எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 13, 2019

காவிரிக்குச் சீர் கொடுக்கும் அரங்கன்!


இந்த அலங்காரத்தில் தான் அரங்கன் இன்று பல்லக்கில் எழுந்தருளியிருந்தான்.


கோனார் சத்திரத்தின் உள்ளே அரங்கன்! 

இம்முறை ஆடி பதினெட்டில் அரங்கன் காவிரிக்கரைக்கு வரவில்லை. ஆகவே ஆடி 28 வருவான் என நிச்சயமாய்த் தெரிந்தது. நேற்றே மண்டகப்படிக்காரர்கள் அவரவர் மண்டபங்களைச் சுத்தம் செய்து பந்தலெல்லாம் போட்டு அரங்கன் வருகைக்கு ஆயத்தங்களைச் செய்திருந்தார்கள். இன்று காலை அரங்கன் வரப்போகிறான் எனத் தெரிந்ததும் வழக்கமாய் வரும் பத்து அல்லது பதினோரு மணிக்குள் வருவான் என நினைத்தேன். ஆனால் பக்கத்துத் தெருவில் யாரோ இறந்து போனதால் அவரை இந்தத் தெருவழியாகத் தான் அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் அரங்கன் வருமை தாமதம் என்று சொன்னார்கள்.  சரினு சாதம் வடித்துக் கொண்டு காடரிங் சமையல் வந்ததும் சாப்பாடும் சாப்பிட்டுவிட்டோம். அதற்குள்ளாக வாட்சப்பில் அரங்கனின் இன்றைய அலங்காரம் படம் யாரோ எடுத்ததை எனக்கு எவரோ அனுப்பி வைக்க அதை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன். அரங்கன் திறந்த பல்லக்கில் வந்தால் நன்றாய்ப் பார்க்கலாம். எப்படி வரப் போகிறானோ!

சுமார் பதினொன்றரை மணி அளவில் கீழே சென்றேன். அரங்கன் இன்னமும் அங்குள்ள ஓர் கல்யாண மண்டபம் தாண்டவில்லை என்றார்கள். சற்று நேரத்தில் அருகே வந்து கொண்டிருப்பதாகத் தகவல் வரவே ரங்க்ஸை அலைபேசி மூலம் கீழே அழைத்தேன். குடியிருப்பு வாசிகளில் பலர் வந்து உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தனர். ரங்க்ஸ் வந்ததும் அரங்கனை எதிர்கொண்டு போய்ப் பார்க்கலாம் என்று சொன்னார். சரினு அவரோடு கிளம்பி எங்க தெருவிலேயே எங்க குடியிருப்பு வரிசையிலேயே இருந்த ஓர் மண்டகப்படி (கோனார் சத்திரம் என்கின்றனர்)யில் அரங்கன் இருக்க அங்கே போனோம். பெரிய பல்லக்கு! தூக்குவதற்கே 20,30 பேர் இருக்கும். அரங்கனுக்கு வெயில் அதிகமானால் மறைக்கப் போர்வைகளுடன் 2,3 பேர்கள். குடையுடன் நாலு பேர்! அதைத் தவிர இந்த வருடம் தலைமை பட்டரே வந்திருந்தார், பட்டாசாரியார்கள் ஏழு, எட்டுப் பேர். அரங்கன் பரிவாரங்களே சுமார் 50 பேர். அதைத் தவிர்த்தும் தெருவில் உள்ள மக்கள் கூட்டம். அக்கம்பக்கம் தெருக்களில் இருந்தெல்லாம் பார்க்க வந்த கூட்டம் எனக் கூட்டம் அலை மோதியது.

