எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 27, 2007

உற்சாகம், கும்மாளம், கொண்டாட்டம்!!!!!!!

ம்ம்ம்ம், ஒரு வாரத்துக்கு மேலே நான் எழுதறது எனக்கு பப்ளிஷ் கொடுக்க முடியாமல் இருந்தது. நான் எழுதி, அதை உ.பி.ச.வுக்கு அனுப்பி அவங்க உடனேயே போடுவாங்க. இப்போ என்னன்னா நேரம் நெருங்கிட்டே இருக்கா? ஒரே டென்ஷன். சாமான்கள் வாங்கறதும், வீட்டைச் சுத்தம் செய்து எல்லாவற்றையும் ஒதுங்க வைக்கிறதுமே ஒரே ஆணி மயமா இருக்கு. இதுக்கு நடுவிலே நான் ப்ளாக் பார்க்கிறதே பெரிய விஷயமா இருக்கு, இப்போ 4 நாளா என்னோட இணைப்பும் முடிஞ்சு புதுப்பிக்கக் காத்துட்டிருக்கு. ஆனால் புதுப்பிக்கவில்லை. இன்னிக்கு ஸ்ரீராமநவமிக்கு எங்க வீட்டு ராமரையும், வடுவூர் ராமரையும் போட்டு எழுத இருந்த பதிவு எழுத முடியலை. என்னோட கணினி இருந்தால் ராத்திரி ஆஃப்லைனில் கூட எழுதி வச்சுட்டுப் பின் பப்ளிஷ் கொடுக்க அனுப்ப முடியும். இங்கே என்னோட அண்ணா வீட்டில் இருந்து கொடுக்க வேண்டி இருக்கு. அதனால் தினமும் உங்களுக்கு என்னோட போஸ்ட் தொந்திரவு இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியாய் இருக்கலாம். அப்புறம் புதரகம் போனதும் அங்கே ஜெட்லாக் முழிப்பு எல்லாம் முடிஞ்சு, நான் வியர்டா ஆனதும் வந்து எழுத ஆரம்பிக்கணும். அங்கேயும் வேலை நேரத்தைப் பொறுத்துத் தான் அமையும். ஆகவே எல்லாரும் ஜாலியாக் கைதட்டிட்டு உற்சாகமாய்க் கொண்டாடுங்கள்.

நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது!! ஏன், எனக்கே தெரியாது!! ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்தே தீருவேன்!!!!!

இது நான் ஒரு முறை சொன்னா ஆயிரம் முறை சொன்னமாதிரி!!!!! எல்லாம் ரஜினி வாய்ஸில் படிச்சுக்குங்க.

அப்புறம் புதரகவாசிகள் எல்லாம் ச்யாம், கார்த்திக், மணிப்ரகாஷ், கோபிநாத், பரணி, ஜி-Z, இன்னும் யார் எல்லாம் இருக்கீங்களோ எல்லாரும் வரவேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்கும்படி மேலிடத்தின் கட்டளை!!!!!!! :D ச்யாம், உண்ணாவிரதத்துக்கு ஒளிஞ்சுட்ட மாதிரி ஒளிஞ்சுக்கப் போறார். அபி அப்பா கலெக்ட் பண்ணிக் கொடுத்த பணத்தை என்ன செஞ்சீங்க கோபிநாத்? பரணி, அலுத்துக்காம சாப்பாட்டு விஷயத்தைக் கவனிங்க. கார்த்திக், என்ன தலைவர் நீங்க? தொண்டர்களை வழி நடத்துங்க!!!!! ஹிஹிஹி, திடீர்னு வந்து பார்ப்பேன். சரியா?

Saturday, March 24, 2007

உண்ணாவிரதம் அறிவிப்பு, முதலமைச்சர் தலைமறைவு?

யப்பா, எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்? நான் வியர்டுன்னு ஒத்துக்கிட்டதிலே. என்ன ஒரு நல்ல மனசு எல்லாருக்கும்!!!!! :)))))))))) வாழ்க! வளர்க! எல்லாருடைய கிறுக்குத் தனங்களும். ஆனால் நான் எடுத்துட்ட அர்த்தம் அந்த adjective form-லே வருமே அந்த அர்த்தம் தான். அதாவது skilled in witchcraft-னு வச்சுக்கலாமா? அல்லது தமிழிலே சொல்லணும்னா உலக இயல்பை மீறியன்னு வச்சுக்கலாமா? (அம்பி, நான் ஒரு வியர்டுன்னு ரொம்பவே சந்தோஷப் பட வேண்டாம். உங்களுக்கு இங்கிலீஷே வராது.)
அதான் என்னை நானே ஒரு ESP-ன்னும் சொல்லிக்கிட்டேன். இந்த ச்யாம் அதை நம்பவே மாட்டேங்கறார். அவருக்காக ஒரு பதிவு தான் இது. அப்புறம் அவரோட அருமைத் தங்கச்சி, பாசமலர், வைரமூக்குத்தி புகழ் "வேதா(ள்), அவர்கள் நான் அவங்க கொடுத்த டாகைப் போடலைன்னு வேறே சொல்லி இருக்காங்க. நறநறநறநற..,.,.,. இதோ அந்த டாகோட லிங்க்: sivamgss.blogspot.com/2006/09/128-5.html இதான் அந்த லிங்க். அவங்க என்னை எழுதச் சொன்னது ஆகஸ்டிலே. நான் அப்போ ஊரில் இல்லாததால் அப்புறமா செப்டம்பரில் எழுதினேன். ஹிஹிஹி, உள்ளூறக் கொஞ்சம் திக் திக் திக் தான். தேடிக் கண்டுபிடிச்சதும்தான் தைரியமா ஒரு வாங்கு வாங்கலாம்னு. அதனாலே அவங்களும் இன்னிக்கு இந்த நிகழ்ச்சியிலே பங்கெடுத்துப்பாங்க. இது தலை(வலி)வியின் ஆனை, ச்சீச்சீ, ஆணை!!! **********************************************************************************
தலைவிக்கு ஐந்தாம் இடமா??

தொண்டர்கள் குமுறல். போராட்டம். உண்ணாவிரதம் அறிவிப்பு. மகளிர் தினத்தன்று எதிர்பாராத விதமாய் "இட்லிவடை" என்பவர் (சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடாமல், சீச்சீ, அதே நினைப்பா வருது.) ஒரு வாக்கெடுப்பு நடத்தினார். இது பற்றிய தகவல்கள் தலைமைக் கழகத்துக்கு முறையாக அறிவிக்கப் படவில்லை. தலைவியின் பெயர் அங்கே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்ததையும் தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் எம் கழகத் தொண்டர்கள் தங்கள் வலிமையான பிரச்சாரத்தாலும், பலமான கள்ள ஓட்டுக்களாலும் தலைவியை முதல் இடத்துக்கும் மேல் ஏதாவது இருந்தால் அதிலே வெற்றி பெற வைத்திருப்பார்கள்.

ஆகவே அந்தத் தேர்தலை ஏற்காமல் கழகத்தின் தலைவர் திரு கார்த்திக்கின் ஆணைப்படி முதலமைச்சர் திரு ச்யாமும், துணை முதலை அமைச்சர் செல்வி வேதா(ள்)வும், உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்கள். இருவருக்கும் தினமும் தண்ணீர் (ச்யாம்,நீங்க நினைக்கிற தண்ணீர் இல்லை) மட்டும் கொடுக்கப் படும். விழாப் பந்தல் செலவையும், போராளிகளைப் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு, பிரியாணி வழங்கும் செலவையும் நிதி அமைச்சர் திரு பரணி தலைமையில், மணிப்ரகாஷ், கோபிநாத், ஜி-Z, போன்றவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

தகவல் தொடர்புத் துறை அமைச்சரான அம்பியும் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக வதந்திகள் உலவுகின்றன. தலைவியின் களப்பணியைப் பாராட்டி தலைவிக்குப் பொற்கிழி பரிசளிக்கப் படும். அப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகும் நபர்களைப் போனால் போகிறது என்று தலைவி வாழ்த்துவார். "இட்லிவடை" இனிமேல் தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுவார்.

முதலமைச்சரான ச்யாம் எங்கே இருந்தாலும் தொண்டர்கள் அவரைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக் கொண்டு வந்து உண்ணாவிரதப் பந்தலில் அமர்த்தும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அவ்வளவு தான் (அவர் எங்கே? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது) ஹிஹிஹி, அது என்னோட மனசாட்சி. கண்டுக்கவேண்டாம். ) இன்னிக்கு யாருமே இருக்க மாட்டாங்க. அதான் தைரியமாப் போஸ்ட் போடறேன். இன்னும் 2 நாள் வரதும் கஷ்டம். வந்து வாழ்த்திட்டுப் போங்க எல்லாரும்.

Thursday, March 22, 2007

நான் ஒரு வியர்டு தானே! தெரியாது?

நான் weird ஆனவளான்னு எழுதச் சொல்லி வல்லி கேட்டிருக்காங்க. ஹிஹி, என்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்க தான் அவங்க. இருந்தாலும் இப்படிக் கேட்டிருக்காங்க. அவங்க tag எழுதச் சொன்ன சிலரிலே நானும் ஒருத்தி. இதை இப்போ எழுதணுமா? எத்தனயோ அரைகுறை போஸ்ட் இருக்கும்போதுன்னு கேட்கிறவங்க எல்லாருக்கும் "அதான் நான் வியர்டு!" அப்படின்னு பதில் சொல்லிக்க ஆசைப் படறேன். இதிலே ஒரு சந்தேகம் என்னன்னா இந்த வார்த்தையை எந்த form-ல் எடுத்துக்கறதுன்னு!!!!!!! Noun formலா? adjective formலா? ஹிஹிஹி, நான் போஸ்ட் போடறதும், அதை நீங்க படிக்கிறதிலே இருந்தும் உங்க எல்லாருக்குமே அது நீங்க சம்மந்தப் பட்ட noun form weird னு புரிஞ்சிருக்கும். அதான் ச்யாம் எப்போவோ சொல்லிட்டாரே எல்லாம் எங்க head letter அப்படின்னு. இப்போ புதுசா உண்ணாவிரதம் வேறே இருக்கணும் அவர் பாவம். தங்கைக்காக! எல்லாம் தங்கைக்காக!

நான் வலைப்பக்கம் திறந்து பதிவுகள் போடறதே ஒரு வியர்டு தானே! அதுவும் இப்போக் கொஞ்ச நாளா இந்த ப்ளாக்கரும் நானும் போடற சண்டை இருக்கே? அதுவே ஒரு வியர்டுதாங்க!! நான் பதிவு போட ஆரம்பிச்சப்போத் தான் வல்லியும் ஆரம்பிச்சாங்க. அதுவே ஒரு வியர்டோன்னு நினைக்கிறேன். ஆரம்பத்திலே நாங்க 2 பேரும் தான் ஒருத்தருக்கொருத்தர் பின்னூட்டம் கொடுத்துக்குவோம். அதுவே ஒரு வியர்டாத் தான் தெரிஞ்சது அப்போ. அதுக்கு அப்புறம் அவங்க பாதையும், என்னோட பாதையும் மாறிப்போச்சு. இருந்தாலும் என்னைவிட அவங்க பதிவு எல்லாம் படங்கள் எல்லாம் நல்லாப் போட்டு, கவனிக்கவும், நல்லாப் போட்டு படிக்கிறதுக்கும் சுலபமா இருக்கும். புரியறதுக்குக் கஷ்டமே இல்லை.

நமக்கு எழுத ஆரம்பிச்சா கை நிக்கறதே இல்லை! அதான் வியர்டு. அப்புறம் என்னதான் முயற்சித்து கார்த்திக் சொன்ன சைஸில் ஃபோட்டோவைத் திருப்பிக் கிருப்பி அட்ஜஸ்ட் செய்து போட்டாலும் அது என்னமோ பக்கம் முழுதும் நிறைஞ்சு தான் வருவேன்னு ஒரே அடம். அதான் இப்போ படம் எல்லாம் வேண்டாம்னு விட்டுட்டேன். எங்கே ஒழுங்கா வருது? எல்லாம் அந்த ப்ளாக்கரோட இஷ்டம். அப்படித்தான் வரும். நான் ஏதோ வியர்டா இருக்கிறதாலே தான் கொஞ்சமாவது பயப்படுது. இல்லாட்டி "வேதாளம்" வேலையை ஆரம்பிச்சுடாதா?


பாவம், உ.பி.ச. தான். என்னாலே கஷ்டப் படறது அவங்க தான். நான் ஒரு பக்கம் நிறையப் போட்டு வச்ச ஃபோட்டோவை வேலை மெனக்கெட்டுத் திருப்பிச் சின்னதா ஆக்கறதும், என்னோட பதிவுகளிலே நான் இல்லாதப்போ கமெண்ட் பப்ளிஷ் செய்யறதும், சிலசமயம் நான் மெயில் செய்யும் போஸ்டைப் போடறதுமா அவங்க படற கஷ்டம் சொல்லி முடியலை! எல்லாம் நான் வியர்டா இருக்கிறதாலே முடியுது. என்னைக் கேட்டா நான் வியர்டுனு சொல்றதை விட ESPன்னு சொல்லிக்கலாமோன்னு தோணுது. அப்படி இருக்கு நான் போஸ்ட் போடறதும், அது பப்ளிஷ் ஆகறதும், நீங்க எல்லாம் அதையும் படிக்கிறதும்.

ஆமாங்க, நான் ஒரு வியர்டு தான். என்னோட கணவரைக் கேளுங்க, கரெக்டாச் சொல்லுவார், ஆமாம்னு. எப்போவும் ரொம்பவே கவனமாத் தான் எடுப்பேன் சாமான்களை. அப்படியும் விழும் அதுவும் சமைக்கும்போது திடீர்னு "வீல்"னு ஒரு கத்துக் கத்துவேன் பாருங்க! மனுஷர் நடுங்கிப் போயிடுவார். கடைசியிலே பார்த்தால் ஒரு கரப்பு எங்கே இருந்தோ வந்து என் காலில் நமஸ்காரம் செய்திருக்கும். வீட்டிலே திடீர் திடீர்னு சாமான்கள் எல்லாம் எப்படின்னே தெரியாம விழறதும், அத்தோட சேர்ந்து சில சமயம் நடக்கும்போதே நான் விழறதும் பார்த்து அவருக்குத் தான் எங்கேயாவது வியர்டா ஆயிடுவோமோன்னு ஒரே பயம். அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்க வேண்டாமா? :D

நான் யாரையும் tag செய்யப் போறதில்லை. இங்கே வரவங்க எல்லாருமே நம்ம மாதிரித் தானே! :))))))))))))))))

Wednesday, March 21, 2007

ஒத்துக்கறேனே, இது மொக்கையோ மொக்கை!!!

2 நாளா நான் ஒண்ணுமே எழுதலைன்னதும், என்னோட அண்ணா பையனின் நண்பர்கள் தொலைபேசி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். (ஹிஹிஹி, அவன் சொன்னது என்னமோ ஒரு பையனைத் தான், சும்மா ஒரு பில்ட்-அப்புக்காக நண்பர்கள்னு எழுதி இருக்கேன்.). அப்பாடா, நம்ம எழுத்துக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருக்காங்களான்னு பார்த்தப்போ ரொம்ப ஆச்சரியமா இருக்கு.

அம்பி மாதிரி "மொக்கைப் பதிவாளர்கள்' பொறாமைப் படறதிலேயும் அர்த்தம் இருக்குன்னு புரிஞ்சது. அது சரி, இப்போ நான் ஏன் 2 நாளா வரலைன்னு யாருமே கேட்கலையே? எனக்கும் ஆணி ஜாஸ்தியாப் போய் நேத்துக் கையிலே, காலிலே குத்த ஆரம்பிச்சுட்டது. என்னோட அண்ணா பையன் வந்து பார்த்துட்டு, சரி, இதானா விஷயம்?னு போனான். அதுவும் தவிர, தொண்டர்கள் எல்லாருக்கும் ஆணி பிடுங்கிப்பிடுங்கி நேரமே இல்லைங்கறாங்க.

