எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 15, 2010

ஆடுவோமே, பள்ளு பாடுவோமே!

ஆநந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று. ஆடுவோம், ஆடுவோம், ஆடுவோம்.

நினைவு தெரிஞ்சதில் இருந்து பல சுதந்திர தினங்களைப் பார்த்தாச்சு. நாட்டில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம் பல விஷயங்களில் மாற்றமும் இல்லை என்பதும் உண்மை. இப்போ அதை எல்லாம் பத்திப் பேசாமல் என்னோட சுதந்திர தின அநுபவங்கள் பற்றி மட்டும் சொல்லப் போறேன். எல்லாரும் அவங்க அவங்க சுதந்திர தின நினைவுகளைச் சொல்லும்போது நாம மட்டும், தானைத்(ஆனை)தலைவியா இருந்துட்டு ஒண்ணுமே சொல்லாட்டி எப்படி??


காலம்பர நாங்க படிக்கும் பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் முடிஞ்சு அங்கே லட்டுவும், மிக்சரும் கொடுப்பாங்க. அதுக்காகவே போவோம்னும் சொல்லலாம். அப்பாவின் பள்ளியிலும் கொஞ்சம் தாமதமாய் நடக்கும். அண்ணா மட்டும் சில சமயம் போவார். நானும், தம்பியும் சின்னக் குழந்தைகள்னு எங்களை விட்டுட்டுப் போவாங்க. அதுக்காக அழுது, அடம் பிடிச்சும் ஒண்ணும் நடந்ததில்லை. ஒரே ஒரு சமயம் தமுக்கம் மைதானத்தில் நடந்த கொண்டாட்டத்தின் போது அப்பா எங்களையும் அழைத்துச் சென்றார். அதுக்குச் சிறு குழந்தைகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அநுமதி இல்லைனு சொன்னாங்களாம். ஆனாலும் அப்பா தன் பள்ளியின் சார்பில் போனப்போ அங்கே நடந்த மயிலாட்டம், ஒயிலாட்டம் பார்க்கவேண்டி என்னையும் அழைத்துச் சென்றார். அந்த ஆட்டங்கள் எதுவும் என் நினைவில் இல்லை. ஆனால் அப்பாவின் நண்பர் கொடுத்த உள்ளே பருப்பு ஏதோ வைத்த மிட்டாய் மட்டும் இன்னும் நாவில் சுவையோடு இருக்கிறது. முக்கியமான விஷயமே சுதந்திர தினத்தின் மாலைகளில் நடக்கும் ஊர்வலங்கள் தான்.

முதல் முதல்லே சுதந்திர தினம்னு நினைவிலே வர விஷயம் மதுரையிலே அப்போ வை. சங்கரன் தலைமையிலே நடந்த பேரணிகள் தான். ரொம்பப் பிரமாதமான பேரணியாய் இருக்கும். சாயந்திரம் ஆறு மணிக்கு வடக்கு மாசி வீதி, மேல மாசிவீதியைக் கடக்கும்னு சொல்லுவாங்க. நாலு மணிக்கே அப்பாவின் நண்பர் வீட்டு மொட்டை மாடியில் போய் இடம் போட்டுப்போம். அப்பா பேரணியிலே கலந்துக்கப் போயிடுவார். அண்ணா தான் அப்போ கொஞ்சம் பெரியவர் என்பதால் கொஞ்ச தூரம் அண்ணாவும் கலந்துண்டு அப்புறம் நாங்க இருக்கும் இடத்துக்கு அனுப்பி வைச்சுடுவார். நானும், தம்பியும் அம்மாவோடு ஊர்வலம் பார்க்க உட்கார்ந்திருப்போம். வித, விதமான அலங்காரங்கள், அருமையான கருத்துக்களோடு கூடிய அலங்கார அணிவகுப்புக்கள் என்று வரும்.தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு சம்பவத்தின் சில காட்சிகள், அருணா அசப் அலி மாதிரி ஒரு பெண் வேடம் போட்டுக் கொடி ஏற்றும் காட்சி, திருப்பூர் கொடி காத்த குமரன், வாஞ்சிநாதனின் வீரங்கள், சுபாஷ் சந்திர போஸின் ஐ.என்.ஏ. சார்புள்ள சில காட்சிகள், அவர் சொன்ன டெல்லி சலோ என்னும் மந்திரச் சொல்லை ஏற்று அதில் கலந்து கொண்ட சில வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்கள், என்று பல காட்சிகள் வரும். அதிலே மஹாத்மா காந்தி தன் கடைசிப் பிரார்த்தனைக்குச் செல்லும் காட்சிகள் உயிருள்ள மனிதர்களால் சித்தரிக்கப் பட்டுக் கடைசியிலே வரும். அம்மாவெல்லாம் அதைப் பார்த்துட்டு அழுகையை அடக்க முடியாமல் அழுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். சுதந்திர நாளிலா? குடியரசு நாளிலா?? ஹிஹிஹி, மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்! ஆனாலும் இதைப் பார்த்திருக்கேன். அப்போல்லாம் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் அனைவருமே பாரதியின் பாடல்களை வீராவேசமாய்ப் பாடுவாங்க. ஆரம்பப் பள்ளி நாட்களில் பாரதியின் பேரில் இவங்க ஏற்படுத்திய பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்து இந்த ஊர்வலம் முடிஞ்சதும் ஒளி அலங்காரங்கள் நடைபெறும் இடங்களைக் காணச் செல்லுவோம். முக்கியமாய்ப் போறது மதுரை ரயில் நிலையம். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு மிக மிக அழகாய்க் காட்சி தரும். தமுக்கம் மைதானத்திலும் இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனால் போக முடிந்ததில்லை. அதுக்கப்புறம் கொஞ்சம் விபரம் தெரிந்து பள்ளியிலும் மேல் வகுப்புக்களுக்கு வந்தப்புறம் சுதந்திரக் கொண்டாட்டங்களின் ஊர்வலங்கள் பார்ப்பதின் மோகம் குறைந்தே போனது. அரசியலின் தன்மை புரிய ஆரம்பிச்சதாலோ என்னமோ எட்டு, ஒன்பது வகுப்புகளில் படிக்கும்போது சுதந்திர நாளில் பள்ளிக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்காக மட்டுமே சென்று கொண்டிருந்தேன். ஒரு முறை இப்போவும் அது சுதந்திர நாளா, குடியரசா என நினைவில் இல்லை. என் தாத்தா வீட்டுக்கு ஏதோ விசேஷத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது வந்த இந்த நாளில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. முன் அநுமதி பெற்றிருந்தேன்னு நினைக்கிறேன்.

தாத்தாவின் தம்பி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சங்கு நாராயணன் என்ற பெயரில் அழைப்பார்கள். அவரைக் காண பசுமலை ஆசிரமத்தில் இருந்து சுத்தாநந்த பாரதியார் வந்தார். காவி உடையும், காவி ஜிப்பாவும், பெரிய துளசி மாலை(???) சரியாய்த் தெரியலை, ஆனால் ஏதோ மாலைனு மட்டும் நினைவு இருக்கு. வேக வேகமாய் உற்சாகம் குன்றாமல் நடந்தே வந்தார்னு நினைக்கிறேன். சின்னத் தாத்தாவின் அறைக்குப் போய்ச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். பாரதியாரின் குரல் உரத்துக் கேட்டது. வீராவேசமாய் தேசபக்திப் பாடல்களைப் பாடியதும் கேட்டது. நாங்க குழந்தைகள் எல்லாரும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் கேட்டும், பார்த்தும் கொண்டிருந்தோம். அப்புறம் வெளியே வந்தவர் தன் ஜிப்பாப் பைக்குள் கைவிட்டு ஆரஞ்சு மிட்டாய்களைக் கொடுத்தார். சுதேசி மிட்டாய்களைத் தான் சாப்பிடணும்னும் சொன்ன நினைவு. இது பற்றி என் பெரியம்மா பெண், பையர்கள், சித்திகள்னு கேட்டேன். எல்லாருக்குமே என்னைப் போல் அரைகுறை நினைவுதான்.

ஆனால் பசுமலை ஆசிரமத்தில் அவர் இருந்தப்போ நம்ம வல்லி சிம்ஹனும் பார்த்திருக்காங்க. இதை இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் கேட்டு உறுதி செய்து கொண்டோம். அதே சமயம் அப்போ இருந்த வயசுக்கு இது எல்லாம் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சு வைச்சுக்கத் தோணலையேனு இரண்டு பேரும் பேசிக் கொண்டோம். உண்மையில் எவ்வளவு பெரிய மனிதரை எவ்வளவு சாதாரணமாய்ப் பார்த்து இருக்கோம்? அதைப் பற்றிய குறிப்புகள் எதுவுமே வச்சுக்கலை. எங்க தாத்தா வீட்டில் இருந்திருக்கும். ஆனால் எல்லாருமே மதுரையை விட்டுட்டும், சொந்த வீடுகள், அங்கே இருந்த பழைய புத்தகங்கள்னு எல்லாத்தையும் அங்கேயே தானம் பண்ணிட்டும் வந்ததாலே பல நல்ல விஷயங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. நினைவு மட்டுமே மிச்சம். ஒவ்வொரு சுதந்திரநாளன்றும் நினைவில் மோதும் விஷயங்கள் இவை. அம்மா அடிக்கடி பாடும் சுத்தாநந்தரின் பாடல் அருள் புரிவாய் கருணைக் கடலே! இதை எங்கே கேட்டாலும் அம்மாவின் நினைவும், சுத்தாநந்தரின் நினைவும் வரும். அது போலவே எப்படிப் பாடினரோ பாடலும். அதிலே வரும் இந்தக் குறிப்பிட்ட வரிகள் அம்மாவுக்கு மிகவும் பிடித்தது.

கருணைக்கடல் பெருகி,
காதலினால் உருகி" அம்மா கண்களில் இருந்து கண்ணீர் கொட்டும்.

இப்போ எனக்கும்!

18 comments:

  1. சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அஹ்ஹா வரத் துறவி சுத்தானந்த பாரதியாரை பார்த்திருக்கீர்களா ?? அருமை..

    ஜெய் ஹிந்தி வந்தே மாதரம்

    ReplyDelete
  3. சுதந்திர தின வாழ்த்துகள் கீதா.
    ஆரஞ்சு மிட்டாய்,சாக்கலேட் தான் எங்க பள்ளிக்கூடத்தில:) பசுமலை என்ன ஒரு அழகான இடம். அவர் தபால் அலுவகத்துக்கூட வருவார். ஜன்னல் வழியாகப் பார்த்ததோடு சரி.அறியாமை.:(
    கொசுவத்திக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  4. வாங்க மஹா, உங்களுக்கும் வாழ்த்துகள். முதல் வரவுக்கு நன்றிப்பா/ம்மா!?????

    ReplyDelete
  5. வாங்க எல்கே, ஆமாம், பார்த்தும் கூட அவரோட அருமை, பெருமை அப்போல்லாம் புரியலை, அதுக்கப்புறமும் சில முறை சேதுபதி ஹைஸ்கூலிலே பார்க்க நேர்ந்திருக்கிறது.

    ReplyDelete
  6. வாங்க வல்லி, இது சாக்லேட்டே இல்லை. மிட்டாய் தான் ஆரஞ்சுக்கலர், மஞ்சள் கலர், சில சமயம் பச்சைக் கலர் போட்டு ஆரஞ்சுச் சுளைகள் போலவே வரம்பு கட்டி இருக்கும். அது தான் எப்போதும் தருவார். சாக்லேட் எல்லாம் வெளிநாட்டுப் பண்டம் சாப்பிடாதீங்கனு சொல்வார். சத்தம் போட்டுப் பாடுவாரே! கேட்டதில்லையா? இங்கேயும் அதே அறியாமை தான்! :((((((

    ReplyDelete
  7. சங்கு நாராயணன் என்றால்..சுதந்திர சங்கு என்று ஒரு பத்திரிகை வருமே அதுவா?..எங்கள் தாத்தா சொல்வார்..சங்கு கணேசன் என்று ஒருவர் அனல் தெறிக்க கட்டுரை எழுதுவாராம்..
    அந்த பாட்டு ‘எப்படிப் பாடினரோ?’
    ஜி.என்.பி யா? தண்டபாணி தேசிகரா?
    உங்கள் எழுத்துக்கள் என்னையும் தூண்டி விட்டன..
    என்னுடைய சுதந்திர ‘தாகத்’தையும்
    நிகழ்வில் பதிவு செய்கிறேன்...

