எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 09, 2015

பயணங்கள் முடிவதில்லை! 9

இங்கே

முதலில் தனுஷ்கோடியில் நீராடணும்னு சொல்றாங்க.  ஒரு சிலர் இல்லை சேது எனச் சொல்கின்றனர்.  நம்ம தம்பி வாசுதேவன் தனுஷ்கோடி தான் அக்னி தீர்த்தம் என்றும் சொல்லுகிறார்.  ஆனால் தனுஷ்கோடியில் நீராடினால் உடை மாற்றுவது கஷ்டம் என்பதோடு அந்த லொட லொட மாக்சி கேபில் அரை மணிப் பயணம் செய்வதும் சிரமம் என்பதால் நாங்க வேண்டாம்னு இருந்துட்டோம்.  ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடியதும், பின்னர் அடுத்துக் கோயிலில் உள்ளே உள்ள தீர்த்தங்களில் நீராடினார்கள்.  ஒவ்வொரு தீர்த்த நீராடலுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

முதலில் மகாலக்ஷ்மி தீர்த்தம், செல்வ வளம் பெறுவதற்காகவும்
சாவித்திரி தீர்த்தம் பேச்சுத் திறமை, இங்கே பேச்சுத் திறமை என்பது பேச்சு வருவதை மட்டும் குறிக்காது.
அடுத்து காயத்ரி தீர்த்தம் உலக க்ஷேமத்துக்காக
அடுத்து சரஸ்வதி தீர்த்தம்  நல்ல படிப்புக்கும்
சங்கு தீர்த்தம் சுகமான வாழ்க்கைக்கும்
சக்கர தீர்த்தம் திட மனதுக்கும்
சேதுமாதவ தீர்த்தம் தடங்கல்கள் இருந்தால் மறையவும்
நள தீர்த்தம்,
நீல தீர்த்தம்,
கவய தீர்த்தம்
கவாட்ச தீர்த்தம்
கந்த மாதன தீர்த்தம் ஆகியவை எத்துறையிலும் திறமைசாலிகளாக ஆக்கவும்
பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், பீடைகள் விலகவும்
கங்கா தீர்த்தம்
யமுனா தீர்த்தம்
கயாதீர்த்தம்
சர்வ தீர்த்தம் ஆகியவை பிறவிப் பயன்களைக் கொடுக்கவும், முப்பிறவியிலும் ஏற்பட்ட பீடைகள் ஒழியவும்
சிவ தீர்த்தம் எல்லாவிதமான பீடைகளும் ஒழியவும்
சத்யாமிர்த தீர்த்தம் தீர்க்காயுளுக்காகவும்
சந்திர தீர்த்தம் கலைகளில் ஆர்வம் உண்டாக்கவும்
சூரிய தீர்த்தம் எல்லாவற்றிலும் முதலில் வரவும்
கோடி தீர்த்தம் மறு பிறவி இல்லாத நிலையைக் கொடுக்கவும்

நீராடப் படுகிறது.  இதிலே நாம வழிகாட்டி மூலமாப் போனால் தான் வாளியில் தண்ணீரை இறைத்து நம் தலைகளில் ஊற்றுவார்கள். நீங்களாய்ப் போனால் பக்கத்தில் உள்ளவர்களுக்கு ஊற்றுவதில் கொஞ்சம் போல் நமக்கும் புரோக்ஷணம் செய்யப்படும்.  மேலும் வழிகாட்டி மூலமாய்ப் போனால் சீக்கிரமாகவும் கவனிப்பார்கள். இல்லை எனில் தாமதமும் ஆகும். இதற்கு வழிகாட்டிக்கு ஐநூறு ரூபாய் பேசி இருந்தோம். இது எல்லாம் முடிச்சு உடை மாற்றியதும் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசை இருந்ததால் எங்களைச் சிறப்பு தரிசனத்தில் அழைத்துச் செல்வதாய்க் கூறினார்.  சிறப்பு தரிசனக் கட்டணம் ஐந்து நபர்களுக்கு 1,500 ரூபாய் என்றார்.  நாங்க நாலு பேர் தான்.  ஆனால் அதற்காகப் பணத்தைக் குறைக்க மாட்டார்களே!