அம்பி வேறே "தாமிரபரணி மகாத்மியம்' புத்தகத்தை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார். மதுரையம்பதி, உங்க கிட்டேயாவது புத்தகத்தைக் கொடுத்தாரா அம்பி? அதான் 2 நாள் லீவ் விட்டுட்டேன். சரி, இந்தத் தி.ரா.ச. சார் கிட்டேயாவது அம்பியைப் பத்திப் புகார் கொடுக்கலாம்னு போனா அவர் என்னமோ அம்பி பதிவையும், அம்பியோட தங்கமணி பதிவையும் விட்டா வலை உலகிலே வேறே கண்ணிலே படலைன்னு சொல்லிட்டார். தலை எழுத்தேன்னு திரும்பி வந்தேன்!!!!! :D

ஆனா இந்தப் பதிவு எழுதறதோ, அதைப் பப்ளிஷ் செய்யறதோ என் கையில் இல்லை. எல்லாம் கடவுள் செயல். அதைக் கடந்த 2,3 நாட்களில் நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன். இது வரைக்கும் நான் எழுதறது மட்டும்தான் கடவுள் செயல்னு நினைச்சேன். ஆனால் திடீர்னு வியாழன் அன்று பாருங்க தாமிரபரணி பத்தின பதிவுக்கு அடுத்த பதிவை எழுதிட்டுப் பப்ளிஷ் கொடுத்தா போகவே இல்லை. We are sorry, we are unable to complete your request. The following errors were found : Security Token: Sorry, your request could not be processed Please try again." அப்படின்னே செய்தி கொடுத்து வருந்திட்டே இருந்தாங்க. சரி, ட்ராஃப்ட் போட்டு வச்சுடலாம்னா அதுவும் ஏத்துக்கலை. ஆனால் கமெண்ட் பப்ளிஷ் ஆகுது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு புலி கிட்டேயும், உ.பி.ச. கிட்டேயும் சொல்லி வச்சேன். புலி வெளியே போயிருந்தது. ஆகவே உ.பி.ச. பார்த்துட்டு ஏற்கெனவே நான் ட்ராஃப்ட் போட்டு வச்ச "குற்றாலத்தில் ஓர் ஏமாற்றம்" பப்ளிஷ் செய்ய அது தெரியாமல் நான் நேரே new post open செய்து நான் எழுதினவற்றைப் பப்ளிஷ் செய்ய ஹிஹிஹி, ஒரே நாளில் 2,3 பதிவு வந்துடுச்சு. அதான் வேண்டாம் வம்புன்னு 2 நாள் ஒதுங்கிட்டேன்.

புது ப்ளாக்கர் மாத்தினா ஒரே க்ளிக்தான் அப்படின்னு இந்த ராம் எந்த வேளையில் சொன்னாரோ தெரியலை, எப்போப் போனாலும் அது sorry, sorry, னு வருத்தப் படறதைப் பார்த்து எனக்குக் கண்ணீரே வந்துடுச்சு. அதுவும் பப்ளிஷ் ஆகலைன்னு நினைச்சா அப்போ சரியா செய்யுது. வந்துடுச்சுன்னு நினைச்சா மொத்த போஸ்டும் கோவிந்தாதான். அதான் ரிஸ்கே எடுக்கறதில்லை,. இப்போ எல்லாம் காபி, பேஸ்ட்தான். குறைந்த பட்சம் என்னோட இலக்கியக் குறிப்புக்கள் பாதுகாப்பாவாவது இருக்கும் இல்லையா?

அப்புறம் ஒரு நற்செய்தி, ரொம்பவே தன்னடக்கத்தோடு சொல்லிக்கறேன். டாப் 5 பெண் பதிவாளர்களில் நானும் ஒருத்தியாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறேன். எனக்கு யாரெல்லாம் ஓட்டளித்தார்கள்னு தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஓட்டளிப்பு நடந்ததே புலி சொல்லித்தான் தெரியும். முடிவு வந்ததும் வந்து உறுமல் வாழ்த்துத் தெரிவிச்சுட்டுப் போச்சு. அதுக்கு அப்புறம் தான் நானும் இட்லி வடையில் போய்ப் பார்த்தேன். 5-வது இடம்தான் என்று சொன்னாலும் அந்த அளவு சிலரோட நினைவுகளில் என்னோட பதிவுகளும் பெற்றது கொஞ்சம் சந்தோஷமாய்த்தான் இருந்தது.

இதை உடனே சொல்லவேண்டாம்னு தான் சொல்லலை. ஏற்கெனவே நான் கைலைப் பயணம் முடிந்து வந்த நாள் முதல் என்னுடைய பதிவுகள் அதிகம் கவனிக்கப் படுகிறது என்று தெரிந்தது. இது எல்லாம் அந்தக் கைலைநாதனின் அருளாலும், அவன் தயவாலும் தான் முடிந்தது. இந்தப் பெயர் வாங்கினதை விட குறைந்த பட்சம் இதை நிரந்தரமாய்க் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. எல்லாம் வல்ல அந்தக் கைலைநாதன் அருளை வேண்டி நிற்கிறேன்.


ஹிஹிஹி, இன்னிக்கும் அதே தான் மெசேஜ் வருது. எப்போக் கொடுக்க முடியும்னு தெரியலை, பார்க்கிறேன். மறுபடி உ.பி.ச.வைத் தான் நம்பிக் கொடுக்கணும். வேறே வழியே இல்லை. மண்டை காய்ஞ்சு போச்சு ஏற்கெனவே இதை நினைச்சு. நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்குன்னு சொல்லுவாங்களே அது இது தானா????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!! நான் இந்த லட்சணத்தில் பதிவு போடறச்சேயே நீங்க எல்லாம் தினம் ஒண்ணு போடாதேன்னு சொல்றீங்களே!!!! என்னத்தைச் சொல்றது????? :)))))))))))))))

Friday, March 16, 2007

நெல்லைத் தமிழ், தொல்லைத் தமிழ் இல்லை!!!!

அம்பி புத்தகத்தை அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டார். அதனாலே என்னாலே "தாமிரபரணி" பத்தி இப்போ எழுத முடியாது. புத்தகம் வாங்க வேறே முயற்சி செய்துட்டு இருக்கேன் அம்பி :P. ஆகவே நீங்க அனுப்பவே வேணாம். :P. போகட்டும். இப்போத் திருநெல்வேலித் தமிழைப் பத்திக் கொஞ்சம் சொல்லணும். ஹிஹிஹி, அது நாளைக்கு முடிஞ்சாச் சொல்றேன். இப்போ திசை மாறி அடிக்கிறது காற்று!!!!


திருநெல்வேலியில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் பலர் இருந்திருக்கின்றனர். வ.உ.சி., பாரதியார், ரசிகமணி டி.கே.சி., தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், அவரோட தம்பி தொ.மு.சிதம்பர ரகுநாதன் என்று இந்தக் கால மனிதர்களுக்குச் சற்றும் அறிமுகம் இல்லாத நபர்கள். இதிலே ரசிகமணி குறிப்பிடத் தக்கவர். திருக்குற்றாலத்தில் இருந்து கொண்டு தமிழ்த் தொண்டாற்றிய பெரியவர். அவருடைய "வட்டத் தொட்டி" என்னும் தமிழ்ப்பேரவையில் அந்தக் காலங்களில் கலந்து கொள்ளாதவர்களே கிடையாது என்று சொல்வார்கள். "குற்றால முனிவர்" என்று கல்கி அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ரசிகமணியின் வீடு திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் இருந்து சற்றேத் தள்ளி இருந்தது என்று சொன்னார்கள். தற்சமயம் போய்ப் பார்க்க முடியவில்லை. இவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிட முடியாதது.


இவரின் வீட்டிற்கு வராத அறிஞர்களும், நண்பர்களும் இல்லை என்று சொல்லும் வண்ணம் எந்நேரமும் பலதரப்பட்டவர்களும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதிலே மூதறிஞர் ராஜாஜி, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், தொ.மு.சிதம்பர ரகுநாதன், நீதிபதி எஸ்.மகராஜன் போன்றவர்கள் தவிர அரசு அலுவலர்களில் இருந்து, பல்வேறு கட்சிக்காரர்கள், பல்வேறு மதத்தவர்களும் வந்து இவரின் ஆலோசனையைப் பெற்றுச் சென்றார்கள். திரு தொண்டைமான் அவர்கள் ரசிகமணியைத் தன் குருவாகவே ஏற்றுக் கொண்டவர். தமிழ் மொழியைப் பற்றிய பேச்சைப் பேசுவதே அகெளரவம் என்று நினைத்த ஒரு காலத்தில் நிறையத் தமிழறிஞர்களையும், தமிழ்க் கவிஞர்களையும் பாராட்டிப் பேசியதோடு அல்லாமல் தமிழில் எல்லாம் முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் திரு டி.கே.சி. அவர்கள். மிகத் துணிச்சலோடு அவர் கம்பராமாயாணத்தை நன்கு ஆழ்ந்து படித்து கம்பன் பாடாத பாடல்கள் பல இடைச்செருகலாய் இருப்பதைக் கண்டு பிடித்து அவற்றை நீக்கினார் எத்தனையோ எதிர்ப்புக்களுக்கிடையே!


கம்பராமாயணம் என்றாலே பயந்து நடுங்கி ஓடிய ஒரு காலக்கட்டத்தில் கம்பராமாயணத்தைப் புதுப்பித்து வெளியிட்டதோடல்லாமல் அன்றைய இளைஞர்கள் பலரையும் அதில் கலந்து கொள்ள வைத்து ஊருக்கு ஊர் கம்பராமாயணப் பிரசங்கம், கம்பராமாயணப் பட்டி மன்றங்கள், கம்பன் திருநாள் என்று கம்பன் பிறந்த தேரழுந்தூரிலும், கம்பர் அமரர் ஆன நாட்டரசன் கோட்டையிலும் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தார். பொருள் தெரியாமல் பாடிக் கொண்டிருந்த இசைக்கு மாற்று உருவம் கொடுத்ததோடு அல்லாமல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களைத் தமிழிசை இயக்கம் ஆரம்பிக்கும்படிச் செய்து கலை வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தார். பண்ணும், பரதமும் இன்று எல்லாத் தரப்பினருக்கும் போய்ச் சேர்ந்தது என்றால் அது திரு ரசிகமணி டி.கே.சி.அவர்களாலேயே!


அவர் ஒரு பாடலைப் பற்றிச் சொல்லும் முன் ஒரு முன்னுரை கொடுத்து விட்டுப் பாட்டின் பொருள் சொல்லிவிட்டுப் பாடலை நிறுத்தி நிறுத்தி மிக அழகாய்ப் பாடுவாராம். அவர் பாடலைப் பாடி முடிக்கும்போதே கேட்பவருக்கு மனப்பாடம் ஆகிவிடுமாம். ஆவேசமு, ஆரவாரமும், அடுக்குச் சொற்களும் இல்லாமல் எளிமையாக அதே சமயம் அமைதியும், ஆழமும் நிறைந்து அவர் பேசுவது பற்றிச் சொல்லும்போது தொண்டைமான் இவ்வாறு குறிப்பிடுகிறார்: திரு ரசிகமணி தமிழ்க்கவிதையப் பற்றிப் பேசும் போது அவருடைய நா பேசாது., வாய் பேசும், அவருடைய அடர்ந்த நெற்றிப் புருவம் பேசும், செழித்து வளர்ந்துள்ள அவருடைய மீசை பேசும், எல்லாவற்றுக்கும் மேல் அவருடைய இதயமே நம்முடைய இதயத்தோடு பேசி விஷயத்தை விளங்க வைக்கிறதோடல்லாமல் நம்மை அதில் தேர்ச்சி பெற்றவர்களாக்கி விடும்.
திரு ரசிகமணி அவர்களின் விருந்தோம்பல் பற்றியும் அவருடைய வீட்டுத் தோசை பற்றியும் திரு ராஜாஜி அவர்களும், திரு கல்கி அவர்களும் பழைய கல்கி வார இதழ்களில் எழுதி இருக்கிறார்கள். விருந்தோம்பலில் சிறந்த இலக்கியம் படைத்தவர் அவர் என்று அனுபவித்தவர்கள் பலரும் சொல்கிறார்கள்.வரும் விருந்தினர்களுக்கு உணவும் அளித்துத் தமிழும் அளித்தார் என்றால் என்ன சொல்வது? அவரின் மறைவின் போது கவிமணி சொன்னது இது தான்:"

அன்னைபோல் என்னை அருவியில் நீராட்டி
இன்னமுதும் பக்கத்து இருந்தூட்டி என்னோடு
தங்கு தங்கு என்று சொன்ன தங்கக் குணத்தானை
எங்கு நான் காண்பேன் இனி"
என்று பாடி இருக்கிறார். அவ்வளவு பிரசித்தி பெற்ற அவர் வீட்டுத் தோசையை உண்ட இளம் கவிஞர் ஒருவர் கூறினாராம்:
"அண்ணி சுட்ட தோசையை
ஆசையோடு தின்றவர்
எண்ணிலாதார் அல்லவோஅதில்
யானும் ஒருவன் அல்லனோ!"
என்று. அவ்வலவு இலக்கிய அந்தஸ்து பெற்ற அந்தத் தோசையைப் படைத்த அவர் மனைவியின் பெருமையையும் சொல்ல அளவிடற்கரியது.

தாமிரபரணிக்கு ஆபத்தா?

ம்ம்ம்ம், பதிவில் வரிசை ஒழுங்கு இல்லையென வேதா சொல்கிறார்.நான் என்ன செய்யறது? நானும் கடிதம் முறையில் தான் கொடுத்திருக்கேன். சிலசமயம் இங்கேயும், முத்தமிழிலும் போடும்போது ஒட்டி, வெட்டிச் செய்யும்போது தவறுகள் நேருகிறது. உடனேயே திருத்தித் தான் போடறேன். ஆனாலும் அது சரியாகிறதில்லை. ஒரே அடம்., அப்படியே விட்டுட்டேன். அப்புறம் இந்தத் தேதி வேறே முன்னாலே தானே மாறிக் கொண்டிருந்தது. இப்போ தினமும் மாத்த வேண்டி இருக்கு. இல்லாட்டா பதிவு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு வரதே இல்லை. கூப்பிட்டாலும் வரதில்லை. இந்த மாதிரி தொலைந்து போன இலக்கியங்களுக்குக் கணக்கே இல்லை!!!!!!!!!!:D
***************************************************************************

ஜானகி ராமன் ஹோட்டலில் "பொங்கல்" என்ற பெயரில் கொடுத்த ஒரு ஸ்பூன் உணவோடு நான் எழுந்தப்போ என் கணவர், இன்னும் 2 இட்லியாவது சாப்பிடு என்றார். நான் அதெல்லாம் வேணாம். நாம் போகப் போறது எல்லாம் பெருமாள் கோவில்களாக்கும். அங்கே பிரசாதம் எல்லாம் கிடைக்கும். அதுவும் காலங்காத்தாலே கோஷ்டி எல்லாம் முடிச்சுச் சுடச் சுடப் பிரசாதம் தருவாங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும் என்று மதுரையில் பள்ளி நாட்களில் பிரசாதம் வாங்கிச் சாப்பிட அனுபவத்தில் சொன்னேன். இப்போ எப்படியோ? அதுவும் வடக்கு கிருஷ்ணன் கோயிலில் என்னோட தலையைப் பார்த்தால் தான் கோஷ்டியே ஆரம்பிக்கும். அந்தளவு பிரசித்தி. ஹிஹிஹி. இப்போ விதி "கெக்கே" என்று கெக்கலி கொட்டிச் சிரிக்கிறதைப் பார்க்கவும் இல்லை., கேட்கவும் இல்லை. ரொம்பப் பெருமையா எழுந்துவிட்டேன்.

