
தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதை சொல்லியதாவது:" லட்சுமணா, பாவியாகிய நான் மிகுந்த பாவம் செய்ததாலேயே இத்தகையதொரு தண்டனையை அனுபவிக்கின்றேன். என் மாமியார்கள் அனைவரிடமும், நான் அவர்களின் நலனைத் தவிர வேறொன்றையும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கவும். மன்னரிடம், நான் அவரைத் தவிர வேறொருவரை மனதிலும் நினைத்தவள் இல்லை என்பது அவருக்கே தெரியும் என்பதை அவருக்கு நினைவுபடுத்தவும். மேலும் மன்னரிடம் நான் சொன்னதாய் இதைச் சொல்வாய் லட்சுமணா! "அரசே! மக்களின் அவதூறுப் பேச்சைத் தாங்க முடியாமல் நீங்கள் என்னைத் துறந்திருக்கின்றீர்கள். இது அரசனின் கடமை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் எனக்கு உங்களைத் தவிர, வேறு கதி இல்லை அரசே! ஒரு மனைவியாகவும், உங்கள் பட்டமகிஷியாகவும், உங்களுக்கு நேரும், அவதூறிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் மாபெரும் கடமை எனக்கும் உள்ளது. ஆகையால் இந்த அவதூறு உங்களைப் பாதிக்கும் என்று நீங்கள் கருதுவதால் நானும் உங்களை விட்டு விலகியே இருக்கின்றேன். உங்கள் மனதில் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்திருக்கின்றீர்களோ, அத்தகையதொரு இடம் குடிமக்களுக்கும் நீங்கள் கொடுத்து வருகின்றீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
"என்னுடைய இந்த உடலும், உள்ளமும், நீங்கள் அருகாமையில் இல்லாததால் அடையப் போகும்,துன்பங்களைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அரசே, மக்களுடைய இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள், அதை அவர்கள் உணரும் வகையில் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன். திருமணம் ஆன ஒரு பெண்ணுக்குக் கணவனே, குரு, தெய்வம் அனைத்தும் என்றாகிவிடுகின்றது. ஆகவே நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டு தங்கள் கட்டளைப்படி நடப்பேன் என உறுதி அளிக்கின்றேன்." லட்சுமணா, இதை நீ நான் சொன்னதாய் ராமரிடம் கூறுவாயாக!"
"மேலும் லட்சுமணா, இதோ, என்னுடைய இந்த வயிற்றைப் பார், கர்ப்பிணி ஆகிவிட்ட நிலையில் தான், இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகின்றது என்னும் நிலைமையில் தான் நீ என்னைக் காட்டில் கொண்டு வந்து விட்டிருக்கின்றாய் என்பதையும் சற்றும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்வாய்!" என்று சொல்லிக் கொண்டே, சீதை தன் கர்ப்ப வயிற்றை லட்சுமணனுக்குத் தொட்டுக் காட்டினாள்.
லட்சுமணன் கதறினான். தலையைத் தரையில் மோதிக் கொண்டு அழுதான். " என் தாயே, நான் என்ன பாவம் செய்தேன்?? தங்கள் திருவடிகள் தவிர, மற்றவற்றைக் காணாத என் கண்கள், இன்று இந்தக் காட்சியைக் காணும்படி நேர்ந்ததா?? இதுவும் நான் செய்த பாவம் தான்! என்னால் இதைத் தாங்க முடியவில்லையே!" என்று கதறினான் லட்சுமணன். பின்னர் சீதையை நமஸ்கரித்து வலம், வந்து மீண்டும் படகில் ஏறிக் கங்கையைக் கடந்தான். அக்கரையில் சுமந்திரம் ரதத்துடன் காத்திருந்தார். இக்கரையில் நிர்க்கதியான சீதை செய்வதறியாது திகைத்து நின்றாள். அவள் படகைப் பார்த்த வண்ணமே நிற்க அக்கரையை அடைந்த லட்சுமணன், தேரில் ஏறிக் கொள்ளுவதும், தேர் கிளம்புவதும் கண்களில் பட்டது. மனதில் வெறுமை சூழ்ந்து கொள்ள சீதை துக்கம் தாங்க முடியாமல் பெரியதாக அலறி அழுதாள். காட்டில் கூவிக் கொண்டிருந்த குயில்களும், ஆடிக் கொண்டிருந்த மயில்களும், விளையாடிக் கொண்டிருந்த மற்ற விலங்கினங்களும் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு சீதை அழுவதைக் கவனித்ததோ என்று எண்ணும்படிக் காட்டில் சீதையின் அழுகுரல் தவிர வேறொன்றும் ஒலிக்கவில்லை.
அம்மா வணக்கம்.
ReplyDeleteமிகச் சமீபத்திய வலை உலாவி நான்.
உங்கள் ராமாயணம் மிக அருமை.ஒரு வார காலமாக ஆரம்பித்து 80-ம் பகுதி வரை படித்துவிட்டேன். சுவாரஸ்யமான நடை. நீங்கள் முழுவதும் பூர்த்தி செய்யும் போது அடியேனின் சிறு பங்களிப்பை செய்வேன் ராமருக்கு அணில் போல. அதுவரை வந்தனங்களும் வாழ்த்துக்களும்.
அன்புடன்... ஞிங்
I happened to read this and believe me.. I just couldn't stop reading the rest of the 79 posts.
ReplyDeleteI thoroughly enjoyed all the snippets from kamba ramayanam though I felt in some cases, you could've explained the meaning of it...
Looking forward to the next part.
புது வரவு ஞிங், புதிய உஷா??? இருவருக்கும் நன்றி.
ReplyDeleteஉஷா,
ReplyDeleteசொல்லி இருக்கலாம் தான், ஏற்கெனவே பதிவுகள் மிக மிக நீளம் என்ற புகார் ஒரு காரணம், தவிர, கம்பனை அறியாதோர் மிகச் சிலரே என்ற மற்றொரு பெரிய காரணம், அதான், அதிகம் விளக்கவில்லை.