என்றாலும் விடாமல் உள்ளே போய் அரங்கனைப் பார்த்தேன். திருப்தியாக இல்லை. அரங்கன் கூடவே நடந்து அடுத்த மண்டகப்படிக்கும் போய்ப் பார்த்தேன். பின்னர் இன்னமும் அரங்கனுடன் நடந்து எங்க பக்கத்து வீட்டு மண்டகப்படிக்கு வருவதையும் பார்த்தேன். படமா? ம்ஹூம், வாய்ப்பே இல்லை! உள்ளே நுழையக் கூட முடியாது! அதோடு வெயில் அதிகமாக இருந்ததால் அரங்கனைச் சுற்றித் திரையிட்டு நடுவே அரங்கனை எழுந்தருளப் பண்ணி இருந்தார்கள். போதாததுக்கு மேலே ஓர் பெரிய திரை. அதன் மேல் பல்லக்குத் திரை! அதுக்கும் மேலே ஓர் திரை போட்டு அரங்கனுக்கு ஒரு பக்கம் மட்டும் தெரியும்படிப் பண்ணி விட்டார்கள். பலரும் ஆக்ஷேபம் தெரிவிக்கவே அதை மட்டும் எடுத்தார்கள். குழந்தையை வெயில் படாமல் எப்படிப் போர்த்தி முகம் மட்டும் தெரியும் வண்ணம் எடுத்துப் போவோமோ அப்படி எடுத்துச் செல்கின்றனர். ஶ்ரீபாதம் தாங்கிகளுக்கு அந்தப் பல்லக்கைத் தூக்கிய வண்ணம் நிற்கவே உடலில் தெம்பு வேண்டும். எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மண்டகப்படியில் பல்லக்கைக் கொஞ்சம் கீழே இறக்கி வைத்தனர். ஆனாலும் உள்ளே நுழைய முடியவில்லை. நட்ட நடுவில் சாக்கடை வேறே! அதனால் வெளியேயே நின்றுவிட்டேன். படமெல்லாம் எடுக்க முடியவில்லை. மேலே பல்லக்கில் மங்கலாகக் காணப்படும் அரங்கன் கோனார் சத்திரத்தில் கிடைத்த இடைவெளியில் எடுத்தது. அரங்கன் என்னைப் பார்த்திருப்பான் என நம்புகிறேன். அரங்கன் வந்த செய்தியோடு மேட்டூர் அணை திறக்கப்பட்ட செய்தியும் கிடைத்தது. இன்னமும் 2,3 நாட்களில் இங்கே தண்ணீர் வந்ததும் படங்கள் பகிர்கிறேன்.

29 comments:

  1. சீர் கொண்டு வந்த நிகழ்ச்சியை உங்கள் மூலம் தெரிந்து மகிழ்ச்சி. படங்கள் எடுப்பது கொஞ்சம் சிரமம் தான். அதுவும் இத்தனை மறைப்புகளைத் தாண்டி - அலைபேசியில் எடுப்பது கடினம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட். இந்தத் தரம் கூட்டம் ரொம்பவே அதிகம். எப்போவும் மண்டகப்படி உள்ளே போயிடுவேன். படம் எடுக்கவும் வசதி! இன்னிக்குப் போக முடியலை!

      Delete
  2. கீதாக்காவுக்குத் தெரியக் கூடாதாம் அவன் பார்த்தது அதனால் திரையின் வழி எட்டிப் பார்த்து ஓட்டைக் கண் போட்டுப் பார்த்தானாமே!!! கீதாக்காவை! ரகசியத் தூது மூலம் எனக்குச் செய்திவந்துவிட்டதே! கால் முடியாமல் ஓடோடி வரும் குழந்தையைப் பார்க்காமல் இருப்பேனா என்று வேறு!!! சொன்னானே! நமுட்டுச் சிரிப்பு ஒன்று உதிர்த்துக் கொன்டே பார்த்தானாம்..அதை கீதாக்கா பார்த்தீங்க்ளோ!!!!?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, அவன் நமுட்டுச் சிரிப்பு எனக்குத் தெரியாதா? பார்த்தான் தானே! அது போதுமே!

      Delete
  3. ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கீங்க கீதாக்கா.

    ஆமாம் மேட்டூர் அணை திறந்து விட்டாச்சு. இங்கு மைசூர் டேம் திறக்கலைனா அவ்வளவுதான் ஏற்கனவே அந்தப் பக்கங்களில் வெள்ளமாம்...

