எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 14, 2008

புரியப் பத்து வருஷம் ஆனது - காதல் என்றால் என்ன?


சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததில் ஒருமாதிரியாகக் காதல் என்று ஒன்று இருப்பது தெரிந்தாலும், உண்மையான வாழ்க்கையில் பார்த்தால் அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும். கதைகளிலும், காவியங்களிலும் நான் பார்த்த காதல் என்பது வேறாக இருந்தது. முதலில் அன்பு என்பதற்கே வேறு வேறு அர்த்தம் இருந்தது. அன்புதான் காதலா, காதல் தான் அன்பா என்றால் புரியவில்லை.

நான் படித்த புத்தகங்களில் குறிப்பிடப்பட்ட காதலில் முக்கியமானவையாகக் கல்கியின் "அமரதாரா" கதையில் வந்த ரங்கதுரை, இந்துமதி காதல்தான் முதலில் என்னைக் கவர்ந்தது. அந்தக் கதையை நான் முதலில் படிக்கும்போதே கல்கி இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. அவருக்குப் பின் அவருடைய பெண் "ஆனந்தி" கதையை முடித்து இருக்கிறார். நான் முதலில் படித்தது "இந்துமதியின் கதை" என்ற பாகம் ஒன்றுதான். அதில் வரும் இந்துமதியின் தாய், தந்தையரின் காதலும், அதற்குப்பின் இந்துமதி, ரங்கதுரையின் காதலும் என்னை மிகவும் வசீகரித்தது. இந்துமதியின் தாய் சந்திரமணியின் காதல் ஆக்ரோஷமானது என்றால் இந்துமதியின் காதல் அமைதியான நதியைப் போன்றது. இன்னும் சொன்னால் வற்றாத ஜீவநதி என்றும் சொல்லலாம். அதிலேயே கல்கி ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்:ரங்கதுரையின் வார்த்தைகளில்: "இந்த அன்பை என்னவென்று சொல்வது? ஒரு தாய், தன் மகளிடம் காட்டும் அன்பா, தந்தை, தன் மகளிடம் காட்டும் அன்பா, கணவன் மனைவியிடம் காட்டும் அன்பா அல்லது காதலன், காதலியிடம் காட்டும் அன்பா? புரியவில்லை." என்று வந்திருக்கும். நான் படித்து பல வருடங்களாகிவிட்டபடியால் நினைவில் இருந்து எழுதி இருப்பது தப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் அர்த்தம் இதுதான். அப்படி ஒரு காதலைப் பற்றி அதுவரை நானும் படிக்கவில்லை. அதிலும் ரங்கதுரை வெளிநாடு சென்றதும், அவன் நினைவில் இருக்கும் இந்துமதிக்கு அவன் பாடும் பாரதி பாடல் நினைவில் வரும்.

நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக்குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்டுநிதம் மேகம் அளந்தே,
பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றுமில்லை
சிரித்த ஒலியினில் உன்கைவிலக்கியே
தருமித் தழுவியதில் நின்முகங்
கண்டேன்"

இந்தப்பாட்டு ரங்கதுரை வெளிநாடு செல்லுமுன் இந்துமதிக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போவான்.
, உடனேயே நிலவில் அவன் முகமும் அவள் நினைவில் தெரிவதாகப் படம் ஓவியர் திரு மணியம் அவர்களால் வரையப்பட்டிருக்கும். இந்துமதியின் கண்களில் தெரியும் அந்த ஏக்கம் இன்னும் கண்ணிலேயே இருக்கிறது. அதற்கு அப்புறம் நான் ரங்கதுரையின் கதை நடக்கும் பாகம் வாங்கிப் படிக்க ரொம்ப நாள் ஆனது. அதுவரை ஒரே கவலையாக இருக்கும். தினமும் நினைத்துக் கொள்வேன் இந்துமதிக்கு என்ன ஆனதோ என்று. அவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்று தெரியும்போது எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டிருந்தது.

