எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Saturday, December 25, 2010
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ!
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!
மார்கழி மாசம் காலையில் எழுந்திருக்கிறதுன்னா எல்லோருக்கும் கஷ்டமாய்த் தான் இருக்கு போல! :( தினமும் நான் பார்க்கிறேனே, காலங்கார்த்தாலே விளக்கை ஏத்தி வாசலில் வச்சுட்டு நான் மட்டுமே வாசல் தெளிச்சுக் கோலம் போட்டுட்டு இருப்பேன். தெருவில் சத்தமே இருக்காது. கோயில்களின் பாடல் ஓசையும் கூட ஐந்தரைக்குப் பின்னாலேயே கேட்கிறது. இப்போ இப்படி இருக்க ஆண்டாளின் காலத்திலும் இப்படித் தான் எழுந்திருக்கச் சோம்பல் பட்டுக்கொண்டு ஒரு பெண்ணரசி உள்ளே படுத்திருக்கிறாள். தோழிகள் அனைவரோடும் ஆண்டாள் அங்கே போயாச்சு! அவளைக் கூப்பிட்டுப் பார்க்கிறாள். ம்ஹும், அசைவே இல்லை!
நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்= இந்தப் பெண் முதல்நாள் தான் பாவை நோன்பைப் பற்றியும் அதன் மகிமை பற்றியும் அனைவரோடும் பேசிக்கொண்டிருந்தாள். மறுநாள் சீக்கிரம் எழுந்து நோன்பிற்குச் செல்லவேண்டும் என்றாள். ஆனால் இப்போத் தூங்குகிறாள். அதுவும் எவ்வாறு?? "கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?"= இங்கே ஸ்ரீராமாவதாரம் பேசப் படுகிறாது. நோன்பு நூற்று அதன் மூலம் இந்தப் பெண்ணரசி சுவர்க்கத்தில் புகுந்து கொண்டிருக்கிறாள். ஆகவே அவளை நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய், என அழைக்கும் ஆண்டாள், என்ன இது? கும்பகர்ணன் தூங்கறாப்போல் தூங்கறயே என்று கேட்கிறாள்.
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்ற=கிருஷ்ணனோடு பக்தி செலுத்தும் அற்புத அநுபவத்தை விட்டு விட்டு இந்தப் பெண் இப்படித் தூங்கினால் என்ன அர்த்தம்?? ஒருவேளை கண்ணனே உள்ளே இருக்கிறான் போல! அதான் இப்படி ஒரு தூக்கம் தூங்கறாள். ஆண்டாள் கண்ணனை அங்கே தேடிக் குரல் கொடுக்க, அந்தப் பெண்ணோ கண்ணன் இல்லைனு சொல்லி விடுகிறாள். என்னது கண்ணன் இல்லையா? என்றால் அவன் மாலையாகச் சூடும் துழாயின் நறுமணம் எங்கிருந்து வந்தது?? புரிந்தது, புரிந்தது, உள்ளே கண்ணனோடு நீ கிருஷ்ணானுபவத்தை அநுபவித்துக்கொண்டு சுவர்க்கம் போகிறாய். அதனால் தான் வெளியேயும் வரவில்லையா??
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ! = ஆஹா, உனக்குத் தெரியாமல் கண்ணன் எங்கே வருவான்? என்றாள் அந்தப் பெண். இல்லை, இல்லை, சகலத்திலும் தானாக நிறைந்திருக்கும் பரம்பொருள் அல்லவோ கண்ணன்?? அவன் இங்கே இருப்பான். எதனுள்ளும் இருப்பான். என்று ஆண்டாள் கூற அந்தப் பெண்ணிடம் இருந்து பதிலே இல்லை. சரியாப் போச்சு, மறுபடியும் கண்ணனை நினைத்துக் கனவு காணப் போய்விட்டாளா?? ஏ கும்பகர்ணி, கும்பகர்ணன் தான் தவம் செய்துவிட்டு, ஒரு சொல்லில் வாய் பிறழ்ந்து நித்திரைத்துவம் கேட்டு வாங்கி வந்தான் என்றால், நீயுமா?? ஸ்ரீராமன் தன்னை அழிக்க வந்த மாபெரும் சக்தி என்பது தெரிந்தே கும்பகர்ணன் அவனை எதிர்த்தான் அல்லவோ? அப்படிப்பட்ட கும்பகர்ணனைப் போல் நீயும் நித்திரையில் ஆழ்ந்துவிடாதே!
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய் = அல்லது உன்னுடைய பெரும் ஆற்றலினால் கண்ணன் உன் கைக்குள்ளே வந்துவிட்டானோ? அந்த கர்வத்தில் நீ இருக்கிறாயோ?? பெண்ணே, சீக்கிரம் எழுந்து வா, எழுந்து வரும்போது படுக்கையில் இருந்து அப்படியே எழுந்துவராமல் உன் ஆடைகளைத் திருத்திக்கொண்டு எழுந்து வா.
இங்கே பட்டத்திரியும் பகவானின் வைபவத்தைப் பாடுகிறார். அவனே சிருஷ்டி கர்த்தா என்னும் பட்டத்திரி அந்த சிருஷ்டியே அவனுக்கு ஒரு விளையாட்டாகும் என்றும் கூறுகிறார். பகவானின் அநுகிரஹப் பார்வை ஒன்றாலேயே சகலமும் தோன்றுகிறது. அதையே இல்லை என்று அவரே மறைக்கவும் செய்கிறார். பின்னர் நம்மிடம் காட்டியும் விளையாடுகிறார். பரம்பொருளின் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டின் அதி அற்புதத்தை எவரால் வர்ணிக்க முடியும்?
கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா பஹூதரபவ கேதாவஹா ஜீவபாஜாம்
இத்யேவம் பூர்வமாலோசிதம் அஜித மயா நைவமத்யாபிஜாநே
நோ சேஜ்ஜீவா: கதம் வா மதுரதரமிதம் த்வத்புஸ் சித்ரஸார்த்ரம்
நேத்ரை: ஸ்ரோத்ரைஸ்ச பீத்வா பரமரஸ ஸூதாம்போது பூரே ரமேரந்"
இறைவனை எவரால் வெல்ல முடியும்?? எவராலும் முடியாத ஒன்று. நம் அன்பும், மனப்பூர்வமான பக்தியுமே அவனை வெல்லும் சக்தி உள்ளது. அந்தப் பரம்பொருளின் சிருஷ்டி விளையாட்டு முதலில் ஜீவர்களுக்குத் துன்பங்களை விளைவிப்பது போல் தோன்றினாலும் பரம்பொருளின் அர்ச்சாவதாரத் திருமேனியின் அழகைக் கண்ணாரக் கண்டு ஆநந்திக்கும் பேறு இந்த ஜீவர்களுக்குத் தானே வாய்க்கிறது? அதோடு மட்டுமா?? பரம்பொருளின் திவ்ய சரித்திரத்தையும் அவன் மேன்மையையும் பாடி, ஆடவும் ஜீவர்களால் தானே இயலும் ஒன்று??
என் குருவாயூரப்பா, எத்தனை பிறவி எடுத்தாலும் உன் புகழைப் பாடியும், ஆடியும், உன்னை மறவாமலும் இருக்கும் பேறு ஒன்றே எனக்குப் போதும்.(சொந்த வேண்டுகோள்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment