
என் பதிவுகள், சினிமா நினைவுகள்
தோழி உஷாவுக்காக!
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவிலே இல்லை. ஆனால் அப்பா மட்டும் சினிமா பார்த்துட்டுத் திரும்பி வந்து எங்களுக்கெல்லாம் கதை சொல்லுவார், கேட்டிருக்கோம், பல இந்திப் படங்கள், தமிழ்ப்படங்கள் அதிலே அடக்கம். ஜனக், ஜனக் பாயல் பாஜே! படம் பார்த்துட்டு கோபி கிருஷ்ணாவின் நடனத்தைப் பற்றிச் சொன்னதில் இருந்து அந்தப் படம் பார்க்க நினைத்து, அப்புறம் எப்போவோ தூரதர்ஷனில் பார்க்கக் கிடைத்தது. முதல் சினிமான்னா??? ராம பக்த ஹனுமான்?? இல்லாட்டி மாயா பஜார்?? சரியாத் தெரியலை, ஏழு வயசிருக்கலாமோ????
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா
அரங்கிலே படம் பார்த்தேப் பல வருடங்கள் ஆகின்றது. என்றாலும் போன வருஷம் யு.எஸ்ஸில் இருந்தப்போ சிவாஜி படத்துக்குப் பொண்ணு டிக்கெட் வாங்கிக் கொடுத்து எங்க இரண்டு பேரையும் தள்ளிவிட்டா. அங்கே பார்த்தது தான். இந்தியாவிலே என்றால் குஜராத் ஜாம்நகரில் தான் இருக்கும். தமிழ்நாட்டில்??? கடைசியாப் பார்த்தது "மை டியர் குட்டிச்சாத்தான்" என நினைக்கிறேன். ராயப்பேட்டாவில் கோபாலபுரம் பக்கம் ஏதோ ஒரு தியேட்டர். நாங்க முன் பதிவு செய்துட்டு போன ஒரே படமும் இது தான். அம்பத்தூரில் இருந்து சாப்பாடு எல்லாம் கட்டி எடுத்துட்டுப் போனதும் தியேட்டரில் படத்தை விட எங்களைப் பார்க்கவே அதிகக் கும்பல் கூடிச்சுனு நினைக்கிறேன். இப்போக் கூட நினைவில் இருக்கு பூரி, கிழங்கு, புளியோதரை, வறுவல், தயிர்சாதம் எடுத்துட்டு, நாங்க 4 பேர், பக்கத்து வீட்டுக் காரங்க 5 பேர், என் அண்ணா குடும்பம், தம்பி குடும்பம் என்று ஒரு 15 பேருக்கு மேல் போனோம். மாட்டு வண்டி பூட்டித் தலையில் விளக்கெண்ணை தடவிட்டு ஜவந்திப் பூ வச்சுக்கலை, மத்தது எல்லாம் நடந்தது. :)))))))
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
இப்போ இரண்டு நாள் முன்பு தொலைக்காட்சியில் 9x சானலில் பார்த்த ஒரு பெண் பத்திரிகையாளர் பற்றிய இந்திப் படம். "பாப்???" என்ற பெயரில் வந்தது. அந்தப் பெண்ணின் இயல்பான நடிப்பும், செய்திகளைச் சேகரிக்கும் விதமும், குண்டு வெடிப்பில் நேருக்கு நேர் கண்ட உண்மைகளும், சமூகத்தில் பெரிய ஆளான வில்லன் செய்யும் கீழ்த்தரமான வேலைகளைக் கண்டு பிடித்துப் பத்திரிகைக்குக் கொடுத்தும், பத்திரிகையின் நிறுவனரால் செய்தி வெளியிட மறுக்கப் பட்டு, வேலையில் இருந்தே தூக்கி எறியப் படுவதும், அவரின் செய்தி சேகரிப்பின் கஷ்டங்களையும் கண்டபோது மனதில் தோன்றிய எண்ணம், சமீபத்திய பெண் பத்திரிகையாளரும், டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவங்களின் காரணங்களை புலனாய்வு "ஹெட் லைன்ஸ் டுடே" செய்தி சானலின் தயாரிப்பாளர் ஆன 23 வயதே ஆன செளமியா ஸ்வாமிநாதன், டெல்லியில் அதிகாலையில் வீடு திரும்பும் போது கொல்லப் பட்டதும், அதற்கு டெல்லியின் முதலமைச்சரும், தானே ஒரு பெண்ணுமான ஷீலா தீட்சித், "யார் அந்தப் பெண்ணை சாகசங்கள் செய்யச் சொன்னது? அதிகாலையில் ஏன் வெளியே போனார்? இந்த அளவுக்கு சாகசம் தேவையா?" என்றெல்லாம் கேட்டது நினைவில் மோதியதோடு அல்லாமல், நிஜ வாழ்வில் மனிதர்கள் பேசுவது, திரையை விடக் கொடுமை என்ற உண்மையையும் உணர்த்தியது.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
பல ஸ்ரீதர் படங்கள். புரட்சியான கருத்துக்களை முன் வைத்துப் படம் எடுப்பதில், அதுவும் தரமான படங்கள் தருவதில் இன்று வரை அவரை மிஞ்ச யாருமே இல்லை என்பது என்னுடைய கருத்து. பல படங்களின் கருத்துக்கள் தாக்கி இருக்கின்றன என்றாலும் தற்போது உள்ள திரைப்படக் காலங்களில் பொற்காலம், பாரதி-கண்ணம்மா, மறுபக்கம் போன்ற படங்கள் ஓரளவுக்குச் சொல்லும்படியாக இயல்பாக எடுக்கப் பட்டு இருந்தன.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தாக்கும்படியாக தமிழ் சினிமா எதுவும் இல்லை என்றே சொல்லணும். மலையாளத்தில் பல படங்கள் மனதைத் தைக்கும் விதத்தில் எடுக்கிறாங்க. அரசியம் சம்பவம்னு எதுவும் இல்லை. அவ்வளவு ஆழமா நினைக்கிறதில்லை சினிமா விஷயத்தில்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்
வீணை பாலசந்தரின் "பொம்மை" படம் பார்க்கணும்னு ஆசை, இன்னும் பார்க்க முடியலை. மற்றபடி என்னை எந்தப் படமும் தாக்கும்படி எல்லாம் இல்லை. தொழில் நுட்பம் என்றால் இப்போ வர படங்களின் தொழில் நுட்பங்கள் எல்லாமே ஆச்சரியமாத் தான் இருக்கு. கதையோடு ஒட்டாமல் இருப்பதும் யோசிக்க வைக்கும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
தினப் பத்திரிகைகளில் வர விஷயங்களுக்கு மேல் தெரியாது. சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறதுனு ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளைப் படிக்கிறதையே நிறுத்திட்டேன்.

7. தமிழ்ச்சினிமா இசை?
பல பழைய பாடல்கள் தான் வேறே என்ன?? பைய"ரி"டம் ஒரு கலெக்ஷனே இருக்கு. கணினியில் போட்டுக் கொடுத்திருக்கார். நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. என்றாலும் நான் "பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்"(எந்தப் படம்???) பாட்டை ரொம்பவே அனுபவிச்சுப் பாடிட்டு இருந்தப்போ அப்பா வில்லன் மாதிரி வந்து திட்டியது மறக்கவே முடியாது. அப்போ அந்த வயசிலே அர்த்தம் எல்லாம் புரியலை, என்றாலும் பின்னால் அந்தப் பாட்டு கேட்க நேரும்போதெல்லாம் சிரிப்பு வரும்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ம்ம்ம்ம்??? தமிழ் தவிர, தொலைக்காட்சியில் அவ்வப்போது வர ஆங்கிலப் படங்கள் எப்போவாவது பார்ப்பேன். அதிலே ரொம்பப் பிடிச்சது என்றால் கென்னடி கொலை பற்றிய ஒரு படம், பெயர் நினைவில் இல்லை, Independence Day, கன்னடத்தில் சாருஹாசன் நடித்த ஒரு படம், அவருக்குக் கிடைக்கவேண்டிய பென்ஷனுக்கோ, என்னவோ ரொம்பவே அலைவார்.என்ன படம்னு நினைவில் இல்லை. சாருஹாசன் அவார்ட் வாங்கிய படம். இந்தியில் கிரீஷ் கர்னாட், ஷபனா ஆஸ்மி நடிச்ச ஒரு படம், வங்காளக் கதை, கிரீஷ் கர்னாட் வீட்டுக்கு மூத்த பையர், அவர் மனைவியாக ஷபனா! ம்ம்ம்ம்ம்?? படம் பெயர் ஸ்வாமி??? ஆமாம்னு நினைக்கிறேன், ஹேமமாலினி அம்மா தயாரிப்பாளர். இன்னொரு படமும் இருக்கு வங்காளக் கதை, நடிச்சது சுசித்ரா சென்னும், சஞ்சீவ் குமாரும். அரசியலில் ஈடுபட்ட மனைவிக்காகக் கணவன் தவிப்பதும், குடும்ப வாழ்க்கை வாழ மனைவி தவிப்பதும், தந்தையின் நிர்ப்பந்தம் காரணமாய் அரசியலுக்கே திரும்புவதும், என்றோ ஒருநாள் சந்திக்கும்போது பழைய நினைவுகள் அலைமோதுவதுமாய், இயல்பாக நடிச்சிருப்பாங்க இரண்டு பேரும். பாட்டுக்கள் கூட சூப்பர். விஜய் ஆனந்த் தயாரிப்புனு நினைக்கிறேன். பெயர் மறந்து போச்சு!
