தமிழன் என்பவர் ஸ்வாமி விவேகானந்தர் பத்திய என்னோட பதிவில் அவரை "அன்னிபெசன்ட்" அம்மையார் தன்னுடைய தியோசபிகல் சொசைடியின் கருத்துக்களைத் தான் சொல்லவேண்டும் என்று வறுபுறுத்தியதாய்க் குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரை விவேகானந்தர் இறந்து சில வருடங்கள் சென்றபிறகே ஐரோப்பாவில் இருந்து வந்த பெசன்ட் அம்மையார் தியோசபிகல் சொசைடியின் பொறுப்பை ஏற்கிறார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஜே.கே. பற்றிப் படிக்கும்போது இதைப் படித்திருக்கிறேன். என்றாலும் இன்று மறுபடி ஒருமுறை பெசன்ட்டையும், விவேகானந்தரையும் கூகிளாண்டவரின் தயவுடன் நோண்டியபோது இருவரும் சந்தித்து இருக்க வாய்ப்பே இல்லை எனத் தோன்றுகிறது.
ஏனெனில் விவேகானந்தர் 1890-ம் ஆண்டில் இருந்தே தன்னுடைய இந்தியச் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்து உள்ளார். 1892-ம் ஆண்டில் தான் அவருக்கு சேதுபதி ராஜாவின் அறிமுகமும், மைசூர் ராஜாவின் அறிமுகமும் கிடைக்கிறது. அவர் 1893-ம் ஆண்டில் செப்டெம்பர் மாதம் தான் சிகாகோவில் தன்னுடைய மதிப்பிற்குரிய உரையை நிகழ்த்துகிறார். அதற்கு அன்னிபெசன்ட் அம்மையார் சென்றிருந்திருக்கிறார், என்றாலும் அவர் அப்போது தான் தியாசபிகல் சொசைடியின் கருத்துக்களால் கவரப்படுகிறார். அதுவரை ஒரு மார்க்ஸிஸ்ட் ஆக இருந்த அவர் அதன்பின்னர் மனம் மாறி தியாசபிகல் சொசைடியில் சேர்ந்து 1893-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முறையாக இந்தியா வருகிறார். ஜூலை 4 1902-ம் ஆண்டில் தன்னுடைய இறப்பைப் பற்றி முன்கூட்டியே அறிவித்த விவேகானந்தர் 39-ம் வயதில் இறந்து போகிறார். அதற்குச் சில வருஷங்களுக்குப் பின்னரே அன்னிபெசன்ட் அம்மையார் 1909-ம் ஆண்டு சென்னை, அடையார், தியாசபிகல் சொசைடியின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். அவரை மிகவும் கவர்ந்தவர் அங்கே வேலை செய்து கொண்டிருந்த திரு நாராணய்யா என்பவரின் மகன் ஆன 14 வயது நிரம்பிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஜேகேவைச் சந்திக்கிறார்.
அம்மையார் மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டு சிறுவனை உருவாக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்கிறார். அம்மையார் மனதில் புத்தன், ஏசு போல் இந்தக் கிருஷ்ணமூர்த்தியும் ஒரு அவதாரம், என்ற எண்ணம் தோன்றியதோடல்லாமல் அப்படியே அவரை ஒரு "மைத்ரேயன்" எனப் பிரகடனமும் செய்துவிட்டார். ஆனால் ஜேகேயோ தான் ஒரு அவதார புருஷன் இல்லை என்று அந்தப் பதவியை உதறிவிட்டதோடு அல்லாமல் தான் மிகுந்த ஆசை வைத்திருந்த ஒரே தம்பி இறந்துபோன நிலையில் ஆத்மஞானம் அடைந்தார். ஆனாலும் அன்னிபெசன்ட் அம்மையார் தன்வரை இவரை ஒரு அவதாரபுருஷனாகவே நினைத்து வந்தார். அவருடைய சிந்தனைகளையும் மதித்தார். பொதுவாக "ஆசையை அடக்கு" என்றுதான் அனைவரும் சொல்லுவார்கள். ஆனால் ஜேகேயே அடக்குவதினாலோ, விரட்டுவதினாலோ ஆசை அடங்காது. அதன் தன்மையை நாம் ஆராய்ந்தோமானல் தானாகவே ஆசை அடங்கிவிடும்." என்கிறார். எந்தச் சமயக் கருத்துக்களையும் சாடாத இவர், "நான் சொல்லுவதை எல்லாம் வெறும் போதனைகளாகக் கேட்கவேண்டாம். அவை வெறும் சொற்களே. அனுபவரீதியாக உண்மையை உணரவேண்டும்." என்று சொல்லுவதோடு அல்லாமல், "சமயம் வாழ்விலிருந்து வேறுபட்டதல்ல. சொல்லப் போனால் அதுதான் வாழ்வு. இந்த வாழ்வுக்கும், சமயத்திற்கும் வேறுபாடு ஏற்படுத்தியதால் துன்பங்கள் உண்டாகின்றன. உள்ளொளி ஞானம் என்பது தானே ஒளியாக இருப்பது. வாழ்க்கையைச் சரியாக வாழ்வதில்தான் ஆத்மஞானம் இருக்கிறது. இதை அனுபவத்தால்தான் பெற முடியும்." என்றும் சொல்கிறார்.
ஹிஹிஹி, எங்கேயோ இருந்து எதுக்கோ போயிட்டேனோ? விவேகானந்தரும், பெசன்ட் அம்மையாரும் சந்திக்கவே இல்லை என்பது தான் நான் சொல்ல வந்தது.
No comments:
Post a Comment