ஆகையால் நாங்க நிற்க முடியாது என்பதால் 1,500 ரூபாய்க்கு ஒத்துக் கொண்டோம்.  அவரும் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஆனால் சீட்டு எதுவும் வாங்கவே இல்லை. முதலில் காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் ராமநாதரைத் தரிசித்தோம்.  அங்கே கீழே அமர்ந்து பார்க்க வேண்டுமாம்.  எங்க மருமகளைத் தவிர மற்ற மூவருக்கும் முட்டிப் பிரச்னை என்பதால் அமர முடியவில்லை.  நாங்க அமராததால் எங்க மருமகளும் அமரவில்லை.  ஐந்து நிமிடங்களுக்கு மேலே பார்த்துக் கொண்டோம்.  பின்னர் பர்வத வர்த்தினியையும் தரிசித்தோம். நல்லவேளையாக அதுக்குத் தனியாக் காசு கேட்கலை.  பின்னர் வெளியே வந்ததும் ஆஞ்சநேயர் கோபுர வாயிலுக்கு அருகே இருப்பவரைத் தரிசிக்கச் சென்றோம்.  அங்கேயே வழிகாட்டி எங்களைக் கழட்டி விட்டார்.

ஆனால் மேலே இன்னொரு ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு தான் கழட்டி விட்டார்.  கேட்டால் முதலில் கொடுத்த ஐநூறு ரூபாயில் தீர்த்தங்களில் இருப்பவர்களுக்குக் கொடுத்தது போக அவருக்கு ஒண்ணும் வரலையாம். கோயிலுக்குனு கொடுத்த 1,500 ரூபாயில் ஆயிரம் ரூபாயைத் தான்  கொடுத்தார் என்பதை நாங்கள் பார்த்தோம்.  ஆனாலும் அவரிடம் ஒன்றும் பேச முடியவில்லை.  நம்ம முகத்தில் தான் ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கே! கொடுத்துட்டு ஆஞ்சியைப் பார்த்துட்டுக் கோயிலுக்கு வெளியே வரச்சே ஐந்தரை மணி ஆகி விட்டது.  காலையில் காரைக்குடியில் ஏழரை மணிக்குச் சாப்பிட்டது தான்.  அப்போத் தான் உணவுனு ஒண்ணு வயித்துக்குக் கொடுக்கணும்னு தோணியது. ஹோட்டல் எங்கே இருக்குனு பார்த்தோம்.  அங்கே இருந்த ஹோட்டல்களைப் பார்த்த மகனும், மருமகளும் ராமநாதபுரம் போய்ச் சாப்பிடுவதாகச் சொல்ல நாங்க முன்னர் சென்ற சாஸ்திரிகளின் மைத்துனர் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றோம்.

அங்கே இன்னும் அரை மணிக்கு மேலாகும் என்றும் உள்ளே அழைத்துச் சாப்பிட வைப்பதில்லை என்றும் தெருவில் நின்று கொண்டு தான் சாப்பிடணுமபென்றும் சொல்லி விட்டார்கள்.  இது வேலைக்காகாது என நாங்களும் வண்டிக்குத் திரும்பினோம்.  போகும்போது அரை கிலோ மீட்டர் கூட இல்லாத தூரம் இப்போது மைல் கணக்காக நீண்டது. ஒரு வழியாகக் காருக்கு வந்து சேர்ந்து மீண்டும் அறை தேடும் படலத்தில் ஈடுபட்டோம்.  எங்கும் அறைகள் காலி இல்லை என்ற பதிலே வர, இராமநாதபுரம் போய்ப் பார்க்கலாம் என ஏகோபித்த முடிவு எடுத்து  வண்டியை அங்கே விடச் சொன்னோம்,  மணி ஆறரை ஆகி விட்டிருந்தது. 

