எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 17, 2018

நவராத்திரியில் ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 9

அம்ருதேஸ்வரியான அம்பிகை தன் பார்வை ஒன்றாலேயே அனைத்து விஷங்களையும் நம்மிடமிருந்து போக்குகிறாள்.

“ஸுமேரு –மத்யஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா!



ஸ்ரீசக்ர நாயகியான அம்பிகையின் சிந்தாமணி க்ருஹத்தைச் சுற்றி இருக்கும் அம்ருத வாவியிலே மணிமயமான படகிலே இருந்துகொண்டு அம்ருதேஸ்வரி பக்தர்களைக் கரை சேர்க்கிறாள். பக்தர்களைக் கரை சேர்ப்பதாலேயே இவளைத் தாரா என்றும் அழைப்பார்கள். மின்னல் கொடி போலவே சூக்ஷ்மமான ஒளிமயமான ரூபம் உடைய அம்பிகை, சூரியன், சந்திரன், அக்னி இவர்கள் வடிவங்களில் ஒளிமயமாய்ப் பிரகாசிக்கிறாள். நம் மூலாதாரத்தில் இருந்து படிப்படியாய் மேலேறி வரும் சக்தியானவள் சஹஸ்ராரச் சக்கரத்தில் நிலைபெறுகிறாள். ஸஹஸ்ரதளத்தில் தாமரைக்காட்டில் நிலை பெறும் இவள் ஒருத்தியே அனைத்துமாவாள் என்பதை லலிதா சஹஸ்ரநாமம் கீழ்க்கண்டவாறு கூறும்.

ஸஹஸ்ரதள-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா ஸர்வாயுத-தரா சுக்ல-ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ!!

சஹஸ்ரதளங்களுள்ள தாமரையில் அனைத்து வர்ணங்களோடுகூடிய சக்திகளுடன், சகலவிதமான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு அநேக முகங்களோடும் யாகினீ என்ற பெயரோடு காட்சி அளிக்கிறாள். இதை பட்டர்,
“அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோ டிணங்கேன்
எனதுன தென்றிருப்பார்சிலர் யாவரோடும் பிணங்கேன் 
அறிவொன்றிலேன் என் கண் நீ வைத்த பேரளியே!” 

என்று தேவிக்கு தேவ மாதர்கள் பரிவார சக்திகளாக இருத்தலைக் குறிப்பிடுகிறார். அழகுத் தெய்வமான அம்பிகையின் காந்தி பொருந்திய முகத்தின் ஒளியானது நம் உள்ளத்து இருட்டைப் போக்கும் வல்லமை உடையது. அவளுடைய கரிய கேசத்தின் கருமை அவளைத் தியானிக்கு அடியவர்களின் மன இருளைப் போக்கி உள்ளொளியை வளர்க்கும். அவள் கூந்தலின் இயல்பான மணத்தை லலிதா சஹஸ்ரநாமம், “சம்பகாசோக-புந்நாக-செளகந்திக-லஸத்கசா!” என்கிறது. சம்பக மலர்கள், அசோக மலர்கள், புந்நாகம்(புன்னை) மலர்களின் வாசத்தைக் காட்டிலும் மணம் அதிகமாய் உள்ள கரிய கேசத்தை உடையவள் என்பது பொருள்படும். அந்தக் கேசத்தை இரண்டாய்ப் பிரிக்கும் வகிட்டை “ஸீமந்தம்” என்று சொல்வார்கள். இதையே லலிதா சஹஸ்ரநாமம், “ஸ்ருதி-ஸீமந்த –ஸிந்தூரீ” எனக் கூறும். நெற்றியில் இருந்து வகிடு ஆரம்பிக்கும் இடத்தை ஸீமந்தம் என்று சொல்வதோடு, சுமங்கலிகள் அங்கே குங்குமம் இட்டுக்கொள்வதும் வழக்கம். நெற்றியில் நடுவே பொட்டில்லாவிடிலும், இந்த ஸீமந்தம் எனப்படும் வகிட்டின் உச்சியில் சிந்தூரம், அல்லது குங்குமம் வைத்துக்கொள்வது கட்டாயமாய் அநுசரிக்கப் படும். இந்த உச்சித் திலகத்தை வைத்தே பட்டர் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார்.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயம் என
விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழித்துணையே!”