    ReplyDelete
  8. கொடியேத்தினோம். மிட்டாய் சாப்பிடல. மனசுக்குள்ளே பாரின் மணிக்கொடி பாரீர்!, ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா. வெளில சாரே ஜஹான்சே கும்பலோட கோவிந்தா. கடைசீல ஜனகண மன. .. நடுக்கற குளிர்ல விக்டோரியா ஸ்கொயர்ல!! கொடியப்பத்தி பேசினவா இந்தியாவிலேயே பிறக்காவிட்டாலும் பற்றுடைய எக்ஸ் உகாண்டா குஜராத்தி.அப்பறம் வந்தாச்சு:)) happy independence day http://www.youtube.com/watch?v=D8mmXae8RBw

    ReplyDelete
  9. இரண்டு பாடல்களும் உடனே ஒருமுறை கேட்க ஆவல் வருகிறது. எப்படிப் பாடினரோ பாடல் எங்களுக்கும் இஷ்டப் பாடல். கருணைக் கடல் பெருகி விசேஷ வரிகள்தான். டி கே பி குரலில் கேட்டுள்ளேன். என் சி வி பாடியிருக்கிறாரா என்று ஞாபகமில்லை.

    ReplyDelete
  10. வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார், சங்கு சுப்ரமணியன்னு சொல்லுவாங்க, தெரியும், சங்கு கணேசன்?? தெரியலை, சுதந்திரச் சங்கு பத்திரிகையை விநியோகம் பண்ணினதாலே சங்கு நாராயணன் என்ற பெயர் என் அம்மாவோட சித்தப்பாவுக்கு. கல்யாணமே பண்ணிக்காம நாட்டுக்காக உழைக்கணும்னு முடிவெடுத்தவர். கடைசியிலே அரசியலைப் பார்த்து மனம் நொந்து செத்தார்! :(

    போடுங்க நீங்களும், போட்டுட்டு லிங்க் கொடுங்க, வந்து படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  11. வாங்க ஜெயஸ்ரீ, யூ ட்யூபில் அனுப்பிச்ச படங்கள் தான் இங்கே தொலைக்காட்சியில் வந்துட்டே இருக்கே! :D நன்றிங்க. சுதந்திர நாளைக் குளிரிலும் விடாமல் கொண்டாடியதற்கு.

    ReplyDelete
  12. வாங்க ஸ்ரீராம், நீங்க சென்னையா என்னனு தெரியலை, சென்னையா இருந்தால் என்னிக்காவது ஒருநாள் பொதிகைத் தொலைக்காட்சியிலே 11-30-க்கு அளிக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கவும். அதிலே எப்படிப் பாடினரோ பாடல் தினமும் வரும். :)))))))))))
    டி.கே.பி பாடி இருக்குனு நினைக்கிறேன். நான் கேட்டது சமீபத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடினதுனு நினைவு. பொதிகையிலே தினமும் வரும். நிகழ்ச்சியே அருமையான நிகழ்ச்சி.

    ReplyDelete
  13. many thanks for sharing. independence day wishes

    ReplyDelete
  14. எங்களையும் குழந்தை பருவத்துக்கு அழைத்து சென்று விட்டீர்கள் .நல்ல பகிர்வு
    சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
    ஜெய் ஹிந்த்

    ReplyDelete
  15. மன்னிக்கவும்.அது சங்கு சுப்ரமணியன் தான்.அது சரி..அந்த ‘எப்படி பாடினரோ?’ என்ன ராகம்? யாரோட ஃபேமஸ் பாட்டு? NCV இல்லைன்னு நினைக்கிறேன்.ஒரு சமயம் GNB யோ?

    ReplyDelete
  16. திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, எப்படிப் பாடினரோ ராகம் கேதாரகெளளைனு அவரோட (அண்ணா)பெண் வயிற்றுப் பேரன் திரு மரபூர் ஜெ.சந்திரசேகரன் கூறியுள்ளார். டி.கே.பட்டம்மாள் பாடிக் கேட்கலாம். சுட்டி தேடணும், பார்க்கிறேன், நீங்க திருவானைக்காவல் தானே, தினம் பதினொன்றரை மணி அளவில் பொதிகையில் இந்தத் தலைப்பிலேயே ஒரு நிகழ்ச்சி வருகிறது. அதிலே டைட்டில் பாட்டே இதுதான். பாடுபவர் வேறே ஒரு பெண்மணி. என்றாலும் அருமையாகப் பாடுகிறார். நாளைக்கு இருக்காது. திங்களும், செவ்வாயும் தான் இந்த நிகழ்ச்சி. இனி அடுத்த திங்கள் தான் கேட்கலாம்.

    ReplyDelete
  17. ராம்ஜி யாஹூ, வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  18. ப்ரியா, குழந்தைப் பருவம் தானே மறக்க முடியாத ஒரு பருவம்! நன்றிம்மா.

    ReplyDelete