந்தது எப்படீன்னு தெரியுமோ?..

  ReplyDelete
  Replies
  1. தெரியாது ஜீவி சார். விக்கி சொல்லும் தகவல்கள் பொதுவானவையாகவே இருக்கின்றன. பெயர்க்காரணம் விக்கியில் இல்லை.

   Delete
  2. ஆனால் முதல் முதலாக இந்திரா காந்தி பிரதமராக இருக்கையில் எமர்ஜென்சி காலத்தில் வந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு அவரை எதிர்த்தபோது அதைக் "கிச்சடி" என இந்திரா காந்தி குறிப்பிட்ட நினைவு இருக்கிறது. ஏனெனில் எனக்கும் அப்போது தான் அரிசிக் கிச்சடியில் காய்கள் எல்லாம் போட்டுப் பண்ணுவது உண்டு என்பது தெரிய வந்தது. இந்திராவின் அந்த விமரிசனத்துக்குத் தமிழில், "அவியல்" என்று சொல்கிறார் என்பதாக "இந்து" பத்திரிகை(?) அல்லது தினமணி (?) கார்ட்டூன் பார்த்த நினைவு. :)))))

   Delete
  3. ஆமாம். உங்களுக்கு நல்ல நினைவாற்றல். பச்சடிக்கு பெயர்க் காரணம் தெரிந்தால், இதற்கும் காரணத்தைக் கண்டுபிடித்து விடலாம் என்று நினைக்கிறேன்.

   Delete
  4. பச்சடியின் பெயர்க்காரணம் என்ன? தெரியலை/ அல்லது எனக்கு யோசிக்க முடியலை! :)))) கேரளாவிலும் பச்சடி மாதிரியான ஒன்றைக் கிச்சடி என்பார்கள். அது அநேகமாய்ப் பறங்கிக்காயில் செய்வதுனு நினைக்கிறேன்.:)

   Delete
 12. அருமையான கிச்சடி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, கொஞ்சமானும் கிடைச்சதா? :)

   Delete
 13. செய்து பார்க்க வேண்டும். வீட்டில் அம்மணிக்கு தெரியப் படுத்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. செய்து சாப்பிட்டுப் பாருங்கள். அதிகம் மசாலா கிடையாது. காரமும் இல்லை. பருப்பு, நெய், அரிசி, காய்கள் என மிகவும் வயிற்றுக்கு ஒத்துப் போகும் ஓர் உணவு. குஜராத்தில் கிச்சடியும் "கடி" எனப்படும் கடலைமாவு சேர்ந்த மோர்க்குழம்பு செய்வார்கள்.

   Delete
 14. தில்லியில் வட இந்திய நண்பர்கள் சில சமயங்களில் மதிய உணவாகக் கொண்டு வருவார்கள். சாப்பிட்டதுண்டு.

  ReplyDelete
 15. அருமையான கிச்சடி.

  ReplyDelete