இந்த புவனேஸ்வரியைப் பற்றி எழுதப் போகும்போது திடீரென வானம் கறுத்து இடி, மின்னல் ஏற்பட்டது. மின்னல் என்றால் நான் உட்கார்ந்து எழுதுவது அறைக்குள்ளே. அந்த அறைக்குள்ளே திடீரென ஒரு பேரொளி பாய்ந்தது. அதை நான் நன்கு உணரும் முன்னே அண்ட, சராசரங்களும் ஆடுவது போன்ற ஒரு பெரிய ஓசையுடன் இடி இடித்தது. அதை இடி என்றே உணர முடியவில்லை. அப்போது தான் ஓசையில் இருந்து அம்பிகை தோன்றுவதைப் பட்டு கேட்டு விட்டுக் கணினியில் உட்கார்ந்திருக்கின்றேன் எழுத. உடனேயே ஒளியும், ஓசையுமாகக் கண் முன்னே தோற்றம் ஏற்பட்டுச் சிறிது நேரம் வரைக்கும் எதுவும் புரியவில்லை. காணாதது கண்டாற்போன்றதொரு நினப்பு. என்ன நடந்தது என்றும் உணரமுடியவில்லை. என்னை நான் மீட்டுக் கொள்ளவும் நேரம் பிடித்தது. உடனேயே கணினியை மூடி வைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டேன். பின்னர் இடியும், மின்னலும் உண்மைதான் என்று தெரிந்தாலும் எனக்கு ஏற்பட்ட அபூர்வ உணர்வு புதுமையாகவே இருந்தது.
ஹ்ரீம் என்ற புவனேஸ்வரியின் பீஜமானது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த ஹ்ரீமில் இருந்தே தோன்றியவர்கள் மற்ற தேவியர்கள் ஆன மஹா காலீ, மஹா லக்ஷ்மீ, மஹா சரஸ்வதி ஆகியோர் . விதை விதைத்தால் அதிலிருந்து முதலில் முளை, துளிர், இலை, கிளை, அரும்பு, பூக்கள், காய்கள், கனிகள் என்று தோன்றுகிறாப் போல் அம்பிகையும் தோன்றுகின்றாள் என்பதை நன்கு புரிய வைத்தது அந்த இடியும், மின்னலும். இந்த தேவியரின் மந்திர வடிவங்களில் முக்கியமானவை நவாக்ஷரியும், ஸப்த ஸதீ மாலா மந்திரமும். நவாக்ஷரி மந்திர உபதேசம் பெற்றவர்கள் அங்கமாய் ஸப்தஸதீயும், ஸப்த ஸதீ உபதேசம் பெற்றவர்களின் அங்கமாய் நவாக்ஷரியும் விளங்குகின்றது. மேலும் சிதம்பர ரகசியத்தில் பரமசிவன், பார்வதிக்கு இந்த ஸப்தசதீயின் மகிமை பற்றிக் கூறுகின்றார்.
இந்த ஸப்தசதியைப் படிப்பவர்களுக்கு ஏழ்மையில் இருந்து விடுதலை கிடைக்கும். பகைவர்களை வெல்லும் திறமை உண்டாகும். மனதில் ஏற்படும் காரணமற்ற அச்சம் போன்றவை விலகும். தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுக் காலி, காளி என்னும் பெயருடன் தோன்றிய பரதேவதை காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும், சரஸ்வதியாகவும் தோன்றினாள். மூன்று வடிவு கொண்ட அவளின் உருவை சின்மயம் என்று சொல்லுவதுண்டு. திரிபுரா என்ற பெயரில் அவளை அழைப்பார்கள். இந்த தேவி மகாத்மியம் மார்க்கண்டேயபுராணத்தில் எழுநூறு மந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் எவ்வாறு எழுநூறு ஸ்லோகங்களில் பகவத்கீதை அமைந்துள்ளதோ அதே போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திர வடிவங்களில் அமைந்துள்ள இந்த தேவி மகாத்மியத்தைப் படிப்பவர்கள் , ஒரே தடவையில் பாராயணம் செய்ய அவகாசம் இல்லை என்றாலும் மத்திம சரித்திரத்தை மட்டும் படிக்கலாம். அல்லது நவாஹ பாராயாணம், சப்தாஹ பாராயணம் என்ற முறையிலும் படிக்கலாம். சில சரித்திரங்கள் அரை, குறையாகப் படிக்கக் கூடாது, படிக்க முடியாது என்ற நியமங்கள் உண்டு. அத்தகையதொரு எந்தவிதமான நியமும் இதற்குக் கிடையாது.
பரமேசுவரியைச் சரணடைந்து அவளின் பாதாரவிந்தங்களில் ஆராதனைகள் பலவும் செய்து வந்தால் அனைத்து நன்மைகளும் கிட்டும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சாதனைகளாலும், வழிபாடுகளாலும் பவதாரிணி என்ற உருவில் அன்னை வழிபடப்பட்டு அவள் பெருமை எடுத்து உரைக்கப் பட்டிருக்கின்றது. மிகச் சிறந்ததொரு எடுத்துக்காட்டான அவரின் மொழியமுதத்தைப் படித்தாலே அன்னையின் ஆற்றல்கள் அளப்பரியது என்பது நன்கு விளங்கும். யுக, யுகமாய் விளையும் தீமைகள் அனைத்தையும் அவளின் கடைக்கண் பார்வையாலேயே பொசுக்கி ரட்சிக்கின்றாள். தீயவற்றைப் பொசுக்கும் பேரொளியாக வந்தவளே அந்த துர்க்கா தேவி. மகா காலி, லக்ஷ்மி, சரஸ்வதி என்று சொல்லலாம். ராமகிருஷ்ணருக்குப் பின்னர் பெரும் சக்தி உபாசகரும், இன்றளவும் கவிதை உலகில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாத அளவுக்குக் கவிதைகள் எழுதியவரும் ஆன நம் பாரதியும் ஒரு மகத்தான சான்று.
சக்தியைப் பற்றி எழுதிவிட்டு பாரதியைச் சொல்லாமல் இருக்க முடியுமா?? மிகச் சிறந்த சக்தி உபாசகர் ஆன அவர் தன் பெயரையே சக்தி தாசர் என்றும் வைத்துக் கொண்டார். பராசக்தியை அக்னிக்குஞ்சு வடிவில் காண்டு அது தன் மனதில் உள்ள மாசுக்களைப் பொசுக்கியதையும் உள்ளத்தில் பரவிய பேரொளியையும் தன் அக்னிக்குஞ்சு பாடல் மூலம் இரண்டே வரிகளில் காட்டுகின்றார். மேலும் தேவி மகாத்மியத்தில் தேவியின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்களுக்குச் சமானமாக அவரின் சக்திப் பாடல்கள் பலவும் கூறலாம். காளியானவள் யாதுமாகி அனைவரிடத்திலும் நின்றதைக் குறிக்கும் பாடல் கீழே
.
“யாதுமாகி நின்றாய் காளி,
எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யெல்லாம் காளி
தெய்வ லீலையன்றோ
பூதமைந்தும் ஆனாய் காளி
பொறிகளைந்தும் ஆனாய்
போதமாகி நின்றாய் காளி
பொறியை விஞ்சி நின்றாய்
\இன்பமாகி விட்டாய் காளி
என்னுளே புகுந்தாய்
பின்பு நின்னையல்லால்
பிறிது நானுமுண்டோ?
அன்பு தந்துவிட்டாய் காளி- காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி
துயரழித்துவிட்டாய்.”
சரியோ, தப்போ, தெரியாது என் மனசில் தோன்றியதை எழுதி இருக்கின்றேன்.
உள்ளேனம்மா...
ReplyDeleteஅதென்ன தேவியை பற்றி எல்லாம் நல்லா எழுதிட்டு, 'சரியோ தப்போ'ன்னு டிஸ்கி வேற போட்டிருக்கீங்க :) பாரதியின் அருமையான பாடலை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கீதாம்மா.
ReplyDelete