இப்போ அடுத்து நமஸ்கார ஸ்லோகங்கள்: இதைத் தினமும் காலை, மாலை இருவேளையும் கூடச் சொல்லலாம். நவராத்திரிக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டாம்.
1. யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஷப்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைத்து உயிர்களிடத்தும் விஷ்ணு மாயை உருவில் உறைந்திருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த யோக மாயா என்பவளே காலி, காளி எனப்படுவாள். மாரி என்றும் சொல்லப் படுவாள். கருமாரி என்பவளும் இவளே. கருவிலே அந்த ஆதிநாராயணன் குழந்தையாக தேவகியின் வயிற்றில் இருந்து வெளியே வந்தவன், மாறி, அல்லது மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு விஷ்ணுமாயா வந்து சேருகின்றாள். ஆகவே கருமாறி வந்ததால் கருமாரி என்று சொல்லலாமோ??? இவள் கம்சனின் பிடிக்கும் அகப்படாமல் தப்பித்துச் செல்கின்றாள். பெண் குழந்தையாகிய இவளைக் கொல்ல இரு கால்களையும் பிடித்துக் கொண்டு கம்சன் வாளை உருவுகின்றான். என்ன ஆச்சரியம்?? அதோ! தேவி! பூர்ண அலங்கார பூஷிதையாக கம்சனின் தோளுக்கு மேலே, மேலே, மேலே, மேலே தோன்றுகின்றாள் அன்றோ!! கம்சனின் வாழ்வு முடியப் போகின்றது என எச்சரிக்கையும் கொடுத்து, அவன் திருந்த ஒரு சந்தர்ப்பமும் கொடுக்கின்றாள் அல்லவா?? அந்தக் கருணைத் தேவிக்கு நமஸ்காரங்கள்.
2. யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன, காட்டு மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச்சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக இருக்கின்றாளோ அந்தத் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இந்த உலகம் இயங்க சக்தி தேவைப்படுகின்றது. விளக்கு எரியவும், மழை பொழியவும், காற்று வீசவும், வெயில் அடிக்கவும், நிழல் தோன்றவும் என அனைத்திற்கும் சக்தி தேவைப்படுகின்றது. இப்படி அனைத்துச் சக்திகளிலும் உறைந்திருப்பவள் அந்த ஆதிபராசக்தியானவளே. அவளுக்கு நமஸ்காரங்கள்.
3. யாதேவி ஸர்வ பூதேஷு புத்திரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். இங்கே புத்தி எனப்படுவது வெறுமே கற்றறியும் திறமையை மட்டுமே சுட்டுவது அல்ல. பார்க்க, கேட்க, நினைக்க, தெளிய, அறிய, சிந்திக்க, ஆலோசிக்க, பகுத்தறிந்து புரிந்து கொள்ள என அனைத்துக்கும் தேவைப்படுவது புத்தி என்று கொள்ள வேண்டும். இது சரியாக இல்லை எனில் ஏதாவது ஒரு குறை கட்டாயமாய் வாழ்க்கையில் ஏற்படுகின்றது. ஆகவே நம் தேவைகள் சகலத்துக்கும் சரியான புத்தியைக் கொடுப்பவள் அந்த அம்பிகையே!அந்த புத்தி உருவில் உறைபவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
இப்போதைய சேர்க்கை: நேற்று வியாழன் அக்டோபர் 2-ம் தேதிய நிகழ்ச்சி:
தசமஹா சக்தியின் 4-வது சக்தியான புவனேஸ்வரியைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு கொடுக்கப் பட்டது. சகல உலகங்களயும் ஆளும் இவளின் சிந்தாமணி க்ருஹம் அமைந்திருக்கும் மணித்வீபம் பற்றிய வர்ணனைகள் வருகின்றன. மும்மூர்த்திகளும் இவளின் அருள் பெற்றே தங்கள் முத்தொழிலையும் தொடங்குகின்றனர். எல்லையற்று விரிந்து பரந்திருக்கும் இந்த புவனத்தைப் போல் விரிந்து பரந்த இவளின் கருணையைச் சொல்லவும் முடியுமோ?? "ஹ்ரீம்" எனப்படும் இவளுக்கு உரிய மந்திரத்திலே அடங்கி இருக்கும் ஐந்து மூர்த்திகள் விநாயகர், விஷ்ணு, சூரியன், சிவன், சக்தி ஆகியோர் ஆவார்கள். நாதத்திலே தோன்றி, பிந்துவிலே பரிணமித்து சகல ஜீவராசிகளிடத்திலும் கலைகளாக, உயிர்களாக, ஜீவ சக்திகளாகப் பரிணமித்து அங்கு, இங்கு எனாதபடி அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக, அநாத ரட்சகியான அந்த புவனேஸ்வரியைப் போற்றி வணங்குவோம்.இன்றைய நைவேத்தியம் கடலைப்பருப்புச் சுண்டல். வெள்ளிக்கிழமை அம்பாளுக்குக் கடலைப்பருப்புச் சுண்டலோ, அல்லது புட்டோ நைவேத்தியம் செய்யலாம். சீக்கிரமா வாங்க, இடியும், மின்னலுமாக இருக்கின்றாள் அன்னை பராசக்தி!, பாரதியின் ஊழிக்கூத்தாடும் காளியைப் போல் மழை எப்போ வேணாலும் கொட்டும் போல் இருக்கு.
அனைத்துமாய் இருந்து அனைவருக்கும் அருள்கின்ற தேவியின் பதங்கள் சரணம்.
ReplyDeleteஸ்லோகங்களுக்கு நன்றி கீதாம்மா.
புவனேஸ்வரியா...நேன அப்படிங்கற பாட்டை நான் பாடினதா நினைச்சுக்கிட்டு சுண்டலை தாராளமா தாங்க கீதாம்மா...
ReplyDelete