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
ஹிஹிஹி, அதெல்லாம் இல்லைங்க, ஏதோ எங்க வீட்டுக்கு எதிரே சித்ராலயா கம்பெனியின் மதுரைக் கிளை அலுவலகம் இருந்தது. அதனால் சில நடிகர்களைப் பார்க்க நேர்ந்திருக்கு. அப்போதான் ஜெயலலிதாவை முதல் முதல் வெண்ணிற ஆடையில் நடிச்சிட்டு இருக்கும்போதே பார்த்திருக்கேன். அவங்க அழகில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட திரையில் வரலை என்பது ஏமாற்றம் தான்.
10.தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஏதோ சில படங்கள் சொல்லும்படி இருந்தாலும் தமிழ் சினிமா வளர்ச்சி தொழில் நுட்ப அளவிலேயே வளர்ந்துள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் அந்த அளவுக்குத் தரமான படைப்புகள் வருதா என்றால்??? விளம்பரம் வரும் அளவுக்குப் படங்கள் இல்லை. ஏமாற்றமே தருகின்றது. எதிர்காலம் என்ன எதிர்காலம்? ரசிக்க ரசிகர்கள் இருக்கும்வரை இம்மாதிரிப் படங்கள் வந்தே தீரும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்
அப்பாடா, தமிழ்நாடு கொஞ்சமாவது உருப்பட ஒரு வழி இருக்குனு சொல்றீங்க?? ஆனால் அதுஒரு கனாக் காலம்னு தோணுதே! :P:P:P:P
இனி தொடர வேண்டியவர்கள் யார் வேண்டுமானாலும் தொடருங்க! எல்லாரும் ரொம்ப பிசி, என்னைத் தவிர, அதனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லலை!
சூடு ஆறிடுமேனு 3 நாளா முயன்று எழுதிட்டேன், தப்பு ஏதும் இருந்தால் கண்டுக்காதீங்க! நான் சொல்றது எ.பி. மட்டும்! :))))))))
ReplyDeleteசூப்பரா இருக்குங்க.
ReplyDeleteஅந்தப் பக்கத்து வீட்டுப் பருவமச்சானை மறந்துருந்தேன். பார்வையிலே படம் புடிச்சான்:-)))))
//ராம பக்த ஹனுமான்?? இல்லாட்டி மாயா பஜார்?? சரியாத் தெரியலை, ஏழு வயசிருக்கலாமோ????
ReplyDelete//
மாயா பஜார் எந்த வருடம் ரிலீஸ்?னு யாராவது வந்து சொன்னா இப்போ ஒரு மாபெரும் குட்டு உடைபட வாய்ப்புள்ளது. 1935 ஒர் 1938...? :)))
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...நான் உங்களை கூப்பிடலாமுன்னு நினைச்சேன் இப்படி பண்ணிட்டிங்களே தலைவி ;(
ReplyDelete\\ ambi said...
//ராம பக்த ஹனுமான்?? இல்லாட்டி மாயா பஜார்?? சரியாத் தெரியலை, ஏழு வயசிருக்கலாமோ????
