எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 20, 2015

நாகர் கோயிலில் நாங்கள்!

இங்கே

கடைசியாய் மேலுள்ள சுட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டதாக எழுதி இருந்தேன். சரியாக 4 மணிக்கு ஓட்டல் ஊழியர் வந்து ஃப்ளாஸ்கை வாங்கிச் சென்று காஃபி வாங்கி வந்தார். போகும்போதே ஃபில்டர் காஃபியா என்று கேட்டுக் கொண்டு சென்றிருந்தார். காஃபி நன்றாகவே இருந்தது. அன்று எங்கும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுநாள் செல்லலாம் என்றும் முடிவு செய்திருந்தோம். அதன்படி ஓய்வு எடுத்துக் கொண்டு ஐந்தரை மணி போலக் கீழே இறங்கி வந்தோம். ஓட்டலில் லிஃப்ட் இருந்தது. அதோடு இணைய இணைப்பும் இருந்திருக்கிறது. இது காலி செய்கையில் தான் அறிந்தோம். முன்னரே அறிந்திருந்தாலும் நான் கையில் மடிக்கணீனி கொண்டு செல்லாததால் எதுவும் பலன் இல்லை. ஓட்டல் சகலவிதத்திலும் வசதியாகவே இருந்தது. ஏ.சி.யும் நன்கு வேலை செய்தது.முக்கியமாய்க் காற்று வரும் ஜன்னல்கள் இருந்தன.  ச்யாமா என்று பெயர் ஓட்டலுக்கு.

கீழே வந்ததும் மறுநாள் சுற்றிப் பார்க்க வண்டி ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்டோம் அவங்க தொலைபேசிப் பேசிய வண்டிக்காரர்கள் எல்லாம் ஒரு நாள் சுற்றிப் பார்க்கவே வண்டியின் விலையைக் கேட்டனர். பின்னர் நாங்களும் சிறிது நேரம் அவர்கள் கொடுத்த எண்ணில் எல்லாம் பேசிப் பார்த்துவிட்டு ஒன்றும் பலன் இல்லாமல் அங்கிருந்து கிளம்பினோம். சுற்றுலா வண்டி ஓட்டுநர்கள் அனைவரும் அங்குள்ள படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள், கோவளம் கடற்கரை மற்றும் உள்ள சின்னச் சின்னச் சுற்றுலாத் தலங்கள் எல்லாமும் போகணும் என்றும் எல்லாவற்றுக்கும் இரண்டு நாட்கள் ஆகும் என்றும் சொன்னதோடு ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக 3,000 ரூபாய் ஆகும் என்றும் சொன்னார்கள். பணம் இருந்தது என்றாலும் அவங்க கேட்ட தொகை அதிகமாகத் தோன்றியது. மேலும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கோ கோவளம் கடற்கரைக்கோ போகும் எண்ணமும் இல்லை. அதிகம் அலைய முடியாது. முடிந்தால் திற்பரப்பு அருவியைப் பார்க்கலாம் என்று தான் நினைத்தோம். அதுவும் கடைசி விருப்பமாகவே இருந்தது.

ஊட்டி செல்லும் வழியிலும் திருக்கயிலை செல்லும் வழியிலும் பார்க்காத அருவிகளா என்றே தோன்றியது. பின்னர் வந்து முடிவு செய்து கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு பசி வேறு எடுத்ததால் சாப்பிட இடம் தேடினோம். அந்தத் தெருவிலேயே ஒரு ஓட்டல் இருந்தாலும் எல்லோரும் சிபாரிசு செய்தது பேருந்து நிலையம் செல்லும் வழியில் இருந்த விஜய் ஓட்டலும், பேருந்து நிலையத்துக்கு மறுபக்கம் இருந்த ஆரியபவன் ஓட்டலும் தான். ஆரிய பவன் ஓட்டல் செல்ல பேருந்து நிலையத்தின் இன்னொரு வாசலுக்குப் போய் முக்கிய ரஸ்தாவைக் கடந்து எதிர்ப்புறம் செல்ல வேண்டும். சரி இங்கே ஓட்டலில் சும்மா உட்காருவதற்கு நடக்கலாம் என நினைத்துப் பேருந்து நிலையம் வரை நடந்தோம். அங்கிருந்து ஆரிய பவன் செல்லப் பேருந்து நிலையத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும் படிகளை ஏறிக் கடக்க வேண்டும். அல்லது சுரங்கப் பாதையில் செல்ல வேண்டும்.

