17. யா தேவீ ஸர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
ஸ்ம்ருதி என்றால் இந்த இடத்தில் திரும்பத் திரும்பச் சொல்லி வேதங்களை நினைவு கூருதல் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளாமல், நினைவு, சிந்தனை, யோசித்துப் பாகுபாடு அறிந்து புரிதல் என எடுத்துக் கொண்டால் நல்லது. அத்தகையதொரு நல்ல நினைவு நம்மிடம் தேவை அல்லவா?? தீயவற்றையே நினைத்தால் மனம் கெடுவதோடு மட்டுமல்லாமல், உடல் நலமும் கெட்டுப் போகுமே! ஆகவே நல்ல சிந்தனையை, நல்ல புத்தியை, நல்லவைகளையே நினைக்கும் மனதைக் கொடுப்பவள் தேவியே. இப்படி அனைவர் மனதிலும் சிந்தனை உருவில் , ஸ்ம்ருதியாக உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
18. யா தேவீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நம்ஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
தயை= கருணை, இரக்கம், பரிவு. இங்கே அனைத்துமே பொருந்தும். சகல ஜீவராசிகளிடத்திலும் கருணை காட்ட வேண்டும். பரிவு காட்ட வேண்டும். எளியோரிடம் இரக்கமும் பரிவும் இருக்க வேண்டும். இந்த தயை அனைவரிடத்திலும் இருந்தாலே நல்லது அல்லவா?? தயை உருவில் அனைவரிடத்திலும் உறைந்திருக்கும் தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள்.
19. யா தேவீ ஸர்வ பூதேஷூ துஷ்டி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:
துஷ்டி=திருப்தி, சந்தோஷம். மனதில் போதுமென்ற எண்ணம் இருந்தாலே சந்தோஷம் வரும் அல்லவா?? இந்த உலகைப் படைத்த அன்னை உலகிலே மற்ற அனைத்து ஜீவராசிகளையும் மட்டுமல்லாமல், நாம் உண்ணக் கூடிய உணவாகக் காய், கனிகள் என அனைத்தையும் படைத்திருக்கின்றாள். ஒரு செடியில் இருந்து பூவைப் பறித்தால் மேலும், மேலும் பூக்க வேண்டும், பறிக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. காய்கள் பறித்தாலும், கனிகள் பறித்தாலும் அவ்வாறே. பசு மாடு பால் கொடுக்கின்றது. நாம் கொடுப்பதோ வைக்கோலும், தவிடுமே. மாடு அதிலேயே திருப்தி அடைகின்றது. கறந்த பாலைத் திரும்பக் கொடு என்னிடம் என்று மாடு கேட்க ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்?? பறித்த காய், கனிகளைத் திரும்பக் கொடு என எந்தச் செடியாவது கேட்கின்றதா?? இல்லையே? நமக்கு எந்த விதமான மறுப்பும் இல்லாமல் நம் தேவைக்கு உதவும் இந்தச் செடி, கொடிகளையும், மிருகங்களையும், பறவைகளையும் பார்த்தாவது நமக்குப் போதுமென்ற மனம் வருகின்றதா என்றால் வரவில்லையே?? இந்தப் போதுமென்ற மனத்தைக் கொடுக்கும் தேவிக்கு, அந்த மனமாக உறைகின்ற தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இதாவது கொடுப்போம். ஆனால் போதுமென்று சொல்லாமல், மேலும் மேலும் அன்னைக்கு நமஸ்கரிப்போமே!
நன்றி கீதாம்மா.
ReplyDelete