
இந்திரஜித் மாண்டான். ராவணனின் அன்பு மகனும், தேவேந்திரனையே வென்றவனும், எவராலும் வெல்ல முடியாத யாகங்களைச் செய்து, தன்னை வெற்றி கொள்ள அனைவரையும் திணற அடித்தவனும் ஆன இந்திரஜித் மாண்டான். உண்மையா?? இது உண்மையா?? ராவணனுக்குத் துக்கமும், கோபமும் அடக்க முடியவில்லை. வானரர்களின் ஜெயகோஷம் கேட்கின்றது. அரக்கர்களின் அழுகுரல் கேட்கின்றது. ராவணனின் கோபமும், துவேஷமும், பழிவாங்கும் வெறியும் அதிகம் ஆனது. இயல்பிலேயே எவராலும் அடக்க முடியாத கோபம் கொண்டவன் ஆன ராவணனின் கோபம் பல்மடங்கு பல்கிப் பெருகியது. தவித்தான், திணறினான். துக்கத்தை அடக்க முடியவில்லை. பட்டத்து இளவரசனைப் பறி கொடுத்தேனே எனக் கதறினான். கல்நெஞ்சுக் காரன் என்றாலும் புத்திரசோகம் ஆட்டிப் படைத்தது, அவனையும். அவனுடைய கோபத்தையும், துக்கத்தையும் கண்டு அரக்கர் கூட்டம் அவனருகே வரப் பயந்து ஓடோடி ஒளிந்தனர். கண்ணீர் பெருகி ஓட அமர்ந்திருந்த அவனைக் கண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு உறவினர் கூட இல்லாத நிலைமை ஏற்பட்டதை நினைத்து அவன் துக்கம் அதிகரிக்க, கண்களிலிருந்து நீர் அருவி போல் பொங்கியது.
"எத்தனை தவங்கள் செய்து, எவ்வளவு கடுமையான விரதங்கள் செய்து, பிரம்மனிடமிருந்து வரங்களைப் பெற்றேன். அத்தகைய என்னையும் ஒருவன் வெல்ல முடியுமோ??? பிரம்மாவால் எனக்களிக்கப் பட்ட ஒளி வீசும் கவசத்தையும் பிளக்க ஒருவனால் முடியுமோ?? ராமனுக்கும், லட்சுமணனுக்கும் ஒரு முடிவு கட்டுகின்றேன். அதற்கு முன்னால், ஓ, சீதா, சீதா, உன்னால் அன்றோ நான் என் அருமை மகனை இழந்தேன்? ஒரு மாய சீதையை நீ என நம்பவைத்தான் அல்லவா என் மகன்? இரு, நான் இதோ வந்து உண்மையாகவே உன்னைக் கொன்று விடுகின்றேன். பின்னர் அந்த ராமன் என்ன செய்வான் என்று பார்ப்போம்." ராவணன் நினைத்த் உடனேயே அசோகவனம் நோக்கித் தன் வாளை எடுத்துக் கொண்டு சீதையை அழித்துவிடும் நோக்கத்தோடு கிளம்பினான். பட்டமகிஷியான மண்டோதரியும் செய்வதறியாமல் அவனைத் தொடர்ந்தாள். உடன் மற்ற அமைச்சர்கள் தொடர்ந்தனர். சற்றே தயக்கத்துடன் அமைச்சர்கள் ராவணனைத் தடுக்க முயன்றனர். எனினும் ராவணன் அவர்களை லட்சியம் செய்யவில்லை.

அரக்கர்களும், அரக்கிகளும் கலங்கினர், துடித்தனர், துவண்டனர், பதறினர், புலம்பினர். இனி இலங்கைக்கு அழிவு காலம் தான் எனக் கதறினார்கள். ராவணன் அழிந்தானே என்று புலம்பினார்கள். அவர்களின் ஓலக் குரல் ராவணனின் காதுகளையும் எட்டியது. ஏற்கெனவே அருமைத் தம்பி, மகன்கள், அனைத்துக்கும் மேல் உயிரினும் மேலான இந்திரஜித் ஆகியோரைப் பறி கொடுத்துப் பரிதவித்துக் கொண்டிருந்த ராவணன், அருகில் இருந்த வானரர்களைப் பார்த்து, "என்னுடைய படைகளை அணிவகுத்து நிற்கச் சொல்லுங்கள். நான் யுத்தம் செய்யத் தயார் ஆகின்றேன். வானரர்களையும், அந்த ராமன், லட்சுமணனையும் கொன்று நான் கழுகுகளுக்கும், நரிகளுக்கும் உணவாக்குகின்றேன். என்னுடைய ரதம் தயாராகட்டும், என் அருமை வில் எங்கே?? யுத்த களம் செல்ல என்னோடு வரச் சம்மதிக்கும் அனைவரும் தயாராகுங்கள்." என்று ஆணை இடுகின்றான்.

போர் ஆரம்பித்தது. வானரங்களும், அரக்கர்களும் ஒருவருக்கொருவர் மீண்டும் மோதிக் கொண்டனர். இம்முறை மிகக் கடுமையாகவும், மிக வேகத்தோடும் கடும் போர் நடந்தது. பல வானரங்கள் வீழ்த்தப் பட்டது போல் அரக்கர் தரப்பிலும் கடும் சேதம். அரக்கர் படைத் தலைவனான விரூபாக்ஷனும், அமைச்சன் ஆன மகாபார்சவனும் முறையே சுக்ரீவனாலும், அங்கதனாலும் கொல்லப் பட்டனர். ராவணன், ராமனையும், லட்சுமணனையும் பழி தீர்க்கும் எண்ணத்தோடு சபதம் பூண்டான். திக்கெங்கும் பேர் ஒலியைக் கிளப்பிய வண்ணம் ராவணனின் தேர் கிளம்பியது. ராமரை நோக்கி, அவர் இருக்கும் திசை நோக்கி விரைந்தது. அண்டசராசரமும் குலுங்கியது ராவணனின் தேரின் வேகத்தில். ராமர் மேல் தேரின் மீது இருந்த வண்ணம் அம்பு மழை பொழிந்தான் ராவணன். ராமர் பதிலுக்குத் தாக்க இருவரின் அம்புகளால் வானம் மூடிக் கொள்ள மீண்டும் இருள் சூழ்ந்தது. சம பலம் பொருந்திய இருவர், வேத விற்பன்னர்கள் ஆன இருவர், அஸ்திரப் பிரயோகம் தெரிந்த இருவர், போரில் வல்லவர்கள் ஆன இருவர், சிறப்பான ஆயுதங்களை வைத்திருந்த இருவர் சண்டை போடும்போது அதன் சிறப்பையோ, கடுமையையோ வர்ணிக்கவும் வேண்டுமா?

No comments:
Post a Comment