கல்யாணம் ஆகிப் புக்ககம் போனதும் என் கணவர் என்னை விட்டு விட்டுப் புனே சென்று விட்டார். புனேயில் வீடு கிடைப்பது கஷ்டம் என்பதால் நான் உடனே செல்லவில்லை. கிராமத்தில் மாமனார், மாமியார் மற்றும் நாத்தனார், மைத்துனர்களுடன் இருந்தேன். அப்போது அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். அந்தக் கடிதத்தில் நான் தனியாக இருப்பது பற்றியும் உடனே அழைத்துப் போவது பற்றியும் கொஞ்சம் கவித்துவமாக எழுதி இருந்தேன். அதற்குப் பதில் என்ன வந்தது தெரியுமா? ஒரு இன்லாண்ட் கவரில் 4 வரி. "எனக்குச் சென்னை மாற்றல் ஆகிவிட்டது. இன்னும் 10 நாளில் வந்து அழைத்துப் போகிறேன். மற்றபடி நீ தமிழ் நன்றாக எழுதுவதால் ஏதாவது கதை எழுதிப் பார்க்கவும். முயன்றால் உனக்கு நன்றாக எழுத வரும்." என்பதுதான். எனக்குச் சப்பென்றாகி விட்டது. "பரவாயில்லை" என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். அதுதான் அழைத்துப் போகப் போகிறாரே, அப்புறம் என்ன என்று தோன்றியது. குடித்தனம் வைத்துப் பழகும்போதும் அத்தனை பேச்சு, வார்த்தை இல்லை. எங்கள் வீட்டில் எல்லாரும் சகஜமாகப் பேசிப் பழகுவோம். என் அண்ணன், தம்பியுடன் எனக்குச் சண்டை எல்லாம் வரும். இங்கேயோ நேர்மாறாக இருந்தது. ஆகவே மறுபடியும் என் கவனம் புத்தகங்களில் திரும்பியது. நான் பாட்டுக்குப் படித்துக் கொண்டு இருப்பேன். இதற்கு நடுவில் எனக்குப் பெண் பிறந்து, ராஜஸ்தான் போய், அங்கே இருக்கும் போதே பையனும் பிறந்தான். குழந்தைகளும் ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் தான் வருவார்கள். என் அப்பா சினிமாவுக்குப் போனாலோ எங்காவது போனாலோ போய்விட்டு வந்து அந்தக் கதையெல்லாம் சொல்லுவார் எங்களுக்கு. அப்பாவுடன் விளையாடுவோம். விளையாட்டில் ஏமாற்றினால் சண்டை போடுவோம். இங்கே அந்த மாதிரி வெளிப்படையாக எதுவும் கிடையாது. ஆகவே என் கணவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா என்னவென்று எனக்குப் புரியவில்லை.

இந்த மாதிரிக் கல்யாணம் ஆகிப் பத்து வருடங்கள் போய்விட்டது. என் மனதில் தீராக்குறைதான். ஆனால் வெளிப்படையாக இதைப் பற்றி நானும் பேசவில்லை, அவரும் பேசவில்லை. அந்த சமயத்தில் எனக்கு மூலம் வியாதி முதல் பிரசவத்தில் ஆரம்பித்தது ஜாஸ்தியாகி 12 o clock position என்னும் நிலையை அடைந்து ஆபரேஷன் செய்தால் தான் சரியாகும் என்று டாக்டர் கூறிவிட்டார். ஆஸ்பத்திரியில் சேர்த்துத் தினம் இரண்டு வேளையும் என் கணவர் வருவார். எனக்கு என்னமோ கடமைக்கு வருவதாகத் தோன்றும். ஆதலால் அவரிடம் "நீங்கள் தினம் வர வேண்டாம். ஆஃபீஸ் போய்விட்டுச் சாயந்திரம் வந்தால் போதும்" என்றேன். பதில் சொல்லாமல் சிரித்துவிட்டுப் போய்விட்டார். ஆபரேஷனும் ஆனது. இப்போது ஒரு பத்து வருஷமாகத் தான் லேஸர் எல்லாம். அப்போது எல்லாம் அப்படிக் கிடையாது. லோகல் அனஸ்தீஷியா கொடுத்து ஆபரேஷன் செய்துப் பின் படுக்கையில் கொண்டு விட்டு, விட்டு டாக்டர் சொன்னார்" இங்கே பாருங்க, கீதா, ரொம்ப வலி இருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றார். நான் சொன்னேன், இரண்டு குழந்தைகள் இருக்கின்றன எனக்குப் பிரசவ வலியைவிடவா வலிக்கும் என்று சொன்னேன். டாக்டர் அதற்கு"இல்லை அம்மா, இது தாங்காது. உங்கள் நரம்பு வெட்டித் தைத்திருக்கிறோம். 24 மணி நேரம் வலி இருக்கும். உயிர் போகும் வலி இருக்கும். வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டிருக்கிறேன்". என்றார். சரி என்றேன். சிறிது நேரம் டாக்டர் இருந்துவிட்டு எனக்குக் காலில் உணர்வு வந்ததும் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மறுபடி எச்சரிக்கை செய்தார். எனக்கு வேடிக்கையக இருந்தது. நர்ஸ் வேறே 10 நிமிஷத்திற்கு ஒருமுறை வந்து பார்த்தாள். உணர்வு வந்து ஒரு 1/2 மணிக்கெல்லாம் வலி ஆரம்பித்தது பாருங்கள், வலி என்றால் வலி சொல்லமுடியவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் என்னை அறியாமல் கத்த ஆரம்பித்தேன். மருந்துகளின் மயக்கத்திலும், ஊசியின் தாக்கத்திலும் கூட வலி பொறுக்க முடியவில்லை. கடவுளே என் உயிரை எடுத்துக் கொள் என்று மூன்றாவது மாடியில் இருந்த நான் போட்ட சத்தத்தில் பிரசவ வார்டு, மற்ற ஆபரேஷன் செய்தவர்கள், தினமும் வரும் நோயாளிகள் என்று என் அறை வாசலில் ஒரே கூட்டம் கூடி இருக்கிறது. என் அப்பாவும், அம்மாவும், சகோதரர்களும் என்ன செய்வது என்று புரியாமல் டாக்டரைத் திருப்பிக் கூப்பிட்டார்கள். அவர் வந்து பார்த்துவிட்டு வலி தெரிய வேண்டும். அப்போது தான் ஆபரேஷன் செய்ததின் பலன் தெரியும் என்று சொல்லி விட்டு மறுபடி ஒரு சக்தி வாய்ந்த ஊசியைப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அதற்குள் குழந்தைகள் வருவார்கள் அழைத்து வர வேண்டும் என்று வீட்டுக்குப் போவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவருக்கு விஷயம் தெரிந்து திரும்ப வந்துவிட்டார். நான் துடிப்பதைப் பார்த்துவிட்டு மெதுவாக என் அருகில் வந்து என் கையைத் தொட்டு ஆறுதல் சொல்ல என் கையை இறுக்கிப் பிடித்திருக்கிறார். சட்டென்று அத்தனை வலியிலும் என் உணர்வு விழித்துக் கொண்டது. அந்தப் பிடி எனக்கு எதையோ சொன்னது. கண்ணை மூடிக்கொண்டு அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.
*************************************************************************************