செல்லும் வழியெங்கும் குப்பைகள். படி ஏறிச் செல்வோம் என்று சென்றால் படி எங்கும் கால் வைக்க முடியாதபடி குப்பை மயம்.  படம் எடுக்கக் கை துறுதுறுத்தது என்றாலும் நம் தமிழ்நாட்டை நாமே தாழ்த்தக் கூடாது என்னும் எண்ணத்தில் அதை அடக்கிக் கொண்டேன். மேலும் நாகர்கோயில் ஊர்க்காரங்க பார்த்தாலும், படிச்சாலும் மனம் வேதனைப்படும். சென்னையில் இல்லாத குப்பையா? மாசு சூழ்ந்த நகரம், சேச்சே, நரகம் என்பதில் முதலிடத்தை அன்றோ சென்னை பெற்றிருக்கிறது! :(  பேருந்து நிலையத்தின் படிகளில் ஏறிச் சாலையின் மறுபக்கம் செல்ல முயற்சித்தோம். முக்கியச் சாலை என்பதோடு ஒருவழிப் போக்குவரத்தும் கூட என எண்ணுகிறேன். வண்டிகள் வந்த வண்ணமிருந்தன. கொஞ்சம் குறைந்த சமயம் நாலைந்து பேராகக் கையைக் காட்டி வண்டிகளை நிறுத்திச் சாலையைக் கடந்து சாலையின் மறுபக்கம் வந்தோம். ஆரிய பவனில் உள்ளே செல்லவும் படிகள் ஏற வேண்டும். ஆரிய பவனுக்குள் சென்று இரவு உணவையும் சேர்த்தே சாப்பிட்டு விடலாம் என முடிவு செய்து உணவு உண்டோம். மணி அப்போதே ஏழு ஆகி இருந்தது.

மறு நாளும் அங்கேயே உணவு எடுத்துக் கொள்ளலாம் என்பது ரங்க்ஸின் ஆவல். ஆனால் எனக்கோ படிகள் ஏற வேண்டியதில் இருந்த கஷ்டமும், சாலையைக் கடக்க வேண்டிய அவஸ்தையுமே முன்னால் நின்றது. ஆகவே மறுநாள் நான் வரவில்லை என்று சொல்லி வேண்டுமானால் அவர் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டு எனக்கு வாங்கி வரட்டும் என்றும் சொல்லி விட்டேன். பின்னர் மறுபடி ஓட்டலுக்கு வந்து சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டுப் படுத்தோம். ஶ்ரீரங்கம் திரும்ப வேண்டி வாங்கிய எங்கள் பயணச் சீட்டு வெள்ளிக் கிழமைக்கு இருந்தது. இன்று செவ்வாய் தான். பார்க்க வேண்டிய இடங்கள் என்ற பட்டியலில் நாகராஜா கோயில், திருவட்டாறு, பத்மநாபபுரம் அரண்மனை, கன்யாகுமரி கடற்கரை முக்கடல் சங்கமிக்கும் இடம், பகவதி அம்மன் கோயில் ஆகியன இருந்தன.

வள்ளுவர் சிலை இருக்கும் குன்றிற்கும் விவேகானந்தா பாறைக்கும் செல்லத் திட்டம் போடவில்லை. விவேகானந்தா பாறைக்கு ஏற்கெனவே போய் வந்தாச்சு என்பதுடன், உள்ளே படிகள் ஏற வேண்டும். வள்ளுவர் சிலைக்கும் மேலே செல்லப் படிகள் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று சொல்லி விட்டேன். ரங்க்ஸுக்கும் மருத்துவர் தடை செய்திருப்பதால் அவரும் ஏற முடியாது. அவ்வளவு உயரம் ஏறி விட்டு இறங்குவதில் பிரச்னை வந்தால் என்ன செய்வது! ஆகவே பார்க்க வேண்டிய இடங்கள் சுருங்கி விட்டன. எல்லாவற்றையும் நாளை ஓர் நாளில் முடித்து விடலாம். பின்னர் இங்கே ஏன் உட்கார்ந்திருக்க வேண்டும்? அநாவசியமாக ஓட்டல் வாடகை 1,200 கொடுக்க வேண்டும் அல்லவா? ஆகவே பயணச் சீட்டை ஒரு நாள் முன்னதாக வாங்கலாமா என்னும் யோசனை ரங்க்ஸுக்கு வந்துவிட்டது.

அவருக்கு இப்படித் தான் திடீர் திடீர்னு பயணத்தை மாற்றும் எண்ணம் வரும். மூன்று முறை யு.எஸ் போனப்போவும் இப்படித் தான் நாங்கள் கிளம்பும் தேதிக்கு முன்னரே பயணத்தை மாற்றிக் கொண்டு கிளம்ப வைத்தார். ஆகவே இது ஒன்றும் புதிதல்ல என்பதால் நான் மறுநாளைக்குக் காத்திருந்தேன். மறுநாள் காலை முதல் நாள் காஃபி வாங்கித் தந்த ஊழியர் இல்லை. வேலை நேரம் முடிந்து வீட்டுக்குப் போய்விட்டார். அநாதைப் பெண்ணை மணந்திருக்கிறாராம். அந்தப் பெண்ணுக்கு இப்போது உறவு என்பதே இவர் தானாம். மனம் நெகிழ்ச்சியாக இருந்தது. இன்னொரு ஊழியர் காஃபி வாங்கித் தந்தார். இது திடீர் காஃபி. ஃபில்டர் காஃபி இல்லை. நெஸ்கஃபே! பரவாயில்லைனு குடிச்சுட்டுக் குளிச்சு முடிச்சுக் கிளம்பினோம். வண்டி தேடுதல் வேட்டையில் இறங்கினோம். பக்கத்து ஓட்டலில் டூரிஸ்ட் கார் கிடைக்கும் என அறிவிப்பு இருக்கவே அங்கு போய் விசாரித்தோம். அங்கே நின்று கொண்டிருந்த அம்பாசடர் காரின் சொந்தக்காரர் கூட்டிச் செல்வார் என்றும் இப்போது வீட்டிற்குப் போயிருப்பதாகவும் தொலைபேசி வரவழைப்பதாகவும் சொன்னார்கள். சரினு அவரை வரச் சொல்லிட்டுக் காலை ஆகாரத்தை விஜய் ஓட்டலிலேயே  முடித்துக் கொண்டோம்.



16 comments:

  1. நான் படித்தஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், இரு நாளுக்கேலென்றால் ஏலாய் ---என்ற பாட்டு தப்போ.? /ஆரிய பவனுக்குள் சென்று இரவு உணவையும் சேர்த்தே சாப்பிட்டு விடலாம் என முடிவு செய்து உணவு உண்டோம்/ இரண்டு மூன்று நாட்களில் தினம் ஓரிரு இடங்கள் என்று போய் வந்திருக்கலாமே. நாங்கள் நாகர் கோவில் போயிருந்தபோது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்குப்போயிருந்தோம் .

    ReplyDelete
    Replies
    1. நானும் படிச்சிருக்கேன் ஐயா! நான் எழுதினதுக்கு இப்படி ஒரு அர்த்தம் என்பதை நீங்கள் எழுதியபின்னரே புரிந்து கொண்டேன். நாங்கள் முதலில் ஓட்டலைப் பார்த்துவிட்டு ஒரு காஃபி மட்டும் குடித்துப் பார்க்கலாம் என்னும் எண்ணத்துடனேயே சென்றோம். இயன்றால் பஜ்ஜி, போண்டா போன்றவை ஒரு ப்ளேட் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கலாம்; நன்றாக இருந்தால் இரவு உணவுக்கு வரலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்போதே மணி ஏழு ஆகிவிட்டபடியாலும், பொதுவாகவே நாங்கள் இரவு உணவு ஏழரைக்குள்ளாக முடித்துக் கொள்வதாலும் பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பதார்த்தங்கள் வேண்டாம் என முடிவு செய்து உணவாகவே (இட்லி, தோசைபோன்றவை) எடுத்துக் கொண்டு சாப்பாட்டை ஒரு வழியாக முடித்துக் கொண்டு வந்தோம், அதைத் தான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். இத்தனை விலாவரியாக எழுதி இருக்கணுமோனு இப்போத் தோணுது! :))))))) இரவு நேரங்களில் ஏழு, ஏழரைக்கப்புறம் எதுவும் சாப்பிடுவது இல்லை. பின்னர் மறுநாள் காலை ஆகாரமோ அல்லது நேரடியாகச் சாப்பாடு என்றால் சாப்பாடோ தான்!

      Delete
  2. இரண்டு முறை போயிருக்கிறேன். இரண்டாவது முறை சென்ற போது எற்பட்ட கறை உயிருள்ளவரை படிந்திருக்கும்.
    அனாதைப் பெண் கதையை ரெண்டு வரிகள் கூட்டியிருக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் இரண்டாம் முறையாகத் தான் சென்றோம். முதல்முறை போனபோது கன்யாகுமரியிலேயே ஓட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். இப்போது நாகர்கோயிலில் தான் தங்கணும்னு முன்கூட்டியே முடிவு எடுத்தோம். அநாதைப் பெண் கதை இல்லை; உண்மை! பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது என்பதை ஊகித்தோம். அதுக்கும் மேல் அவங்க தனிப்பட்ட விஷயம் என்பதால் விலாவரியாகச் சொல்ல இயலவில்லை. :)

      Delete
  3. அட! உங்களுக்குன்னு பாடாவதி ஓட்டல் ஆப்புடுமே? வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தம்பி, மதுரையிலேதான் ஆன்லைனில் ஓட்டலோட ரேட்டிங்கைப் பார்த்துட்டுப் போயிட்டு ஏமாந்தோம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லா இடத்திலேயும் அப்படியேவா இருக்கும்? அநியாயமா இல்லையோ? ஷ்டார் ஓட்டலிலேயே தங்கி இருக்கோமாக்கும்! நம்மளை யாருனு நினைச்சீங்க? ஆமாம், சொல்லிப்புட்டேன்! :)))))

      Delete
  4. சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! இங்கு கூட (சென்னை) கார் வாடகை நாளொன்றுக்கு 2500 முதல் 3000 வரை வாங்குகிறார்கள். டிரைவர் பேட்டா மட்டும் 700 ரூபாயாம். கேட்டால் விலைவாசியை காரணம் காட்டுகின்றார்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கார் வாடகை ஒரு நாளைக்கு 2,500 ரூபாய் அல்லது செல்லும் மைல்கணக்கில் தான் எனத் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதாய்த் தான் தோன்றுகிறது. எங்களுக்கு ஒரு நாள் வேலை இல்லை என்பதால் தான் பேரம் பேசினோம். :) மற்றபடி எப்படியேனும் விலைவாசி ஏறி இருக்கிறது என்பதை நிரூபிக்க நீங்கள் பாடுபடுகிறீர்கள். :)))) நேற்றுக் கூட காஸ் சிலிண்டர் ரீஃபில் வாங்கினோம். சென்ற முறை 657 ரூபாய் இருந்த ரீஃபில் சிலிண்டர் இம்முறை 627 ரூபாய்! பில் சேமித்து வைத்திருக்கிறோம். ஸ்கானர் சரியாக இல்லாததால் ஸ்கான் செய்து போட முடியவில்லை. :)) தற்சமயம் ஏறி இருக்கும் விலைவாசி அதுவும் ஒரே இரவில்!!!!!!!!!!!!!!!!!! உருளை, வெங்காய விலை தான். அதுவும் மஹாராஷ்ட்ரா, குஜராத்தில் அறுவடை ஆனால் குறையலாம் என்கிறார்கள்.

      Delete
  5. நாகர் கோவில் பயணம் படிகளிலேயே நடந்திருக்கிறது. ] நம் ஊர்கள் ஏன் இவ்விதம் கெட்டுப் போயின.
    ஸ்வாமியாவது மாறாமல் அப்படிடயே இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, கோயிலில் எல்லாம் வணிக மயம் தான்! :( ஆக மொத்தம் தமிழ்நாட்டுக் கோயில்களில் புனிதம் என்பது மருந்துக்குக் கூட இல்லை. விதிவிலக்கு சுசீந்திரம் தாணுமாலயப்பெருமாள் கோயில்.

      Delete
  6. இந்த ஊரிலாவது நல்ல தங்குமிடம் கிடைத்ததே... கன்யாகுமரி, விவேகானந்தர் பாறை சென்றிருக்கிறேன். நாகர்கோவிலைப் பயணத்தில் கடந்திருக்கிறேன். என் அப்பா நாகர்கோவிலில் சிலநாட்கள் வேலை பார்த்திருந்தாலும் சென்றதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அது என்ன அப்படிச் சொல்லிட்டீங்க? அநேகமாய்த் தங்குமிடம் நல்லாவே இருந்திருக்கு. அயோத்தியில் அருமையான தங்குமிடம். சித்திரகூடத்தில் சித்திரவதை! :)))) வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் சகஜம் தானே! :)))) கன்யாகுமரி, நாகர்கோயிலுக்கு இது இரண்டாம் முறை. எண்பதுகளிலேயே போயிருக்கோம்.

      Delete
  7. அட எங்க ஊரு...ம்ம்ம் எங்க ஊர் முன்னாடியும் குப்பைதான்...இப்போ ரொம்ப குப்பையாகிவிட்டது. இத்தனைக்கும் கேரள முறைகள் இன்னும் பல விசயங்களின்...திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடுதானே இருந்தது. சவுத் திருவிதாங்கூர் ஹிந்து காலேஜ் நு கல்லூரியே இருக்கு...என்னதான் குப்பையா இருந்தாலும் ஊரு எங்க ஊராச்சே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா பாருங்க போயி 13 வருஷம் ஆச்சு...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்றீங்க? நான் என்னமோ இப்போத் தான் குப்பையா இருக்கோனு நினைச்சுட்டேன். கன்யாகுமரி கொஞ்சம் பரவாயில்லை.

      Delete
  8. குப்பை - இந்தியாவின் பல இடங்களில் இப்படித்தான். மக்களும் மேலும் மேலும் குப்பைகளைத் தெருவில் வீசுவதைத் தவிர்ப்பதில்லை! கொஹிமா நகரில் ஒரு பிரதான சாலை. சாலை ஓரத்தில் ஓர் இடத்தில் “ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே குப்பை போடாதீர்கள்” என எழுதி வைத்திருந்தார்கள் - அன்று தான் மிக அதிகமான குப்பைகளை போடுவதைப் பார்க்க முடிந்தது! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதே போல் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்னும் அறிவிப்புப் போட்டிருந்தால் கட்டாயமாய் அங்கே வாகனங்கள் நின்று கொண்டிருக்கும். பேருந்துகள் நிறுத்துமிடத்தில் அவை நிற்காது. இங்கே நிறுத்தக் கூடாது என்று போட்டிருந்தால் அங்கே நின்றுவிட்டுச் செல்லும். :) இதை நாங்கள் பல முறை கவனித்திருக்கிறோம்.

      Delete