ஆடி மாதம் மாவிளக்குப் போடும் மாதம். இந்த வருடம் சரியாக நாளே அமையாத காரணத்தால் நேற்றுத் தான் எங்க குலதெய்வம் கோயிலுக்குப் போய் மாவிளக்குப் போட்டுட்டு வந்தோம். காலையிலேயே ஆறு மணிக்குக் கிளம்பிட்டோம். கையிலே காஃபியும், சாப்பாடும் எடுத்துக் கொண்டோம். காலை ஆகாரம் நான் சாப்பிடப் போவதில்லை என்பதால் ரங்க்ஸ் தனக்கும் வேண்டாம்னு சொல்லிட்டார். ஆறு மணிக்குக் கிளம்பி சரியாக ஒன்பதரைக்குப் பரவாக்கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். முதலில் பெருமாள் கோயிலில் சஹஸ்ரநாம அர்ச்சனை முடித்துக் கொண்டு பின்னர் மாரியம்மன் கோயிலுக்குப் போனோம். ஒரே கூட்டம். யாருக்கோ வளைகாப்புப் போடுகிறார்கள். ஆகவே கூட்டம் தாங்கவில்லை. சாப்பாடெல்லாம் வந்து இறங்கி இருந்தது. மாவிளக்குப் போட்டு முடித்துக் கோயிலில் இருந்து கிளம்ப பனிரண்டு மணி ஆகி விட்டது. அதன் பின்னர் அங்கிருந்து கருவிலி சென்றோம். மேலே உள்ள பிள்ளையார் கருவிலிக் கோயிலின் பிரகாரத்தில் சுற்றுச் சுவரில் உள்ள கோஷ்ட மூர்த்தங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு! சுவரின் ஒரு மூலையில் தக்ஷிணாமூர்த்திக்கு அருகே இந்தப் பிள்ளையார் இருக்கிறார். மொத்தம் ஓர் அங்குலத்திற்குள் தான் இருப்பார் என எண்ணுகிறேன். இந்தப் பிள்ளையார் நம்ம ரங்க்ஸின் அருமை நண்பர். ஊரில் இருக்கும்போதெல்லாம் இவருக்கு எண்ணெய்க்காப்புச் சார்த்திப் பூக்களால் அலங்கரிப்பாராம். இப்போவும் யாரோ அலங்கரித்திருக்கிறார்கள். அங்கே போகும்போதெல்லாம் இவரைப் பார்க்கத் தவறுவது இல்லை. நேற்றும் பார்த்தோம். கையிலே செல் தான் இருந்தது. பிள்ளையாரை ஒரு படம் எடுத்துக் கொண்டேன். எத்தனை முறை எடுத்திருப்பேன் எனத் தெரியாது! :)
தக்ஷிணாமூர்த்தி! பிள்ளையாருக்கு இடப்பக்கம் உள்ள மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார். முகத்தில் சொல்லவொண்ணா சாந்தம், அமைதி! அழகு. இங்குள்ள அர்த்தநாரீசுவரின் அழகையும் பார்த்த வண்ணம் இருக்கலாம். இன்னொரு தரம் போகையில் காமிரா எடுத்துப் போய்ப் படம் பிடித்து வருகிறேன். வழியெங்கும் பசுமைக்காடாகக் காட்சி அளித்தது. அந்தப் பசுமையைப் பார்க்கப் பார்க்க மனம் ஆனந்தம் அடைந்தது. பரவாக்கரை செல்லும் வழியில் ஓர் வயலில் மாடு வைத்து உழுது கொண்டிருந்தனர். இன்னமும் மாடுகள் ஏர் ஓட்டுவதைப் பார்க்கவும் சந்தோஷமாகவே இருந்தது. சில இடங்களில் நடவு முடிந்து விட்டது. சில இடங்களில் பயிர் நடவுக்குக் காத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பச்சை நிறம்.
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா--நிந்தன் பச்சை நிறம் தோன்றுதய்யே நந்தலாலா!
எல்லோரும் கேட்டுக் கொண்டதன் பேரில் முன்னர் நான் மின் தமிழுக்கு எழுதிய கட்டுரையில் பகிர்ந்த மாவிளக்குப் படம் இங்கேயும் பகிர்கிறேன்.
இங்கே கிடைக்கும் சுட்டியில் முழுக்கட்டுரையும் வாசிக்கலாம்.
பரவசம் எங்களுக்கும் அம்மா...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteஅருமை. இன்று நானும் கூட பாஸுடன் கோவில் போய் வந்தேன். இவ்வளவு நாட்கள் சென்னையில் இருந்தும், பலமுறைத் தாண்டித் தாண்டிச் சென்றும், இதுவரை பார்க்காத சிவா விஷ்ணு கோவில். டி நகர் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ReplyDeleteகோவில் நன்றாயிருந்தது.
இந்த சிவா, விஷ்ணு கோயிலைக் கட்டிய புதிதில் அறுபதுகளில் பார்த்திருந்தால்!!!!!!!!!!!!!! :)
Deleteமாரியம்மன் கோயிலில் படம் எடுக்க வில்லையா? கிராமங்கள் பசுமையாக இருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி! பிள்ளையாரும், தட்சிணாமூர்த்தியும் அழகோ அழகு! நன்றி!
ReplyDeleteமாரியம்மன் கோயிலில் சரியாக நாங்க அபிஷேஹம் ஆரம்பிக்கையில் மின்சாரம் போய் விட்டது. இயற்கையான குத்து விளக்கு ஒளியிலே வழிபாடு நடந்தது. மாவிளக்கும் அம்மன் முன்னிலையில் ஜகஜ்ஜோதியாகக் காட்சி அளித்தது. மனதுக்கு அமைதியும் நிறைவுமாக இருந்தது. ஆகவே படங்கள் எடுத்து அப்போதைய புனிதத்தைக் குலைக்க விரும்ப வில்லை. ஏற்கெனவே ஒரு முறை மாவிளக்குப் படம் போட்டிருக்கேன். ஆனால் இம்முறை மனம் வரவில்லை. ஆகவே எடுக்கவில்லை. அதோடு படங்கள் எடுக்க வேண்டாம் என்றே முடிவு செய்து காமிராவும் எடுத்துப் போகவில்லை. :))))
Deleteஓரங்குல பிள்ளையார் படம் நன்றாகவே வந்திருக்கிறது. .
ReplyDeleteநன்றி ஐயா. திடீர்னு எடுத்த படம்! :)
Deleteஎனக்குக் கூட கிராமப்புறங்களுக்குப் போகும்போது ரொம்பவும் பரவசமாக இருக்கும். ஒருமுறை திருக்கண்ணபுரம் போவதற்கு பேருந்து கிடைக்காமல் மெயின் ரோடிலிருந்து நடந்தே போனோம். இருபுறங்களிலும் பச்சைபசேலென நெற்கதிர்கள். மனதிற்கு எத்தனை சந்தோஷமாக இருந்தது என்றால், இனிமேல் இது போல நடந்துதான் போகவேண்டும் என்று ஒரு வீர சபதம் எடுத்தேன். ஒரே நாளுடன் சபதம் முடிந்துவிட்டது. எனக்கு இதுபோல எங்காவது கோவிலுக்குப் போனாலே மனதிற்கு அமைதி கிடைக்கும்.
ReplyDeleteகேரள கோவில்களில் அகல் விளக்குகளில் பெருமாளை சேவித்ததை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
அதுவும் திருநாகை முகுந்தனை சேவிக்க போனபோது நாங்கள் போனபோது அப்போதுதான் பெரிய பெரிய குத்துவிளக்குகளை ஏற்ற ஆரம்பித்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஒளி பரவப் பரவ மனதிலும் மகிழ்ச்சி பரவ ஆரம்பித்தது. அந்தப் பரவச நிலையிலேயே முகுந்தனை சேவித்தோம். அதேபோல திருவல்லாவிலும்.
உங்கள் கிராமத்து கோவில் சென்ற அனுபவம் நன்று. பசுமை நிறைந்த கிராமங்களைக் காண்பதே மனதிற்கு இன்பம் தரும்.... எங்கள் கிராமத்திற்குச் செல்ல வேண்டும். இந்த வருடம் இன்னும் செல்லவில்லை.
ReplyDelete