என்கிறார். உதிக்கின்ற செங்கதிரைப் போன்று உச்சித் திலகத்தின் சிவந்த நிறம் காணப்படுகிறது என்று கூறுகிறார். சூரியன் உதித்துச் சிறிது நேரம் ஆகிவிட்டால் சூரியனை வெறும் கண்ணால் காணமுடியாது. அதே சமயம் உதய சூரியனைக் கண்ணால் நன்றாய்ப் பார்க்க முடியும். ஆகையால் உதிக்கின்ற சூரியன் என்பது இங்கே அதையும் சுட்டும். அம்பிகையை மனமாரத் தியானித்தால் அவளைக் கண்ணாரக் காண முடியும். உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்பது மெய்ஞ்ஞானம் பெற்ற ஞாநிகள் மதிக்கின்ற மாணிக்கம் போன்றவளே என்று வரும். மாதுளம்போது என்பது, அம்பிகையின் மாதுளை நிறத்தைக் குறிக்கும். “தாடிமீ குஸுமப்ரபா” என்று லலிதா சஹஸ்ரநாமம் இதைக் கூறும். “மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி” என்பது இங்கே தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் துதிக்கின்ற மின்னற்கொடியான அம்பிகை என்று பொருள்படும். இத்தனை பெருமை வாய்ந்த லலிதாம்பிகையுடன் பண்டாஸுரன் போருக்கு வந்திருக்கிறான்.

பண்டாஸுரன் வது சக்தியின் சேனைகளோடு தன் சேனைகளையும் மோத விட்டான். சக்திகள் கோபத்துடன் அக்னிக்கோட்டைக்கு வெளியில் வந்து சண்டை போட்டனர். ராஜராஜேஸ்வரியான லலிதாம்பிகை பண்டாஸுரனைக் கண்டு இவனை அழிக்கவேண்டியது நாமே என உறுதி பூண்டாள்.

“அக்கினிக்கோட்டைக்கு வெளியில் வந்தாள்-ஸ்ரீ
சக்கரத்தில் அபசகுனங்கண்டாள்
ஒப்பற்ற அஸுராள் தம்பட்ட முரசுகள்
உக்கிரமாய்க் கொம்புகள் ஊதிக்கொண்டு
சக்திதேவிகளை அஸுரர்கள் எல்லோரும்
சண்டை பிடித்தடிக்கத் துவங்கினார்கள்
சக்தி தேவியர்கள் அப்போ அஸுர சேனைகளை
ஸம்ஹரிக்கின்றார்கள்-சோபனம் சோபனம்

அஸுர சேனைகளை சக்திதேவிகள் சுற்றிப் பிடித்திழுத்துக் கத்தியாலே குத்தியும், ஈட்டியாலே குத்தியும், கொன்றழிக்கின்றனர். ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த ஆற்றின் இருபக்கமும் சாய்ந்து கிடக்கும் அசுரர்களின் தலைகளும், தேகங்களும் விருட்சங்களைப் போல் காட்சி அளித்தனவாம்.

யுத்தபூமிதனில் ரத்தப் பிரவாஹம்
ஓடுவதைக் கண்டு தேவரெல்லாம்
சக்திசேனையினால் அத்தனை அஸுராளும்
ஸம்ஹரிக்கப்பட்டுக் கிடப்பதையும்
அத்தனை யானை குதிரை சேனைகளெல்லாம்
ஆமை போல் மிதக்க ரத்த நதியில்
சித்தம் மகிழ்ந்து பாரிஜாதப் புஷ்பங்கள்
தேவிக்கு சொரிந்திட்டார்- சோபனம் சோபனம்

தேவர்களுஞ் சொர்ண புஷ்பமாரி சொரிந்து
திவ்விய சகுனங்களைக் காட்டினார்கள்
கோபத்துடனே பண்டாஸுரன் விழிசிவக்கவே
கொடூரமாய் உருட்டி விழித்துக்கொண்டு
தன்சேனை அஸுராளுக் கபஜயத்தைக் கண்டு
தாய் லலிதா தேவியை எதிர்த்தான்
அஞ்சாமல் தேவியும் பண்டாஸுரனைப் பார்த்து
அதிகக் கோபங் கொண்டாள்-சோபனம் சோபனம்

பண்டாஸுரன் தன் மாயையைக் காட்டி அம்பிகையை பயமுறுத்தப் பார்க்கிறான். மாயா சக்திகள் அனைத்துக்கும் தலைவியான அவளை எந்த மாயை பயமுறுத்தும். மாயையினால் அவன் இருட்டைக் கொண்டுவர, அம்பிகை சூர்யாஸ்திரத்தின் மூலம் அந்தக் காரிருட்டைப் போக்கினாள். குருடாஸ்திரம் விட்டு அம்பிகையைக் குருடாக்க நினைக்க, நேத்ராஸ்திரத்தால் அதை வென்றாள் அம்பிகை. வாயு அஸ்திரத்தைப் பண்டாஸுரன் போட, அம்பிகையோ வருணாஸ்திரத்தால் அதை முறியடித்தாள். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான, கோடிக்கணக்கான வியாதிக்கிருமிகளை அனுப்ப, அவற்றைத் தன்வந்திரியான அச்சுதாநந்த கோவிந்த நாமத்ரய அஸ்திரத்தால் வென்றாள் பகவதி. அந்தகாஸ்திரத்தை அனுப்ப, ம்ருத்யுஞ்சயனால் அது வெல்லப் பட்டது. பார்த்தான் பண்டாஸுரன்.

மந்திரத்தால் சும்ப நிசும்பன் சண்டமுண்டன்
மஹிஷாஸுரனையவன் அனுப்பி வைத்தான்
அனுப்பி வைத்தான் அதைக்கண்டு மஹேச்வரி
அட்டஹாஸம் செய்தாளதிலிருந்து
அம்மனட்டஹாஸத்தால் துர்க்காதேவி யுண்டாகி
அஸுராளை ஸம்ஹரித்தாள் –சோபனம் சோபனம்



முன்னே வேதங்களைத் திருடின சோமுகன்
முதலான அஸுராளை அனுப்பி வைத்தான்
தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத்
தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை              
உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து
உண்டாகிவந்து மச்சமூர்த்தியும்
வதைத்தந்த அஸுராளெல்லாரையும்
ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.


சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன்
சக்திசேனைகளை முழுகடிக்க
நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது
நீட்டி ஆள்காட்டி வரல்தனையும்
குதித்தாருடனே யதிலே யிருந்து
கூர்மாவதார மஹாவிஷ்ணுவும்
கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த
கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.


இரணியாக்ஷனை அதிகோபத்துடனே
இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ
வலக்கை நடுவிரலில் இருந்து
பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம்
சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார்
வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி
வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம்

இவ்வுலகின் அக்ஞான இருளைப் போக்கும் ஒளியான அம்பிகையோடு சேர்ந்து ஐக்கியமான சிவனும் சேர்ந்த சச்சிதாநந்த ஸ்வரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு உலகின் மற்றப் புற இன்பங்களின் ஆநந்தங்கள் மங்கியே தெரியும். சிவதம்பதிகளின் ஜீவாதார ஒளியைத் தரிசித்தவர்களுக்கு வேறு பேறு வேண்டியதில்லை. பக்தர்களின் மனமாகிய சாகரத்தில் மலரும் ஆநந்தமயமான ஞாநத்தாமரையின் மகரந்த வாசனைகளை அனுபவிக்கும் இரு அழகான ஹம்ஸங்களாக ஈசனும், அம்பிகையும் குறிப்பிடப் படுகின்றனர். ஹம் என்பது சிவனையும், “ஸ” என்பது சக்தியையும் குறிக்கும். இவர்களின் சம்பாஷணைகளாகப் பதினெட்டு வித்தைகளும் குறிப்பிடப் படுகின்றன. அவை வேதங்கள் நான்கு, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிடம் போன்றவை ஆறு, மீமாம்ஸம், நியாயம், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் என நான்கு, மருத்துவ வேதமான ஆயுர்வேதம், ஆயுதப் பயிற்சிகளைக் குறிக்கும் தனுர்வேதம், சங்கீதம் போன்ற கலைகளுக்குச் சொந்தமான காந்தர்வ வேதம், மற்றும் பொதுவான நீதிகளைக்குறிக்கும் நீதி சாஸ்திரம் போன்றவை ஆகும். நம் மனதுக்குள் இவ்வாறு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அம்பிகையின் ரூபத்தைத் தியானிப்பவர்களுக்கு சகல பாவங்களும் புண்ணியமாக மாறிவிடும்.

இதையே அபிராமி பட்டர்,

தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.”

