
இதன் பின்னரே சீதை போர்க்களம் வந்து ராம, லட்சுமணர்களும், வானரப் படைகளும் மயங்கி வீழ்ந்திருப்பது கண்டு துயரம் மிகக் கொண்டதாயும் திரிசடை என்னும் அரக்கி அவளைத் தேற்றியதாயும் கூறும் கம்பர், இதன் பின்னரே, விபீஷணன்,ராமன் ஆணையின் பேரில் ராமனுக்கு உணவு கொண்டு வரச் சென்றவன் போர்க்களம் வந்து அனைவரும் கிடந்த நிலை கண்டு துயருற்றதாயும், அனுமனைத் தேடிக் கண்டுபிடித்து மயக்கம் தெளிவித்ததாயும் கூறுகின்றார்.
மருத்துமலைப் படலம்: பாடல் எண் 2655
"கண்டு தன் கண்களூடு மழை எனக் கலுழி கால
உண்டு உயிர் என்பது உன்னி உடற் கணை ஒன்று ஒன்று ஆக
விண்ட நீர்ப்புண்ணின் நின்று மெல்லென விரைவின் வாங்கி
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினைக் குளிரச் செய்தான்."
இதன் பின்னர் ஜாம்பவானை அவர்கள் இருவரும் தேடிக் கண்டு பிடித்துச் சென்று அடைந்து யோசனை கேட்பதாயும் ஜாம்பவான் மருத்துமலைக்குச் சென்று மூலிகைகள் கொண்டு வரும்படியாக அனுமனை வேண்டுவதாயும் சொல்லுகின்றார்.
பாடல் எண் 2667
"எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும்
முழுதும் இவ்வுலகம் மூன்றும் நல் அற மூர்த்திதானும்
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தரக் கடிது போதி."
என்று அனுமனை மருத்து மலைக்குச் செல்லும் வழியையும் கூறி அனுப்பவதாய்க் கம்பர் கூறுகின்றார். மேலும் இங்கே மலையைப் பெயர்த்து எடுக்கும் அனுமனை மூலிகைகளைக் காக்கும் தேவதைகள் முதலில் தடுப்பதாயும் அனுமன் சொன்ன பதிலில் திருப்தியுற்று அனுமதி அளித்ததாயும் கம்பர் கூற, வால்மீகி அது பற்றி எதுவும் சொல்லவில்லை.
பாடல் எண் 2705, 76
"பாய்ந்தனன் பாய்தலோடும் அம்மலை பாதலத்துச்
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன கடுத்து வந்து
காய்ந்தது நீதான் யாவன் கருத்து என்கொல் சுழறுக என்ன
ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான்."
"கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றிப் பின் கெடாமல் எம்பால்
காட்டு என உரைத்து வாழ்த்திக் கரந்தன கமலக் கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின் நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அக்குன்றினை வயிரத் தோளால்."
இதன் பின்னரே ராவணன் தாம் ஜெயித்ததாய் எண்ணிக்களியாட்டங்களில் ஆழ்ந்ததும், பின்னர் உண்மை நிலை தெரிந்து மாயாசீதையை இந்திரஜித் கொல்வதாய்க் காட்டுவதும், நிகும்பலை யாகம் செய்ய மறைந்திருந்து செல்வதும் வருகின்றது. இப்போ இந்திரஜித் யாகம் செய்து கொண்டிருப்பான், நாமும் அங்கே சென்று பார்ப்போமா??? இனி வால்மீகி!
*************************************************************************************பெரும் துக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ராமரை விபீஷணன் தன் ஆறுதல் வார்த்தைகளால் தேற்றி இவை யாவும் இந்திரஜித்தின் மாயையே என விளக்குகின்றான். ராமருக்கோ முழுதும் மனம் சமாதானம் ஆகவில்லை. அவருடைய அப்போதைய மனநிலையில் விபீஷணன் சொன்னதை முழுதும் அவரால் ஏற்கவும் முடியவில்லை. எனினும் விபீஷணனை மீண்டும் சொல்லும்படி கேட்டுவிட்டு, அவன் சொன்னதை ஒருவாறு ஏற்று, லட்சுமணனை இந்திரஜித்துடன் போர் புரிய ஆயத்தம் செய்து கொள்ளுமாறு ஆணை இடுகின்றார். அவ்வாறே லட்சுமணனும் கிளம்புகின்றான். வானரர்களில் முக்கியமானவர்கள் ஆன அனுமன், ஜாம்பவான், அங்கதன் ஆகியோரும் பெரும்படையோடும், விபீஷணனோடும் லட்சுமணனைப் பின் தொடருகின்றனர். முதலில் நிகும்பிலம் சென்று இந்திரஜித்தின் யாகத்தைத் தடுக்க வேண்டும் என்று அங்கே செல்கின்றனர் அனைவரும். யாகத்தை முடித்துவிட்டால் பின்னர் இந்திரஜித்தை வெல்வது கடினம்.
லட்சுமணன் உடனடியாகக் கடும் தாக்குதலை நிகழ்த்தினான். அம்புகளினால் வானம் மூடப் பட்டது. சூரியனும் மறைந்து போனான், அந்த அம்புக் கூடாரத்தினால். அவ்வளவு அடர்த்தியாக அம்பு மழை பொழிந்தான் லட்சுமணன். நிலைகுலைந்துபோனது அரக்கர் படை எதிர்பாராத தாக்குதலினால். அரக்கர் படையினர் விளைவித்த ஓலக் குரலைக் கேட்டு நிதானமிழந்த இந்திரஜித் யாகம் செய்வதைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியே வந்தான். அரக்கர் படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்த அனுமன் கண்களில் பட அனுமனைத் தாக்கப் போனான். அப்போது விபீஷணன் லட்சுமணனிடம் இந்திரஜித்தைத் தாக்கும்படிச் சொல்கின்றான். யாகம் செய்யும் இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றினைச் சுட்டிக் காட்டிய விபீஷணன், "இந்திரஜித் இந்த ஆலமரத்தினடியில் தான் யாகத்தை முடிப்பான். இந்த இடத்தில் தான் மறைந்திருந்து போருக்கும் கிளம்புவான். ஆகவே அதற்கு முன்னாலேயே அவனை அழித்துவிடு." என்று லட்சுமணனிடம் சொல்ல, லட்சுமணன் இந்திரஜித்தைப் போருக்கு அழைக்கின்றான். இந்திரஜித் அவனை லட்சியம் செய்யாமல், விபீஷணனைத் தூஷித்துப் பேசுகின்றான்.
தன்னுடைய வயதுக்கும், உறவுக்கும் மரியாதை கொடுக்காமல் இந்திரஜித் பேசியதைக் கேட்ட விபீஷணன் அவனைப் பழித்தும், இழித்தும் பலவாறு பேசி தர்மத்தின் பால் செல்லும் தனக்கு எப்போதும் ஜெயமே கிட்டும் என்றும், தர்மத்தை கடைப்பிடிக்காத ராவணனுக்கும், அவன் குடும்பத்தினருக்கும் அழிவே கிட்டும் என்று சொல்லி இந்திரஜித் இன்று தப்ப முடியாது எனவும் சொல்லுகின்றான். ஆத்திரம் கொண்டான் இந்திரஜித். லட்சுமணனைப் பார்த்து, நீயும், உன் அண்ணனும் என்னுடைய ஆயுதங்களால் மயங்கி விழுந்து கிடந்ததை மறந்தாயோ? உன்னைக் கொன்று விடுவேன், உன் சகோதரன் தன் இளைய சகோதரன் ஆன உன்னை இழந்து தவிக்கப் போகின்றான்." என்று கூறிவிட்டுத் தன் அம்புகளால் மழை போலப் பொழிய ஆரம்பித்தான். லட்சுமணன் நடத்திய பதில் தாக்குதல்களினால் விண்ணே மறையும் அளவுக்கு அம்புகள் சூழ்ந்து மீண்டும் வானம் இருண்டது. லட்சுமணன் இந்திரஜித்தின் தேரோட்டியையும், தேர்க்குதிரைகளையும் வெட்டி வீழ்த்தினான். அப்படியும் இந்திரஜித் வீரத்துடனும், சாகசத்துடனும் தேரைத் தானே ஓட்டிக் கொண்டு வீரமாய்ப் போர் புரிந்தான். வானரர்களும், விபீஷணனும், லட்சுமணனும் அவன் சாகசத்தைக் கண்டு வியந்தனர். இருள் மிகச் சூழ்ந்ததால் இந்திரஜித் மறைந்திருந்து தாக்கும்போது அரக்கர்களைக் கொன்றுவிடுவோமே என எண்ணி, நகருக்குள் சென்று மற்றொரு தேரைக் கொண்டு வருகின்றான்.

இங்கே ஓர் ராமாயண வேள்வியே நடித்தியிருக்கிறீர்கள். அருமை. இப்போது முதல் பகுதி படித்தேன். ஆரம்பமே அநேக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ஷிய சர்த்தாரின் ராமாயணத்தை நானும் படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ராமாயணங்களில் அதுவும் ஒன்று. இப்போது ரமேஷ் மேனன் எழுதிய ராமாயணத்தை படித்து கொண்டிருக்கிறேன். அதை முடித்தவுடன் தங்கள் ராமயாணம் தான். இனிமேல் அந்தந்த பகுதிகளிலேயே என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். ராமாயணம் படிக்கும் ஒவ்வொரு முறையும் நான் மேன்மை உறுவதை உணர்ந்திருக்கிறேன். தங்கள் ராமாயணம் என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் ஐயமில்லை. நன்றி.
ReplyDelete