வசதி கருதியும் கோவில் திறக்கும் நேரத்தை யோசித்தும் முதலில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆரம்பித்தோம். திருநெல்வேலிக்கும், திருச்செந்தூருக்கும் நடுவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது இந்த ஊர். இங்கேயே நவதிருப்பதிகளில் ஒன்றான "கள்ளபிரான் ஆலயமும்" நவ கைலாயத்தில் ஒன்றான "கைலாசநாதர் ஆலயமும்" உள்ள சிறப்பைப் பெற்றது. தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே உள்ளது ஊரும், கோயிலும். அநேகமாய் எல்லாக் கோவில்களும் ஆற்றைச் சுற்றியே அமைந்துள்ளது. தாமிரபரணி இன்னும் கொஞ்சம் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள். கரையெங்கும் மரங்களும், நெல்வயல்களும், வாழைத் தோப்புக்களும்
சூழ மிக அழகான நங்கையாக மிளிர்கிறாள். நகர, நாகரீகங்களோ அதன் சீரழிவோ இன்னும் அவளிடம் ஏற்படவில்லை. மிக அழகிய அரசகுமாரி ஒருத்தி கன்னிமாடத்தில் இருப்பதுபோல் சற்றே பாதுகாப்புடன் இருக்கிறாள். ஒரு சில இடங்களில் கன்னிமாடக் கோட்டையில் விரிசல்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இப்போதே கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் தாமிரபரணியின் புனிதத்துக்குப் பங்கம் ஏற்படும்.

உலகிலேயே மூத்த நதி என்று சொல்லப் படும் தாமிரபரணியானது கிருத யுகத்திலேயே தோன்றியதாய்க் கூறப்படுகிறது. கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் இந்த நதியை "மஹாநதி" என்று அழைக்கிறார். முருகப் பெருமான் எவ்வாறு விசாக நட்சத்திரத்தில் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறதோ அவ்வாறே இந்நதியும் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதாய்க் கூறப்படுகிறது. தாமிரபரணி நான்கு இடங்களில் வடக்கு நோக்கி ஓடுகிறது. அதன் ஆரம்பஸ்தானமான ஏகபொதிகையில் இருந்து பாணதீர்த்தம், பின் கீழே இறங்கும்போது பாபநாசம், திருப்புடைமருதூர், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் வடக்கு நோக்கி ஓடுகின்றது. இதன் தண்ணீரின் சுவையையும், அதன் சக்தியையும் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் பல இடங்களில் ஆகாயத் தாமரைகள் முளைக்க ஆரம்பித்துள்ளது. கரைகள் பரவாயில்லை. மக்களும் பெரும்பாலும் அசுத்தம் செய்வது இல்லை. ஓரளவு விழிப்புணர்ச்சியுடனேயே இருக்கிறார்கள். கிராமங்களில் இது நன்கு தெரிகிறது.

தாமிரபரணியில் திரிவேணி சங்கமம் உள்ளது. "முக்கூடல்" என்னும் ஊரில் "கடனா, அருணா" என்னும் நதிகள் தாமிரபரணியில் கலக்கின்றன. சீவலப்பேரியில் "சிற்றாறு, கயத்தாறு" கலக்கிறது. மற்றும் பழைய காயலில்தான் முத்துக்கள் இன்னும் கிடைக்கிறதாய்ச் சொல்கிறார்கள். இந்த நதிக்கரையில் தான் நவ கைலாயங்கள், நவதிருப்பதிகள் உள்ளன. இந்த நதி தோன்றும் ஏகப் பொதிகையில் இருந்து கடலில் கலக்கும் புன்னைக் காயல் வரை சமீபத்தில் சி.பா. ஆதித்தனாரின் அண்ணன் மகனான பாலசுப்பிரமணிய ஆதித்தன் புனிதப் பயணம் மேற்கொண்டு நதியைச் சுத்தப்படுத்தவும் கரைகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். தாமிரபரணி மட்டுமல்லாது அதன் பாசனக் குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றன. தமிழ்நாட்டுக்கே ஒரே வற்றாத ஜீவநதியான இதன் மீது "தாமிரபரணி மகாத்மியம்" என்னும் புத்தகமே உள்ளது. ஆழ்வார்குறிச்சி என்னும் ஊரில் உள்ள மூலவர் சிலை தாமிரபரணித் தண்ணீரில் உள்ள தாமிரத்தை எடுத்துச் செய்யப் பட்டிருக்கிறது. இது எல்லாம் நான் புத்தகங்களில் இருந்து திரட்டிய தகவல். "தாமிரபரணி மகாத்மியம்" புத்தகம் இன்னும் எனக்கு அம்பி அனுப்பவில்லை. நறநறநற நறநறநற.அவர் அனுப்பினதும் மற்ற விஷயங்கள் எழுதுகிறேன்.

Thursday, March 15, 2007

குற்றாலம் தந்த ஏமாற்றம்

முத்தமிழ்க் குழுமப் போட்டிக்கு நான் எழுதுவதாகவே இல்லை. ஏனெனில் நிறைய எழுதுவது என்று வைத்துக் கொண்டால் சில விஷயங்களுக்குக் கொடுத்து வரும் முன்னுரிமை பாதிக்கப் படும். அந்த வேலை அப்படியே நின்று போகும் அல்லது தாமதம் ஆகும். என்றாலும் இப்போது நாங்கள் திருநெல்வேலிப் பக்கம் போய் விட்டு வந்ததும் திருக்குற்றாலத்தைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எழுதுவது தமிழிலும் இருக்கவேண்டும், தமிழ் நாட்டைப் பற்றியும் இருக்க வேண்டும் என்பது போட்டியின் விதி. தமிழ் பிறந்த இடமான குற்றாலத்தைப் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும் அல்லவா?அதான் நான் பதிவாகப் போட நினைத்த விஷயத்தை இங்கே போட்டிக்காக எழுதுகிறேன்.

என்னை விடச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் அறிஞர்களும்இருக்கும் இடத்தில் "கொல்லன் பட்டறையில் ஊசிக்கு என்ன வேலை"என்பதைப் போல் ஒரு சிறு முயற்சி,அவ்வளவு தான்.

வடநாட்டு முனியான அகத்தியர் இறைவன் கட்டளைப்படி தென்னாடு வருகிறார். வடமொழியில் எல்லை தேர்ந்தவர் ஆன அவர் தமிழ் மொழியின் பால் பற்று உள்ளவர். அம்மொழியைச் சிறப்பித்தவர். இவர் வரும் காலை இக்குற்றால மலையில் மஹாவிஷ்ணுவே கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி வடக்கே இருந்து தெற்கே வந்த அகத்தியர் கோயிலில் தரிசனம் செய்யப் போகச் சிவனடியாரான அவரை கோயிலின் உள்ளே விட அர்ச்சகர் மறுக்கிறார். மனவருத்தத்தோடு நடந்த அகத்தியர் அங்கிருந்து பக்கத்தில் உள்ள இலஞ்சியை அடைகிறார். அங்கே தமிழ்க்கடவுளாம் முருகனின் தாள் பணிகிறார். முருகனோ எனில் விளையாட்டுப் பிள்ளை!அர்ச்சகர்களை ஏமாற்றி விட்டு உள்ளே போகுமாறு அகத்தியருக்கு அறிவுரை கூறி மறைய, அகத்தியரும் துவாதச நாமம் தரித்து பரம வைஷ்ணவராய் மாறிவருகிறார். அவருக்கு அனுமதி கிடைக்கிறது. உள்ளே சென்ற அகத்தியர் தாமே தனியாகப் பூஜை செய்ய வேண்டும்என்று வேண்டிக் கொண்டு கருவறைக்கதவைச் சார்த்திக் கொண்டு, "நின்ற சீர் நெடுமாலாய்க்" காட்சி அளித்த திருமாலைக் கையால் தலையில் அழுத்திக் "குறுகிக் குறுகுக" என்று கைலாச நாதனை வேண்டி நினைக்க குறுகிப் போன திருமால் சிவலிங்க வடிவில் குற்றால நாதன் ஆகிறார்.


இப்படி மாறிய இறைவனைக் குறித்துஅகத்தியரே பாடியது:
"முத்தனே முளரிக் கண்ணா!
மூலம் என்று அழைத்த வேழப்பத்தியின் எல்லை காக்கும்பகவனே!
திகிரியாளா!சுத்தனே! அருள் சூல் கொண்டசுந்தரக் கதுப்பினானே!
நத்தணி செவிய கோலநாடுதற்கரிய நம்பி!" என்று இருவருக்கும் பொருத்தமாகப் பாடித் துதிக்கிறார்.
குற்றால நாதரின் வலப்பக்கத்தில் தனிக்கோயிலில் "குழல்வாய் மொழி அம்மை"கோயில் கொண்டிருக்கிறாள். தலவிருட்சமான குறும்பலா நான்கு வேதங்களும் தவம் செய்து பலா மரரூபமாய் அங்கே இருப்பாதாய் ஐதீகம்.அங்கே ஒரு லிங்கம். இம்மரத்துப் பழத்தை வானரங்கள் தவிர வேறு யாரும் பறித்து உண்ணுவது இல்லை. இறைவன் "குற்றாலம், சமருகம்" என்ற பெயருடைய ஆத்தி மர நிழலிலே குடிகொண்டதால் குற்றாலம் என்ற பெயர்
உண்டாயிற்று என்று சொல்கிறார்கள். மலை அதிக உயரம் இல்லை. 3,000 அடியில்இருந்து 5,000 அடிக்குள் தான் இருக்கும்.மூன்று சிகரங்கள் உள்ளதால் "திரிகூடம்"என்ற பெயரும் உண்டு.

மலைக்காடுகளுக்குச் செண்பகக்காடு எனப்பெயர் உண்டு. நிறைய மூலிகைகள் அடங்கிய மலை என்றும் சொல்கிறார்கள். இம்மலையின் உச்சியில் இருந்து குதித்துவருவது தான் சிற்றாறு. மிக்க உயரத்தில் தேனருவி இருக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.அதற்கு அடுத்து செண்பக தேவி அருவி.

இங்கே செல்லவும் காடுகளின் வழியாய்த்தான் போக வேண்டி இருக்கிறது.குற்றாலத்தில் சாரல் காலம் மக்கள் கூட்டம் கூடுவதால் அப்போது போய் வருவதுசற்றுப் பாதுகாப்பு என்று கூறுகிறார்கள்.

அதற்குப் பின் தான் தற்சமயம் நாம் பார்க்கும் முக்கிய அருவி என்று சொல்லப்படும் அருவி. சுமார் 200 அடி உயரத்தில் இருந்து விழும் நீர் இடையில் உள்ள பாறைகளிலும் விழுந்து கீழே விழுவதால் வேகம் குறைவாக இருப்பதால் குளிக்க ஏற்றவாறு உள்ளது. அதுவும் முதலில்
பொங்குமாங்கடலில் விழுந்து பின்னே கீழே விழுகிறது.

"வானரங்கள் கனி கொடுத்து
மந்தியோடு கொஞ்சும்மந்திசிந்து
கனிகளுக்குவான்கவிகள் கெஞ்சும்தேனருவித்
திரை எழும்பிவானின் வழி ஒழுகும்செங்கதிரோன்
பரிக்காலும்தேர்க்காலும் வழுகும்"

குற்றாலக் குறவஞ்சியின் இந்தப் பாட்டைப் படித்த பள்ளி நாட்களில் இருந்தே குற்றாலத்தைப் பற்றிய கனவுகளில் இருந்த எனக்கு இப்போதைய குற்றாலம் ஏமாற்றத்தையேஅளித்தது. சுட்டுப் பொசுக்குகிற வெயிலில் முக்கிய அருவியில் குளித்துக்கொண்டிருந்த மக்களின் கூச்சல் அருவியின் ஓசையை அமுக்குகிறது. இருக்கிறது, இப்போதும் இருக்கிறது பலாவும், மாமரங்களும், நெல்லிக்கனிகளும்,அதை உண்ணும் வானரங்களும். என்றாலும் அதை எல்லாம் அழுத்திக் கொண்டு இப்போது வந்திருக்கும் கட்டிடங்கள் அந்த அழகை மங்கச்செய்கின்றது.
குற்றால நாதரோ என்றால் கேட்கவே வேண்டாம். ஆன்மீக ஐதீகப்படிக் "கு" என்பதை ஒரு பக்கம் இந்தப் பூமியாகவும், இன்னொரு பக்கம் பிறவிப்பிணியாகவும் கொண்டால் "தாலம்"என்ற சொல்லானது அதைத் தீர்க்கும் என்று குறிக்கிறதாய்ச் சொல்கிறார்கள்.இங்கே உள்ள பராசக்தி யோகத்தில் இருக்கிறாள். இவளே மூவரையும் பயந்தாள்எனவும் சொல்கிறார்கள். அதனாலும்இதற்குத் திரிகூடம் என்னும் பெயர்வந்ததாயும் கூறுகிறார்கள். இவ்வுலகம் தோன்ற மூல காரணமாயிருந்த காரணத்தால் "தரணி பீடம்" எனவும் சொல்கிறார்கள். அதைக் குறிக்க ஒரு தொட்டில் இந்தப் பராசக்தி பீடத்தின் சன்னதியில் ஆடுகிறது.
இப்படிப்பட்டகோயில் இன்று இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் மன வருத்தம் மேலிடுகிறது. என்ன தான் முன் மண்டபம் யாத்திரீகர் தங்க ஏற்பாடு செய்து கட்டி இருந்தாலும் சாப்பாட்டு இலைகளில் இருந்து எல்லா அசுத்தங்களையும் அங்கே பொதுமக்கள் செய்கிறார்கள். கண்டும் காணாத கோயில் சிப்பந்திகள்.

கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் மேலே கொஞ்சம் ஏறிப் போனால் வருகிறது பிரசித்தி பெற்ற "சித்திர சபை". கோயிலின் வடக்கே உள்ள இந்தச் சித்திர சபை அழியும் நிலையில் உள்ளது. அரசின் பாதுகாப்பில் உள்ள இதற்கு உள்ளே செல்லக் கட்டணம் வாங்குகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலின் எதிரே உள்ள குளமும் சரி, அதன் நடுவில் உள்ள வசந்த மண்டபமும் சரி பாழடைந்த நிலையில்உள்ளது. முழுதும் சித்திரங்களால் நிறைந்த இந்தக் கோயிலில் "நடராஜர்" சித்திர உருவில் காட்சி அளிக்கிறார்.மூலிகைகளைக் குழைத்துத் தீட்டிய வண்ணங்கள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இவற்றில் நம் மக்கள் கைவண்ணம் வேறே! அவர்களின் அன்பைக் காட்டிக் கொள்ள இந்தச் சித்திரங்கள் தான் கிடைத்ததா புரியவில்லை. இப்போது சற்றுத் தடுப்புப்போட்டிருந்தாலும் பெரும்பாலான சித்திரங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. 64 திருவிளையாடல்களைக் காட்டும் சித்திரங்கள் பாதி அழிந்து உள்ளது. நடராஜர் மட்டும் பிழைத்தார். எதோ விட்டு வைத்திருக்கிறார்கள். அரசுமனது வைத்தால் தான் நடராஜரோடுசேர்ந்து எல்லாருக்கும் வழி பிறக்கும். மிகுந்த மனவேதனையோடு திரும்ப
வேண்டியதாயிற்று.

Tuesday, March 13, 2007

மீண்டும் ஜானகிராமன் ஹோட்டல்!!!!!!!

