முதலில் இந்த மாதிரி எழுதற எண்ணமே எனக்கு இல்லை. இந்த அம்பிதான் வேலை மெனக்கெட்டு எனக்கு மெயில் கொடுத்துத் "தலைவியின் ஹூஸ்டன் விஜயம்" அப்படின்னு ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்னு எழுதி இருந்தாரா? தொண்டர், அதுவும் என்னை நேரிலே பார்த்த முதல் தொண்டர், பிடிவாதமாய் எங்க அம்மா, அப்பா கல்யாணத்துக்குப் பல வருஷங்கள் முன்னாலேயே நான் பிறந்துவிட்டதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் தொண்டுகிழம், கேட்டிருப்பதை எவ்வாறு மறுப்பது? அதான் இந்தப் போஸ்ட்! ம்ம்ம்ம்ம், எப்போ வேணாலும் தலைவி இங்கே "நாசா"வுக்கு விஜயம் செய்யலாம். ஹிலாரி கிளின்டனுக்கு உதவி செய்யத் (மதுரையம்பதி தான் ரொம்பக் கேட்டுக் கொண்டார்)தான் நான் யு.எஸ். வந்தேன் என்பது உலகு அறிந்த உண்மை! அவங்க பிரச்னை தீர்ந்து போச்சு, எல்லாம் பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் பார்த்திருப்பீங்களே! அதான் மெம்பிஸில் இருந்து கிளம்பிட்டேன்.
மெம்பிஸில் இருந்து சனிக்கிழமை கிளம்பி ஹூஸ்டன் வந்தாச்சு. இங்கே கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டுப் பின்னர் இந்தியா திரும்பணும். முதலிலே நாங்க 2 பேரும் விமானத்திலேயே ஹூஸ்டன் வந்துடலாம்னுதான் நினைச்சோம். விமானம் டிக்கெட் விலை, விமானத்தின் விலையை விடச் சற்று அதிகமா இருந்ததாலும், தற்சமயம் விமானம் எதுவும் வாங்கும் எண்ணம் இல்லாத காரணத்தாலும், நாங்க காரில் பிரயாணம் செய்வதையே தேர்ந்தெடுத்தோம். மெம்பிஸில் இருந்து "ப்ரீவே" எனப்படும் ஹைவேயில் வருவதென்றால் மூன்று மாநிலங்கள் கடந்து வரவேண்டும். மெம்பிஸில் இருந்து மிஸ்ஸிஸிபி, பின் ஆர்கன்சாஸ், பின்னர் லூஸியானா அல்லது முதலில் லூசியானா, பின்னர் ஆர்கன்சாஸ் என்றோ கடந்து வரவேண்டும். ஆனால் எங்க பையன் அப்படிவராமல் ஆர்கன்சாஸ் வந்து பின்னர் அங்கிருந்து பிரியும் டெக்ஸாஸ் மாநிலத்தின் "மாநிலத் தரைவழிப்பாதை"யைத் தேர்ந்தெடுத்தான். இதில் நேரமும், தூரமும் குறையும். என்ன, அதிகம் "ரெஸ்ட் ஏரியா" இருக்காது. யு.எஸ்ஸில், ஹைவேயில் காரில் பயணிப்பது மிகவும் செளகரியமான ஒன்று. 80, அல்லது 100 மைல்களுக்கு இடையே ஒரு ரெஸ்ட் ஏரியா, அந்த, அந்த மாநிலத்தால் நிர்வகிக்கப் படும். சில இடங்களில் போர் வீரர்கள், அல்லது சரித்திர முக்கியத்துவம் பெற்ற மனிதர்களில் நினைவுக்கான ரெஸ்ட் ஏரியாவும் உண்டு. மிக மிகச் சுத்தமாகவும், 24 மணி நேரமும் செயல்படும் இந்த ரெஸ்ட் ஏரியாவில் கழிப்பறை வசதிகள் மட்டுமில்லாமல் குளிர்பானங்களும் கிடைக்கும் "வென்டிங் மெஷின்"களும் இருக்கும். சில இடங்களில் இரும்பினால் ஆன நாற்காலிகள் மரத்தடியிலோ அல்லது புல்வெளியிலோ போடப் பட்டிருக்கும். ஆகவே கையில் எடுத்துப் போகும் சாப்பாடை வசதியாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு ஒரு தூக்கம் கூடப் போட்டு விட்டுப் போகலாம்.
