எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 13, 2015

சாதாரண மனிதனின் சாமர்த்தியத்தைப் பார்ப்போம்!

கிரண் பேடியை முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது தான் பாஜகவின்  இமாலயத் தவறு. இதன் மூலம் டெல்லி வாழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு மனதில் அச்சம் குடி கொண்டு விட்டது. அதோடு அந்நிய மதத்தினர் ஓட்டுக்கள் அனைத்தும் சிந்தாமல், சிதறாமல் ஆம் ஆத்மிக்குப் போயிருக்கின்றன.  இதோடு காங்கிரஸ் ஓட்டுக்களும் சேர்ந்து கொண்டன. ஆனால் டெல்லி அரசியல் என்பது தனி.  மேலும் மோதி கெஜ்ரிவாலை விமரிசித்த முறை பலருக்கும் பிடிக்கவில்லை என்பதும் உண்மை.  இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து பேசி இருக்க வேண்டாம் என்று என் கருத்தும் கூட. ஆனால் லோக்பால் அமைப்பு என்பது டெல்லியில் ஏற்கெனவே இருக்கிறது.  கெஜ்ரிவால் முதலில் அதைப் புரிந்து கொள்ளவே இல்லை.  இப்போது புரிந்து கொண்டாலும் அதில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்கிறார்.  எப்படிப் பட்ட திருத்தங்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமலும், வருமானத்திற்குச் சரியான வழி செய்யாமலும் இலவசக் குடிநீரும், மின்சாரமும் எப்படிக் கொடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  மக்கள் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர்பார்ப்பு இருப்பதால் தான் பாஜக செய்யும் பல நல்ல முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விஷயங்களின் தன்மையை எவரும் புரிந்து கொள்ளவில்லை.  ஏனெனில் இவை பலனளிக்கக் குறைந்தது 2 ஆண்டுகள் ஆகலாம்.

உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு கெஜ்ரிவால் எப்படி நம்பிக்கையூட்டப் போகும் விதத்தில் ஆட்சியைக் கொண்டு செலுத்தப் போகிறார் என்பது புரியவில்லை.  அதோடு ஆம் ஆத்மி கட்சியில் எவரும் அரசியலோ,  ஆட்சி நிர்வாகமோ புரிந்தவர்கள் அல்ல.  கெஜ்ரிவால் உட்பட.  நம் குடியரசுத் தலவர் கூட கெஜ்ரிவாலுக்கு அரசியல் சாசனப் புத்தகம் தான் பரிசளித்திருக்கிறார். அரசியல் சட்டம் என்ற வரையறைக்குள்ளேயே கெஜ்ரிவால் ஆட்சியை அளிக்கத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.


டெல்லியின் சட்டம், ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருப்பதற்கு சமீபத்தில் நடந்த இன்னொரு பேருந்து பலாத்காரமே பதில் சொல்லும். ஆனால்  டெல்லி காவல் துறை மத்திய அரசின் உள்துறை இலாகாவுக்குக் கீழே வருகின்றது.  டெல்லி நாட்டின்  தலைநகரம் என்பதால் அங்கே உள்துறையின் ஆணைகளே செல்லுபடி ஆகின்றன.  உள்துறைதான் இந்தச் சட்டம், ஒழுங்கு குளறுபடியைச் சரி செய்ய முனைய வேண்டும்.  காவல்துறைக்குக் கடுமையாக நடந்துகொள்ளச் சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்தக் காவல்துறையை மாநில அரசுக்குக் கீழ்க் கொண்டுவரப் போவதாகவும் கெஜ்ரிவால் சொல்லுகிறார். முடியுமா என்பது கஷ்டமே.  இதன் மூலம் பல பிரச்னைகள் உருவாகும். டெல்லியில் மட்டுமே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மை என்பதை அஸ்ஸாம் உள்ளாட்சித் தேர்தல் காண்பித்துவிட்டது.  மற்ற மாநிலங்களில் சுமார் பத்துப் பதினைந்து பேர் மட்டும் கூடும் உதிரிக்கட்சிகளில் ஒன்றாகவே செயல்படுகிறது.

டெல்லி நிலைமை இப்படி இருக்க அஸ்ஸாம் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதை எந்த ஊடகமும், அல்லது பெருமை வாய்ந்த ஹிந்து நாளிதழ் போன்றவையோ சொல்லவே இல்லை என்பதையும் மறக்கக் கூடாது. இது டெல்லித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் வந்திருக்கின்றன என்பதையும் மறக்கக் கூடாது. 

21 comments:

  1. நான் சொல்லவந்ததையெல்லாம் சொல்லிவிட்டால் எப்படியாம்!?

    ReplyDelete
    Replies
    1. "இ" சார், நீங்க உங்க பாணியிலே சொல்றாப்போல வருமா? சொல்லுங்க, சொல்லுங்க, கேட்கிறோம். :)

      Delete
  2. முன்னேற்றப் பாதையில் பாஜக என்ன செய்திருக்கிறது ?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்??? அப்படியா? பொதுவாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர், (எங்க பையர் உட்பட) கெஜ்ரிவாலுக்குத் தான் வால் பிடிக்கிறாங்க. நீங்களும் அப்படியோ? :)))) தெரியலை, பாஜக என்ன செய்திருக்கு என்பதற்கான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டல்லவோ இதுக்கு பதில் தரணும். இப்போதுள்ள வேலை மும்முரத்தில் சீக்கிரம் எழுதப் பார்க்கிறேன்னு மட்டும் சொல்லிக்கிறேன். :))))

      Delete
  3. முதல் வரியில் 'முதலமைச்சர் வேட்பாளராக' என்றிருக்க வேண்டும்!

    தீவிர ஹிந்துத்துவா பேச்சுக்கள், கோட்ஸே சிலை விவகாரப் பேச்சு போன்றவைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கும். ஒரு பிரதமராக மோடி அந்த மாதிரிப் பேச்சுகளை அடக்கவும் இல்லை, கருத்தும் கூறவில்லை.

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேன் ஶ்ரீராம். சரியா கவனிக்கலை. ரஞ்சனிக்குப் பின்னூட்டமாகப் போட்டதை இங்கே அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணினேன். மோதி சில விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதால் பதில் சொல்வதில்லை. என்றாலும் தீவிர ஹிந்துத்வா பேச்சுக்களைப் பேசுவோர் மீது வேறு மாதிரியான சந்தேகம் எழுந்திருக்கிறது. பார்க்கலாம். :)))

      Delete
  4. //நம் குடியரசுத் தலவர் கூட கெஜ்ரிவாலுக்கு அரசியல் சாசனப் புத்தகம் தான் பரிசளித்திருக்கிறார்// :)

    ReplyDelete
    Replies
    1. பிரகாஷ், முதல் வருகை??? சிரிப்பு எதுக்குங்க? சொன்னால் நானும் சிரிப்பேன் இல்ல? :))))

      Delete
  5. டெல்லி அப்படியே பூத்துக் குலுங்கும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை, கீதா. அது சாத்தியமுமில்லை.
    படித்தவர், இளைஞர், அரசுத்துறையிலேயே வேலை பார்த்தவர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. டெல்லிவாசிகள் அரசியல் தெரியாதவர்கள் இல்லை. இந்த இரண்டு தேசியக் கட்சிகளும் செய்யாததை இவர் ஆரம்பித்தாவது வைப்பாரா என்பதுதான் எதிர்பார்ப்பு. யாராவது ஏதாவது செய்து இந்தியாவிற்கு ஒரு நல்லகாலம் வரதா என்று என் போன்ற பாமர மக்கள் நினைக்கிறார்கள். அந்த யாரவது இவராக இருக்கட்டுமே.
    கொஞ்சநாளைக்கு பொறுத்திருந்து பார்க்கலாமே. காங்கிரஸ் கட்சியோ, பாஜக வோ இத்தனை நாட்கள் என்ன செய்தன?
    கெஜ்ரிவால் பற்றிய சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன. ஒரு முறை வாய்ப்பு கொடுக்கலாமே, அதில் தவறு என்ன இருக்கிறது?
    பாஜக தன்னை அலசிப்பார்த்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம் இந்த நேரத்தில். கெஜ்ரிவால் என்ன செய்கிறார் என்று பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு பார்ப்பதை விட்டு விட்டு சென்ற வருடம் கிடைத்திருக்கும் வெற்றியை பயன்படுத்தி ஐந்து வருடங்கள் நல்லாட்சி கொடுக்க வேண்டும். முதலில் குறைகளை களைய வழி செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கெஜ்ரிவால் செய்வதை பூதக்கண்ணாடி எல்லாம் வைச்சுப் பார்க்கவே வேண்டாம் ரஞ்சனி. இதோ அவரோட அறிவிப்புகளில் ஒன்று! அரசு உத்தியோகஸ்தர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கவில்லை எனில் அவர்கள் உத்தியாகத்தை விட்டு நீக்கப்படுவார்களாம்! இது ஒரு உதாரணம் போதும்னு நினைக்கிறேன். அடுத்து அண்டை மாநிலங்கள் மின்சாரம் கொடுக்காமல், அவங்களுக்கு அந்த மின்சாரத்துக்கு உரிய கட்டணத்தைச் செலுத்த வருமானத்துக்கு வழியில்லாமல் எப்படி மின்சார விநியோகம் செய்யப் போறார்னு பார்க்கணும்! :))))) டெல்லி தன்னோட மின்சாரத்துக்குச் சுற்றியும் உள்ள மாநிலங்களையே நம்பி இருக்கு! :))))

      Delete
    2. //யாராவது ஏதாவது செய்து இந்தியாவிற்கு ஒரு நல்லகாலம் வரதா என்று என் போன்ற பாமர மக்கள் நினைக்கிறார்கள். அந்த யாரவது இவராக இருக்கட்டுமே.//

      நான் பாமரத்திலும் மிக மோசமான பாமர மக்களில் ஒருத்தி ரஞ்சனி. கெஜ்ரிவாலிடம் உள்ளே ஒரே நல்ல குணம் சேரி வாழ் மக்களையும் மிக எளிதாக அணுகுவது ஒன்று தான். ஆனால் அதைச் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்கிறாரா என்பது கேள்விக்குறியே! அரசுத் துறையில் மிஞ்சி மிஞ்சி நான்கு வருஷம் வேலை செய்திருக்கிறார். அதுவும் தொடர்ந்து வேலை செய்யவில்லை. அரசுத்துறையிடம் இருந்து கடனாகப் பெற்ற பணத்தைத் தான் வேலையை விட்டு வந்த பிறகும் திரும்பச் செலுத்தவில்லை. அமலாக்கத்துறை அல்லது வருமானவரித்துறையிடமிருந்து இவருக்கு நோட்டீஸ் போனப்புறமா இவர் எந்தத் துறையில் வேலை செய்தாரோ அந்தத் துறைக்கு அனுப்பவேண்டியதற்கு பதிலாகச் செக்கைப் பிரதமர் மன்மோகன் சிங் பெயரில் அனுப்பி எல்லாம் மீடியாவின் வெளிச்சத்தில் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். பலரின் கண்டனங்களுக்குப் பின்னரே இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இப்படி எத்தனையோ சொல்லலாம் கெஜ்ரிவாலைக் குறித்து!

      Delete
  6. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன். எப்போவும் டிடி வந்து சொல்லுவார். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. போய்ப் பார்த்துட்டு வந்தேன்.

      Delete
  7. இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
    http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. வந்தாச்சு ரஞ்சனி. :))))

      Delete
  8. நல்லதொரு கணிப்பு. உங்கள் பதிவைப் படித்தே பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இங்கேயும் தேர்தலுக்கு பிரசாரங்கள் ஆரம்பித்திருக்கின்றன. சுவாரஸ்யமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி இன்னமும் நல்லாவே எழுதி இருக்காங்க! அங்கேயும் போய்ப் படிங்க வல்லி!

      Delete
  9. AK-67 ( அர்விந்த் கேஜ்ரிவாலின் 67 இடங்கள்) பாஜகவை திணர அடித்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது. கணிப்புகள் எல்லாம் ஒரு hind sight -ல் இப்போது சொல்லலாம். இந்த அடியை யாரும் எதிர்பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மட்டுமென்ன? பலருக்கும் சந்தோஷம் தான். அந்த ஆனந்த மிதப்பில் இருப்போருக்கு அஸ்ஸாம் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்துக் கவனம் செலுத்த முடியவில்லை! :))) அதல்லவோ முக்கியம்!!!!!!!!!!!!

      Delete
  10. பொறுத்திருந்து பார்க்கலாம்....

    இலவச தண்ணீர், மின்சாரக் கட்டணத்தில் குறைப்பு என்பதற்கு சில Terms and conditions உண்டு..... எல்லோருக்கும் கொடுக்கப் போவதில்லை.

    பதவியேற்ற உடனேயே மாற்றங்களை கொண்டு வர முடியுமா என்பது சந்தேகம் தான் - அது பிஜேபியாக இருந்தாலும் சரி, ஆம் ஆத்மி பார்ட்டியாக இருந்தாலும் சரி.

    ஐந்து ஆண்டுகளில் ஊழலை ஒழிப்பேன் என்று தான் இப்போது சொல்கிறார். பார்க்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அவர் சொல்லும் கணக்கில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு பள்ளியும், பத்து நிமிடத்திற்கு ஒரு மருத்துவமனையும் கட்டும்படி இருக்கும்! :(( டிடிஏ அப்ரூவல் வாங்காமல் எதுவும் செய்ய முடியாது. அந்த டிடிஏ மத்திய அரசுக்குக் கீழ் உள்ள துறையில் வருகிறது. சரி இதான் போகட்டும், டெல்லியை மாநிலம் ஆக்கலாம்னா அதுவும் அவ்வளவு எளிதில் முடியாத ஒன்று. லோக்சபை, ராஜ்யசபை இரண்டிலும் விவாதம் நடத்தி அனுமதி பெற்றாக வேண்டும். மின்சாரத்துக்கு அண்டை மாநிலங்கள் உதவி செய்தால் தான் உண்டு. தனியார் அளிக்கும் மின்சாரத்தில் கை வைத்தால் அவர்கள் விநியோகத்தை நிறுத்திக் கொள்வார்கள். கட்டுப்படி ஆகாது! கடைசியில் எல்லாவற்றுக்கும் மத்திய அரசு உதவி செய்யவில்லை என்னும் வழக்கமான பல்லவியைப் பாடிக் கொண்டு தப்பிப்பார் கெஜ்ரிவால்! அது தான் நடக்கப் போகிறது! :))))))))

      Delete