எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 24, 2015

நாகராஜா வந்த கதை!

நாக வழிபாட்டுக்காகக் கோயில்கள் பல இருந்தாலும் நாகர்கோயிலின் நாகராஜா கோயிலே பழமையானதும், முக்கியமானதுமாய்க் கருதப்படுகிறது. இந்தக் கோயிலை வைத்தே இந்த ஊரின் பெயர் அமைந்துள்ளது.  மக்கள் இவ்வுலகப் பற்றின்றி எதிலும் ஒட்டாமல் வாழ வேண்டும் என்பதை நாகங்கள் உணர்த்துவதாக ஆன்மிகப் பெரியோர் சொல்லுவார்கள். எங்கே இருந்தாலும் அந்த இடத்தின் தன்மை நாகத்திடம் ஒட்டாது.  அதே போல் நாம் இவ்வுலக வாழ்க்கையை வாழ்ந்தாலும் அதில் ஒட்டாமல் பற்றற்ற தன்மையுடன் வாழ வேண்டும் என்பதே முக்கியக் கருத்து.

இந்த ஊரில் இந்தக் கோயில் தோன்றியதைக் குறித்துச் சொல்லப்படும் பரம்பரைக் கதையானது என்னவெனில்!  ஒரு வயலில் நெற்கதிர்களை அறுவடை செய்து கொண்டிருந்தாள் ஒரு பெண்! அப்போது ஒரு கதிரில் இருந்து மட்டும் ரத்தம் பீறிடவே பயந்த அந்தப் பெண் ஊருக்குள் சென்று அனைவரிடமும் இந்தச் செய்தியைக் கூறவே அனைவரும் ஓடோடி வந்து பார்த்தனர். நெற்கதிருக்குக் கீழே நாகராஜா வடிவம் தெரிந்தது. ஆகவே அந்த வயலிலேயே நாகராஜா வடிவத்தைச் சுற்றியும் குடிசை வேய்ந்தனர். ஓலையாலேயே கூரையும் போட்டனர். சிறிய சந்நிதியை அமைத்தனர். ஊர் மக்கள் ஒன்று கூடி வழிபட்டு வந்தனர்.

அப்போது தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட அரசர் மார்த்தாண்ட வர்மா இங்கு வந்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். ஆகவே கோயிலை விரிவு படுத்திக் கட்டிச் சந்நிதியையும் பெரிதாக்கிக் கட்டிக் கொடுத்தார். ஆனால் கூரையை மட்டும் மாற்ற முடியவில்லை. ஓலைக்கூரையே இருக்கட்டும் என்று உத்தரவு வந்தது. ஆகவே கூரை மட்டும் ஓலையில் தான். இதை இந்தக் கோயிலின் அர்ச்சகர்களே ஆடி மாதத்தில் பிரித்து மீண்டும் கட்டுகின்றனர். மூலஸ்தானத்தில் நாகராஜர் ஸ்வயம்பு மூர்த்தி! ஐந்து தலைகளுடன் காணப்படுகிறார். இங்கு துவாரபாலகர்களாக தர்நேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் காணப்படுகின்றனர். சந்நிதிக்கு நேர் எதிரிலுள்ள தூணில் நாக கன்னி காணப்படுகிறாள். இங்கே இப்போதும் நாகங்கள் வசிப்பதாகவும், அவையே இந்தக் கோயிலைப் பாதுகாத்து வருவதாகவும் ஐதீகம்.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு நாகராஜாவுக்குப் பால் அபிஷேஹம் செய்வித்து வழிபடுகின்றனர். தினம் காலை பத்து மணி அளவில் பாலபிஷேஹம் நடைபெறும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால் பாயசம் செய்து நிவேதனம் செய்தும், நாகப் பிரதிஷ்டை செய்தும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். ஶ்ரீராமனின் தம்பியான லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால் லக்ஷ்மணனின் நக்ஷத்திரம் ஆன ஆயில்யத்தன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.  மூலஸ்தானம் மணல் திட்டாக இருப்பதாகச் சொல்கின்றனர்.  வயல் இருந்த இடம் என்பதால் எந்நேரமும் நீர் ஊறிக் கொண்டிருக்கும். இங்குள்ள இந்த ஈர மணலையே பிரசாதமாகவும் தருகின்றனர். இந்த மணல் உத்தராயணத்தில் வெண்ணிறமாகவும், தக்ஷிணாயனத்தில் கருப்பு நிறமாகவும் காணப்படுகிறது. இதன் காரணம் எவருக்கும் தெரியவில்லை. இது ஓர் அதிசயமாகவும் கூறப்படுகிறது.

ராகு வழிபாட்டிற்கு உகந்த கிழமை ஞாயிறு என்பதால் அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் பல்லாண்டுகள் இந்தப் பிரதேசம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததால் கேரளாவின் ஆண்டுத் தொடக்கமான ஆவணி மாதமும் இங்கே மிக முக்கியம். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளும் சிறப்பாக வழிபாடுகள் நடைபெறும். இக்கோயில் கட்டுமான அமைப்பும் கேரளப் பாணியிலேயே காணப்படுகிறது என்பதோடு வழிபாடுகளும் கேரள முறைப்படியே நடக்கிறது. இங்கே மூலவர் சந்நிதிக்கு எதிரில் கொடிமரம் கிடையாது. மாறாகப் பக்கத்தில் உள்ள அனந்த கிருஷ்ணர் சந்நிதியிலேயே கொடிமரம் காணப்படுகிறது



நாகராஜா கோயிலின் வெளியே



20 comments:

  1. அருமையான பகிர்வு கீதா. கனவில் நாகம் வந்தால் அம்மா இந்தக் கோவிலுக்குப் பணம் அனுப்பிவிடுவார்.
    இந்தக் கோவிலும் சங்கரன் கோவிலும் அம்மாவின் நித்திய லிஸ்டில் இருக்கும். நல்ல விவரங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, சங்கரன் கோயிலும் இந்தக் கோயிலும் பரமக்குடி நயினார் கோயிலும் நாக வழிபாட்டில் முக்கியமானவை என்பார்கள்.

      Delete
  2. இதுவரை அறியாத தகவல்.

    உள்ளே படம் எடுக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்களா? கேமிராப் படத்தைச் சொல்கிறேன்!

    :)))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், எல்லாக் கோயில்களிலும் உள்ளது தான் என்றாலும் இந்தப் பக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கின்றனர். :) ஆகவே யாருமே படம் எடுக்கவில்லை. ஹிஹிஹி, பாம்பாரும் தான்.

      Delete
  3. இத்தகைய கோர்வையான அதீதமற்ற இடுகைகளுக்கு நல்வரவு ஆசிகள்.
    இன்னம்பூரான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா, நான் எழுத ஆரம்பிக்கையிலேயே எடுத்துக் கொண்ட ஓர் உறுதி தான் அதீதமாக இருக்கக் கூடாது! அதிகம் வர்ணனைகள் மற்றும் அலங்காரப் பேச்சுக்களைக் கொடுத்து எழுதுவது என்பதெல்லாம் இருக்கக் கூடாது என்பதே! கூடியவரை கடைப்பிடிக்கிறேன். அதைக் கண்டறிந்து பாராட்டியமைக்கு நன்றி.

      Delete
  4. நாகர் கோயிலின் சிறப்பு அறிந்தேன்! நன்றி!

    ReplyDelete
  5. நாகர் கோயிலின் சிறப்பு அறிந்தேன்! நன்றி!

    ReplyDelete
  6. நாகராஜா கோவில் பற்றிய ஸ்தல புராணம் பற்றி அறிந்து கொண்டேன். அருமையான பகிர்வு மேடம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜலக்ஷ்மி, நீண்டநாட்கள் கழித்து வந்தமைக்கும் கருத்துத் தெரிவித்தமைக்கும் நன்றி.

      Delete
  7. எப்படியெல்லாம் கதை விடுறாங்க! நெற்கதிரில் ரத்தம் - சுவாரசியம். ரத்தத்துக்கு பதிலா பாலோ மோரோ தண்ணியோ வந்திருந்தாலும் கோவில் கட்டியிருப்பாங்கனே தோணுது. பெண் அவசரத்திலோ பயத்திலோ கையை வெட்டிக்கொண்டிருக்கலாம். த்ர்ஷ்யம் படத்துல வர மாதிரி ஏதாவதும் நடந்திருக்கலாம். ஆக மொத்தம் கோவில் வரவு.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை, த்ருஷ்யம் படம் நான் பார்க்கலை! அது என்னமோ அந்தப் படம் போடுற சானல்கள் எதுவுமே இங்கே தெரியாத சானல்களாக இருந்துவிடுகிறது! பார்த்துட்டுச் சொல்றேன். :)))))

      Delete
    2. ஒரு முறை பார்க்கலாம். இயற்கையா எப்படி நடிக்கறதுனு தமிழ் நடிகர்கள் எப்பக் கத்துக்குவாங்களோ?! மலையாளப் படத்துல அடிவாங்குறது கூட இயற்கையா தோணுது. நிஜமாவே அடிக்கச் சொல்லுவாங்களோ தெரியலே. கொஞ்சம் நீஈஈளமான படம். கண்டிப்பா ஒரு தரம் பார்க்கலாம்.

      Delete
    3. பார்க்கணும்! பாபநாசம் அதே தானே, பார்த்தீங்களா? எல்லோரும் கமலை ஆஹா, ஓஹோ எனப் புகழ்கிறார்களே! :)

      Delete
  8. சிந்திக்கவேண்டிய கருத்து

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. வரோம் ஐயா! புதிய வலைப்பூவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

      Delete
  9. இந்தக் கதைகளை நம்புகிறேனோ இல்லையோ சுவாரசியத்துக்காகப் படிப்பேன் பொதுவாக கேரளத்தில் நாகர் வழிபாடுகள் அதிகம் ஒவ்வொரு பெரிய தோட்டத்திலும் ஒரு சர்ப்பக் காவு இருக்கும். நாகர் கோவில்களில் கேரளாவில் இருக்கும் ‘மன்னார்காடு ‘பிரசித்தி பெற்றது.

    ReplyDelete
    Replies
    1. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திராவிலும் நாகர் வழிபாடுகள் உண்டு. சர்ப்பக்காவு எனத் தனியாகக் கிடையாது தமிழ்நாட்டில். மற்றபடி கோயில்களில் எல்லாம் புற்றும் அதைச் சார்ந்த கதைகளும் உண்டு.

      Delete
  10. நாகர் கோயில் போயுள்ளேன். மீண்டும் தரிசித்த உணர்வு. நன்றி. அன்புடன்

    ReplyDelete