14 comments:

  1. வழிபாட்டுத் தலங்கள் வியாபாரத்தலங்கள் ஆகிவிட்டது! இராமேஸ்வரத்தில் சாஸ்திரிகளிடம் தர்ப்பணம் முதலியவைக்கு பேசும் போது உணவுக்கும் சேர்த்து பேசி இருந்தால் அவரே ஏற்பாடு செய்து தருவார்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சுரேஷ். நாங்கள் அகாலத்தில் சென்றது மட்டும் காரணம் இல்லை; ராமேஸ்வரம் போகணும்னு முடிவு செய்தப்போவே இம்முறை அங்கே பித்ரு கடன்கள் ஏதும் செய்ய வேண்டாம்னு முடிவு எடுத்திருந்தோம். முதல் இருமுறைகள் எங்கள் குடும்ப புரோகிதர் மூலம் ராமேஸ்வரம் மணிகிண்டி சாஸ்திரிகளை ஏற்பாடு செய்து கொண்டு அவர் மூலமாகவே எல்லாமும் நடத்தினோம். இம்முறை அப்படிச் செய்யலை. :))))

      Delete
  2. இப்படி, காசு வாங்கி பயமில்லாமல் கடவுள் விஷயத்திலேயே விளையாடுபவர்கள் கூட நன்றாகத்தான் இருக்கிறார்கள். :((

    ஏனோ, இவ்வளவு சிரமப்பட்டு, காசு கொடுத்து ஸ்வாமி தரிசனம் செய்ய எனக்கு அலுப்பாகி விடுகிறது.

    :)))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், அதனாலேயே கோயிலுக்குப் போவதென்றால் பிடிக்கவும் இல்லை. :(

      Delete
  3. பலன்களுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. தீர்த்த ஸ்நானமும் ஒரு வியாபாரம் ஆகிவிட்டது டிடி. :(

      Delete
  4. பட்டினி கிடந்தது பூஜித்ததால் பலன் இருக்கட்டும். நாங்கள் சேத்துக்கரையில் சங்கல்ப ஸ்நானம் செய்து ,ஜகன்னாதர கோவிலில் மதியப் பொங்கலைச் சாப்பிட்டோம். ஒரு நாள் ராமேஸ்வரத்தில் கழித்தோம். தம்பி ஏற்பாடு செய்த தி பியில் டிபன் செய்து விட்டு மீண்டும் ராமநாதபுரம் இரவு சாப்பாடு...இட்லிக்கு வந்து விட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, எல்லோருமே பட்டினி. சர்க்கரை நோய் இருக்கும் ரங்க்ஸ் கூடப் பசியை எப்படியோ தாங்கிக் கொண்டார்னா அதிசயம் தான். மாலை ஏழரை மணிக்கு ராமநாதபுரத்தில் தான் இட்லி சாப்பிட்டோம். :))

      Delete
  5. ராமேஸ்வரம் பகிர்வு மீண்டும் என் பழைய நினைவுகளில்.........

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.

      Delete
  6. இப்படியா ஒட்ட ஒட்ட பட்னி கிடப்பீங்க? :(

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்யறது வா.தி! சாப்பிட நேரமே அமையலை! சாப்பிடணும்னு தோணவும் இல்லை! ராத்திரி கூடச் சும்மாப் பேர் பண்ணினோம். :)

      Delete
  7. கோவில்கள் வியாபாரத் தலங்களாக மாறி விட்டது - இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே தான். காசு கொடுத்து சாமி பார்க்க வேண்டாம் என்று, ஒவ்வொரு இடத்திலும் சண்டை போட்டு திட்டு வாங்குவதும் எனக்கு வழக்கமாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. @வெங்கட், ஆமாம், ஆரம்பத்தில் நானும் வீம்பு பண்ணிட்டுத் தான் இருந்தேன். பணம் கொடுத்து சாமியைப் பார்க்க மாட்டேன்னு எல்லாம் சொல்லிட்டு இருந்தேன். இப்போல்லாம் பணம் கொடுத்துப் பார்க்கிறதையாவது ஒழுங்காப் பார்க்க முடியுமானு ஆகிப் போச்சு! :(

      Delete