எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 29, 2008

பிரசவத்துக்கு இலவசம்!!!!!!!!!! :P

என்னனு பார்க்கிறீங்களா? இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ஆஸ்பத்திரி மாஆஆஆஆஆதிரி எல்லாம் இல்லை, பிரசவ ஆஸ்பத்திரியே தான். ஊரிலே இருக்கும் நாய், பூனை எல்லாம் மற்ற நாட்களில் எங்கேயோ போயிட்டு இருக்கும், சாதம் வைச்சால் கூடச் சாப்பிட வராது. என்னை ஒரு அல்பமாகப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கும். பத்தாதுக்குக் கூப்பிட்டால் ஏதோ விரோதி மாதிரி உர்ர்ர்ர்ருனு முறைச்சுட்டு வேறே போகும். அதனாலோ என்னமோ என்னோட ம.பா. நாங்க கல்யாணம் ஆனதிலே இருந்து வளர்ப்புப் பிராணியாக முதலில் ஒரு பைரவரைக் கொண்டு வந்தார். அவர் சில நாட்கள் தான் இருந்தார். தூங்கும்போது கூட என் பொண்ணோட தொட்டிலிலோ, தூளியிலோ தான் படுத்துப்பேன்னு அடம் பிடிக்கும் டைப். ஆனால் அவளைத் தூளியை விட்டு என்னைத் தவிர என் ம.பா. மட்டுமே எடுக்கணும், வேறே யாராவது எடுத்தால் அவ்வளவு தான், வீட்டுக்குள்ளேயே ஒரு ஓடிப் பிடிச்சு விளையாடுதல் நடக்கும். எடுக்க வந்தவங்க வெறுப்பாயிடுவாங்க. ஆனால் அது பாவம், நான் ஒரு நாள் அதுக்குத் தெரியாமல் பால் வாங்கப் போனபோது (வேலி தாண்டிக் குதித்துப் போவேன், இல்லைனா சுத்த்த்த்த்திட்ட்ட்ட்ட்டுப் போகணும், அதுவும் தாண்டிக் குதிக்கும்போது ஒரு வண்டியில் அடிபட்டு உயிரை விட்டு விட்டது. அப்போ அதன் தாக்கம் அவ்வளவாத் தெரியலை. ராஜஸ்தானுக்கு மாத்திப் போயிட்டோம்.

அங்கே வந்தது ஒரு சிட்டுக் குருவி ஜோடி. இது பத்தி முன்னேயே எழுதிட்டேன். ஒருநாள் அதுங்க வந்துடுச்சுனு நினைச்சுக் கதவைச் சாத்திட்டுப் படுக்க, ஒண்ணு வரவே இல்லை. அன்னிக்கு அதோட ஆஃபீஸிலே ஓவர்டைம் பார்த்திருக்கு போல. கதவெல்லாம் சாத்தினதும் வந்திருக்கு. வெளியே இருந்து அது கூப்பிட, உள்ளே கதவுக்கு நேர்மேலே இருந்த வெண்டிலேஷன் கட்டையில் உட்கார்ந்து இருந்த அதன் ஜோடி, இங்கே இருந்து கத்த, கூட்டில் குஞ்சுகள் கத்த, ஒரே களேபரம். சோககீதம் இசைப்பதை நல்லவேளையாய்ப் புரிஞ்சுட்டு, என்னனு பார்த்து, வெளியே இருந்த குருவியை உள்ளே விட்டோம். அந்தக் குருவிங்க தான் சொன்னதோ, இல்லை மத்த ஜந்துக்கள் எல்லாம் என்ன நினைச்சதோ தெரியலை, தேன் கூட்டில் இருந்து, குளவிக்கூடு, (விதவிதமாய் இருக்கும், அறை அமைப்புக்கள் எல்லாம் ஆர்க்கிடெக்ட் தோத்தாங்க), கிளிகள், புறாக்கள், மைனாக்கள் என்று எல்லாம் வாசம் செய்ய ஆரம்பிச்சது. பத்தாதுக்கு எலிகளும் கூட. இந்த எலிகள் எல்லாம் ரொம்பவே தைரியம் ஜாஸ்தி. சமைக்கும்போது கூடவே வந்து உட்கார்ந்து (மாமியார்கள் மாதிரி?) நல்லாச் சமைக்கிறேனா என்று வேவு பார்க்கும். ஜெர்ரி கிட்டே தோத்துப் போற டாமா என்ன நாம? இருந்தாலும் அதுங்க அடிச்ச லூட்டி தாங்கலை தான்.

எல்லாம் குஞ்சும், குளுவானுமாய் நம்ம வீட்டில் தான் வாசம். எங்கே போனாலும் ராணுவக் குடியிருப்பா? மரம், செடி, கொடிகளுக்குப் பஞ்சம் இல்லை. கிட்டத் தட்டக் காட்டு வாசிதான். அதனாலே முதல்லே ரொம்ப வருஷம் கழிச்சுச் சென்னைக்கு வந்து சொந்த வீட்டில் வசிக்க ஆரம்பிச்சப்போ கொஞ்சம் கஷ்டமாவே இருந்தது. கவலைப்படாதேனு கொஞ்ச நாட்களிலேயே ஊரில் உள்ள நாய், பூனை எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததோடு இல்லாமல், அதுங்க பிரசவத்தையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்க ஆரம்பிச்சது. அதிலே ஒரு சமயம் ஒரு நாய்க்குப் பிரசவம் ரொம்பக் கஷ்டமாப் போய் "ப்ளூ க்ராஸ்" காரங்களுக்குத் தொலைபேசி, (தெருக்காரங்க எல்லாம் சேர்ந்து தான்) அவங்களை வரவழைச்சு, அதுக்கு சிசேரியனும், குடும்பக் கட்டுப்பாடும் சேர்த்துச் செய்யச் சொல்லி,குட்டிகளைக் காப்பாற்றினோம். அதுவும் நன்றி மறக்காமல் தன்னோட பெண், பேத்தி, கொ.பே. என்று அனைத்து நாயினங்களின் பிரசவத்தையும் எங்க வீட்டிலேயே வச்சுக்கிறது. என்ன, வாசலில் தென்னை மரத்தடி ரொம்ப கூலா இருக்குமா? அங்கேயே சாக்குப் போட்டு வைப்போம், டெலிவரி ஆனதும் குட்டிகள் கண் திறக்கும் வரை காத்திருந்து, பின்னர் கொஞ்சம் பெரிசா ஆனது, அம்மா நாய் இல்லாத சமயம் பார்த்து, வெளியே ஒரு பந்தல் போட்டு, (வெளியே விடலைனால் மாடிப்படி, தென்னை மரத்தடிக்குப் பக்கம் இருக்கும் குழாய் கிட்டே எல்லாம் போகவே முடியாது, அம்மா அப்படி ஒரு காவல் காக்கும்) அதுங்களுக்குப் படுக்கை மற்ற சாப்பாடு ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுத்து, (ம்ஹும் வாடகை எல்லாம் கொடுக்காதுங்க) ஒண்ணொண்ணாய் வெளியே விடுவோம். அதுங்களும் கொஞ்சம் பெரிசா ஆயிருக்குமா எப்படியோ போய்ப் பிழைச்சுக்கும்.

ஆனால் இந்த்ப் பூனைங்க இருக்கே, அதுங்க வீட்டுக்குள்ளே வராந்தாவிலேயோ, அல்லது வெளியே இருக்கும் பாத்ரூமிலேயோ தான் குட்டி போடும். வராந்தாவில் இருக்கும் ரூமுக்குள் போகவே முடியாது. கோலமாவு, மற்றும் செருப்பு எல்லாம் வைக்கும் அந்த அறை பூனைங்க குட்டி போடும்போது மட்டும் வெளியே வைக்க ஆரம்பிச்சு, இப்போ நிரந்தரமாய் செருப்பையும்,. கோலமாவையும் வெளியேயே வைக்கும்படியா ஆக்கிடுச்சு. கோலமாவை வெளியே வச்சால் காக்கை, எலி, மற்றப் பறவைகள் வந்துடும். எலி தான் வீட்டுக்குள்ளேயே குஞ்சு போட்டு எல்லாம் எழுதினேனே, அமெரிக்காவிலே இருந்து வந்ததும். தோட்டத்தில் இதெல்லாம் பத்தாதுன்னு இப்போப் பெருச்சாளி குஞ்சு போட தொட்டி முற்றத்தில் இருந்து தண்ணீர் போகும் குழாயை அடைச்சுவிட்டு, அந்தத் தண்ணீர் நிரம்பும் தொட்டியைச் சுத்தமாய்க் காயவச்சு, அதிலே பாலிதீன் பைகள், மற்றும் பேப்பர்கள் எல்லாவற்றையும் ரொம்ப அழகாய் மெத்தை மாதிரிப் போட்டுக் குஞ்சு போட்டு வைச்சிருக்கு. அதை வெளியே எடுத்துப் போடவே மனசுக்குக் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் பெரிசானதும் விரட்டிட்டு இப்போத் தான் அடைச்சோம். இப்போப் பாருங்க வெளியே இருக்கும் குளியல் அறையில் பூனை 3 குட்டிகள் போட்டிருக்கு. அதுங்களுக்கு நான் திரும்பத் திரும்பப் பிரசவம் பார்க்கிறதும், பத்தியமாய்ச் சாப்பாடு போடறதும், மருந்து கிளறித் தரதுமாய் ரொம்பவே ஜனரஞ்சகமாய்ப் போயிட்டிருக்கு! இப்போ அம்மாப் பூனை எங்கேயோ வெளியே போயிருக்கு போலிருக்கு. குட்டிகள் எல்லாம் கத்திட்டு இருக்கு, ரொம்ப அழகான குட்டிகள்.அதுங்களைப் போய்ப் பார்க்கணும், வர்ட்டாஆஆஆஆஆ????????????

இந்த திவா வேறே சும்மா இருக்காம முன்னாலேயே வொர்ட் டாகுமெண்டில் எழுதி வச்சுக்கிறது தானேன்னு கேட்டுட்டு இருக்கார். நான் என்ன அவர் மாதிரியா எழுதறேன்? இல்லை, அப்படி எல்லாம் முன்னேற்பாடு செய்துட்டு உட்கார்ந்தால் இந்த மாதிரி மொக்கை எல்லாம் போடவா முடியும்? அது புரியலை அவருக்கு! :P :P

Thursday, February 28, 2008

என்னால் எழுத முடியாத "மொக்கை"

கொஞ்ச நாளாவே சரியா ஒண்ணும் எழுத முடியலை. ஆரம்பிக்கிற எல்லாமே பாதியிலே நிக்குது. வேறே வலைப்பக்கங்களுக்கும் போக முடியலை. இந்த மாதிரி ஒரு தேக்க நிலை ஏற்பட்டதே இல்லை. எங்கேயாவது ஊருக்குப் போனால் தவிர, அநேகமாய் எப்படியாவது ஒரு போஸ்ட் போட்டுடுவேன், ஆனால் இப்போ முடியலை. கட்டாய ஓய்வில் நான் பார்க்க நேர்ந்த சில படங்கள், சில தொடர்கள், சில புத்தகங்கள்னு இருக்கு. ஆன்லைனில் இருக்கும்போதும் சில சமயம் வலைப்பக்கமே திறக்க வராது. இன்னிக்கு என்னமோ முயற்சி செய்ததில் காலம்பர ப்ளாகர் மெயிண்டனன்ஸ் அப்படினு சொல்லிடுச்சு. இப்போ 1-30 மணியிலே இருந்து முயற்சித்து இப்போ 2-05-க்குத் திறந்து கொண்டது அரை மனசா.

எல்லாரும் காதலர் தினம் கொண்டாடினப்போ "பொதிகை"யும் கொண்டாடினது, அதிலே வந்த இரு படங்கள் "பூவெல்லாம் கேட்டுப் பார்", "மெளன ராகம்", இதிலே மெளனராகம் எத்தனையாவது முறை? படத்தோட முடிவு என்னைப் பொறுத்த வரை மோகன் அந்த டைவோர்ஸ் கடிதத்தை ரேவதியிடம் கொடுத்து அவர் கிழிச்சு எறிஞ்சதுமே முடிஞ்சுடுது. ஆனால் தமிழ் சினிமாவின் மரபை ஒட்டின ஒரு ஆண்டி கிளைமாக்ஸோடு படம் முடியும். நான் எப்போவுமே அந்தப் பகுதி வரும்போது எழுந்து போயிடுவேன். நல்லவேளையா இந்த முறை படம் பார்க்கவே இல்லை. "பூவெல்லாம் கேட்டுப் பார்" படம் வசந்தோடதோ? தெரியலை! படம் பாதியிலே இருந்து தான் பார்த்தேன். சூரியா, ஜோதிகா முதல் முதலாய் ஜோடி சேர்ந்த படம்னு சொல்லுவாங்க. அவங்க வாழ்க்கையை நினைவு கூரும் விதமான வசனங்கள் இருந்தது தற்செயலா? முன்கூட்டியா தெரியலை! முதல்லே இருந்து பார்க்கலையா, புரியலை, கொஞ்சம் கொஞ்சம். ஹிஹிஹி, நமக்குத் தான் ஆரம்பத்திலே இருந்து பார்க்கும் அதிர்ஷ்டமோ, வழக்கமோ கிடையாதே? அப்படி ஆரம்பத்திலே இருந்து பார்த்தால் அதுக்கு முடிவு பார்க்க முடியாது. அந்த மாதிரிப் படங்களில் சமீபத்தில் பார்த்ததில் "பருத்தி வீரன்" இன்னும் முடிவு பார்க்கலை. அப்புறம் "காக்க, காக்க" படமும் முடிவு பார்க்கமுடியலை. டிவியிலே படம் போட்டால் கூட அநேகமாய் முடிவு வரும் நேரம் கரண்ட் கட்ஆயிடும். இந்தப் படம் பார்க்கும்போதும் கரண்ட் கட் ஆயிடுச்சு. அப்புறம் பார்த்தால் படம் முடிஞ்சிருந்தது. இந்த லட்சணத்தில் இருக்கு படம் பார்ப்பது. இதிலே விமரிசனம் ஒரு கேடானு நினைக்காதீங்க. என்ன இருந்தாலும் கதை தெரியுமே. அதுக்குத் தான் விமரிசனம்.

அப்புறமாய் ரொம்ப நாளாய் ஒரு மண்டை வெடிக்கிற கேள்வி, மண்டையைக் குடையுது, இந்தப் பாலும், பழமும் படம் இருக்கே, அதிலே சரோஜா தேவி செத்துப் போய்ச் சுடுகாட்டிலே போய் சிவாஜி, "போனால் போகட்டும் போடா" வெல்லாம் பாடுவார்னு கேட்டிருக்கேன்,(இன்னும் படம் முழுசும் பார்க்கிற பாக்கியம் கிடைக்கலை! :P) ஆனால் அப்புறம் பார்த்தால் அவங்க ஸ்விஸ் போயிருக்கிறாப்போலயும், அங்கே போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டதாயும் கதை சொல்லுவாங்க. அப்போ யாரோட உடலை எரிச்சாங்க? ரொம்பவே கவலையா இருக்குங்க இந்த விஷயத்திலே. சிவாஜிக்கு அப்போவே கண்ணு தெரியாமப் போச்சா? அப்படின்னா மத்தவங்க யார் உடலை எடுத்துட்டுப் போய் சரோஜாதேவினு சொல்லி எரிச்சிருப்பாங்க? ஒண்ணுமே புரியலைங்க, உலகத்திலே. ரொம்பவே கவலையா இருக்கு இப்போ இந்த விஷயம் தான். இப்போத் தான் கேடிவியிலே இல்லை, சன் டிவியிலோ "உலகத் தொலைக்காட்சிகளிலே" முதல் முறையாக இந்தப் படம் போட்டிருக்காங்க, எனக்குத் தெரியாமப் போயிடுச்சு. டிவி எல்லாம் பார்க்கிற வழக்கமே இல்லாமப் போனது எவ்வளவு தப்புனு இப்போப் புரியுது.


என்னோட ம.பா. வுக்கு இந்தக் கவலை எல்லாம் இல்லை. சீரியல் தான் அவரோட கவலை. கஸ்தூரியில் ஆரம்பிச்சு வரிசையா ஒவ்வொருத்தருக்காக் கவலைப் படுவார். ஆனந்தம் அபி,தப்பாச் சொல்றேனோ? ஆனந்தம் அபிராமியா? ஏதோ ஒண்ணு, அதிலே வர ஒரு ஆள், இன்னொரு சீரியலிலும் வராரா, எனக்கு ரெண்டும் குழப்பம். இந்த ஆள் தீவிரவாதியேனு ஒரு சீரியலில் கேட்கப் போக என்னை ஒரு அல்பத் தனமாய்ப் பார்த்த ம.பா. அது ஆனந்தம், இது வேறே சீரியல், நீ வந்து குட்டையைக் குழப்பாதேனு சொல்லிட்டார். அப்புறமாய்ப் பார்த்தால் ஆனந்தத்தில் இன்ஸ்பெக்டர் ஜமுனா, வேறே ஒரு சீரியலில் கணவனால் ஏமாற்றப் படறவளாய் வரா போலிருக்கு. இவள்தான் போலீஸ்காரி ஆச்சே, இப்படி ஒருத்தனை ஏன் கல்யாணம் செய்துக்கறானு கேட்கப் போய், முறைச்சாரே ஒரு முறை. என்னத்தைச் சொல்றது? சானல் மாத்தி, மாத்தி, ரிமோட்டைத் திருப்பினா என்ன புரியும் சொல்லுங்க! அதிலே எல்லா சீரியலும் பார்த்தால் ஒரே மாதிரியாக எல்லாமே நடக்குது. இந்த நளினி எல்லாத்திலேயும் ஒரே காஸ்ட்யூமிலே வராங்க. ஒரே மாதிரியா நடிக்கிறாங்க. பாவம், ஒரு சீரியல் காஸ்ட்யூமே இன்னொரு சீரியலுக்கும் உபயோகிக்கணும் போலிருக்கு அவங்களுக்கு. ரொம்பக் கஷ்டம் போலிருக்கு! சீரியல் பார்க்கணும்னு உட்கார்ந்தால், "கஸ்தூரி"னு ஒண்ணு, அதிலே ஆரம்பிச்சு, "கோலங்கள்" வரை எல்லாத்திலேயும் ஏன் இரண்டு மனைவிகள்? சீரியல்னா இரண்டு மனைவிகள் இருக்கணும்னு ஏதாவது சட்டம் போட்டுட்டாங்களா? அப்புறம் சொத்துக்காக எல்லா சீரியலிலேயும் சொந்த அக்கா, அண்ணா, தம்பி, அப்பா, அம்மா, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, னு எல்லா உறவையும் கொச்சைப் படுத்திட்டுக் கேவலப்படுத்திட்டு இருக்காங்க. இதைப் பார்க்கும் சின்னப் பையன், பொண்ணு எல்லாத்துக்கும் என்ன தோணும்? உறவுக்காரங்களையே தப்பா நினைக்கத் தோணாது? இதைப் பார்க்கும்போது, நல்லவேளை, நமக்குச் சொத்து ஒண்ணும் இல்லைனு ஆறுதலா இருந்தது.

இந்த ரசிகன் யானை நிஜமாவே நான் வாங்கிட்டேன் போலிருக்குனு நினைச்சுட்டு இருந்திருக்கார். ஆமாம்னு சொல்லி யானைச் செலவுக்குப் பணம் கொடுங்கனு கேட்டிருக்கணும். அப்புறம் அபி அப்பா "வலைச்சரம்" ஆசிரியர் ஆக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். எல்லாம் முத்துலட்சுமியை மிரட்டித் தான் வாங்கி இருப்பார் போலே. முத்துலட்சுமியைக் கேட்டால் தெரியும். முதல் நாள் போனது தான். இன்னிக்குச் சாட்டிங்கிலே கேட்டார், ஏன் பார்க்கலைனு, (நல்லவேளை, இணையம் இல்லைனு மனசிலே நினைச்சு சந்தோஷப் பட்டுக்கிட்டேன்).அப்புறம் சூடான் புலியும் இந்த வலை உலகிலே தான் இருக்கு. ஆனால் ரொம்ப பிகுவா உட்கார்ந்திருக்கு. சரினு வந்துட்டேன். கண்டுக்கலையாம். ஓகே, புலினா பதுங்கிட்டுத் தான் வெளியே வரும். சும்மா ஒரு மொக்கை போடலாம்னு வந்தேன். ஆனால் மொக்கை போட முடியலை. மூட் அவுட். அதான் ஏதோ எழுதிட்டுப் போறேன். வர்ட்டாஆஆஆஆஆஆ????????? அப்புறமாய்ப் பார்க்கலாம்.

Monday, February 25, 2008

சக பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

பின்னூட்டமிட விரும்பும் மென்பொருள்கள்:எச்சரிக்கை

என்னுடைய வலைப்பூவில் வழக்கத்திற்கு அதிகமாக ஒரே IPயிலிருந்து, அதிலிருக்கும் ஏறக்குறைய எல்லா பதிவுகளுக்கும் வருகை காணப்பட்டது. முதலில் சற்று மகிழ்சியாக இருந்தாலும் கூடவே சந்தேகமும் வந்தது. நாமென்ன தேவனா (துப்பறியும் சாம்பு) அல்லது சாண்டில்யனா, நம்முடைய எழுத்தை எவனாவது இப்படி விழுந்து விழுந்து படிக்க ! பின்னர் மின்னஞ்சலை திறந்து பார்த்தால் Duran என்பவரிடமிருந்து ஒரு பின்னூட்டம். அதைப் பிரித்தால் முக்கியமான செய்தி எதுவும் இல்லாமல் Publish, Reject என்ற Blogger குறிப்புகளுக்கு மேலாக அதே எழுத்துருவில் warning or visit here என்ற வலை இணைப்புகளோடு காணப்பட்டது.

அங்கேதான் அய்யா ஏமாந்து போய்விட்டேன். அது Blogger தரும் செய்தி என்று தெரியாத்தனமாய் க்ளிக்கித் தொலைத்தேன்.

அது உடனே XPvirusscan என்ற வலைக்குத்தாவி மின்னல் வேகத்தில் scan செய்து, என் கணிணினியில் மூன்று அபாயகரமான வைரஸ்கள் இருப்பதாகவும் அவற்றை நீக்கும்படியும் பயமுறுத்தியது. Remove என்று ஆணை கொடுத்ததுமே ஒரு புது மென்பொருளை .exe ஐ தரவிறக்கம் செய்ய அனுமதி கோரியது என் கணிணி. அப்பா அந்த அளவிற்காவது ஒரு வேகத்தடை இருந்ததே என்று இப்போது சந்தோஷமடைகிறேன்.

உடனே அதை cancel செய்தேன். விடாகண்டன் மாதிரி அந்த ஜன்னல் மூட மறுத்தது. இன்னொரு ஜன்னலில் Cancel செய்தால் ஆபத்து என்கிற விதமாக புது செய்தி முளைத்தது. இப்போது கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய்விட்டது. கண்டிப்பாக இது ஒரு திருட்டு கும்பல் என்று புரிந்து விட்டது. கவலையே படாமல் அந்த வலைப்பக்கத்தை மூடிவிட்டு என் McAfee ஐ வைத்து எல்லா கோப்புகளையும் மென்பொருட்களையும் ஒரு முறை புரட்டிப்பார்க்கச் சொன்னேன். அதற்கு தேவைப்பட்ட நேரம் 40 நிமிடங்கள்.

நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 40 நிமிட வேலையை 40 செகண்டுகளில் யாராவது செய்து 3 வைரஸ்களை பிடித்துத் தரமுடியுமா?

ஆனால் அந்த கும்பலை நமது நண்பர்கள் கண்டிப்பாக புரட்டி எடுக்க முடியும்.அவர்களது IP விலாசம் .. 161.107.18.136 McClean, Virginia United States

இந்த செய்தியை எல்லா சக பதிவாளர்களுக்கும் சொல்லி முளையிலேயே கிள்ளி எறிய அறிவுறுத்துங்கள்.
*************************************************************************************

மேற்கண்ட செய்தி நண்பர் உமேஷ் (உமாநாத்னு தப்பா அடிச்சுட்டேன், ஹிஹிஹி, அ.வ.சி.) அவர்கள் கொடுத்தது. ஆனால் இப்போது ஒரு பத்துப் பதினைந்து நாட்களாக எனக்கும் மேற்கண்ட நபரிடம் இருந்து பின்னூட்டங்கள், என்னுடைய இரு சொந்தப் பதிவுகளுக்கும் வந்து கொண்டிருக்கிறது. என்றாலும் முன்,பின் தெரியாத பெயர், அதுவும் ஆங்கிலப் பெயர் என்றால் நான் பார்க்காமலேயே பின்னூட்டத்தை அழித்துவிடுவேன். அது எவ்வளவு நல்லது என்று இப்போது புரிகின்றது. சக பதிவர்களும் அதி கவனமாக இருக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

Sunday, February 24, 2008

ரத்னேஷுக்கு எனக்குத் தெரிந்த வரையில் பதில்!

இப்போ எதுக்கு இதைப் போட்டிருக்கேன்னு நினைப்பீங்க. காரணம் இருக்கு. எனக்கு அவர் எழுதினது இன்னும் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அதிலே அவர் சில விஷயங்களைப் புரிந்து கொண்டிருப்பதும் சரி இல்லை என்றும் தோன்றியது. குமரனின் பின்னூட்டத்துக்குக் கொடுத்த பதிலில் ரத்னேஷே சொன்ன மாதிரி, அவர் பார்வையின் கோணம் வேறே என்பது புரிந்தது. என்றாலும் சிலவற்றை என் வரையில் தெளிவு படுத்திக் கொள்ளத் தான் இதை எழுதுகிறேன்.

1. முதலில் என் கண்ணில் பட்டது, திரெளபதி கொடுத்த அட்சயபாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கீரைத் துணுக்கு/சாதத் துணுக்கு, ஏதோ ஒன்று, அவர் பாத்திரம் சரியாகக் கழுவவில்லை, என்ற தர்க்க ரீதியான எண்ணம் வந்தது என்கின்றார். அவருக்கு மட்டுமில்லை, துளசியும் கேட்டதாய்ச் சொல்கின்றார். நானும் அப்படியே கேட்டிருக்கிறேன், என்றால் ஆச்சரியப் படவேண்டாம். ஆனால் எனக்குச் சொல்லப் பட்ட பதில்தான் வேறுவிதமானது. அந்த ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு துளி கீரை/சோற்றுப்பருக்கை போல் உன்னிலும், உன்னுள்ளும், ஒரு துளியாவது இறை உணர்வு இருக்கவேண்டும், அதற்குத் தான் இந்த நிகழ்வே தவிர, இதன் உள்ளார்ந்த கருத்தைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இம்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லப் பட்டது. துர்வாசர் "நித்திய உபவாசி" எனப் பெயர் பெற்றவர். ஆகவே அவர் பசியோடு வந்தார் என்று சொல்வதே ஏற்கக் கூடிய ஒன்று இல்லையே? இதன் மூலம் நமக்குச் சொல்லப் பட்ட கருத்து, நம் உள்ளமாகிய அட்சய பாத்திரத்தில், ஒரு துளியாவது ஒட்டிக் கொண்டிருக்கும் இறை உணர்வால் இறைவன் நம் உள்ளத்தையே நிரப்புவான், நம் அறியாமை என்னும் பசி அகலும் என்பதே சொல்லப் பட்டது. இதைத் தத்துவார்த்த ரீதியாகப் பார்க்க அப்போது, அந்த வயதில் எனக்கும் தெரியவில்லை, அல்லது புரியவில்லை என்றே சொல்லவேண்டும், என்றாலும் பக்தி உணர்வு, ஒரு சிறிதாவது இருக்க வேண்டும் என்ற வரையில் புரிந்தது. இப்போது யோசிக்கும்போது அதன் தாத்பரியம் புரிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து ஆன்மீக வாதிகள் பற்றிய பேச்சு: உண்மையில் ஆன்மீகம் என்பது வேறே, இறை உணர்வு என்பது வேறே. இப்போது தோன்றுகிறது, என்னோட இன்னொரு பதிவுக்கு நான் பக்திப் பயணம் என்றே பெயர் கொடுத்திருக்க வேண்டும் என்று. ஆன்மீகவாதிகள் என்ற பொதுத் தலைப்பிலானவர்கள் இல்லை என்று அவர் சொன்னாலும், இங்கே அந்தத் தாத்தாவை ஒரு ஏமாற்றுக் காரர் எனச் சொல்லி இருப்பது சற்றும் ஏற்கக் கூடியதாய் இல்லை. கல்யாண வீடியோவில் க்ராஸ் செக் பண்ணிப் பார்த்ததுக்கு எப்படிச் சாட்சி இல்லையோ, அப்படியே தாத்தா ஏமாற்றினார், லாகிரி கலந்த சாப்பாடு கொடுத்தார் என்று சொல்லுவதற்கும், முக்கால் தூக்கத்தில், டேப்ரிக்கார்டர் போட்டுக் கதை கேட்க வைத்தார் என்று சொல்லுவதற்கும், எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஆனாலும் குமரன் இதைத் தெளிவாக்கி இருக்க வேண்டும், தாத்தா ஒரு சித்தர் என. அதற்கான முன் அறிமுகம் இல்லாமையால் திடீரெனக் கடைசி அத்தியாயத்திலும், அதற்கு முன் அத்தியாயத்திலும் தாத்தா பேசுவது கொஞ்சம் அனைவருக்குமே அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும், அதாவது தர்க்கரீதியாகப் பார்த்தோம் என்றால். இது கதையின் போக்கில் போகவிட்டதால் குமரனே அறியாமல் செய்த தவறு என நினைக்கிறேன்.

சமீபத்தில் ஜெயா டிவியில் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர், ஒரு சித்தர் வானத்தில் பறந்து சென்ற அதிசயக் காட்சியைத் தற்செயலாகத் தன் கைபேசியில் பிடித்து இருந்ததைக் காட்டினார்கள். உண்மையான யோகம் பயின்றவர்களால் தங்கள் மனம், உடல் இரண்டையும் கட்டுப் படுத்த முடியும் என்பதோடு அல்லாமல், பிறர் மனத்தைப் படிக்கவும் முடியும். எண்ண அலைகளைப் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனால் இதற்கு யோகக் கலையின் பூரணத்துவத்தை உணர்ந்து படித்திருக்கவேண்டும். அதை ஒரு பயிற்சியாக இல்லாமல் யோகமாய் அறிந்திருக்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை தாத்தாவை அப்படி ஒருவர் என்றே எண்ணிக் கொண்டேன். ஆகவே எனக்கு இந்தக் குழப்பம் எல்லாம் வரவில்லை. ஆகவே தாத்தா ஏமாற்றினார், கேசவனின் துணையுடன் என்ற எண்ணமே தோன்றவில்லை. தவிர, டேப்ரிகார்டர் போட்டிருந்தால், கந்தனுக்கு அவன் பிதற்றியதும் சேர்ந்து தானே பதிவாகி இருக்க வேண்டும்? ஒருவேளை அதைப் போட்டுக் காட்டவில்லை தாத்தா என்று சொல்கிறாரோ? தவிரவும் இது அவ்வளவு எளிதாய் நடந்திருக்கும் என்றும் தோன்றவில்லை.

அடுத்துக் கல்யாணத்தில் தாத்தா தோன்றியது. அவர் இறக்கவே இல்லை என்றும், உண்மையாகவே வந்திருந்தார் என்றும் ரத்னேஷ் சொல்கின்றார். உரையாடல் இருவருக்குள் தான் நடந்திருக்கிறது என்பதால் தாத்தாவை மற்றவர் அறியமாட்டார்கள் என்றும் சொல்கின்றார். என்றாலும் கல்யாண வீடியோவை மீண்டும் பார்க்காமல் இருந்திருப்பார்களா என்ன? நமக்கு அதுபற்றி எழுதவில்லை என்பதால் க்ராஸ் செக் செய்யவில்லை என்று ஆகாது. ஆனாலும் இதில் கந்தனுக்கு hallucination இருந்திருக்கலாம் என்று எண்ணவும் இடம் இல்லாமல் கேசவனுக்கும் தோன்றுகிறார். நம்பிக்கை உள்ளவர்களுக்குத் தோன்றினார் என்ற கோணத்தில் வைத்துக் கொள்ளலாமோ? ஆனாலும் இது பற்றிக் கொஞ்சம் தெளிவாய்ப் பேசி இருக்கலாம் குமரன் தன் கதையில்.

அப்புறம் குமரன் தன்னை நாத்திக சிந்தனாவாதி என்று சொல்லிக் கொள்வதால் இதன் உட்பொருள் மாறுகிறது என்றும் ரத்னேஷின் பதில். நாத்திகத்தின் எல்லை ஆன்மீகமே. திரு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்னும் ஜேகேயிடம், "கடவுளைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுங்கள்" எனக் கேட்கப்பட்டபோது அவர், "நான் உண்மையை அறிந்தவன் என்பதால், அதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அந்த உண்மையை நீங்களும் அறிந்திருந்தால் தான் முடியும். இல்லை எனில் என் பதிலின் அர்த்தத்தை எப்படி உணர்வீர்கள்?" என்று கேட்டார். அவரும் ஒரு நாத்திகவாதியாகவே அறியப் பட்டார். ஆனால் உண்மையான ஆன்மீகவாதி, யோகி, மற்றும் அத்வைதி திரு ஜேகே அவர்கள். மேலும் இதற்கென ஒரு குரு வந்து உதவி செய்வார் எனவும் எதிர்பார்க்க முடியாது. அவர்களில் மறைந்து இருக்கு உண்மையை அவர் அவர்களே அடையவேண்டியது தான் . அதைத் தான் தாத்தாவும் சொன்னார். நான் வெறும், கருவி மட்டுமே என்று. கந்தனுக்கு வேண்டியது என்ன என்பதை அவன் தான் தீர்மானிக்க வேண்டும், முடியும். இதை விளக்குவதும் மகாக் கடினம். முதலில் எனக்கும் இன்னும் விளங்காத ஒன்று இந்த உண்மையான ஆன்மீகம் தான். தற்சமயம் நான் செலுத்துவது வெறும் பக்தி மட்டுமே. ஒரு வகையில் ஆன்மீகத்துக்கு இவை தடை என்றும் சொல்லலாம்.

இன்னும் சொல்லப் போனால் நம் ஆழ் மனதில் இந்தத் தன்மை இன்னும் விழிப்படையாமல் உறங்கிக் கொண்டே இருக்கிறது. அது தான் திரெளபதியின் அட்சயபாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு துளிக் கீரை! அதை விழிப்படையச் செய்வது தான் நம் கடமை! அது போலவே வெறுப்பு இருந்தால் அது உண்மையான ஆத்தீகம் இல்லை, ஆசார்ய விநோபாபாவே அவர்களிடம் ஒருமுறை,ஒரு இத்தாலி நாட்டு நாத்திகரை அழைத்துச் சென்றார்கள். நம் நாட்டுக் கிராமத்து ஏழை மக்களுக்குத் தொண்டாற்ற வந்த அந்த இத்தாலி நாட்டுக் காரர் ஒரு நாத்திகர் தாம் என்பதால் விநோபாபாவே அவருடன் உரையாடுவாரா எனச் சந்தேகப் பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் விநோபாபாவேயின் பதில் என்ன தெரியுமா?"நாத்திகன் என்றால் கடவுள் என்று பொருள்! கடவுளுக்குச் சமானம் ஆனவன் மட்டுமே கடவுளை மறுக்க முடியும்" என்று பதில் கொடுத்தாராம். (நன்றி: திரு சுகி சிவம்) நாத்திகனின் ஆழமான தேடல் ஆழமான புரிதலுக்கு வழி உண்டு பண்ணுகிறது. ஆகவே நாத்திகத்தின் முடிவில் அவன் உண்மையான ஆன்மீகவாதி ஆகிவிடுகின்றான். இரவும் பகலும் போன்றது ஆத்திகமும், நாத்திகமும். நிழலும் நிஜமும் போன்றது. ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்க முடியாதது.

இதற்குச் சமீபத்திய சான்று பெரும் நாத்திகனாக இருந்து பின்னர் "அர்த்தமுள்ள இந்துமதம்" எழுதிய கண்ணதாசன் இருக்கின்றார். இன்னும் சொல்லப் போனால் ஸ்வாமி விவேகானந்தரை விடச் சிறந்த நாத்திகர் இருந்திருக்க முடியாது. அவரே பின்னாளில் பெரிய ஆன்மீகவாதியாக மாறினார். விவேகானந்தரைப் படிப்பவர்கள் கட்டாயமாய்ப் புரிந்து கொள்வார்கள்.

ரொம்பப் பெரிசாப் போயிடுச்சோ? நிறுத்திக்கிறேன். ஏற்கெனவே ரம்பம்னு சொல்லிட்டு இருக்காங்க, சிஷ்ய(கே)கோடிங்க, தலை மறைவா ஆயிட்டாங்க. அடுத்து ஒரு மொக்கை தான்!

Saturday, February 23, 2008

புல்லாகிப் பூண்டாகி-ரத்னேஷின் விமரிசனத்தில் என் கருத்தும் அவர் பதிலும்

//'கூடவே திரௌபதிக்கு ஒழுங்காகப் பாத்திரம் கழுவத் தெரியாது என்பதும் தெரிகிறது' என்று சொல்லிக் காது திருகு வாங்கியவன், தன் அடையாளங்களை மறந்து படிப்பது சாத்தியமல்லவே//

இப்போ சாத்தியம் இல்லை என்றாலும், மாறுவதற்கோ, மறப்பதற்கோ சாத்தியம் இல்லாமல் இல்லை. கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்.

February 9, 2008 2:32 PM
கீதா சாம்பசிவம் said...
//ஒரு சார்பற்ற நாத்திகவாதி தான் ஆன்மீக விஷயங்களை சரியாக உள்வாங்க முடியும்.//

ஒத்துக்கவேண்டிய ஒரு விஷயம், ஏனெனில், இருக்கிறது என்று சொல்பவர்களை விடக் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் நாத்திகவாதிகளே! உண்மையை அறிய அவர்கள் பாடுபடுவது போல் ஆத்திகவாதி பாடுபடுவது இல்லைதான்!

February 9, 2008 2:34 PM
கீதா சாம்பசிவம் said...
//தாத்தா என்பவர் ஒரு போலி சாமியார்; கந்தன் என்பவன் இலக்கிய மற்றும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கொண்ட ஓர் அப்பாவி. அவனுடைய பள்ளிநாள் நண்பன் கேசவன், இடைப்பட்ட நாட்களில் - தொடர்பு விட்டுப் போயிருந்த நாட்களில் தாத்தாவுடைய கையாளாகி அவருடைய ஃப்ராடு வேலைகளுக்குத் துணை போகிறவன். அதனால் தான் அவன் அதிகம் பேசாதபடிக்குப் படைக்கப்பட்டிருக்கிறான்.//

ம்ம்ம்ம்ம்ம்ம்??????? ஒருவேளை இன்றைய போலி சாமியார்களையே பார்த்து உங்களுக்கு இம்மாதிரியான எண்ணம் தோணுதோ என்ற நினைப்புத் தவிர்க்க முடியலை. உண்மையான ஆன்மீக வாதிகள் இன்றும், இப்போதும் இருக்கின்றனர், சார், அதை மறக்காதீங்க! அதிகம் பேசவில்லை என்பதனாலேயே ஃப்ராடுக்குத் துணை என்று சொல்ல முடியுமா? குறைகுடம் தான் தளும்பும்.

February 9, 2008 2:36 PM
கீதா சாம்பசிவம் said...
//கந்தன் எந்த அளவுக்கு ஆழமாக ஆன்மீக விஷயங்களைப் படித்திருப்பவன்; ஆனால் தெளிவடையாதவன்; எல்லாவற்றையும் ஏட்டுச் சுரைக்காயாகவே, எண்ணத்தில் மேற்கோளுக்காகவும் அடுத்தவர்களைப் பிரமிக்க வைப்பதற்காகவும் மட்டுமே படித்திருப்பவன் என்பதைப் பல்வேறு அத்தியாயங்களில் ஆசிரியர் தெளிவாக விளக்குகிறார். இத்தகையோரைத்தான் ஈகோவைக் கிளறி குழப்பிஒரு வழி பண்ண முடியும்.//

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறாங்க? :)))))))))))

February 9, 2008 2:37 PM
கீதா சாம்பசிவம் said...
//அந்த அப்பாவியை திருவண்ணாமலைக்குக் கூட்டிப் போய் நன்கு நடக்கவிட்டுக் களைப்பாக்கி 'லாகிரி வஸ்து' கலந்த உணவை உண்ண வைத்து ஆன்மீக இலக்கிய விஷயங்களைப் பேச வைத்து முக்கால்தூக்கத்தில் டேப் ரெக்கார்டரில் எதையோ கேட்க வைத்தால், கிருஷ்ணன் என்ன;//

இது கொஞ்சம் 2,3,4, மச்சா இருக்கோ?:(((((((

February 9, 2008 2:39 PM
கீதா சாம்பசிவம் said...
//உச்சகட்ட முயற்சி, கந்தனின் திருமணத்திற்கு முன் தாத்தாவைப் பார்க்க விடாமல் செய்து அவர் இறந்து விட்டார் என்று பொய் கூறி திருமணத்திற்கு வந்திருந்தார்; மறைந்து விட்டார்; அது கந்தனுக்கும் அவனுடைய நண்பனாக வேஷம் போடும் கேசவனுக்கும் மட்டுமே தெரியும் என்று சித்தரிக்க முயன்றது.//

கந்தனை வேண்டுமானால் ஏமாற்றலாம், திருவண்ணாமலையில் இருந்த அத்தனை பேருமா ஏமாற்றுகிறார்கள். கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லையே, இது? உண்மையிலேயே திருமணம் நிச்சயிக்கப் பட்டால், சாவு வீடுகளுக்குப் போவதற்குப் பையன், பெண் இருவருக்கு மட்டுமின்றி அவர்களின் பெற்றோருக்குக் கூட அனுமதி மறுக்கப் படும், மிக மிக நெருங்கிய சொந்தமாய் இருந்தால் தவிர.

February 9, 2008 2:42 PM
கீதா சாம்பசிவம் said...
//பள்ளிநாள் முதலாக அளவுக்கு மீறிய கண்டிப்புடன் (சினிமா கூட சரஸ்வதி சபதம், தசாவதாரம் போன்ற படங்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு) வளர்க்கப்பட்ட ஒரு பையன் பொறியியல் கல்லூரி ஹாஸ்டலில் முதன்முறையாக கஞ்சா அடித்து விட்டு கதறி எழுந்து "நான் தான் இரண்ய கசிபு; எங்கப்பன் தான் என்னை மடியில் போட்டுக் கொன்ற நரசிம்மன்.அப்போதும் அப்படித் தான் செய்தான்; இப்போதும் அப்படித் தான் என்னை மடியில் போட்டே கொல்கிறான்" என்று இரவு முழுக்க புலம்பித் திரிந்தது எனக்குத் தெரியும்.(1983-ல்).//
நடந்திருக்கும், இல்லைனு சொல்லலை, ஆனால் அந்தப் பையன் நிலைமை வேறே, இன்னும் சிலர் கண்டிப்பாய் வளர்க்கப் பட்டதாலேயே ஒரு எல்லைக்குள் உட்பட்டு மிக மிகக் கட்டுப்பாட்டுடன் கூடிய சுயநினைப்பில் இருப்பார்கள். இரண்டும் நடக்கும், இல்லையா?

February 9, 2008 2:44 PM
கீதா சாம்பசிவம் said...
//நீங்கள் மட்டுமாவது)நான் எழுதிய உட்பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள்" என்கிற பாணியில் குமரன் ஏதோ சொல்லப் போகிறார் என்று தான் எண்ணினேன். மற்றவர்கள் வருந்துவார்களே என்று மௌனம் சாதிக்கிறாரோ என்னவோ!//

அப்படி எதுவும் நிர்ப்பந்தம் குமரனுக்கு இருப்பதாய்த் தெரியலை, குமரனின் உள்நோக்கமும் நீங்கள் சொல்வது இல்லை, என்றாலும் வித்தியாசமாய் விமரிசனம் எதிர்பார்த்துத்தான் வந்தேன், ஆகவே எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை! :)))))))))

February 9, 2008 2:46 PM
G.Ragavan said...
உங்க விமர்சனத்தை இப்பத்தான் படிச்சேன். கதையின் நிறைவுப் பகுதியில் நான் இட்ட பின்னூட்டம் இது. நீங்க அத விரிச்சிச் சொல்லீருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அதான் குமரன் அதிர்ச்சியாயிட்டாரு.

// G.Ragavan said...
என்ன மோகன் கதைய அதுக்குள்ள முடிச்சிட்டீங்க :)

ஆகக்கூடி அந்தக் கேசவனும் தாத்தனும் கூடி நாடகமாடி...செத்துப் போன மாதிரி நடிச்சி...அவரப் பாக்க விடாம செஞ்சி கல்யாணத்துல வர்ர மாதிரி வந்துட்டுப் போயி....கந்தன் இப்பிடி ஆன்மீகக் கிறுக்கனா ஆக்கீட்டாங்க. சரிதானே? :)

January 03, 2008 3:33 PM //

February 9, 2008 3:38 PM
RATHNESH said...
மரியாதைக்குரிய கீதா மேடம்,

எத்தனை கணைகள்! அடடா! ஒரு படைப்பாளியாக குமரனின் வெற்றிக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

//உண்மையான ஆன்மீக வாதிகள் இன்றும், இப்போதும் இருக்கின்றனர், சார், அதை மறக்காதீங்க! அதிகம் பேசவில்லை என்பதனாலேயே ஃப்ராடுக்குத் துணை என்று சொல்ல முடியுமா? குறைகுடம் தான் தளும்பும் //

நான் சொன்னது தாத்தா பற்றி மட்டும் தானே ஒழிய ஆன்மீகவாதிகள் என்கிற பொதுத் தலைப்பிலானவர்களை அல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். கேசவனின் படைப்பிற்கு என்னுடைய இலக்கணமும் பொருந்திப் போகிறதா இல்லையா?

// இது கொஞ்சம் 2,3,4, மச்சா இருக்கோ?:((((((( //

இல்லை. அதற்கான விளக்கமாகத் தான் என் கல்லூரிநாள் காட்சி ஒன்றினையும் கொடுத்தேன். அது சாத்தியமே என்று இன்னொரு கணையில் தாங்களும் (பாதியளவாவது) ஒத்துக் கொண்டுள்ளீர்கள்.

// கந்தனை வேண்டுமானால் ஏமாற்றலாம், திருவண்ணாமலையில் இருந்த அத்தனை பேருமா ஏமாறுகிறார்கள். கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லையே, இது?//

திருமணத்தில் தாத்தா பற்றிய தகவல் பரிமாற்றமே அந்த இரண்டுபேருக்குள் மட்டும் தானே நடக்கிறது? கல்யாண வீடியோவில் க்ராஸ்செக் பண்ணிப் பார்த்தார்கள் என்றெல்லாம் விளக்கங்கள் கதையில் இல்லையே.

//குமரனின் உள்நோக்கமும் நீங்கள் சொல்வது இல்லை//

ஒரு படைப்பாளியாக குமரன் இது ஓர் ஆன்மீகக் கதை என்று சொல்லி இருந்தால் ராமகிருஷ்ணவிஜயத்துக்கு அனுப்புங்கள் என்று சொன்ன கையோடு விமர்சனத்தையே தவிர்த்திருக்கலாம். தன்னை நாத்திக சிந்தனாவாதி என்று சொல்லிக் கொள்பவர் இப்படி எழுதுகிறார் என்றால் என்ன உட்பொருள் சொல்லவருகிறார் என்று தானே ஆராயச் சொல்லும்?

// வித்தியாசமாய் விமரிசனம் எதிர்பார்த்துத்தான் வந்தேன், ஆகவே எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை! :)))))))))//

இந்த வாக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
நன்றியை மட்டும் சமர்ப்பிக்கிறேன்.

February 9, 2008 4:39 PM
RATHNESH said...
ராகவன்,

// கதையின் நிறைவுப் பகுதியில் நான் இட்ட பின்னூட்டம் இது. நீங்க அத விரிச்சிச் சொல்லீருக்கீங்கன்னு நெனைக்கிறேன். அதான் குமரன் அதிர்ச்சியாயிட்டாரு.//

ராகவன், ஊருக்குப் போகும் முன் முதல் ஐந்து அத்தியாயங்கள் வரைதான் பின்னூட்டங்களுடன் படித்திருந்தேன். வந்த பிறகு நேரடியாக கதையினை முழுதும் உள்வாங்கவேண்டும் என்கிற முடிவில் அவருடைய பதிவு முகவரியில் சென்று கதையை மட்டுமே முதல் அத்தியாயத்திலிருந்து இறுதிவரை படித்தேன். என்னுடைய விமர்சனத்தை எழுதிய பிறகுதான் மற்றவர்களின் விமர்சனங்களைத் தொகுத்து அவர் போட்டிருந்த பதிவுகளையும் படித்தேன். கூறியது கூறல் வந்து விட வேண்டாம் என்று சிலவற்றை என்னுடையதில் நீக்கி விட்டு பதிவிட்டேன்.

தாங்கள் இதே கோணத்தில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்று அறிய சந்தோஷமாக இருக்கிறது. எந்த சந்தோஷம் என்றால் முதன்முதலில் KRS அவர்களின் ஒரு பதிவில், நான் சுமத்ரை பற்றி எழுதியிருந்த பின்னூட்டத்திற்கு நீங்கள் ஊய் என்று விசில் அடித்துத் தெரிவித்த வாழ்த்து தந்த சந்தோஷம். ஒத்த சிந்தனையாளர்களை எதிர்கொள்கையில் வருகின்ற சந்தோஷம்.

குமரன் அதிர்ச்சி அடைவதில் அர்த்தம் இருக்கிறது. (இந்தவரி குமரனைச் சீண்டுவதற்கு மட்டுமே).

February 9, 2008 4:49 PM
கீதா சாம்பசிவம் said...
//இந்த வாக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்வதென்று தெரியவில்லை.
நன்றியை மட்டும் சமர்ப்பிக்கிறேன்.//

:)))))))))))))


//இப்போ சாத்தியம் இல்லை என்றாலும், மாறுவதற்கோ, மறப்பதற்கோ சாத்தியம் இல்லாமல் இல்லை. கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்.//
இதுக்கு பதில் சொல்லலையே? :))))))))

February 9, 2008 6:46 PM
RATHNESH said...
மேடம்,

// //இப்போ சாத்தியம் இல்லை என்றாலும், மாறுவதற்கோ, மறப்பதற்கோ சாத்தியம் இல்லாமல் இல்லை. கட்டாயம் மாற்றங்கள் ஏற்படும்.//
இதுக்கு பதில் சொல்லலையே? :)))))))) //

கட்டாயம் ஏற்படும் என்று சொல்லி விட்டீர்கள். ஏற்படாமலா போய் விடும்.

பள்ளிக்கூடத்தில் ஒரு குறிப்பிட்ட தப்புக்கு டீச்சர் கூப்பிட்டுக் கொட்டினால் வலியைத் தாண்டி ஒரு வித அற்ப சந்தோஷம் எப்போது ஏற்படும் தெரியுமா மேடம்? அதே தப்பைச் செய்து விட்டு இன்னொரு சகா கொட்டுக்குக் காத்திருக்கும் போது. எனக்கும் இப்போது அதே மாதிரியான சந்தோஷம் தான்; இந்த வார்த்தைகள் இந்தப் பதிவுக்கு முதலில் பின்னூட்டம் எழுதிய துளசி மேடத்துக்கும் சேர்த்துத் தானே?

(// அப்புறம் திரௌபதி இருக்கும் ஒரே ஒரு பாத்திரத்தைக்கூடச் சரியா தேய்ச்சு வைக்கலைன்னு சொல்லி பாட்டியிடம் மொத்து வாங்கி இருக்கேன் நான்//)

புல்லாகிப் பூண்டாகி, விமரிசனம் - என் பக்கத்தில் இருந்து

//புல்லாகிப் பூண்டாகிப் புரைதீர்க்கப் போராடிக்
கல்லாகிக் கண்ணன் கழல்பெற்ற கதையீது
சொல்வார்கள் சொல்லக் கொள்வார்கள் சோர்வதனை
வெல்வார்கள் வென்று வையத்தில் வாழியரே!//

//புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்!
எம்பெருமான்! மெய்யே!
உன் பொன் அடிகள் கண்டு,
இன்று வீடு உற்றேன்!//

""மேற்கண்ட இரு பாடல்களும் மனிதப் பிறவி எடுப்பதன் தாத்பரியத்தை எடுத்து உரைக்கிறது. இந்தப் பூவுலகம் தோன்றியதும் முதலில் முளைத்ததும் புல் என்றே சொல்வதுண்டு. அந்தக் கோடானுகோடிப் புற்களின் ஒன்றான ஒரு சிறிய புல்லின் வாழ்க்கைச் சரிதமே இந்தக் கதை என்று சொல்லவேண்டும். கதையா அல்லது நிகழ்வுகளா? என்று அதிசயிக்கும் வண்ணம் சற்றும் மாறுபட்ட கருத்தைச் சொல்லாமல் எந்தக் கருத்து முக்கியமாய் எடுத்து ஆளவேண்டுமோ அதை ஒட்டியே கதையின் அனைத்து அத்தியாயங்களும் செல்கின்றன. கதையின் நாயகன் கந்தனை நமக்கு அறிமுகப் படுத்தும்போது சற்றே அவனைக் கருவம் படைத்தவனாய் அறிமுகப் படுத்துகிறார். தாத்தாவிடம் பணம் கொடுக்கும்போது தன்னை அறியாமல் அது வெளிப்படுவதும், பின் கந்தன் மனம் வருந்துவதும் எப்போதும் நம் மனத்தில் நடக்கும் இருமனப் போராட்டத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. கூடவே எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாய்க் கதையின் கடைசியில் அடையாளம் காட்டப் படும் கேசவனோ கந்தனை அடி ஒற்றி நடப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே! எனக் கந்தனைத் தொடர்ந்தே செல்கிறான்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது அனைத்துத் தெய்வங்களையும் தரிசிக்கும் கந்தனுக்குச் "சுடலை"யில் காவல் காக்கும் ஈசனை வணங்குவதில் தெரியும் தயக்கமும், மயானத்துக்குச் சென்றால் குளிக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவன் இன்னும் மாயை என்னும் அழுத்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதைக் குறிக்கிறது. (இந்த இடத்தில் இந்த விமரிசனத்துக்குத் தேவையில்லாத குறிப்பு ஒன்று. குஜராத் "ஜாம்நகர்" என்னும் நகரத்தில் பார்க்கவேண்டிய முக்கிய சுற்றுலா இடங்களில் அந்த ஊரின் மயானமும் ஒன்று. அந்த மயானத்துக்குச் சிறு குழந்தையைக் கூட எடுத்துக் கொண்டு வருவார்கள் குஜராத்தியர்கள். அங்கே அது மிகவும் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறதோடு அல்லாமல், அங்கே சென்று வந்தால் குளிப்பது போன்ற ஆசாரங்களும் நடைமுறையில் இல்லை. சர்வ சாதாரணமாய்ப் புதுமணத் தம்பதிகள் முதல் அனைவரும் வந்து சுற்றிப் பார்த்துச் செல்வதுண்டு.) பின்னர் அவனுக்குப் பிடாரி அம்மன் சன்னதியில் மட்டுமே மன அமைதி வந்து சேருகிறது. திருவண்ணாமலைக்கு ஒருமுறை கூடச் செல்லாத என்போன்றோருக்கு மிகச் சிறந்த வழிகாட்டி போல் உதவும் குறிப்புக்களைக் கொடுத்துள்ளார் குமரன். பின்னர் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் கந்தனுக்கு வரும் கனவுகளே மற்ற அத்தியாயங்கள்.

கல்லாய்த் தோன்றிய தன்னை உயிர்ப்பித்து முக்தி கொடுக்கவே கண்ணன் காலால் உதைபட நேர்ந்தது எனத் தாத்தா சொல்லுவதைக் கேட்கும் கந்தன் மட்டுமில்லாமல் நாமும் ஆச்சரியப் படுகிறோம். கூடவே கற்கள், மலைகள் பற்றிய விஞ்ஞானபூர்வச் செய்திகளும் கதையின் போக்குடன் சேர்ந்தே வந்து செல்கிறது. கழுகுகள் பற்றிச் சொல்லும்போதும் அப்படியே! பழகின காக்கை கூடத் தினம் தினம் சாதம் வைக்கும்போது வந்துவிடுகிறது. சற்று நேரம் ஆனால் கத்தி ஊரைக் கூட்டுகிறது. கருடன்களும் அப்படியே பழக்கலாம் என்று தோன்றினாலும் எங்கேயோ காட்டில் இருக்கும் கருடன்கள் அவை! ஆன்மீகவாதிகளால் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று இந்தக் கருடன் வலம் வருவது என்று தோன்றினாலும் பலமுறை சில குறிப்பிட்ட கோயில்களை மட்டுமே கருடன் சுற்றி வருவதையும் காணலாம். அதுவும் கும்பாபிஷேகம் என்று எப்படித் தெரியும் எனத் தோன்றினாலும் ஏதோ ஓர் கண்ணுக்குப் புலன் ஆகாத சக்தி ஒன்று அனைவரையும் இயக்குகிறது என்றவரையில் புரிந்து கொள்ள முடிகிறது.

மரங்களும் அப்படியே! இறைவனுக்கு உருவம் இல்லை என்பது சனாதனா தர்மக் கோட்பாடு என்றாலும், நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்குப் புரியவைப்பதற்காக இறை உருவை நிர்மாணம் செய்தார்கள். அதை ஒரு மரத்தில் நிர்மாணம் செய்து அந்த மரத்தையும் சேர்த்து வழிபடச் சொன்னது நம் வாழ்வே இயற்கையோடு இயைந்தது என்பதைச் சுட்டிக் காட்டவே. ஆனாலும் காலப் போக்கில் அவை மாறித் தான் போய்விட்டது. கூடவே அநேக மரங்களும் அவற்றோடு போய்விட்டது! பின்னர் மனிதரில் தேவர் ஆன நரசிம்மதாசரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "உண்ணும் சோறும், பருகும் நீரும் கண்ணனே!" என்ற நிலையில் இருக்கும் நரசிம்மதாசன், குரு சைதன்யர் இன்னும் ஐநூறு பிறவிகள் இருக்கின்றன என்று சொல்லுவதைக் கேட்டு ஆனந்த நடனம் ஆடுகிறான். இதைக் கண்ட மற்றவர் வியந்தாலும் ஐநூறு பிறவிகளிலும் கண்ணனை மறவாமல் இருக்கவேண்டும் என்ற நரசிம்மதாசனின் பக்தியை நினைத்தால் உண்மையிலேயே "அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற தமிழ் மூதாட்டியின் சொல்லின் உண்மையில் மெய் சிலிர்க்கிறது.

அடுத்து ஜகன்மோகன் ஆனபோதோ இராமகிருஷ்ண பரமஹம்சரின் யோகநிலையைப் பார்த்து வியப்புறுவதும், திருமணம் என்ற பந்தத்தால் ஆன்மீகம் தடைப்படாது, மனையாள் துணை இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதும் உணர்ந்து கொள்வதோடு அல்லாமல் நம்மையும் உணர வைக்கிறார்.
//ஆனால் இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை சாத்தியப்பட்டது?"//
இந்தக் கேள்விக்குப் பதில் முழுமையாக ஜகன்மோகனுக்குக் கிடைக்கவில்லை. சிருஷ்டியின் ரகசியம் அறிய முடியுமா? என்றாலும் ஓரளவு சொல்கிறார் குருநாதர் தோதாபுரி:

//ஜகன்மோகன். அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும். உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவல்களும் உன் முந்தைய பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாசனையே. முழுமையடையாத அந்த அனுபவங்கள் தான் உன்னை மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆன்மிக வாழ்வில் நன்கு முன்னேற்றமடைந்த உனக்கு அந்த அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டாலும் வழி தவறிப் போக இயலாது. அதனால் கவலை வேண்டாம்"//
ஜகன்மோகனுக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கொஞ்சம் கவலை நீங்குகிறது.

மறுநாள் தூங்கி எழுந்து அனைத்தையும் யோசித்துக் குழம்பும் கந்தனின் மனதை ஒருமைப் படுத்தும் தாத்தா அவன் முன்பிறவிகள் அனைத்தும் அவன் கனவில் வந்தவை எனத் தெளிவு படுத்துவதோடு அல்லாமல் இப்பிறவியிலும் அவனுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கும் என உறுதிபடவும் சொல்லுகிறார். ஜாதகம், கைரேகை என்பது பற்றியும் அவனிடம் கூறுகிறார். (இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.என்னோட பள்ளி நாட்களிலேயே என் ஜாதகம், பார்த்தும், கைரேகை பார்த்தும் பல வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கூறிய என் நண்பன் "சிவா" கூறிய அனைத்தும் எனக்கு நடந்திருக்கிறது. ஆனால் சொல்பவர்களின் கணக்கு மிகத் துல்லியமாய் இருக்கவேண்டும்.) தாத்தா சொல்லுவதை ஏற்க முடியாத கந்தனோ, அறிவுபூர்வமாய் அவருடன் வாதாடுகிறான். ஆனாலும் தாத்தா சொல்லுவதும் ஏற்கக் கூடியதாயே உள்ளது. இந்த உலக அனுபவங்களை இன்ப, துன்பங்களை, இல்வாழ்வின் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் விதமாயே அவனின் இப்பிறப்பு அமைந்துள்ளது என்றும் கூறும் தாத்தா இப்பிறவியிலும் அவன் ஆன்மீகவாதியாகவே இருப்பான் எனவும் முன் பிறவித் தொடர்புகளும் தொடரும் என்றும் புதிய தொடர்புகள் உண்டாகும் எனவும் சொல்கின்றார். கேசவன் அவனை எல்லாப்பிறவியிலும் தொடர்ந்து வருவதாயும் சொல்கின்றார்.

என்றாலும் அமைதி அடையாத கந்தன் தான் ஏன் வெளிநாடுகளில் பிறக்கவில்லை என்று எண்ணியதோடல்லாமல் தாத்தாவையும் கேட்கின்றான். அவன் வெளிநாடுகளிலும் பிறந்திருப்பதாயும், பெண்ணாய்க் கூடப் பிறந்திருப்பதாயும் சொல்லும் அவர் பதிலில் அவ்வளவாய்த் திருப்தி அடையவில்லை கந்தன். என்றாலும் மேலும் அவரைக் குடைகின்றான். தாத்தா தான் அவதாரமா எனவும் கேட்கின்றான். இல்லை, என்று கூறும் அவர் அவனின் ஆன்மீகப் பயிற்சி பற்றி இப்பிறவியிலும் அவன் தொடரவேண்டும் என்பதை நினைவு படுத்த வந்த ஒருவர் எனவும், ஒவ்வொரு பிறவியிலும் ஒருத்தர் வருவார்கள் நினைவு படுத்த என்றும் சொல்கின்றார். ""

இத்தனையும் திருமணம் ஆகிப் பத்துவருடங்கள் ஆகும்போது நினைக்கும் கந்தனுக்குத் தன் திருமணத்துக்கு அழைக்கச் சென்ற போது தாத்தா இறந்து போனதும், ஆனாலும் அவர் தன் திருமணத்துக்கு வந்து வாழ்த்துவேன் என்று சொன்னமாதிரி வந்து வாழ்த்தியதைக் கண்டதும், தான் மட்டுமே கண்டோம் என நினைத்த ஒன்றை நண்பன் ஆன கேசவன் கண்டிருக்கிறான் என்று சொல்வதும் குழப்பத்தை அதிகப் படுத்துகிறது. இவை அனைத்தையும் நினைக்கும் கந்தனுக்கு ஏற்படும் குழப்பங்களும், கேள்விகளும் அதற்கான விடைகளும் இன்னும் கிடைக்கவில்லை. காலம் தான் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். கந்தன், அவன் மனைவி, இருகுழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நல்லாசிகளும். கூடிய சீக்கிரம் கந்தன் தன்னை அறிவான்.

பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாட்டுக்களும், அர்த்தங்களும், சுலோகங்களும், அதன் அர்த்தங்களும், படங்களும் என்று கண்ணை மட்டுமின்றி கருத்தையும் கவரக் கூடியதாய் உள்ளது இந்தப் பதிவு. அதுவும் திருவண்ணாமலை பற்றிய பதிவுகளில் வரும் படங்கள் அனைத்தும் அருமை. புதிதாய் முதல் முதல் எழுதுகிறார் என்று ஒரு இடத்தில் கூடத் தோன்றாத படிக்கு எழுதி இருப்பதும் குமரனின் எழுத்து வல்லமைக்குச் சான்று.
**************************************************************************************
மேற்கண்ட விமரிசனத்தைக் குமரனின் "புல்லாகிப் பூண்டாகி" தொடர் பதிவுகளுக்காக நான் எழுதி அனுப்பிய விமரிசனம். அதைக் குமரனுக்கு அனுப்பி அவர் பதிவில் போட்டாச்சு என்றாலும், இங்கேயும் மீள்பதிவு செய்கிறேன். தத்துவ விசாரணையில் எல்லாம் நான் இறங்க வில்லை. கதையை மட்டுமே தொட்டிருக்கிறேன். ஏனெனில் என்னளவில் நான் ஒரு "ஆன்மீக"வாதியே அல்ல என்பதாலும், உண்மையான ஆன்மீகத் தேடல் உள்ள கதாநாயகன் கந்தனின் ஆன்மீகத் தேடலை விமரிசிப்பது என்னளவில் ஒரு பெரிய விஷயம் என்பதாலுமே ஆகும். உண்மையில் இறை நம்பிக்கை உள்ளவளே நான். ஆன்மீகம் என்பதற்கும் இறை நம்பிக்கை என்பதற்கும் பெருமளவில் வித்தியாசமும் உண்டு. இதில் அனைவரும் எழுதிய விமரிசனங்களுள் என்னை மிகவும் கவர்ந்தது "கண்ணபிரான்" "திரு திராச" மற்றும் "ரத்னேஷ்". எழுதிய விமரிசனங்கள். இதில் ரத்னேஷ் ஓரளவு நான் எதிர்பார்த்த மாதிரி எழுதி இருந்தாலும் அதற்கான சில பதிலை வரும் நாட்களில் தேட முயற்சிக்கிறேன்.

ஏற்கெனவே சிஷ்ய(கோ)கேடிங்க எல்லாம் அரண்டு போய்க் கிடக்காங்க, வரதே இல்லை, தொ(கு)ண்டர்களில், மூத்த தொ(கு)ண்டர் ஆன நம்ம "அதியமான்" "மொக்கைப் பதிவு"க்கே நம்ம ஓட்டும், பின்னூட்டமும் என்று ஸ்டாம்ப் பேப்பரிலேயே எழுதிக் கொடுத்திருக்கிறார். அப்படி இருந்தும் இதைப் போடப் போறேன்னா, எல்லாம், அஜித் லெட்டர்னு தான் சொல்லணும்.

யானைக்குத் தீனிக்குப் பணமும் வந்துடுச்சு!


அப்பாடா, இந்த திவா பணம் அனுப்பினாலும் அனுப்பினார், அதை மாத்தறதுக்குள்ளே எம்பாடு உம்பாடா ஆயிடுச்சு. ஒருவழியா ரொம்பக் கஷ்டப் பட்டு இந்தியப் பணமா மாத்தி அதை யானைக்கான தீனிக்குச் செலவா வச்சுக்கப் போறேன். திவா இனிமேல் அனுப்பும்போது உடனே செலவழிக்க வசதியா அனுப்பி வைங்க! இதுக்காக ஒரு பதிவு போடற நேரம் செலவு பண்ணும்படியா ஆயிடுச்சு!

Wednesday, February 20, 2008

யானை வாங்கலியோ, யானை!


யானைன்னா பிடிக்காதவங்க யாரு? எல்லாருக்குமே பிடிக்கும் யானைன்னா. என்றாலும் சிலருக்குத் தனிப் பிரியம் கொஞ்சம் அதிகமாவே இருக்கும் இல்லையா? எனக்கும் அப்படித் தான். எங்க வீட்டில் யானைப் படம் போட்ட பேப்பரில் இருந்து, தொலைக்காட்சியில் வரும் விளம்பரம் வரை யானை வந்தால் உடனேயே என்னைக் கூப்பிட்டுச் சொல்லுவாங்க. இல்லைனா அப்புறமாய் நான் அனத்தற அனத்தல் தாங்க முடியலையோ என்னமோ! :P ஹிஹிஹி, டிஸ்கவரி சானலிலே கூட யானை சம்மந்தப் பட்ட டாகுமெண்டரி என்றால் உடனேயே என்ன வேலை இருந்தாலும் உட்கார்ந்து பார்ப்பேன். மத்தது எல்லாம் நேரம் இருந்தால் தான். இந்த வலை உலகுக்கு வந்தப்போ என்னுடைய இந்த "யானைக் காதல்" பற்றி எழுதணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஆனால் அந்த ஆசையிலே மண் விழுந்தது.

எல்லாம் நான் "துரோணாச்சாரியார்" மாதிரி குருவாக நினைச்சு, வலைப்பூ ஆரம்பிக்கக் காரணமாய் இருந்த துளசியாலே தான். துளசிக்கு லிங்க் கொடுக்க வேணாம்னு தான் கொடுக்கலை. நான் வலைப்பூ ஆரம்பிக்கக் காரணமே துளசியின் வலைப்பக்கங்களைப் படிக்க ஆரம்பிச்சதும் தான். அவங்க பிரயாணங்களைப் பற்றிய கட்டுரைகளின் மூலம், நாமும் நம்ம பிரயாணங்களைப் பற்றி எழுதலாமேன்னு நினைச்சுப்பேன். இப்படி ஒரு "ஏகலைவி"யாக இருந்து வலைப்பக்கங்களின் அரசியல் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டதின் விளைவு, துளசிக்காக நான் "யானை"யை விட்டுக் கொடுக்க வேண்டியதாப் போச்சு! "கட்டை விரல்" கேட்ட துரோணர் போல துளசி "யானை"யை விட்டுடுங்கனு என் கிட்டே கேட்கலைதான். என்றாலும் குருவுக்குச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை ஒண்ணு இருக்கே! அப்புறமா மெல்ல, மெல்ல, நம்ம யானைக் காதலைத் தெரிவிச்சுக்கலாம்னா அதுக்கும் வச்சாங்கப்பா ஆப்பு! "பொன்ஸை" தனக்குப் பின்னர் தன்னோட யானை வாரிசா அறிவிச்சாங்களா? அப்போத் தான் உறைச்சது, நம்ம ஒரு "ஏகலைவி"னு! குருதட்சிணையும் அப்புறமாய்த் தான் கொடுத்தேன், யானை பத்தி எழுதாமல்.

ஆனால் இப்போ போன வாரம் "திவா" வோட யானைக் குட்டியைப் பத்திப் பேச்சு வந்ததும் எங்கே வாங்கினீங்கனு ஆசையை அடக்க முடியாமல் கேட்டதும் அவர் எனக்கு மெயிலில் அனுப்பின யானைக்குட்டியைத் தான் மேலே பார்க்கிறீங்க. பிறந்து 7,8 நாள்தான் ஆயிருக்காம். என்னைக் கேட்டால் உலகிலேயே அழகான பிராணி யானைதானு கண்ணை மூடிட்டு மட்டுமில்லை, திறந்துட்டும் சொல்லுவேன். அதுவும் இந்தக் குட்டி யானை இருக்கே, அழகோ, அழகு. இன்னும் நிறைய யானை இருக்கு, இலவசமாவே தராங்க, போய் வாங்கிக்குங்கனும் சொன்னார். சரினு போய்ப் பார்த்துட்டும் வந்தேன். இது தான் எல்லாத்தையும் விட சூப்பரோ சூப்பர்! திருஷ்டி சுத்திப் போடணும் போல இருக்கு, இதைப் பார்த்தாலே! கிடைக்குமிடம் நான் ஏங்க சொல்லணும்? எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமே! அதான் சொல்லலை!

Tuesday, February 19, 2008

தமிழ்த் தாத்தாவின் பிறந்த நாள்


இன்று மகா வித்துவான் உ.வே.சுவாமிநாத ஐயரவர்களின் பிறந்தநாள். பல சுவடிகளையும், ஏடுகளையும் தேடிக் கண்டு பிடித்து நமக்கெல்லாம் இவர் அளிக்கவில்லை எனில், பல நூல்கள் பற்றியும் நாம் அறிய முடியாமலே போயிருக்கும். வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்தவர் தமிழ்த் தாத்தா அவர்கள். திருவாடுதுறை ஆதினத்தின் மகா வித்துவான் ஆன ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டவர். அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மோகமே அதிகமாய் இருந்து வந்தாலும் இவர் தமிழின்பால் மிக்க ஆசையுடனும், அன்புடனும், ஆர்வத்துடனும் பாடம் கேட்டவர். பின்னர் கும்பகோணம் கல்லூரியிலும், சென்னைக் கல்லூரியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். திருவாடுதுறை ஆதீனத்தின் மடத்தில் தமிழ் மற்றும் வடமொழி பயின்று வந்த பலரும் இருந்தனர்.அவர்களில் சில தம்பிரான்களும் இருந்திருக்கின்றனர். அவர்களிடையே பதவிகளில் மட்டுமில்லாமல் உணவு பரிமாறுவதிலும் தார, தம்மியம் இருந்து வந்திருக்கிறது. மாணாக்கர்கள் உணவுச்சுவையிலே கருத்தை ஊன்ற ஆரம்பித்தால் பாடம் கேட்பதிலே கருத்துக் குறைந்துவிடும் என்ற எண்ணமே காரணம். எது கிடைத்தாலும் அருந்தித் தேர்ச்சி பெற்றவர்கள் பின்னாட்களில் நல்ல நிலைமையை அடைவார்கள் என்ற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். என்றாலும் அப்படி ஒன்றும் அப்போது நல்ல உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கவில்லை.

ஒரு முறை மிக்க பசியோடு ஆசிரியர் ஆன மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும், சுவாமிநாத ஐயரவர்களும் மகா ஆதீனத்த்தைப் பார்த்துவிட்டுத் திரும்புங்காலையில், ஆதீனம் அவர்கள், இருவரிடமும், தன்னுடனேயே சேர்ந்து உணவருந்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கவே இருவரும் மகா ஆதீனத்துடனேயே உணவு அருந்தினார்களாம். அப்போது உணவில் நெய்யும், தயிரும் பரிமாறப் படவே, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், சுவாமிநாத ஐயரவர்களிடம், சுவாமிநாதா, நமக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாள், நெய்யும், தயிரும் கிடைக்கிறது எனச் சொன்னாராம்.

இப்படி உணவில் கூட நெய்யையும், தயிரையும் எப்போதாவது மட்டுமே பார்த்து தமிழ் மொழியை மட்டுமே நினைத்துக் கொண்டு, இவர்கள் உடல் வருந்தித் தொண்டாற்றிய தமிழ் மொழியை வளர்க்கப் பாடுபடுவோம்.

Thursday, February 14, 2008

இன்றைய காதலர்களே, பதில் சொல்லுங்கள்!

மும்பையில், "ராக்கி சாவந்த்" என்னும் பெண்ணின் காதலன் அபிஷேக், காதலர்தின வாழ்த்துக்களோடு, அந்தப் பெண்ணிற்குக் கொடுக்க வந்த பூங்கொத்தை நிராகரித்ததோடு அல்லாமல், அபிஷேக்கை மாறி, மாறி அறைந்தார். இருவரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள் தான் என்பதோடு காதலர்களும் தான். ஆனால் அந்தப் பெண் என்ன காரணத்தால் நிராகரிக்கிறார் என்று தெளிவாய்ச் சொல்லவில்லை. இது அவர் காதலர் தினத்துக்குத் தன் காதலனுக்குக் கொடுத்த பரிசா? புரியவில்லை. அது தவிர, மிகவும் மனம் புண்படும்படியான வார்த்தைகளிலும் காதலனைத் திட்டினார். இதையும் ஒரு தொலைக்காட்சி (ஆஜ்தக்) படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. காதலர்களின் அந்தரங்கத்துக்குள் தொலைக்காட்சி நுழைந்த விதமோ, அது படம் எடுப்பதின் உணர்வு அந்தக் காதலர்களுக்கு இல்லையா என்பதும் தெரியவில்லை. என்றாலும் அந்தப் பையன் கெஞ்சும் விதத்தைப் பார்த்தால், இப்படியாவது காதலுக்குக் கெஞ்சி அந்தப் பெண் ஏற்றுக் கொண்டாலும், அவனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை காத்திருக்கும்? இன்றைய காதலர்களே பதில் சொல்லுங்கள்! நாடு எங்கே போகிறது? நாம் எங்கே போகிறோம்? ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?

புரியப் பத்து வருஷம் ஆனது - காதல் என்றால் என்ன?


சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததில் ஒருமாதிரியாகக் காதல் என்று ஒன்று இருப்பது தெரிந்தாலும், உண்மையான வாழ்க்கையில் பார்த்தால் அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும். கதைகளிலும், காவியங்களிலும் நான் பார்த்த காதல் என்பது வேறாக இருந்தது. முதலில் அன்பு என்பதற்கே வேறு வேறு அர்த்தம் இருந்தது. அன்புதான் காதலா, காதல் தான் அன்பா என்றால் புரியவில்லை.

நான் படித்த புத்தகங்களில் குறிப்பிடப்பட்ட காதலில் முக்கியமானவையாகக் கல்கியின் "அமரதாரா" கதையில் வந்த ரங்கதுரை, இந்துமதி காதல்தான் முதலில் என்னைக் கவர்ந்தது. அந்தக் கதையை நான் முதலில் படிக்கும்போதே கல்கி இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அவருக்குப் பின் அவருடைய பெண் "ஆனந்தி" கதையை முடித்து இருக்கிறார். நான் முதலில் படித்தது "இந்துமதியின் கதை" என்ற பாகம் ஒன்றுதான். அதில் வரும் இந்துமதியின் தாய், தந்தையரின் காதலும், அதற்குப்பின் இந்துமதி, ரங்கதுரையின் காதலும் என்னை மிகவும் வசீகரித்தது. இந்துமதியின் தாய் சந்திரமணியின் காதல் ஆக்ரோஷமானது என்றால் இந்துமதியின் காதல் அமைதியான நதியைப் போன்றது. இன்னும் சொன்னால் வற்றாத ஜீவநதி என்றும் சொல்லலாம். அதிலேயே கல்கி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்:ரங்கதுரையின் வார்த்தைகளில்: "இந்த அன்பை என்னவென்று சொல்வது? ஒரு தாய், தன் மகளிடம் காட்டும் அன்பா, தந்தை, தன் மகளிடம் காட்டும் அன்பா, கணவன் மனைவியிடம் காட்டும் அன்பா அல்லது காதலன், காதலியிடம் காட்டும் அன்பா? புரியவில்லை." என்று வந்திருக்கும். நான் படித்து பல வருடங்களாகிவிட்டபடியால் நினைவில் இருந்து எழுதி இருப்பது தப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் அர்த்தம் இதுதான். அப்படி ஒரு காதலைப் பற்றி அதுவரை நானும் படிக்கவில்லை. அதிலும் ரங்கதுரை வெளிநாடு சென்றதும், அவன் நினைவில் இருக்கும் இந்துமதிக்கு அவன் பாடும் பாரதி பாடல் நினைவில் வரும்.

நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக்குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்டுநிதம் மேகம் அளந்தே,
பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றுமில்லை
சிரித்த ஒலியினில் உன்கைவிலக்கியே
தருமித் தழுவியதில் நின்முகங்
கண்டேன்"

இந்தப்பாட்டு ரங்கதுரை வெளிநாடு செல்லுமுன் இந்துமதிக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போவான்.
, உடனேயே நிலவில் அவன் முகமும் அவள் நினைவில் தெரிவதாகப் படம் ஓவியர் திரு மணியம் அவர்களால் வரையப்பட்டிருக்கும். இந்துமதியின் கண்களில் தெரியும் அந்த ஏக்கம் இன்னும் கண்ணிலேயே இருக்கிறது. அதற்கு அப்புறம் நான் ரங்கதுரையின் கதை நடக்கும் பாகம் வாங்கிப் படிக்க ரொம்ப நாள் ஆனது. அதுவரை ஒரே கவலையாக இருக்கும். தினமும் நினைத்துக் கொள்வேன் இந்துமதிக்கு என்ன ஆனதோ என்று. அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று தெரியும்போது எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டிருந்தது.

கல்யாணம் ஆகிப் புக்ககம் போனதும் என் கணவர் என்னை விட்டு விட்டுப் புனே சென்று விட்டார். புனேயில் வீடு கிடைப்பது கஷ்டம் என்பதால் நான் உடனே செல்லவில்லை. கிராமத்தில் மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார், மைத்துனர்களுடன் இருந்தேன். அப்போது அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அந்தக் கடிதத்தில் நான் தனியாக இருப்பது பற்றியும் உடனே அழைத்துப் போவது பற்றியும் கொஞ்சம் கவித்துவமாக எழுதி இருந்தேன். அதற்குப் பதில் என்ன வந்தது தெரியுமா? ஒரு இன்லாண்ட் கவரில் 4 வரி. "எனக்குச் சென்னை மாற்றல் ஆகிவிட்டது. இன்னும் 10 நாளில் வந்து அழைத்துப் போகிறேன். மற்றபடி நீ தமிழ் நன்றாக எழுதுவதால் ஏதாவது கதை எழுதிப் பார்க்கவும். முயன்றால் உனக்கு நன்றாக எழுத வரும்." என்பதுதான். எனக்குச் சப்பென்றாகி விட்டது. "பரவாயில்லை" என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அதுதான் அழைத்துப் போகப் போகிறாரே, அப்புறம் என்ன என்று தோன்றியது. குடித்தனம் வைத்துப் பழகும்போதும் அத்தனை பேச்சு, வார்த்தை இல்லை. எங்கள் வீட்டில் எல்லாரும் சகஜமாகப் பேசிப் பழகுவோம். என் அண்ணன், தம்பியுடன் எனக்குச் சண்டை எல்லாம் வரும். இங்கேயோ நேர்மாறாக இருந்தது. ஆகவே மறுபடியும் என் கவனம் புத்தகங்களில் திரும்பியது. நான் பாட்டுக்குப் படித்துக் கொண்டு இருப்பேன். இதற்கு நடுவில் எனக்குப் பெண் பிறந்து, ராஜஸ்தான் போய், அங்கே இருக்கும் போதே பையனும் பிறந்தான். குழந்தைகளும் ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் தான் வருவார்கள். என் அப்பா சினிமாவுக்குப் போனாலோ எங்காவது போனாலோ போய்விட்டு வந்து அந்தக் கதையெல்லாம் சொல்லுவார் எங்களுக்கு. அப்பாவுடன் விளையாடுவோம். விளையாட்டில் ஏமாற்றினால் சண்டை போடுவோம். இங்கே அந்த மாதிரி வெளிப்படையாக எதுவும் கிடையாது. ஆகவே என் கணவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா என்னவென்று எனக்குப் புரியவில்லை.

இந்த மாதிரிக் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்கள் போய்விட்டது. என் மனதில் தீராக்குறைதான். ஆனால் வெளிப்படையாக இதைப் பற்றி நானும் பேசவில்லை, அவரும் பேசவில்லை. அந்த சமயத்தில் எனக்கு மூலம் வியாதி முதல் பிரசவத்தில் ஆரம்பித்தது ஜாஸ்தியாகி 12 o clock position என்னும் நிலையை அடைந்து ஆபரேஷன் செய்தால் தான் சரியாகும் என்று டாக்டர் கூறிவிட்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்துத் தினம் இரண்டு வேளையும் என் கணவர் வருவார். எனக்கு என்னமோ கடமைக்கு வருவதாகத் தோன்றும். ஆதலால் அவரிடம் "நீங்கள் தினம் வர வேண்டாம். ஆஃபீஸ் போய்விட்டுச் சாயந்திரம் வந்தால் போதும்" என்றேன். பதில் சொல்லாமல் சிரித்துவிட்டுப் போய்விட்டார். ஆபரேஷனும் ஆனது. இப்போது ஒரு பத்து வருஷமாகத் தான் லேஸர் எல்லாம். அப்போது எல்லாம் அப்படிக் கிடையாது. லோகல் அனஸ்தீஷியா கொடுத்து ஆபரேஷன் செய்துப் பின் படுக்கையில் கொண்டு விட்டு, விட்டு டாக்டர் சொன்னார்" இங்கே பாருங்க, கீதா, ரொம்ப வலி இருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். நான் சொன்னேன், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனக்குப் பிரசவ வலியைவிடவா வலிக்கும் என்று சொன்னேன். டாக்டர் அதற்கு"இல்லை அம்மா, இது தாங்காது. உங்கள் நரம்பு வெட்டித் தைத்திருக்கிறோம். 24 மணி நேரம் வலி இருக்கும். உயிர் போகும் வலி இருக்கும். வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டிருக்கிறேன்". என்றார். சரி என்றேன். சிறிது நேரம் டாக்டர் இருந்துவிட்டு எனக்குக் காலில் உணர்வு வந்ததும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மறுபடி எச்சரிக்கை செய்தார். எனக்கு வேடிக்கையக இருந்தது. நர்ஸ் வேறே 10 நிமிஷத்திற்கு ஒருமுறை வந்து பார்த்தாள். உணர்வு வந்து ஒரு 1/2 மணிக்கெல்லாம் வலி ஆரம்பித்தது பாருங்கள், வலி என்றால் வலி சொல்லமுடியவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் என்னை அறியாமல் கத்த ஆரம்பித்தேன். மருந்துகளின் மயக்கத்திலும், ஊசியின் தாக்கத்திலும் கூட வலி பொறுக்க முடியவில்லை. கடவுளே என் உயிரை எடுத்துக் கொள் என்று மூன்றாவது மாடியில் இருந்த நான் போட்ட சத்தத்தில் பிரசவ வார்டு, மற்ற ஆபரேஷன் செய்தவர்கள், தினமும் வரும் நோயாளிகள் என்று என் அறை வாசலில் ஒரே கூட்டம் கூடி இருக்கிறது. என் அப்பாவும், அம்மாவும், சகோதரர்களும் என்ன செய்வது என்று புரியாமல் டாக்டரைத் திருப்பிக் கூப்பிட்டார்கள். அவர் வந்து பார்த்துவிட்டு வலி தெரிய வேண்டும். அப்போது தான் ஆபரேஷன் செய்ததின் பலன் தெரியும் என்று சொல்லி விட்டு மறுபடி ஒரு சக்தி வாய்ந்த ஊசியைப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அதற்குள் குழந்தைகள் வருவார்கள் அழைத்து வர வேண்டும் என்று வீட்டுக்குப் போவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவருக்கு விஷயம் தெரிந்து திரும்ப வந்துவிட்டார். நான் துடிப்பதைப் பார்த்துவிட்டு மெதுவாக என் அருகில் வந்து என் கையைத் தொட்டு ஆறுதல் சொல்ல என் கையை இறுக்கிப் பிடித்திருக்கிறார். சட்டென்று அத்தனை வலியிலும் என் உணர்வு விழித்துக் கொண்டது. அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.
*************************************************************************************

கைப்புள்ள எழுதி இருப்பதைப் போய்ப் பார்த்துப் படிச்சேன், நாங்கள் நிறையவே இதைப் பற்றிப் பேசி இருந்தோம், அவர் சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருக்கிறார், என்பது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தாலும், அவர் என்னைப்பற்றிப் புகழ்ந்து இருப்பது கொஞ்சம் நெருடலாகவே தான் இருந்தது. ஏனெனில், நானும் முதலில் புரியாமல், இந்த மாதிரியான வெளிப்படையான பரிசுகளையும், பேச்சுக்களையும் எதிர்பார்த்தவள்தான் என்பதினாலேயே. இதைப் பற்றி முன்பு நான் வலைப்பதிவு எழுத ஆரம்பிச்ச புதிதில் எழுதிய ஒரு பதிவைத் திரும்ப இங்கே போடுகிறேன். இதிலே "பொன்ஸ்" எனக்குக் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தை என்னால் மறக்க முடியாது. அவர் சொல்லி இருப்பதை அப்படியே வரிக்கு வரி நினைவில்லாவிட்டாலும், அவரின் கருத்து இது தான்: "பத்து வருஷம் காத்திருந்திருக்கீங்க, பத்து வருஷம் என்பதெல்லாம் இந்த அவசர உலகில் நடக்காத ஒன்று." என்பதே. கிட்டத் தட்ட இந்த அர்த்தம் தான் வரும். திரு திராச அவர்கள், "அன்பு, காதல் எல்லாம் "நல்லி"கடை ஷோரூமில் வைக்கும் பொருள் அல்ல" என்ற தொனியில் சொல்லி இருப்பார். இதில் பொன்ஸ் சொல்லி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். என்றாலும் அன்றைய பதிவில் அதை மறுத்தோ, ஆதரித்தோ சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு பெண்ணிடமோ, ஒரு ஆணிடமோ காதல் தோன்றும்போது, "கண்டவுடனே காதல்" என்பது நிச்சயம் உடல் கவர்ச்சிதான் முதலிடம் வகிக்கும் என்று என் கருத்து. என்றாலும் சிலரைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் ஒரு ஈர்ப்பு வரும், மொழி படத்தில் வருகிறமாதிரி, யாருக்கும் மூளையில் பல்பு எரிவதில்லை, அப்படி இருந்தால் நல்லாத் தான் இருக்கும். என்றாலும் இந்தச் சிலரிடம் தோன்றும் ஈர்ப்புக் கடைசியில் ஒருத்தரிடமே நிலைப்பது தான் காதல் என்று நினைக்கிறேன். அந்தக் காதலை நாம் அறிந்து கொள்வதற்குள் என்ன பாடு? எத்தனை கஷ்டம்? எவ்வளவு வேதனை? என்றாலும் காத்திருக்கிறோம் அல்லவா? மஞ்சூர் சொல்வது போல், "ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்" என்பார் அவர். அது என்னமோ உண்மைதான். அந்த ஒரு வார்த்தை கிடைத்ததும் அதைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். தவறுகளைத் திருத்திக் கொண்டு சந்தோஷமான வாழ்வை ஆரம்பியுங்கள். உங்களுக்குள் "ஈகோ" வேண்டாம். ரொம்ப போர் அடிச்சதினால் 2 நாள் லீவு, எஞ்சாய்!!!!! :)))))))))))

ஆதலினால் காதல் செய்வீர், ஆனால் தினமும்


"காதலினால் உயிர் தோன்றும்-இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவு எய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்"

பாரதியை விடச் சிறந்த காதலன் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அவன் காதல் பரந்து விரிந்தது. அவன் காதல் பெண்ணை மட்டும் காதலிக்கவில்லை, மொழியை, நாட்டை, இந்தப் பரந்து விரிந்த உலகைக் காதலித்தான். இன்றைய கால கட்டத்தில் அவ்வாறான பரந்த நோக்கு நம் அனைவருக்கும் தேவை என்றாலும், முதலில் நாம் ஒருவரை ஒருவர் காதலிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். இது பரஸ்பரம் நம்பிக்கையால் தானாக வரவேண்டும். விவாகரத்துக்களும், முறிந்த காதல்களும், கணவனுக்குத் தெரியாமல் இன்னொரு ஆணைக் காதலிக்கும் பெண்ணும், மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணைக் காதலிக்கும் ஆணும் இப்போது எங்கேயும் காணக் கிடைக்கிறது. தினசரிகளில் தினமும் நாம் காண்பது கள்ளக் காதலனுக்காகக் கணவனைக் கொன்ற மனைவியைப் பற்றியும், இன்னொரு பெண்ணுக்காக மனைவியைக் கொன்ற ஆணையும் பற்றி அல்லது கணவனுடன் ஒத்து வாழ முடியவில்லை என்பதற்காக அவனை விவாகரத்து செய்யும் பெண்ணைப் பற்றியுமே ஆகும். ஏன் இவ்வாறு?

நம் சமூகம் கட்டுப் பாடுகள் நிறைந்தது மட்டுமில்லாமல் பரந்து விரிந்த கோட்பாடுகளையும் கொண்டது தான். ஆணோ, பெண்ணோ இங்கே சமம் தான். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல், சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களும், சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களினால் தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளான ஜோடிகளுமே தடுமாறுகின்றனர். காதலித்து மணம் செய்து கொண்ட பலரும் வாழ்க்கையில் வெற்றி அடைவதில்லை. இதன் காரணம் என்ன? ஒருவர் மற்றவர் மீது கொண்ட அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கணவன், மனைவிக்குள் நீ, உயர்ந்தவர், நான் தாழ்ந்தவர் என்ற எண்ணமோ, அதனால் விளையும் கருத்து வேறுபாடுகளோ எழவோ எழாது.சாதாரணமாய் வாழ்க்கையில் அன்றாடம் எழும் கருத்து வேறுபாடுகள் ஒவ்வொரு வகைப்படும், அகங்காரத்தினாலும், நான் குடும்பத் தலைவன், என் பேச்சை நீ மீறக் கூடாது, என்று கணவனும், நான், குடும்பத் தலைவி, என் பேச்சுத் தான் இங்கே செல்லும், என மனைவியும் ஒருவரை ஒருவர் சரியாக நினைக்காததாலும், பரஸ்பரம் விட்டுக் கொடுக்காத தன்மையினாலும் விளையும் கருத்து வேறுபாடு வேறு. கணவன், மனைவிக்குள்ளான கருத்து வேறுபாடுகளை அவர்களேப் பேசித்தீர்த்துக்கொள்ளவும் வேண்டும். மூன்றாம் மனிதர் தலையீடு கூடவே கூடாது, என்னதான் பெற்றோராக இருந்தாலும், அவர்களும் இந்த விஷயத்தில் மூன்றாம் மனிதர்களே. பெருமளவில் வேறுபாடுகள் வந்தால் தவிர, பெரியவர்கள் உதவி இல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைக்குப் படிக்காத பெண்களோ, அதனால் உயர்ந்த வேலைக்குப் போகாத பெண்களோ மிக மிகக் குறைவு. கணவனை விட அதிகமாய்ப் படித்திருக்கும் பெண்களும் உண்டு, கணவனை விட அதிகமாய்ச் சம்பாதிக்கும் பெண்களும் உண்டு. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட ஒரு பதவியில் உயர்வான தலைமை அதிகாரி ஒருவர் இருப்பார் அல்லவா? அவர் சொல்லுவதைக் கேட்டுப் பொறுப்புடன் நம் வேலைகளைச் செய்தாக வேண்டும் அல்லவா? இது தவிர, வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் பலருடைய பேச்சையும், ஏச்சையும் பிரயாணம் செய்யும் பேருந்துகளில், கடைத்தெருக்களில், இன்னும் பல இடங்களில் பல்வேறுவிதமான காரணங்களுக்காகக் கேட்க நேரிடுகிறது. எல்லாரிடமுமா நாம் சண்டை போடுகிறோம். நம் கணவன் நம்மை ஒரு வார்த்தை சொன்னால் அதன் உள் அர்த்தம் என்ன? எதனால் சொல்கிறார்? என்று நாம் ஆராய வேண்டும். வெளியே செல்லும் ஆண்களும் பல்வேறு விதமான அசெளகரியங்களை அலுவலகத்திலும், அது சார்பான பல இடங்களிலும் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். ஆகவே இதில் இருவரும் ஒருவரை புரிந்து கொள்ளல் வேண்டும். காரணமின்றி கோபிப்பவர் பற்றி இங்கே பேச்சு இல்லை.

மனைவி தாமதமாய் அலுவலகத்தில் இருந்து வந்தால், சாப்பிடாமல் காத்திருக்கும் கணவனைப் பார்த்துக் கோபிக்காமல், "எனக்காகவா காத்திருக்கீங்க? இதோ வந்து சாப்பாடைச் சூடு செய்யறேன், நீங்க பசி தாங்க மாட்டீங்களே?" எனச் சொல்லிப் பாருங்கள். அடுத்த நாள் முதல் அந்த மனைவி வரும் முன்னர், கணவன் சாப்பாட்டைச் சூடு பண்ணி எடுத்து வைத்துச் சாப்பிட எல்லா ஏற்பாடுகளுடனும் காத்திருக்க ஆரம்பிப்பான். குடும்பம் என்பது இரட்டை மாட்டு வண்டி மாதிரி. இரு மாடுகளும் சேர்ந்துதான் இழுக்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி வயதான தம்பதிகள். பையனுடனும், மருமகள், பேரன், பேத்தியுடனும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அந்த வயதான தம்பதிகள் தங்களுக்குள் சேர்ந்திருக்க வேண்டிய நேரத்தை எப்படிப் பகிர்ந்து கொண்டார்கள் தெரியுமா? தங்களுக்கெனத் தனியே நேரம் ஒதுக்கிக் கொள்ளுதலில் சாப்பிட வேண்டிய நேரத்தையும் ஒன்றாக வைத்துக் கொண்டார்கள். இருவரும் எத்தனை நேரம் ஆனாலும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும்போது நாம் போனால் பார்க்கவே நெகிழ்ச்சியாக இருக்கும். இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு, கணவன், மனைவிக்குக் கேட்டுக் கேட்டுப் பரிமாறுவதும், மனைவி, கணவனுக்குக் கேட்டுக் கேட்டுப் பரிமாறுவதும் பார்க்கவே அழகாக இருக்கும். இத்தனைக்கும் அவர்களுக்கு அப்போது வயது கணவனுக்கு 82, மனைவிக்கு 78. இது தான் உண்மையான காதல்னு எனக்குத் தோணும்.

பறவைகள் கூடு கட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆணாகட்டும், பெண்ணாகட்டும், தனியே கூடு கட்டாது. இரண்டும் சேர்ந்து தான் கூடு கட்டும். இதில் ஆண், பெண் என்ற பேதமே இல்லை. ஆண் பறவை தான் வெளியே போய் உணவு சம்பாதித்து வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று பெண் பறவை கூட்டிலேயே உட்காராது. அதுவும் போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வரும். இவ்வாறு குஞ்சுகள் பெரிதாகித் தானே பறக்கும் வரை இரண்டும் சேர்ந்தே உழைக்கும், அதன் வம்சத்துக்காக. அந்தக் குஞ்சுகள் பறந்து போனதும், மீண்டும் அடுத்த குஞ்சு பொரிப்புக்குத் தயாராயிடும். மீண்டும் சேர்ந்தே தான். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை இந்தப் பறவை இனத்திடம் இருந்து தான். ஆறறிவு உள்ள மனிதர் என்று பீற்றிப் பெருமை அடித்துக் கொள்ளும் நாம் இந்தப் பறவை இனத்திடம் இருக்கும் இந்தக் குணத்தைப் பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கோமா?

காதல் என்பதும், காதலர் தினம் என்பதும் இன்று ஒருநாளோடு முடிந்து போவதில்லை. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும் நம் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். தினம் தினம் நம் மனைவியை/கணவனைக் காதலிக்க வேண்டும். இன்று ஒரு நாள் ரோஜாப் பூக்களோ அல்லது வேறு வகையான பரிசோ கொடுத்துவிட்டால் அதனால் காதல் உயர்ந்தது என்று ஆகிவிடாது. நிலைத்திருக்கும் காதலே உயர்ந்தது. காதல் நிலைக்கப் பாடுபடுங்கள். உங்கள் மனைவி, உங்களுக்காக விட்டுக் கொடுப்பதையும், உங்கள் கணவர் உங்களுக்காக விட்டுக் கொடுப்பதையும் நினையுங்கள். நீங்களும் விட்டுக் கொடுங்கள். அன்பு செலுத்துங்கள். அன்பு கொடுக்கக் கொடுக்கக் குறைவில்லாமல் பெருகிக் கொண்டே இருக்கும். வட்டியோடு சேர்ந்து திரும்பியும் வரும். எப்போது வற்றாத ஜீவ நதி அன்பு ஒன்று தான். ஆதலினால் காதல் செய்வீர் நாநிலத்தீர், ஆனால் தினம் தினம். இன்றைய தினம் உங்கள் காதலருக்கு/ காதலிக்கு, கணவருக்கு/மனைவிக்கு அன்புப் பரிசாக நீங்கள் கொடுப்பது நீங்களாகவே இருக்க வாழ்த்துக்களுடன்.

Wednesday, February 13, 2008

ரத சப்தமி என்றால் என்ன?





இன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.

அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. மாறுபட்ட இன்றைய சூழ்நிலையில் எருக்க இலை என்றாலே யாருக்கும் தெரியறதில்லை, யாரும் குளிக்கிறதும் இல்லை எருக்க இலைகளை வைத்துக் கொண்டு. இருந்தாலும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா?

Tuesday, February 12, 2008

அனுபவம் புதுமை -5- மதுரைக்குப் போகாதேடி

//அபி அப்பா said...
அது "மங்கள விளாஸ்" நாகேஸ்வரன் வடக்குவீதி(டைமண்டு தியேட்டர் எதிர்புரம்)அதுல கல்லாவுல உக்காந்துருக்குர கனேசய்யர்தான் அம்சமா பிள்ளையார் மாதிரியே இருப்பார். மத்தபடி ஒட்டடை எல்லாம் சரிதான்.

21 February, 2007 //

அபி அப்பா said...
நாகேஸ்வரன் சந்னதியிலே தேடினா எப்படி கிடைக்கும். 3 வது வீடு பஞ்சாமய்யர் வீடு! அதுவும் வித்தாச்சு! கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருந்தது அந்த ஹோட்டல்!

மேலும் மங்கள விலாஸ் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் டைமண்ட் தியேட்டர் எதிரே இருக்கிறது!

09 February, 2008

அபி அப்பா, நல்லா மாட்டினீங்க என் கிட்டே, மங்கள விலாஸ் முதலில் நீங்க சொல்ற நாகேஸ்வரன் வடக்கு வீதியிலே எந்த ஓட்டலும் இல்லை. மங்களவிலாஸ் கும்பேஸ்வரர் சன்னதியிலே இருக்கு. இது நீங்க போன வருஷம் சொன்னது! க்ர்ர்ர்ர்ர்ர்., இப்போ என்னடான்னா நாகேஸ்வரன் தெற்கு வீதினு சொல்றீங்க! அதான் பழநி தேன் நிலவு போனது எல்லாம் மறந்துடுச்சு போலிருக்கு! மங்களவிலாஸ் கும்பேஸ்வரர் சன்னதியில் ஒரு வயசான தாத்தா உட்கார்ந்திருக்கார். அவர் மட்டும் தான் எப்போவும் இருக்கார். யாரும் அங்கே போய்ச் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை! :D நான் சொல்றது கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் இருக்கு, ஒரு பழைய ஓட்டு வீடு, எப்போ இடிஞ்சு விழும்னு பயம்மா இருக்கும். பஞ்சாபகேச ஐயரின் வாரிசுகள் யாராலேயோ நடத்தப் படுவதாய்ச் சொன்னார்கள். டைமண்ட் தியேட்டர் சுற்று வட்டாரத்தில் ஒரு "மீனாட்சி பவன்" என்பதைத் தவிர வேறே ஏதும் இல்லை. மீனாட்சி பவன் போகாதீங்கனு எல்லாருமே சொல்லிட்டாங்க. உங்க பேச்சைக் கேட்டுட்டு அலைஞ்சது என் தப்பு போங்க! கோபிக்குத் தெரிஞ்சிருக்கு, எனக்குத் தெரியலை! :P

புதுகைத் தென்றல், நீங்க சொல்ற லட்சுமி விலாஸ் பஸ் ஸ்டாண்டிலே இருக்கிறது பழைய ஓனர் இல்லை, அவர் இப்போ அம்பத்தூரிலே தான் இருக்கார். வயசு ஆயிடுச்சு, ஷுகரும் அதிகமா இருக்கு, மூன்று பையன்களும் சம்பாதிக்கிறாங்கனு வித்துட்டு சென்னை வந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சு, ஆனால் நாங்க மறுநாள் காலை அங்கே அதே பேரிலே இருக்கும் ஓட்டலில் தான் காலை ஆகாரம் எடுத்துக்கிட்டோம். பரவாயில்லை. நீங்க ஊர்ப்பக்கம் போய் ரொம்ப நாளாச்சுனு நினைக்கிறேன்.

இப்போ பகலா இருந்ததாலே எங்க டிரைவருக்குத் தடுமாற்றம் ஏதும் இல்லை, நாங்களும் வழியிலே கேட்டுக்கிட்டே போனோம். போகும் வழியிலேயே அழகர் கோயில் வருவதால் முதலில் அங்கே போயிட்டுப் பின்னர் மதுரை போக எண்ணம். மதுரை போனதும் அறை எடுத்துக் கொண்டு, சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் பின்னர் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு சாயங்காலமாய்த் திருப்பரங்குன்றம், மீனாட்சி கோயில் போக எண்ணம். ஆனால் மீனாட்சி வேறே விதமாய் எண்ணி இருக்கிறாள். அழகர் கோயில் போகும் வழியின் அழகைச் சொல்லி முடியாது. படங்கள் தேடறேன். கிடைக்குதானு பார்க்கலாம்.

Monday, February 11, 2008

உலகின் முதல் பிச்சைக்காரர்கள்


உலகத்தின் முதல் இரண்டு பிச்சைக்காரர்களே அந்த அரியும், அரனும் தான், இதுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு வருத்தப் படறீங்கனு புரியலை! நாம எல்லாம் பிச்சை எடுக்கக் கத்துக்கும் முன்னேயே அந்த அரி, மகாபலி கிட்டேயும், அந்த அரன் சொந்தப் பெண்டாட்டி கிட்டேயும் பிச்சை எடுத்திருக்காங்க, ஆகவே நான் எழுதினதில் தப்பு இருக்குன்ற எண்ணமோ, அதுக்காக வருத்தப் படணும்னோ எனக்குத் தோணலை. யாரையாவது வருத்தி இருக்குன்னா, அது நான் புரிகிறாப்பலே எழுதலைங்கறதாலேத் தான் இருக்கணும். அதுக்கு நானே முழுப் பொறுப்பு ஏத்துக்கறேன். யாரும் வருத்தப் படவேண்டாம்.

Sunday, February 10, 2008

அனுபவம் புதுமை -4 அல்லது 5? தெரியலை!

நாங்க ஸ்வாமிமலைக்குப் போய்த் தரிசனம் முடிச்சுட்டுப் பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் போயிட்டுப் பின் மதுரைக்கு நேரே போகலாமா, இல்லை நடுவழியிலேயே தங்கலாமான்னு விவாதிச்சோம், எங்க டிரைவருக்கு அர்த்த ராத்திரியானாலும் மதுரைக்குப் போயிடணும்னு ஒரே ஆசை, ஆனால் எங்க பையனுக்கோ இரவில் போக இஷ்டம் இல்லை, காலையில் போகலாம்னு சொல்லிட்டான், மதுரைக்கு அருகே உள்ள எங்க கிராமத்துக்கு மறுநாள் போகலாம்னு கேட்டப்போ, அங்கே கோவிலைச் சுற்றி வராக நதியின் வெள்ளம் இன்னும் வடியலை, அதனால் இன்னும் 2 நாள் கழிச்சு வாங்கனு சொல்லிட்டாங்க. நாம் போனது டிசம்பர் 25 தேதின்னாலும், இங்கே தான் மாதம் மும்மாரி இல்லை, 4,5 மாரி கூடப் பெய்யுதே! இப்போக் கூடப் பாருங்க, 2 நாளா மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே! அதுவும், நான் மோர் மிளகாய், சுண்டைக்காய், மிளகு தக்காளி என்னும் மனைத்தக்காளி போன்றவற்றை வற்றல் போடுவதற்கு மோரில் ஊறப் போட்ட அன்னிக்கே மேகம் கருக்குது, மழை வரப் பாக்குது தான். அதை எடுத்து வெயிலில் வைச்சால் உடனேயே மழை கொட்ட ஆரம்பிச்சுடும், எங்க பையன் யு.எஸ்ஸுக்குத் திரும்பும் முன்னர் என்னிடம் கண்டிப்பாய் நீ இப்போ எதுவும் போட்டு வைக்காதே, விமானம் எங்கேயாவது கான்சல் ஆயிடப் போகுது, இல்லைனா மழையிலே போகும்போது நனைஞ்சுட்டே பெட்டி, படுக்கையை எடுத்துட்டுப் போகணும்னு சொல்லி என்னைத் தடுத்துட்டான். ஆக மொத்தம், நாம எங்கே போனாலும் மழை நம்மைத் தொடரும்கிறது என்னமோ உண்மை! அதுக்காக எல்லாம் அஞ்சினால் நாம் வீராங்கனையாக இருக்கிறது எப்படி? :P (எல்லாம் "நமக்கு நாமே" திட்டத்தின் படி வந்த பட்டம்தானுங்க, நல்லா இல்லை?)

தஞ்சாவூரில் என் பெரிய மாமியாரைப் பார்த்துட்டுத் திரும்பும் போது மணி கிட்டத் தட்ட 7-00(இரவு) ஆகி விட்டது. தஞ்சாவூரிலேயே சாப்பிடலாம்னு சொன்னதுக்கு,என் பையனும் ஒத்துக்கலை, ம.பா. சும்மாவே நான் என்ன சொன்னாலும் மறுக்கிறதே அவர் வேலை, இப்போ பையன் வேறே சேர்ந்தாச்சு, ஆகவே அடுத்துப் புதுக்கோட்டையில் தங்கலாம்னு பையனோட எண்ணம். கையிலே தமிழ்நாட்டின் சாலைப் போக்குவரத்தைச் சொல்லும் படம் வச்சுட்டு அவன் தான் டைரக்ட் செய்துட்டு இருக்கான். அப்படி இருந்தும் டிரைவருக்கு மதுரை போகணும்னு ஆசையோ, இல்லை புதுக்கோட்டையில் தங்கும் இடம் எல்லாம் எப்படி இருக்கும்னு தோணிச்சோ தெரியலை, நாங்க சொல்லச் சொல்ல அவர் பாட்டுக்குத் திருச்சி வழியில் வண்டியை வேகமாய் விட்டுட்டு வரார். வேகத்தில் எதிரே வரும் வண்டிகளின் விளக்குகள் கண்ணைக் கூசும் வெளிச்சத்துடன் வரும்போது பயமாவே இருக்கு. உண்மையில் சாலைவிதிகளின்படி அப்படி வெளிச்சம் காட்டும் விளக்குகளைப் போடலாமானு தெரியலை. வல்லம் கல்லூரிக்கு வந்தாச்சு. அப்புறம் தான் டிரைவர் ஒத்துக்கிறார், இது திருச்சி வழின்னு. திரும்பப் போகணும்னு முடிவு எடுத்துட்டார். எனக்கு இவ்வளவு தூரம் வந்தாச்சு, திருச்சியே போகலாமேன்னு ஒரு ஆசை, யார் கேட்கிறாங்க நம்மை? புதுக்கோட்டைக்குத் திரும்பி, திரும்ப ஒரு முறை புதுக்கோட்டை ராஜாவின் சரித்திரத்தைப் பையனுக்குச் சொல்லி, பத்தாதுக்கு ஜெமினி கணேசனுக்கு இந்த ஊர்தான்னும் சொல்லி, ஒருவழியா வந்தாச்சு.

புதுகைத் தென்றல்? அது என்னங்க? இப்படி ஒரு ஊரா இருக்கு உங்க ஊர்? இரவு 9-00 மணிக்கே கடையைக் கட்டிடுவாங்க போலிருக்கே? தங்குவதற்கு நல்ல லாட்ஜ்&சாப்பிட நல்ல ஹோட்டல்னு கேட்டதுக்கு ஒருத்தர் என்ன நினைச்சாரோ தெரியலை, அங்கே இருந்த ஒரு கையேந்தி பவனைக் காட்ட, நாங்களும் அங்கே பக்கத்தில் ஏதோ லாட்ஜ் இருக்காக்கும்னு நினைச்சுப் போக அப்புறம் யார் கண்ணிலோ பட்டது ஹோட்டல் மாரிஸ் பெயர். உடனேயே அங்கே போய் அறை பதிவு செய்யறேன்னு போயிட்டான் பையன். அறை என்னமோ நல்லாத் தான் இருந்தது. ஆனால் வெந்நீர்தான் வராதாம். இத்தனைக்கும் அது ஸ்டார் ஓட்டல்னு சொன்னாங்க. சரி, வெந்நீர்க் கவலையைக் காலம்பர பட்டுக்கலாம்னு சாப்பிட அங்கேயே பக்கத்தில் இருந்த ரெஸ்டாரண்டுக்குப் போனோம். விலை எல்லாம் இப்போ தங்கம் விக்கிற விலைதான் அதிகமாச் சொல்லலை. ஆலு மட்டர் கேட்டதுக்கு, ஒரே ஒரு உருளைக்கிழங்குத் துண்டம் போட்டு, பேருக்குக் கூடப் பட்டாணி இல்லாமல் ஒரு க்ரேவி வந்தது. அவரிடம் ஆலு மட்டர் நல்லா இருக்குமா என்றதுக்கு அவர் முன்பே "க்ரேவி"தானே சார், நல்லாவே இருக்கும்னு சொல்லி இருந்தார். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். சாப்பிட்டோம்னு பேர் பண்ணிவிட்டுப் படுத்தோம். மறு நாள் மதுரையில் நடக்கப் போவதை அறியாமல். படம் எங்கே இருக்குனு தெரியலை, தேடிட்டு இருக்கேன், கிடைச்சதும் போடறேன்.

எப்படியோ ஒரு வழி பிறக்கட்டுமே!


//பணிவு இல்லாதவர் ஆணவத்துடன், தான் கொடுக்கிறோம் என்ற நினைப்புடனே, தனக்கு அடங்கியவருக்கு தருவது இடை நிலை தருமம் ஆகும். ஆங்கிலத்தில் இதை the beggar has no choices
என்றும் சொல்வார்கள். பெறுபவன் கொடுப்பவனுக்குத் தகுதி இருக்கிறதா எனக்கவனித்துப் பின் பெறுவது
அசாத்தியம். ஏதோ கிடைக்கிறதே என்று ஆண்டவனுக்கும் கொடுத்தவனுக்கும் நன்றி சொல்லி விட்டு செல்லுதல் இயற்கை. இந்த வகைதனை இடை நிலை தருமம் எனச் சொல்கிறார் புலவர் பெருமான்.

மூன்றாவது நிலை. பணிவற்றவன், ஆணவ, அகங்காரத்துடன், தான் தான் கொடுக்கிறேன் என்ற இறுமாப்புடன்,
ஊர் எல்லாம் பறை சாற்றிக் கொடுப்பதும், அவற்றைப் பெறுபவர், இவன் என்ன கொடுத்துவிட்டான் என இகழ்ச்சியுடன் எண்ணத்தோடு செயல்படுவதும், மூன்றாவது கடை நிலை தருமமாகும். இந்தக் காட்சி எப்படி
இருக்கின்றது என்றால், தோலால் செய்த இரு பொம்மைகள் நாடக அரங்கிலே போர் புரிவது போலாகும்.//

சூரி சார், படிச்சுட்டேன், மேலே சொன்ன இரண்டிலே நாங்க எதுனு புரியலை, அதனால் இரண்டையுமே எடுத்துக்கிட்டேன், ஓகேயா? :D அப்புறம் நான் முன் சொன்ன பதிவிலே பெருமாளைப் "பிச்சை எடுக்கும் பெருமாள்"னு எழுதி இருப்பது நிறையப் பேரைப் பாதிச்சிருக்கு. முக்கியமாய் டாக்டருக்கும், சூரி சாருக்கும். "பட்டினி கிடக்கும் பெருமாள்"னு எழுதி இருக்கலாமேனு டாக்டருடைய எண்ணம். பட்டினி நாமாய் விரும்பி இருப்பது. ஆனால் இங்கே அப்படி இல்லை. பெருமாள் கிட்டே எல்லாமே இருக்கு, எதுவும் இல்லாமல் இல்லை. ஆனால் ஒரு சிலருடைய கவனிப்பு இல்லாமையால் அவர் பட்டினி கிடக்கவேண்டி இருப்பதோடு அல்லாமல், தன் சம்பாத்தியத்தில் உள்ளதையும் அனுபவிக்க முடியாமல் இருக்கிறார். அதனால் தான் அந்த ஆற்றாமையால் தான் இப்படி எழுதினேன். உங்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிப்புக் கேட்பதோடு அல்லாமல், நமக்குப் பிச்சை போட்ட ஆண்டவனுக்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதானா என்றும் தோன்றுகிறது. எப்போவோ அங்கே போய், ஒரு துளி எண்ணெய் கொடுத்து, அன்று மட்டும் அபிஷேகம் செய்துவிட்டு, ஒரு துளிக் கண்ணீர் வடிப்பதில் என்ன பயன் என்றும் சூரி சாரின் கேள்வி. இதற்கு அவருக்கு என்னுடைய பதில், திரும்ப ஒருமுறை பதிவைப் படியுங்கள் என்பதே!

//நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம்.// இந்த வரிகளைப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். நித்தியப் படி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்து, அதற்குப் பணமும் கொடுத்திருப்பதை வெளியில் சொல்லவேண்டாம் என்றே சொல்லவில்லை. வந்து பூஜை செய்யும் அர்ச்சகருக்கு நாங்கள் கொடுக்கும் வருமானம் பத்தாதபடியால் சரியாக வருவதில்லை. நாங்களும் நடுத்தர வர்க்கம்தான் சார், பெருமாள் இந்த அளவுக்காவது படி அளக்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் ஏதாவது செய்யணும்னு எண்ணம். அங்கே போய் இருக்க முடியவில்லை என்பதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சொன்னால் சுயபுராணமாகிவிடும். ஆனால் எங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகிறோம். இதை இப்போது இங்கே போட்டதின் காரணம் கூட R.E.A.C.H.Foundation, சந்திரசேகரன், இணையத்தில் இது பற்றி எழுதுங்கள், நாங்களும் போடுகிறோம் என்று சொன்னதாலேயே. மற்றபடி கண்ணபிரான் சொன்னது எல்லாம் யோசிக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஊரில் இருக்கும் இருவேறு நபர்களின் தலைமை ஒத்துக் கொள்ளவேண்டும், அவ்வளவே! இப்போ தமிழ்த்தேனீ அவர்கள் இந்த ஊர் எங்கே இருக்கிறது என்ற விபரங்கள் கேட்டிருந்தார். அவருக்கும், மற்றவர்களுக்கும் விவரங்கள் இதோ:
*************************************************************************************
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் வரும் வழியில் கோனேரிராஜபுரத்துக்கு முன்னால் புதூருக்கு அருகே, வடமட்டம் என்னும் ஊர் வரூம். வடமட்டத்தில் இருந்து நேரே சென்றால் பரவாக்கரை என்னும் ஊர் வரும். இது மிக மிகப் பழமையான சிவபதி என்று பேராசிரியர் திரு சு.செளந்திரராஜன்,(ஓய்வு)Ph.D.,(MAdras)., C.Chem.,F.R.S.C(London),(Department of Inorganic and Physical Chemistry, Indian Institure of Science, Bangalore), அவர்கள் சொல்கின்றார். காஞ்சி பரமாச்சாரியாரின் அருளினால் திருமூலரின் திருமந்திரத்தை ஆய்வு செய்து அவர் தெரிந்து கொண்ட விஷயங்களைத் தொகுத்துப் புத்தகமாய்ப் போட்டு இருக்கின்றார். அதி இந்த ஊரின் கோயில்களின் பெருமையைப் பற்றியும் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார். இந்த ஊரின் கிழக்கே, திருவீழிமிழலை, தெற்கே, கொட்டிட்டை கருவிலி,(தற்சமயம் சற்குணேஸ்வரபுரம் என அழைக்கப் படுகிறது), மேற்கில் திருநாகேச்வரம், வடக்கில் திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நடுநாயகமாய் உள்ளது பரவாக்கரை என்னும் கிராமம், பண்டைய காலத்தில் இதை வண்தில்லை என்று அழைக்கப் பட்டதாய்ச் சொல்லுகின்றார்.

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாகக் கூந்தலூர் வந்து அங்கிருந்து சற்குணேஸ்வரபுரம் என்னும் கருவிலியில் இருந்தும் முட்டையாறு என்னும் ஆற்றைக் கடந்து பரவாக்கரை வரலாம். அந்தப் பெருமாளைப் பற்றி இப்போது. இவரைப் பற்றியும் திருமூலர் தன் திருமந்திரத்தில் கூறி இருக்கிறாராம். திருமந்திரம் 190-ம் பாடலில்,"வேங்கடநாதனை வேதாந்தக் கூத்தனைவேங்கடத்துள்ளே விளையாடு நந்தியைவேங்கடம் என்றே விரகறியாதவர்தாங்க வல்லாருயிர் தாமறியாரே."என்று திரு சு.செளந்திர ராஜன் கூறுகிறார்.(அவருடைய இனிஷியல் "க" என்று நானாகப் போட்டு விட்டேன். இன்று தான் அவர் புத்தகம் பார்த்ததில் சு.செளந்திரராஜன் என்று புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.) இந்த வேங்கடநாதன் கோவில் யார் கட்டினது, எப்போ கட்டினது என்று எல்லாம் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் என் மாமனாரின் பாட்டனுக்குப் பாட்டன் காலத்தில் இருந்து எங்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வந்திருக்கின்றனர். என் மாமனாரின் பாட்டி குடும்பம் இங்கே விஷ்ணு கோவிலும், அந்தப் பாட்டியின் தங்கை குடும்பம் கருவிலியில் சிவன் கோவிலும் பராமரித்து வந்திருக்கிறார்கள். என் மாமனாரின் அண்ணா இருந்த சமயம் கும்பாபிஷேஹம் செய்வித்திருக்கிறார். பெருமாளுக்கு என்று நிலங்கள், இடம், தேர்முட்டி கோவிலில் பூஜை செய்யும் பட்டருக்கு வீடு என்று எல்லாம் இருந்து வந்தது. ஆனால் என் மாமனார் தன்னால் நிர்வகிக்க முடியாது என்பதாலும், அரசாங்கம் எல்லாக் கோவில்களையும் தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த நேரம் தன் அறங்காவலர் பதவியை விட்டு விட்டார். அதற்குப்பின் வந்த யாரும் ஊரில் தங்கிப் பெருமாளுக்குப் பூஜை செய்யவில்லை. இங்கேயே இருந்த பட்டாச்சாரியாரும் வேறு ஊருக்குப் போய்விட வேறு ஊரில் இருந்து வந்தவர் நினைத்த நேரம் வர, பெருமாள் தனக்கு எப்போ குளியல், எப்போ படையல் எதுவும் தெரியாமல் திகைத்துப் போய் விட்டார்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆன இவர் மிக அழகான உருவமும் வேண்டியவர்க்கு வேண்டியதைத் தரும் உள்ளமும் கொண்டவர். மாமனார் கருவிலியில் இருந்தவரை அவ்வப்போது நடந்த பூஜையும் இப்போது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. 41/2 அடி உயரத்தில் இருக்கும் பெருமாள் உற்சவ மூர்த்தங்களுடன் அருள் பாலிக்கிறார். இடது பக்கம் சிறிய ஆஞ்சனேயர் சன்னதி உண்டு. தற்சமயம் ஆஞ்சனேயர் சன்னதியில் ஆரம்பித்து அரச மரம் வேர் விட்டுப் பரவு சுற்றுச் சுவர் எல்லாம் இடிந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது கோவில். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் முட்களும், பாம்புகளும், புதர்களும் மண்டிக்கிடக்கிறது. உள்ளே சன்னதியிலோ வவ்வால்களின் குடித்தனம்.

எப்போதாவது நாங்கள் போகும் சமயம் கோவிலைத் திறந்து வைக்கச் சொல்வது உண்டு, நாளாவட்டத்தில் கோவில் திறக்கக்கூட ஆள் இல்லாமல் போய் அந்த ஊரிலேயே போஸ்ட் ஆஃபீஸில் வேலை பார்க்கிறவர் பரிதாபப்பட்டுக் கோவிலைத் திறந்து வைத்து அபிஷேஹமும், நைவேத்யமும் ஒருமுறையாவது செய்து வந்தார். அவர் தாயின் உடல் நலம் குன்றியதால் அவரும் தற்சமயம் ஊரில் இல்லை. கோவிலின் நிலங்கள் போனவழி தெரியவில்லை. கோவிலின் முன்னே இருந்த தேர்முட்டி மற்றும் அதைச் சார்ந்திருக்கும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு விட்டது. வேங்கடநாதன் தன் மனைவியருடனும், அத்யந்த சிநேகிதனான அனுமனுடனும் கோவிலில் சிறைப்பட்டு விட்டார். அவரை விடுவிக்கும் வழி தான் தெரியவில்லை. ஊர்க்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் முயற்சி பலிக்க வில்லை. எல்லாம் தெரிந்த அந்த இறைவன் இதை அறிய மாட்டானா என்ன? அவனுக்கு அவன் தான் வழி தேடிக்கொள்ள வேண்டும். மூன்று முறை நாங்கள் முயற்சித்தும் புனருத்தாரண வேலை ஆரம்பிக்க முடியவில்லை. பொறுப்புப் பெரிதாக இருப்பதால் எல்லாரும் பயப்படுகிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள் புரியவில்லை. ஒருத்தர் ஒருத்தருக்காத் தனியாப் பதில் சொல்ல முடியலை மன்னிக்கவும், நேரமின்மைதான் காரணம். தவிர இதுக்குப் பதில் சொல்ல ஆரம்பிச்சா ரொம்பவே பெரியதாய் ஒரு பதிவாப் போயிடும், சில விவாதங்களைத் தவிர்க்கவும் பதில் சொல்லவில்லை. பெருமாள் கோயிலின் உள்படம் தான் தேடினேன், கிடைக்கவில்லை, ரொம்பக் கஷ்டப் பட்டுப் படம் தேடி எடுத்து இருக்கேன், இப்போ re-format செய்ததிலே படங்கள் எல்லாம் back-up செய்தது சரியா இல்லைனு நினைக்கிறேன். வந்தவரைக்கும் போட்டிருக்கேன்.




*

Thursday, February 07, 2008

பிச்சை எடுக்கும் பெருமாள்! :((((((((


எங்க ஊரில் மாரியம்மன் கோவில் தவிர, ஒரு சிவன் கோவிலும், ஒரு பெருமாள் கோவிலும் இருக்கிறது. இது தவிர, ஐயனார் கோவில், பிடாரி கோவில் போன்ற காவல் தெய்வங்களும், பொய்யாப் பிள்ளையார் துணையே இல்லாமல் தனியாகவும் இருக்காங்க. இந்த ஐயனார் கோவில் பக்கம் உள்ள வயலில் உழுவதற்குத் தோண்டியபோது சில சிலைகளும், அஸ்திவாரங்கள் போன்ற அமைப்பும் கிடைத்ததாய்ச் சொல்கின்றனர். அந்த இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்ததாயும் திருமூலர் எழுப்பிய முதல் மாடக் கோயில் அது எனவும், அதை லிங்கத்தடி எனவும் சொல்கின்றனர். அது பற்றிய ஆராய்ச்சிகள் எல்லாம் தனியாய் வரும். இப்போப் பெருமாள் கோயில் பத்தி. பரம்பரை தர்மகர்த்தாக்கள் ஆன எங்க குடும்பத்தார் அதை அரசுக்கு மாற்றி 70களின் கடைசியில் கொடுத்தாச்சு. கோவிலுக்கு என்று எங்கள் குடும்ப நிலத்தில் இருந்து அரைவேலியும் எழுதி வைத்திருக்காங்க. அதைத் தவிரவும், கொஞ்சம் நிலத்தில் சில மரங்கள், ஒரு கருகமரத் தோப்பு போன்றவையும் உண்டு. இதில் மரங்கள் இருந்த நிலத்தில் மரங்கள் வெட்டப் பட்டிருக்கின்றன. விற்கப் பட்டிருக்கிறது. கோவில் நிலத்தில் விவசாயமும் நடைபெற்று வருகிறது. கருகத் தோப்பும் இருக்கிறது. ஆனால் பெருமாள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் யாராவது ஊருக்குப் போனால் தான் அவருக்குக் குளியல், துணி மாற்றம், சாப்பாடு எல்லாமே. வெளிச்சமே அப்போது தான் பார்க்கிறார். நான் திருமணம் ஆகிவந்து இந்தக் கோயிலில் நல்ல முறையில் எல்லாக் கால பூஜையும் நடந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு விளக்குக் கூடப் போடுவது இல்லை. கோவில் தேர்முட்டி, மற்றும் கோவிலின் வெளிச்சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதால் அந்த இடம் எல்லாம் ஆக்கிரமிக்கப் பட்டு இப்போது பட்டாவே போட்டுக் கொடுத்தாச்சு. கோவிலுக்கு நேர் எதிரே சன்னதிக்கு நேரே ஒரு பெரிய மரம் வெட்டப் பட்டுப் பல நாட்களாய்க் கிடக்கிறது. அதை அப்புறப்படுத்தச் சொல்லி தற்போதைய டிரஸ்டி கிட்டே சொல்லியும் அவர் இதோ, போய்ச் சொல்லறேன், என்று டாடா இண்டிகாம் ஆட்கள் மாதிரியே சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போப் போனவாரம் போனபோது கூட அப்படியே இருக்கிறது. மாடுகள் கட்டப் பட்டு, ஆடுகள் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கின்றன கோயிலுக்குப் போகும் வழியில். நிலத்தில் விளைந்து வந்த நெல் கோவிலுக்கு அளக்கப் படவே இல்லை. நாங்க ஏதோ எங்களால் முடிஞ்ச பணத்தைக் கொடுத்து ஒருவேளையாவது நைவேத்தியம் வைத்து விளக்கேற்றச் சொல்லி இருக்கோம். அதுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகரோ, குருக்களோ, பட்டரோ வருவாங்க. வேறு ஊரில் இருந்து வந்து இருந்து செய்வதென்றால் நிரந்தரமாய் ஏதேனும் ஒரு வருமானம் வேண்டாமா?

தன்னிடம் இருப்பதைக் கொடுத்துவிட்டுப் பெருமாள் வேண்டுமானால் பட்டினியாய் இருப்பார். அவருக்குப் பரவாயில்லை. ஆனால் வந்து பூஜை செய்யறவங்களுக்குக் குடும்பம், குழந்தைன்னு இருக்குமே? அதுக்கு ஏதாவது கொடுக்கணுமே? கோவில் டிரஸ்டியிடம் கேட்டால் குத்தகைக்காரர் அளக்கவில்லை என்கிறார். குத்தகைக்காரர் கிட்டே கேட்டால் விளையவே இல்லை, சிவன் கோவிலுக்கு என்ன கொடுத்தாங்க? அவங்க கிட்டே கேட்கிறதில்லையே, என் கிட்டே மட்டும் ஏன் கேட்கணும்? என்று சொல்றாங்க. இந்த அழகில் பெருமாளின் இருப்பிடமே இடிந்து விழுந்து விடுமோனு பயமா வேறே இருக்கு. கர்ப்பக் கிரகத்தில் மூலவருக்குக் கீழே வரை வேர் பிடித்து ஒரு அரசமரம் அபாரமாய் வளர்ந்திருக்கு. அங்கங்கே விரிசல்களில் வெளவால்கள் அடைந்துள்ளன. நாங்களும் இந்தக் கோயிலுக்குப் பராமரிப்புச் செய்து கும்பாபிஷேகம் நடத்தப் பிரம்மப் பிரயத்தனம் செய்கிறோம். நேற்று வந்த தகவல் படி ஊரில் யாருமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லை. கோவில் நிலத்தை விற்றாவது அதை வைப்பு நிதியில் போட்டு அதில் இருந்து வரும் வட்டியில் கோவிலை நிர்வாகம் செய்யலாமே எனத் தோன்றுகிறது. ஆனால் ஊர் இரண்டு பட்டுக் கிடக்கிறபடியால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை, பெருமாளே தனக்கு ஒரு வழியைத் தேடிக்கணும்.

R.E.A.C.H. Foundation மூலம் ஏதானும் வழி பிறக்கும் என்று ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இன்றைய பதிவுகள் இரண்டுமே கொஞ்சம் சீரியஸ் பதிவாகி விட்டது. இவங்க மூலமாத் தான் ஏதேனும் செய்ய முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. இவங்க விலாசம் reach.foundation.india@gmail.com. இதிலே நம்ம சக பதிவாளர் மரபூர் ஜெ.சந்திரசேகரன் ஒரு உறுப்பினர். அவரை ஞாயிறு அன்று போய்ப் பார்த்தோம். உதவிகள் செய்வதாய்ச் சொன்னாலும் எப்படி இருந்தாலும் ஊர்க்காரங்க சம்மதம் தான் முக்கியம்னு அவரும் சொல்றார். (வழக்கம் போல் சந்திரசேகரும், நான் நினைச்சாப்பலே இல்லை, ஹிஹிஹி) பெருமாளைப் பிச்சை எடுக்காமல் வைக்க அவரே தான் மனசு வைக்கணும் போல் இருக்கு. மேலே இருப்பது அவர்தான் குடும்ப சமேதராய், பொதுவாய் மூலஸ்தானத்தில் இருக்கும் திருமேனிகளைப் படம் எடுத்துப் போடுவது இல்லை. இவருக்கு முறையான பூஜைகள் நடந்து 25 வருஷமாவது ஆகி இருக்கும். கோவிலின் வெளிப்புறம் படம் கிடைக்கவில்லை. கிடைத்ததும் போடுகிறேன்.

நல்லாக் கொண்டாடுங்க! வேணாம்னு சொல்லலை!


இரண்டு நாளா ஒரே தொல்லை மறுபடியும் இணையம் போயிடுச்சு. அவங்களாலேயும் கண்டு பிடிக்க முடியலை, கடைசியில் என்னனு பார்த்தால், செர்வரை இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில்(வாடகை கொடுத்துத் தான்) வச்சிருக்காங்க. அவங்களுக்கு வீட்டில் "ஃப்யூஸ்" போயிடுச்சாம். அதைச் சரி பண்ணறதுக்கு செர்வர் வச்சிருந்த பாக்ஸை எடுத்து, அதிலே அவங்க வீட்டுக் கனெக்ஷன் கொடுத்துக்கிட்டிருந்திருக்காங்க. ஆகவே செர்வர் டவுன், இங்கே கனெக்ஷன் கட். என்னத்தைச் சொல்றது! மக்கள் இப்படி அறிவுஜீவியா இருக்காங்க! மக்களுக்குப் பொதுச் சொத்து என்றால் எவ்வளவு இளக்காரமும், அலட்சியமும் வந்து விடுகிறது? அதே அவங்க சொந்தப் பொருள் என்றால் அப்படி இருக்க மாட்டாங்க இல்லையா?

