எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 28, 2015

வந்தாள் மஹாலக்ஷ்மி, வாமனனையும் அழைத்துக் கொண்டு!



படத்துக்கு நன்றி கூகிளார்

இன்னிக்கு வரலக்ஷ்மி விரதம் எனப்படும் நோன்பு கொண்டாடறதில் பெண்கள் அனைவரும் மும்முரமாய் இருப்பார்கள் என எண்ணுகிறேன். அஷ்ட லக்ஷ்மிகளில் இந்த வரலக்ஷ்மி சேரலைனு நினைக்கிறேன்.  பார்த்தாலே பாவம் தீரும் என்று சொல்லப்படும் இந்த நோன்பை எடுத்துக் கொண்டாட ரொம்பவே ஆசை தான். ஆனால் என் மாமியார் வீட்டில் இந்த நோன்பு கிடையாது. ஆகவே என்னையும் எடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. கொஞ்சம் வருத்தம் தான். பிறந்த வீட்டில் நோன்பு இருந்தால் எடுத்துக்கலாம்னு என் பெரிய மாமியார் (மாமியாரின் ஓரகத்தி) சொன்னாங்க. ஆனாலும் என் மாமியாரோட அனுமதி கிடைக்கலை. ரொம்ப ஆசையா இந்த நோன்பு கொண்டாடக் காத்திருந்தது கடைசியில் வீணாத் தான் போச்சு. ஆனால் என் பிறந்த வீட்டில் நோன்பு முடிந்ததும் ஒவ்வொரு வருஷமும் அப்பா நோன்புச் சரட்டை எனக்குத் தபாலில் அனுப்பி வைப்பார். கட்டிப்பேன். உள்ளூரிலேயே இருக்கும்போது நோன்பன்று அங்கே போய்ப் பூஜையில் கலந்துக்கறதும் உண்டு. அப்போவும் நோன்புச் சரடு என் மாமியார் கட்டிக்க மாட்டாங்க. தயங்குவாங்க. நான் கட்டிப்பேன். :)

அம்மா முதல் நாளில் இருந்தே வேலையை ஆரம்பிப்பார்.  முதல்நாளே மாவெல்லாம் இடித்துத் தேங்காய்ப் பூரணம், எள்ளுப் பூரணம், பச்சரிசியில் அரைச்ச இட்லி மாவு எல்லாம் தயார் ஆகும். இது எல்லாம் செய்து முடித்துவிட்டுத் தான் அம்மா சாப்பிடப் போவார். நாங்க பாட்டுக்குப் பள்ளிக்குப் போயிடுவோம். அம்மா தனியாகவே எல்லாம் செய்து கொள்வார். விபரம் தெரிந்தபிறகு மாவு இடித்துக் கொடுக்க உதவி இருக்கேன். கல்யாணம் ஆகி வந்த பின்னர் தான் கொழுக்கட்டைக்கு மாவை இடித்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டாம். நல்லாத் தண்ணீர் விட்டே அரைச்சு (பெயின்ட் மாதிரி இருக்கணும்) எடுத்துக் கொண்டு மாவு கிளறினால் கட்டியே தட்டாமல் வரும் என்பது தெரியும். மாவு இடித்துக் கிளறுவதில் கொஞ்சம் இல்லை நிறையவே கட்டி தட்டிக்கும். அப்படியும் அம்மா எப்படியோ கட்டிகள் இல்லாமல் கிளறி எடுப்பார். சும்மா வீட்டுக்கு மட்டும் கொழுக்கட்டை செய்யறதில்லை. அப்பாவோட கூட வேலை செய்யும் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இந்தக் கொழுக்கட்டை போகும். ஆகவே நிறையச் செய்யும்படி இருக்கும்.

நோன்பு காலையில் தான் எங்க வீட்டில் செய்வாங்க. ஆனால் இந்த நோன்பு செய்ய வேண்டிய நேரம் மாலை மாடு, கன்றுகள் மேய்ச்சலில் இருந்து திரும்பி வரும் நேரம் ஆரம்பித்துச் செய்யணும் என என் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார். பின்னால் இன்னும் சிலரும் அப்படித் தான் சொல்லி அதை உறுதி செய்தாங்க. இந்த அவசர உலகில் காலையிலேயே அவசரம் அவசரமாக எல்லாம் முடிந்து விடுகிறது. வெள்ளிக்கிழமையன்று பத்தரை மணிக்கு ராகு காலம் ஆரம்பிக்கும் என்பதால் அதற்குள்ளாக அனைவரும் முடிக்கின்றனர். ஆகவே ஒரே கூச்சல், குழப்பம், அவசரம், பதட்டம் எல்லாமும் நிறைந்ததாக மன அமைதி இல்லாமல் செய்ய வேண்டியதாக ஆகி விடுகிறது. இதை அறிய மாட்டேன் என்கிறார்கள். நிதானமாக மாலையில் செய்யலாமே! யார் தடுக்கப் போகிறார்கள்? நோன்பு செய்ய வேண்டிய சரியான நேரம் அதுதான் எனப் பலரும் பலமுறை சொல்லி விட்டார்கள். ஆனாலும் மாலை எவரும் செய்வதில்லை. காலையிலேயே எல்லாவற்றையும் முடித்துவிடுகின்றனர். என்னவோ போங்க! ஆனால் இப்போது எல்லோரும் இந்த நோன்பையும் செய்ய ஆரம்பித்திருப்பது கொஞ்சம் இல்லை நிறையவே மகிழ்ச்சிக்கு உரிய ஒன்று.