    ஸோ உங்க வீட்டுப் பக்கத்துல இருக்க காவேரியும் ஒயிலாக ஓடுவாள் என்று நினைக்கிறேன். ஆறு வற்றி இருந்ததே. அப்போ தண்ணீர் வரும் போது எப்படி வரும் அதைப் பார்த்திருக்கீங்களா அக்கா? கொஞ்சம் கொஞ்சமா வந்து நிரம்புமா இல்லை அடித்து வருமா? எனக்குப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா. நீர் அடித்து வருவது அநேகமா ஒகேனக்கல் பக்கத்துக் காவிரியோடு சரினு நினைக்கிறேன். இங்கே வரும்போது வேகமாக வந்தாலும் முக்கொம்பில் தடுத்துப் பிரித்து அனுப்பி விடுவார்கள். அதன் பின்னர் கல்லணையில் நீரின் போக்கு ஒழுங்கு செய்யப்படும். 2013 ஆம் வருஷம் கடுமையான வெள்ளம் வந்து ஐந்து அடுக்குப் பாதுகாப்புப் போட்டாங்க. படம் எடுக்கவெல்லாம் அனுமதி இல்லை. மொட்டை மாடியில் இருந்து எடுத்தேன். இந்த வருஷம் பார்க்கணும். ஏனெனில் இரண்டு நாட்களாகக் கபினியின் நீர்வரத்து குறைந்திருப்பதால் நீரை அனுப்புவதும் குறைய ஆரம்பித்துள்ளது.

      Delete
  4. அரங்கனுக்கு ஆயிரம் கண்கள். பார்க்காதிருப்பாரா?

    அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்
    அவன்தான் வைகுந்தனே ... அவன்தான் வைகுந்தனே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், அதானே! அவனுக்கு ஆயிரம் கண்கள். பார்க்காமல் இருப்பானா என்ன? பார்த்திருப்பான் தான்! வைகுந்தவாசன், அழகிய மணவாளன் கட்டாயம் பார்த்திருப்பான்.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    மிக அழகாக ரங்கனின் வருகையை பற்றி கூறியுள்ளீர்கள். பதிவை படிக்கும் போதே எனக்கு பார்த்த அனுபவம் உண்டாகிறது. அரங்கனின் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் அருகில் இருந்து வேறு பார்த்திருக்கிறீர்கள். அவன் உங்களையும் கண்டிப்பாக கடைக்கண்ணால் பார்த்திருப்பான். எங்களுக்கும் சேர்த்து அவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அண்ணலின் வருகையில் காவிரி மகிழ்வுடன் நிரம்பி அனைவருக்கும் வளம் சேர்க்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. இன்னும் காவிரிக்குத் தண்ணீர் அதிகம் வரவில்லை. முக்கொம்புக்கு வரவே 3 நாட்கள் ஆகலாம் என்கிறார்கள். வந்ததும் படம் எடுக்கணும். அரங்கன் கட்டாயமாய்ப் பார்த்திருப்பான்! என்றாலும் மனசுக்கு அது தெரியவில்லை.

      Delete
  6. தங்களால் நானும் பார்க்கப்பட்டவன் ஆனேன்..

    ஓம் ஹரி ஓம்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, நன்றி.

      Delete
  7. இனிய வைபவம்...
    தங்களால் வாசிக்க நேர்ந்தது...

    மகிழ்ச்சி நன்றி...

    ReplyDelete
    Replies
    1. துரை, இந்த நாளுக்காக ஆடி மாதம் பிறந்ததில் இருந்து காத்திருப்போம்.

      Delete
  8. பரிவாரங்களே இவ்வளவு பேர்கள் இருக்கும் போது, பார்ப்பது சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் டிடி, அதோடு காவல்துறை பாதுகாப்பு வேறே!

      Delete
  9. //குழந்தையை வெயில் படாமல் எப்படிப் போர்த்தி முகம் மட்டும் தெரியும் வண்ணம் எடுத்துப் போவோமோ அப்படி எடுத்துச் செல்கின்றனர்.// - இத்தகைய பக்தி எந்த ஜென்மத்துல எனக்கு வரப்போகிறதோ..