என்கிறார். அபிராமியின் கடைக்கண்களின் கடாக்ஷத்தால் அவளை வழிபடும் அன்பர்களுக்கு எல்லாவகையான ஐஸ்வரியங்களும் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேல் தளராத மனம், தெய்வீக அழகு, வஞ்சம் இல்லாமனம் என அனைத்தையும் கொடுக்கும். லலிதா சஹஸ்ரநாமமோ, அம்பிகையை அனைத்துக்கலைகளுக்கும் தலைவி என அழைக்கிறது. “சதுஷ்ஷஷ்டி கலாமயீ” எனவும், “கலாவதீ” எனவும் கூறுகிறது. கலா என்பது மயிலின் கலாபத்துக்கும் ஒரு பெயராகும். ஆகவே அப்படிப் பார்த்தாலும் சகலகலாமயிலான அம்பிகைக்குப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் அம்பிகையின் கடைக்கண்களின் மூன்று விதமான ரேகைகள் திரிவேணி சங்கமத்தை நினைவூட்டுவதாய்க் கூறுவார்கள்.

சூரிய புத்திரியும் கறுப்பு வண்ணத்தவளும் ஆன யமுனை, வெளுப்பான கங்கை, சிவந்த நிறமுள்ள சோனை போன்ற மூன்று நதிகளின் சங்கமத்தை நினைவூட்டும் விதமாய் அம்பிகையின் கண்களின் ரேகைகள் காட்சி அளிக்கின்றன். மேலும் இவை மும்மூர்த்திகளையும் நினைவூட்டுகிறது. ரஜோ குணமுள்ள சிருஷ்டிகர்த்தா பிரம்மாவையும், ஸத்வ குணம் நிறைந்த ஸ்திதிகர்த்தா விஷ்ணுவையும், தமோ குணம் நிறைந்த ஸம்ஹார கர்த்தா ருத்திரரையும் நினைவூட்டுகிறது. இப்போ பண்டாஸுரன் என்னவானான் என்று பார்ப்போம்.

அடுத்த அவதாரம் நரசிம்ஹ அவதாரம்.



“இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம்
இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான்
பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர
விலையசைத்தாள் அதிலிருந்து
அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து
அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார்
நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி
நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன்.



மஹாபலி முதலான அஸுரசேனைகளை
வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன்
மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச்
சுழட்டியே உதறினாள் அதிலிருந்து
வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய்
மஹாபலி அஸுரனையும் ஜயித்து
மஹாபலியை பாதாளத்தில் தள்ளின
வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது. 



கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும்
அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை
பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு
புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல
பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப்
பரசுராமருக்குச் சோபனம், சோபனம். 

மனிதரில் பல பரிணாமங்கள், பலவிதமான மனிதர்கள். முதலில் வந்ததோ குட்டையான மனிதன். அடுத்து வந்ததோ தன் கோபத்தை அடக்க முடியாத மனிதன். இப்போ வரப் போவதோ பூரணமான ஒரு மனிதன். மனிதருள் மாணிக்கம். மர்யாதா புருஷோத்தம் என அன்போடு அழைக்கப் படுபவன். நாளை பார்ப்போமா??


இன்றைய தினம் கடைசி நாள். ஆகவே அம்பிகை சித்தாத்ரியாக வழிபடப்படுவாள். வேண்டியதை நிறைவேற்றித் தரும் அன்னை இவள். பத்து வயதுப் பெண் குழந்தையை சுபத்ராவாக வழிபட வேண்டும். சும்ப, நிசும்பர்களை சம்ஹரித்த தினமான இன்றைய தினம் அன்னையைக் காமேஸ்வரியாகவும் வழிபடுவார்கள். அனைத்து சித்திகளையும் அள்ளித் தரும் இவளைக் குறித்து முன்பே பார்த்தோம்.

எல்லாமும் ஒரு மகாசக்தியிலிருந்தே தோன்றியது என்பதை இவள் தன்னை வழிபடுபவர்களுக்குப் புரிய வைப்பாள். இவ்வுலகத்தின் ஆசாபாசங்களைத் துச்சமாகக் கருதும் மனோநிலை ஏற்படும். பேரானந்தம் எனப்படும் உணர்வு அவனுக்கு எளிதில் சித்திக்கும், இன்றைய தினம்  அம்பிகையை வெண்பட்டாடை உடுத்திய சரஸ்வதியாகவும் அலங்கரிக்கலாம். இன்றைய தினம் சரஸ்வதிக்கே முக்கிய வழிபாடு. என்றாலும் தாமரை மலர் மீது நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் சித்தாத்ரி தேவியையும் வட மாநிலங்களில் வழிபடுவார்கள். சரஸ்வதி பிரம்மாவின் மனைவி எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இவளும் ஆதி பராசக்தியின் ஓர் அங்கமே ஆவாள். சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகிய பெயர்களிலும் வழிபடப்படுகின்றாள். சரஸ்வதி ஸூக்தம் இவளையே உலகின் ஆதி காரணி என்று சொல்கிறது. சக்தி தாசர்களின் தாரா வழிபாட்டில் வழிபடப்படும் சரஸ்வதியின் எட்டு வடிவங்கள் வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியோர்கள் ஆவார்கள்.  கட சரஸ்வதியை தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை சாலிவாகன மன்னனும் சியாமளா தேவியைக் காளிதாசனும் வழிபட்டதாக சரஸ்வதி மகாத்மியம் கூறுகிறது.

நதியாக ஓடி அந்தர்யாமியாகக் காட்சி கொடுப்பவளும் இவளே ஆவாள். சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள். கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள்.

இன்றைய தினம் பச்சைக்கற்பூரம் போன்ற வாசனாதி திரவியங்களால் ஆயுதங்களைக் கோலமாக வரையலாம். மருக்கொழுந்து, துளசி, வெண்ணிற மலர்களான மல்லிகை போன்றவை அன்னையின் வழிபாட்டுக்கு ஏற்றது.  இன்றைய தினம் அனைத்து சித்திகளையும் பெறுவதால் காலை அக்கார அடிசில்,  உளுந்து வடை, எள் உருண்டை, அப்பம் அல்லது அதிரசம் போன்றவையும் மாலைக் கறுப்புக் கொண்டைக்கடலை, வெல்லம் சேர்த்த மாவு உருண்டை போன்றவையும் நிவேதனம் செய்ய ஏற்றவை. ஒரு சிலர் இன்றைய தினம் புட்டு நிவேதனம் செய்வார்கள். கடலைப்பருப்புச் சுண்டலும் ஏற்றது!

5 comments:

  1. அருமை (நான் நிவேதனங்கள் லிஸ்டைச் சொல்லலை). இடுகையும் அதனைக் கோர்க்கப் பயன்பட்ட பாடல்களையும் சொன்னேன்.

    எனதுன தென்றிருப்பார்சிலர் யாவரோடும் பிணங்கேன் - இது அருமையான அர்த்தம் உள்ள வரி. எனக்கு என்று இருப்பது எல்லாமே நீ கொடுத்தவை, அவை உன்னுடையவை என்று அம்பாளை மனதில் யார் நினைத்திருக்கிறார்களோ அவர்களிடம் நான் பிணக்குக் கொள்ளமாட்டேன், அவர்களோடு நெருங்கியிருப்பேன் என்ற அர்த்தம் வரும்.

    ReplyDelete
  2. ஓம் சுபிட்சம் அளிக்கும் மகாலட்சுமியே சரணம்
    ஓம் பொங்க்கி வரும் சக்தி தரும் மகேஸ்வரியே சரணம்
    ஓம் எதிலும் வெற்றி அளிக்கும் மகாகாளியே சரணம்
    ஓம் சர்வஞானம் அளிக்கும் மகா சரஸ்வதியே சரணம்.

    சரஸ் என்னும் பெயருக்கேத் தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள்.//
    தடையில்லாமல் ஞான ஒளியை தரவேண்டும் சரஸ்வதி மாதா.

    சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துகளோடு தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
  4. >>> சரஸ் என்னும் பெயருக்கே தடையில்லாமல் பிரகாசிக்கும் ஒளி என்று பொருள்..

    கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தி
    இவளிடமே உள்ளதால் சரஸ்வதி என்ற பெயர் பெற்றாள்.. <<<

    என்ன புண்ணியம் செய்தனம் மனமே!..

    ஸ்ரீ சரஸ்வதி தேவியின் நல்லருளால்
    எங்கும் நலம் ஓங்கட்டும்!..

    சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. விழா நாள் தொடங்கி இன்றுவரை கொலுகொலு சுண்டல் என்று சொல்லிக்கொண்டே உங்கள் பதிவுகளோடு வந்த மன நிறைவு ஏற்பட்டது. அரிய பல செய்திகளை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete