எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 14, 2008

ஆதலினால் காதல் செய்வீர், ஆனால் தினமும்


"காதலினால் உயிர் தோன்றும்-இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவு எய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்"

பாரதியை விடச் சிறந்த காதலன் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அவன் காதல் பரந்து விரிந்தது. அவன் காதல் பெண்ணை மட்டும் காதலிக்கவில்லை, மொழியை, நாட்டை, இந்தப் பரந்து விரிந்த உலகைக் காதலித்தான். இன்றைய கால கட்டத்தில் அவ்வாறான பரந்த நோக்கு நம் அனைவருக்கும் தேவை என்றாலும், முதலில் நாம் ஒருவரை ஒருவர் காதலிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். இது பரஸ்பரம் நம்பிக்கையால் தானாக வரவேண்டும். விவாகரத்துக்களும், முறிந்த காதல்களும், கணவனுக்குத் தெரியாமல் இன்னொரு ஆணைக் காதலிக்கும் பெண்ணும், மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணைக் காதலிக்கும் ஆணும் இப்போது எங்கேயும் காணக் கிடைக்கிறது. தினசரிகளில் தினமும் நாம் காண்பது கள்ளக் காதலனுக்காகக் கணவனைக் கொன்ற மனைவியைப் பற்றியும், இன்னொரு பெண்ணுக்காக மனைவியைக் கொன்ற ஆணையும் பற்றி அல்லது கணவனுடன் ஒத்து வாழ முடியவில்லை என்பதற்காக அவனை விவாகரத்து செய்யும் பெண்ணைப் பற்றியுமே ஆகும். ஏன் இவ்வாறு?

நம் சமூகம் கட்டுப் பாடுகள் நிறைந்தது மட்டுமில்லாமல் பரந்து விரிந்த கோட்பாடுகளையும் கொண்டது தான். ஆணோ, பெண்ணோ இங்கே சமம் தான். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாமல், சரியான வழிகாட்டுதலும் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களும், சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களினால் தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளான ஜோடிகளுமே தடுமாறுகின்றனர். காதலித்து மணம் செய்து கொண்ட பலரும் வாழ்க்கையில் வெற்றி அடைவதில்லை. இதன் காரணம் என்ன? ஒருவர் மற்றவர் மீது கொண்ட அன்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கணவன், மனைவிக்குள் நீ, உயர்ந்தவர், நான் தாழ்ந்தவர் என்ற எண்ணமோ, அதனால் விளையும் கருத்து வேறுபாடுகளோ எழவோ எழாது.சாதாரணமாய் வாழ்க்கையில் அன்றாடம் எழும் கருத்து வேறுபாடுகள் ஒவ்வொரு வகைப்படும், அகங்காரத்தினாலும், நான் குடும்பத் தலைவன், என் பேச்சை நீ மீறக் கூடாது, என்று கணவனும், நான், குடும்பத் தலைவி, என் பேச்சுத் தான் இங்கே செல்லும், என மனைவியும் ஒருவரை ஒருவர் சரியாக நினைக்காததாலும், பரஸ்பரம் விட்டுக் கொடுக்காத தன்மையினாலும் விளையும் கருத்து வேறுபாடு வேறு. கணவன், மனைவிக்குள்ளான கருத்து வேறுபாடுகளை அவர்களேப் பேசித்தீர்த்துக்கொள்ளவும் வேண்டும். மூன்றாம் மனிதர் தலையீடு கூடவே கூடாது, என்னதான் பெற்றோராக இருந்தாலும், அவர்களும் இந்த விஷயத்தில் மூன்றாம் மனிதர்களே. பெருமளவில் வேறுபாடுகள் வந்தால் தவிர, பெரியவர்கள் உதவி இல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைக்குப் படிக்காத பெண்களோ, அதனால் உயர்ந்த வேலைக்குப் போகாத பெண்களோ மிக மிகக் குறைவு. கணவனை விட அதிகமாய்ப் படித்திருக்கும் பெண்களும் உண்டு, கணவனை விட அதிகமாய்ச் சம்பாதிக்கும் பெண்களும் உண்டு. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட ஒரு பதவியில் உயர்வான தலைமை அதிகாரி ஒருவர் இருப்பார் அல்லவா? அவர் சொல்லுவதைக் கேட்டுப் பொறுப்புடன் நம் வேலைகளைச் செய்தாக வேண்டும் அல்லவா? இது தவிர, வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் பலருடைய பேச்சையும், ஏச்சையும் பிரயாணம் செய்யும் பேருந்துகளில், கடைத்தெருக்களில், இன்னும் பல இடங்களில் பல்வேறுவிதமான காரணங்களுக்காகக் கேட்க நேரிடுகிறது. எல்லாரிடமுமா நாம் சண்டை போடுகிறோம். நம் கணவன் நம்மை ஒரு வார்த்தை சொன்னால் அதன் உள் அர்த்தம் என்ன? எதனால் சொல்கிறார்? என்று நாம் ஆராய வேண்டும். வெளியே செல்லும் ஆண்களும் பல்வேறு விதமான அசெளகரியங்களை அலுவலகத்திலும், அது சார்பான பல இடங்களிலும் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். ஆகவே இதில் இருவரும் ஒருவரை புரிந்து கொள்ளல் வேண்டும். காரணமின்றி கோபிப்பவர் பற்றி இங்கே பேச்சு இல்லை.