நேற்றுத் தினசரியில் பார்த்தால் கல்லூரி மாணவர்கள் "பஸ் டே" என்ற பெயரில் பேருந்துகளை நாசம் செய்வதும், பயணிகளுக்குத் தொந்திரவு கொடுப்பதும் தான் தலைப்புச் செய்தி. எத்தனை பேருக்குத் தாமதம் ஏற்பட்டிருக்கும்? எத்தனை பேர் அவசரப் பயணம் மேற்கொண்டிருப்பார்கள்? பேருந்துக்கு நன்றி தெரிவிக்க வேறு வழிகளே இல்லையா என்ன? ஒவ்வொரு வருஷமும் பயணிகள் இருக்கும் பேருந்துகளே மாணவர்களால் ஆக்கிரமிக்கப் படுகின்றன. உயிரைப் பணயம் வைத்துப் பேருந்துகளின் மேல் ஏறி நின்று ஆடுகிறார்கள். இதுக்காக அவங்களுக்கு எந்தவிதப் பரிசும் கிடைக்கப் போவதில்லை. கஷ்டப் பட்டு உழைத்து ஓடாகிப் பணம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோர், தங்கள் பையனை அந்தப் பேருந்துகளின் உச்சியில் பார்க்கும்போது மனம் வருந்துவது மட்டுமில்லாமல், பையனின் உயிரை நினைத்தும் கவலை அடைவார்கள். இதுக்காகவா படிக்க வைக்கின்றனர்? நன்றி தெரிவிக்க அமைதியான வழிகள் எத்தனையோ இருக்கின்றனவே!

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட எண்ணுள்ள பேருந்துகளில் பயணிக்கும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து அந்தப் பேருந்தை ஓட்டும் ஓட்டுநருக்கும், நடத்துனருக்கும் தங்களுக்குள் பணம் வசூலித்துப் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து கெளரவிக்கலாம். அல்லது நல்ல ஓட்டலில் விருந்து கொடுக்கலாம், அல்லது அவர்களுடைய முக்கியத் தேவை என்ன என்று கேட்டறிந்து அதை நிறைவேற்றித் தரலாம். அல்லது ரத்த தானம் செய்யலாம். பேருந்து செல்லும் வழியில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து, பொது மக்களுக்கு உதவலாம். இப்படி எத்தனையோ ஆக்கபூர்வமான வழிகள் இருக்கின்றன. பொதுச் சொத்து நம் சொத்து, சொந்தச் சொத்தைவிட மேலானது. உங்கள் அப்பா, அம்மா கட்டும் வரியில் இருந்துதான் வாங்கப் படுகிறது. அடுத்து நீங்கள் சம்பாதித்துக் கட்டும் வரிப்பணத்தில் இருந்தும் வாங்கப் படும். இது நினைவு வைத்துக் கொண்டால் போதுமே! மாணவர்கள் யோசிக்க வேண்டும். இந்த மாதிரியான கொண்டாட்டத்தினால் அவர்களுக்கு என்ன நிறைவு கிடைக்கிறது? ஒன்றும் இல்லை. பொதுமக்களும், குறிப்பிட்ட பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் திட்டுவது தான் மிச்சம்.

Tuesday, February 05, 2008

ANUBAVAM PUDHUMAI - 3

என்னோட மறுபாதி இருக்காரே, அவருக்குப் பல சமயம், நான் ஒருத்தி கூட வரேன் அப்படினே நினைப்பு இருக்காது. அவர் பாட்டுக்கு முன்னாலே திரும்பிக் கூடப்பார்க்காம வேகமாப் போவார். நான் ரொம்பவே "அப்பாவி"யாய்ப் பின்னாலே போகணும். அதுவும் இப்போ அவருக்குக் கழுத்தில் பிரச்னை வந்து திரும்ப முடியாமல் போனதுக்குப் பின்னர் ரொம்பவே கஷ்டமாப் போச்சு. இப்படி வேகமாப் போகாதீங்க, நில்லுங்கனு சொன்னால் கேட்டால் தானே? ஹோட்டலில் அறை எடுக்கும்போது கூட இப்படித்தான், அவர் பாட்டுக்கு எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டே இருப்பார், நான் வரேனான்னு கூடப் பார்க்க மாட்டார். இப்படித் தான் போன முறை நான் அறை இரண்டு இருந்ததாலே எதுனு புரியாமல் உட்கார்ந்திருக்கேன், முழுசா, ரிசெப்ஷனிலே, என்னோட ம.பா,. விவரங்கள் எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுத் திரும்பிக் கூடப் பார்க்காமல் லிஃப்ட் ஏறிப் போயாச்சு. நான் என்னடா, இந்த மனுஷனைக் காணோமேன்னு உட்கார்ந்திருக்கேன். மாடிக்குப் போனவருக்கு ரூமுக்குள் போனதும் தான் சூட்கேஸைப் பார்த்ததும், என்னைக் காணலைனு உறைச்சிருக்கு. மறுபடி கீழே இறங்கி வரார் படிகள் வழியா. அதுக்குள்ளே, நான் லிஃப்ட் மூலம் மேலே ஏற, அறை பூட்டி இருக்க, மறுபடியும் நான் கீழே இறங்க, அவர் மேலே வர, கொஞ்ச நேரம் "கண்ணாமூச்சி, ரே ரே, ரே," விளையாடிட்டு அப்புறம் என்னோட ரத்த அழுத்தம் எகிற, அறை வாசலிலேயே சோர்ந்து போய் உட்கார்ந்துட்டேன். அப்புறமா அவர் வந்து,
ரூம் திறந்து, அது தனிக்கதை!

இந்த வாட்டி அப்படி எதுவும் நடக்கவில்லை. அதான், கூடவே பையன் வந்திருந்தானே? ஆகவே குழப்பம் இல்லாமல் அவன் கூட்டிப் போயிட்டான், என்னை முன்னாலேயே! ஒருவேளை, அவன் மனைவியை அவன் மறப்பானோ என்னமோ? ஹி, ஹி, ஹி, என்ன செய்யறது? வம்ச வழி அப்படியே வருமோ என்னமோ? சரி, சரி, சுய புராணம் போதும் இல்லை? அங்கிருந்து மறுநாள் காலை கிளம்பி எங்க ஊர் ஆன "பரவாக்கரை"க்குப் போனோம். சாலையா அது? காரைக்கால் செல்லும் வழி அது இத்தனைக்கும். திவா, உங்க ஊர் எதுனு தெரியலை, ஆனால் சிதம்பரம் வந்து அப்புறமாக் கும்பகோணம் போகணும்னு இல்லை. சிதம்பரம் பாதை தனியாப் பிரியும், சிதம்பரம் போகாமலேயே கும்பகோணம் போகலாம், சேத்தியாத் தோப்பு வழியா. சிதம்பரம் பாதையும் அப்படி ஒண்ணும் நல்லா இருக்காது. அதுவும் பல்லாங்குழி தான். என்ன கும்பகோணம் பாதையில் குழிகள் அதிகமா இருக்கும், அங்கே கொஞ்சம் கம்மியா இருக்கலாம் அவ்வளவுதான்.


ஒரு மாதிரியா ஊர் போய்ச் சேர்ந்து, மாரி அம்மனுக்கு அபிஷேஹம் எல்லாம் முடிச்சுட்டுத் திரும்பினோம். சாயங்காலமாய் சுவாமிமலை போகணும்னு திட்டம். ஆகவே அதுக்குத் தயார் ஆனோம். வண்டியிலேயே வந்திருந்ததால் நினைச்ச நேரம் கிளம்ப முடியும் ஒரு வசதி, ஆனால் சுவாமி மலை போயிட்டுத் தஞ்சாவூர் போக நினைச்சா, இந்த டிரைவருக்கு என்ன கோபம்னு தெரியலையே?


அனுபவம் புதுமை மூன்றாம் பகுதி தலைப்பு ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும். வேறே வழியே இல்லை! :(

Sunday, February 03, 2008

அனுபவம் புதுமை -2


சைகிள் காப்பிலே சாண்ட்ரோ ஓட்டறேன்னு கேஆரெஸ் என்னிக்குச் சொன்னாரோ தெரியலை, அவர் வாயில் சூடா "ஜீரா"வைத் தான் ஊத்தணும், நான் இங்கே சாண்ட்ரோ இல்லை, லிமோவே ஓட்ட வேண்டி இருக்கு. அடுத்து அடுத்துப் பிரச்னைகள் வந்தால், அதுக்கு நடுவில் எழுதறேன்னு ஏதோ பேர் பண்ணறேனே அதே பெரிய விஷயம். இதிலே நேயர் விருப்பம் வேறே நடு, நடுவில். பத்தாக்குறைக்கு வல்லி சிம்ஹனும், துளசியும் அனுபவம் புதுமை, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்கிறாங்க, இந்த திவாவோ, பழைய பதிவைத் தூசு தட்டி எடுத்து, (ஹச், ஹச், ஹச்,) தும்மலுங்க, ரெயிலிலே இருந்து விழுந்தப்புறம் என்ன ஆச்சுனு எழுதவே இல்லையேன்னு கேட்டுட்டு இருக்கார். அதை விடுங்க, திவா, இப்போ லேட்டஸ்ட் என்னன்னு பார்ப்போமா? பழைய பதிவைப் பார்க்க இங்கே சுட்டாதீங்க, வரலைன்னா, நான் பொறுப்பில்லை, கோபி, இப்போ சரியா?

இங்கே பாருங்கள்.

ஏற்கெனவே உடம்பு சரியில்லாமல் இருந்த எனக்கு, இந்த மருந்து மயக்கத்திலே நடக்கிறதே, பறக்கிறாப்போல இருந்தது. ஆகவே, எப்போவும் தங்கற லாட்ஜிலே லிஃப்ட் வசதி இருந்துச்சு, இங்கே இல்லைங்கிறது கூட உறைக்கலை. பறந்தே போனேன், ஏற்கெனவே ரோடெல்லாம் அவ்வளவு நல்லா இருந்தது, வழு, வழுனு அப்படியே சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ சலவைக்கல் போட்டாப்பல. அதுவும் திண்டிவனத்தில் இருந்து, கும்பகோணம் போகும் வரையும், சேத்தியாத் தோப்புக்கு அப்புறம் அணைக்கரைப் பாலத்தைக் கடந்து போகும் போதும் கைலை யாத்திரையை நினைவு படுத்தும் சாலைகள் மட்டுமில்லாமல், அதை விடத் திக், திக், திக், திக், திக். உண்மையில் நம்ம தமிழ்நாட்டு டிரைவர், கண்டக்டர் எல்லாம் இந்தச் சாலையில் இவ்வளவு கஷ்டப்பட்டு ஓட்டிக் கொண்டு சேர்க்கிறாங்களே, அதுக்கே ஒரு "பாரத ரத்னா"வை விடப் பெரிய பரிசா இருந்தால் கொடுக்கலாம்.

அங்கே போய் ரெஸ்ட் எல்லாம் எடுத்துக்க முடியலை, சாமானை வச்சுட்டு மறுநாள் குலதெய்வம் கோயிலுக்குப் போகவேண்டியதற்கு வேண்டிய சாமான்களை வாங்கப் போனோம். என்ன ஒரு ஆச்சரியம்? அங்கே காய், கறிகள் எல்லாம் குறைந்த பட்ச விலை கிலோ 5 ரூ, தானாம். இங்கே கிலோ 20, அல்லது 25 கொடுத்து வாங்கும் வெண்டை, கத்திரி, அவரைக்காய்கள் அங்கே கிலோ 5 ரூ.க்கு வாங்குவார் இல்லாமல் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒருவாரம் ஊர் சுத்தணும்கிறதாலே ஒண்ணும் வாங்க முடியாமல் அவற்றைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுட்டு, வழக்கமாய்ச் சாப்பிடும் பஞ்சாபகேச ஐயர் ஓட்டலில், (அபி அப்பாவும், திராச. சாரும் சொன்ன ஓட்டலை, நாகேஸ்வரன் சன்னதி முழுக்கத் தேடியும் கிடைக்கவே இல்லை, அப்படி ஒரு ஓட்டலே இல்லைனு சொல்லிட்டாங்க! :P) சாப்பிட்டுவிட்டு, மறுநாள் பரவக்கரைக்குப் பயணத்தைத் தொடர்ந்தோம். சாலை வழக்கம்போல் பல்லாங்குழி விளையாடும் வகையில் அருமையாக இருக்க அரிசிலாற்றங்கரையில் பயணித்தோம். வழக்கமாய் அரிசிலாற்றைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் மன உளைச்சல் இப்போதும் ஏற்பட்டது. அவ்வளவு ஆகாயத் தாமரைகள், பல இடங்களில் சுத்தமே செய்யப் படவில்லை. நடு ஆற்றில் "பார்த்தீனியம்" என்னும் விஷச் செடிகள். ஆற்று மணலெங்கும் வீசி எறியப் பட்ட ப்ளாஸ்டிக் பைகள். (கண்டு பிடிச்சது யாரு? அவங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரணும்!) :( அன்றலர்ந்த மலரை வாழை நாரில் கட்டுவதோ, அதை வாழை இலையில் சுற்றி வைப்பதோ அரிதாகி விட்டது. ப்ளாஸ்டிக் மோகம் அப்படித் தலை விரித்தாடுகிறது. ஆனால் நான் விடாப்பிடியாக நாரில் கட்டிய பூவும் வாங்கிக் கொண்டு, அதை வாழை இலையில் தான் சுற்றித் தரவேண்டும் என அடம் பிடிப்பேன். எந்தக் காட்டில் இருந்து வந்திருக்கீங்க என்ற பார்வையுடன் தேடிப் பிடித்து எடுத்துத் தருவார்கள்.

Saturday, February 02, 2008

ரொம்பப் பிடிச்ச பதிவு எது?

ரொம்ப நாளா ஒண்ணுமே எழுத முடியலை. எதிர்க்கட்சி ஆளுங்களுக்குச் சந்தோஷமா இருக்கும். இந்த அழகிலே "தேவ்" வேறே சங்கிலித் தொடருக்கு அழைப்பு விடுத்திருக்கார். என்னை நினைப்பு வச்சு அழைச்சிருக்கீங்களேன்னு கேட்டால், சங்கத்தின் முதல் தலைவி நான் அப்படினு ஒரு புதுக்கதை விடறார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., சங்கத்தின் "தனிப்பெரும் தலைவி" "நிரந்தரத் தலைவி" "ஒரே தலைவி" "யானைத் தலைவி" சீச்சீ, "தானைத் தலைவி" நான் மட்டும் தான்னு எப்படி மறந்து போச்சுன்னு புரியலை! எல்லாம் இந்த "விவசாயி" செய்த சதிவேலைனு நினைக்கிறேன். அப்போவே அடிச்சுக்கிட்டேன், என்னோட படத்தைப் போடுங்க, போடுங்கனு, இப்போ பாருங்க, நான் யாருனு சொல்லிக்க வேண்டிப் போயிடுச்சு. போகட்டும்.

என்னோட பதிவுகளில் பிடிச்ச பதிவு எதுனு எழுதணுமாம், ஹிஹிஹி, நான் எழுதறதும் ஒரு "பதிவு"னு ஒத்துக்கிட்டதே அதிகமா இல்லை? கொஞ்சம் ஓவராவே இருக்குனு எனக்கே தோணுது! அது சரி, தேவ், என்னை வச்சுக் காமெடி, கீமெடி ஏதும் பண்ணலையே? எனக்குப் பிடிச்ச பதிவுகள் வரிசையிலே எதை எழுதறது? நம்ம அதியமான்ராஜஸ்தான் சிதோட்கட் பத்தியும், குஜராத் பத்தியும் எழுதின பதிவுகள் பிடிக்கும். அப்புறமாய் நம்ம அணுக்கத் தொண்டராய் இருந்து (பொன்னையன் மாதிரி? :P) தற்போது ஒதுங்கி இருக்கும், கார்த்திக், எழுதும் கிராமத்துப்பதிவுகள், வேதா, முயல்எழுதும் பதிவுகள், போல என்னால் எழுத முடியலையேனு இருக்கு.

மற்றபடி மத்தவங்க பதிவுகள் எல்லாம் பிடிக்காதுன்னு அர்த்தம் இல்லை. அவங்க எல்லாம் எழுதறதுக்குக் கிட்டே கூட என்னால் போக முடியாது. நான் குறிப்பிட்டிருக்கும் இந்த மூன்று பேரும் தங்களோட அனுபவங்களை என்னை மாதிரி எழுதறாங்கனாலும் ரொம்பவே நல்லா இருக்கு. அதுவும் வேதாவும், கார்த்திக்கும் கவிதைகளிலே கூடக் கலக்கறாங்க. இப்படி எல்லாரும் நல்லா எழுதிட்டு இருக்கும்போது நான் பேத்தறதை நல்லா இருக்குனு சொல்ல என்னோட மனசாட்சியே ஒப்ப வேண்டாமா? ஆகவே சாரி தேவ், எனக்குப் பிடிச்ச மாதிரி ஒண்ணுமே இல்லை. ஏதோ எழுதறேன், அவ்வளவு தான். மத்தபடி நானும் மூன்று பேரைக் கூப்பிடணுமாம். இல்லையா? யாரைக் கூப்பிடறது? எல்லாரும் எல்லாரையும் கூப்பிட்டு ஆச்சு, நான் கூப்பிட்டு ஏற்கெனவே சில பேர் ஒண்ணுமே எழுதலை. சிபியைக் கூப்பிட்டால் அவர் வந்து "பிடிச்ச பதிவு" அப்படின்னு கொட்டை எழுத்தில் போட்டுட்டுப் போயிடுவார். ஆள் மாட்டவே மாட்டேங்கறார். இல்லைனா "குமார காவியம்"னு சொல்லி மிரட்டியாவது எழுத வைக்கலாம். இ.கொ. புரியாத மொழியில் அகராதியைப் பார்த்து பயமுறுத்திட்டுப் போயிடுவார். வேதா ஏற்கெனவே நிறைய அர்ரியர்ஸ்! அம்பி? ம்ம்ம்ம்ம்ம்ம்? அம்பி, இப்போ பதிவே எழுதறதில்லை, கணேசனுக்கு வேலை ஜாஸ்திங்கறதாலே! கணேசன், உன்னாலே உதவ முடியுமா உங்க அண்ணனுக்கு? மதுரையம்பதி? புதுசா ப்ளாக் ஆரம்பிச்சிருக்காராமே? எழுதுவாரா? தெரியலை! திராச சார்? ஒரு முறை மாட்டி விட்டாச்சு. சுமதி? அர்ரியர்ஸ்! ரசிகன், வேணாம், பேத்துவார் ரொம்ப. ஏற்கெனவே அறுவை தாங்கலை! புலி? குகைக்கு வந்துடுச்சா தெரியலை! ராம்? இருக்கிற பிடுங்கல் பத்தாதுன்னு மதுரைக்காக இன்னும் வேறே ஏதோ செய்யப் போறாராம். ஒருவேளை, "ரஞ்சனி"னு சொன்னா ஒத்துக்குவாரோ? ம்ம்ம்ம்ம்ம்? தெரியலையே? :P:P:P:P மணிப்பயல்? இப்போ ஷேர் இருக்கிற நிலைமையிலே எழுதுவாரா? தெரியலை! அபி அப்பா? ம்ஹூம், ஆள் அட்ரஸே தெரியலை! :( கோபிநாத்! வேணாம், ஏற்கெனவே கொடுத்த மொக்கையைச் சரியா எழுதலை. ஆகவே யாருக்குமே இல்லை, வர்ட்டா!!!!