திருவோணம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்

அடுத்து இன்று தான் ஓணம் பண்டிகையும் கூட. பள்ளி நாட்களிலோ மற்றும் விபரம் தெரிந்த பின்னரோ கூட இந்தப் பண்டிகை குறித்து அதிகம் தெரியாது. ராஜஸ்தான் போன பின்னர் அங்கே மலையாளத்தவர் கொண்டாடுவதைப் பார்த்ததும் இந்தப் பண்டிகை குறித்துத் தெரிய வந்தது. அப்போவும் அத்தப்பூக் கோலம் எல்லாம் தெரியாது. ஆவணி மாதத் திருவோணம் அன்று பெருமாள் கோயில்களில் திருவிழா என்று மட்டுமே அறிந்திருந்தேன். பூக்கோலம் போடுவது எல்லாம் எண்பதுகளில் அம்பத்தூரில் வீடு கட்டிக் குடி போனப்புறமா எங்க பக்கத்து வீட்டுப் பாலக்காட்டுக்காரங்க வீட்டில் ஓணத்தன்று வாயிலில் பூக்கோலம் போடுவதைப் பார்த்தே தெரிய வந்தது. எங்க வீட்டிலே குடி இருந்த மாமியும் பூக்கோலம் போடுவாங்க. அந்த மாமி எல்லாப் பண்டிகையும் கோலத்திலேயே கொண்டாடிடுவாங்க. ஆனால் இந்த ஓணம் பண்டிகை தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பது சங்கப் பாடல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் இருந்தும், மற்றும் பெரியாழ்வார் திவ்யப் பிரபந்தத்திலும், சம்பந்தர் தேவாரத்திலும் சொல்லிட்டுப் போயிருக்காங்க. சம்பந்தர் மயிலையில் கொண்டாடப்பட்டதுனு எழுதி இருப்பதோடு ஐப்பசி மாதம்னு வேறே குறிப்பிடறார். அதான் ஒண்ணும் புரியலை. ஆனால் இப்போதும் தென் தமிழ்நாட்டு மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிட்டுத் தான் வராங்க.

மதுரைக் காஞ்சியில் ஓணம் கொண்டாடியது குறித்து

கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"

நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார்,

“பரம்பரையாகத் திருமாலுக்கு
தொண்டுசெய்வதையும்
திருவோண நன்னாளில் நரசிம்ம
அவதாரமெடுத்து இரணியனை
அழித்தவனை நம் துன்பங்கள் போகப்
பல்லாண்டு வாழ்த்துவமே
“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்
தாண்டென்று பாடுதமே” - (பெரியாழ்வார்திருமொழி 6 ).

தேவாரத்தில் சம்பந்தர், ஓணம் கபாலீஸ்வரத்தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டதென்று பின்வருமாறு விளக்குகிறார்.

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள். வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுபவர்களுக்குத் திருநாள் வாழ்த்துகள். பேய்ப்படம் பார்த்துட்டு இருக்கேன். அப்புறமா வரேன். 

14 comments:

  1. காலையே செய்யாமல் மாலை பூஜை செய்தால் அதுவரை சாப்பிடாமல் இருக்கணுமே...!!

    இங்கும் பூஜை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து, பத்தரைக்குள் முடித்தாயிற்று!

    ReplyDelete
    Replies
    1. முதல் நாள் மாலையே அம்மனை அழைத்துவிடுவார்கள். அப்போது அம்மனுக்கு நிவேதனம் வெண்பொங்கல், தாளகக் குழம்பு. இதைத் தான் நோன்பு நூற்பவர்களும் சாப்பிடுவார்கள். ஒரு சிலர் அப்பளம், கறிவடாம் பொரிப்பதுண்டு. பின்னர் மறுநாள் காலை அம்மனை அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் அமர வைத்து அலங்காரங்களை முடிப்பார்கள். ஆகாரமாய் எதுவும் எடுத்துக்காமல் நீராகாரமாகச் சாப்பிடுவார்கள். ஒரு சிலர் பட்டினியும் இருப்பது உண்டு. பின்னர் நிவேதனங்கள் எல்லாமும் செய்து முடித்து மாலை மறுபடி குளித்து விட்டுப் பூஜைக்கு உட்காருவாங்க. ஐந்து, ஐந்தரைக்குப் பூஜை ஆரம்பித்தால் ஆறரை ஏழு மணியோடு முடியும். அதன் பின்னரே சாப்பாடு! இம்மாதிரிச் சிலர் பண்ணிப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதைய அவசர உலகில் இதெல்லாம் சரியாய் வராது தான்! :))

