11. யா தேவீ ஸர்வ பூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
லஜ்ஜா= என்றால் வெட்கம், நாணம் என்று அர்த்தங்கள் வருகின்றன. என்றாலும் இந்த இடத்தில் இதற்கு அடக்கம், பணிவு என்பது பொருந்துமோனு நினைக்கிறேன். ஆங்கிலத்தில் modesty?? என்று சொல்லலாமோ?? நாம் செய்யும் தவறுகளுக்கு வெட்கப் படுவதோடு அல்லாமல், நாம் தான் அனைத்தும் செய்தோம், நம்மால் தான் எல்லாம் என்ற நினைப்பும் வரக் கூடாது. அடக்கமாய், பணிவாய், விநயமாய் இருக்கவேண்டும். அத்தகையதொரு கல்வியே தேவை இல்லையா?? கல்வியால் பெறக்கூடிய இந்த லஜ்ஜை என்னும் உணர்வாய் எந்தத் தேவி அனைவரிடத்திலும் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
12. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம் அனைவரிடத்திலும் ஷாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.
இங்கே ஷாந்தி என்பது மெளனம், பொறுமை, பகை தீர்ந்து அமைதி அடைதல் என்ற அர்த்தங்களில் எடுத்துக் கொள்ளலாம். மற்றவர் நம்மிடம் கோபமாய் இருந்தாலோ மன வேறுபாடுகள் இருந்தாலோ அமைதியா இரு என்று சொல்கின்றோம் அல்லவா?? அந்த அமைதி தான் இங்கே. மெளனமும் ஒரு மொழியே. மெளனமாய் இருந்தால் அதைவிடச் சிறந்ததொரு பேச்சு வேறு கிடையாது. அனைத்தையும் உணர்த்தும் மெளனம். மெளனம் கடைப்பிடிக்கப் பட்டால் அங்கே ஷாந்தி தானாகவே வந்து சேரும். தேவையான சமயங்களில் கட்டாயமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய மெளனம், அமைதி என்ற உருவில் எந்த தேவி உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
13. யா தேவீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் நம்மிடம் சிரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரங்கள்.
ஷ்ரத்தா என்பது இங்கே வெறும் மத சடங்குகளில் நம்பிக்கை என்று மட்டுமே கொள்ளக் கூடாது. ஆழ்ந்த நம்பிக்கையையும் குறிக்கும். தீவிரமான கவனத்தையும் குறிக்கும். குருவின் உபதேசங்களில் நம்பிக்கை, குருவின் ஒவ்வொரு ஆணையும் நமக்கு நல்லதே ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை, நாம் படிக்கும் பாடங்களில் உள்ளவைகளில் நம்பிக்கை, எடுத்த காரியத்தை முடிக்கும் கவனம், அந்தக் காரியம் நன்மையாய் முடியும் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்புகளில் நேர்மறைப்பார்வை என்று எடுத்துக் கொண்டு, தேவி இவை அனைத்திலும் அந்த ஆழ்ந்த நம்பிக்கையாக உறைகின்றாளே, அவளுக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
ஸ்லோகங்களும் விளக்கங்களும் நல்லாருக்கு. நன்றி கீதாம்மா.
ReplyDelete