அடுத்ததாய்ப் "பார்த்திபன் கனவு" நாவலை எடுத்துக் கொண்டால் அதில் சோழர்களின் மறு பிரவேசமே ஆதாரம். அதற்கான கனவுகளே பிரதானம். இதிலும் காதல் வருகிறது என்றாலும் நரசிம்மனின் மகள், சோழ இளவரசனை மணந்து கொண்டது, சரித்திரம் சொல்லும் உண்மை, ஆகவே இதிலும் காதல் சற்றுத் தள்ளியே நிற்கிறது. அடுத்து "சிவகாமியின் சபதம்". பார்த்திபன் கனவுக்குப் பின்னர்தான் கல்கி சிவகாமியின் சபதம் எழுதியதாய் என் அம்மா சொல்லி இருக்கிறார். அதற்கான வித்து கல்கி அவர்களுக்கு பார்த்திபன் கனவிலேயே விழுந்திருக்கிறது. இதில் காதல்பிரதானமாக வருகிறது. அதுவும் சிவகாமி என்ற நாட்டியத் தாரகைக்கும், நரசிம்ம பல்லவன் என்ற பட்டத்து இளவரசனுக்கும். சிறு வயதில் இருந்தே அறிமுகமான அவர்கள் நட்பு காதலாக மாறுகிறது என்கிறார் கல்கி அவர்கள். ஆங்காரமும், கோபமும், பொறாமையும், ஆர்வமும், தன் காதலன் தனக்கு மட்டுமே உரியவனாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும் அத்தோடு கூட நாட்டியத்தில் பெருமளவு ஆர்வமும், ஆவலும், ஈடுபாடும் கொண்ட பெண்ணாக வரும் சிவகாமி, நரசிம்மரைக் காதலித்தாலும், அந்தக் காதலை என் மனம் என்னவோ ஏற்றதில்லை. நரசிம்மரைப் பொறுத்த மட்டில் அவருக்குக் கடமை, நாடு, போர், வீரம் போன்றவைகளுக்குப் பின்னரும், இன்னும் சொல்லப் போனால் தந்தைப் பாசத்துக்கும் பின்னர்தான் காதல். காதலில் ஈடுபட்டு விட்டு இருவரும் ஒருநாளும் நிம்மதியாக இருந்ததில்லை. சந்திக்கும் போதோ கேட்கவே வேண்டாம். சிவகாமியின் சண்டைகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண புருஷனாக நரசிம்மர் மாறவேண்டி வருகிறது. இது அவரின் கம்பீரத்தைக் கொஞ்சம் குறைக்கவே செய்கிறது. சிவகாமியின் காதல் நிறைவேறவில்லையே என வருத்தம் வருவதற்குப்பதிலாய் அனுதாபமே பிறக்கிறது. முடிவு சரியான முடிவுதான் எனத் தோன்றுகிறது.