மாநிலத்தால் நிர்வகிக்கப் படும் சாலை வழிகளிலும் ரெஸ்ட் ஏரியா உண்டு என்றாலும் கொஞ்சம் குறைவாக இருக்கும். என்றாலும் நாம் வழியில் பெட்ரோல் பங்குகள் இருக்கும் இடம் பார்த்துக் கொண்டு அங்கே ஊருக்குள் போக எக்ஸிட் எடுத்து ஊருக்குள் ஹைவேயில் இருந்து சற்றுத் தூரத்திலேயே இருக்கும் பெட்ரோல் பங்கில் போய் அங்கே இருக்கும் ரெஸ்ட் ரூம்களையும் உபயோகிக்கலாம். ஒன்றும் பிரச்னை இல்லை. கழிப்பறைகளை இங்கே "ரெஸ்ட் ரூம்" எனச் சொல்கிறார்கள். பெட்ரோல் பங்கில் ஷாப்பிங் வசதிகள் இருப்பதால் உணவு வகைகளும், குளிர் பானங்களும், காபி, டீ, சாக்லேட் மில்க் போன்றவைகளும் கிடைக்கும். இது தவிர சில ஊர்களில் உணவு வகைகளுக்கும் பெயர் போன மக்-டொனால்ட் கம்பெனிகளின் உணவு விடுதிகளும் ஹைவேயை ஒட்டியே நகரத்துக்குள் செல்லும் எக்ஸிட்டில் இருந்து சற்றுத் தூரத்திலேயே அமைந்திருக்கும். என்ன, எங்களைப் போன்ற சுத்த சைவக் காரர்கள் வெறும் காபி, டீயுடன் நிறுத்திக் கொள்ளும்படியா இருக்கும். கார்ப்பயணத்தில் நெடுந்தூரம் போவதின் சிரமமே தெரிவதில்லை. ஓட்டுபவர்களுக்கு வேண்டுமானால் சிரமமாய் இருக்கலாம். சாலையின் இரு பக்கங்களிலும் நம்ம ஊர் போல் கடைகள், ஆக்கிரமிப்புக்கள் என்று பார்க்க முடியாது. இரு பக்கமும் நெருங்கிய மரங்களுடன் கூடிய காடுகள்தான் பெரும்பாபாலாகத் தொடர்ந்து வரும். ஊர்கள் ஏதும் நெருங்கும்போது வீடுகளோ, அல்லாது "ராஞ்ச்" எனப்படும் பண்ணைகளோ, அதில் வளரும் ஆடு, மாடு, குதிரைகள், கோழி வகைகள் தெரியும் என்றாலும் ஹைவேக்கு அருகே அவை வரமுடியாதவாறு வேலி போட்டுத் தடுக்கப் பட்ட இடத்துக்குள்ளேயே மேய்ந்து கொண்டிருக்கும். மனித நடமாட்டமே பார்க்க முடியாது ஹைவேயில் எங்குமே! கார்கள் எல்லாம் கட்டாயமாய் 70மைல் வேகத்தில் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.
இன்னும் சரியா செட்டில் ஆகலை, ஒரு இரண்டு நாள் ஆகும் ஃபார்முக்கு வர! அது வரை முடிந்தபோது "மொக்கை" தவிர்க்க முடியாது! அதெல்லாம் யாரையும் சும்மா விடறதாயில்லையே!
ReplyDeleteகீதாம்மா!
ReplyDeleteசொகுசான கார் பயணம்!!
நினைத்த இடத்தில் ரெஸ்ட்ரூம்கள்!
பசித்த இடத்தில் சாப்பாடு!
தவித்த இடத்தில் தண்ணீர்! ஹும்...
இந்தியாவில் நெனச்சுக்கூட பாக்கமுடியாது.
சிகாகோவிலிருந்து செயிண்ட்லுயிஸ்
வரை டொயொட்டா இன்னோவாவில்
செய்த பயணம் நினைவுக்கு வந்தது.
Labels for this Post: usual Mokkai! :p
ReplyDeleteanyway, Highway description is nice. :)))
மேடம், உங்களுக்குத்தான் இப்படி எங்கிருந்து தகவல் கிடைக்குதோ.. எழுதி தள்ளுகிறீர்கள் போங்கள்
ReplyDeleteஆமாம், அங்க இன்னுமொரு பதிவு எழுதுவாரில்லாம தவிக்கிறது...இந்த பதிவில் ஒரே மொக்கை.....எனக்கென்னமோ அலப்பரைன்னு குமரன் சொன்னதுதான் ஞாபகம் வருது....என்ன செய்ய....
ReplyDelete