கைப்புள்ள எழுதி இருப்பதைப் போய்ப் பார்த்துப் படிச்சேன், நாங்கள் நிறையவே இதைப் பற்றிப் பேசி இருந்தோம், அவர் சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருக்கிறார், என்பது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தாலும், அவர் என்னைப்பற்றிப் புகழ்ந்து இருப்பது கொஞ்சம் நெருடலாகவே தான் இருந்தது. ஏனெனில், நானும் முதலில் புரியாமல், இந்த மாதிரியான வெளிப்படையான பரிசுகளையும், பேச்சுக்களையும் எதிர்பார்த்தவள்தான் என்பதினாலேயே. இதைப் பற்றி முன்பு நான் வலைப்பதிவு எழுத ஆரம்பிச்ச புதிதில் எழுதிய ஒரு பதிவைத் திரும்ப இங்கே போடுகிறேன். இதிலே "பொன்ஸ்" எனக்குக் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தை என்னால் மறக்க முடியாது. அவர் சொல்லி இருப்பதை அப்படியே வரிக்கு வரி நினைவில்லாவிட்டாலும், அவரின் கருத்து இது தான்: "பத்து வருஷம் காத்திருந்திருக்கீங்க, பத்து வருஷம் என்பதெல்லாம் இந்த அவசர உலகில் நடக்காத ஒன்று." என்பதே. கிட்டத் தட்ட இந்த அர்த்தம் தான் வரும். திரு திராச அவர்கள், "அன்பு, காதல் எல்லாம் "நல்லி"கடை ஷோரூமில் வைக்கும் பொருள் அல்ல" என்ற தொனியில் சொல்லி இருப்பார். இதில் பொன்ஸ் சொல்லி இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். என்றாலும் அன்றைய பதிவில் அதை மறுத்தோ, ஆதரித்தோ சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். ஒரு பெண்ணிடமோ, ஒரு ஆணிடமோ காதல் தோன்றும்போது, "கண்டவுடனே காதல்" என்பது நிச்சயம் உடல் கவர்ச்சிதான் முதலிடம் வகிக்கும் என்று என் கருத்து. என்றாலும் சிலரைப் பார்க்கும்போது நம்மை அறியாமல் ஒரு ஈர்ப்பு வரும், மொழி படத்தில் வருகிறமாதிரி, யாருக்கும் மூளையில் பல்பு எரிவதில்லை, அப்படி இருந்தால் நல்லாத் தான் இருக்கும். என்றாலும் இந்தச் சிலரிடம் தோன்றும் ஈர்ப்புக் கடைசியில் ஒருத்தரிடமே நிலைப்பது தான் காதல் என்று நினைக்கிறேன். அந்தக் காதலை நாம் அறிந்து கொள்வதற்குள் என்ன பாடு? எத்தனை கஷ்டம்? எவ்வளவு வேதனை? என்றாலும் காத்திருக்கிறோம் அல்லவா? மஞ்சூர் சொல்வது போல், "ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்" என்பார் அவர். அது என்னமோ உண்மைதான். அந்த ஒரு வார்த்தை கிடைத்ததும் அதைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். தவறுகளைத் திருத்திக் கொண்டு சந்தோஷமான வாழ்வை ஆரம்பியுங்கள். உங்களுக்குள் "ஈகோ" வேண்டாம். ரொம்ப போர் அடிச்சதினால் 2 நாள் லீவு, எஞ்சாய்!!!!! :)))))))))))

33 comments:

  1. கீதா,

    //சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததில் ஒருமாதிரியாகக் காதல் என்று ஒன்று இருப்பது தெரிந்தாலும், உண்மையான வாழ்க்கையில் பார்த்தால் அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும். //

    இப்படிச் சொல்வது சரியல்ல. ....