//
மாயா பஜார் எந்த வருடம் ரிலீஸ்?னு யாராவது வந்து சொன்னா இப்போ ஒரு மாபெரும் குட்டு உடைபட வாய்ப்புள்ளது. 1935 ஒர் 1938...? :)))
\\
அண்ணே இதில் என்ன கேள்வி 1935 தான்..;))) (சும்மா)
அம்பி
ReplyDeleteமாயா பஜார் ரெண்டு ரிலீஸ் இருக்காம். முதல் ரிலீஸ் 1912! :)) (எதோ என்னால் ஆனது!!)
பக்கத்து வீட்டு பருவ மச்சான் அந்த காலத்துல மிக ஆபாசமான பாட்டு என்று என் அம்மா சொல்லியிருக்கிறார் :-) அம்பி,
ReplyDeleteஇதில் எந்த "பொடி"யும் இல்லை. கீதா பதிவு போட்டதற்கு தேங்ஸ்.
அம்பி, உனக்கும் அழைப்பு இருக்கு நுனிப்புல் பார்க்கலையா?
உஷா,
ReplyDelete'எந்தனுள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ' பாட்டை எங்கம்மா ஆபாசமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவுங்களுக்குத் தமிழு தெலியது:-)
//நிஜ வாழ்வில் மனிதர்கள் பேசுவது, திரையை விடக் கொடுமை என்ற உண்மையையும் உணர்த்தியது.//
ReplyDeleteThis is very true. The way you write is really superb. very interesting.
//அண்ணே இதில் என்ன கேள்வி 1935 தான்..;))) (சும்மா)//
ReplyDelete//மாயா பஜார் ரெண்டு ரிலீஸ் இருக்காம். முதல் ரிலீஸ் 1912! :)) (எதோ என்னால் ஆனது!!)//
Let them they whatever they want. I do agree with you that you are just 15 years old. After 60, counting again begins from 1. Illaiya Maami.
@துளசி, ரொம்ப நன்றிம்மா, வேடிக்கை என்னன்னா இது எழுதி போஸ்ட் போட்டதுக்கு அப்புறமா தொலைக்காட்சியிலே இந்தப் படம் போட்டிருந்தாங்க, படம் பார்க்கலைனாலும் பாட்டை நினைச்சுச் சிரிச்சுட்டு இருந்தேன்.
ReplyDelete@அம்பி, உங்க அளவுக்கு எனக்கு 1935, 38 ல வந்த படம் எல்லாம் தெரியாது தாத்தா! நீங்க தான் சொல்லணும்! :P:P:P:P:P:P:P:P:P:P:P:P:P
@கோபி, எனக்கு என்ன தெரியும், நீங்க கூப்பிடப் போறீங்கனு, நானும் பெருமையாச் சொல்லி இருப்பேனே,
ReplyDeleteநுனிப்புல் உஷா கூப்பிட்டாஹ,
வாக்கர் கோபி கூப்பிட்டாஹ, னு! உஷா முந்திக்கிட்டாங்க, அவ்வளவு தான்!
அது சரி, அது என்ன சேம் சைட் கோல்? அம்பிக்கு சப்போர்ட்? நறநறநறநற
அட, கொத்து, இந்த விஷயம் எனக்குத் தெரியாதே கொள்ளு?? இல்லாட்டி எள்ளு?? தாத்தா!
ReplyDeleteதெரியாது உஷா, ஆனால் அப்போ எனக்கு இது ஏன் பாடக் கூடாதுனு மட்டும் கோபமா வரும், இப்போ மட்டும் இல்லை, எப்போவுமே சில படங்களின் பாட்டுகள் ஆபாசமாய்த் தான் இருக்கு! இதுக்கு மொழி பேதமே இல்லை.
அட, துளசி, இப்படியும் இருக்கா?? தெரியாதே! ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று!
ReplyDeleteஎஸ்கேஎம், உண்மைதான், நிஜவாழ்வில் கொடுமையான பல நிகழ்வுகளைப் பார்க்கவும் முடிஞ்சிருக்கு, என்றாலும் எல்லாத்தையுமே எழுத முடியுமா?? அதுக்குத் தான் இம்மாதிரி எழுத வேண்டி இருக்கு! :((((((((
ReplyDelete//Let them they whatever they want. I do agree with you that you are just 15 years old. After 60, counting again begins from 1. Illaiya Maami.//
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்., இது என்ன உ.கு. எஸ்கேஎம்??? அவங்களே தேவலை போலிருக்கே??? முடிவே கட்டிட்டீங்களா? நறநறநறநற :P