ரொம்ப நாளைக்கு முன்னே இ.கொ.வும், நிலாரசிகனுமா? இல்லை ரசிகவ்
ஞானியாரா? தெரியலை, இரண்டு பேரும் "ஜானகிராமன் ஹோட்டலை"ப் பத்திப் பேசிக்கிட்டாங்க, அவங்க பதிவோட பின்னூட்டங்களிலே. அதனாலே எனக்கு ஜானகிராமன் ஹோட்டல் என்பது பற்றி ஓரளவு நினைவு இருந்தது. "சந்திரவிலாஸ்" ஹோட்டலைப் பற்றி பாலா இப்போது கூறுகிறார். பதிவுகளிலே எழுத மாட்டாரோ? இந்த அம்பாசமுத்திரம் "கெளரிசங்கர் ஹோட்டல்" பத்தி டுபுக்குவும் ஒண்ணுமே எழுதலை. போதாக்குறைக்கு
டுபுக்கு வந்து என்னமோ அம்பி என்கிட்டே எல்லாத்தையும் சொல்லி
இருக்கிற மாதிரி நினைத்துக் கொண்டு, "அம்பி சொல்லலையா?" என்று கேட்கிறார். எங்கே? அம்பிக்குத் தங்கமணியோட கடலை போடவே நேரம் பத்தலை. எல்லாம் இந்தக் கார்த்திக்கைச் சொல்லணும். அவருக்குப் போய்த் தகவல் தொடர்புத் துறை! எல்லாம் நேரம்! கிடைக்கும் மிச்ச நேரத்தில் கணேசன், பாவம், அப்பாவி, எழுதிக் கொடுக்கிறதைக் காப்பி, பேஸ்ட் பண்ணிட்டுப் பின்னூட்டம் வாங்கிப்பார். இதிலே நம்ம பதிவு எல்லாம்
அவர் கண்ணிலே மொக்கையோ மொக்கை. நேத்து வேணாக் கொஞ்சம் பெரிசு. அது உண்மையிலே "பூங்கா" பெண்கள் சிறப்பிதழுக்கு எழுதினது. நேத்து அதிலே போட்டிருக்காங்கன்னதும் இங்கேயும் போட்டேன். எழுதிட்டு அப்படியே அனுப்பிடறேனா? எடிட் எல்லாம் செய்யற வழக்கமே இல்லையே! ஹிஹிஹி, நிறையப் பேர் படிக்காம ஓடிட்டாங்க போல் இருக்கு. கார்த்திக்
ஆளே காணோம்.! வேதா தலையே காட்டலை. மணிப்ரகாஷ் டாமேஜர்
கொடுத்த ஆணியைப் பிடுங்கிட்டு இருக்கார். மதுரையம்பதி இப்போத் தான் ஊரிலே இருந்து வந்திருக்கார். கைப்புள்ள ஆணியோ ஆணின்னு கூவிட்டு இருக்கார். ராம் தான் ரொம்பவே ராயலா "தாரை தப்பட்டை"யோட அலைஞ்சிட்டு இருக்கார். சிவா "கடமை வீரன்"னு போர்டு மாட்டிட்டுத் திரியறார். அப்போ அப்போ"சாட்"டுக்கு வந்து "இன்று ஒரு தகவல்" என்று புதுச் செய்திகள் சுடச் சுடக் கொடுத்துட்டுப் போறார். எங்கேயோ சூடானில் இருந்துட்டு அவருக்கு எல்லாம் தெரியுது. நமக்கு ஒண்ணும் தெரியலை. போகட்டும். இப்போ 3 நாளா மயங்கி விழுந்த நான் என்ன ஆனேன்னு பார்க்கலாம்.

************************************************

அது ஒண்ணும் இல்லை. பாலோட விலையப் பார்த்துட்டுத் தான்னு என்
கணவர் உடனேயே புரிஞ்சிட்டுத் தண்ணீர் தெளித்து (நல்லவேளையா நிறையத் (தாமிரபரணி தயவாலே) தண்ணீர் கிடைக்குது) எழுப்பிக் கீழே போய்ப் பார்ப்போம் என்று கூட்டிப் போனார். கீழே போனதும் பக்கத்திலேயே இருந்த ரெஸ்டாரண்டுக்குப் போனோம். அங்கே இட்டிலி விலை கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது. என்ன? சென்னை, சரவணபவனுக்குத் தம்பி போல் இருக்கு. அவர் மட்டும் ஆர்டர் செய்து கொண்டார். என்னத்தைச் சொல்றது? 2 வகைச் சட்டினிகள், இட்டிலி மிளகாய்த்தூள்,நல்ல எண்ணெய் போட்டு எல்லாம் கிண்ணங்களில் கொண்டு வைத்த அழகு இருக்கே, அதைப் பார்த்ததுமே என் கணவருக்கு உச்சி குளிர்ந்து விட்டது. சட்டினிக் கிண்ணங்கள் வேறே கொஞ்சம் பெரியதாய் இருக்கவே, சட்டினிக்கே
இவ்வளவு பெரிய கிண்ணம், அதுவும் தனியாய் வைக்கிறார்கள் என்ற
எதிர்பார்ப்புடன் இருந்தால் பெரிய சைஸ் ஸ்டிக்கர் பொட்டுப் போல் இட்டிலிகள். ஹிஹிஹி, சட்டினிக்குத் தான் இட்டிலின்னு அப்புறமாத் தான் புரிஞ்சது. ம்ம்ம்ம்., விலையும் 2 இட்டிலி 10 ரூ. இந்த விலைக்கு புழுங்கல் அரிசி வாங்கி, உளுந்தும் போட்டு அரைத்தால் எவ்வளவு இட்டிலி என்ற கணக்கை மனம் போட அவர் இட்டிலியும், தோசையும் சாப்பிட்டு
முடித்தார். தோசைக்கென்று தனிப் ப்ளேட் வைத்திருக்கிறார்கள். அதிலே வருகிறது. தோசை கொஞ்சம் நியாயமாய் இருந்தது.


அப்புறம் ரிசப்ஷனில் நாங்க மறுநாள் காலை வெளியே போக வண்டிக்குச் சொல்லிவிட்டு வந்தோம். டிரைவரும் வந்து பேசி உறுதிப் படுத்திக் கொண்டு போனார்.
முதல் நாளில் "நவதிருப்பதி"யை முடித்துக் கொண்டு மறுநாள் சங்கரன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் (அங்கே இருந்து மதுரை ரொம்பக் கிட்டே ஹிஹிஹி) போயிட்டுப் பின் அங்கே இருந்து தென்காசி, குற்றாலம்
போவதாயும், மூன்றாம் நாள் பாபநாசம், நவகைலாயத்தில் பார்க்க முடிந்த
கோவில்கள் என்றும் திட்டம் போட்டுக் கொண்டோம். மூன்றாம் நாள் சென்னை திரும்ப டிக்கெட் வாங்கிட்டோம். அதனால் பார்க்க முடிந்த கோவில்கள் என்று குறைத்துக் கொண்டோம். பாபநாசத்தில் இருந்து வரும் வழியிலேயே கல்லிடைக் குறிச்சி வருவதால் கடைசி நாள் அம்பி
வீட்டுக்குப் போய் வத்தி வைக்கும் வேலையை வைத்துக் கொண்டேன். அன்று இரவு நல்லாத் தூங்கி மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு (முதல்நாள் சாப்பிடலையா ஒரே பசி) டிஃபன் சாப்பிடலாம்னு கீழே போய்ப் பொங்கல் ஆர்டர் கொடுத்தேன், முதல் நாள் இட்டிலி
சைஸைப் பார்த்த காரணத்தால் பொங்கல் கொஞ்சம் கணிசமாய் வயிறு நிறைய இருக்கும்னு ஒரு எண்ணம் . ஒரு தட்டு வந்தது. பொங்கல் இல்லை. தட்டு வந்தது. அதில் ஓரமாய்க் கொஞ்சமே கொஞ்சம் ஒரு நெல்லிக்காய் அளவு ஏதோ வைத்திருந்தது. சரி, சைட் டிஷ் போல் இருக்கு, பொங்கல் வரும்னு காத்திருந்தால் ஒண்ணுமே வரலை. சூப்பர்வைஸரைக்
கூப்பிட்டேன். (இதுக்குக் குறைச்சல் இல்லை) அவரிடம், "நான் பொங்கல்
ஆர்டர் பண்ணினேன், இன்னும் வரலியே?" என்றதற்கு, அவர் என்னைப் பார்த்த
பார்வையில் நான் ஒரு அல்பம் என்று சொல்லாமல் சொல்லவே, என்னவோ, ஏதோன்னு நினைச்சு என்னன்னு கேட்டால், "என்ன மேடம்! (மனசுக்குள் இவங்களுக்கு இது வேறேயான்னு நினைச்சிருப்பார்), இதோ தட்டிலே இருக்கே, இது என்ன?" என்றார் அதட்டலே இல்லாத குரலில். "இதுவா?" என்றேன் ஈனஸ்வரத்தில். என் குரல் எனக்கே கேட்கலை. ஆமாம், என்றார் அவர். சரினு பயத்தோடு சொல்லிட்டு கொடுத்திருந்த ஸ்பூனால் அதை எடுத்தால் பூராவும்(ஹிஹிஹி இருந்ததே ஒரு சுண்டைக்காய் அளவு. அதை எத்தனை தரம் எடுக்கிறது?) ஒரேயடியாக வந்துட்டது. அப்படியே வாயில் போட்டால் ஒரு வாய்க்குக் கூட இல்லை. ஆனால் அந்த சூபர்வைஸர் மறுபடி என்னைப் பார்த்த பார்வை இருக்கே! என்னத்தைச் சொல்றது?

Monday, March 12, 2007

ஆன்மீக வழியில் பெண்கள்??!!!!

"உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூற்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை
நாடுகள்யாவுஞ்சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுதலார் நங்கள்
பாரததேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்."

இது பாரதியின் புதுமைப்பெண் பற்றிய கவிதைத்தொகுப்பில் உள்ள ஒரு பாடல்.பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்றே நாம் சொல்கிறோம். பெண்கள் வேதகாலம் தொட்டே பெரும் ஞானிகளாயும்,அறிவாளிகளாயும்தான் இருந்து வந்திருக்கிறார்கள். இதற்குப் பல ரிஷிபத்தினிகளை உதாரணம் காட்டலாம். தவத்தாலும், ஒழுக்கத்தாலும் சிறந்த அனசூயை அந்த கங்கையையே தான்
நினைத்த இடத்துக்குக் கொண்டு வந்தாள். அருந்ததியோ வசிஷ்டரின் பாதம் பணிந்து நடந்து அவருடன் நிலையான நட்சத்திரப்பதவி பெற்றாள். இன்னும் இலக்கியங்களில் இடம் பெற்ற பெண்களும் உண்டு. காவியங்களில் இடம் பெற்ற பெண்களும் உண்டு. இப்படி எல்லா வகையிலும் பெண்கள் சிறந்து இருந்திருக்கிறார்கள். வீரத்திலும் தமிழ் நாட்டு மங்கையர் சிறந்தவர்கள். இதற்கு எல்லாம் காரணமே அவர்கள் கடைப்பிடித்த ஆன்மீக வழி தான்.

ஆன்மீகம் என்றாலே ஏதோ குறிப்பிட்ட மதம்சார்ந்ததாய்க் காணப் படும் இன்றைய காலகட்டத்தில் இது முரணாகத் தான் தோன்றும். ஆனால் ஆன்மீகம் இல்லாத பெண்களே இல்லை. இன்றைக்குப் பல வீடுகளில் விவாக ரத்து என்பது கேட்டுக் கொண்டிருக்கிறோம்.அதற்குக் காரணம் சகிப்புத் தன்மை இல்லாமை. ஆன்மீகம் சார்ந்த கல்வி கற்பவர்களோ அதை வென்று அதிலிருந்து மீண்டு வெளியே வருவார்கள். இல்லறத்துக்கு ஆதாரமாக இருப்பவள் பெண். இனிக்கும் இல்லறத்தில் ஆன்மீகம் அனுபவிப்பதோ வெகு எளிது.

இல்லறத்தையும் கைவிடாமல், மனதையும் பக்குவப் படுத்தி ஆன்மீக வழியில் திருப்பி அந்த அந்தக் காலகட்டத்தில் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து வீட்டைக் கோயிலாக மாற்றுவது பெண்ணே! அதற்காக அதிகம் சிரமப்படவே வேண்டாம். தினமும் காலையில் விளக்கேற்றி வைத்துக் கடவுளை நினைத்து அல்லது அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்து அந்த வேளை உணவை உண்ணும்போது அது வெறும் "சாதம்" ஆக இல்லாமல் "பிரசாதம்" ஆகிறது. அதனுடைய மஹிமையே தனி தானே அல்லவா?

மேலும் இல்லறத்தில் மனைவியின் பணி வேர் போன்றது.வேரானது எவ்வாறு பூமிக்குள் மறைந்து நின்று மரத்தைத் தாங்குகிறதோ, அது போல் பெண்ணானவள் தன் குடும்பத்தின் ஆணிவேர் போன்றவள். குடும்பம் வளரமெளனமாகவும் அதே சமயம் மறைமுகமாகவும் வேண்டியது செய்ய வேண்டும். அத்தகைய சக்தியை அவளுக்குத் தருவது ஆன்மீகம் ஒன்றுதான். இந்த ஆன்மீகத்தால் உயர்ந்த பெண்மணிகள் என்று பார்த்தால் ஒரு பெரிய பட்டியலே போடலாம்.

ஒளவையார்,காரைக்காலம்மையார், திலகவதியார், பாண்டியன் மனைவி பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி, அகஸ்திய முனிவரின்மனைவி லோபா முத்திரா, மண்டன மிஸ்ரரின் மனைவி சரஸவாணி,தியாகைய்யரின் மனைவி, அன்னைசாரதாமணி தேவி, பக்த மீரா, ஆண்டாள், திருநீலகண்டரின் மனைவி, மராட்டி மன்னன் சிவாஜியின் (எங்கேயாவது சிஷ்யகேடிங்க, சீச்சீ, சிஷ்யகோடிங்க "ரஜினி சிவாஜி"ன்னு நினைச்சுக்கும்,அதான் டிஸ்கி) என்று இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இந்தப்பெண்கள் யாவரும் தம் தம் பக்தியைப் பரம்பரைச் சொத்து ஆக்கிக் காத்து அதை நம்மிடம் தந்திருக்கிறார்கள்.

ஆனால் நாம்?அதைப் பாதுகாக்கிறோமா என்றால் இல்லை எனத் தான் சொல்ல வேண்டும். இன்றைக்கும் நம் பண்டிகைகள் எல்லாம் ஓரளவாவது வண்ணமயமாய்க் காட்சி அளிக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெண்கள் தான். ஏதோ ஒரு நைவேத்தியம் தயாரித்து அதை ஸ்வாமிக்குப் படைத்து உள்ளன்போடு வழிபட்டாலே போதுமே! கணவனதும், குழந்தைகளுடையதும் உடல், உள்ளம் மட்டுமில்லாமல் அவர்களின்ஆன்மாவையும் கடவுளின் காலடியில் செலுத்துவதற்கு ஒரு பெண்ணால் தான் முடியும். ஆகவே கல்வியோடு சேர்ந்தே ஆன்மீகமும் கற்பிக்கப் படவேண்டும்.இல்லறம் என்பதற்கு அர்த்தமேஇல்+அறம்= இல்வாழ்க்கையை அறவழியில்நடத்திச் செல்லுதல் என்று பொருள்.

மரம்வளர எப்படி ஒரு விதையைப் போட்டு வளர்க்கிறோமோ,அது போல் அறம் வளரநம் ஆன்மா வளர வேண்டும். ஆன்மாவளர உள்ளம் ஆன்மீகப் பாதையில்செல்ல வேண்டும். அதற்குப் பக்தி ஒன்றேபெண்களுக்குக் கை கொடுக்கும்.பெண்களைக் கண்டாலே அறம் நினைவுக்கு வர வேண்டும். நம்ம ஊர்களிலே தெய்வத்துக்குக் கூட "அறம் வளர்த்தநாயகி" என்று தான் பெயர் வைக்கிறோம்.சாப்பிடும்போது கூட மனதில் சாந்தியோடும், நிம்மதியோடும் தான் சாப்பிடவேண்டும். ஆனால் நாம்? தொலைக்காட்சிகளில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு,அதனோடு அழுது கொண்டு சாப்பிடுகிறோம். அதன் தாக்கமும் தான் இன்றையப் பெண்களிடம் நிறையவே உள்ளது. ஒலி அதிர்வுகள் அது எப்படிப்பட்டதாய் இருந்தாலும் மனதைப்பாதிப்பது அறிவியல் பூர்வமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று. அத்தகைய ஒலிஅதிர்வுகள் நம் காதில் விழுந்து கொண்டிருக்கும்போது நம் வேலையை நாம் செய்தோமானால் அவற்றின் பாதிப்பு கட்டாயம் நம் வேலையையும் பாதிக்கும்.

"ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!" என்றான் பாட்டுக்கொரு புலவன் பாரதி.ஆனால் இன்று ஒரு பக்கம் சாதனைப்பெண்களுக்குப் பாராட்டு விழா என்று பத்திரிகைச் செய்திகள் வருகிறது. அதே பத்திரிகைகளில் முதல் இரவிலேயே கணவனைக் கொன்ற பெண்கள், காதலன் ஏமாற்றினால் கொன்ற பெண்கள்,காதலனிடமும், கணவனிடமும் ஏமாந்த பெண்கள் என்று பத்திரிகைகளில் செய்தியை முந்தித் தரும் ஒரு விஷயமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? குறைந்தபட்ச ஒழுக்கக் கல்வி கூடக் கற்பிக்கப்படாதது தான் என்பது என்னோட கருத்து.இதிலே எந்தப் பக்கதிலும் மதம் சார்பில்லை.

அரசியல்வாதிகள் அதைப்புரிந்து கொள்ள வேண்டும். 2 நாள் முன்னால் மஹாராஷ்ட்ராவில் புனே நகரில்நடந்த "போதை மருந்து விருந்து" ஒன்றில் அகப்பட்டவர்கள் பலர் இளம்பெண்கள்.ஏன் இந்த அவலநிலை? பெற்றோர் கவனிப்பு இல்லாமையும், முறையான ஆன்மீகம் தெரியாமையும் தான். பெற்றோர்அநேகர் இன்றைய நாட்களில் இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் ஆக உள்ளார்கள். பெரும்பாலும் தனிக்குடித்தனம்தான். ஆகவே தனியாக விடப் படும் அந்தப் பெண்கள் சூழ்நிலை காரணமாயும்,தனிமை காரணமாயும் முறையான வழிகாட்டுதல் இன்றியும், எது உண்மையான சுகம் என்று சுகத்தின் அளவுகோல் தெரியாமலும் தவறானவழிகளில் ஈர்க்கப் படுகிறார்கள். சிறுவயதிலேயே ஆன்மீகக் கல்வி கற்பிக்கப் பட்டால் அவர்களுக்குள் ஒருதெளிவும், ஞானமும் ஏற்படும்.

"நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட
பார்வையும்திமிர்ந்த ஞானச் செருக்கும்" என்று பாரதி சொன்ன அந்த ஞானச் செருக்கு இது
தான். பகலும், இரவும் போலத் தான் ஆன்மீகமும், இல்லறமும். இல்லறத்தின் செழிப்புக்கு ஆன்மீகம் வழிகாட்டி. இது எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.கல்யாணத்தில் ஆரம்பிக்கும் இந்த ஆன்மீகம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தாயார், தகப்பனார், உறவின் முறைகள்,அக்கம்பக்கம், நட்பு வட்டம் என்று பெருகிக் கடைசியில் ஒரு முடிவில்லாமல்
பொது நலனாக மாற வாய்ப்புண்டு. அது தான் உண்மையான ஆன்மீகம். கட்டுப்பாட்டுடன் செயல்படும் இல்லறத்தில் தான் இது நிலைக்கும்.நைந்து போயிருக்கும் மனத்தையும்,உடலையும் ஒழுங்கு படுத்தி உணர்ச்சிகளைத் தன் வசப்படுத்த "யோகா","பிராணாயாமம்", போன்றவைகளைத் தேடிப்பிடித்துக் கற்றுக் கொள்ள வேண்டும். இவை மனதையும் ஒருமுகப் படுத்தி, வாழ்வின் லட்சியத்தில் வெற்றி அடையவும் வழிசெய்கிறது.கோபம் குறையும். கோபத்தால்எந்தப் பயனும் விளைவது இல்லை. மனஅமைதி கொடுக்கப் பிராணாயாமமும், உடல்வலுவைக் கொடுக்க யோகாவும் கட்டாயம் எல்லாப் பெண்களும் கற்றுக் கொள்ளவேண்டிய ஒன்று ஆகும். எத்தனையோ தீவிர நாத்திகர்கள் தம் தம் மனைவிமார்களின் ஆன்மீக வழியில் திரும்பி இருக்கிறார்கள். அதைப் பெருமையுடனும் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆகவே பெண்களை உயர்த்த ஒரே வழி அவர்கள் ஆன்மீகம்சார்ந்த கல்வியைச் சிறு வயதில் இருந்தேபெறுவது தான்.
"போற்றி, போற்றி, ஜெயஜெய போற்றி!
இப்புதுமைப் பெ ண்ணொளி வாழி
பல்லாண்டிங்கே!"மாற்றி வையம் புதுமையுறச் செய்துமனிதர் தம்மை அமரர்களாக்கவேஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை, நல்அருளினாலொரு கன்னிகையாகியேதேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்."

Sunday, March 11, 2007

ஒரு மொக்கையான உதவி!!!!!!!!!

தொண்டர் படைக்கும், குண்டர் படைக்கும், சிஷ்ய கேடிகளுக்கும், சீச்சீ, சிஷ்ய
கோடிகளுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள். என்னோட "ஆன்மீகப்
பயணம்" பதிவிலே போட்டு இருக்கிற கைலை யாத்திரைக் கட்டுரைகளைத்
தொகுத்து pdf document with pictures போட்டு விட்டு குழுமத்திற்கு
அனுப்பினேன். ஹிஹிஹி, தகவல் மிகவும் நீளமாக உள்ளது என்று திரும்பி வந்து விட்டது. 1MBயை விட அதிகமாய் இருக்கிறது. 1620K இருக்கிறது. சில
படங்களை ரொம்பவே வருத்தத்துடன் எடுத்து விட்டு மறுபடி கொடுத்தேன். அதே தான் பதில். என்ன செய்யலாம்? எடிட் எல்லாம் செய்தால் என்னோட
இலக்கியக் குறிப்புக்கள் எல்லாம் போயிடுமே? தணிக்கை வேலை
வேண்டாம்னு பார்க்கிறேன். தணிக்கை செய்தால் அப்புறம் அதிலே ஒண்ணுமே இல்லையே?


ம்ம்ம்ம், யாரது அங்கே மந்திரி? தலைவி வந்தா நீ எந்திரி!!!!!! எங்கே தலைவியின் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள்? முக்கியமானவங்க எல்லாம் ஆணி, கடப்பாரை பிடுங்கறாங்க. ரொம்பக் கத்திக் கூப்பிட்டால் நம்ம தலையிலேயே விழுந்தாலும் விழும். :D ம்ம்ம்ம்ம்ம், யாரங்கே? ஒரு அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுங்க! (க்ர்ர்ர்ர்ர்ர்ர்.....இந்த வெட்டிப் பந்தாவுக்குக் குறைச்சல் இல்லை) ஹிஹிஹி, அது முணுமுணுத்தது என்னோட அண்ணா பையன், துபாயில் எனக்குக் கோயில் கட்ட
ஆரம்பிச்சுட்டுப் பணம் எல்லாம் வசூல் செய்துட்டுக் கோயிலே கட்டாமல்
அதுக்குள்ளே இந்தியா வந்துட்டான். என்ன அவசரமோ? கோயில் கட்டறது அதுவும் எனக்குக் கோயில் கட்டறது எவ்வளவு முக்கியம்? இப்போ பாருங்க, அங்கே யாருமே பொறுப்பானவங்களே இல்லை! :D

அவனை வச்சுக்கிட்டுத் தான் இந்த வேலை நடந்தது. வேலையை முடிச்சுட்டு நாங்க அனுப்பிச்ச மெயில், குயில் எல்லாம் திரும்பி வந்ததும் ஆள் சொல்லிக்காமலேயே கிளம்பிப் போயிட்டான். தேடிட்டு இருக்கேன். :)))))))))) அவனும் "திருதிரு"ன்னு முழிக்கிறான்,
என்ன செய்யறதுன்னு? யாருக்காவது தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்க! அட, அந்தப் பையனை இல்லைங்க,.அவன் வந்துடுவான், எங்கே போகப் போறான்? நான் விட்டால் தானே? இதை எப்படிப் போடறதுன்னு! 2 பாகமாப் பிரிச்சுப் போடலாமா? அது சரியா வருமா? மொத்தம் 33 அத்தியாயம் வருது. 16
அத்தியாயம் ஒரு தொகுப்பாகவும் மீதி 17 அடுத்த தொகுப்பாயும் போட முடியுமா? அதை ஏத்துக்குமா? விவரம் தேவை!

Saturday, March 10, 2007

ஜானகி ராமன் ஹோட்டலில் நாங்கள்!

தஞ்சாவூரில் பாலபிஷேஹம் முடிஞ்சு, நாங்க திருச்சி போனோம். திருச்சியிலே இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் எங்களுக்குத் திருநெல்வேலிக்கு முன்பதிவு செய்திருந்தோம். மதுரை வழிதான் இருந்தாலும் மதுரையில் இறங்க வில்லை. கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் நேரம் இல்லை. அதனால் மேல் பாலத்தில் இருந்தே தெரியும் கோபுர தரிசனத்தோடு திருப்தி அடைந்தேன். வேறே வழி? அதுக்கு அப்புறம் வந்த வழியில் நான் ரெயில் பயணம் செய்தது இல்லை. திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் (இருமுறை) போயும் இந்த வழி போனதில்லை. ஆகவே ரொம்பவே ரசித்துப் பயணம் செய்து வந்தேன். ஒவ்வொரு ரயில் நிலையம் வரும்போதும் அங்கே இது பிரசித்தி என்று சொல்லிக்கொண்டே வந்தேன். கோவில்பட்டி தாண்டினதுமே என்னோட கணவர் திருநெல்வேலியில் எங்கே தங்குவது? எங்கே சாப்பிடுவது என விசாரித்துத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார். முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாச்சே! எல்லாரும் ஒரே வாயாக (தனித் தனியா அவங்க அவங்க வாயாலே தான்) "ஜானகிராமன் ஹோட்டல்"ஐ சிபாரிசு செய்தனர். அங்கே "சந்திர விலாஸ்" என்றொரு ஹோட்டலில் சாப்பாடு நல்லா இருக்குமாம். அநேகமாய் ஜானகிராமன் ஹோட்டலில் தங்கினாலும் அங்கேதான் சாப்பிடப் போவாங்களாம். எங்க துரதிர்ஷ்டம் அதைப் பத்தி ரெயிலில் யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை. நாங்க திரும்பி சென்னை வரும்போது தான் தெரிந்தது. அப்புறம் இப்போ திரு தி.ரா.ச. அவர்களும் சொல்றார். (நறநறநற). திருநெல்வேலியில் இறங்கினதும் மூட்டை, முடிச்சுக்களைத் தூக்க ஆளைப் பார்த்தால் ஒருத்தர் வந்தார். சாமானைப் பிடுங்கிக் கொண்டார். அடுத்த நிமிஷம் கண்ணில் காணோம். மாற்றுத் துணிகள் உள்பட சுமைதூக்குபவர் கையில். என் கணவர் வெறும் கையுடனும், நான் கையில் கைப்பையுடனும் நிற்கிறோம். சற்றே பதறிப் போய்ப் பார்த்தால் சுமை தூக்குபவர் முன்னால் போய் திரும்பிப் பார்த்து இன்னுமா நீங்க வரலை என்பது போல் அலட்சியமாய்ப் பார்த்துக் கூப்பிடவே சற்றே ஆறுதலுடன் வேக நடை போட்டோம். சுமை தூக்குபவர் வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை. அத்தனை வேகம் பேச்சும், நடையும். அவர் சிபாரிசு செய்தது "பரணி" ஹோட்டல். ஆனால் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டு வந்த இன்னொருவர் கிட்டத் தட்ட எங்களை அடிக்கிறாப்போல் பார்த்து விட்டு, "ஜானகிராமன் ஹோட்டலுக்குப் போங்க! வேறே எங்கேயும் போகாதீங்க!" என்று எச்சரித்து விட்டுப் போனார். சற்றே பயத்துடன், "சரி" என்று சொல்லிவிட்டுப் பின் ரெயில் நிலைய வாசலுக்கு வந்தால் மறுபடி சாமான்கள் பிடுங்கப் பட்டது.

"என்ன இது இந்த ஊரிலே? இப்படித்தானா? என்று நினைப்பதற்குள் சுமை தூக்குபவர் எங்களைப் பார்த்து, "அவர் ஒரு ஆட்டோக்காரர். உங்களை ஜானகி ராமன் ஹோட்டலில் இறக்கி விடுவார்." என்று சொல்லிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்து விட்டார். நாங்கள் இப்போ ஆட்டோக் காரரைத் தேடணும். வேக நடை போட்டால் வரிசையாக ஆட்டோக்கள். எங்கே இருக்கிறார்? எங்க சாமான்களோடு வந்தவர்? அதற்குள் ஒருத்தர் நாங்க தேடறதைப் பார்த்துட்டு, "அதோ, அந்த முதல் ஆட்டோ, என்றார். முதலில் வரிசையாக நான்கு ஆட்டோக்கள். ஒவ்வொரு ஆட்டோவிற்கும் உள்ளே பார்த்து எங்களோட ஒரு பையை வைத்து (இதுக்குன்னே அந்தப் பையை எடுத்துட்டுப் போவோம்) அடையாளம் கண்டு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து ஆட்டோக் காரரிடம் என்ன இது? இப்படிப் பண்ணினீங்க? என்று கேட்டால் அவர் எனக்குத் தான் உங்களைத் தெரியுமே? நான் கூப்பிட்டு உட்கார்த்தி வச்சுட்டுத் தானே போவேன்! என்ன பயம்? இது பட்டணம் இல்லை!" என்றார். இருந்தாலும் ஆட்டோக்காரர் முகம் கூடத் தெரியாத அளவு இவ்வளவு வேகத்துடன் அவர் ஓடியது தேவைதானா என்று எனக்குப் புரியவில்லை.

ஜானகிராமன் ஹோட்டலில் போய் இறங்கினதும் அறை வாடகைக்கு எடுத்து விட்டு உணவுகளை அறையிலேயே பெற்றுக் கொள்ளும் வசதி உண்டா எனக் கேட்டோம். அந்த வரவேற்பாளிக்கும், வரவேற்பாளருக்கும் கொஞ்சம் சந்தேகம், நாங்க என்ன அவ்வளவு பெரிய மனுஷங்களா என்று. இருந்தாலும் மரியாதையுடன் இருக்கு என்றார்கள்.. அவர்கள் சந்தேகத்தைப் பார்த்தால் எனக்குச் சந்தேகமாய் இருந்தது. என்னவோ என நினைத்து 4வது மாடியில் உள்ள அறைக்கு வந்தால் (நல்லவேளை லிஃப்ட் இருக்கிறது), அறை சுத்தமோ, சுத்தம்! நல்ல பராமரிப்பு. மனதுக்கு நிம்மதியாயும் திருப்தியாயும் இருந்தது. ரூம் செர்வீஸ் மெனு கார்ட் இருந்தது. வேறே ஒண்ணும் சாப்பிட முடியாது. ஒரு பாலாவது சாப்பிடலாம் என மெனு கார்டை எடுத்துப் பார்த்தால் தலை சுற்ற ஆரம்பித்தது.

Thursday, March 08, 2007

பெண்கள், இந்நாட்டின் கண்கள்?

"நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்!
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவேயரிதாவதோர் செய்தியாம்:

குலத்து மாந்தர்க்குக் கற்பியல்பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டீரோ!" புதுமைப் பெண் பற்றிப் பாரதி சொன்னது இது. பாட்டு ரொம்பப் பெரியது. கொஞ்சமாய்ப் போடுகிறேன்.

இன்றைக்கு மகளிர் தினம். பல இடங்களில் இருந்தும் மகளிர்க்கு வாழ்த்துக்கள் பெருகுகின்றன. பொதுவாக நாம் அந்தக் குறிப்பிட்ட நாள் மட்டும் கொண்டாடிவிட்டு மறுநாள் முதல் அதை மறந்து விடுவோம்.
இந்த மகளிர் தினமும் என்னைப்பொறுத்த வரை அப்படித்தான் போகப் போகிறது. ஏனெனில் இன்று ஒருநாள் மட்டும் மகளிர் தினம் கொண்டாடிவிட்டால் சரியாப் போச்சா?