    ....ரொம்ப காலம் என்னவென்று தெரியாமல் இருந்தேன், அவர்கள் நிறையச் சாப்பிட்டார்கள். அந்த எழுத்தாளர் எழுதிய கதையில் இன்னெ இன்னெ பதார்த்தங்களை, இந்த காதாபாத்திரம் நன்றாகச் சாப்பிட்டது....

    இவை எல்லாம் எனக்கு பசி என்றை ஒன்றை தெரியவைத்தன

    என்று சொல்வதுபோல் இருக்கிறது உங்களின் வர்ணனைகள். :-)


    உணவுத்தேவையால் வயிற்றில் ஏற்படும் அழைப்பை பசி என்ற வார்த்தையால் அடையாளப்படுத்துகிறோம். அவ்வளவே.

    அந்த அழைப்பை நீங்கள் பசி என்ற வார்த்தையால் அடையாளப்படுத்தாவிட்டாலும் அல்லது வேறு வார்த்தையில் (ஜிம்கான ஜிம்கானா என்று வைத்துக் கொள்ளுங்கள்) அடையாளப்படுத்தினாலும் வயிற்றில் ஏற்படும் உணவுத் தேவைக்கான அழைப்பு என்பது இயற்கையானது. அதை புத்தகங்களில் இருந்து தெரிய வேண்டியது இல்லை.

    காமம் சார்ந்த உடல் தேவைகள் அனைவருக்கும் அந்த அந்த காலங்களில் இயற்கையாய் வரும். நாம் அதை எந்த வார்த்தைகளில் அடையாளப்படுத்துவது என்று தெரியாமல் இருந்து இருக்கலாம்.

    //முதலில் அன்பு என்பதற்கே வேறு வேறு அர்த்தம் இருந்தது. அன்புதான் காதலா, காதல் தான் அன்பா என்றால் புரியவில்லை.//

    காமம் சார்ந்த உணர்வுகளை அன்பானவரிடம் காட்டுவதைத்தான் தமிழில் காதல் என்று அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள். வேறு வழியே இல்லை நாமும் அந்த வார்த்தையை அதே அடையாளத்தில்தான் கையாளவேண்டும். :-))

    காதலியிடம்(காதலனிடம்) அன்பாய் இருக்கலாம். ஆனால் அன்பாயிருக்கும் எல்லாரையும் காதலிக்க முடியாது. :-))

    மனைவி/கணவன் தவிர்த்து அதிக பட்சம் நாட்டைக் காதலிக்கிறேன் என்று சொல்லலாம், ஆனால் பக்கத்து வீட்டு மாமியையும் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியாது. :-))

    ஆனால் love (ஆங்கிலம்) என்பது காமம் சாராத இரண்டு உடல்களுக்கு இடையேயும் வரும் அனுபவம்/நிகழ்வு/புரிதல்களை அடையாளப்படுத்தும் வார்த்தை.

    பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மிடம் பலரும், நாம் பலருக்கும் lovable (ஆங்கிலம்) ஆக இருந்து உள்ளோம். Love (ஆங்கிலம்) உணர்வு இயற்கையானது. விலங்குகளிடமும் உள்ளது. அவைகள் எந்தப் புத்தகத்தையும் படித்து தெரிந்த கொள்வது இல்லை. I Love my country என்றும் I love my manager/teacher/aunty என்றும் சொல்லலாம்.

    Love (ஆங்கிலம்) க்கு இணையான வார்த்தை தமிழில் இல்லை. Love என்ற ஆங்கில வார்த்தை , தமிழில் காதல் என்ற அளவில் சிறுமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    ***
    காதல் (தமிழில்) என்பது இரண்டு காமம் சார்ந்த இரண்டு உடல்களுக்கு இடையே மட்டும் வரும் நிகழ்வு/புரிதல். தமிழில் காமம் இல்லாமல் காதல் இல்லை என்பது உண்மை.

    எனவே அன்பு என்பது காதல் அல்ல.

    அன்பு+காமம்+இன்னபிற... கலந்ததுதான் = காதல் (தமிழ்)

    ReplyDelete
  2. //
    அலறிக் கொண்டிருந்த நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.
    //
    படிக்கிற எங்க கண்ணிலும்.

    முத்தமிழில் கமெண்டுகள் உங்களை வருத்தபடுத்தியிருந்தா மன்னிச்சிடுங்க.

    அன்புடன்
    மங்களூர் சிவா

    ReplyDelete
  3. அருமையான காதல் கதை எழுதியிருக்கீங்க அக்கா! காதலருக்கு என் பாராட்டுகளை சொல்லுங்க.