      Delete
  2. கீதா! நீங்கள் நினைத்தது போல் அஷ்ட லட்சுமிகளில் வரலக்ஷ்மி இல்லை. ஒன்பதாவது லக்ஷ்மி என்று ஆந்திரர்கள் குறிப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தருவது முக்கியமான பகுதி.. ஓணம் குறித்த பாசுரங்களுக்கு ஒரு பலே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மோகன் ஜி! நன்றி. எங்க பிறந்த வீட்டில் எல்லாம் மறுநாள் சனிக்கிழமை தான் சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை, பாக்குக் கொடுத்துப் பாட்டுப்பாடி அம்மனை அரிசிப் பானைக்குள் வைப்பாங்க. நோன்பன்று வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்குக் கொடுப்பதோடு சரி.

      ஓணம் குறித்த பாசுரங்களும், மதுரைக்காஞ்சி பாடலும், தேவாரமும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே. அங்கே தேடி எடுத்துப் போட்டவை தான். :)

      Delete
  3. துளசி: ஓணம் வாழ்த்துகள் சகோதரி! ஓணம் பற்றி நிறைய கதைகள் நிலவுகின்றன கேரளத்திலும்.

    கீதா: ஹ்ருதயம் நிறைஞ்ச ஓணாம்ஷசங்கள்! நாங்கள் ஓணம் கொண்டாடுவோம்...தமிழ்நாடு, கேரள கலாச்சாரம் கலந்த கலவை ....எங்கள் ஊர்,,நாங்களும். எனவே இங்கு சென்னையில் என் புகுந்த வீடு முழுவதும் கும்பகோணத்துக் காரங்க...அதனால நான் மட்டும் எங்கள் வீட்டில் ஓணம் கொண்டாடிவிடுவேன்..இன்று ஓணம் சத்ய செய்தாச்சு சாப்ட்டாச்சு..பொதுவாக அரிசி அடை அல்லது மைதா அடை/பாலடை என்று சொல்லப்படி அடைப்பிரதமன் செய்வதுண்டு...நான் கோதுமை அடை பிரதமன் செய்தேன்...வீட்டிலேயே கோதுமை அடையும் செய்து .....பாலடைப் பிரதமன் இல்லை...வெல்லம் போட்டு தேங்காய் பால் விட்டு...நன்றாகவே வந்தது.....

    ஓணம் பற்றி பாசுரங்கள் நிறைய சொல்லுகின்றன.....மதுரைக் காஞ்சியிலும் வருவதைக் குறித்து அறிந்ததுண்டு...நீங்கள் நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி..முன்பு இப்போது கேரளம் முன்பு தமிழர் ஆட்சியில்தானே இருந்தது....அவர்களது மொழியில் இப்போது நாம் உபயோகிக்காத தூயதமிழ் சொற்களை கேரளத்தில் வெகு இயல்பாக பேச்சுவழக்கில் பயன்படுத்துகின்றனர்...இப்படி நாம் மூலம் பற்றி ஆராய்ந்து பார்த்தோம் என்றால் எல்லாவற்றிற்கும் ஒன்றுதான் மூலமாக இருக்கும்...என்றெ தோன்றுகின்றது....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி சார்! நன்றி. கேரளத்துக்கதைகள் சிலவற்றைப் பகிரவும். நன்றி.

      கீதா மேடம், விரிவான கருத்துரைக்கு நன்றி. கும்பகோணமா உங்க புக்ககம்! கோதுமை அடைப் பிரதமனும் நல்லாவே இருக்கும். மைதா அதிகம் சேர்ப்பதில்லை. எப்போவானும் ரவா தோசைக்குப்போடத் தான். நீங்கள் சொல்வது போல் எல்லாவற்றிற்கும் மூலம் ஒன்றே.

      Delete
  4. பிரபந்தத்திலே ஓணத்திரு நாள் பற்றிய பாடல ..

    இப்ப தான் படிக்கிறேன்.
    ரொம்ப சந்தோஷம். லே


    இப்ப தான் நானும் ஒரு சாஸ்த்ரிகள் ரோல் எடுத்துண்டு இன்னிக்கு
    வரலக்ஷ்மி பூஜை செஞ்சு வெச்சேன். நோ தக்ஷிணை.

