
இப்போது சொல்லப் போகும் விஷயங்கள் லட்சுமணன் கூறுவதாய் வால்மீகி ராமாயணத்தில் வருவது.லட்சுமணன் தர்மத்தை நிந்தித்துப் பேசுவான் இந்த இடத்தில். இந்த இடத்தை முக்கியமாய்க் குறிப்பிடுவதற்குக் காரணமே மற்ற ராமாயணங்களில் இவ்விதம் வரவில்லை என்பதே! என்னதான் மனிதரில் உயர்ந்தவர் என்றாலும் ராமரும் சரி, லட்சுமணனும் சரி, சாதாரண மனிதனின் ஆசாபாசங்களுக்கு உட்பட்டே, அந்த நியதிகளுக்குக் கட்டுப்பட்டே நடந்திருக்கின்றனர். நான் குறிப்புகள் எடுக்கும்போதே இவ்விதமான மேற்கோள்கள் வரும் இடத்தை முக்கியமாய் எடுத்துக் கொண்டேன். ஏனெனில் ராமர் ஒரு மனிதன் தான், என்பதையும், அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் ஒரு அவதாரம் என்று நினைக்காதபடிக்குமே வால்மீகி அவர்கள் பேசுவதை எல்லாம் குறிப்பிட்டுள்ளார். மனச்சோர்வு என்பது நமக்கு இன்றளவும் எதற்கானும் ஏற்பட்டே தீர்கின்றது. அந்தச் சோர்வு ஏற்பட்டால் உடனே தர்மத்தின் பாதையில் இருந்து பிறழாமல், மீண்டும் நமது கடமையிலேயே மனதைச் செலுத்தி, செய்யவேண்டியவற்றை ஒழுங்கு முறையோடு செய்யவேண்டும் என்பதை உணர்த்தவே இது இங்கு குறிப்பிடப் படுகின்றது, என என்னுடைய கருத்து.
சாதாரண மனிதர்கள் ஆன நமக்கெல்லாம் இன்றிருக்கும் அதே ஆசா, பாசங்களும், கோப, தாபங்களும், தர்ம நிந்தனையும், பெரியோர்களை மதித்து நடந்தாலும் அதன் விளைவாய் ஏற்பட்ட தனிப்பட்ட நஷ்டத்தைக் குறித்து வருந்துவதும், ராமரும் ,சீதையும், லட்சுமணனும் ஆங்காங்கே எடுத்துச் சொல்லுவதாகவே வால்மீகி கூறி உள்ளார். அதன்படியே நாம் பார்க்கவேண்டும். சீதை தான் சிறைப்பட்டதும், கைகேயியை நினைத்துப் புலம்புவதும் சரி, சீதையை இழந்ததும் ராமர் புலம்பியதும் சரி, இந்தத் தனிப்பட்ட மனிதர்களின் சாமான்யப் போக்கைச் சுட்டுவதே அல்லாமல், ராமரை ஒரு அவதாரமாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் தப்பாகவே தெரியும். ஆனால் வால்மீகிக்கு அந்தக் கட்டாயம் ஏதும் இல்லை. ஆகவே தான் பார்த்தபடி, தன் கோணத்திலேயே சொல்லி உள்ளார். இந்தக் குறிப்பிட்ட வித்தியாசங்கள் தெரியும்படியாகவே நான் எழுதி வருகின்றேன் கூடியவரையிலும். இனி சீதை இறந்துவிட்டாள் என்று கருதிய ராமர் மயங்கி விழுந்துவிட்டதைக் கண்ட லட்சுமணன் கூறுவது:
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

"தர்மம் எங்கே இருக்கின்றது??? கண்ணுக்குத் தெரியுமா?? கண்ணுக்குத் தெரியவில்லை எனில் இல்லை என்று தானே பொருள்??? தர்மம் என்று ஒன்று இருந்திருந்தால் இம்மாதிரியான துக்கம் உங்களுக்கு எப்படி நேரிட முடியும்?? ஆஹா, இதெல்லாம் எவ்வாறு ஆரம்பித்தது?? நம் தந்தை அன்றோ ஆரம்பித்து வைத்தார்? உங்களுக்குப் பட்டாபிஷேஹம் என்று சொல்லிவிட்டு, உங்களிடமும் அது பற்றிச் சொல்லிவிட்டுப் பின்னர் அதை மறுத்து வாக்குத் தவறியதால் வந்தது அன்றோ இத்தனையும்??? தர்மம் பெரியது என நீங்கள் வாதிட்டாலும், குடிமக்களுக்கு நீங்களே அரசனாவீர்கள் என வாக்குக் கொடுத்தீர்களே? அதிலிருந்து தவறியவர் ஆக மாட்டீர்களா?? தந்தையை நீங்கள் அடக்கி இருக்க வேண்டுமோ?? தவறி விட்டீர்களோ?? தந்தையை அடக்காததால் குடிமக்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்னும் தர்மத்தில் இருந்து நீங்கள் தவறியவர் ஆகிவிட்டீர்களோ? இப்படி எல்லாம் தியாகம் செய்து நீங்கள் கண்ட பலன் தான் என்ன? மனைவியை ஒரு அரக்கனிடம் பறி கொடுத்துவிட்டு, அவள் இருக்கின்றாளா, இறந்துவிட்டாளா என்பதே தெரியாமல், இப்படி மயங்கி விழுந்து கிடப்பதைத் தவிர நீங்கள் அடைந்த நன்மைதான் என்ன??"
"இருக்கட்டும், இளவரசே, நான் இந்த இந்திரஜித்தைச் சும்மா விடப் போவதில்லை. என் பலம் முழுதும் பிரயோகித்து அவனைக் கொல்வேன், அழிப்பேன் அடியோடு, இன்று என் போர்த்திறனை நீங்கள் காண்பீர்கள், எழுங்கள், உங்களை மன மகிழ்ச்சி அடையச் செய்வதே என் நோக்கம், உங்கள் திருப்தியே என் திருப்தி, அந்த ராவணனையும், அவன் குடிமக்களையும், படை வீரர்களையும் அழித்து நாசம் செய்கின்றேன். சீதைக்கு நேர்ந்த கதியை மனதில் வைத்துக் கொண்டு அவர்களை பழி வாங்குவேன்." என்று பலவாறு லட்சுமணன் சொல்கின்றான். ஏற்கெனவே இந்திரஜித் செய்த அட்டகாசத்தால் கதி கலங்கிக் கிடந்த வானரப் படைகள் இப்போது ராமரும் மயங்கியதும் சிதறிப் போகின்றது. விபீஷணன் பெரும் முயற்சி எடுத்து படைகளை ஒன்று திரட்டுகின்றான். அப்போது தான் அவனுக்குச் சீதையை இந்திரஜித் கொன்றுவிட்டதாய்ச் செய்தி வந்தே ராமர் கீழே விழுந்துவிட்டார் என்று தெரிய வருகின்றது.
விபீஷணன் பெருங்குரலெடுத்து நகைக்கின்றான். மேலும் சொல்கின்றான்:"ராவணனை நான் நன்கு அறிவேன். கடல் அலைகள் வற்றிவிட்டது என்றாலோ, சூரியன் மேற்கே உதிக்கின்றது என்றாலோ நம்பலாம். சீதையை ராவணனோ, இந்திரஜித்தோ கொன்றுவிட்டார்கள் என்று நம்புவது இயலாத காரியம். ராவணன் சீதையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே சீதையின் உயிர் பற்றிய கவலையோ, சிந்தனையோ கொள்ள வேண்டாம். மாயையில் வல்லவன் ஆன இந்திரஜித், இம்மாதிரி உங்களைக் கலங்க அடித்து வெற்றி பெற எண்ணுகின்றான். அவனால் உண்டாக்கப் பட்ட மாய சீதையாகத் தான் அவள் இருக்க முடியும். அதுவும் அவன் ஏன் செய்திருக்கின்றான் என்றால், இப்போது அவன் ஒரு குறிப்பிட்ட யாகம் செய்ய "நிகும்பிலம்" என்னும் இடம் சென்றிருக்கின்றான். அங்கே போய் அந்த யாகத்தில் நாம் இடையூறு விளைவித்து விடாமல் இருக்கவே இம்மாதிரியான குழப்பத்தை உண்டு பண்ணி நம்மை வேதனையில் ஆழ்த்தி இருக்கக் கூடும். இந்த யாகத்தை அவன் முடித்து விட்டானெனில் அவனை நம்மால் வெல்ல முடியாது. அவனை யாகத்தை முடிக்கவிடக் கூடாது. நாம் இப்போது அங்கே தான் செல்லவேண்டும்." என்று விபீஷணன் சொல்கின்றான். அனைவரும் யாகம் நடக்கும் இடம் நோக்கிச் செல்கின்றனர்.
No comments:
Post a Comment