மனைவி தாமதமாய் அலுவலகத்தில் இருந்து வந்தால், சாப்பிடாமல் காத்திருக்கும் கணவனைப் பார்த்துக் கோபிக்காமல், "எனக்காகவா காத்திருக்கீங்க? இதோ வந்து சாப்பாடைச் சூடு செய்யறேன், நீங்க பசி தாங்க மாட்டீங்களே?" எனச் சொல்லிப் பாருங்கள். அடுத்த நாள் முதல் அந்த மனைவி வரும் முன்னர், கணவன் சாப்பாட்டைச் சூடு பண்ணி எடுத்து வைத்துச் சாப்பிட எல்லா ஏற்பாடுகளுடனும் காத்திருக்க ஆரம்பிப்பான். குடும்பம் என்பது இரட்டை மாட்டு வண்டி மாதிரி. இரு மாடுகளும் சேர்ந்துதான் இழுக்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி வயதான தம்பதிகள். பையனுடனும், மருமகள், பேரன், பேத்தியுடனும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அந்த வயதான தம்பதிகள் தங்களுக்குள் சேர்ந்திருக்க வேண்டிய நேரத்தை எப்படிப் பகிர்ந்து கொண்டார்கள் தெரியுமா? தங்களுக்கெனத் தனியே நேரம் ஒதுக்கிக் கொள்ளுதலில் சாப்பிட வேண்டிய நேரத்தையும் ஒன்றாக வைத்துக் கொண்டார்கள். இருவரும் எத்தனை நேரம் ஆனாலும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும்போது நாம் போனால் பார்க்கவே நெகிழ்ச்சியாக இருக்கும். இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு, கணவன், மனைவிக்குக் கேட்டுக் கேட்டுப் பரிமாறுவதும், மனைவி, கணவனுக்குக் கேட்டுக் கேட்டுப் பரிமாறுவதும் பார்க்கவே அழகாக இருக்கும். இத்தனைக்கும் அவர்களுக்கு அப்போது வயது கணவனுக்கு 82, மனைவிக்கு 78. இது தான் உண்மையான காதல்னு எனக்குத் தோணும்.

பறவைகள் கூடு கட்டுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆணாகட்டும், பெண்ணாகட்டும், தனியே கூடு கட்டாது. இரண்டும் சேர்ந்து தான் கூடு கட்டும். இதில் ஆண், பெண் என்ற பேதமே இல்லை. ஆண் பறவை தான் வெளியே போய் உணவு சம்பாதித்து வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று பெண் பறவை கூட்டிலேயே உட்காராது. அதுவும் போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வரும். இவ்வாறு குஞ்சுகள் பெரிதாகித் தானே பறக்கும் வரை இரண்டும் சேர்ந்தே உழைக்கும், அதன் வம்சத்துக்காக. அந்தக் குஞ்சுகள் பறந்து போனதும், மீண்டும் அடுத்த குஞ்சு பொரிப்புக்குத் தயாராயிடும். மீண்டும் சேர்ந்தே தான். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை இந்தப் பறவை இனத்திடம் இருந்து தான். ஆறறிவு உள்ள மனிதர் என்று பீற்றிப் பெருமை அடித்துக் கொள்ளும் நாம் இந்தப் பறவை இனத்திடம் இருக்கும் இந்தக் குணத்தைப் பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கோமா?

காதல் என்பதும், காதலர் தினம் என்பதும் இன்று ஒருநாளோடு முடிந்து போவதில்லை. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும் நம் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். தினம் தினம் நம் மனைவியை/கணவனைக் காதலிக்க வேண்டும். இன்று ஒரு நாள் ரோஜாப் பூக்களோ அல்லது வேறு வகையான பரிசோ கொடுத்துவிட்டால் அதனால் காதல் உயர்ந்தது என்று ஆகிவிடாது. நிலைத்திருக்கும் காதலே உயர்ந்தது. காதல் நிலைக்கப் பாடுபடுங்கள். உங்கள் மனைவி, உங்களுக்காக விட்டுக் கொடுப்பதையும், உங்கள் கணவர் உங்களுக்காக விட்டுக் கொடுப்பதையும் நினையுங்கள். நீங்களும் விட்டுக் கொடுங்கள். அன்பு செலுத்துங்கள். அன்பு கொடுக்கக் கொடுக்கக் குறைவில்லாமல் பெருகிக் கொண்டே இருக்கும். வட்டியோடு சேர்ந்து திரும்பியும் வரும். எப்போது வற்றாத ஜீவ நதி அன்பு ஒன்று தான். ஆதலினால் காதல் செய்வீர் நாநிலத்தீர், ஆனால் தினம் தினம். இன்றைய தினம் உங்கள் காதலருக்கு/ காதலிக்கு, கணவருக்கு/மனைவிக்கு அன்புப் பரிசாக நீங்கள் கொடுப்பது நீங்களாகவே இருக்க வாழ்த்துக்களுடன்.

13 comments:

  1. அழகா சொல்லி இருக்கீங்க!

    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  2. ரொம்ப பெரிய பதிவானாலும் மேட்டர் நிறைய இருக்கு...மொக்கையாக வகைப்படுத்த முடியல்ல... :-)

    ReplyDelete
  3. தலைவியாரே,
    இந்தப் பதிவு எதிர்பார்த்தது தான். மேலோட்டமா படிச்சதுலேயே உங்கப் பதிவோட தாத்பர்யம் வெளங்கிடுச்சு. கிட்டத்தட்ட இதே கருத்துல நான் போட்ட பதிவு இங்கே.

    http://kaipullai.blogspot.com/2008/02/gandhi-valentine.html

    ReplyDelete
  4. பிரமாதமான பதிவு அக்கா! இந்த காலத்திற்கு மிகப்பொருத்தம்.

    ReplyDelete
  5. //ஆண் பறவை தான் வெளியே போய் உணவு சம்பாதித்து வந்து குஞ்சுகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று பெண் பறவை கூட்டிலேயே உட்காராது. அதுவும் போய் உணவு சம்பாதித்துக் கொண்டு வரும். இவ்வாறு குஞ்சுகள் பெரிதாகித் தானே பறக்கும் வரை இரண்டும் சேர்ந்தே உழைக்கும், அதன் வம்சத்துக்காக. அந்தக் குஞ்சுகள் பறந்து போனதும், மீண்டும் அடுத்த குஞ்சு பொரிப்புக்குத் தயாராயிடும். மீண்டும் சேர்ந்தே தான். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை இந்தப் பறவை இனத்திடம் இருந்து தான். ஆறறிவு உள்ள மனிதர் என்று பீற்றிப் பெருமை அடித்துக் கொள்ளும் நாம் இந்தப் பறவை இனத்திடம் இருக்கும் இந்தக் குணத்தைப் பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கோமா? //

    கலக்கல். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து நம்மவன்/நம்மவள் என்ற உணர்வோடு எதையும் அணுகினாலே எல்லா பிரச்சனையும் தவிடு பொடி ஆகிடும்னு நெனக்கிறேன். பதிவின் ஒவ்வொரு வரியும் முத்தும், ரத்தினமும் பொதிந்தது. அதான் நீங்க எங்க எல்லாருக்கும் தலைவியா இருக்கீங்க.
    :)

    ReplyDelete
  6. நன்ராகச் சில்லி இருக்கிறீர்கள் கீதா..கதலர் தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. காதல் என்பதும், காதலர் தினம் என்பதும் இன்று ஒருநாளோடு முடிந்து போவதில்லை. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும் நம் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். தினம் தினம் நம் மனைவியை/கணவனைக் காதலிக்க வேண்டும். இன்று ஒரு நாள் ரோஜாப் பூக்களோ அல்லது வேறு வகையான பரிசோ கொடுத்துவிட்டால் அதனால் காதல் உயர்ந்தது என்று ஆகிவிடாது. நிலைத்திருக்கும் காதலே உயர்ந்தது. காதல் நிலைக்கப் பாடுபடுங்கள். உங்கள் மனைவி, உங்களுக்காக விட்டுக் கொடுப்பதையும், உங்கள் கணவர் உங்களுக்காக விட்டுக் கொடுப்பதையும் நினையுங்கள். நீங்களும் விட்டுக் கொடுங்கள். அன்பு செலுத்துங்கள். அன்பு கொடுக்கக் கொடுக்கக் குறைவில்லாமல் பெருகிக் கொண்டே இருக்கும்

    உண்மையான ,சரியான விளக்கம்...

    எப்போது வற்றாத ஜீவ நதி அன்பு ஒன்று தான். ஆதலினால் காதல் செய்வீர் நாநிலத்தீர், ஆனால் தினம் தினம். இன்றைய தினம் உங்கள் காதலருக்கு/ காதலிக்கு, கணவருக்கு/மனைவிக்கு அன்புப் பரிசாக நீங்கள் கொடுப்பது நீங்களாகவே இருக்க வாழ்த்துக்களுடன்.

    இதற்கு மேல் காதலைப்பற்றி அருமையாக சொல்ல இயலாது...

    ReplyDelete
  8. Romba naal kalichu padikuren but nalla blog padichu oru unarvu....


    Happy Valentines day to you and Athimber

    ReplyDelete
  9. அற்புதம் :)

    ReplyDelete
  10. தலைவி

    அருமை..அருமை ;))

    இதுதான் தலைவியின் வழி தனி வழி ;))

    ReplyDelete
  11. //காதல் என்பதும், காதலர் தினம் என்பதும் இன்று ஒருநாளோடு முடிந்து போவதில்லை. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும் நம் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். //

    சூப்பரு!!!

    ReplyDelete
  12. அம்பிக்கு தம்பி கணேசன்
    தலைவிக்கு யார்?


    நல்ல அலசல்.

    ஒவ்வொரு வரியும் முத்தும், ரத்தினமும் பொதிந்தது. அதான் நீங்க எங்க எல்லாருக்கும் தலைவியா இருக்கீங்க.
    :)

    ரிபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete