

அக்னியில் இறங்கிய சீதையைப் பார்த்து அனைவரும் அலறிக் கதற ராமர் கண்களில் குளமாய்க் கண்ணீர் பெருகியது. ரிஷிகளும், தேவர்களும், கந்தர்வர்களும் பார்த்துப் பதறிக் கொண்டிருந்தனர். அப்போது ராமரின் எதிரில் எமன், குபேரன், பித்ரு தேவர்கள், இந்திரன், வருணன், பிரம்மா போன்றோர் பரமசிவனுடன் அங்கே தோன்றினார்கள். ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள் அவர்கள். "ராமா, நீ யார் என்பதை மறந்துவிட்டாயோ??? அனைத்துக்கும் நீயே அதிபதி! நீ எவ்வாறு சீதை அக்னியில் பிரவேசிப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டு இருக்கின்றாய்?? ஆரம்பமும், நீயே! நடுவிலும் நீயே! முடிவிலும் நீயே! அனைத்தும் அறிந்தவன் நீ! காரண, காரியங்களை அறிந்தவன் நீ! நீயே ஒரு சாமானிய மனிதன் போல் இப்படி சீதையை அலட்சியமாய் நடத்தலாமா?" என்று கேட்க, ராமரோ அவர்களைப் பார்த்துச் சற்றே குழப்பத்துடன், "நான் தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமன் என்பதாய்த் தான் என்னை அறிந்திருக்கின்றேன். படைக்கும் கடவுளான பிரம்மனே! உண்மையில் நான் யார்? எங்கிருந்து, எதன் பொருட்டு வந்தேன்?" என்று கேட்கின்றார்.

பிரம்மா சொல்கின்றார். "ராமா, நீயே ஆரம்பம், நீயே முடிவு, நீயே நடுவில் இருப்பவனும் ஆவாய்! படைப்பவனும் நீயே, காப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே! இயக்கமும் நீயே! இயங்காமையும் உன்னாலேயே! அகில உலகமும் உன்னாலேயே இயங்குகின்றது. கையில் சங்கு, சக்ரத்தை ஏந்திய மகாவிஷ்ணு நீயே! அனைத்து உலகத்து மாந்தர்களின் விதியும் நீயே! நீயே கண்ணன், நீயே பலராமன், நீயே கார்த்திகேயன் என்னும் ஸ்கந்தன்! ஆற்றலும் நீயே, அடங்குவதும் உன்னாலேயே! வேதங்கள் நீயே! "ஓ"ங்கார சொரூபமும் நீயே! அனைவரையும் பாதுகாப்பவனும் நீயே!அழிப்பவனும் நீயே! நீ இல்லாத இடமே இல்லை. அனைத்து உயிர்களிலும் நீயே நிறைந்திருக்கின்றாய்! நீ எப்போது, எங்கே, என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என யாராலும் அறிய முடியாதது, இந்த பூமியிலும், மண்ணிலும், செடி, கொடிகளிலும், மலரும் பூக்களிலும், மலராத மொட்டுக்களிலும், விண்ணிலும், காற்றிலும், மேகங்களிலும், இடி, மின்னலிலும், மழை பொழிவதிலும், மலைகளிலும், சமுத்திரங்களின் நீரிலும், ஆற்றுப் பெருக்கிலும், மிருகங்களின் உயிர்களிலும், மனித உயிர்களிலும், இன்னும் தேவாசுர உயிர்களிலும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் நீயே! அனைத்துக்கும் ஆதாரம் நீயே! சூரிய, சந்திரர்கள் உன் கண்கள். நீ உன் கண்ணை மூடினால் இரவு. திறந்தால் பகல். உன் கோபம் நெருப்பை ஒத்தது என்றால் உன் சாந்தமே சந்திரன் ஆவான். உன் பொறுமை, உறுதி பூமி எனின் உன் இதயம் பிரம்மாவாகிய நான் ஆவேன், உன் நாவில் சரஸ்வதி இருக்கின்றாள். நீயே மூவுலகையும் ஆளும் அந்த மகாவிஷ்ணு ஆவாய்! சீதையே உன்னுடைய தேவி ஆன மகாலட்சுமி ஆவாள்." என்று சொல்கின்றார் பிரம்மா. வால்மீகி ராமாயணத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டம், பிரம்மா ராமரைப் பார்த்துச் சொல்லுவது ஒரு ஸ்லோகமாகவே இருக்கின்றது. இதைப் பாராயணம் செய்பவர்கள் இருக்கின்றனர். கூடிய சீக்கிரம் பாராயணம் செய்ய வசதியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து போட முயலுகின்றேன்.

No comments:
Post a Comment