பின்னர் வந்ததா? முன்னர் வந்ததா தெரியாது "அலை ஓசை". சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாவல். இதில் காதல் மட்டும் இல்லாமல் அரசியல், தேச சுதந்திர விடுதலைப் போராட்டம், தேசத்தின் சுதந்திரம், காந்தியின் மறைவு என எல்லாமே முன்னிலை பெறுகிறது. கதைக் களமே முதல் உலக யுத்தத்தில் ஆரம்பிகிறது என நினைக்கிறேன். அதில் ஆரம்பித்துப் பின்னர் தேசம் விடுதலை ஆகும் வரை நடக்கும் கால கட்டங்களில் செளந்திரராகவன் என்னும் கதாநாயகனுக்கும், தாரிணி, சீதா என்ற இரண்டு நாயகிகளுக்கும் இடையில் நடக்கும் மனப் போராட்டங்களும், வாழ்க்கைப் போராட்டங்களும்தான் கதை. தாரிணி யாரெனத் தெரியாமலேயே அவளிடம் காதல் வயப் படும் செளந்திரராகவன் அவளை மணக்க முடியாமல் கிட்டத் தட்ட அவளின் ஜாடையில் இருக்கும் சீதாவை மணக்கிறான். அவன் பெண்பார்க்க வந்தது என்னமோ சீதாவின் மாமா பெண்ணான லலிதாவை. ஆனால் திருமணம் முடித்ததோ சீதாவை. முதலில் தாரிணியை அவன் காதல் செய்தது பற்றி நமக்குத் தெரிவதில்லை. இருந்தாலும் சீதாவின் அப்பா தந்தி கொடுக்கிறார் திருமணத்தை நிறுத்தச் சொல்லி. சீதாவை ஒருதலையாகக் காதலித்து வந்த அவளின் மாமா பையன் ஆன சூர்யா சீதாவுக்கு நல்ல வாழ்க்கை பெரும் உத்தியோகஸ்தரோடு அமைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அந்தத் தந்தியை மறைக்கிறான். அது எவ்வளவு பெரிய தவறு? பின்னாதான் தெரிகிறது நமக்கு. ஒரு சமூகக் கதையை இந்த அளவுக்குத் திகிலோடும், சஸ்பென்ஸோடும் நகர்த்திச் செல்ல முடியும் அதுவும் கதை போக்கில் இருந்து சற்றும் விலகாமல் அதன் போக்கிலேயே போய்! கல்கியால் எது தான் முடியாது?
சீதாவைத் திருமணம் செய்த பின்னரும் தாரிணியை மறக்க முடியாதிருந்த செளந்திர ராகவன் அவளை மறுபடி சந்திக்கும்போது ஒரு குழந்தையும் அவனுக்குப் பிறந்து விடுகிறது. அதுவரை சீதாவோடு இனிய இல்லறம் நடத்தி வந்த அவன் இப்போது தடுமாற ஆரம்பிக்கிறான். அதுவும் சீதாவின் மாமா பையன் ஆன சூர்யாவுடன் அவன் தாரிணியை ஒன்றாகப் பார்க்கும்போதெல்லாம் அவன் உள்ளம் எரிகிறது. சீதாவையும், தாரிணியையும் அவன் உள்ளம் ஒப்பிட்டுப் பார்க்கிறது. இருவருக்கும் அதிகம் வேறுபாடு இல்லை என்றும், சீதாவின் கண்களின் நேர்த்தியும், கண்களால் பேசும் அழகும் தாரிணிக்குக் கிடையாது எனவும்,ஆனால் புத்திசாலித்தனம், திறமை, ஆளுமை போன்றவற்றில் தாரிணியே சிறந்தவள் எனவும் புரிகிறது அவனுக்கு. அதேசமயம் சீதாவின் வெகுளித்தனமான போக்கினாலும் கணவனிடம் அவள் வைத்திருக்கும் எல்லையற்ற அபிமானமும், மரியாதையாலும் தடுமாறும் செளந்திரராகவன், உண்மை தெரிந்து சீதா ராகவனின் வீட்டை விட்டுப் போகும் சமயம் கூடத் தாரிணியை மட்டுமில்லாமல் அத்தோடு சீதாவையும், மறக்க முடியாமல் இருமனம் கொண்டு தடுமாறுகிறான்.
தற்செயலாகவோ வேண்டுமென்றோ சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக மாறி சிறை வாசம் அனுபவிக்கும் சீதா, உறவினர் கொடுமை தாங்காமல் தவிக்கும் சீதா, என சீதாவின் வாழ்வே துன்பமயமாக இருக்கிறவேளையில் ராகவன் மனம் மாறி சீதாவோடுப் புது வாழ்வு தொடங்க வேண்டித் தன் பெற்றோருடன் இருக்கும் குழந்தையையும் சீதாவையும் பஞ்சாபுக்கு அழைத்துச் செல்கிறான். ஆனால் விதி யாரை விட்டது? சீதாவின் நல்வாழ்வுக்கு அங்கேயும் பங்கம் வருகிறது நாட்டுப் பிரிவினை ரூபத்தில்! அந்தச் சமயம் காப்பாற்ற முடியாமல் சீதா இறந்து போகத் தாரிணியோ அங்கங்கள் வெட்டப் பட்டு கோரரூபியாக மாறுகிறாள். இருந்தும் தாரிணியைத் திருமணம் செய்து கொள்கிறான் ராகவன். உண்மையான காதலால்? அல்லது தாயைப் பிரிந்து இருக்கும் தன் பெண்குழந்தைக்காகவா? என்ன இருந்தாலும் தன் மனைவியின் மூத்த சகோதரியாகத் தாரிணி இருப்பதால் அவளே தங்கையின் பெண்ணைப் பார்த்துக் கொள்ளச் செளகரியமாக இருக்கும் என்றா? தெரியவில்லை! கதை முழுதுமே செளந்திரராகவன் என்னும் இந்தக் கதாநாயகனின் இரட்டைமனப் போக்கு நம்மை ஆத்திரம் கொள்ளவே செய்யும். சாதரணமாய்க் கதாநாயகர்களிடம் உண்டாகும் இயல்பான அனுதாபம் சற்றும் இவனிடம் பிறக்காது. மாறாக சூரியாவிடமே அனுதாபம் பிறக்கிறது, அதுவும் ஒருதலையாக இரு பெண்களைக் காதலித்து, அதுவும் முதலில் தங்கை, பின்னர் அக்கா, இருவருமே அவன் மணம் புரிந்து கொள்ளும் முறை கொண்டவர்கள், இருந்தும் இருவரும் விரும்பியதோ செளந்திரராகவனை, இருவரையும் அவன் இந்தப் பெண்களின் விருப்பத்துக்குத் தலை சாய்த்து விட்டுக் கொடுக்கிறான்.
என்றாலும் முதலில் சீதாவுக்கும், பின்னர் தாரிணிக்கும் காத்திருந்த சூரியாவுக்குக் கிடைப்பது ஏமாற்றம்தான். அவன் மணந்து கொள்ளுவது பாமா என்னும் வேறொரு பெண்ணை! :பாமா விஜயம்" என்னும் இந்த அத்தியாயம் தான் கடைசி அத்தியாயம். பாமாவை மணந்து கொண்டு சூர்யா மறுபடி கிராமத்துக்குத் திரும்புவதோடு கதை முடியும். காதல்? யார் மனசிலே யாரு? இதிலும் குழப்பம் தான்! குழப்பமே இல்லாத காதலே கல்கி எழுதலையா? ஏன் இல்லை எழுதி இருக்காரே! இதோ அது!
எப்போ போட்ட போஸ்ட் ??? நிறைய எழுத ஆரம்பிச்சுட்டீங்க..!!!!!
ReplyDeleteஆக, அடுத்த பதிவு - ராதிகா சரத்குமாரின் சித்திதிதிதி. என்ன சரியா? :))
ReplyDeleteஇன்னும் கோலங்கள் வேற இருக்கு, :p
என்ன அநியாயம் செந்தழல்? நிஜமாவே "தழலாச்" சுடுது எனக்கு! :P நான் நிறைய எழுதறேனேன்னு தான் எல்லாரும் குறை சொல்லி இருக்காங்க! என்னைப் போய் நீங்க? ஒருவேளை இதான் முதல் முறையோ நீங்க வரது? ஹிஹிஹி, டாங்ஸு, டாங்ஸு, டாங்ஸு! :)) கொஞ்ச்சமா எழுதறேன்னு மறைமுகமாப் பாராட்டினதுக்கு? உ.கு. இல்லையே? :P
ReplyDelete@ஆப்பு, அது எல்லாம் இங்கே வரதில்லையே? விஜய் தான் வருது! அதனால்தான் இந்தத் தலைப்பு! இது கூடப் புரியலையா ட்யூப்லைட்? :P