    ReplyDelete
  4. 2 நாள் லீவா?....ஓ நீங்க காதலர் தினம் அப்படிங்கறத 3 நாள் விழாவா கொண்டாடறீங்களா?. சரி, சரி....

    :-)

    ReplyDelete
  5. அக்கா... ஏதோ சொல்ல வந்தேன்.. இப்போ என்ன சொல்லறதுன்னே தெரியலை.. எம்புட்டு கஷ்டங்களை அனுபவிச்சிருக்கிங்கன்னு கேக்கும் போது மனசு கனமாகுது..அதிலும் முதல் முதலா காதலை உணர்ந்த கணத்தை அதே இயல்பா ஒரு பூ மலரும் மென்மையோட சொல்லியிருக்கறது நெகிழ வைச்சுது.நிஜமாவே நமக்கு ஒரு கஷ்டம் வரும்போதுதான் நாம் அடைஞ்ச அன்போட அருமை தெரியும்.வாழ்த்துக்கள் உங்கள் காதலும்,நீங்களிருவரும் இணைபிரியா நிறைவு பெற்றிட:)...

    ReplyDelete
  6. //2 நாள் லீவா?....ஓ நீங்க காதலர் தினம் அப்படிங்கறத 3 நாள் விழாவா கொண்டாடறீங்களா?. சரி, சரி....

    :-)//

    ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
  7. காதல் = கா + த + ல்

    கா = காத்திருத்தல்
    த = தவித்தல்

    அன்று முத‌ல் இன்று வ‌ரை இதே க‌தை தான்.
    அன்று போஸ்ட் கார்டில் பூ வ‌ரை ந்தார்க‌ள்.
    இன்று ஈ மைலில் பூ அனுப்புகிறார்க‌ள்.

    subbu
    த‌ஞ்சை

    அன்று க‌ண்ண‌னுக்காக‌ ஏங்கிய‌ கோபிக‌ள் பாடிய‌தைக்
    கேட்க‌ செல்லுங்க‌ள்
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  8. \\நான் கண்ணைத் திறந்து பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர். எனக்குப் புரிந்தது.
    \\

    தலைவி..

    என்ன சொல்வது..!!

    வார்த்தைகள் இல்லை..

    ReplyDelete
  9. ரொம்ப பெருசா இருக்குது..
    நான் வந்துட்டேன்னு காட்டுறதுக்காக இந்த பின்னூட்டம்..
    படிச்சுட்டு அப்புறமா தனியா வேற பின்னூட்டம் போடறேன் :))

    ReplyDelete
  10. நல்ல பதிவு.
    நானும் ஒரு புது பதிவு எழுதி இருக்கேன். நேரம் கிடைக்கையில் வந்து பாருங்க அக்கா
    நட்போடு
    நிவிஷா

    ReplyDelete
  11. கைப்பிடித்த கணவரின் காதலை பத்து வருடங்கள் கழித்து பிடித்த பிடியில் உணர்ந்த தருணம்!!!உன்னதமானது.

    ReplyDelete
  12. மேடம்,

    பதிவு சூப்பர். என்னைப் பொருத்தவரையில் அந்த ஹார்மோன் சுரப்புக்கான தூண்டல் சிலருக்கு பார்வையில், சிலருக்கு வலியில் இருக்கும் போது தொடுகையில். அவ்வளவு தான். ஆனால் நீங்க அதை விவரித்திருக்கும் விதம், அடடா, சார் உங்களுடைய முதல் கடிதத்தைப் பார்த்தவுடன் சொன்ன மாதிரி ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய லட்சணங்களுடன் இருக்கிறது. வாழ்க.

    ReplyDelete
  13. //எனவே அன்பு என்பது காதல் அல்ல.//

    கல்வெட்டு, நான் தேடியது என்னனு உங்களுக்குப் புரியாததால் இந்த மாதிரி எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன். நான் தேடியது உண்மையா அன்பு இருக்கா இல்லையானு தான். அதான் கல்யாணம் ஆகிப் பத்து வருஷங்களும், இரண்டு குழந்தைகளும் பிறந்தாச்சுனு சொல்லி இருக்கேனே, அதுக்கப்புறமும், இது உடல் சார்ந்த தேடல்னு சொல்ல முடியாதுனே நினைக்கிறேன். தவறாய்ப் புரிஞ்சுட்டு இருக்கீங்க. ஆனாலும் புரியற மாதிரி நானும் சொல்லலையோனு தோணலை, இத்தனை பேருக்கு நான் சொல்ல வந்தது என்னனு புரிஞ்சிருக்கு! :(

    ReplyDelete
  14. @மங்களூர், என்ன ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு? நான் அதே சேம் ஓல்ட் கீதா சாம்பசிவம் தான், புதுசா மரியாதை எல்லாம் கொடுத்து ஒதுக்கி வைக்காதீங்க, அதெல்லாம் எந்தத் தமிழிலும், எதுவும் சொல்லலை நீங்க! பழையபடியே கலாய்ச்சுட்டு இருங்க! :))))))))))

    @திவா, பிழைச்சேன், இதுக்கு விளக்கெண்ணெய் இல்லை!

    @மதுரை, ஆமாம், கொண்டாடறேன், புகை வருதோ? :P

    @ரசிகன், நீங்களுமா ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா, வேணாங்க, எனக்கு என்னமோ ரொம்பவே மரியாதை கொடுத்து ஒதுக்கி வச்ச மாதிரி இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்., எல்லாம் இந்த அதியமான் வேலைனு நினைக்கறேன். நறநறநறநறநற :P

    ReplyDelete
  15. @சூரி சார், நன்றி.

    @நிவிஷா, போய்ப் பார்த்து வாழ்த்தும் சொல்லியாச்சு.

    ReplyDelete
  16. @கோபிநாத்,
    என்ன இது எல்லாருமே ஒரே ஃபீலிங்ஸ்? நல்லாவே இல்லையே? இதைப் போட்டிருக்கவே கூடாதோ? ,ம்ம்ம்ம்ம்ம்ம்????

    @சென்ஷி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  17. கீதா,
    நான் பதில் அளித்தது உங்கள் திருமணம் மற்றும் அது சார்ந்த விசயங்களுக்கு அல்ல.

    காதல்,அன்பு என்ற உங்களின் கீழ்க்கண்ட கருத்துக்களுக்கு மட்டுமே. அதனால் தான் நான் எவற்றுக்கு கருத்து கூறுகிறேன் என்று அவைகளை // ----- // அடைப்புக்குள் போட்டேன்.

    1. //சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததில் ஒருமாதிரியாகக் காதல் என்று ஒன்று இருப்பது தெரிந்தாலும், உண்மையான வாழ்க்கையில் பார்த்தால் அது பற்றி எதுவும் தெரியாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும். //

    2.//முதலில் அன்பு என்பதற்கே வேறு வேறு அர்த்தம் இருந்தது. அன்புதான் காதலா, காதல் தான் அன்பா என்றால் புரியவில்லை.//


    **

    // இத்தனை பேருக்கு நான் சொல்ல வந்தது என்னனு புரிஞ்சிருக்கு! :( //

    :-))

    நீங்கள் கேட்டவைகள் உங்கள் வார்த்தைகளிலேயே மேலே உள்ளது. அதற்கான விடைகள் பதிவில் இல்லை. ஒரு வேளை நேரடியாக இல்லாமல் அனுபவங்களில் சொல்லியிருக்கலாம். எனக்கு புரியாமல் இருந்து இருக்கலாம்.
    நான் சொல்லி இருப்பது , 1,2 க்கான எனது கருத்துகள். மற்றபடி ஒன்றும் இல்லை.

    **
    தவறு ஏதும் இருந்தால் மன்னிக்க:-((

    ReplyDelete
  18. @நானானி, நன்றி, நன்றி. ஏற்கெனவே பதில் சொல்லி இருந்தேன், ப்ளாக்கர் சொதப்பி விட்டது, வழக்கம்போலே, அதுக்கும் நமக்கும் எப்போவும் ஒத்துக்கறதில்லை! :P

    ReplyDelete
  19. //பதிவு சூப்பர். என்னைப் பொருத்தவரையில் அந்த ஹார்மோன் சுரப்புக்கான தூண்டல் சிலருக்கு பார்வையில், சிலருக்கு வலியில் இருக்கும் போது தொடுகையில். அவ்வளவு தான். ஆனால் நீங்க அதை விவரித்திருக்கும் விதம், அடடா, சார் உங்களுடைய முதல் கடிதத்தைப் பார்த்தவுடன் சொன்ன மாதிரி ஒரு தேர்ந்த எழுத்தாளருக்குரிய லட்சணங்களுடன் இருக்கிறது. வாழ்க.//

    நீங்களும் தப்பாவே புரிஞ்சுட்டு இருக்கீங்க, என்னவோ போங்க, இந்த மாதிரிப் புரிய வைக்கவே நான் முழிக்கிறதைப் பார்த்தாலே நான் எவ்வளவு திறமைசாலின்னு புரியுது, அதான் உங்க பின்னூட்டத்திலே பின்னாலே, "வஞ்சப் புகழ்ச்சி அணி"யாலே நம்மைப் பாராட்டி இருக்கீங்கனும் புரியுது! :))))))))))))))

    ஆனால் ஒண்ணு, உங்க "புல்லாகிப் பூண்டாகி" விமரிசனத்துக்குப் பதில் ஒண்ணு தயார் செய்துட்டு இருக்கேன், அதுக்குக் கொஞ்சம் ஹோம்வொர்க் தேவைப்படுது, அதான் தாமதம்.

    @கல்வெட்டு, அதெல்லாம் ஒண்ணும் இல்லை, என்ன இது மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு? அதெல்லாம் ஒண்ணும் வேணாம், உங்க கருத்தை நீங்க சொன்னீங்க, என்னோட பதிலை நான் கொடுத்தேன், அவ்வளவே! :))))))))))))))))))))

    ReplyDelete
  20. மேடம்,

    // நீங்களும் தப்பாவே புரிஞ்சுட்டு இருக்கீங்க, என்னவோ போங்க, இந்த மாதிரிப் புரிய வைக்கவே நான் முழிக்கிறதைப் பார்த்தாலே நான் எவ்வளவு திறமைசாலின்னு புரியுது,//

    அதே அதே தான் நான் சொல்ல விழைவதும். இந்த ஒரு விஷயம் மட்டும் "ஓதிமுடியாதென்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே" சமாச்சாரம்.

    உங்களுடைய இந்தப் பதிவும் சரி, 'ஆதலினால் . . .' பதிவும் சரி, அற்புதமான வாழ்வியல் சங்கதிகள் உள்ள சிறப்புப் பதிவுகள். தனிப்பட்ட முறையில் சொல்வதென்றால் கொச்சைப்படுத்தப்பட்டு விட்ட / கேவல தினமாக்கப்பட்டு விட்ட காதலர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட வேண்டிய பதிவுகளே அல்ல இவை.

    நல்ல இரண்டு வீணை செய்து அவற்றை நலங்கெடப் புழுதியில் எறிவது போன்ற காரியத்தைச் செய்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.

    // அதான் உங்க பின்னூட்டத்திலே பின்னாலே, "வஞ்சப் புகழ்ச்சி அணி"யாலே நம்மைப் பாராட்டி இருக்கீங்கனும் புரியுது! :)))))))))))))) //

    சேச்சே! உங்களையா? கவித்துவமான கடிதம் பற்றி எழுதி இருக்கீங்களே; அது தூண்டிய சிந்தனையில் என் அப்பாவின் கடிதங்களை என் அம்மா எப்படிப் போற்றிப் பாதுகாத்து ஒளித்து வைத்துப் படித்தார்கள்; அவற்றையே என் அப்பா பல ஆண்டுகள் கழித்து எப்படிப் படித்தார்கள் என்கிற அருமையான காட்சிகளைப் பின்னொருநாள் பதிவிடவே எண்ணியுள்ளேன் - உங்களுக்கு நன்றியுடன்.

    //ஆனால் ஒண்ணு, உங்க "புல்லாகிப் பூண்டாகி" விமரிசனத்துக்குப் பதில் ஒண்ணு தயார் செய்துட்டு இருக்கேன், அதுக்குக் கொஞ்சம் ஹோம்வொர்க் தேவைப்படுது, அதான் தாமதம்//.

    ஐயோ இன்னுமா?

    ReplyDelete
  21. காதல் என உலகத்தவர் சொல்லும் விஷயம் என்னை பொருத்தவரை நான்சென்ஸ் என்னும் ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் தான்!!!

    ReplyDelete
  22. /அற்புதமான வாழ்வியல் சங்கதிகள் உள்ள சிறப்புப் பதிவுகள். தனிப்பட்ட முறையில் சொல்வதென்றால் கொச்சைப்படுத்தப்பட்டு விட்ட கேவல தினமாக்கப்பட்டு விட்ட காதலர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட வேண்டிய பதிவுகளே அல்ல இவை. /நல்ல இரண்டு வீணை செய்து அவற்றை நலங்கெடப் புழுதியில் எறிவது போன்ற காரியத்தைச் செய்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.
    //
    நிஜமாவா சொல்றீங்க?
    இந்த "காதலர்" தின கருத்தோட ஒத்து போகிறோமோ இலையோ ஊடகங்கள் எல்லாவற்றிலும் அந்தப்பக்கம் கவனம் இருக்கும் இந்த சமயத்தைவிட இன்னொரு பொருத்தமான சமயம் உண்டா என்ன?
    எவ்வளவு வலைப்பதிவர்கள் இதைப்பற்றி இந்த சமயத்தில் எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

    ReplyDelete
  23. //@திவா, பிழைச்சேன், இதுக்கு விளக்கெண்ணெய் இல்லை!//

    இருந்தது, இருக்கு. நான்தான் சொல்லலை.

    உணர்ச்சி பூர்வமான சமாசாரங்கலில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது என்று நினைத்தேன்.

    ReplyDelete
  24. கீதாக்கா,
    பதிவை படித்து முடித்தும் அதன் தாக்கம் விலகவில்லை,
    சராசரி பெண்ணின் எதிர்ப்பார்ப்பையும்,
    'காதலை'/அன்பை அதிகம் வார்த்தைகளால் வெளிப்படுத்த தெரியாத ஆண்களின்..
    உள்ளான,
    உண்மையான,
    உயர்வான காதலையும் உணரவைச்சுட்டீங்க!

    ReplyDelete
  25. \\அப்பாவுடன் விளையாடுவோம். விளையாட்டில் ஏமாற்றினால் சண்டை போடுவோம். இங்கே அந்த மாதிரி வெளிப்படையாக எதுவும் கிடையாது. ஆகவே என் கணவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா என்னவென்று எனக்குப் புரியவில்லை. \\

    அப்பாவோடு தன் கணவனை ஒப்பிட்டுப் பார்ப்பது பெண்ணின் இயல்பு ,இல்லியா கீதாக்கா?

    ரொம்ப தெளிவா, அழகா எழுதியிருக்கிறீங்க!

    ReplyDelete
  26. சூப்பர் பின்னோட்டத்தில் முழ்கியிருப்பீங்க. நம்ம வந்தது தெரியாவாப் போகிறது.
    இது ஏற்கனவே வந்த பதிவோ அதற்குக்கூட பின்னுட்டம் போட்டதாக நினவு.

    ReplyDelete
  27. //திரு திராச அவர்கள், "அன்பு, காதல் எல்லாம் "நல்லி"கடை ஷோரூமில் வைக்கும் பொருள் அல்ல" என்ற தொனியில் சொல்லி இருப்பார்.//

    க்ர்ர்ர்ர்ர், சார், இது தான் நான் உங்களுக்குச் சொல்லும் பதில், அத்தோடு பதிவை நீங்க படிச்சிருக்கும் லட்சணமும் புரியுது, அம்பி மாதிரித் தலைப்பைப் பார்த்துட்டுப் போட்டீங்களோ? :P :P :P

    ReplyDelete
  28. @அபி அப்பா, வேணாம், அப்புறம் நீங்க காதலர் தினச் சிறப்புக் கவிதையால் நம்ம மூத்த தொண்டர் "அதியமானை" மயக்கம் அடைய வச்சது பத்தி எழுதறாப்பலே இருக்கும், பார்த்துக்குங்க! :P

    ReplyDelete
  29. @ரத்னேஷ்,
    @திவா, நன்றி, ஆரோக்கியமான விவாதத்துக்கு,

    //சமாசாரங்கலில்//
    திவா, விளக்கெண்ணெய் கொடுத்தாச்சே! :P

    ReplyDelete
  30. //அப்பாவோடு தன் கணவனை ஒப்பிட்டுப் பார்ப்பது பெண்ணின் இயல்பு ,இல்லியா கீதாக்கா?//

    ம்ம்ம்ம்., திவ்யா, அப்படியா சொல்றீங்க? ஆனால் நான் இங்கே சொல்ல நினைச்சது என்னமோ, என் புக்ககத்தில், அண்ணன், தங்கை, அப்பா, பெண் இயல்பாய்ப் பேசிக்கிறது கம்மினு சொல்லணும்னு தான் நினைச்சேன். எங்க குடும்பத்திலே மருமகள் கூட மாமனாரோட சரியா உட்கார்ந்து பேசுவாங்க, இன்னும் சொல்லப் போனால் என் மாமாவின் மனைவிகள் எல்லாருமே ரொம்பப் பெரியவங்க, எல்லாருமே எங்க தாத்தா கிட்டே சகஜமாப் பேசுவாங்க. அதை வச்சுச் சொன்னேன். இப்படியும் ஒரு கோணம் இருக்குனு புரிய வச்சதுக்கு நன்றிம்மா. இதையும் மனதில் வச்சுக்கறேன். :)))))))

    ReplyDelete
  31. //சமாசாரங்கலில்//
    திவா, விளக்கெண்ணெய் கொடுத்தாச்சே! :P

    இது கொஞ்சம் அக்கிரமமா இல்ல?
    சாட் ல என் தப்பை ஒத்துக்கிட்ட பிறகும்?

    அது சரி பதிவுல தப்பு இன்னும் இருக்கே?
    தப்பாக இன்னும் ஒண்ணு கூட இருக்கு.
    கண்டு பிடிங்க பாக்கலாம்!

    ReplyDelete
  32. சில ஆண்களுக்கு அவர்கள் அன்பை வெளிப்படுத்த தெரியாது ஆனால் அன்பு இல்லாமல் இருக்காது, அவர்களின் அன்புக்கு ஈடாக வெளிப்படையாக ஒரு மணிக்கு நாலு முறை ஐ லவ் யூ சொல்லும் ஆண்களிடம் கூட கிடைக்காது! ஆனால் என்ன பெண்களுக்கு அந்த அன்பு வெளிப்படையாக இருந்தால் சந்தோசபடுவார்கள்.

    மிகவும் அருமையாக இருந்தது பதிவு!!!

    ReplyDelete
  33. கீதா..லேட்டா வந்துட்டேன்..நல்ல பதிவு கீதா..

    ReplyDelete