
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
இந்தப்பெண்ணை எழுப்பச் செல்லும் ஆண்டாளுக்கு அவள் உறவு போல் தெரிகிறது. இல்லை என்றாலும் கண்ணனுக்கு நெருங்கியவளாயும் இருக்கலாம். கண்ணனுக்கு நெருங்கியவள் தனக்கும் அணுக்கமானவள் என்ற பொருளிலேயே கோதை நாச்சியார் சொல்லி இருக்கலாம். கோபிகைகள் அனைவருமே பகவானின் பக்தர்கள், பாகவதக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அந்த உரிமையாலும் இருக்கலாம். அந்தப் பெண்ணோ தூமணி மாடத்தில் தூங்குகிறாளாம். சுற்றும் விளக்குகளும் எரிய, தூபம் கமழத் துயிலணை மேல் துயில்கிறாள்.
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய = பகவானுக்கு நாம் மட்டுமில்லாமல் தேவாதிதேவர்களும் நவரத்தினங்களையும் அர்ப்பணிக்க அவற்றில் உள்ள அனைத்துத் தோஷங்களையும் நீக்கிய பகவான் அவற்றால் ஒரு அழகான மாடம் மணிகளால் ஆன மணிமாடம் கட்டிக் கொடுக்கிறன் பாகவத சிரோன்மணிகளுக்காக. அதிலே பாகவத சிரோன்மணிகளிலேயே கண்ணனுக்கு மிகவும் அண்மையில் இருப்பவள் ஆன இந்தப் பெண்ணரசி, ஆனந்தமாய்த் தூங்குகிறாள்.
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்= இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களிலே மட்டும் கண்வளர்வது பற்றிக் கேள்விப் படுகிறோம். அக்காலங்களில் தூங்குவது என்றெல்லாம் சொல்லாமல் கண் வளர்தல் என்றே வழங்கி வந்திருக்கிறது. அழகான பல தமிழ்ச் சொற்களை நாம் இழந்துவிட்டோம். துயிலணை மேல் படுத்துக்கொண்டு தூக்கம் வர நறுமண தூபம் போட்டுக்கொண்டு சுற்றிலும் விளக்குகளும் ஜகஜ்ஜோதியாய் எரிய (ம்ஹும் என்னால் முடியாது வெளிச்சத்தில் தூங்க) தூங்கறாளாம் இந்தப் பெண். நிஜமாவே தூங்கறாளா அல்லது கண்ணன் நினைவில் ஆழ்ந்து போயிருக்காளா? தெரியலை. சரி, மாளிகைக்குள்ளே நுழைந்து பார்க்கலாம் என்றால் அவள் எழுந்து வந்து கதவைத் திறக்கவேண்டாமோ? அடம் பிடிக்கிறாள்!
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?=மாமன் மனைவியை மாமி என அழைக்கும் வழக்கம் ஆண்டாள் காலத்திலேயே இருந்திருக்கிறது பாருங்க! அந்தப் பெண்ணின் தாயை உறவுமுறைசொல்லி அழைத்து மாமி, அவளை எழுப்புங்கள், உங்க பொண்ணு என்ன பேசவே மாட்டேங்கிறாளே? ஊமையா? இல்லைனா காதிலே விழவில்லையா?? காது செவிடா? அடுத்து அனந்தலோனு கேட்கிறாள், அனந்தல் இந்த இடத்திலே மயக்கம் என்ற பொருளில் வருதுனு நினைக்கிறேன். ஒரு சிலர் கர்வம், பெருமைனும் சொல்வாங்க. இங்கே எப்படிப் பொருள் கொண்டாலும் சரியாய் இருக்கும். கண்ணன் எனக்கு நெருங்கியவன் என்ற மயக்கத்தில் இருக்கிறாளா எனக் கேட்பதாயும் கொள்ளலாம். கர்வம் கொண்டு விட்டாளோ என்று கேட்பதாயும் கொள்ளலாம்.
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?= சாதாரணமாய்ப்பார்த்தால் யாரானும் இவளை மயக்கிட்டாங்களோனு அர்த்தம் கொள்ளவேண்டும். இங்கே ஆண்டாள் கண்ணன் மேல் கொண்ட காதல் மயக்கத்தில் அவன் நாமத்தின் மகிமையில் மயங்கிவிட்டாளோனு கேட்கிறாள் என்று கொண்டால் சரியாய் இருக்கும். ஸ்ரீகிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து உச்சரித்து மனம் கசிந்து அந்த ஆழ்நிலைத் தூக்கத்துக்குப் போயிட்டாளோனு கேட்கிறாள் என்று கொள்ளவேண்டும்.
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!= மாமாயன், அந்தக் கண்ணன் மாயக்கண்ணன் மட்டுமல்ல, நம்மைப் பிறப்பு, இறப்பு போன்ற கர்மவினைகளிலிருந்தும் காப்பாற்றி மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடிய மாதவன் என்னும் ஆண்டாள், அதையே மா என்னும் லக்ஷ்மியின் கணவன் என்ற பொருளிலும் கூறி இருக்கிறாள்.
வைகுந்தன்=வைகுந்த வாசியான அந்தப் பர வாசுதேவன் நாமங்களைச் சொல்லி அவன் புகழைப்பாடிப் பரப்புவோம் வா பெண்ணே!

இந்த மாமாயன், மாதவனின் குணாதிசயங்களைப் பட்டத்திரி சற்றே வேறுவிதமாய்க் கூறுகிறார். அதாவது மஹாவிஷ்ணுவையே இந்த உலகின் ஆதிபுருஷர் எனக்கூறும் பட்டத்திரி, இவ்வுலகில் புதிது புதிதாய்த் தோன்றும் அனைத்துக்கும் அதிபதியான மஹாவிஷ்ணுவுக்கு வழிபாடுகளும், யாகங்களும் செய்வதோடு நில்லாமல் அவருடைய திவ்ய சரித்திரங்களை முக்கியமாய்க் கிருஷ்ணாவதாரத்தைப் பாடி, வர்ணித்து ஆநந்தம் அடைந்து, மற்றவரையும் ஆநந்தம் அடையச் செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் மோக்ஷம் நமக்கு வெகு எளிதாய்க் கிட்டும் என்கிறார்.
அத்யாயாஸேஷக்ர்த்ரே ப்ரதிநிமிஷ நவீநாய பர்த்ரே விபூதே:
பக்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதிஸதி ஹவிராதீநி யஜ்ஞார்ச்ச்நாதெள:
க்ருஷ்ணாத்யம் ஜந்ம யோவா மஹதிஹ மஹதோ வர்ணயேத் ஸோயமேவ
ப்ரீத: பூர்ணோயஸோபிஸ்த்வரித மபிஸரேத் ப்ராப்யமந்தே பதம் தே
No comments:
Post a Comment