பெண் என்பவள் வாழ்வின் ஆதார சுருதியாக இருப்பவள். பெண் இல்லை என்றால் எதுவும் கிடையாது. பெண் இல்லாத உலகில் காட்டுத் தனம்
தான் மிகுந்திருக்கும். அந்தப் பெண் என்பவளை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? இல்லை அவள் தான் தன்னை எப்படி முன்னேற்றிக்
கொண்டிருக்கிறாள்? என்று பார்த்தால் எதுவும் இல்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணா இன்று இருக்கிறாள்? இல்லையே! பாரதி கண்டது இந்தப் புதுமைப் பெண்ணை இல்லை.

முன்காலத்தில் இருந்தே பெண்கள் எல்லாவற்றிலும் சிறந்து தான் விளங்கி
வந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு ஒளவையும், ஒரு
காரைக்கால் அம்மையும், ஒரு பாண்டிமாதேவியும், திலகவதியாரும்
போதும். எதிலும் குறைந்தவர்கள் இல்லை பெண்கள். ராணி மங்கம்மாள், ராணி லட்சுமிபாய், ராணி துர்க்காவதி, ராணி அகல்யா பாய் போன்றவர்கள்
இருந்திருக்கிறார்கள். வீரம், வித்தை, கல்வியில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். பெண்கள் எந்த விதத்திலும் இழிவு படுத்தப் பட்டதாய்த் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் முக்கியமான
தருணங்களில் முக்கியமான முடிவுகள் தன் மனைவியைக் கேட்டுக் கொண்டு எடுத்தவர்கள் உண்டு.

கணவன் சந்நியாசம் வாங்க வேண்டுமென்றால் கூட மனைவி இருக்கும்போது அவள் அனுமதிக்கவில்லை என்றால் சந்நியாசி ஆக முடியாது. அப்படி ஓர் உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள் நம் பெண்கள். இன்றோ பெண்கள் அநேகமாய் நன்றாய்த் தான் படிக்கிறார்கள். சில
இடங்களில் படிக்கும் பெண்களைப்படிப்பை நிறுத்தித் திருமணம் செய்து வைக்கும் வழக்கமும் இருக்கிறது. பொதுவாகப் பெண்கள் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்களா என்றால் இல்லை! இன்றைய நாட்களில் பெண்கள் அதிகம் ஏமாற்றுபவர்களாயும். ஏமாறுகிறவர்களாயும்தான் இருக்கிறார்கள். இதற்குப் படிப்பு ஒன்று மட்டும் போதுமா? இல்லை என்பது என் கருத்து. ஒழுக்கமும், ஆன்மீகமும் சார்ந்த கல்வியும் தேவை!

ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் பலவிதங்களிலும் இழிவு படுத்தப்
படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் தம்மைத் தாமே இழிவு படுத்திக்
கொள்கிறார்கள். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று சொன்ன பாரதி அதன் உண்மையான அர்த்தம் மாதர் தம்மைத் தாமே இழிவு படுத்திக் கொள்வதைத் தான் குறித்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லையா? அல்லது புரிந்து கொள்ள
முடியவில்லையா? இன்றைக்குத் தொலைக்காட்சிகளிலும், மற்றும்
விளம்பரங்களிலும் தோன்றும் பெண்கள் தம்மைத் தாமே பலவகையிலும் இழிவு செய்து கொள்கிறார்கள். இது புரியாமல் போனது ஏன்?"நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,திமிர்ந்த ஞானச் செருக்கு" பெண்களுக்கு வேண்டும் என்று சொன்ன பாரதி அதன் உண்மையான அர்த்தம்
பெண்களுக்குப் படிப்பு மட்டும் போதாது, அதனால் ஏற்படும் தெளிந்த ஞானமும் வேண்டும் என்றே சொல்லிப் போயிருக்கிறான். ஆனால் இன்றோ
பணமே பிரதானமாகி இருக்கிறது.

இதற்குப் பெற்றோரும் காரணம் என்பது பத்திரிகைச் செய்திகளில் இருந்தும், தொலைக்காட்சிச் செய்திகளில் இருந்தும் தெரிய வருகிறது. தாய் என்பது எத்தனை மகத்துவமான வார்த்தை? விளையாட்டுப் பெண்ணாக
இருக்கிறவள் திருமணத்திற்குப் பின் தாயாகிறாள். ஒரு துறவியின் மனோநிலை அந்தத் தாயிடம் இருக்கவேண்டும் என்பார்கள் நம் முன்னோர். எவ்வாறு பூமியானது நம் எல்லாரையும் தாங்குகிறதோ, அதுபோல் தாயானவளும் தன் குழந்தைகளை அரவணைத்துக் கொண்டு நல்வழிப் படுத்த வேண்டும். பெண் குழந்தை என்றால் அந்தத் தாய்க்குப் பொறுப்பு இன்னும் அதிகம். "தாயைப் போல் பிள்ளை! நூலைப் போல் சேலை" என்பது பழமொழி. தாய் எப்படி இருப்பாளோ அப்படியே பிள்ளைகளும் இருக்கும் என்பது தான் இதன் அர்த்தம். அந்தத் தாயே பணத்துக்கு ஆசைப்பட்டுத் தன் மகளை அடக்காமல் இருந்தால்? இப்போது செய்தித் தாள்களில் பார்த்தால்
தாய், தகப்பன் தொந்திரவு தாங்க முடியாமல் ஓடிப் போன பெண், உறவினர்
தொந்திரவால் உயிர்விட்ட பெண், கணவனால் கைவிடப் பட்ட பெண்,
காதலால் கைவிடப் பட்ட பெண் என்று அதிகமாய்ச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

போதாத குறைக்கு இன்று பெண்களுக்கு அளவுக்கு அதிகமாய்ச்
சுதந்திரம் கொடுத்துத் தான் இருக்கிறார்கள். நல்ல படிப்பும், கை நிறையச் சம்பளமும் பெண் வாங்குகிறாள் என்பதற்காக அவளைத் தட்டிக் கேட்காத தாய் பின்னால் ஏமாந்து தான் போகிறாள். பெற்றோர் தட்டிக் கேட்டும் அதைக் கேட்காத பெண்ணும் ஏமாந்த்து தான் போகிறாள். இதெல்லாம் ஏன் நடக்கிறது? எங்கு நடக்கிறது? எப்படி ஆரம்பித்தது? பெரும்பங்கு நம் தொலைக்காட்சிகளுக்கே போகும்.


தொலைக்காட்சித் தொடர்களில்தான் பெண் மிகக் கேவலமாகச் சித்திரிக்கப் படுகிறாள். மிகவும் வக்கிரத்தனமாக, பணத்தாசை கொண்டவளாக, அலங்கார பூஷிதையாக, கொலை செய்யக் கூடத் தயங்காதவளாக ஒருத்தியைக் காட்டினால் கதாநாயகியோ பொறுமையின் பூஷணமாக எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறவளாக இருப்பாள். ஒரு தொடரில் ஒரு பெண் தன்
கணவனுக்கு மறுமணம் செய்து வைக்கிறாள். எதற்கு? குழந்தை இல்லை
என்பதற்காக! இன்னொரு தொடரில் மனைவி அழகாய் இல்லை என்று
மறுமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்கே மறுமணம் செய்ய
முற்படுகிறான். இதைவிடக் கேவலம் மனைவி கர்ப்பமாய் இருக்கிறதைக் கூட அறியாத கணவனும், கர்ப்பிணியான மனைவியைக் கொடுமைப் படுத்தும் கணவனும் தொடர்களின் நாயகர்கள்!


எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்? நாம் இருப்பது 21-ம் நூற்றாண்டு. இன்றைய பெண்கள் விமானம் ஓட்டுவதிலும், விண்வெளிப் பயணம் செய்வதிலும் பழகி விட்டாலும் கூட நாம் இம்மாதிரித் தொலைக்காட்சித் தொடர்களே நம் வாழ்வின் ஆதாரம் என்றே இருப்போம். "ரெளத்திரம் பழகு!" என்று சொன்ன பாரதி இதைப் பார்த்தால் இன்று தற்கொலையே செய்து கொள்வான். இதுவா உண்மையான ரெளத்திரம்? இது அல்ல! இதுவும்
ஒருவகையில் பெண்ணடிமை தான். அதை ஏன் பெண்கள் புரிந்து கொள்ள
மறுக்கிறார்கள்? பெரும்பாலான தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள்
சொல்லும் காரணம் பெண்களுக்கு இம்மாதிரித் தொடர்கள்தான் பிடிக்கிறது.
அதிகமாய்க் கதாநாயகி கஷ்டப் படுவதையும், அவளை மாமியாரோ,
நாத்தனாரோ, கணவனோ கொடுமைப் படுத்துவதையும் பார்ப்பது அவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையைப் பார்ப்பது போல் இருக்கிறது என்று அவர்களுடைய வாதம்.


ஆனால் இம்மாதிரித் தொடர்களைப் பார்த்துக் கெட்டுப் போனவர்கள் என்ன
சொல்கிறார்கள். இந்தத் தொடரில் வந்தாற்போல் கொலை செய்யப்
பார்த்தேன். இது மாதிரி என் மனைவியை ஏமாற்றினேன் என்று. நாம் தான்
எல்லாவற்றையும் நம்மோடு சம்மந்தப் படுத்திப் பார்ப்பதோடு அல்லாமல் தொடர் நாயகிகளையும், நாயகர்களையும் நம் தெய்வங்களாக அல்லவா போற்றுகிறோம்? இன்று காளி, துர்கை, முருகன், ஐயப்பன் என்றால் நமக்கு நினைவு வருவது அந்தப் பாத்திரங்களில் நடித்த நடிக, நடிகையர்
நினைவு தானே? அப்படியே எடுத்துக் கொண்டாலும் சமூகத்தில் உள்ள
அம்மாதிரிக் களைகளைக் களைய இதுவா வழி? ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் யோசித்து நல்ல நேர்மறைச் சிந்தனைகளுடன் கூடிய தொலைக்காட்சித் தொடர்கள் போடலாமே? அல்லது பெண்கள் ஒருங்கிணைந்து இத்தகைய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை என முடிவு எடுக்க வேண்டும். அதற்கு மிகுந்த மனக்கட்டுப் பாடு வேண்டும். ஆனால் இது ஒரு கனவு தான். நம்மால் கனவு தான் காண முடியும்.
ஆகவே பெண்களே, கனவு காணுங்கள், நாம் பெண்கள் இன்றைய பெண்கள்
தினத்தை நன்றாகக் கொண்டாடி விட்டோம். இத்தோடு எல்லாப்
பெண்களுக்கும் எல்லாக் குறைகளும் தீர்ந்து விட்டது.

"பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!"

Wednesday, March 07, 2007

சூப்பர் சுப்ராவிற்கு

என்னோட 50-வது பதிவுக்கு நீங்க கொடுத்த கமெண்டை இன்னிக்குத் தான் பார்க்கிறேன். என்னோட பதிவின் போக்கையே மாத்தினது நீங்க தான். ஆனால் அன்றிலிருந்து உங்க பதிவுக்கு வரப் பார்த்தும் வர முடியவில்லை. தமிழ்மணத்திலும் பார்க்க முடியவில்லை. ரொம்ப ரொம்ப நன்றிகள் உங்களுக்கு. பதிவுக்கு நூல் பிடித்து வர முடியவில்லை, அதனால் இதில் போட்டிருக்கிறேன். இப்போத் தான் கமெண்ட் கொடுத்தீங்களான்னு தேதியையும் பார்க்க முடியவில்லை.

Monday, March 05, 2007

தனிமையும், இனிமையும்????????

போன பதிவிலே நான் எழுதினதுக்கு தி.ரா.ச. சார், சங்கர் மற்றும் அம்பி
மட்டும்தான் பதில் கொடுத்திருக்காங்க. எல்லாருக்கும் வேலை அதிகமா இருக்குப் போல் இருக்கு, யாரும் வரலை. அதான் பதிலும் இல்லை. இருந்தாலும் நான் எழுத வேண்டியதை எழுதிடறேன். முடிவு அவங்க
அவங்க யோசித்து எடுக்கவேண்டியது.

என்னைப் பொறுத்தவரை ஒரு அண்ணன், ஒரு தம்பியோடு பிறந்திருந்தாலும்,நாங்கள் இருந்த வீடும் சரி, பக்கத்திலேயே பெரியப்பா வீடு இருந்ததும், உள்ளூரிலேயே தாத்தா வீடு அமைந்ததும் ஒரு காரணமோ என்னவோ சொந்த, பந்தங்கள் இல்லாமல் எந்தப் பண்டிகையும் நடக்காது. கல்யாணம் ஆகி வந்தும் மாமியார் வீட்டில் நபர்கள் அதிகம் ஆதலால் ஓரளவு வீடு கலகலப்பாகவே இருக்கும். வருவோரும், போவோருமாக
இருக்கும். ஒவ்வொரு தீபாவளிக்கும் துணி எடுக்கிறது என்றால் நாங்கள் 2 பேரும் ஒரு 3 மாசம் முன்னாலேயே திட்டம் போட்டு வச்சுக்க வேண்டும். எங்கே எடுக்கிறது? பணத்துக்கு என்ன செய்யறது? பணம் கடனானால்
எப்படித் திருப்பறது? அல்லது கடையிலேயே கடனுக்கு வாங்கினால்
எப்போ வாங்கறது? எப்போ கொடுக்கிறதுன்னு எல்லாமே யோசிக்கணும்.

அதிர்ஷ்டம் இருந்தால் 150ரூ.க்குப் புடவை எடுக்க முடியும். அதிர்ஷ்டம்
இல்லையெனில் வெறும் 60ரூ. காட்டன் புடவையிலேயே திருப்தி அடைந்தது உண்டு. ரொம்பவே அதிர்ஷ்டம் அடிக்கும்போது அரசு அலுவலர்க்குக்
கொடுக்கும் விண்ணப்பங்கள் மூலம் கோ-ஆப்டெக்ஸ் போய்ப்பட்டுப்
புடவையும் கிடைக்கும், எப்போவாவது. சில சமயம் எங்க எல்லாருக்கும் துணி எடுத்து முடிச்சிருப்போம். திடீர்னு வெளி ஊரிலே இருக்கிற நாத்தனார் தன்னோட குழந்தைங்களோட தீபாவளிக்கு வருவாங்க. அப்போ அவங்களுக்கும் குறைந்த பட்ச விலையிலாவது துணி வாங்க வேண்டி
இருக்கும். அப்புறம் நாம வாங்கறது அவங்களுக்குப் பிடிக்கணும்னு அதிலே
எத்தனையோ இருந்தது. அப்புறம் இந்தப் பலகாரங்கள், எங்க வீட்டில் மாமியார் இருக்கும்போது அவங்க துணையுடன் நானும், இல்லாவிட்டால் நான் தனியாகவேயும் பலகாரங்கள் 4 நாள் முன்னதாகவே ஆரம்பித்துச் செய்வோம். பட்டாசு என்றால் கேட்கவே வேண்டாம் அம்மா வீட்டில் இருந்தவரை அண்ணன், தம்பியோடு போட்டி போட்டுப் பட்டாசுப் பங்கு வாங்கி வச்சுப்பேன். வெடிக்கவும் வெடிப்பேன். கல்யாணத்துக்கு அப்புறம்
பெண்ணும், பையனும் எல்லாரும் வாங்கிக் கொடுக்கும் பட்டாசுடன் நாங்கள் வாங்கும் பட்டாசையும் சேர்த்து வெடிப்பார்கள்.

இந்தப் பட்டாசு அவங்களுக்கு வாங்கிக் கொடுக்கிறதுக்காக என்னோட கணவர் அலுவலகத்தில் ஒரு 3 மாதம் முன்னேயே சொல்லி வைத்து வாங்குவோம். தவணை முறையில் பணம் செலுத்தலாமே! அதனால்தான்! இருந்தாலும் தீபாவளி கொண்டாடினோம். சந்தோஷமாகவே, நம்பிக்கையுடன், நாளை நமதே என்ற நினைவுடன் கொண்டாடி இருக்கோம். இப்படித் தான் பொங்கலும் நடக்கும். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போகும்போது சமயத்தில் முன்பதிவு கிடைத்திருக்காமல் முன்பதிவு செய்யப் படாத பெட்டியில் உட்காரக் கூட இடம் இல்லாமல் குழந்தைகளை வைத்துக்
கொண்டு மூட்டை, முடிச்சுக்களையும் தொலைக்காமல் கொண்டு போய்ச்
சேர்த்திருக்கிறோம். அப்போது எல்லாம் இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும், எதிர்பார்ப்பும் இருந்தது. பொங்கலும், பொங்கலாகவே இருந்தது. அடுத்த பொங்கல் இன்னும்சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை இருந்தது.

வட மாநிலங்களில் இருக்கும்போது மார்ச் மாதத்தில் வரும் ஹோலி பண்டிகைக்கு யார் கலந்து கொள்வது? யார் உள்ளே ஒளிந்து கொள்வது என்று ஒரு கூட்டு ஆலோசனை நடத்துவோம். வீட்டில் எல்லாரும் உள்ளே
ஒளிந்து கொள்வோம், வெளியே ஒருத்தர் போய்ப் பூட்டி விட்டுப் பின் வழியே
வரலாம் என்றெல்லாம் பேசிக் கொள்வோம். என்ன? எல்லாம் இந்தக்
கலருக்குப் பயந்து தான். ச்யாமும், கார்த்திக்கும், அம்பியும், மணிப்ரகாஷும்,
சிவாவும் பார்க்கிற கலர் இல்லை இது. ஹோலி விளையாடத் தூவி விடும்
பொடியின் கலர். குறைந்தது 10 நாளைக்குப் போகாது. இதுக்கு நடுவேயே
என் பையன் பீச்சாங்குழல் தயார் செய்து வைத்துக் கொள்வான். அது பாட்டு அது, எங்களோட கூட்டு ஆலோசனை பாட்டுத் தனியாக இருக்கும். அப்படியும் ஒரு முறை ஏமாந்த எங்கள் நண்பர் குழாம் மறுமுறை ஏமாறாமல் நாங்கள் வீட்டைப் பூட்டும் முன்னேயே வந்து வீடு பூராவும் வண்ணங்களை வாரி இறைத்து எங்களையும் கலர் கலராக்கிவிட்டுச் சிரித்துக் கொண்டு வெற்றி நடை போட்டதுண்டு. அப்போவெல்லாம் பண்டிகைகள் கொண்டாடப் பட்டன.

இப்போ அப்படி இல்லை. துணிகள் வாரி இறைக்கப் படுகின்றன. நினைத்தால் எல்லாரும் புதுத்துணி, பட்டுப் புடவை என்று எடுக்க முடிகிறது. இப்போவெல்லாம் எங்க 2 பேருக்கு என்ன பலகாரம் செய்யறது? எனக்கு
எண்ணைப்புகை ஒத்துக் கொள்ளாது. அவருக்கு எண்ணைப் பலகாரம் ஒத்துக்
கொள்ளாது. ஆகவே பேருக்கு ஏதோ எண்ணை வைத்து ஒரே ஒரு பலகாரம்
ஏதாவது செய்யறோம். பட்டாசா? மூச்! எனக்கு மத்தாப்புப் புகை, பட்டாசுப் புகை ஒத்துக் கொள்ளாது. தீபாவளி அன்று வெளியேயே கிளம்ப மாட்டேன். இதிலே வீட்டில் என்னத்தை வெடிச்சு? எங்க வீட்டு ராமர் முன்னாலே பெரிசாக் கோலம் போட்டு எல்லாருக்கும் வாங்கிய துணிகள் ஒரு அடுக்காக வைக்கிறது உண்டு. பக்கத்தில் எல்லாப் பலகார வகைகளும் வைத்துவிட்டுக் கூடவே தீபாவளி மருந்தும் வைப்போம்.

எல்லாருக்கும் என்னோட மாமனார் துணி எடுத்துச் சந்தனம், குங்குமம் வைத்து ஆசிகள் சொல்லிக் கொடுப்பார். அவருக்கு அப்புறம் மாமியார் செய்து வராங்க. இதிலே என்னோட புடவை நாத்தனாருக்கும், அவங்க புடவை
எனக்கும் மாறி வந்து அப்புறம் கேட்டுட்டுப் புடவையை மாத்திக்குவோம்
சிரிப்புடனும், கொண்டாட்டத்துடனும். எங்க மாமியார், மாமனாரை வணங்க வரும் கூட்டத்திற்கும் குறைவிருக்காது. எல்லாருக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் எடுத்து வைக்கவே எனக்கு நேரம் சரியா இருக்கும். பத்து வருடம் முன் வரையிலும் தூர்தர்ஷன் மட்டும் தான். நல்ல நாடகமாய் வரும். இதிலே வரவங்க, போறவங்க வேறே. சமையலும் செய்யணும். டி.வியிலும் . ஒரு கண்ணும், வரவங்களைக் கவனிக்கிறதும்,
நடுவே சமைத்து எல்லாருக்கும் சாப்பாடு போடுகிறதுமாய் ஒரே அமர்க்களமாய் இருக்கும்.

இப்போவும் எங்க ராமருக்கு முன்னாலே பெரிசாத் தான் கோலம் போடறேன். புடவை, வேஷ்டி, பலகாரம் எல்லாம் வைக்கிறேன். என்னோட ஒரே ஒரு
புடவை மட்டும்,சில சமயம் ஒன்று வைக்கக் கூடாது என்று 2 புடவை. வேலை செய்யும் அம்மா கூடப் புடவை வேணாம்னு சொல்லிப் பணம் வாங்கிட்டுப் போயிடுவாங்க. அதனால் அவங்க புடவையும் வராது. இப்போ மாமியாரும் என்னோட மைத்துனர் கூட இருக்கிறாங்க. அதனால் என் கணவர் எழுந்து வந்து புடைவையைக் கொடுத்ததும் கட்டிப்பேன். அதுவும் இப்போவெல்லாம் காலை 2மணி, 3 மணிக்கெல்லாம் எழுந்திருக்கிறதில்லை.
நான் மட்டும் பட்டாசு வெடிக்க ஆரம்பிக்கிறதுக்குள் கோலம் போடணும் என்று சீக்கிரம் எழுந்து கோலம் போட்டு விட்டு உள்ளே வந்து விடுவேன். இப்போ எங்களை வணங்கவும் யாரும் இல்லை. சிலபேர் எங்களைவிடப் பெரியவங்க. இன்றைய இளைய தலைமுறைக்கோ டி.வி. பார்ப்பதும், பட்டாசு வெடிப்பதையும் தவிர மிச்ச நேரம் கைத் தொலைபேசியில் பேசுவதில் சென்று விடுகிறது. பொங்கல் அன்று நான் மட்டும் ராமருக்கு முன்
அரிசிப்பானையில் பால்விட்டுப் பொங்கல் வைக்கிறேன், மறுநாள் தனியாகக் கனுப்பிடி வைக்கிறேன். எல்லாம் யாருக்கு? புரியவில்லை! இழந்தது யார்? எதை? புரியவில்லை? டாலரிலே முகம் பார்க்க முடியுமா?


கீழே பங்கஜ் உதாஸின் "சிட்டி ஆயி ஹை" பாட்டில் இருந்து சில வரிகளும் அதன் தமிழாக்கமும். பையனிடம் இருந்து அப்பாவுக்குக் கடிதம் வருகிறது. பையன் வெளிநாட்டில் இருக்கிறான். அப்பா பார்க்கிறார்:
"ஊப்பர் மேரா நாம் லிகா ஹை!
அந்தர் ஸே பேனாம் லிகா ஹை!"
(கடிதத்தின் மேலே என்னவோ என்னோட பேர் எழுதிஇருக்கு! ஆனால் என்னோட உள்ளுக்குள்ளே?)
""ஓ, பரதேஸ் ஜானேவாலே! (வெளிநாடு போய்விட்டவனே!)

சாத் சமந்தர் பார் கயா ஹை
ஹம்கோ ஜிந்தா மார் கயா ஹை
ஃகூனி கே ரிஷ்தே தோட் கயா ஹை

கடல் தாண்டிப் போயிருக்கிறாய், ஆனால் என்னை உயிரோடு சாகடித்து விட்டாய். ரத்த பாசத்தையும், ரத்த உறவையும் உடைத்து விட்டாய்!

ஸூனி ஹோ கயி ஷஹர் கி கலியான்
நகரின் தெருக்கள் எல்லாம் சூன்யமாகி விட்டது.

தேரே பினா ஜப் ஆயி திவாலி
தீப் நஹின் ஜல் கயி தில்
நீ இல்லாத தீபாவளி வந்தப்போ, இங்கே தீபம் ஏற்றவில்லை, என்னோட மனசே தீபமாய் எரிந்தது!

தூனே பைஸே பஹுத் கமாயா!
இஸ் பைஸே னே தேஷ் சுடாயா!
நீ நிறையப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாய். இந்தப் பணம் தான் தேசத்தை விடுமாறு உன்னைச் செய்து விட்டது.

தேஷ் பராயா சோட் கே ஆஜா!
பஞ்சி பிஞ்சரா தோட் கே ஆஜா!
அந்தத் தேசம் நம்மளோடது இல்லை, வெளிநாடு விட்டு விட்டு வந்து விடு.உன்னைக் கட்டி வைத்திருக்கும் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வா!
பாட்டு இன்னும் இருக்கிறது. எனக்கு எழுத முடியவில்லை. கண்ணீர் வருகிறது. தவிர ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். ஆகவே யாராக இருந்தாலும் நன்கு யோசிக்கவேண்டும். இதுக்கு என்னோட முடிவையோ அல்லது அபிப்பிராயத்தையோ நான் வேண்டுமென்றே சொல்லவில்லை.

Sunday, March 04, 2007

227. தனிமையிலே இனிமை காண முடியுமா?

இது ஒரு முக்கியமான கேள்வி. சமீபத்திலே முத்தமிழிலே சிநேகிதி ஒருத்தர் எழுதிய கவிதை ஒன்று கீழே தருகிறேன். அதைப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும். அவங்களோட இன்னொரு சிநேகிதர் வீட்டில் பெரிய பையன் அமெரிக்கா சென்று விட, இளைய மகன் தனிக்குடித்தனம் போய்விட்ட நிலையில் அவர்கள் பேத்தி தன் அம்மாவிடம் கேட்ட கேள்வி இது! இதைப் பற்றிய என்னோட கருத்து நாளை:


தாத்தா இல்லை முத்தா கொடுக்க
பாட்டி இல்லை கதைகள் சொல்ல
சித்தி இல்லை இனிய பாட்டுப் பாட
சித்தப்பா இல்லை காரம் ஆட

மாமா இல்லை என்னைத் தூக்க
மாமியும் இல்லை என்னைத் தாங்க
அத்தை மடி மெத்தையும் இல்லை-கூட
விளையாட ஒரு குழந்தையும்இல்லை

அடுத்த வீட்டில் யார்? தெரியவில்லை
ஒருவருக்கொருவர் பார்க்க நேரமும் இல்லை
தனிவீட்டிற்கு ஏன் வந்தோம் அம்மா?
பாட்டி வீட்டிற்கே போலாம் அம்மா?

இது சரியா? தப்பா? அவரவர் மன நிலையையும், சூழ்நிலையையும் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என்ற பதில் தான் எல்லாராலும் எடுக்கப் படக் கூடியது. இதையும் தாண்டி சிந்திக்கிறவர்கள் இருக்காங்களான்னு பார்க்கவே இந்தக் கேள்வி.

226. வலைப்பதிவர் சந்திப்பு தோல்வி?

இன்று தலைவி(வலி) வீட்டில் நடைபெறுவதாய் இருந்த வலைப்பதிவர் சந்திப்புத் தோல்வியில் முடிந்ததாய் அம்பி மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாய்த் தெரிகிறது. இன்று காலை சுமார் 11-15 மணி அளவில் தலைவிக்கு வந்த தொலைபேசியை ஒட்டுக் கேட்டதில் தெரிய வந்த செய்திகள் வருமாறு:

1. திடீரென அம்பியிடம் இருந்து தொலைபேசி வரவும் திடுக்கிட்டார் தலைவி. இதில் ஏதோ சூது என்பதையும் அறிவு நிறைந்த தலைவி உணர்ந்திட்டார்.

2.ஆகவே அம்பி மாட்டிய வலையில் தலைவி விழவில்லை. தப்பி விட்டார். அம்பி கேட்ட கேள்விகள் என்னும் வளையத்துக்குள் புகுந்த தலைவியை, அபிமன்யூ புகுந்த சக்ரவியூகத்தில் இருந்து வெளிவரத் தெரியாமல் திண்டாடியது போல் திண்டாடுவார் என நினைத்துக் கேள்விகள் மேல் கேள்விகள் போட்டுத் திக்கு முக்காட வைக்க வேண்டும் என நினைத்து அம்பியும், குண்டர் படைத் தலைவரும் (பாவம், ரொம்பவே சாது, எல்லாம் இந்த அம்பியாலே தான்.) தொடுத்த கேள்விக் கணைகளைத் தலைவி வெற்றிகரமாய்க் கையாண்டார்.

3.வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றியும் அதற்கு அம்பிக்கு அழைப்பு விடுக்கப் பட்டதையும், அம்பி அதை நிராகரிப்பார் எனத் தலைவி ஏற்கெனவே சரியான காரணங்களுடன் நிரூபித்ததையும் அனைவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி இருந்தும், அம்பி தலைவியிடம் தனக்கு அழைப்பு வந்ததையே தான் இப்போது தான் பார்த்ததாய் ஒரு பொய் சொன்னார். இருந்தும் தாயுள்ளம் கொண்ட தலைவி அதைப் பெருந்தன்மையுடன் மன்னித்தார்.

4. அம்பி திரும்பத் திரும்ப கண்ணபிரான் ரவிசங்கர் கே.ஆர்.எஸ். வந்திருக்கிறாரா என்றும், தி.ரா.ச. அவர்கள் வந்திருக்கிறாரா என்றும் தலைவியிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்தும் தலைவி உள்ளது உள்ளபடியே உரைத்தார் என்பது கவனிக்கத் தகுந்தது. அதற்குத் தலைவியுடன் அனைவரும் ஒத்துழைத்தனர். இம்மாதிரியான ஒத்துழைப்பைப் பார்த்துத் தலைவி நெகிழ்ந்து போய் நாத் தழு தழுக்கப் பேச்சு வராமல் போனார்.

இப்போத் தான் வருதுங்கோவ் கிளைமாக்ஸே:

தலைவிக்குத் தொலைபேசிய 1/2 மணி நேரத்துக்கு அப்பால் அம்பி தி.ரா.ச. வுக்கும் தொலைபேசியதாகத் தெரிய வந்தது. கண்ணியம் மிக்க அந்தப் பெரியவர் தலைவியிடம் அனுமதி கேட்டு விட்டே அம்பியிடம் பேசினார் என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய ஒன்று. அம்பி அவரைத் திரும்பத் திரும்ப எங்கிருக்கிறீர்கள் என்று கேள்விகளால் துளைத்தெடுத்ததைக் கண்டு தலைவி ஆச்சரியமடைந்தார். வெண்டைக்காய்ப் பொறியலும், வத்தல் குழம்பும் வைத்துப் பயிற்சி எடுக்குமாறு தங்கமணி கூறியதையும் விட்டு விட்டு இம்மாதிரி தி.ரா.ச. வையும், தலைவியையும் அம்பி கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தது பற்றி அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர். தி.ரா.ச.வுடன் அம்பி பேசி வலைப்பதிவர் சந்திப்பு நடக்கவில்லை என உறுதி செய்து கொண்டு நிம்மதியாகத் தொலைபேசியை வைத்ததும் பிறகு ஒரு 4 மணி நேரங்களுக்கு சந்திப்பு எந்த இடையூறும் இல்லாமல் நடந்து முடிந்தது.