    ReplyDelete
    Replies
    1. வரும், வந்திருக்கும், உங்களுக்குத் தெரியலை!

      Delete
  10. /இன்றைய அலங்காரம் படம் யாரோ எடுத்ததை எனக்கு எவரோ அனுப்பி வைக்க அதை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டேன்// - நெ.த அனுப்பினா மட்டும் அதை வெளியிடமாட்டேன் என்று பிரதிக்ஞை எடுத்துக்கொண்டிருக்கிறார்ப்போல் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை. நீங்க விருந்தினர் பக்கம் பதிவுகள் எழுதிப் போடுவதற்குள் அந்தப் படம் பழசாக ஆகிவிடும் என்பதால் போடுவது இல்லை! அதோடு நான் பயணக்கட்டுரையில் மற்றவர் எடுத்து அனுப்பிய படங்களைப் போட யோசிப்பேன். விக்கி பீடியாவில் இருந்து எடுப்பதும் கோயிலால் அனுமதிக்கப்பட்ட அலுவலக ரீதியான படங்களாகவே இருக்கும்.

      Delete
  11. ஆஹா அரங்கன் தரிசனம் ...

    கோனார் சத்திரம் இங்க தான் அப்பா அம்மா திருமணம் மற்றும் சில அண்ணாக்கள் திருமணம் எல்லாம் நடந்தது ...அதனால் அந்த பக்கம் போகும் போது பார்வை அங்க தான் இருக்கும் ...

    இன்றைக்கு அப்பா அம்மா கூட அங்க தான் வந்தார்கள் அரங்கனை காண ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனு, பழைய நினைவுகளைக் கிளப்பி விட்டேனா? அப்பா அம்மா யாரென்று தெரிந்திருந்தால் வீட்டுக்கு அழைத்திருக்கலாம்.

      Delete
  12. அரங்கனை எங்களுக்கும் அறிய வைத்தமைக்கு நன்றி.

    வாழ்க வையகம் அவன் பொருட்டு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! வருகைக்கு நன்றி.

      Delete
  13. காவேரியில் தண்ணீர் வந்து விட்டதா என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அரங்கன் நிச்சயமாக உங்களை பார்த்திருப்பான், ஆனால் பார்க்காதது போல நடிப்பான் மாயவன் ஆயிற்றே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, இன்னமும் காவிரியில் தண்ணீர் வரவில்லை. அரங்கன் பார்த்திருப்பான் தான்! ஆனாலும் மனசு அடிச்சுக்கறது!

      Delete
  14. அரங்கனும் காவிரியும் உங்களைத்தேடி வரும் அதிர்ஷ்டம்தான் என்னே! அது சரி, புகைப்படம் எடுப்பதில் ரங்ஸ் உங்களுக்கு உதவமாட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க செல்லப்பா சார், காவிரியில் இன்னமும் தண்ணீர் வரவில்லை.நாளைக்குத் தான் முக்கொம்புக்கு வரும் என்கிறார்கள். அவர் புகைப்படம் எடுப்பாரே! சில சமயங்களில் உம்மாச்சி தெரியாமல் இருக்கையில் அவர் தான் படங்கள் எடுத்துக் கொடுப்பார். நேற்று முதல் மண்டகப்படியில் பார்த்ததுமே அவர் வீட்டுக்குத் திரும்பிட்டார். நான் சிறிது நேரம் அரங்கனோடு நடந்து சென்று பார்த்துக் கொண்டு போனேன். அலைபேசி என் கையில் இருந்தது.

      Delete
  15. அரங்கன் காவிரிக்கு சீர் கொண்டு போவதை பார்த்து விட்டீர்கள்.
    ரங்கன் அருளால் அவரோடு கொஞ்ச தூரம் நடந்து சென்று பார்த்து வந்து விட்டீர்கள். இனி எல்லாம் நலமே.
    ரங்கன் அருளால் உடல் நலம் நன்றாக இருக்கும். அவர் உங்களை நன்றாக பார்த்து ஆசி வழங்கி விட்டார்.

    ReplyDelete