    ஒரு சந்தேஹம் இருக்கு. அந்த சொம்பு லே அரிசியை போட்டு, தேங்காய் வச்சு தேங்காயின் ஒரு பக்கத்திலே வரலக்ஷ்மி படம் வச்சு பூஜை பண்றோம் .
    சாயந்திரம் ஒரு புனர் பூஜையும் செய்யறோம்.
    மறு நாள் காலைலே அந்த சொம்பு
    லே இருக்கிற அரிசியை எடுத்து வழக்கமா சமையலுக்கு உபயோகப்படுத்தலாமா ?
    என் அம்மா என்ன செய்தாள் என்று மறந்து போயிடுத்து.



    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. நீங்க உங்க மனைவிக்கு ஆக்டிங் சாஸ்திரிகளாக இருந்திருக்கீங்க! இதுக்கெல்லாம் தக்ஷிணை நோ தான். நாங்க புனர்பூஜையை அன்றே செய்வதில்லை. மறுநாள் சனிக்கிழமை காலையில் தான் செய்வோம். அன்று மாலை சுமங்கலிகளை அழைத்து அம்மனை வைத்துப் பாடல்களோடு அம்மனை அரிசிப் பானையில் வைப்பாங்க. கலசத்து அரிசியும் அரிசிப்பானையிலேயே கொட்டப்படும். என் மன்னி, தம்பி மனைவி ஆகியோர் இன்றும் இப்படித் தான் செய்து வருகின்றனர்.

      Delete
    2. சுப்பு சார், கீழே வா.தி. உங்களுக்கு பதில் சொல்லி இருக்கார்.

      Delete
  5. சுப்பு சார்! அரிசியில் வைப்பது ஒரு உயிர்ப்பு கொடுக்கத்தான். அதனால் புனர் பூஜை ஆகிவிட்ட பட்சத்தில் அரிசியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ReplyDelete
  6. வரலஷ்மி நோன்பு சிறுவயதில் வீட்டில் கோலாகலமாக இருக்கும். முதலில் தாய்வழி தாத்தா வீட்டில் கொண்டாடுவார்கள் அதில் கலந்து கொண்டிருந்தோம். அப்புறம் அம்மா நோன்பு நூற்க ஆரம்பிக்க இங்கே சொந்தங்கள் கூடி கூதுகலமாக இருந்தது. இரண்டு வருடங்களாக அம்மாவால் முடியாததால் கோவிலில் வைத்து கயிறு கட்டிக் கொண்டார்கள். இந்த வருடம் என் தம்பி இறப்பின்(சித்தப்பா மகன்) காரணமாக பண்டிகை இல்லை! வெறிச்சோடியிருக்கிறது வீடு! பண்டிகைகள் கொண்டாட்டங்கள் உறவினர்கள் என நிறைந்து இருந்த காட்சி கண்முன் நிழலாடுகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் நோன்பு இல்லை என்றாலும் நோன்புக்கு வைத்த முகத்தை நோன்பு கொண்டாடும் வீட்டில் பூஜை செய்யும்போது சேர்த்து வைத்துப் பூஜை செய்து இவங்களும் அங்கே போய்ப் பூஜையில் கலந்து கொண்டு நோன்புச் சரடு கட்டிக் கொள்ள வேண்டும் என்பார்கள். ஒரு வேளை இந்த வாரம் முடியவில்லை எனில் அடுத்த வாரம் நாள் நல்லா இருந்தால் அன்று செய்யலாம்.

      Delete
  7. ஒரு நல்லவனை மகாபலிச் சக்கரவர்த்தியை
    அழிக்க எடுத்த அவதாரமே வாமனாவதாரம் அந்த நல்லவன் ஓணம் திருநாளில் தன் பிரஜைகளைப்பார்க்க வருவதை கோண்டாடும் பண்டிகையே ஓணம்./ திருவோண நன்னாளில் நரசிம்ம
    அவதாரமெடுத்து இரணியனை
    அழித்தவனை / ..........?!

    ReplyDelete
    Replies
    1. மஹாபலிச் சக்கரவர்த்தியை அழிக்கவில்லையே! :) அவனுக்கு மோக்ஷம் அளித்து சுதல லோகத்தில் சிரஞ்சீவிகளில் ஒருவனாக ஆகும் பாக்கியத்தை அன்றோ கொடுத்திருக்கிறார். நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழிக்கவில்லை எனில் அவன் கொடுமைகள் எல்லை மீறிப் போயிருக்கும். பெற்ற மகனையே கொல்ல நினைத்தவன் அல்லவா!!!!!!!!!!!!! தீயவற்றை அழிப்பதே அவதார ரகசியம்.

      Delete