தி.ரா.ச. அவர்கள் காலையிலே மாநகர ரெயில் மூலம் அம்பத்தூருக்கு 9-30 மணிக்கே வந்து சேர்ந்தார். பாலராஜனின் வண்டி தகராறு செய்த காரணத்தால் கண்ணனும், பாலராஜன், கீதாவும் சற்றே தாமதமாக வந்தார்கள். மதுமிதா இன்றுதான் ஊரில் இருந்து வருவதால் அவரால் காலையில் வரமுடியாது எனத் தெரிவித்து விட்டார். ராகவன் என்ற ஜிராவும் திருச்செந்தூர் போய்விட்டார். மற்றும் இருவர் ஊருக்குப் போய்விட்டனர். வேதாவும் கடைசி நிமிடத்தில் வர முடியவில்லை. கண்ணனும், பாலராஜனும் புகைப்படங்கள் எடுத்தனர். எடுத்துக் கொண்டனர். வெகு நேரம் பலதரப்பட்ட விஷயங்களையும் பேசிவிட்டுப் பின் மனமில்லாமல் கண்ணன் எழுந்திருக்க மற்றவர்களும் பின் தொடர்ந்தனர். இருந்தும் எல்லாரும் சந்திப்பின் மகத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்டபடியால் அவரவருக்கு வேண்டிய தகவல்களைக்கேட்டுப் பெற்றதும் சந்திப்பும் சரி இன்றைய பொழுதும் சரி, நல்லபடியாய் கழிந்தது.

அம்பிக்கு எல்லாரும் வந்ததைச் சொல்லவேண்டாம் எனத் தலைவி கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அனைவரும் அம்பி தொலைபேசும்போது கொஞ்சம் அடக்கியே வாசித்தனர். இருந்தும் பாம்புக் காது அம்பி என்ன சத்தம்? என்ன சத்தம்? என்று இருவரையும் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார். ஆகவே எனக்குத் தெரியும் எல்லாரும் வந்தாங்க என்று சமாளிப்புச் செய்யலாம். ஆனால் அந்தச் சமாளிப்பு இங்கே செல்லாது. ஹூஊஊஊஊஊஉம்! அம்பி! அம்பி! சரியான ஆப்பு வச்சிருக்கேனே உங்களுக்கு!

Saturday, March 03, 2007

ஒரு முக்கியமான வேண்டுகோள் தேவை O Rh -ve ரத்தம்!

என்னுடைய நண்பர் திரு கஜபதியின் தந்தையின் அறுவை சிகிச்சைக்காக Rh O-ve ரத்தம் தேவைப் படுகிறது. அவர் என்னைத் தான் நாடினார். என்னோட உடல் நிலை காரணமாய் என்னால் ரத்த தானம் செய்ய முடியாது. ஆகவே இதைப் பார்க்கும் சென்னை அன்பர்கள் அப்போல்லோ மருத்துவமனையில் இருக்கும் திரு கஜபதியை இந்தக் கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். திரு கஜபதி கைபேசி எண் 93853 72626. அவருடைய தந்தையின் உடல் நலம் சீரடையவும் பிரார்த்தித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றிகள் பல. மார்ச் மாதம் 10-ம் நாள் சென்னை, அப்போல்லோ மருத்துவமனையில் நடக்கப் போகும் அறுவை சிகிச்சைக்கு அரிய வகை ரத்தமான O Rh -ve தேவை. இன்னும் ரத்தம் கிடைக்கவில்லை.

Friday, March 02, 2007

நற்செய்தி, நற்செய்தி, நற்செய்தி!

ஹிஹிஹி, நேத்திக்கு என்னோட வேண்டுகோள் பதிவை ஏத்துக்காத தமிழ்மணம் இன்னிக்கு என்னடான்னா ஏத்துக்கிட்டது! எப்படி? ஒண்ணுமே புரியலை! முந்தாநாள் ராத்திரியே கொடுக்க நினைச்சேன். ஆனால் எல்லாரும் காலையிலே தான் பார்ப்பாங்கன்னு நேத்து கொடுத்தா "உங்கள் செய்தியோடையைச் சரி பார்க்கவும்"ன்னே சொல்லிட்டிருந்தாங்க. சரின்னு சரி பார்த்தா, இதை வெளியிட முடியாது,, பிரச்னை வரும்னு ஆங்கிலத்தில் பதில் வந்தது. இன்னிக்கு என்னன்னா வந்திருக்கு. பார்த்துட்டுப் பொன்ஸ் "என்ன சொல்ல வரீங்க? வழக்கம்போல் உங்க பதிவு புரியாத மாதிரி இதுவும் புரியலை!" (:D) அப்படின்னு கேட்கிறாங்க. தமிழ்மணம் தான் பதில் சொல்லணும்.

அப்புறம் நான் சொல்ல வந்த நற்செய்தி அம்பிக்கு. கொஞ்ச நாளைக்கு அதிகமாய் எழுத முடியாது. அவரும் நான் இலக்கியம் சார்ந்த பதிவு எழுதினா ஒண்ணு அவர் அந்தக் குறிப்பிட்ட இலக்கியம் படிக்காமல் சாய்ஸில் விட்டிருப்பார். அல்லது இதை எழுதினா எல்லாம் சரியாப் போச்சான்னு கேட்பார். சரி, பக்திப் பதிவுகள் போடுவோம்னு போட்டால், "உலா வரும் ஒளிக்கதிர்"னு கிண்டல் அடிப்பார். சரி, எதுவும் வேண்டாம், நக்கல், நையாண்டின்னு பதிவு எழுதினால் "மொக்கை"னு சொல்லுவார். ஆகவே அம்பிக்குப் பதிவு எழுதவும் தெரியலை, பின்னூட்டம் கொடுக்கவும் தெரியலை. இந்தக் கார்த்திக் வேறே கஜபதியின் அப்பா உடல் நிலைக்குப் பிரார்த்தித்துக் கொள்றதுக்குப் பதிலாகக் கஜபதிக்கே பிரார்த்தித்துக் கொள்றேன்னு எழுதி இருக்கார். இதிலே ஒழுங்கா பதில் சொன்னது மதுரையம்பதி, ச்யாம், கோபிநாத் போன்றவர்கள் தான். இந்த லட்சணத்திலே இருக்கு நான் தலைவி(வலி)யா இருக்கிற அழகும் பதிவுகள் எழுதிப் பின்னூட்டம் வாங்கற அழகும் . அதான் கொஞ்ச நாள் யு.எஸ். போகப் போறேன். அதனால் கொஞ்சம் இப்படியும், அப்படியுமாத் தான் வந்துட்டு இருப்பேன். அம்பி ரொம்ப சந்தோஷப் படவேண்டாம். உங்க கல்யாணத்துக்கு என்னோட பங்கு மொய் கட்! :D

அப்புறம் யு.எஸ். போகிற காரணம் சொல்லலையே! எல்லாம் இந்த ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆகலையேங்கிற கவலையில் தான், அது பத்திப் பேசறதுக்காகப் போறேன். ஹிஹிஹி, ஏற்கெனவே பான் - கி- மூன், விஜய் நம்பியார் எல்லாரும் கூப்பிட்டிருக்காங்க. அப்புறம் ஹிலாரி கிளிண்டன் வேறே அவங்களோட தேர்தலுக்கு நான் வந்து பிரச்சாரம் செய்யணும்னு ஒரே பிடிவாதம்! :)))))))))) அப்படியே கார்த்திக் அமைச்சரவை மாற்றத்தில் எனக்குள்ள வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு அம்பிக்கு ஏதும் பதவி கொடுக்க வேண்டாம் எனச் சொல்வதற்காகவும் போகிறேன். அதுக்காக வலை உலகுக்கு வர மாட்டேன்னு நினைக்க வேண்டாம். வந்துட்டும், போயிட்டும் இருப்பேன். அங்கே போய் ஜெட்லாக் தூக்கம் எல்லாம் போய்த் துணி எல்லாம் கிழிக்க ஆரம்பித்ததும் (ஹிஹிஹி, வாஷிங் மெஷினில் தோய்க்கிறதைச் சொல்றேன்.) எழுத ஆரம்பிச்சுடுவேன். நடுவில் ராத்திரி முழிப்பு வந்தால், (அங்கே போனதும் முதல் பத்து நாளைக்கு ராத்திரி பூரா பேய் மாதிரித் தான் முழிச்சுட்டு இருக்க வேண்டி இருக்கு.) உங்களை எல்லாம் வாட்டி எடுக்கலாம்னு ஒரு எண்ணம். எல்லாம் கையைத் தட்டியோ, அல்லது கல் எறிந்தோ, அல்லது உங்கள் மொழியில் கும்மி அடித்தோ தங்கள் சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொள்ளலாம். திடீர்னு மூன்று பதிவுகள் வந்தாலும் ஆச்சரியப் படவேண்டாம்.

222. பாரதி மீண்டும் வருவான்

பாரதி பற்றிய கட்டுரைகளுக்கு நிறைய ஆதரவும், ஒரு சில கேலிகளும் இருந்தது. அநேகமாய் எல்லாருமே என்னை இன்னும் பாரதியைப்
பற்றி நிறைய எழுதச் சொல்கிறார்கள். ஆகவே பாரதியின் தாக்கம் இன்னும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் தான். இதுவரை இல்லாத புது வேகம் என்னோட எழுத்தில் என்று கார்த்திக்கும், இன்னும் சிலரும்(தனிப்பட்ட முறையில்) கூறி இருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை. எழுத ஆரம்பிச்சதில் இருந்தே
பாரதியை மேற்கோள் காட்டி வந்தாலும் இப்போச் சில நாட்களாய்ச் சில
தகவல்களைப் படிக்கும்போது ஏற்பட்ட மனவருத்தம் ஜீவாவின் பதிவைப்
படித்ததும் வெளிவந்தது. உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கு இவ்வளவு விவாதமா என்று முத்தமிழில் சிலரும், பாரதியை இப்படிப் பேசலாமா என்று வேறு சிலரும் கேட்டார்கள். எல்லாருக்கும் நான் சொல்றது நாகை சிவா சொன்ன பதில் தான். கட்டாயம் விமரிசனம் இருக்கும். அந்த விமரிசனம் தப்பானது என்றால் நாம் நிரூபித்து விட்டுப் போகலாம் அவ்வளவு தானே!

பாரதி கண்ட கனவுகள் ஏதும் நனவாகவில்லை. பாரதி கண்ட சமூக
விடுதலையோ, பொருளாதார விடுதலையோ, பெண் விடுதலையோ
முழுமையாக ஏற்படவில்லை. மாதர் - தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! என்றான் பாரதி. இன்று தன்னைத் தானே இழிவு செய்து கொள்வதில் மாதர்கள் முன்னிலை வகிப்பதைத் தொலைக்காட்சித் தொடர்களில் அறிய முடிகிறது. ஆகவே மாதர் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்வதைத் தான் பாரதி கொளுத்தச் சொல்லி இருப்பான். என்னிடம்
இருக்கும் புத்தகங்களின் துணையால் அவற்றின் உண்மையை அவ்வப்போது எடுத்து உரைப்பேன். அவ்வளவு தான். இதனால் என்னுடைய உத்வேகம் தணிந்து விட்டதாய் யாரும் நினைக்க வேண்டாம். ஆன்மீகம் எழுத எத்தனையோ பேர் இருக்காங்க என்பது மணிப்ரகாஷ், கோபிநாத் போன்றவர்களின் வாதம். பாரதியைப் பற்றி என்னைவிடச்
சிறப்பாகவும், திறமையாகவும் பலர் (முக்கியமாக சீனி.விஸ்வநாதன்,
தொ.மு.சிதம்பர ரகுநாதன் போன்றோர்) எழுதி இருக்கிறார்கள். எழுதுகிறார்கள்.
எழுதுவார்கள். நீங்க எல்லாம் அம்மாதிரிப்புத்தகங்களைத் தேடித் தேடிப்
படித்தால் ஒரு மாதிரியாக உண்மை புரியும். பாரதியின் பாடல்கள் எழுதிய சம்பவங்கள் பல தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

புயற்காற்றைப் பற்றியும் அந்தக் காற்றில் பாரதிதாசன் மாட்டிக் கொண்டது
பற்றியும் பாரதி எழுதிய பாடல் உள்ளது. அரவிந்தரின் மனைவி மிருணாளினி தேவி மறைந்த போது எழுதிய பாடல், அரவிந்தரோடு செய்த ஆராய்ச்சிகள்
பற்றிய பாடல், காந்தியைப் பற்றி எழுதியது என்று ஒரு தொகுப்பே உள்ளது.
இவ்வளவையும் பற்றி என் வாழ்நாளில் எழுத என்னால் முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை! :D

பாரதிக்கு அவசரம். பாடிட்டுப் போயிட்டார். இளைய மகள் சகுந்தலா பாரதி உடல் நலமில்லாமல் இருந்த சமயம் பிலஹரி ராகத்தில் காளியை வேண்டிப் பாடிய பாட்டு உள்ளது. பாரதி அன்புடன் "பாப்பா" என்று அழைப்பார் அவரை. "பாப்பாப் பாடல்கள்' சகுந்தலா பாரதிக்காகப் பாடியவைதாம். பாரதியின் நண்பரான பத்தர் பையனின் உடலும், மனமும் சீர்பெறப் பாடியவை "வலிமையற்ற தோளினாய் போ, போ,போ," போன்ற பாடல்கள். பெண் தெய்வங்களான சரஸ்வதி, லட்சுமி, பராசக்தி போன்றோரை
நினைத்துப் பாடிய பாட்டுக்கள் அவர் வேறு பெண் மீது காதல் கொண்டு பாடியவை என்று சொல்லப் படுகின்றன. இம்மாதிரி எண்ணற்ற பாடல்களும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.

திரு கார்த்திக் பிரபு பாரதி வாழ்ந்த வீட்டிலேயே வாழ்ந்துவிட்டுப் படம் எடுத்துப் போட்டிருக்கிறார். அவரும் தங்கம்மாள் பாரதியின் புத்தகங்களைப் படித்ததாய்ச் சொல்கிறார். தொலைந்து போனது போக என்னிடம் தற்சமயம் தங்கம்மாள் பாரதியின் ஒரே ஒரு புத்தகம்தான் உள்ளது. அதை ஒளியேற்றம் செய்யுமாறு கூறுகிறார்கள். கூடிய சீக்கிரம் அதைச் செய்ய முயலுகிறேன். மிகப் பழைய பதிப்பான இந்தப் புத்தகம் எனக்குத் தெரிந்து ஒரு பதிப்புத் தான் வந்திருக்கிறது என நினைக்கிறேன். வேறு புத்தகங்கள் இருந்தால் யாராவது தெரியப் படுத்தவும். என்னால் முடிந்த அளவு, தெரிந்த அளவு பாரதியை நான் புரிந்து கொண்ட மாதிரியில் அவ்வப்போது எழுதுகிறேன். ஆன்மீகமும் எழுதுவேன். அதை என்னால் நிறுத்த முடியாது. பாரதியின் கவிதைகளே
ஆன்மீகம் சார்ந்த இலக்கியமும் கூட. பக்தியும், இலக்கியமும் சேர்ந்து தான்
எழுதி இருக்கிறார். மரபு சார்ந்து இல்லாமல் சற்றே மரபை மீறி இருந்த காரணத்தினால் கூட அவர் இருந்த காலத்தில் அவரை யாரும் அங்கீகரிக்கவில்லையோ என்னவோ? எப்படி இருந்தாலும் அவருடைய தமிழ்த் தொண்டும், அவர் எழுதிய எழுத்தும் இன்றளவும் பிரமிக்க வைக்கிறது.

தனித் தனியாக எல்லாருக்கும் பதில் கூற முடியாமைக்கு நேரமின்மைதான் காரணம். வேறு காரணம் ஏதும் இல்லை. இதையே நான் தனியாகப் பதில் கூறியதாய் எடுத்துக் கொள்ளவும். என்னால் முடிந்த போது பாரதி பற்றிய கட்டுரைகளும் வரும். என்னிடம் அதிகமாய் நம்பிக்கை வைத்திருக்கும் உங்களை எல்லாம் ஏமாற்ற மாட்டேன். ஆகவே தெரிந்த போது, முடிந்த போது தெரிந்து அறிந்து கொண்டதைத் தருகிறேன்.